சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 23
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் பாட்டியை தூக்கிக் கொண்டு போய் காரில் ஏற்ற ஷாலினி அந்த மருத்துவரின் மருத்துவமனை இருந்த முகவரியை சொன்னாள்.. காரை வேகமாக அந்த மருத்துவமனையை நோக்கி ஓட்டினான் சுந்தர்..
வண்டியில் போகும்போது ஷாலினி அந்த மருத்துவருக்கும் கைபேசி மூலம் அழைத்து விஷயத்தை எல்லாம் விவரித்திட “உடனே கூட்டிட்டு வாம்மா.. இங்க எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்.. வந்தவுடனே அவங்களை பார்த்துடலாம்.. அவங்களுக்கு தைரியம் சொல்லி கூட்டிட்டு வாங்க” என்றார் அவர்..
“ஓகே டாக்டர்.. தேங்க்யூ..” என்று சொன்னவள் “பாருங்க சுந்தர்.. டாக்டரும் நான் சொன்ன மாதிரி தான் சொல்றாரு.. பயப்படாதீங்க.. பாட்டியை எப்படியும் காப்பாத்திடலாம்” என்று சொன்னவள் சுந்தரி பாட்டியை தோளில் சாய்த்து கொண்ட படி “ஒன்னும் இல்ல பாட்டி.. சரியா போயிடும்” என்று பாட்டி நெஞ்சை தடவி விட்டுக் கொண்டே சொல்லிக் கொண்டு வந்ததை பார்த்தாள்..
சுந்தரி கண்களிலோ அவள் அனுமதியில்லாமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது..
அவளைப் பார்த்து ஷாலினி “சுந்தரி தயவுசெய்து அவங்க எதிர்ல இப்படி அழாதீங்க.. ஏற்கனவே அவங்களுக்கு உடம்பு சரியில்ல.. நீங்க அழறதை பார்த்தா இன்னும் ஸ்ட்ரெஸ்ட் ஆயிடுவாங்க.. எதுக்கு இவ்வளவு சீன் கிரியேட் பண்றீங்க? இன்னும் பத்து நிமிஷம் தான்.. நாம டாக்டர் வீட்டுக்கு போயிருவோம்.. அப்புறம் எல்லாம் சரியாயிடும்.. உங்க எமோஷனை கொஞ்சம் குறைச்சுக்கோங்க..” சுந்தரியை திட்டினாள்..
“சென்டிமென்டல் ஃபூல்” என்று அவள் சொன்னது சுந்தரியின் காதில் விழுந்து அவள் மனதை காயப்படுத்தியது.. அவள் சொன்னது சுந்தரின் காதிலும் விழுந்தது..
“ஷாலினி ப்ளீஸ்.. அவங்க கொஞ்சம் சென்ஸிட்டிவ்.. அதுவும் பாட்டிக்கு ஏதாவதுன்னா அவங்களுக்கு தாங்கவே முடியாது..”
“அதெல்லாம் சரிதான் சுந்தர்.. அவங்க அவ்வளவு சென்ஸிட்டிவ்னா பாட்டியோட அவங்க வந்து இருக்கவே கூடாது.. பாட்டிக்கு இவங்களை பார்த்து சீரியஸா ஏதாவது ஆயிடுச்சின்னா.. நாம பண்றது எல்லாம் வீணா போயிரும்..” என்று அவள் சொல்ல சுந்தருக்கோ அவள் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது..
“என்ன ஷாலினி இப்படி பேசுறீங்க?” என்று அவன் கேட்க “இல்ல சுந்தர்.. இந்த மாதிரி எமோஷனலா இருக்கிறவங்கல்லாம் பேஷன்ட் கூட இருக்கவே கூடாது..” என்றாள்..
சுந்தரிடம் அப்படி சொல்லிவிட்டாளே தவிர மனதிற்குள் “இந்த சுந்தரி வரலைனா இந்த கெழவிய நான் இல்ல என் மேல சாய்ச்சிட்டு வந்து இருக்கணும்? ஐயையோ.. இவங்களை எல்லாம் யாரு மேல சாய்ச்சி தூக்கிட்டு வர்றது.. என்னால அப்படி எல்லாம் யோசிச்சு பார்க்க கூட முடியல” என்று நினைத்தாள்..
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மருத்துவமனையை கார் அடைந்திருந்தது.. வண்டியை நிறுத்திய சுந்தர் மறுபடியும் காரின் பின் கதவை திறந்து பாட்டியை கைகளில் ஏந்தி மருத்துவமனைக்குள் கொண்டு சென்றான்..
அந்த மருத்துவர் பாட்டிக்கு வேகமாக வைத்தியம் பார்க்க அடுத்த 10 நிமிடங்களில் பார்வதி பாட்டி ஆபத்துக் கட்டத்தில் இருந்து வெளியேறி இருந்தார்..
“ஒன்னும் இல்ல.. அவங்களுக்கு ஏதோ ஸ்ட்ரெஸ் ஆகி இருக்குனு நினைக்கிறேன்.. எதையோ நினைச்சு ரொம்ப கவலைப்பட்டு இருக்காங்க.. அவங்க இதுக்கு மேல ஸ்ட்ரெஸ் ஆகாம பாத்துக்கோங்க.. அவங்க இன்னொரு தடவை இந்த மாதிரி பேனிக் ஆனாங்கன்னா மறுபடியும் இந்த அட்டாக் வரலாம்.. இன்னொரு முறை இந்த மாதிரி அட்டாக் வந்துதுன்னா அவங்க உயிருக்கே ஆபத்து ஆகறத்துக்கும் வாய்ப்பு இருக்கு.. கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க..” என்று சொல்லி சென்றார் மருத்துவர்..
ஷாலினி பக்கம் திரும்பிய சுந்தர் அவள் இரு கைகளையும் தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டு “ஷாலினி.. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியல.. என் கண்ணுக்கு இப்ப நீங்க தெய்வம் மாதிரி தெரியுறீங்க.. அந்த பாட்டி தான் எனக்கு எந்த உறவுமே இல்லாதப்போ எனக்கு உறவா கிடைச்சாங்க… அவங்க உயிரை காப்பாத்தி கொடுத்திருக்கீங்க.. ஷாலினி.. உங்களுக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் போதாது..” என்று கண் கலங்க சொன்னான்..
“ஐயோ சுந்தர்.. அவங்க உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது நான் எப்படி சும்மா இருக்க முடியும்? நான் ஒரு டாக்டர் ரெஃபரன்ஸ் தான் கொடுத்தேன்.. இது சாதாரண உதவிதான்.. இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை ரொம்ப சங்கடப்பட வைக்காதீங்க..” என்று பெருந்தன்மையாய் சொல்வது போல் சொன்னாள்..
அந்த பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போனதனால் தான் தானும் சுந்தரும் வெளியே போகும் திட்டம் கெட்டுப் போய்விட்டது என மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தவள் இப்போது நடந்ததும் தனக்கு சாதகமாகவே இருப்பதை எண்ணி பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போனதற்காக சந்தோஷப்பட்டாள்..
சுந்தரி ஷாலினியிடம் சென்று “நானும் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டு இருக்கேன் ஷாலினி.. ரொம்ப தேங்க்ஸ்.. நிஜமா சொல்றேன்.. பாட்டி எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க சமயத்துல அந்த டாக்டர்க்கு ஃபோன் பண்ணி இதெல்லாம் ஏற்பாடு பண்ணலைனா பாட்டியோட உயிரை காப்பாத்தி இருக்கவே முடியாது.. நீங்க சுந்தருக்கு ஃப்ரெண்டா கிடைச்சது அவருக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் பெரிய அதிர்ஷ்டம் தான்” என்றாள் அவள் நிஜ முகம் அறியாமல்..
“அதெல்லாம் சரி தான் சுந்தரி.. ஆனா நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டா வேலை செஞ்சிருக்கணும் சுந்தரி.. இன்னைக்கு அந்த டாக்டர் ஊர்ல இல்லைன்னா நீங்க உடனே இன்னொரு டாக்டரை பார்த்து வீட்டுக்கு வந்து ட்ரீட்மெண்ட் பண்ண சொல்லி இருக்கணும்.. இன்னைக்கு நின்ன மாதிரி கைய பிசைஞ்சுகிட்டு நிக்க கூடாது.. கொஞ்சம் ஸ்மார்ட்டா அதை பண்ணி இருந்தீங்கன்னா பாட்டி இவ்ளோ நேரம் அவஸ்தைப்பட்டு இருக்க வேண்டாம்.. உங்களோட அஜாக்கிரதையினால இன்னைக்கு பாட்டி உயிருக்கே பெரிய ஆபத்தா போயிருக்கும்”
ஷாலினி ஓரக்கண்ணால் சுந்தரை பார்த்துக் கொண்டே சொல்ல சுந்தரும் அவளோடு சேர்ந்து கொண்டான்..
“ஷாலினி சொல்றது ஒரு விதத்துல கரெக்ட் தான் சுந்தரி.. பாட்டிக்கு மூச்சு திணறல் வந்த உடனேயே நீங்க கொஞ்சம் வேற டாக்டரை தேடி வீட்ல கூப்பிட்டு ட்ரீட்மென்ட் பண்ண சொல்லி இருக்கலாம்.. பாட்டி பாவம்.. எவ்வளவு நேரம் மூச்சு திணறலோட அவஸ்தை பட்டுட்டாங்க.. அவங்க மேல நீங்க அவ்வளவு பாசம் வெச்சிருந்தா மட்டும் போதாது சுந்தரி.. கொஞ்சம் அலர்ட்டாவும் இருக்கணும்..” என்று சுந்தர் அவளை திட்ட ஷாலினி மனதுக்குள் ஒரு குத்தாட்டமே போட்டாள்..
சுந்தரி “பாட்டி அப்படி மூச்சு திணறிட்டு இருக்கும்போது அவங்களை விட்டுட்டு போய் டாக்டர் தேடுறதுக்கு என்னால முடியல சார்.. அவங்க பக்கத்துல இருந்து அவங்க நெஞ்சை தடவி கொடுத்துட்டு இருந்தேன்.. எனக்கு நான் அவங்க பக்கத்துல இருந்து தைரியம் சொல்றதுதான் அதைவிட முக்கியமோன்னு தோணுச்சு.. ஆனா நீங்க சொல்ற மாதிரி சீக்கிரம் டாக்டரை கூப்பிட்டு இருந்தா ஒருவேளை பாட்டி இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்.. என் மேல தான் தப்பு… சாரி சார்..” என்று சுந்தரிடம் சொன்னாள் சுந்தரி..
அவள் அழுவதை பார்த்த சுந்தருக்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது..
“சரி அழாதீங்க சுந்தரி.. இட்ஸ் ஓகே.. அதான் பாட்டிக்கு ஒன்னும் ஆகல இல்ல..? நீங்க பாட்டியை கூடவே இருந்து பார்த்துக்கோங்க.. நான் டாக்டரை மீட் பண்ணிட்டு வேற ஏதாவது அவங்களுக்கு மருந்து வாங்கணுமா? வேற என்ன பண்ணனும்னு கேட்டுட்டு வரேன்..” என்று சொல்லியவன் மருத்துவரின் அறையை நோக்கி சென்றான்..
பாட்டியின் அறைக்கு வந்த சுந்தரி பாட்டி கண் விழித்திருக்கவும் “என்ன பாட்டி? இப்படி பயமுறுத்திட்டீங்க.. ஒரு அரை மணி நேரத்துல எனக்கு உயிரே போயிடுச்சு.. டாக்டர் உங்களுக்கு ஏதோ ஸ்ட்ரெஸ்ன்னு சொன்னாரு.. அப்படி என்ன பாட்டி உங்களுக்கு கவலை..?” என்று கேட்டவளிடம் “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சுந்தரி.. அவர் ஏதோ காரணம் சொல்லணுமேன்னு சொல்லிட்டு போறாரு.. அதை கேட்டு நீ வந்து என்னை கேள்வி கேட்டா நான் என்னத்த சொல்றது.. சொல்லு..” என்று பாட்டி சொன்னார்..
ஆனால் முந்தின நாள் ஷாலினி வீட்டுக்கு வந்ததில் இருந்து சுந்தரியின் வாழ்க்கையை நினைத்து பாட்டிக்கு கவலை தொற்றிக் கொண்டிருந்தது.. என்னதான் சுந்தர் தன் நண்பர்களிடம் அப்படி ஒரு சவாலை போட்டிருப்பதாக சொல்லி இருந்தாலும் சுந்தரி கூடவே இருந்தால் அவன் மனம் மாறும் என்று பாட்டி நினைத்துக் கொண்டிருந்தாள்..
ஆனால் ஷாலினியை பார்த்ததிலிருந்து பாட்டிக்கு ஒரு பயம் வந்திருந்தது.. எங்கே சுந்தர் அவள் வலையில் விழுந்து விடுவானோ என்று.. இரவு முழுவதும் தூங்காமல் இதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தவருக்கு மன அழுத்தம் மிக அதிகமாகவே தான் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது..
“பாட்டி அப்படியே ஏதாவது இருந்தாலும் நீங்க எதுவும் ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க பாட்டி.. உங்க உடம்பை பத்திரமா பாத்துக்கணும்.. பாருங்க.. உங்களுக்கு உடம்பு சரியில்லைன்ன உடனே எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. அப்படியே பயந்து போயிட்டேன் பாட்டி.. எனக்குன்னு இருக்குறது நீங்க மட்டும் தான்.. ” என்றாள் பாட்டியிடம்..
அவள் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்க அதை துடைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள்..
“நீ இப்படி அழுதுகிட்டே இருந்தன்னா எனக்கு இன்னும் மன அழுத்தம் ஜாஸ்தியா தான் ஆகும்.. நீ முதல்ல அழறதை நிறுத்து..” என்றார் பாட்டி கண்டிப்பான குரலில்..
“அப்போ நீங்க இனிமே ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம உங்க உடம்பை பத்திரமா பாத்துக்கணும்.. இல்லன்னா நான் இப்படித்தான் அழுவேன்” என்றாள் சுந்தரி வேறு பக்கம் திரும்பி குழந்தை போல் உதட்டை பிதுக்கி கொண்டு..
“சரி சரி.. நீ அழாதே.. நான் இனிமே ஒழுங்கா என் உடம்பை பார்த்துக்கிறேன்…” என்று பாட்டி அவள் தலையை தடவி புன்னகைத்த படி சொன்னாள்..
மருத்துவர் சில மருந்துகளை சொல்லி அதை வாங்கி கொடுக்க சொல்லிவிட மறுநாளே பாட்டியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கூட்டி வந்தான் சுந்தர்..
ஏற்கனவே ஷாலினியை பற்றி நல்ல அபிப்பிராயத்திற்கு வந்திருந்தவன் இப்போது இன்னும் அவள் மேல் மதிப்பு கூடி இருக்க அவளை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறை தான்.. நாள் முழுக்க அவள் செய்யும் சின்ன சின்ன வேலைகளுக்கு கூட அவளைப் புகழ்ந்து கொண்டே இருந்தான்.. அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் முன்னே சுந்தரி பற்றி பேசுவதை கூட தவிர்த்தான்..
இரண்டு நாட்கள் ஓடியது.. அன்று கடையிலிருந்து வீட்டுக்கு வந்த சுந்தரை அழைத்தார் நடராஜன்..
“அப்பா..சுந்தர்.. மேகலாவோட அண்ணன் புள்ளைக்கு கல்யாணம் வச்சிருக்காங்கப்பா.. நாங்க நாலு நாள் முன்னாடியே அங்க போகணும்னு நினைக்கிறோம்.. அவ தான் அங்க எல்லா கல்யாண வேலையும் செய்யணும்.. இந்த வெள்ளிக்கிழமை கல்யாணம்.. நாளைக்கு கிளம்பி போலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.. இன்னைக்கு நீ கம்பெனியில் இருந்தப்போ இவங்க அண்ணன் நேர்ல வந்து பத்திரிகை கொடுத்துட்டு போனாருப்பா” என்று ஒரு பத்திரிகையை அவனிடம் நீட்டினார்..
“இது உனக்கு அவர் கொடுக்க சொன்ன பத்திரிகைப்பா.. உன்னையும் எங்களோடயே வந்து அந்த கல்யாணத்துல கலந்துக்க சொன்னாரு.. நீ எங்க கூடயே இப்பவே வரியா?” என்று அவர் கேட்க “இல்லப்பா.. இங்கே பாட்டி வேற உடம்பு சரியில்லாம போய் இப்பதான் கொஞ்சம் பரவாயில்லையா இருக்கிறாங்க.. அவங்களை இப்படி விட்டுட்டு நாலு நாள் நான் வெளியில் வந்து தங்க முடியாது பா.. எனக்கு கம்பெனில வேற நிறைய வேலை இருக்குப்பா.. நான் கட்டாயம் கல்யாணத்தன்னிக்கு வரேன்.. இப்போ நீங்களும் அம்மாவும் மட்டும் போயிட்டு வாங்கப்பா..” என்று சொன்னான் சுந்தர்..
“சரிப்பா அப்ப நாங்க நாளைக்கு கிளம்புறோம்..” என்றார் அவர்..
சொன்னது போலவே மறுநாள் அவரும் மேகலாவும் ஊருக்கு கிளம்பி சென்றனர்..
அவர்கள் சென்ற ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லாம் பாட்டியின் பிள்ளை சேகர் அங்கு வந்தான்..
வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்த சுந்தரி அவனை பார்த்தவுடன் “நீங்க எங்க இங்க வந்தீங்க? உங்களை இந்த வீட்டுக்குள்ள இனிமே விட வேணாம்னு சுந்தர் சார் சொல்லி இருக்காரு.. நீங்க முதல்ல கிளம்புற வழியை பாருங்க” என்றாள்
“இங்க இருக்கிறது என்னோட அம்மா.. அவங்களை நான் பார்க்க கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாரு? தள்ளுடி.. நான் போய் எங்க அம்மாவை பார்க்கிறேன்..” என்று சொன்னவன் சுந்தரியை முந்திக்கொண்டு உள்ளே வர பார்க்க அவளோ வழி மறித்து கதவை வேகமாக அவனை உள்ளே வர விடாமல் சாத்தினாள்..
ஆனால் அவனுடைய பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் கை லேசாக விலக அதை பயன்படுத்திக் கொண்டு உள்ளே வந்தான்..சேகர்..!!
உள்ளே வந்தவன் நேரே பாட்டியின் அறைக்குச் செல்ல அவனைப் பார்த்த பாட்டியோ “நீ எதுக்குடா இங்க வந்த? மரியாதையா வெளில போ.. உன்னை மாதிரி ஒரு பிள்ளை இருக்கிறதையே நான் மறந்துட்டேன்..”
பாட்டி பதட்டமாகி கத்த “உன் பேர்ல அந்த வீடு இல்லனா நான் ஏன் உன்னை பாக்க வர போறேன்? உன்னால எனக்கு வேற எந்த பிரயோஜனமும் இல்லை.. அந்த வீட்டை என் பேர்ல எழுதி வச்சிடு.. அப்புறம் உன் கண்ணிலேயே நான் பட மாட்டேன்…” என்றான் அவன்..
அதைக் கேட்டு பெரிதாக சிரித்த பாட்டி “இனிமே அந்த வீடு உனக்கு கிடைக்காது.. அது யாருக்கு போய் சேரணுமோ அவங்க பேருக்கு எழுதி வெச்சுட்டேன்.. நீ தலைகீழ நின்னாலும் அந்த வீட்டை இனிமே வாங்க முடியாது.” என்றார்..
சேகர் கண்களில் கோபத்துடன் “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நான் அவ்வளவு தூரம் அந்த வீடு எனக்கு வேணும்னு கேட்டுட்டு இருக்கேன்.. வேற யாருக்கோ எழுதி வெச்சிட்டேன்னு சொல்ற.. நீ எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கியோ?” என்று பாட்டியின் அருகில் செல்ல முன்னேறியவனை ஒரு வலுவான கை பின்னிருந்து பிடித்திருந்தது..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து
பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து