என்ன யோசனை அண்ணி என்று வந்த பிரகாஷிடம் இல்லை மாமா என்ன சமைக்கலாம்னு யோசிக்கிறேன் என்றாள் வெரோனிகா. ஹோட்டலில் ஆர்டர் பண்ணலாமா என்றவனிடம் வேண்டாம் மாமா நானே சமைச்சுருவேன் என்ன சமைக்கலாம்னு நீங்க ஒரு ஐடியா கொடுங்களேன் என்றாள் வெரோனிகா.
ஐடியாவா நானா இப்ப தான் நானெல்லாம் உங்க கண்ணுக்கே தெரியுறேன். ஒரு மாசமா எப்போ பாரு புத்தகத்தை தூக்கி வச்சுகிட்டு ரூம் உள்ளேயே கிடந்திங்க அப்போ எல்லாம் பிரகாஷ் மாமா ஞாபகம் இல்லை அப்படித் தானே என்றான் பிரகாஷ்.
ஐய்யோ மாமா, நீங்களுமா இப்போ தான் சந்துரு மாமாகிட்ட கெஞ்சி, கொஞ்சி சமாதானம் பண்ணிட்டு வந்தேன் அடுத்து நீங்களா என்றவளிடம் பிரகாஷ் அண்ணா மட்டும் இல்லை நாங்களும் உன் மேல கோபமாகத் தான் இருக்கிறோம் என்று வந்தனர் ஊர்மிளா, அர்ச்சனா, இந்திரஜா மூவரும். அச்சோ நீங்களுமா உங்க நான்கு பேருக்கும் ரொம்ப , ரொம்ப ஸாரி என்றவள் சரி என்ன சமைக்கலாம் ஐடியா கொடுங்க என்றாள் வெரோனிகா.
உனக்கு சமைக்க தெரியுமா என்ற இந்திரஜாவிடம் எங்க அண்ணி குக்கிங் நீ சாப்பிட்டதில்லையே சூப்பரா இருக்கும் என்ற பிரகாஷ் அண்ணி பேசாமல் நார்மல் சாம்பார், ரசம் சமைக்கலாமே என்றான். அப்போ சரி என்றவள் கடகடவென சமைக்க ஆரம்பிக்க அவளுக்கு உதவியாக இந்திரஜா காய்கறிகளை வெட்டிக் கொடுத்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே சமைத்திட அவர்களுடன் மற்ற மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ஐவரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஸ்ரீஜாவிற்கு வெரோனிகாவின் சந்தோசமான முகம் வெறுப்பைத் தான் கொடுத்தது.
என்ன ஐந்து பேரும் வாயடிச்சுட்டு இருக்கிங்க என்று வந்த உதயச்சந்திரனிடம் வாயடிக்கிறோமா சமைக்கிறோம் மாம்ஸ் என்றாள் இந்திரஜா. சமைக்கிறோம் இல்லை வெரோனிகா சமைக்கிறாள் நீங்க அரட்டை அடிக்கிறிங்க என்றான் உதய்.
பாருடா உங்க பொண்டாட்டி எங்க உதவி இல்லாமல் தானே சமைக்கிறாள் என்ற இந்திரஜாவிடம் நீங்க உதவியே பண்ணலைனாலும் அவள் சூப்பரா சமைப்பாள் என்றான் உதய். மாமா இந்தாங்க என்று அவனிடம் ஒரு டம்ளரை நீட்டினாள் வெரோனிகா.
என்ன இது உன் மாமாவுக்கு மட்டும் ஸ்பெஷல் என்ற இந்திரஜாவிடம் தேங்காய் தண்ணீர் சர்பத் என்றாள் வெரோனிகா. அது என்ன உன் மாமாவுக்கு மட்டும் என்றவளிடம் பிரகாஷ் மாமாவுக்கு இந்த சர்பத் பிடிக்காது தேங்காய் உடைச்ச தண்ணீர் இருந்துச்சு அதோட சர்பத் கலந்து கொடுத்தால் சந்துரு மாமாவுக்கு பிடிக்கும் அதான் என்றாள் வெரோனிகா.
ஓஓ அப்போ உங்க பிரகாஷ் மாமாவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு கூட உனக்கு தெரியுமா என்றாள் ஸ்ரீஜா. பிரகாஷ் மாமாவுக்கு மட்டும் இல்லை, பெரிய மாமா, சின்ன மாமா, பெரிய அத்தை, சின்ன அத்தை, ஆச்சி, அர்ச்சனா அண்ணி, ஊர்மினு இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் என்ன பிடிக்கும், பிடிக்காது எல்லாமே எனக்கு தெரியும். ஏன் இந்து அக்காவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு கூட தெரிஞ்சுகிட்டேன்.
உங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுனு நீங்க சொன்னிங்கனா அதையும் நான் தெரிஞ்சுக்குவேன் என்ற வெரோனிகா உதயச்சந்திரனிடம் திரும்பி மாமா பால் பாயாசம் வைக்கட்டுமா, இல்லை பாசிப்பருப்பு பாயாசம் வைக்கட்டுமா என்றாள்.
உன் இஸ்டம் வெரோனிகா என்ற உதய் எழுந்து கொள்ள எங்கே போறிங்க மாமா என்று அவனது கையைப் பிடித்தவள் ஒரு பத்து நிமிசம் எங்கே போறதா இருந்தாலும் சாப்பிட்டு தான் போகனும் என்றாள் வெரோனிகா.
சரிமா நான் சாப்பிட வந்துருவேன். ஒரு சின்ன வேலை தான் என்றவனிடம் என்ன வேலை என்றாள் வெரோனிகா. அவளது காதில் அவன் ஏதோ சொல்ல ஸாரி மாமா மறந்துட்டேன் என்றவள் தலையை சொறிந்து கொள்ள அவன் சென்று விட்டான்.
என்ன அண்ணி அண்ணா என்ன காதில் ஏதோ ரகசியம் சொன்னாரு என்ற பிரகாஷிடம் நான் ஒரு பொருள் கேட்டேன். அதை வாங்கப் போறேன்னு சொன்னாங்க என்றவள் மாமா இந்த தேங்காயை கொஞ்சம் துருவி தாங்களேன் ப்ளீஸ் என்றாள். சரி கொடுங்க என்ற பிரகாஷ் தேங்காயை வாங்கி துருவ ஆரம்பித்தவன் என்ன பொருள் வாங்க என் அண்ணனை அனுப்புனிங்கனு கேட்டேன் என்றான்.
உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் உங்க மனைவி சொல்லுவாங்க இதெல்லாம் எங்க ஹஸ்பண்ட், வொய்ப்க்குள்ள உள்ள பர்சனல் என்றவள் அவனது தலையில் கொட்டி விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள்.
கோபமாக ஸ்ரீஜா அங்கிருந்து செல்வதைக் கண்ட இந்திரஜா தன் அக்காவின் பின்னால் சென்றாள். என்ன அக்கா ஏன் கோபமா வந்த என்ற இந்திரஜாவிடம் செம்ம கோபமா இருக்கேன் போயிரு. இந்த எளவை எல்லாம் பார்க்க வேண்டாம்னு தானே அங்கே இருந்தேன். இங்கே கூட்டிட்டு வந்து அவரும், அந்த வெரோனிகாவும் அடிக்கிற லூட்டியை பார்க்கதான் எங்களை வரச் சொன்னாரோ என்று பொரிந்தாள் ஸ்ரீஜா.
அவங்க என்ன லூட்டி அடிச்சாங்க என்ற இந்திரஜாவிடம் அவள் என்னம்மோ மாமா , மாமானு சிணுங்கிட்டு இருக்கிறாள். இவரும் வெரோனிகா, வெரோனிகானு கொஞ்சிட்டு இருக்கிறாரு என்று பொரிந்திட அதில் உனக்கு என்ன பிரச்சனை.
நீ என்ன பண்ணினனு நான் கவனிச்சேன். அந்தப் பொண்ணுகிட்ட பிரகாஷ் மாமாவுக்கும் என்ன பிடிக்கும்னு தெரியுமான்னு நீ என்ன அர்த்தத்தில் கேட்டனு எனக்கு புரிஞ்சது. உதய் மாமாவுக்கும் புரிஞ்சுருக்கும். ஆனால் அந்தப் பொண்ணுக்கு புரியலை. உனக்கு ஏன் இவ்வளவு மட்டமான புத்தி அவர் ஒன்றும் உன்னை வேண்டாம்னு சொல்லவில்லையே சந்தர்ப்பம் நீ தேவ் மாமாவுக்கு மனைவி ஆகிட்ட. அது தான் நிஜம் நீ தேவையில்லாமல் வெரோனிகாவை காயப் படுத்திடாதே என்றாள் இந்திரஜா.
உனக்கு வெட்கமா இல்லையா அவள் பிரகாஷ் கிட்ட பேசுறதும், பழகுறதும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்ற ஸ்ரீஜாவிடம் உன்னோட பார்வை தப்பு. அவங்க பழக்கம் தப்பில்லை என்ற இந்திரஜா கோபமாக சென்று விட்டாள்.
ஓய் குட்டி டார்லிங் எங்கே வந்திங்க என்ற வெரோனிகா குழந்தை உதயநிலாவைத் தூக்கிக் கொண்டாள். குழந்தை அவளது முன் பற்கள் தெரிய சிரித்திட அடடே பாப்பாவுக்கு பல்லு எல்லாம் முளைச்சுருக்கு என்ற வெரோனிகாவிடம் நான் யாருனு தெரியுமா உனக்கு என்றாள் வெரோனிகா.
இவங்க தான் உன்னோட பெரியம்மா என்றான் பிரகாஷ். மாமா நான் பெரியம்மாவா உங்களை இருங்க சந்துரு மாமாகிட்ட சொல்லித் தரேன் என்றாள் வெரோனிகா. என்ன என்கிட்ட சொல்லப் போற வெரோனிகா என்று வந்த உதயச்சந்திரனிடம் மாமா பிரகாஷ் மாமா என்னை பெரியம்மா சொல்லுறாங்க என்றாள்.
அவனுக்கா என்ற உதய்யிடம் இல்லை பாப்பாவுக்கு என்றாள் வெரோனிகா. அப்போ சரியா தானே சொல்லிருக்கான் நீ பாப்பாவுக்கு பெரியம்மா தானே என்ற உதய்யின் கையில் ஹைபை அடித்துக் கொண்டான் பிரகாஷ்.
சரி சரி நான் பெரியம்மா தான். நீங்க தான் பெரியப்பா என்றவள் பாப்பா குட்டிக்கு பசிக்குதா என்றிட மம்மு என்றாள் உதயநிலா. அடடே பாப்புக் குட்டிக்கு மம்மு வேணுமா என்றவள் குழந்தைக்கு நெய் பருப்பு சேர்த்து சாதம் ஊட்டி விட ஆரம்பித்தாள்.
வாங்க என்று ஸ்ரீஜாவிடம் சொன்னவள் பாப்பாவுக்கு பசிக்குது போல அதான் நானே ஊட்டி விடுறேன். நெய்பருப்பு சாதம் சாப்பிடுவாள் தானே என்றிட சாப்பிடுவாள் அண்ணி என்றான் தேவச்சந்திரன்.
இரண்டு பேரும் உட்காருங்க ஒரு பத்து நிமிசம் பாப்பாவுக்கு ஊட்டி விட்டுட்டு சாப்காடு பரிமாறுகிறேன் என்றாள் வெரோனிகா. அது பரவாயில்லை அண்ணி என்ற தேவ் பிரகாஷிடம் திரும்பி என்ன பிரகாஷ் நீ கூட என்கிட்ட பேச மாட்டேங்கிற என்றான்.
அப்படிலாம் ஒன்றும் இல்லை அண்ணா என்றவன் இதோ வருகிறேன் என்று எழுந்து சென்று விட்டான். வெரோனிகா என்ற உதயச்சந்திரனிடம் என்னங்க மாமா என்றாள். நீ பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு கூப்பிடு நான் ஒரு போன் பேசிட்டு வரேன் என்றிட சரிங்க மாமா என்றவள் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள்.
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிய பிறகு ஸாரி என்றாள் வெரோனிகா. ஏன் அண்ணி என்றவனிடம் இல்லை உங்களை காக்க வச்சதுக்கு தான் என்றவள் உணவினை பரிமாற ஆரம்பிக்க அதனால என்ன அண்ணி பாப்பாவுக்கு தானே சாப்பாடு ஊட்டி விட்டிங்க என்ற தேவ் நிலாக்குட்டி நல்லா சாப்பிட்டிங்களா என்றான். குழந்தை சிரித்துக் கொண்டே தலையாட்டிட பாப்பா பெயர் நிலாவா என்றாள் வெரோனிகா.
உதயநிலா என்றாள் ஸ்ரீஜா. ஐஐ என் மாமாவோட பெயர் போலவே இருக்கே மாமா பெயர் உதயச்சந்திரன், பாப்பா பெயர் உதயநிலா இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தானே என்று சிரித்த வெரோனிகா உணவினை பரிமாறினாள்.
சிரிக்கிற அளவுக்கு ஏதும் ஜோக்கா அந்த பெயரில் என்ற ஸ்ரீஜாவிடம் இல்லை ஏன் கேட்கிறிங்க என்றாள் வெரோனிகா. அப்பறம் ஏன் லூசு மாதிரி சிரிக்கிற பேசாமல் சாப்பாட்டை எடுத்து வை என்றாள்.
அவள் சாப்பாட்டினை எடுத்து வைத்து விட்டு நீங்க எடுத்து வச்சு சாப்பிடுங்க நான் மத்தவங்களை அழைச்சுட்டு வரேன் என்ற வெரோனிகா கிளம்பிட தேவ் பக்கம் திரும்பி என்ன அண்ணி , அண்ணினு உருகுற என்றாள் ஸ்ரீஜா.
அண்ணினு தானே கூப்பிட்டேன் என்றவனை முறைத்தவள் அவளையாவது அண்ணியா மட்டும் பாரு என்றதும் அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான்.
பெரியம்மா என்ற வெரோனிகாவிடம் என்னம்மா என்றார் வசுந்தரா. நீங்களும், பெரியப்பாவும் சாப்பிட வாங்க என்றவளிடம் சரிம்மா வரோம் என்றார் வசுந்தரா.
அக்கா ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கிங்க என்ற சுசீலாவிடம் உனக்கு தெரியாதா சுசீ உதய் ஏன் இப்படி பண்ணினான். அவன் கூட பரவாயில்லை இந்த ரோனி அவங்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு வருகிறாள் என்ற மலர்கொடியிடம் அவள் சொன்ன காரணம் உங்களுக்கு புரியலையா என்றார் சுசீலா.
என்ன பொல்லாத புடலங்காய் காரணம் என்ற மலர்கொடி அன்னைக்கு என் மகன் எவ்வளவு கூனிக் குறுகி நின்றான்னு உனக்கும் தெரியும் தானே என்றார் மலர்கொடி.
அக்கா அது எனக்கும் வலி தான் அக்கா ஆனால் இப்போ உதய் அவங்களை இங்கே இருக்கச் சொல்லி இருக்கிறான் என்றால் காரணம் இல்லாமல் இருக்காது அதை புரிஞ்சுக்கோங்க என்றார் சுசீலா.
ஆமாம் அவனுக்கு காரணம் சொல்ல என்ன பஞ்சமா என்ற மலர்கொடி சோகமாக அமர்ந்திருக்க அத்தை என்று வந்தாள் வெரோனிகா.
அத்தை என்றவளிடம் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் மலர்கொடி. அத்தை என் மேல கோபமா என்றவளை முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் மலர்கொடி.
……தொடரும்….