அவர்கள் பேசிகொண்டிருக்கும் பொழுதே நண்பர்கள் இருவரும் வந்துவிட்டனர்.
ஆத்மாவும் ரவிக்கும் வெகு நாட்கள் கழித்து துருவ் வீட்டிற்கு வந்திருந்தனர். சிபின்கு திருமணம் ஆன பொழுதில் மிரா ஆர்யன் உள்பட மணமக்கள் அருகில் இருக்க வேண்டியதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்தனர். கோமாவில் இருப்பவனுக்கு துணை தேவையா என்ற கேள்வி எழுமெனில், இவர்கள் கண்டிப்பாக தேவையென்றே சொல்வார்கள்.
துருவ் பயந்த சுபாவம் கொண்டவனெல்லாம் இல்லை, எதைக் கண்டும் பயப்படாத தீரன்தான். ஆனால் தனித்திருக்க விரும்பாதவன். தன்னைச் சுற்றியுள்ள சூழல் கலகலப்போடு இருக்க வேண்டுமென நினைப்பவன்.
துருவ் மீது இவர்கள் வைத்திருக்கும் பாசம் அத்தகையது. எப்பொழுது வேண்டுமானாலும் கண் விழிப்பான் என்று மருத்துவர் சொல்லியிருக்க, சகல வசதிகளோடும் வீட்டின் சூழ்நிலையிலேயே அவன் அறையை அமைத்துவிட்டார்கள்.
அதன் பின்னர் சிபின் ஹனிமூன் சென்றுவிட, இதோ இப்பொழுதுதான் அவர்களுக்கு இங்கே வருவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
துருவ்கு விபத்து மட்டுமே என்றறிந்திருந்தவர்கள் அது எதனால் என்பதை அறிந்திருக்கவில்லை. இமைக்கும் நொடிக்குள் நடந்த விபத்து என்றே நினைத்தார்கள்.
அதனால் நளிராவை இயல்பாகவே எதிர்கொண்டார்கள்.
“ஹாய் அண்ணி” ஆத்மா நளிராவுக்கு ஹாய் சொல்ல.
“நானும் ஹாய் அண்ணி” ரவிக் தானும் இருக்கிறேன் என்று அறிவுறுத்தினான்.
அவர்களைப் பார்த்த நளிராவுக்கு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற நினைவிருக்கிறதே தவிர்த்து முழுதாக நினைவில்லை. துருவ்க்கு முழுதாக மொட்டை அடித்திருபதால் அவனையும் நினைவில் இல்லை.
“அப்படியா? ஆனால் எனக்கு நிஜமாவே நியாபகம் இல்லையே” யோசனையோடு மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.
“ஒன் செக்கண்ட்” என்றவன் நளிராவும் தாங்களும் இருந்த
வீடியோவை அவளுக்குக் காட்டிட.
“மைகாட் நீங்களா இது?” அவளுக்கு ஆச்சரியம். துருவ் அப்படியே சிபின் ஜாடையில் இருந்தான்.
“நாங்களேதான்”.
“துருவ் அவர் மாதிரியே இருக்காறே” வியப்பாய்க் கூறினாள்.
“ரெண்டு பேரும் டுவின்ஸ் அண்ணி. ஒரே மாதிரி இருப்பாங்க. ஆல்பம் பாத்திருப்பீங்களே. இப்பக் கூட அப்படியேதான் இருக்கான். பெருசா எந்த மாற்றமும் இல்லையே” ரவிக் இதென்ன கேள்வி என்பது போலக் கேட்டான்.
ரவிக் கேள்வியில் தங்கள் திருமணம் நடந்த விதமும், அதற்குப் பின்னர் சிபினின் பிடிவாத குணமும் திரும்பவும் நினைவுக்கு வரவும், அவள் புன்னகை தானாக உதட்டுக்குள் அடங்கியது.
“அங்கே இங்கே டிராவல் பண்ணமில்ல. அதான் ஆல்பம் பார்க்க டைம் இல்ல” நளிரா சமாளிக்க.
“அண்ணி சிபின் மொபைல் கேலரியில் இருக்குமே” ரவிக் விடவில்லை.
சிபினின் பாஸ்வேர்ட் கூட அவளுக்குத் தெரியாதே, நளிரா முழித்தாள்.
ஆத்மா அவன் மொபைலில் இருக்கும் போட்டோக்களை நளிராவிடம் காட்டினான்.
அதை வாங்கி ஆர்வமாகப் பார்த்தவளுக்கு அப்படியே அச்சு அசலாக உருவத்தில் ஒன்று போலவே இருவரும் இருக்க, லேசான தாடியும், கலையாமல் ஜெல் வைத்து வாரிய கேசமும், அழுத்தமான நடையும், கம்பீரமான தோற்றமும் என சிபின் வெளித் தோற்றத்தில் ரொம்பவே மாறுபட்டிருந்தான்.
“ஆமால்ல. ஒரே மாதிரி இருக்காங்களே” வியப்பாக சொன்னாள்.
“நீங்க அடிச்சதை தெரிஞ்சுக்கிட்டுதான் சிபின் உங்களைத் தேடி வந்தது. அதற்கு அப்புறம் இந்தக் கல்யாணம் எல்லாம்” ரவிக் எப்பொழுதும் போல அழகாக உளறி வைத்தான்.
சிபின் அங்கே வருவதற்குள் ரவிக் எல்லாவற்றையும் சொல்லி முடித்திருந்தான்.
“அவரு எதுக்கு தேடி வரணும்?” நளிரா அப்பாவியாய் மனம் பதைக்க கேட்டாள் ‘ஒருவேளை அப்படியும் இருக்குமோ’ என்று அஞ்சியவாறுதான் கேட்டாள்.
“பின்ன தம்பியை அடிச்சுட்டு தப்பிக்க முடியுமா? ஆனால் அவன்தான் உங்ககிட்ட சிக்கிக்கிட்டான்” நண்பர்கள் இருவரும் சிரிக்க.
“அதுக்குப் பிறகு இவன் டோட்டலி உங்க பக்கம்தான்”. ஆத்மா நளிராவிடம் சொன்னான். அவர்களை சொல்லியும் தப்பில்லை, முழுவிவரமும் அறியாமல் உளறிக் கொட்டி வைத்தார்கள்.
அருகில் வரும் பொழுதே அனைத்தையும் காதில் வாங்கியிருந்த சிபின் முகம் இருள் படர்ந்தது போல ஆனது “கைஸ் அம்மா உங்களைத் தேடுறாங்க போங்க” அவர்களை அனுப்பியவன் நளிரா அருகில் அமர்ந்தான்.
அவன் பக்கத்தில் அமர்ந்ததைக் கூட உணராது, சிந்தனையில் இருந்தாள் நளிரா. அப்போ அவர் எனக்காகத் தேடி வரலையா, தம்பிக்கு அடிபட்ட கோவத்தில் இப்படி நடந்துக்கறார்ன்னு எதார்த்தமா நினைச்சது தப்பா. பழி வாங்கத்தான் அப்படியெல்லாம் பண்ணாறா? அவள் தலைக்குள் நிறைய கேள்விகள் அனைவருக்க, மயக்கமே வருவது போல இருந்தது.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“ஹனி” அவள் கைகளை அவன் பற்றிட,
“எனக்கு தனியா இருக்கணும்” கிட்டத்தட்ட யாசித்தாள் தனிமையை.
மனதுக்குள் இடிவிழுந்தது போல இருந்தது அவளுக்கு.
“உன்கிட்ட நான் பேசணும்டி. அதைக் கேட்டுட்டு அப்புறமா தனியா இருந்துக்க” சிபின் அவள் கைகளைப் பற்றினான்.