சிபின் குளிப்பதற்காய் குளியலறை சென்றிருக்க, அவன் வருவதற்குள் இங்கேயிருந்து சென்றுவிட எண்ணியவள், “பாவி மனுஷன் எந்த நேரத்துல பொறந்தாரோ. இவரைப் பார்த்ததில இருந்தே ஓடிட்டே இருக்கேன்” என்று புலம்பிட்டே, அவசரமாய்த் தயாரானாள்.
“மைகாட்! அக்கா இந்தப் புடவையை எதுக்கு வச்சே?” இளம்பச்சை வர்ண நிறத்தில் கண்ணைப் பறித்த புடவையைப் பார்த்தவளுக்கு, அழகாக இருக்கேன்னு தோன்றினாலும், இதை எப்போ கட்டி முடிக்கறது? மலைப்பாக இருந்தது.
பட்டுப்புடவைகள் பார்க்கப் பார்க்க அழகுதான். அப்படியே அள்ளிக் கட்டிக்க ஆசை வரும். ஆனால் ஒரு முழுநாள் முழுதாக அதைக் கட்டிக்கிட்டு நடமாடிட முடியாது. என்னதான் ஏசியில் சொகுசாக இருந்தாலும் பட்டுப்புடவை என்றுமே அவஸ்தைதான். காட்டன் புடவையைக் கட்டுறபோது கிடைக்கும் சுகம் பட்டில் கிடைக்காது என்பது நளிராவின் எண்ணம்.
இப்போதைக்கு கட்டிக்க, இந்தப் புடவையை மட்டுமே வைத்திருக்க, “சரிதான்” என்று புடவையை நேர்த்தியாக உடுத்தும் பொழுதே, இந்த ரூமுக்கு படுப்பதற்காக மட்டும் வந்தா போதும் என்று சொன்னது நினைவுக்கு வரவும், திரும்பவும் விழிகளில் கண்ணீர் அரும்ப.
“இல்ல இப்ப நான் அழக்கூடாது. அழவே கூடாது. என்னால அம்மா அப்பாக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது” முகத்தை அழுந்தத் துடைத்தவள், தன்னை நேர்த்தியாய் அழகுபடுத்தி, நெற்றியில் பொட்டு வைத்தாள்.
சிபின் குளியல் அறையிலிருந்து வெளியே வரும் சப்தம் கேட்க, “போச்சு. திரும்பவும் குளவி மாதிரி கடிக்க ஆரம்பிப்பாரு” அவனைப் பார்க்காதது போலவே நைசாக நழுவி ஓட முற்பட.
“ஹேய் நில்லுடி” அவள் முந்தானையை கைக்குள் சுற்றி இழுத்தான்.
அவன் கைக்குள் முந்தானை சென்றதும் அவன் அருகில் தானாகவே வந்துவிட்டவள், “ஐயோ நானே வந்துட்டேன். திரும்பக் கட்டுறதுக்கு நேரமெடுக்கும். ப்ளீஸ் திரும்பவும் கட்ட வைக்காதீங்க, எனக்குத்தான் சிரமம்” பட்டுப்புடவையை மடிப்பெடுத்துக் கட்டுறதுன்னா அவ்வளவு எளிதா? அதற்கு எத்தனை பின் குத்தி மடிப்புகளைக் கலையாது பாதுகாப்பது என்பதை பெண்கள் மட்டுமே அறிவார்கள்.
“கலைக்கத்தானே கட்டுற?” விதண்டாவாதம் பேசியவனின் பேச்சு புரியாது அவனை நோக்கியவளுக்கு, அவன் பார்வையில் தெரித்த ஆசைகள் புரிபடவும், முகம் சிவக்க விழிகளைத் தாழ்த்தினாள்.
துவட்டியும் துவட்டாமலும் விட்டிருந்த கேசத்திலிருந்து வடிந்த நீர் அவளது நெற்றியில் அபிஷேகம் ஆக, அகண்ட மார்பின் ரோமங்களுக்கு நடுவில் அவளது நகக்கீரல் ஆழமாய் பதிந்திருக்க, அதில் விரல் வைத்து நீவியவளுக்கு, அந்த நேரத்திற்கான அவஸ்தைகளும், அவனது பிதற்றல்களும் மனதில் நிஜம் போலவே காட்சிகள் வந்து போக, தேகம் மொத்தமும் சூடேற, செக்கச் சிவந்துதான் போனது தேகம் மொத்தமுமே.
ஆளுமையும் முரட்டுத்தனமும் கொண்ட அழகன் சிபின். அவனை முழுமையாய் ரசிப்பதற்கான வாய்ப்போ, தருணமோ இன்னும் முழுதாகக் கிடைக்கவில்லை பெண்ணிற்கு. பார்க்கும் நேரமெல்லாம் அவளை அலற விடுகிறான். இதில் எங்கே எப்போது ரசிப்பதாம்.
அவளது வெட்கத்தை ரசித்தவன் “இங்க நடந்ததை அம்மாகிட்ட சொன்னேன்னு வச்சிக்க” அவளிடம் சொன்ன தொனியில் மிரட்டல் இருந்தாலும் அவனது கழுகு விழிகளில் அவள் மீதான அளவற்ற காதலும் ஆசையுமே மிகுந்திருந்தது.
கொஞ்சம் நிம்மதியா இருந்தா இவருக்குப் பொறுக்காதே, பற்களைக் கடித்தவள், “அம்மாகிட்ட அவ்வளவு பயம் இருக்கறவர் எதுக்கு அரக்கன் மாதிரி நடந்துக்கணுமாம்? குளிக்கக் கூட முடியல, காந்தலா இருந்துச்சு தெரியுமா?” அவனிடமிருந்து விடுபட முயன்றவாறே சொன்னாள் நளிரா.
வதனத்தின் அசைவுக்கேற்ப அசைந்தாடிய ஜிமிக்கியின் மீது உதடு பதித்து முத்தம் வைத்தவன், முடிகளை காதோரமாக ஒதுக்கி விட்டான், “என்னைப் பார்த்தா பயப்படுற ஆம்பளை மாதிரியா இருக்கு?” சிபின் அழகாய் மாற்று விரிப்பை தன் மீது அழகாய் சுமந்திருக்கும் மஞ்சத்தின் மீது பார்வையை படர விட்டபடியே கேட்டான்.
அவனது பார்வையை தொடர்ந்து தானும் பார்த்தவளுக்கு அவனது எண்ணமும் ஆசையும் புரிந்து போகவும், எச்சரிக்கையானாள் “அப்படி சொல்ல வரலைங்க. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்குறதை வெளியில் சொல்லக் கூடாதுங்க. நான் எதுவும் சொல்லவும் மாட்டேன், காட்டிக்கவும் மாட்டேன்” அவனுக்கு தக்கப் பேசி அவனைத் திசை திருப்பினாள்.
அவளது எச்சரிக்கையில் இவனுக்கு சிரிப்பு வந்தாலும், இப்பொழுது மருத்துவமனை போயே தீர வேண்டிய கட்டாயமாகையால், “நீ போ. நான் வரேன்” அவளை விடுவித்தவன், வெளியே செல்லக் கிளம்பினான்.
கீழே சென்றவளை ஆர்த்தியும் சைத்ராவும் பிடித்துக்கொண்டனர். விளக்கேற்றுவது, சமையல்கட்டில் இனிப்பு செய்வது என்று மருமகளுக்கான சடங்குகள் முடியவும்,
சிபினும் கிளம்பி தயாராக வந்துவிட,.அனைவரும் காலை உணவை சாப்பிட்டனர். .. .. .. .. ..
மனநிம்மதி, ஆரோக்கியம் இவற்றிற்காகப் பார்த்துப் பார்த்து உயிர் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இயற்கை மருத்துவமனை அது. அந்த மருத்துவமனையின் காவலருக்கே லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது.
இயற்கையின் நிழலில் தங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெற முயலும் நோயாளிகள் இங்கேதான் வருவார்கள்.
பசுமை கொஞ்சி விளையாடும் பசுமையான தோட்டங்கள், வளர்ந்த மரங்கள், பறவைகள் குருவிகளின் கீச் கீச் சப்தங்கள் என்று மனதை ஆறுதல் படுத்தும்.
ஆனால் இது எதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளாமல் வேக நடையில் நடந்தான் சிபின்.
இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுயநலம் என்பது சிறிதளவாவது இருக்கத்தான் செய்கிறது. தாய் அருகிலேயே இருக்க வேண்டுமென ஐந்தறிவு ஜீவன் முதல் ஆறறிவு ஜீவன் வரைக்கும் பிடிவாதம் பிடிக்கும். இதுவும் ஒரு சுயநலமே.
தாய் செடியின் நிழலில் முளைத்து வளரும் சிறு செடிகளை வேறு இடத்தில் வைப்பதற்காகப் பிடுங்கினால் உடனே வாடிப்போகும். இதுவும் ஒரு சுயநலம்தான்.
சிபினும் அப்படித்தான் நளிரா மீது பிடிவாதமான காதலை வைத்துள்ளான். தான் விரும்புகிறவளை தம்பியும் விரும்புகிறான் என்பதில் சுருக்கெனத் தைத்தது மனதில். அதுபோக நளிரா துருவ்குத்தான் பொருத்தம் என்று தந்தை சொல் கேட்டவன் நளிராவை தனக்கு சொந்தமாக்கிவிட்டே ஓய்ந்தான்.
தன்னவள் தனக்கு மட்டுமே என்ற பிடிவாதத்தில் இன்னுமே அவளைத் தன் கூடவே இருக்கும் பொருட்டு மிரட்டி வைக்கிறான். தன் காதலை யாருக்குமே விட்டுத் தரமாட்டேன் என்ற உணர்வில் அவனது கண்களில் இன்னுமே கடுமையான உணர்வுகள் அதிகம்தான் ஆனது.
மருத்துவமனையின் உள்ளே அமைதி நிலவியது. நடந்து செல்லும் செவிலியர்களின் பதற்றமில்லாத புன்னகை முகமும், காற்றில் மலர்களின் மென்மையான வாசமும் சிபினுக்கு சற்றே நம்பிக்கையைத் தந்தது.
இந்த சூழ்நிலையில் தன் சகோதரன் நிச்சயம் குணமாகிவிடுவான் என்று நம்பினான். துருவ்க்கு சிகிச்சை தரும் மருத்துவருடன் கலந்துரையாடி அவனது நலம் விசாரித்து விட்டு வந்தவனின் முகத்தில் தெளிவு மீண்டிருந்தது. இதுவரைக்கும் எந்த நம்பிக்கையையும் பேச்சளவில் கூடத் தராமல் இருந்தவர் இப்பொழுது விரைவில் கண் விழிப்பான் என்று சொல்லியிருந்தார்.
எப்பொழுது வேண்டுமானாலும் கண் விழிக்கலாம். நாளையே கூட விழிக்கலாம் உறுதியாக சொல்வதற்கு இல்லை என்று அவர் சொல்லவும் அத்தனை சந்தோஷம் அவனுக்கு.
துருவ் இருக்கும் அறையின் கதவைத் தள்ளி உள்ளே வந்தவனுக்கு, விழிகளை மூடி அசைவில்லாது படுத்திருப்பவனைக் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. இதயத்தை யாரோ சுத்தியால் அடித்து உடைப்பது போலவே துடித்துப் போனான்.
படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து துருவின் கையை தன் கைக்குள் எடுத்து வைத்தவன் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
எப்பொழுதும் சிரிப்பும் குறும்புடனும் இருப்பவனா இவன். ஒருநேரம் ஒரு இடத்தில் அடங்கி நிற்க மாட்டானே. ஒரு காதலுக்கு இத்தனை வலு இருக்கா. ஒரு மனுஷனையே அடிச்சு சாய்க்கும் அளவிற்கு? துருவ் முகத்தையே வெறித்துப் பார்த்தவனுக்கு அவன் திரும்பவும் வரணும், அப்பா அம்மா முகத்தில் சிரிப்பைப் பார்க்கணும் என்ற ஆசை எழுந்தது.
மருத்துவர்களிடம் பேசியதற்கு அவர்கள் சொன்ன பதில் இன்னும் ஆறுதலாய் இருந்தது அவனுக்கு. சிபினின் உடல்நிலை தற்பொழுது தேறி வருகிறது. எப்பொழுது வேணுமாலும் கண் விழிக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.
அதனால் அம்மா அப்பா இருவரையும் இங்கே அருகில் உள்ள வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தவனாக தம்பியின் கைகளைத் தன் கைக்குள் பொதித்துக் கொண்டான்.
‘ஐம் சாரி துருவ். ஐ லவ் மை ஹனி. என்னால அவளை யார்கிட்டேயும் விட்டுத் தரவே முடியாது. அது நீயா இருந்தாலும்’ மனதுக்குள் சொன்னவன் முகத்தில் அத்தனை தீவிரம்.
“அதேநேரம் உன்னையும் என்னால இப்படியே விட முடியாதுடா. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் உருவாக்கித் தருவேன். உனக்கானவ கண்டிப்பா வருவா” இதை வாய்விட்டு அவனிடம் சொன்னவனுக்கு எப்போதும், தான் ஏதாவது சொன்னால் கண் சிமிட்டி சிரிப்பவன் தற்பொழுது எந்த அசைவும் இல்லாதிருக்க எப்படா எழுந்து வருவ? என்ற ஆவேசம் ஆதங்கம் மனதில் வலியுடன் எழுந்தது.
அவனால் தன் காதலையும் இழக்க முடியாது. அதேநேரம் தம்பியையும் இழக்க முடியாது. துருவ் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் இந்நேரம் இந்த நிலையில் கூட இருக்க விட்டிருக்க மாட்டான். அத்தனைக்கு நளிரா மீதான காதல் அவனைப் பித்தனாக்கியிருந்தது. வேறு யாரும் அவள் மீது பார்வையைக் கூட வைக்கக் கூடாது என்று நினைத்தான்.
“தூங்கிட்டிருந்தது போதும். சீக்கிரம் எழுந்து வாடா. உனக்காக நாங்க வெயிட் பன்றோம். அம்மா அப்பா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறாங்கடா. திரும்பவும் அவங்களுக்கு இந்த உலகத்தை நீ வந்து சுத்திக் காட்டணும்னு ஆசைப்படுறாங்க. அம்மா இப்போல்லாம் அழுதுட்டே இருக்காங்கடா” பேசப்பேசவே துருவ்வின் கரத்தை முகத்தில் பதித்து அழுதுவிட்டான் சிபின்.
தாயின் முகத்தில் புன்னகையை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு அவரது கண்ணீர் தேங்கிய விழிகளைப் பார்க்கவே முடிவதில்லை.
“ப்ளீஸ் துருவ் எழுந்துக்கோடா. இப்போல்லாம் நான் மிருகமா மாறிட்டேன்னு நினைக்கறேன். என்னால என்னையே மன்னிக்க முடியலைடா. உன்னை இப்படி பார்க்க முடியாம நானும் நொந்து அவளையும் நோகடிக்கறேன். என்னால அவளை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது. சத்தியமா நீ லவ் பண்ணுறன்னு எனக்குத் தெரியாது துருவ். என்னை நம்புடா. எங்களுக்கு நீ வேனும்டா” கண்ணீருடன் குலுங்கி அழுத்தவனின் நினைவில் நேற்றைய இரவில் தன் கைகளுக்குள் வேதனை தாங்காது அவள் கெஞ்சியது நினைவுக்கு வரவும் முகத்தில் அரைந்து கொண்டான்.
“நான் செய்யறது தப்புன்னு தெரியுது. ஆனால் உன்னோட இந்த நிலைக்கு அவதான காரணம். அவளை நினைச்சுத்தான இந்த நிலைக்கு நீ வந்த. இந்தக் கோபத்தை அவ மேல கொட்டிட்டு இருக்கேன். நான் மிருகம்” நெற்றியில் அடித்துக்கொண்டவனுக்கு, தனக்கு ஏன் இந்தப் புத்தியென்று தோன்றியது.
“சிபின் டாக்டர் உங்களை வரச் சொன்னார்” செவிலியர் அவனை அழைக்கவும், அவருடன் சென்றான் சிபின்.
அவன் சென்றதும் தேங்கியிருந்த கண்ணீர் விழிகளில் இருந்து அருவியாய் கன்னங்களை நனைத்திட, சிறு அசைவு அவனிடம்.