தியாழினியோ, மெல்ல சுய நினைவுக்கு வந்தவள், பதறி விலகினாள்.
“சாரி யாழினி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.
அவனது சட்டையை பிடித்தவள்,”உங்கள விட எளியவங்கன்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா. அவங்க பயம் உங்களுக்கு விளையாட்டா? உங்களுக்கெல்லாம் விளையாடுவதற்கு நான் தான் கிடைச்சேனே?” என்று ஆவேசமாக வினவ.
“யாழினி! இப்ப என்னாச்சு? இது ஜஸ்ட் ஃபன்.”
“எது ஃபன்? உயிர் பயத்துல நான் அலறுறது உங்களுக்கெல்லாம் ஃபன்னா?” அந்த ஆளு தான் சின்னப்புள்ளைன்னு பார்க்காமல், அவரோட பேத்திக்காக என்னை அந்தரத்துல தள்ளி விட்டு, நான் பயந்து அலறுதை வேடிக்கை காண்பிச்சு விளையாடுனாருன்னு பார்த்தா, இப்போ நீங்களும் இப்படி இருக்கீங்களே.” என்றவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய.
தியாழினி அழறதை அவனால் தாங்கவே முடியவில்லை. அதுவுமில்லாமல் அவள், மனதளவில் ஏதோ பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதும் புரிந்தது. ஆனால் விசயம் முழுவதும் தெரியாமல் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் சில நொடிகள் திகைத்தவன், பிறகு அவளது கைகளைப் பற்றி, “மன்னிச்சிடு யாழினி! இனி ஒரு முறை உன் மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்க மாட்டேன். உன் கண்கள்ல இருந்து கண்ணீர் வர்றதை என்னால பார்க்க முடியலை. ரியல்லி, ரியல்லி சாரி யாழினி.” என்று வினவ.
தனக்காக பதறுபவனை ஒரு வித அதிர்வுடன் பார்த்தவள், “இட்ஸ் ஓகே சார்! நானும் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். சாரி.” என்று விட்டு திரும்பி கீழே இறங்க முயன்றாள்.
அவளுக்கு இன்னும் நடுக்கம் குறையவில்லை. நடை தடுமாற, கீழே விழப் போனாள்.
‘யாழினி! பார்த்து…” என்று பதறிப் பிடித்தான் ரித்திஷ்ப்ரணவ்.
“இட்ஸ் ஓகே சார்.” என்று அவனது கைகளை விலக்கப் பார்த்தாள் தியாழினி.
“ப்ச்! இன்னும் நடுக்கம் குறையலை. கையைப் பிடிச்சிட்டு வர்றியா? இல்லை…”என்று முழுவதும் சொல்லி முடிக்காமல் அவளைப் பார்க்க.
அதில் அதிர்ந்தவளோ, அவனது கையைப் பற்றிக் கொண்டு கீழே இறங்கினாள்.
அவர்களை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இன்ஜினியரிடம், “ இந்த மேஸ்திரி நமக்கு செட்டாகமாட்டார். ஸோ மேஸ்திரிக்கு கணக்கு முடிச்சு அனுப்பிடுங்க மி்ஸ்டர்.”
“சார்! இந்த மேஸ்திரி கரெக்டா நம்ம கேட்குற ஆளுங்களோட வேலைக்கு நேரத்துக்கு வந்திடுவார் சார். வேலையும் நேர்த்தியா இருக்குமே.” என்று தயக்கத்துடன் கூற.
“வேலை நேர்த்தியா இருந்தா போதுமா? ஆளும் நேர்மையா இருக்கணும். வேற ஒரு கன்ஸ்டிரக்சனுக்கு வரேன்,வரேன்னு சொல்லிட்டு போகலையாம். அவரு போன தடவை கூப்பிடலையாம். அதான் இந்த முறை வரேன்னு சொல்லிட்டு, அங்க போகலைன்னு அவங்க ஆட்கள் கிட்ட பெருமையடிச்சிட்டு இருக்கான். எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா பேஸ் பண்ணனும். அதை விட்டுட்டு இப்படி முதுகுல குத்துற வேலை. ஐ டோன்ட் லைக் இட். இன்னைக்கு அந்த கன்ஸ்டிரக்சனுக்கு பண்ணதை, நாளைக்கு நமக்கு பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம். சோ கணக்கு முடிச்சு அனுப்பிடு” என்று முடிக்க.
“ ஓகே சார்!” என்பதை தவிர இன்ஜினியரால் வேற ஒன்றும் சொல்ல முடியவில்லை. ‘ இனி அடுத்த ஆள் தேட வேண்டுமே. இது வேற புது தலைவலி. இவனுக்கு நம்ம எம்.டியைப் பத்தி தெரியாது போல.இனி இவன் எங்க, எப்படி போய் பிழைப்பானோ’ என்று புலம்பி கொண்டிருந்தார் இன்ஜினியர்.
‘நம்மளும் தான அவர் கூட போனோம். ஆனால் நாம கவனிக்கலையே. முதலாளினா எல்லாத்துலயும் கவனம் இருக்கணும் போல.’ என்று எண்ணிய தியாழினி, மேம்போக்காக அந்த விஷயத்தை கடந்திருந்தாள்.
அவள் ஆழ்ந்து கவனித்திருந்தால் கொஞ்சம் சுதாரித்திருந்திருப்பாள்.
எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக மோத வேண்டும் என்று எண்ணுபவனின் முதுகில் குத்தினால் நம்மை சும்மா விடுவானா? கண்ணில் நீர் வர விட மாட்டேன் என்றவனே அவளை கண்ணீர் கடலில் மிதக்க விட போவதை அறியவில்லை
காரில் ஏறியதும், “உங்க வீடு எங்கே இருக்கு யாழினி சொல்லு? அங்கேயே ட்ராப் பண்றேன்.” என்று அவளது மௌனத்தை கலைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.
“அது வண்டி ஆஃபிஸ்ல இருக்கு. அங்கேயே விட்டுருங்க. அப்போ தான் மண்டே ஆஃபிஸ் வர சரியாக இருக்கும்.”
“ ஆமாம்!” என்ற ரித்திஷ்ப்ரணவ் காரை, அலுவலகத்தை நோக்கி செலுத்தினான்.
“சரி யாழினி! உன்னைப் பத்தி சொல்லேன். நீயும், உங்க அண்ணனும் தானே இருக்குறதா சொன்ன. அப்புறம் யார் அது? உன்னை சின்ன வயசுல பயமுறுத்துனது ?” என்று வினவ.
வியப்புடன் அவனைப் பார்த்தவள்,”இப்போ நானும், எங்க அண்ணனும் தான் இருக்கோம். ஆனால் எங்க அம்மா, அப்பா இறந்ததும் பெரியப்பா வீட்ல இருந்தோம். அப்போ தான்…” என்றவளுக்கு, சிறு வயது நினைவில் நடுக்கம் வந்தது.
“ஓஹோ! அந்தப் பெரிய மனுஷன் என்ன பண்றாரு? முதல்ல அவர் எங்க இருக்காரு? அவரை சும்மா விடுறதா இல்லை. அம்மா, அப்பா இல்லாமல் அவரை நம்பி இருந்த பொண்ணை இப்படித்தான் பயமுறுத்துவாங்களா? சரியான சேடிஸ்டா இருப்பார் போல. அந்த ஆளுக்கு சரியான பாடம் கத்துக் கொடுக்கணும்.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூற.
தனக்காக பதறவும், கேள்வி கேட்கவும், கோபப்பட்டு சண்டை போடவும் ஒரு ஆள் இருக்கிறார் என்பது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளது அண்ணன் பொதுவாக நேரடியாக சண்டை போடுவதை விரும்ப மாட்டான்.
தியாழினி, அவளது அண்ணனிடம் பெரியப்பாவை பற்றி கூறிய போதும்,
‘விடு தியா மா. ரிது நம்ம அக்கா பொண்ணு தானே. அவ சாப்பிடலைன்னு தான் விளையாட்டு காட்டிருப்பாரு. நீ தப்பா எதுவும் நினைக்காதே!’ என்று அவளை சமாதானம் செய்யத் தான் முயற்சித்தான்.
“இங்கே பாரு குட்டி மா! இப்போ நாம போயிட்டா, நம்ம அம்மா, அப்பாவோட சொத்து எல்லாம் இவங்களே வச்சுக்குவாங்க. அதை விட்டுக் கொடுத்துட்டு போனா அம்மா, அப்பாவோட ஆத்மா வருத்தப்படும் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கோ. மூன்று வருஷம் கண்ணை மூடித், திறக்கிறதுக்குள்ளே ஓடி போயிடும். அம்மா அப்பா இருந்திருந்தா இன்ஜினியரிங் முடிச்சுட்டு மேல படிக்கலாம்னு நினைச்சேன். உனக்காக கேம்பஸ்ல எந்த வேலை கிடைச்சாலும் பரவாயில்ல , உடனே உன்னை கையோட வெளியே கூட்டிட்டு போயிடுறேன்.
நீயும் ப்ளஸ்டூ முடிச்சிடுவ. அப்புறம் நீ ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு.” என்றுக் கூற.
அந்தப் புரியாத வயசுல அண்ணன் சொல்றதுகெல்லாம் அவளால் தலையாட்ட மட்டும் தான் முடிந்தது.’ அதையெல்லாம் எண்ணிப் பார்த்து பெருமூச்சு விட்டாள் தியாழினி.
“சொல்லு யாழினி! அவர் யாரு? என்ன பண்றாருன்னு சொல்லு. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்.”என்றான் ரித்திஷ்ப்ரணவ்.
“அவருக்கான தண்டனை அவருக்கு கிடைச்சிருச்சு. தொழிலும் நஷ்டமாகிடுச்சு. எந்தப் பேத்திக்காக, என்னைப் பாடா படுத்தினாரோ, இப்போ அந்தப் பேத்தி அவரைப் பார்த்தால பயப்படுறா. ஒரு ஆக்ஸிடென்ட்ல முகத்துல தளும்பாகிடுச்சு. இதுக்கு மேல அவரை இப்போ வீட்ல மதிக்க ஆளே இல்லை. எல்லாம் அவரோட மாப்பிள்ளை கண்ட்ரோலுக்கு போயிடுச்சு.”
“அப்போ சரி யாழினி! இனி பழசை யோசிச்சு வருத்தப்படக்கூடாது. உனக்கு ஏதாவது சங்கடமா இருந்தா, என் கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்.” என்ற ரித்திஷ்ப்ரணவின் அன்பில் நெகிழ்ந்து போனாள். மனமோ இனம் புரியாத உணர்வில் ஆழ்ந்திருக்க. முகத்தில் அது எதிரொளித்தது.
தனக்காக அன்பு செலுத்த ஒரு ஜீவன் இருக்க. மகாராணியாக உணர்ந்தாள்.
தந்தை இருந்த போது உணர்ந்த உணர்வு மீண்டும் பெருக்கெடுக்க. அவன் மேல் காதல் பெருக்கெடுத்தது.
அலுவலகத்திற்கு வந்து பிறகும், அவள் கிளம்பும் வரை காத்திருந்திருந்தான் ரித்திஷ்ப்ரணவ்.
அவனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவள், முகம் சிவக்க வண்டியில் பறந்தாள்.
அவளது மனமும் இறக்கை இல்லாமல் சந்தோஷத்தில் பறந்தது.
முகம் மலர்ச்சியுடன் வீட்டிற்கு வந்த தியாழினியைப் பார்த்த நேத்ரனோ, “என்ன குட்டிமா? ரொம்ப சந்தோஷமா இருக்க? போன வேலை முடிஞ்சிடுச்சா? கொட்டேஷன் அமௌன்ட் ஃபில் பண்ணிட்டானா அந்த கேஆர்?” என்று பரபரப்புடன் வினவினான்.
“அது… அது… இன்னும் இல்லைண்ணா…” என்றவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த இதமான மனநிலை மறைய, மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது.
“ஓ! இன்னும் அந்தக் கே ஆர் கொட்டேஷன் ஃபில் பண்ணலையா? எல்லாரும் அமௌன்ட் கோட் பண்ணிட்டாங்க. இவன் மட்டும் கடைசியா தான் பண்ணுவான்.” என்று எரிச்சலுடன் கூறினான் நேத்ரன்.
‘அச்சோ! இதை எப்படி மறந்தேன். அண்ணனுக்கு கே. ஆரை பிடிக்காது. அப்போ நம்ம காதல்? கல்யாணம்?” என்று கலங்கியவாறே அண்ணனை பார்த்தாள்.
“பரவாயில்லை தியாமா! நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற? இன்னும் தான் இரண்டு, மூன்று நாள் டயம் இருக்கே பார்த்துக்கலாம்.” என்று தங்கையை சமாதானம் செய்ய.
அண்ணனின் அன்பில் கண்கள் பனிக்க பார்த்தவள், ‘நம்ம மேல உள்ள பாசத்துல அண்ணன் நம்ம விருப்பத்துக்கு ஒத்துப்பான்.’ என்று எண்ணியவள், நேத்ரனை பார்த்து புன்னகைத்தவளின் புத்தியில், அப்பொழுது தான். தான் செய்ய இருக்குற காரியம் நினைவுக்கு வந்தது.
‘இது மட்டும் ரித்திஷ்ப்ரணவிற்கு தெரிஞ்சா தன்னுடைய காதலுக்கு எதிர்காலம் இருக்குமா? இது அவனுக்கு செய்யற பெரிய துரோகம் அல்லவா?’ என்று குழப்பத்தில் இருந்தாள்.
அதைக் கவனிக்காத நேத்ரனோ,”சரி! நீ போய் ஃப்ரெஷ்அப்பாகிட்டு வா. சாப்பிடலாம்.” என்று அவளை உள்ளே அனுப்பினான்.
முகம் கழுவி வந்தவள், ரித்திஷ்ப்ரணவா? இல்லை அண்ணனா? என்று மனதிற்குள் குழம்பித் தவித்தாள்.
‘கொட்டேஷன் திருட வேண்டாம். அது ரித்திஷ்ப்ரணவுக்கு நம்ம செய்யற நம்பிக்கைத்துரோகம் அல்லவா.
அண்ணன் கிட்ட இதை பற்றி நல்லவிதமாக எடுத்து சொல்லி புரிய வைப்போம்.’என்று எண்ணியவள், வெளியே சென்று,”அண்ணா!” என்று அழைத்தாள்.
“வாடா! சாப்பிடலாமா?” என்று புன்னகைத்தான் நேத்ரன்.
“அண்ணா! உங்கக் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.” என்று தொண்டையை சரி செய்துக் கொண்டு கூறினாள் தியாழினி.
“சொல்லு தியா! இதுக்கெல்லாம் எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு…” என்றான் நேத்ரன்.
“அது வந்து…” என்று தயக்கத்துடன் தியாழினி இழுக்க.
இவ்வளவு நேரம் இருந்த புன்னகை மறைய, தங்கையை அழுத்தமாகப் பார்த்தவன், “என்ன விஷயம் தியா? எதுவா இருந்தாலும் பட்டுன்னு சொல்லு. எதுக்கு இழுக்குற.” என.
“அண்ணா! அது அந்த கொட்டேஷன் அவசியம் திருடணுமா? நம்மளே ஃப்ராபிட் குறைச்சு வச்சு கோட் பண்ணலாம்ணா.” என்று தட்டுத் தடுமாறி ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள் தியாழினி.
“சூப்பர்! நீ அந்த கே.ஆரை லவ் பண்றியோன்னு வர்ஷி சொன்னப்பக் கூட நான் நம்பலை. ஆனால் இப்ப அவ சொன்னது போலவே தான் நடக்குது. நீ ஆளே மாறிட்ட. சுயநலமா என்னை பத்தி நினைச்சுக் கூடப் பார்க்கலை.
அம்மா, அப்பா சாகுறதுக்கே நீதான் காரணம். ஆனா அதையெல்லாம் நினைச்சுப் பார்க்காமல், உனக்காகவே என் ஆசை, கனவு எல்லாத்தையும் புதைச்சுட்டு வாழ்ந்தேன்ல, அதுக்கு நல்ல கைமாறு.” என்று அனலாக வார்த்தைகளை கொட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினான் நேத்ரன்.