“வாலு” என்று சைத்ரா தங்கையின் கன்னத்தக் கிள்ளி முறைத்தாலும் அவள் சொல்வதையே ஆமோதித்தாள்.
ஆர்த்தி சைத்ரா இருவரின் கணவர்களும் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருப்பார்கள். அந்த அளவிற்கு மனோகரியின் வளர்ப்பு இருந்தது.
மிராவின் வளர்ப்போ மகன்கள் இருவரையுமே சுயம்புவாக மாற்றியிருக்க, மனதில் பட்டதை தயங்காது பேசிவிடுவார்கள். இதில் சிபின் தேள் போலக் கொட்டிவிடுவான் வார்த்தைகளை.
துருவ் மாயக்கண்ணன் போலத் திட்டுவதைக் கூட மயக்கும் குரலில் பேசிவிடுவான். எதிராளிக்கு இவன் நல்லவிதமா சொல்லுறானா இல்லை கழுவி ஊத்துரானா என்றே புரியாது அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவார்கள்.
மற்ற மருமகன்கள் போலத்தான் இவரும் புள்ளை பூச்சியாக இருப்பான் என்று விளையாடிப் பார்க்க நினைத்தவர், அவனின் பேச்சில் அரண்டு போனார். இதுவரை யாரிடமும் இதுபோன்ற சீற்றமான பேச்சைக் கேட்டதே இல்லை. அவர்தான் அந்த ஊரையே விலைக்கு வாங்கும் அளவிற்குப் பேசித் தீர்ப்பார்.
மூச்சு வாங்கிட நின்ற வாணிக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டின மனோகரிக்கு ஒரே ஆர்வம் தாங்கலை. வாணியின் ஒட்டுக் கேட்கும் செயலைக் கண்டிக்க நினைச்சவருக்கு வந்த இடத்தில் எதுக்கு தேவையில்லாத வேலை என்று தோன்றவே கண்டுகொள்ளாது வந்துவிட்டார்.
ரெண்டு மருமகளை இந்த வீட்டில் எடுத்திருக்கோம். எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இன்று வரை குறை சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. புடம் போட்ட தங்கமாகவே இருந்தனர் இருவரும்.
சொன்ன சொல்லைத் தட்டுவதுமில்லை, மனோகரியும் அவர்களை அடக்கி ஒடுக்கி வைப்பதுமில்லை. “உங்க விருப்பப்படி இருங்கம்மா. ஆனால் நம்ம வீட்டுப் பாரம்பரியம் கெடாமல் பார்த்துக்கோங்க, ஏதாவது தெரியலைன்னா என்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோங்க. சங்கடம் எதுவும்னா மனசுக்குள்ள வச்சு மறைக்காம அப்பவே எங்கிட்ட உக்கார்ந்து பேசிக்கோங்க. நீங்க ஒரே வீட்டுப் பொண்ணுங்கம்மா. சந்தோசமா இருங்க. உங்கப்பா அம்மாவை பாத்துக்கணுமா தங்கமா பாத்துக்கோங்க” என்று மருமகள்களை அமர வைத்துப் பேசிவிட்டார்.
ராகவனுக்கு மனைவியை நினைத்து இருந்த பயமெல்லாம் போக, இன்னும் இளமையாக மாறிவிட்டார்.
வாணிக்கு இந்த வீட்டில் எத்தனை மதிப்பு என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதுவுமில்லாது வாணி தவறான போதனைகளைச் சொல்லக் கேட்டதுமில்லை. மருமகள்கள் சொல் பேச்சு கேட்கும் பெண்களுமில்லை. அதனால் எப்படியோ விளையாடட்டும் என்று கண்டுகொள்ளாமல் வந்துவிட்டார் மனோகரி.
“என்னாச்சு வாணிக்கா. பேய் அடிச்சிருச்சாக்கும்?” நமட்டு சிரிப்புடன் கேட்கவும் செய்தார்.
புதுமாப்பிள்ளை எப்படிப்பட்டவர்ன்னு நோட்டம் பார்க்கச் சென்று வாங்கிக் கட்டிக்கிட்டு வந்தவருக்கு இன்னும் படபடப்புத் தீர்ந்தபாடில்லை.
“அதானே” மலர்விழி நளிராவிடம் ரெண்டு வார்த்தை சேர்ந்தார் போல அமர்ந்து பேசவில்லை. மகள் எப்படியிருக்கா, போன இடத்தில் சவுரியமா இருக்கா, மாமியார் அனுசரணையா இருக்காங்களா இப்படி எத்தனை கேள்விகள் மகளிடம் கேட்க இருக்கிறது. நளிரா எப்போதுமே அவர்களுக்கு குழந்தை போலத்தான். அவளுக்கே ஒரு குழந்தை வரப்போகிறது என்றால், அந்த விஷயத்தை கிரகித்து அவள் தலையை வருடி, நாலுவார்த்தை சந்தோஷமாக பேசிட ஒரு நாள் தேவைப்படுமே.
மலர்விழிக்கு அழுகை வந்தாலும் அருகில் சம்மந்தி இருப்பதால் நொடியில் தன்னை சமாளித்தார். மற்றவர்கள் முன் மாப்பிள்ளையை விட்டுத் தர முடியாது அல்லவா.
சைத்ரா விழிகளில் ஒரு மெச்சுதல் தென்பட்டது தாயின் புத்திக் கூர்மையில்.
இங்கே அறைக்குள் தன் முன் நிற்பவனைப் பார்ப்பதற்கே அரக்கன் ஒருவனைப் பார்ப்பது போலவே இருந்தது. என்ன ஒரு சுயநலம் ஒரு பெண்ணின் அன்பு மொத்தமும் தனக்கே தனக்கு மட்டும்தான் வேண்டுமென்ற முரட்டுப் பிடிவாதம், சுயநலம். இப்படியும் ஒருவனை இறைவன் படைத்திருக்கிறானே, படைத்தது மட்டுமா தன் தலையில் கொண்டு வந்து கட்டிவிட்டாரே,
நளிராவுக்கு எங்காவது போய் முட்டிக் கொள்ளலாமே என்று ஆனது. ஏதோ தன் பின்னால் சுற்றுகிறான் என்று இந்த ரெண்டு மாசமும் அவன் அன்பில் உச்சி குளிர்ந்தாள். மானே தேனே பொன்மானேன்னு அவனுடைய அர்ச்சனைகளில் உலகமே மறந்து அவன் அணைப்புக்குள் இருந்தாள்.
இப்பொழுது பார்த்தால் புலி தன் வரிகளை மாற்றிக் கொள்வது இல்லையென்பது போல அவன் தன் சுயத்துக்கு வரவும், அவன் மீதான மயக்கம் முழுவதும் கலைந்து போனது. “நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க. என்னால சமாளிக்கவே முடியலை” தலையில் கைவைத்துப் புலம்பினாள்.
ஆனால் அங்கே சுற்றி இங்கே சுற்றி தன் குழந்தையிடமே அவனது குணத்தைக் காட்டினால்.
இனியும் இவனது விருப்பத்திற்கு ஆடிட முடியாதென்று, தலையை அசைத்தவள்,
“எனக்கு இந்தக் குழந்தை வேணும்” அவள் குரலில் அத்தனை உறுதி. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்ற பார்வையைப் பார்த்தாள்.
அவளை இழுத்து இறுக அணைத்தவன் “ஒழுங்கா சொல் பேச்சு கேட்டுக்கோடி. அடிவாங்கி செத்துறாத” அடிக்குரலில் மிரட்டினான்.
“ஆமாமா அப்படியே அடிச்சிட்டாலும்” உதட்டை சுளித்தாள் அவன் மீதிருக்கும் கோபம் தீராமல். எத்தனை கோபமிருந்தாலும் திட்டுவானே தவிர்த்து கைநீட்டி அடித்தது இல்லை. அந்த அளவிற்கு மாமியாரை மெச்சிக் கொண்டாள் நளிரா.
“புருஷனைக் கவனிக்காம முரண்டு பண்ணுற நளிர் பொண்ணுக்கு இனிமேல் அதுவும் விழும்” முறைக்கும் விழிகளுக்குள் முத்தமிடப் போனவன் அவள் விழிகளை மூடிக்கொள்ளவும் இமைகளின் மீது முத்தமிட்டான்.
“அடடே கவனிக்காம எங்க போறேனாம். இல்லைன்னாலும் சும்மா விடுற ஆள்தான்” அவன் மீதான ஊடலில் அவன் சட்டை பட்டனை பிய்த்து எறிந்தாள்.
“எங்கே கவனி பார்ப்போம்” அவன் இருக்குமிடம் மறந்து அவளிடம் ரொமான்ஸ் பண்ணிட.
அவளுக்கோ அந்த மனநிலை சுத்தமாக இல்லை, “ப்ளீஸ்ங்க. எனக்கு நீங்கதான் முக்கியம். அதுக்குன்னு குழந்தையையும் விடமுடியாது. உங்க குழந்தையை பெத்துக்கணும் வளர்த்தணும் நான். ப்ளீஸ்ங்க. என் தங்கமில்ல நீங்க” அவன் கரங்களைப் பற்றியவள் விழிகளுக்குள் பார்த்து சொன்னாள்.
அவனுக்குமே அவள் பார்வையில் இருந்த செய்தி புரியவும் சுதாரித்தான். இதற்கு மேல் இதுபற்றிப் பேசினால் அங்கே வர மறுத்து இங்கேயே இருந்துவிட வாய்ப்பு உள்ளது. அதனால் அவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தான். “சரி இப்போ கிளம்பு போகலாம்” என்று கூறினான். அந்நிய இடத்தில் அவளோடு இப்படித் தனித்திருக்க முடியாது தவித்தான் சிபின்.
“கிளம்பலாம் அவ்ளோதான். இன்னும் ஒரு மணிநேரம் டைம் நளிரா. இல்லையா உன்னைத் தூக்கிட்டுப் போக வேண்டியதா இருக்கும். நீயா ஏதாவது காரணம் சொல்லிக் கிளம்பி வந்தா அவங்களுக்கும் சந்தோசமா இருக்கும்” என் பேச்சு முடிந்தது என்பது போல அவன் கதவைத் திறந்து வெளியே சென்றான்.
மருத்துவர் வந்து அவளைப் பரிசோதிக்க, அதை சற்று நேரம் கொண்டாடினர் வீட்டினர். மலர்விழிக்கும் ராஜனுக்கும் பெருத்த நிம்மதி. மூன்று பெண்களுக்குமே நல்லபடியாய் நடக்கிறதே என்று.
ஆனால் அவர்கள் உடனே கிளம்புகிறோம் என்று சொல்லக் கேட்டவர்களுக்கு ஏற்கனவே விவரம் தெரிந்திருந்தாலும் அதிர்ச்சிதான்.
“என்ன மாப்பிள்ளை இது. இப்பதான் சாப்பிட்டீங்க. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போகலாம். இன்னும் ஒரு மாசம் கழிச்சு வளைகாப்பு வச்சிருக்கோம். இருங்க இங்கயே” மலர்விழிதான் மகளை ஒரு நாளாவது பக்கத்தில் வச்சுப் பார்க்கணும் என்ற ஆசையில் அவனைக் கேட்டார்.
“அத்த எனக்கும் ஆசைதான். ஆனால் பாருங்க ரெண்டு மாசமா நான் அங்க இல்லை. அப்பா மட்டும் தனியா பாத்துக்கறார் எல்லாத்தையும். உங்க பொண்ணு சந்தோசத்துக்காகத்தான் இவ்வளவு நாள் சுற்றுலா போனோம்” எல்லாமே உங்க மகளுக்காகத்தான்னு அவன் ஒரே போடாகப் போட்டுவிடவும்.
இவர்களுக்கு பேச்சே வரவில்லை. அடுத்து என்ன பேசுவது? அதுவும் வேலை இருக்கென்று சொல்லும் பொழுது அவர்களுக்கு அரைகுறை மனசோடு சம்மதிப்பதைத் தவிர்த்து வேறு வழியே இல்லாது போனது.
“ரெண்டு வாரம் போய் வரேன் மா. அவங்களுக்கும் நேர்ல போய் விவரம் சொல்லனும்ல” நளிரா வாயைத் திறந்தால் நிச்சயம் அழுதுவிடுவோம் என்பதால் அவர்களிடம் மவுனமாக விடைபெற்றுக் கிளம்பினாள் கணவனோடு.