சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 18
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
பாட்டி சொன்னபடி சுந்தரி தன் அக்கா ரதியை கைபேசி மூலம் அழைத்தாள்.. சுந்தரியின் அழைப்பை ஏற்ற ரதி “என்னடி.. திடீர்னு பாட்டி என்னை கூப்பிடுறாங்க?” என்று கேட்க “எனக்கும் தெரியல ரதி.. நான் கேட்டேன்.. அது உனக்கும் அவங்களுக்கும் நடுவில் இருக்கிற விஷயம்னு பாட்டி சொல்லிட்டாங்க.. எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியல..” என்றாள் சுந்தரி..
“சரி.. நான் பிள்ளையை தூக்கிட்டு கிளம்பி வரேன்..” என்று அவள் சொல்லவும் “ஆமாம் ரதி.. எனக்கும் பாப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. அவளையும் கூட்டிட்டு வா..” என்றாள் சுந்தரி..
அடுத்த அரை மணி நேரத்தில் ரதி அந்த வீட்டுக்கு வர அங்கே வரவேற்பறையில் மேகலாவும் நடராஜனும் அமர்ந்து கொண்டிருக்க அவர்களை பார்த்தவள் கேள்வியாய் சுந்தரியை நோக்கினாள்..
“அவங்க சுந்தரோட சித்தப்பா சித்தி.. ஊர்ல இருந்து வந்திருக்காங்க.. இனிமே இங்க தான் இருக்க போறாங்க..”
சுந்தரி சொன்னதும் தன் தங்கை பெரியவர்கள் எல்லாம் இருக்கும் நல்ல பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறாள் என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது ரதிக்கு..
இன்னொரு புறம் அவர்களால் அவளுடைய வேலைக்கு எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று கவலையாகவும் இருந்தது..
சுந்தரியிடம் ரகசியமாக “அவங்க மனுசங்க எப்படி?” என்று கேட்க “அவங்க ரொம்ப நல்லவங்க ரதி… என்னை அவங்க வீட்டு பொண்ணு மாதிரியே பார்த்துக்கறாங்க.. அவங்களை அத்தை, மாமா ன்னு என்னை கூப்பிட சொன்னாங்க… உறவுன்னு யாருமே இவ்லைன்னு வருத்தப்பட்டுட்டிருந்த நமக்கு பாட்டியும் அவங்க ரெண்டு பேரும்னு இந்த வீட்டுக்கு வந்தப்புறம் நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு.. “..
அதற்குள் ரதியை பார்த்த மேகலா “இது யாரு சுந்தரி?” என்று கேட்க “அத்தை இதுதான் எங்க அக்கா ரதி..” என்று ரதியை அறிமுகப்படுத்தினாள் சுந்தரி…
“ஓ ஓ.. இவங்க தான் உன் அக்காவா? நல்லா லட்சணமா இருக்காங்க..” என்று சொல்லிவிட்டு “இது உங்க குழந்தையா?” என்று ரதியை கேட்க.. “ஆமாங்க.. இது என்னோட குழந்தை தான்.. பேரு சுவாதி..” என்று சொன்னவள் மேகலா குழந்தையை தூக்கிக் கொள்ள கையை நீட்டவும் அவளிடம் குழந்தையை கொடுத்தாள்..
“ரொம்ப அழகா இருக்காளே பாப்பா.. என்ன சிரிக்கிறீங்க? என்னை ரொம்ப பிடிச்சிருக்கா.. உங்களுக்கு?”
கொஞ்சிக்கொண்டே அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போய் நடராஜனிடம் காண்பித்தாள்..
அவரும் குழந்தையின் கன்னத்தை கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தார்..
“நீ சொன்ன மாதிரி ரொம்ப நல்லவங்களா தாண்டி தெரியுது.. சரி.. அவங்க தான் குழந்தையை வச்சுட்டு இருக்காங்களே.. வா நாம போய் பாட்டியை பார்த்துட்டு வந்துடலாம்.. ”
ரதி அழைக்க “ஒரு நிமிஷம் ரதி… அவங்க கிட்ட சொல்லிட்டு வரேன்.. அத்தை.. பாட்டி எங்க அக்காவை பாக்கணும்னு சொன்னாங்க.. நான் போய் அவளை அவங்க ரூம்ல விட்டுட்டு வந்துடறேன்..” என்று சொல்ல மேகலா “நீ போய் கொஞ்ச நேரம் பேசணும்னா கூட பேசிட்டு வாம்மா.. நான் குழந்தையை பாத்துக்குறேன்..” என்றாள்..
மேகலா சொல்ல சிரித்தவள் “சரிங்க.. அத்தை.. நான் போய் பாட்டியை பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள் ரதி..
ரதியை பார்த்த பாட்டி, “எம்மாடி..ரதி.. பாட்டி இங்க வந்துட்டேன்கறதுக்காக ஒரு எட்டு வந்து என்னை பார்க்க கூடாதா? பக்கத்து வீட்ல இல்லனா என் ஞாபகமே வராதா உனக்கு?” என்று பாட்டி கேட்க “ஆமா.. என் ஞாபகமே அவளுக்கு வரல.. உங்க ஞாபகம் எங்க பாட்டி வரப்போகுது?” என்றாள் சுந்தரி..
“அதுவும் சரிதான்.. ஏண்டி ஒரு தங்கையை இங்க விட்டு வச்சிருக்க.. அவளை அப்பப்ப வந்து பார்த்துட்டு போகணும்னு ஏதாவது இருக்கா உனக்கு?”
“ஐயோ பாட்டி.. சுந்தரி வேற இங்க வந்துட்டாளா? வீட்ல வேலை எக்கச்சக்கமா ஆயிடுச்சு.. எல்லா வேலையும் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு.. குழந்தையை வேற பார்த்துக்க வேண்டி இருக்கு… இந்த மனுஷனை பத்தி நான் சொல்லவா வேணும்..? உங்களுக்கு தான் தெரியுமே.. அதான் எனக்கு மூச்சு விட கூட டைம் இல்ல.. இதுல நான் எங்க இங்க வந்து போறது.. இப்பவே வேலை எல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டிட்டு தான் வந்தேன்.. உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு” அங்கலாய்த்தாள் ரதி..
“சரி ரதி.. பாட்டி ஏதோ உன் கிட்ட தனியா பேசணும்னு சொன்னாங்க.. நீ பாட்டியோட பேசிட்டு இரு.. நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வர்றேன்” என்று அங்கிருந்து நகர்ந்தாள் சுந்தரி..
சுந்தரி வெளியே சென்றவுடன் “சொல்லுங்க பாட்டி.. என்ன விஷயமா என்கிட்ட பேசணும்னு சொன்னீங்க?”
ரதி கேட்க “ரதி.. சுந்தரியை கூடிய சீக்கிரம் யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்கு முயற்சி பண்ணு… இப்படியே இந்த வீட்ல அவளால எவ்வளவு நாள் இருக்க முடியும்னு எனக்கு தெரியல.. எனக்கு உடம்பு சரியில்லைன்னு தான் என்னை பார்த்துக்கறத்துக்காக அவ இந்த வீட்ல இருக்கா.. எனக்கு என்னவோ நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தோணுது.. அப்படி நான் போய் சேர்ந்துட்டேன்னா அப்புறம் அவ இந்த வீட்ல இருக்க முடியாது.. அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா தயவு செஞ்சு உன் வீட்டுக்கு மட்டும் அவளை கூட்டிட்டு போயிடாத.. ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல அவளை தங்க வெச்சுடு” என்று சொன்னார் பாட்டி..
“என்ன பாட்டி.. இப்படி சொல்றீங்க? உங்களுக்கு என்ன ஏதாவது புத்தி மாறாட்டம் வந்திருச்சா? அக்கா நான் இருக்கும் போது அவளை எப்படி தனியா லேடிஸ் ஹாஸ்டல்ல விட முடியும்.. ? அவ என்னோட தான் இருக்கணும் பாட்டி.. எங்க அம்மா அப்பா போன அப்புறம் என்னை விட்டா அவளுக்கு வேற யாரு இருக்கா? ஒரு அக்காவா நான் தானே அவளை பத்திரமா பாத்துக்கணும்.. நானும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடணும்னு தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ஆனா வர்ற மாப்பிள்ளை எல்லாம் அவ கருப்பா இருக்கிறதை பார்த்துட்டு வேணாம்னு சொல்லிட்டு போயிடறாங்களே.. என்னை என்ன பண்ண சொல்றீங்க? அப்படியே யாராவது கட்டிக்கிறேன்னு சொன்னாலும் சீர் செனத்தி எக்கச்சக்கமா கேக்குறாங்க.. இப்போ நம்ம கிட்ட அவ்வளவு பணம் எங்கே இருக்கு பாட்டி?”
“அம்மாடி ரதி நீ உன் தங்கையை பத்திரமா பாத்துக்கணும்னு நினைக்கிறே.. ஆனா உங்க வீட்ல அவ இருந்தான்னா அவ பாதுகாப்பா இருக்க மாட்டா.. உன் வீட்டில தான் அவ மானத்துக்கே ஆபத்திருக்கு..”
பாட்டி சொல்ல ரதி அவரை புருவமுடிச்சுகளுடன் பார்த்தாள்..
“என்ன சொல்றீங்க பாட்டி? என் வீட்ல அவ மானம் போற மாதிரி யாரு நடந்துக்க போறா?”
“உன் கூடவே இருக்குறானே ஒரு கடன்காரன்.. உன் புருஷன் பாஸ்கர்.. அவன் தான்.. வேற யாரு?”
“பாட்டி அனாவசியமா அவரை பத்தி ஏதாவது தப்பு தப்பா சொல்லாதீங்க என்கிட்ட.. அவர் குடிகாரர் தான்.. இல்லைன்னு சொல்லல.. ஊதாரி தான்.. ஆனா பொண்ணுங்க விஷயத்துல அவர் ராமர் பாட்டி.. யார் சொன்னாலும் அவரை பத்தி நான் தப்பா நினைக்க மாட்டேன்..”
ரதி கோவமாக சொல்ல.. “சுந்தரியால ஒவ்வொரு ராத்திரியும் உன் வீட்டில படுக்க முடியாம என் வீட்ல வந்து படுத்ததுக்கு என்ன காரணம்ன்னு உனக்கு தெரியுமா? ஒரு ரெண்டு மாசம் முன்னாடி உனக்கு உடம்பு சரியில்லாம போச்சே.. ஞாபகம் இருக்கா?”
“ஆமா எனக்கு ரெண்டு மூணு நாள் காய்ச்சல் அடிச்சு படுத்துகிட்டு இருந்தேன்.. சுந்தரி தான் எல்லா வேலையும் செஞ்சிட்டு இருந்தா.. அதுக்கு என்ன?”
“அப்போ உன் புருஷன் என்ன பண்ணான் தெரியுமா? உனக்கு உடம்பு முடியல… தூக்க மாத்திரை போட்டு நல்லா தூங்கிட்டு இருந்தேன்னு சொல்லி சுந்தரியை கெடுக்க பார்த்தான்… பாவம்.. அந்த பொண்ணு… அவன் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்து என் வீட்டு கதவை தட்டினா.. நான் கதவை திறக்கறதுக்குள்ள அவ முந்தானையை பிடிச்சு இழுக்க போயிட்டான்.. நான் மட்டும் வந்து அவன் கையை புடிச்சு இழுத்து கீழ தள்ளி விடலைன்னா இந்நேரம் உன் தங்கை மானம் காத்துல போயிருக்கும்.. உன் புருஷனுக்கு சுந்தரியை ரெண்டாம் தாரமா கட்டிக்கணும்னு ஆசை வந்துருச்சுடி.. ஒருவேளை நான் போய் சேர்ந்துட்டேனா மறுபடியும் சுந்தரி அந்த வீட்டுக்கு வந்தான்னா நீ கண்ணசந்த நேரத்துல உன் புருஷன் சுந்தரியை என்ன செய்வான்னு எனக்கு தெரியலடி..”
பாட்டி சொன்னதை கேட்டு அப்படியே பேய் அடித்தாற் போல் உட்கார்ந்திருந்தாள் ரதி..
“ஆனா சுந்தரி இது பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே பாட்டி”
“அவ எப்படி சொல்லுவா? நீ இதோ இப்ப கலங்குறியே… இதே மாதிரி கலங்கி போயிடுவேன்னு அவளுக்கு தெரியுமேடி.. நீ உன் புருஷனை எவ்வளவு விரும்புறேன்னு அவளுக்கு தெரியும்.. இந்த விஷயம் தெரிஞ்சா நீ ஒடஞ்சி போயிடுவேன்னு அவ உன்கிட்ட அந்த விஷயத்தை சொல்லாமலே இருந்தா.. ஆனா இப்ப எனக்கு பயம் வந்துருச்சு.. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிருச்சுன்னா நீ சுந்தரியை கூட்டிட்டு போய் உன் வீட்ல வெச்சேனா அதையே சாக்கா வச்சு உன் புருஷன் அவளை ஏதாவது பண்ணிடுவானோன்னு.. அதனாலதான் வேற வழி இல்லாம உன்கிட்ட இந்த உண்மையை சொல்ல வேண்டியதா போச்சு”
பாட்டி முகத்தில் உண்மையான கவலை இருந்தது..
“இப்ப கூட என்னால இந்த விஷயத்தை நம்ப முடியல பாட்டி… நான் அவரையே கேட்கிறேன்.. என் புள்ள தலைல சத்தியம் பண்ண சொல்றேன்… குடிபோதையில இருக்கும் போது கேட்டா நிச்சயம் உண்மையை உளறிடுவாரு.. அப்படி அவர் சுந்தரி பத்தி ஏதாவது சொன்னார்னா நீங்க சொன்ன மாதிரி சுந்தரியை இதோட என் வீட்டு பக்கமே நான் கூட்டிட்டு போக மாட்டேன்.. ஆனா அப்படி எதுவும் இல்லைன்னு எனக்கு தெரிஞ்சுதுன்னா உங்களை நான் சும்மா விட மாட்டேன்.. வந்து நான் கேட்கிற கேள்வில…”
அவள் கோபமாக சொல்ல “அந்த மாதிரி ஒன்னு நடக்கவே நடக்காது.. போயி உன் புருஷனை கேட்டு பாரு..” என்று உறுதி பட சொன்னாள் பாட்டி..
சரியாக அப்போது சுந்தரி ரதிக்கு கொஞ்சம் காப்பியும் பலகாரமும் கொண்டு வந்து கொடுக்க “பாட்டி.. நீங்களும் சாப்பிடுங்க..” என்று பாட்டிக்கும் கொடுத்தாள்..
“எல்லாருக்கும் கொடுத்துட்டேன் பாட்டி.. அங்க அவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு தான் உங்களுக்கு கொண்டு வந்தேன்.. இந்தாங்க சாப்பிடுங்க..”
பாட்டிக்கு பலகாரத்தை ஊட்டினாள்..
ரதிக்கோ அந்த பலகாரமும் காப்பியும் உள்ளே இறங்கவே இல்லை.. முதலில் தன் கணவனிடம் போய் விஷயத்தை கேட்க வேண்டும்.. என்று அவள் மனம் துடித்தது..
இது பற்றி தன் கணவனிடம் இன்று கேட்காமல் விடக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு “சுந்தரி எனக்கு போதும் சுந்தரி.. நான் கிளம்புறேன்.. வீட்ல நிறைய வேலை இருக்கு.. நான் போய் தான் பண்ணனும்.. ” என்றாள்..
“சரி எனக்கு புரியுது..” என்று சுந்தரி சொல்ல “சரி பாட்டி.. நான் கிளம்புறேன்”
பாட்டியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் ரதி.. வெளியே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வேக வேகமாய் சென்றாள் தன் வீட்டிற்கு..
அவள் தன் வீட்டை அடையும் போதே மணி ஒன்பதாகிவிட அப்போது அவள் கணவன் பாஸ்கர் வீட்டின் வெளியில் குடித்துவிட்டு வந்து சத்தம் போட்டு கலாட்டா செய்து கொண்டு இருந்தான்..
“ஐயோ இந்த மனுஷனை…!!”
தலையில் அடித்துக் கொண்டவள் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் கதவை திறந்து உள்ளே கட்டிலில் கிடத்திவிட்டு மறுபடியும் வாசலுக்கு வந்து “யோவ் எதுக்குயா இப்படி கத்துற? மானம் போகுது.. வா உள்ள..”
அவன் கையை தர தரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்..
“விடுடீ என் கையை… ஒரு மனுஷன் வீட்டுக்கு வந்தா சோறு போட்டு வீட்ல பொண்டாட்டின்னு சந்தோஷம் கொடுக்க மாட்டேங்குற… எப்பவும் வேலை வேலைன்னு சொல்லி விடியாமூஞ்சி மாதிரி தூங்கி வழியற..? அப்புறம் வெளியில் போயிட்டு வர்ற மனுஷனுக்கு வேற என்ன தாண்டி இருக்கு இந்த வீட்ல… நான் எதுக்குடி இந்த வீட்டுக்கு வரணும்..?” பாஸ்கர் தள்ளாடியபடி கேட்டான்..
“ஏன்யா.. இங்க உன் புள்ள இருக்குது.. நான் இருக்கேன்.. எங்களை பாக்க வரணும்னு உனக்கு தோணலையா?”
“எப்பவும் இந்த மூஞ்சிகளை தானே பார்த்துட்டு இருக்கேன்.. ”
“ஓஹோ உனக்கு எங்க மூஞ்சை பாக்குறதுக்கு அவ்வளவு அலுத்து போச்சா?”
“ஆமாடி.. வீட்டுக்கு வந்தா ஒரு புருஷனை சந்தோஷமா வச்சுப்போன்னு எங்கயாவது நினைக்கிறியா? எப்ப பாரு வேலை எல்லாம் செஞ்சுட்டு களைப்பா இருக்குன்னு தூங்குனா மனுஷனுக்கு என்ன தாண்டி இருக்கு இந்த வீட்ல?”
“யோவ்.. சுந்தரியும் அந்த வீட்டுக்கு போயிட்டா.. இங்கே இருக்கிற வேலை எல்லாம் நான் தான் முழுக்க முழுக்க பாத்துகிட்டு இருக்கேன்.. குழந்தையையும் கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.. இதுல நீ ராத்திரி குடிச்சிட்டு வந்து பண்ற அத்தனை கொடுமையும் தாங்கிட்டு இருக்கேன்… இதுல என் உடம்புல எங்கேயிருந்து சத்து இருக்கும்..? நைட்டானா மயக்கமே வந்துடுது எனக்கு..”
“நீ ஏண்டி சுந்தரியை யார் வீட்டுக்கோ அனுப்பிச்ச? உன்னால முடியலன்னா அதுக்கு தான் வீட்டிலேயே ஒரு வழி இருக்கு இல்ல..? சுந்தரியை எனக்கு கட்டி வச்சுட்டேன்னா நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. உனக்கு பதிலா அவ எனக்கு தெனமும் சந்தோஷத்தை கொடுப்பா இல்ல..?”
அவன் கேட்ட நொடி அதிர்ந்தவள் அவன் கையைப் பிடித்து இருந்த தன் கையை உதறி உச்ச கட்ட அருவருப்புடன் அவனை எரித்துவிடுவது போல் முறைத்துக்கொண்டு அப்படியே கீழே தள்ளினாள்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க
கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து