“ஹனி” அவள் கையைப் பற்றியவனுக்கு உள்ளூர குற்ற உணர்வு அரித்தது. மன்னிப்பு கேட்கவும் அருகதை இல்லையென்றே நினைத்தான் சிபின்.
நளிரா யாரென்றே அறியாமல் முழித்த விதமும், துருவ் நிலைமையை புரிந்து கொண்டு நளிராவிடம் அண்ணி அண்ணி என்று அழைத்துப் பேசிய விதமும் கண்டவனுக்கு, இங்கே தவறு தான்தான் என்பது பொட்டில் அடித்தது போல உரைத்தது.
ஒரு தவறும் செய்யாத பெண்ணை என்னவெல்லாம் பேசிவிட்டோம்? அவன் பேசிய வார்த்தைகளை இனிமேல் அழி ரப்பர் வைத்து அழிக்கவும் முடியாதே. அடித்த காயம் கூட மறைந்து விடுமாம். ஆனால் பேசிய வார்த்தைகளின் ரணமானது மரணம் வரையிலும் ஆறாத வடுவாக மனதில் நிலைத்து விடுமாம்.
இதோ வெகு அருகில் அமர்ந்திருக்கும் ஆருயிர்ப் பெண்ணை தோள் சேர்த்து அணைக்கவும் முடியாது விலகி நிற்கும் கொடுமையை என்னவென்று சொல்ல.
முன்பு போலவே அவளை அரட்டி உருட்டி தன் கைக்குள் வைக்கலாம்தான். பயந்த பெண்ணான தன் மனைவியும் தனக்கு கட்டுப்படுவாள்தான். ஆனால் அப்படி செய்தால் தான் மிருகமேதான் என்பது உண்மையாகிவிடுமே.
இதுவரை தான் செய்த பிழைகளுக்கே அவளிடமிருந்து மனதார மன்னிப்புக் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கையில், இதற்கு மேலும் தவறு செய்து பாவ எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள அவன் விரும்பவே இல்லை.
“ஹனி!” அவள் அமைதி தாங்காது அவன் திரும்பவும் அழைத்திட.
“ஹனி?” கேலியாய் அவள் உதடுகள் வளைந்தது.
“ப்ளீஸ் சொல்ல வரதை முழுசா கேளுடி” அவள் கைகளை தன் கைக்குள் வைத்துக்கொண்டான், உன்னை எங்கேயும் விடமாட்டேன் என்பது போல.
“துருவ்வ அடிச்சதும், சும்மா உன்னை மிரட்டி வைக்கத்தான் வந்தேண்டி. ஆனால் உன்னைப் பார்த்ததும் பிடிச்சது. கல்யாணம் வரைக்கும் வந்த பிறகுதான் தெரிஞ்சது துருவ் உன்னை லவ் பண்ணுறது” சிபின் சொல்லவும் நளிராவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
“மைகாட்” இதென்ன இன்னொரு குழப்பம். அதுவும் துருவ்வைப் பார்க்கையில் சகோதரனின் நினைவுதான் வருகிறது அவளுக்கு. குறும்புடன் கன்னம் குழிய அவனது சிரிப்பும், அண்ணி என்று கண் சிமிட்டி அழைப்பதும் அவளுக்கு அத்தனை பிடித்துப் போனது.
ஆனால் எதிரில் இருப்பவன் சொல்வதே வேறாக இருக்கிறதே… இருதயம் படபடவெனத் துடிக்க, நெஞ்சில் கைவைத்து அழுத்தினாள். அவன் சொல்வதை கிரகிக்க, தன்னைத்தானே தைரியமாக்கினாள்.
“துருவ் உன்னை லவ் பண்றது தெரிஞ்சு எனக்கு கோபம். அதான் உன்னை கண்டபடி திட்டி ஹர்ட் பண்ணிட்டேன்” குற்ற உணர்வில் தலைகுனிந்தான் சிபின்.
“ஓஹோ. அதான் இன்னும் எத்தனை பேரை மயக்கப் போறே? யார் கூப்பிட்டாலும் போயிடுவியா? அப்புறம் அன்னைக்கு முதல் நாள் நைட் என்னை காயப்படுத்தினது” நளிரா வெறித்த விழிகளுடன் அடுக்கிக் கொண்டே செல்ல.
“ப்ளீஸ் தயவுசெய்து அதையெல்லாம் சொல்லாதடி. எனக்கு அசிங்கமா இருக்கு” அவள் கைகளை தன் முகத்தில் பதித்துக் கெஞ்சியே விட்டான். அவள் சொன்னதின் தாக்கம் தாளாது.
“ஓ வெறும் வார்த்தைகளே வலிக்க வைக்குது இல்லையாங்க. ஆனா ஒரு தப்புமே செய்யாம அதை அனுப்பவிச்ச நான்?” அவளுக்கு அத்தனை ஆவேசம்.
“நளிரா” அவளை அவன் ஆறுதல் படுத்த முயன்றான்.
“உங்க தம்பியைப் பார்த்தால் சத்தியமா அப்படி நினைக்கவே முடியலை. ஆனால் அவனா?” நளிரா துருவ் பத்தி தப்பாகக் கூட நினைக்க முடியாது தவித்தாள்.
“ஹனி ப்ளீஸ். துருவ் தப்பானவன் இல்லடி. அவனைப் பத்தி தவறான எண்ணத்தை வளர்த்திக்காதே. அவன் பாவம்டி” எங்கே முதல் சந்திப்பிலேயே தன் தம்பியை வெறுத்து விடுவாளோ என்று அஞ்சினான் சிபின்.