வேந்தன்… 54

5
(10)

வேந்தன்… 54

 

“மாம் நாங்க கிளம்பிட்டோம்” தோளில் சாய்ந்து உறங்கிய பெண்ணின் நெற்றியில் முத்தம் வைத்தவன், தாயிடம் சொல்லிக் கொள்ள. 

 

“கண்ணா வரும் போது நளிராவோட அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்துருப்பா. கல்யாணம் ஆகி பொண்ணை கூட்டிட்டு வந்ததோட விட்டாச்சு. நீயும் ஒருமுறை அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தா நிம்மதியா இருப்பாங்கப்பா” 

 

“மாம்!” எதிர்த்துப் பேச முயன்ற சிபினை மிராவின் சீற்றம் கலந்த பேரு மூச்சு அப்படியே அடக்கிவிட்டது. 

 

“போயே ஆகணும் சிபின். உன்னை கல்யாணம் பண்ணதுக்கு பெத்தவங்க உறவே இல்லாம போகணுமா அவளுக்கு? வர வர உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறேன் சிபின். நைட் மூச்சுத் திணறல் அதிகமாகுது இப்பவெல்லாம்” மிரா வேகமாய் பேசிவிட்டு லேசாய் மூச்சு வாங்கிட. 

 

“மாம் மாம். ப்ளீஸ் ரிலாக்ஸ் மாம். நாங்க போறோம். நாங்க போறோம். ஓகேவா?” சிபின் இங்கே பதட்டமானான். 

 

“சரிப்பா நான் வைக்கறேன்” அதே சூட்டில் மிரா போனை வைத்துவிட. 

 

சிபின், நளிரா இருவரும் மிரா சொன்னபடி நளிராவின் வீட்டிற்கு சென்றனர். இரண்டு மாசங்கள் கழித்து மகளைப் பார்க்கவும் மலர்விழிக்கு அத்தனை சந்தோஷம். 

 

“வாங்க மாப்பிள்ளை” மருமகனுக்கும் மகளுக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார். 

 

நளிரா வரும் பொழுதே சகோதரிகளுக்கு தான் வரும் விவரத்தைக் கூறியிருக்கவும், அவர்களும் வந்திருந்தனர். 

 

“நளி, நெளி” என்று அவளைக் கட்டிக்கொண்டனர் இருவரும். 

 

நளிராவோ அருகில் நின்றிருக்கும் கணவனைப் பார்த்து வைத்தாள், 

‘நம்மகிட்ட யாரு பேசினாலும் இவருக்கு பத்திக்கிட்டு வருமே. கடவுளே தயவுசெஞ்சு இவர் புத்தி தெளிஞ்சிருக்கனும்’ அவசரமாக கடவுளுக்கு ஒரு வேண்டுதலை வைத்தவள், சகோதரிகளின் அன்பு மழையில் நனைய ஆரம்பித்தாள். 

 

“வாசல்லயே நின்னு பேசினா எப்படி? அவங்க உள்ள வரட்டும்” மனோகரி ஒரு அதட்டல் போடவும்தான், பெண்கள் சுதாரித்து சிபின் உள்ளே வர வழி விட்டனர். 

 

சிபினுக்கு ராஜ வரவேற்புதான், சந்தோஷ் ஆரவ் இருவரும் அவனுடன் அமர்ந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தனர். 

 

அக்கா, ஆர்த்தி உங்க குட்டீஸ் என்ன சொல்லுறாங்க” அவர்களின் வயிற்றில் காதை வைத்து உற்சாகமாய் கேட்டாள் நளிரா. 

 

“சித்தியை பார்க்கணும்னு சொல்றாங்க அக்கா” ஆர்த்திக்கு சொல்லும் போதே அழுகை வந்துவிட்டது. 

 

“ஏய் அக்கான்னு சொல்லுற?” அவர்களின் வயிற்றை தொட்டுப் பார்த்த நளிராவுக்கு அவள் அழுகையை உணர முடியாது போகவும் இயல்பாகக் கேட்டாள். 

 

“கஷ்டமா இருக்கு நெளி. நினைச்சப்ப உன்னைப் பார்க்கவே முடியலையே. உன்கூட சண்டை போடக் கூட முடியலை, எட்ட இருக்குற பொண்ணுகிட்ட வம்பு வளர்க்காதேன்னு இங்க பெருசுங்க மிரட்டுறாங்க” ஆர்த்தி தேம்பியே அழ. சைத்ராவுக்கும் அதே கருத்துதான் இருக்கவும், அவளும் விசும்பி அழுதாள். 

 

சைத்ராவின் கண்ணீர் கைகளை நனைக்க, நிமிர்ந்து பார்த்த நளிரா, “ஹேய் என்னாச்சு?” கேட்டவளுக்கு சகோதரிகளின் அழுகை முகத்தைப் பார்க்கவும் தாங்க முடியவில்லை. 

 

“என்னாகனும்னு சொல்லுறடி?. லவ் பண்ணுறவ இங்க நம்ம ஊருக்குள்ள ஏதாவது ஒரு பையனா பாத்திருக்க வேண்டியதுதானே. அதென்ன அவ்வளவு தூரம்? அக்கா உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்படுறா நளி, அங்க நீ எப்படி இருக்கியோன்னு” ஆர்த்தி அவளைக் கட்டிக் கொள்ள. 

 

நளிராவுக்கும் தான் தன் கணவனிடம் அனுபவித்த இன்னல்கள் நினைவு வரவும் கண்ணீர் உடைப்பெடுத்தது. இன்னுமே அவனைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. 

 

இது வரை தான் பேசிய வார்த்தைகளில் எதனால் கோபப்படுகிறான் என்பதை ஓரளவு அறிந்து அந்த வார்த்தைகளை அவனிடம் பேசுவதே இல்லை. சொல்லப் போனால் பார்த்துப் பார்த்து அவனிடம் பேசுகிறாள். முடிந்த வரை நல்ல மனைவியாய் அவனை சந்தோஷப்படுத்துகிறாள் இப்பொழுது வரைக்கும். அவனது காதலை நன்றாக உணர முடிகிறது அவளுக்கு. ஆனால் அவன் மனதை அழுத்துவது எது என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை அவளுக்கு. 

 

அறைக்குள் வந்த வாணி நளிராவையே கவனித்தவர், அவளது கையைப் பற்றிப் பார்த்தார். அனுபவசாலியான அவருக்கு அவள் ஈருயிராய் இருப்பது புரிந்து போகவும் “கடவுளே நல்லாருக்கணும்” மூன்று பெண்களுக்கும் நல்ல வாழ்க்கையை தந்த கடவுளுக்கு நன்றி கூறினார். 

 

குழந்தையிலிருந்தே அவர் கண் முன்னால் வளர்ந்த பிள்ளைகள் மூவரும். அவர் தினமும் அவர்களுக்காகவும் சேர்ந்தே இறைவனை வணங்குவார். 

 

“மாசமா இருக்க பொண்ணை இப்படி அழ வைக்கலாமா?” வாணி கேட்டார். 

 

வாணி தங்களைத்தான் சொல்லுகிறார் என்று ஆர்த்தியும் சைத்ராவும் எதுவும் பேசவில்லை. எப்ப பாத்தாலும் மாமி இதைத்தான் சொல்லுவார் என்று அலட்சியப் படுத்தினார். 

 

வாணி எழுந்து போய் மலரிடம் விஷயத்தைச் சொல்ல, “நிஜமாவா வாணிக்கா. நாம பாட்டுக்கு அவகிட்ட சொல்லப் போய், எதிர்பார்த்து ஏமாறக் கூடாது பாருங்க” மலர் சந்தோஷமும், வாணி சொன்னபடியே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுமாய்க் கேட்டார். 

 

“அடியே என்னோட கணிப்பு என்னைக்கும் பொய்யா போனதே இல்லைடி. ஆர்த்திக்கும் சைத்ராவுக்கும் நான்தானே பார்த்து சொன்னேன். நீ போய் இனிப்பு செய். நான் நம்ம டாக்டர் பொண்ணை வரச் சொல்லிடறேன். யார்க்கும் சொல்லிட்டு இருக்காதடி, முதல்ல மாப்பிள்ளைக்கும் சம்மந்திக்கும் சொல்லிட்டு பிறகு மத்தவங்க காதுல போட்டுடுவோம்” வாணி சொல்லிவிட்டுப் போக. 

 

ஆர்த்தி அதை ஒட்டுக் கேட்டுவிட்டு சகோதரிகளிடம் காதில் சொல்லிவிட்டாள். 

 

“நிஜமாவாடி?” நளிரா தவிப்பாய் கேட்க. 

 

“அவங்க சொன்னா சரியா இருக்கும் நளி. நீ மாமாவை கூப்பிட்டு முதல்ல சொல்லிக்க. இல்லைன்னா அவருக்கு கோபம் வரும்” ஆர்த்தி சொல்ல. 

 

“ஆமாடி. நீ இரு நான் போய் சிபினை இங்கே அனுபறேன்” சைத்ரா சொல்லிவிட்டு தங்கையை அழைத்துக் கொண்டு வெளியேறினாள். 

 

நளிராவுக்கு நம்பவே முடியவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. சிபினை புரிந்து கொள்ளவே அவளுக்கு இந்த இரண்டு மாதங்களும் சரியாக இருக்கவும், எங்கிருந்து மற்ற எதிர்பார்ப்புகள் வரும். 

 

அறைக்குள் சிபின் வரவும், கதவை வெளியே சாத்திவிட்டாள் ஆர்த்தி. 

 

சிபின் வருகையைக் கண்ட நொடி அவனைக் கட்டி அணைத்திருந்தாள் நளிரா. “என்னங்க ஐம் வெரி ஹேப்பி” என்று சொல்லி அவன் மார்பில் முகம் புதைத்தாள். 

 

சிபினுக்கோ இத்தனை பேர் இருக்கும் பொழுது இதென்ன இப்படி செய்கிறாள் என்று இருந்தது. அவளுக்காக மட்டுமே இங்கே வந்திருந்தவனுக்கு, சின்ன வீட்டிற்குள் இத்தனை உறவுகள், அவர்களின் நடமாட்டமும் நெருக்கடியும் அசவுகரியத்தைத் தந்தது. எப்போது கிளம்பலாம் என்று காத்திருந்தான். 

 

மனதில் இருப்பதை அப்போதே வெளியே கொட்டித் தீர்ப்பவனுக்கு, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது சமாளிப்பது பெரிய விஷயமாக இருந்தது. இவர்களெல்லாம் எப்படி இங்கே வசிக்கிறார்கள் என்பதே பெரும் வியப்புக்கு உரிய விஷயமாக இருந்தது அவனுக்கு. 

 

“ஹேய் என்ன பண்ணுற நீ? நாம பேசுறது யாருக்கு வேணா கேட்கும்டி” அவளைத் தள்ளி நிறுத்த முற்பட. 

 

“கேட்கட்டுமே. மகன் வரப்போற சந்தோஷத்தில் இருக்காங்கன்னு புரிஞ்சுக்குவாங்க” அவனுக்கு மறைமுகமாக தகவல் சொல்லிட. 

 

அவனுக்கோ மின்விசிறி தலைக்கு மேல் ஓடினாலும் வியர்த்து வழிந்தது, ஏசியின் குளிரிலேயே இருந்து பழக்கப்பட்டவன் இங்கே வெந்து நொந்து போனான். நளிராவுக்காக பொறுமையாக இருந்தவனுக்கு நேரம் செல்லச் செல்ல அதெல்லாம் பறந்து போகும் போலத் தோன்றியது. 

 

அவள் மறைமுகமாக சொன்னதெல்லாம் புரியவே இல்லை அவனுக்கு. 

 

“ஹனி பிளீஸ். அம்மா சொன்னாங்க. நீ ஆசைப்பட்டுக் கேட்டுகிட்டேன்னு இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன். சீக்கிரம் கிளம்பற வழியைப் பாரு” சொன்னவனுக்கு சுடு தண்ணியைக் காலில் ஊற்றியது போல எப்படா கிளம்புவோம் என்றிருந்தது. 

 

நளிராவுக்கும் சொல்ல வந்த விஷயம் மறக்க, அவன் கிளம்பலாம் என்றதில் அதிர்ச்சியானது. “கல்யாணம் ஆனப்புறம் இப்பதான் வந்திருக்கோம். நாம இங்க தங்கி இருந்துட்டுதான் போகணும். அம்மாவும் அதான் சொல்லியிருக்காங்கங்க” அவனிடமிருந்து விலகி நின்று சொன்னாள். 

 

“மைகாட் தங்கணுமா? வாய்ப்பே இல்ல நளிரா” சிபின் அதிர்ந்தே போனான். 

 

கோபம்னா மட்டும் நளிரான்னு கூப்பிட வேண்டியது சிறு சுணக்கம் அவளிடம். “பின்னே மாமனார் வீட்டுல மருமகன் தங்க வேண்டாமா?” விடாமல் கேட்டாள். 

 

“இங்க பாருடி. ஏதோ உன்னை அழ வச்சிட்டேன்னு ஒரே காரணத்துக்காகத்தான் இங்கே இந்த நெருக்கடியில் நின்னுட்டு இருக்கேன். இங்கே பாரு எப்படி நனைஞ்சு போயிருக்குன்னு” அவன் தன் உடையை சுட்டிக் காட்டினான். 

 

“நெருக்கடியா?” நளிராவுக்கு அத்தனை கோபம். நீ யாராக இருந்தால் எனக்கென்னவாம். அதெப்படி என பிறந்த வீட்டை, நான் சந்தோஷமாக வாழ்ந்த வீட்டைப் பற்றிக் குறை கூறலாம். நெற்றிக் கண்ணை திறந்துவிட்டாள் நளிரா. 

 

“பின்னே இல்லையாடி. கூண்டு மாதிரி வீடு, இதுக்குள்ளே இவ்வளவு ஆட்கள் உலாவுறாங்க. மைகாட்” அவன் ஏதோ மிருக காட்சி சாலைக்கு வந்தது போல சிலிர்த்துக் கொள்ள,

 

அருகில் ஏதாவது ஆயுதம் இருக்கா என்று விழிகளை ஓட்டிப் பார்த்தாள் நளிரா. 

 

“என்ன தேடுற. இப்ப அதான் முக்கியமா? என்னால இங்க இருக்கவே முடியலைடி. எப்படித்தான் நீ இங்கே இருந்தியோ. மை காட்” ஆறடி உயரமும் சிலிர்த்தது அவனுக்கு. 

 

“அக்கா மாமாங்க எல்லாம் இங்கதான் இருக்காங்க. அப்போ அவங்க மனுசங்க இல்லையா. நீங்க மட்டும்தான் சொர்க்கத்துல இருந்து வந்தீங்களா?” 

 

“அவங்களுக்குப் பழக்கம்டி. பிகாஸ் அவங்க நார்மல் மேன். பட் எனக்கு அந்த அவசியம் இல்லையே” தன்னைப் புரிந்து கொள்ளவே மாட்டேன்கிறாளே என்று ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான் சிபின்.  

 

“நீங்க எப்படியோ போங்க. நான் தங்கிட்டு வரேன்” எப்படிப் பேசுறார், கொஞ்சம் கூட மனுஷத் தன்மையே இல்லாம பேசிட்டு இருக்கார் என்று நினைத்தவளுக்கு ஆதங்கமாக இருந்தது. கூடப் பிறந்தவர்களோடு பேசணும், சுபி வீட்டுக்குப் போகணும், நாதன் அங்கிள், சுபி இவர்களோடு சற்று நேரம் பேசிகிட்டு இருக்கலாம். அப்படி இப்படின்னு ஏகப்பட்ட ஆசைகள் அவளுக்கு. இவனானால் இப்பவே கிளம்பனும் என்று நிற்கிறானே. தவித்துப் போனாள் நளிரா.

 

“இப்ப கிளம்பறியா இல்லையாடி?” இதுவரை அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் பேசியவன், தற்பொழுது குரலை உயர்த்திக் கேட்ட விதத்தில், 

 

“மாப்பிள்ளை கர்பவதியா இருக்க பொண்ணுகிட்ட குரலை உசத்திப் பேசாதீங்க” வாணியின் குரல் ஜன்னல் அருகே இருந்து கேட்டது. 

 

“ஒட்டுக் கேட்கறாங்கடி” அவன் முகம் சுளித்துச் சொன்ன விதத்தில் இவளுக்கே ‘என்ன வாணிக்கா இப்படிப் பண்ணுறீங்க’ என்றானது.

 

“ஹேய் நில்லு நில்லு. அதென்ன கர்ப்பவதி?” புரியாது கேட்டான்.

 

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போகவும் “நான் கன்சீவா இருக்கேனாம்” சுரத்தே இல்லாமல் சொன்னாள். 

 

“ஓ கன்சீவா இருக்கியா” ஏனோதானாவென்று தலையை அசைத்தவன், அப்பொழுதுதான் பொரி தட்டியது போல அவளைப் பார்த்தான்.

 

“கன்சீவா இருக்கியா? எப்படிடி?” என் பொண்ட்டாட்டி எனக்கு மட்டும்தான்னு உரிமைப் போராட்டம் நடத்தும் அரக்கனுக்கு இந்தச் செய்தி அத்தனை உவப்பாக இல்லை. 

 

“அதுவா மாப்பிள்ளை” வாணி அதுக்குத் தோதாக ஏதோ பதில் சொல்ல வாயைத் திறக்க. 

 

“ஆன்டி ப்ளீஸ்” சிபின் போட்ட அதட்டலில் ஓடியே விட்டார். 

 

“என்னடி சொல்லுற. அதெல்லாம் முடியாது. நீ எனக்கு மட்டும்தான்” அத்தனை பிடிவாதம் அவன் குரலில். 

அவனது முகமே அஷ்டகோணலாகப் போனது. இங்கே வந்ததில் இருந்தே இவனுக்கு வயிரெல்லாம் காந்தியது. என் பொண்டாட்டிகிட்ட இவ்வளவு நெருக்கமா இருக்காங்களே. நான்தான் அவளுக்கு முக்கியம்னு ஓடிப்போய் அவளை தன் கைக்குள் வைத்துக்கொள்ள பரபரத்தான். 

 

“முடியாதுன்னா என்ன அர்த்தம்?” அவ்வளவுதாண்டா உனக்கு மரியாதை என்பது போலப் பார்த்தாள் அவனை.

 

“குழந்தையெல்லாம் வேண்டாம். நம்ம ரெண்டு பேர் மட்டும் ஒரு குடும்பமா இருந்துப்போம். எனக்கு நீ உனக்கு நான்னு இருக்கலாம்” 

 

“தூங்க கூட விடாம மேல பாயும்போது அந்த விவரம் இருந்திருக்கணும். பண்ண வினைக்கு பலன் வந்துதான ஆவணும். இப்ப வந்து வேண்டாம்னா எப்பிடி?” மனுசனா இவனெல்லாம். எனக்குன்னு வந்து வாச்சிருக்கான் பாரேன். முன்பெல்லாம் மனசுக்குள் கூட அவனை அவர் இவர் என்று மரியாதையுடன் நல்லவிதமாகத்தான் நினைப்பாள். 

 

இப்பொழுதெல்லாம் ஏக வசனம்தான். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் அதுவும் இல்லாமல் வாடா போடா என்று கூட அழைக்க வாப்பிருக்கு. 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!