கைகளில் காய்கறிக் கூடையோடு நடந்து வந்து கொண்டிருந்த தாமரைக்கு முன்னால், வேகமாக வந்து நின்றது அந்த கறுப்பு நிறக் கார்.
அது வேகமாக வந்து நின்ற தினுஷில் ஒரு கணம் பதறிப் போய், கையில் வைத்திருந்த கூடையை நழுவ விட்டாள் தாமரை, நல்ல வேளையாக காய்கள் எல்லாம் நிலத்தில் விழுந்து சிதறாமல், கூடை அப்படியே கிடக்கவே, வேகமாக அதைக் கையில் எடுத்தவள் கார்க்காரனை முறைத்தாள்.
அவளது முறைப்பை சிறு ஏளனச் சிரிப்போடு தாங்கியபடி, கீழே இறங்கி வந்தான் ரூபன்.
அந்த நேரத்தில் அங்கே அவனைப் பார்த்ததும், தாமரைக்கு வெறுப்புத் தோன்றவே, அவனது முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள் அவள்.
“ஹேய் ஸ்வீட்டீ.. என்ன கண்டுக்காம போற மாதிரி இருக்கு.. உன்னோட கடைக்கண் பார்வைக்கு நான் ஒருத்தன் காத்திட்டு இருக்கிறது தெரியலியோ..”
“ஹலோ மிஸ்டர்.. உங்களுக்கு என்ன வேணும்.. ஏன் இப்புடி வந்து டிஸ்ரொப் பண்ணீட்டு இருக்கிறீங்கள்..”
“என்ன வேணும்னு கேட்டா கிடைக்குமா.. நீ தான் வேணும் ஸ்வீட்டீ..”
என்றவனது முகபாவனையில் தாமரைக்கு நிஜமாகவே வெறுப்பாகவும் கடுப்பாகவும் இருந்தது.
‘என்ன மனிதன் இவன்.. ஒரு திருமணமான பெண்ணிடம் பேசும் பேச்சா பேசுகிறான்.. பேச்சில் கொஞ்சம் கூட கண்ணியமோ மதிப்போ இல்லாமல் பேசுகிறானே.. போயும் போயும் இவனுடனா தமிழ் ஃபிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ள வேண்டும்.. இவனைப் பற்றித் தமிழிடம் அன்றைக்கு சொன்ன பின்னரும்.. இவன் இப்படி வந்து பேசுகிறான் என்றால்.. தமிழ் இவனைக் கண்டிக்கவில்லை என்று தானே அர்த்தம்.. அது சரி அந்த மனுஷன் எப்ப தான் எனக்கு பிடிச்ச மாதிரி நடந்து கொண்டு இருக்காரு.. இந்த விஷயத்தை மட்டும் உடனடியா கவனம் செலுத்துறதுக்கு.. இந்தக் கொடுமையளை எல்லாம் யாரிட்டைப் போய்ச் சொல்லுவன் ஈசனே..’
என நொடியில் மனதினுள் புலம்பியவள், ரூபனைத் தாண்டி வேகமாக அந்தப் பக்கம் போனாள்.
அவளது அசைவுகளையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கிராதகனோ, வேகமாக அவளது கையை எட்டிப் பிடிக்கப் போக, அவள் வேகமாக விலக, அவனது கரம் அவளது புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டது.
அவ்வளவு தான் தாமரைக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபமும் தைரியமும் வந்ததோ தெரியவில்லை, அவனது கையை உதறி விட்டு, அவன் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டாள்.
நிஜமாகவே அவளது அந்த புதிய பரிமாணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. பொறி கலங்கிக் கண்கள் கலங்க நின்றிருந்தவன் முன்னால் ஆட்காட்டி விரலைத் தூக்கிக் காட்டியவளோ
“என்ன உன்னோட சுத்துற பொண்ணுங்க மாதிரி.. நீ என்ன செய்தாலும் பல்லை ஈன்னு இளிச்சுட்டு நிப்பேன்னு நினைச்சியோ.. இந்த தொட்டுப் பேசுற வேலை எல்லாம் எங்கிட்டே வைச்சிக்காத.. ஏதோ தமிழோட ஃபிரெண்டுனு பார்த்தால்.. ரொம்ப தான் உனக்கு..”
என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசியவள், மீண்டும் அவனுக்கு அருகில் போய்
“இது தான் உனக்கு கடைசி.. இனிமேல் எனக்கு கிட்ட வந்து உந்த மாதிரி.. தேவையில்லாத கதை இனிக் கதைச்சால் அவ்வளவு தான் சொல்லீட்டன்..”
என்றவள் வேகமாகப் போய் விட்டாள்.
அவள் போன திக்கையே பார்த்துக் கொண்டு, தன் கன்னத்தில் கை வைத்தபடி அப்படியே நின்றிருந்தான் ரூபன்.
‘யப்பா.. என்னா அடி.. எப்படித் தான் தமிழ் இவளோடு குப்பை கொட்டுகிறானோ தெரியவில்லையே..’
என அவனால் நினையாமல் இருக்க முடியவில்லை.
வேகமாக வீட்டுக்கு வந்த தாமரையோ, கூடையை ஓரமாகப் போட்டு விட்டு, நேரே குளியலறையினுள் புகுந்து, முகத்துக்கு தண்ணீர் அடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
எவ்வளவு முயன்றும் அவளது உடல் பதறிக் கொண்டிருப்பதை அவளால் தடுக்கவே முடியவில்லை.
தமிழின் மேல் தான் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது, அதோடு ரூபனை நினைக்க நினைக்க அவளுக்கு மன உளைச்சலாகக் கூட இருந்தது.
சில நிமிடங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளோ, சட்டென்று தன் அலைபேசியை எடுத்து, தமிழுக்கு அழைத்து விட்டாள்.
“என்னடீ.. வீட்டுக்கு எப்போ வர்ரே.. பிக்கப் பண்ண வரவா..”
“ஒண்டும் வேண்டாம்.. நான் எங்கயுமே வரலை..”
“ஹேய் என்னாச்சு.. ஏதும் பிரச்சனையா..”
“ஆமா பிரச்சினை தான்..”
“என்னாச்சு..”
“சொன்னா மட்டும் அப்புடியே தீர்த்து வைச்சுடுவீங்களோ.. உங்களுக்கு மட்டும் எங்க இருந்து தான் இப்புடி டிசைன் டிசைனா ஃபிரண்ட்ஸ் கிடைக்குறாங்களோ தெரியலை..”
“குறிப்பா யாருனு சொன்னால் தானே தெரியும்..”
“தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க.. எம் பொண்டாட்டியோட புடவையைப் புடிச்சு இழுக்கிற அளவுக்கு ரொம்ப பெரிய உத்தமனா இருக்கியேனு அவார்ட் ஏதாவது வாங்கி குடுக்கப் போறீங்களா..”
என்று சொல்லும் போதே தாமரையின் குரல் உடைந்து போனது.
அதற்கு மேல் பேச முடியாமல் அவள் அலைபேசியை வைத்து விட, மனைவியின் குரலில் தெரிந்த மாற்றம் அவனை அங்கே ஒரு வழி செய்து விட, அந்த நபர் ரூபனாகத் தான் இருக்கும் எனத் தெரிந்து கொண்டவன், வேகமாகப் போய் ரூபனை ஒரு வழி செய்து விட்டான்.
நஸ்ரூல் தான் இடையிட்டு ரூபனைக் காப்பாற்ற வேண்டியதாகிப் போனது.
“டேய் என்னடா நீ.. ஆ ஊனா அவனைக் குத்திக் குதறிப் போடுறாய்..”
“கொலை செய்யாமல் விட்டேனு சந்தோஷப் படு..”
“இப்போ என்னடா ஆச்சு..”
“இவனை என்ன சொன்னேன்.. அவ மேல கை வைக்கக் கூடாதுனு சொன்னேனா இல்லையா.. இவன் வேண்டாம் இவனை இனி மேல் அவ திசைப் பக்கம் கூட போக கூடாதுனு சொல்லு..”
என தமிழ் முடிக்கவும்,
“என்னங்கடா.. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னைய அடிச்சே கொல்ற பிளானா.. இந்தா தமிழு நீயே சொன்னா கூட இனிமேல் உம் பொண்டாட்டி பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்.. நீ அடிச்ச அடி கூட வலிக்கலைடா.. ஆனா அவ அடிச்ச அடி இப்பவும் விண்ணுண்ணு இருக்கு..”
என்று புலம்பிக் கொண்டே ரூபன் கும்பிடு போட்டு விட்டு போயே விட்டான்.
“பார்ரா.. உன்னோட பொண்டாட்டி போட்ட அடியில அவன் புலம்பீட்டு போறதை..”
“அவளுக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் வந்திட்டா.. வராதா பின்னே என்னோட பொண்டாட்டி ஆச்சே..”
“அது சரி.. ஐயாவுக்கும் ஒரு வழியா பொண்டாட்டி மேல ஒரு இது வந்திச்சே..”
“ஒரு இழவும் வரலை.. நீ வாயை மூடு..”
“உடன வந்திருவியே..”
“போடா போய் ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு.. நான் அவகிட்டே போகணும்.. பாவம் அப்செட்டா இருப்பா..”
என்று கொண்டே விரைந்த தன் தோழனைப் பார்த்து,
“உம் பொண்டாட்டி மேல நீ காதலாகிக் கசிந்து உருகிற நாள் ரொம்ப தூரத்தில இல்லை மச்சி..”
எனத் தன்னுள் சொல்லிக் கொண்டான் நஸ்ரூல்.
இங்கே தன் வீட்டு சமையலறை சுவரோடு சாய்ந்து அமர்ந்து முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள் தாமரை.
எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை, அருகில் யாரோ அமர்வது போல இருக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த நேரத்தில் அங்கே தன் கணவனை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டதும் ஏதோ உள்ளூர இனம் புரியாத வகையில் மெல்லிய சந்தோஷம் இழையோடவே, ஒரு கணம் கணவன் முகம் பார்த்தவளோ, சட்டென்று தாவி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.