Mr and Mrs விஷ்ணு 3

4.4
(26)

பாகம் 3

ப்ரதாப் கல்யாணத்தை பேசி முடிங்க என்று சொன்னதாலும், பவித்ராவின் பிடிவாதத்தாலும் வேறு வழியில்லாமல் பாட்டி ரங்கநாயகியே இறங்கி வர வேண்டி இருந்தது..

“அவங்களை முறைப்படி வந்து பேச சொல்லு” என்று பவித்ராவிடம் கூறினார்.. பவித்ராவும் பார்த்திபனிடம் விஷயத்தை சொல்ல,

பார்த்திபன் தந்தை உதயகுமாரிடம் வந்து கூறினான்.. உதயகுமார்க்கு எதிர்த்த வீட்டுக்கு செல்வது நெருடலாகவும் சங்கடமாகவும் இருந்தது.. இருந்தாலும் மகனுக்காக மகனின் காதலுக்காக, காதல் ஒருவரை எவ்வளவு பலவீனமாக்கும் எங்கு கொண்டு நிறுத்தும் என்பது அவருக்கு தெரியும்.. அதனால் பழைய கசப்புகளை புறந்தள்ளி விட்டு எதிர்த்த வீட்டுக்கு சம்மந்தம் பேச சென்றார்..

ஒரு புறம் ப்ரதாப்பும் அவன் சித்தப்பா ஜெகதீஷையும் தவிர அவன் வீட்டினர் அனைவரும் இருக்க.. அவர்களுக்கு எதிர்புறம் இருந்த ஷோபாவில் விஷ்ணுப்ரியா தவிர அவளின் அம்மா அப்பா பார்த்திபன் அமர்ந்து இருந்தனர்..

குண்டூசி விழுந்தால் கூட அதிக சத்தம் கேட்குமளவு அந்த அறை அமைதியாக இருந்தது.. முதலில் யார் பேச்சை துவங்குவது என்று தெரியாமல் இரு குடும்பமும் அமைதியாக இருந்தது..

உதயகுமார்க்கு அங்கு இருப்பது நெருடலாக இருக்கிறது என்றால் வெங்கடேஷ்க்கு உதயகுமார் முகத்தை கூட பார்க்க முடியாது அளவு குற்ற உணர்வாக இருந்தது.. தங்கள் குடும்பத்தின் துரோகத்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்று நடந்து முடிந்ததை நினைத்து பார்த்தார்..

இரு குடும்பத்திற்கும் இப்போது பேச்சு வார்த்தை இல்லை தான்.. ஆனால் ஒரு காலத்தில் இரு குடும்பமும் நல்ல நட்புடனும் பாசத்துடனும் ஒற்றுமையாக தானே இருந்தது.. இப்போது ரங்கநாயகி வார்த்தைக்கு வார்த்தை கூறும் வசதி வாய்ப்புக்கு எல்லாம் அடித்தளமிட்டதே விஷ்ணுப்ரியா தாத்தா சுந்தரம் தான்..

வெங்கடேஷ் தந்தை விஷ்ணுவரதன் ஆந்திராவிலே பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான்.. ஆனால் தொழில் சறுக்கியதிலும் சொந்தங்களின் சதியாலும் அனைத்து சொத்தையும் இழந்தார்.. வைராக்கியம் மிகுந்த வரதன் மீண்டு இந்த சொந்தங்கள் முன்பு மேல்வந்து  நல்ல நிலையில் நிற்பேன் என்ற வைராக்கியத்துடன் மனைவி ரங்கநாயகி இரண்டு மகன்களை அழைத்து கொண்டு சென்னை வந்தார்..

அவருக்கு சென்னையில் தெரிந்த ஒரே நபர் சுந்தர் தான். வரதனும் சுந்தரமும் இருவரும் ஒரே கல்லூரியில் சென்னையில் படித்தவர்கள்.. அடுத்து என்ன செய்வது என்று விஷ்ணு வரதன் யோசித்து கொண்டு இருக்க, சுந்தரம் தான் அவரிடம் இருந்த பணத்தையும் மனைவியின் நகையையும் வரதன் கையில் கொடுத்து புது தொழிலை ஆரம்பித்து மேல்ல வாடா என்று நம்பிக்கை அளித்தார்..  இதற்கும் சுந்தரத்திற்கு எந்த பின்புலமும் கிடையாது கஷ்டப்பட்டு படித்து அரசு வேலையில் சேர்ந்தவர்..

அவரின் சம்பளத்தில் குடும்பத்திற்கு செலவு செய்தது போக சேமித்து வைத்த சொப்ப பணத்தை தான் நண்பனுக்கு அளித்தார்.. வரதனக்கு நண்பனை நினைத்து பெருமையாக இருந்தது..

அந்த பணத்தை கொண்டு சின்னதாக வீட்டில் வைத்து தொடங்கியது தான் திருப்பதி ஊறுகாய், மற்றும் மசாலா பொடி வியாபாரம்.. ஆரம்பித்தில் சின்னதாக தொடங்கிய தொழில் வரதனின் கடின உழைப்பில் நன்கு வளர்ந்து நிறைய இலாபம் வர ஆரம்பித்து தமிழ்நாடு ஆந்திரா முழுவதும் திருப்பதி மசாலா பேமஸாகியது…

இலாபத்தில் பாதி பங்கை வரதன் சுந்தரத்திடம் கொடுக்க, அதை வாங்க சுந்தரம் மறுத்து விட்டார்.. இது உன்னோட கடின உழைப்புக்கு கிடைச்சது.. எனக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார்.. இந்த தொழில் தொடங்க முதலீடே நீ கொடுத்தது தான் நீயும் இந்த தொழில்ல ஒரு பார்ட்னர் என்று வரதன் எவ்வளவு சொல்லியும் சுந்தரம் அதை மறுத்து விட்டார்..

அதன் பின்பு ஒரே காலனியில் ஒன்றாக இடம் வாங்கி வீடு கட்டினர்.. வரதன் பெரிய வீடும் சுந்தரம் தன் வருமானத்திற்கு தகுந்தபடி நடுத்தரமாகவும் கட்டி குடி பெயர்ந்தனர்.. அதுவரை சரியாக இருந்த ரங்கநாயகிக்கு பணம் சேர சேர சுந்தரம் குடும்பத்தினருடன் கணவர் பழகுவது பிடிக்கவில்லை.. அவர்கள் தங்களை விட பணம் வசதி குறைவு.. அவர்களோடு பழகுவது தங்களுக்கு மதிப்பு குறைவு என்ற கர்வம் தலை தலை தூக்கியது..

அதை அறிந்த வரதன் சுந்தரம் மட்டும் சரியான சமயத்தில் பணம் கொடுக்கலைன்னா இந்த நிலைமைக்கு நாம் வந்தது இருக்க முடியாது என்று மனைவிக்கு புரிய வைக்க முயற்சி செய்தார்..

ஆனால் அதற்கு ரங்கநாயகியோ அவர் கொடுக்கலைன்னா கூட பேங்க் லோன் கூட எடுத்து இருக்கலாம்.. அவர் கொடுத்த பணத்தால் இல்ல நீங்க உழைச்சதால்ல தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம்.. அந்த பணத்தை வேணா இப்பவே வட்டியோட திருப்பி அவங்க கிட்ட கொடுத்துருங்க.. இல்லைன்னா பின்னாடி நம்ம தொழில்ல பாதி பங்கு கேட்டுற போறாங்க என்று நன்றி கெட்டு பேசும் மனைவியிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்பது தெரியாமல் வரதன் அமைதி ஆனார்..

தொழில் வளர்ந்தது போல அவர்களின் பிள்ளைகளும் வளர்ந்து வாலிபம் அடைந்தனர்..
வரதன் ரங்கநாயகிக்கு இரண்டு மகன்கள் வெங்கடேஷ் ஜெகதீஷ்.. சுந்தரம் வள்ளி தம்பதிக்கு உதயகுமாரும், மகாலட்சுமி என்று ஒரு மகளும் இருந்தனர்.. வெங்கடேஷ் உதயகுமார் இருவரும் தந்தைகளை போல் நல்ல நண்பர்களாக இருந்தனர்..

ரங்கநாயகி சொந்தங்களுடன் பழக ஆரம்பிக்க வரதன் எவ்வளவு தடுத்தும் அவர் கேட்கவில்லை.. வெங்கடேஷ்க்கு சொந்ததில் நல்லா வசதியான பெண்ணான தேவகியை மணமுடித்தார்‌. அடுத்து மகன் ஜெகதீஷ்க்கு என் விருப்பப்படி தான் கல்யாணம் நடக்கும் என்ற வரதன் ஜெகதீஷ்க்கு மகாலட்சுமியை சுந்தரமிடம் பெண் கேட்டார்.. ரங்கநாயகியின் மனமாற்றம் சுந்தரத்திற்கும் தெரியும் என்பதால் சற்று தயங்க வரதன் ஏதேதோ சொல்லி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார்.. முதலில் மனதில் எதுவும் இல்லாமல் நட்பாக இருந்த மகாவும் ஜெகதீஷும் இந்த திருமண பேச்சு காதலாக மாறியது..

ரங்கநாயகிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை.. மூத்த மகனை விட இளைய மகனுக்கும் நல்ல வசதியான பொண்ணை திருமணம் செய்து வைத்து சொந்தபந்தங்களிடம் பெருமை அடிக்க நினைத்திருக்க, கணவர் இப்புடி நன்றிக்கடன் அது இதுன்னு இப்படி பண்றாரே என்று எரிச்சல் வந்தது..

ரங்கநாயகி வரதனிடம் என்னனென்னமோ பேசி மனதை மாற்ற முயற்சிக்க அது முடியவில்லை.. அதனால் மகன் ஜெகதீஷை கரைக்கும் வேளையில் இறங்கினார்.. முதலில் மகன் அவர் வலையில் விழவில்லை மகாவின் காதல் தான் முக்கியம் என்று சொன்னாலும், ரங்கநாயகி நான் சொல்ற பொண்ணை கட்டிக்கிட்டா அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அவங்க ஆந்திராவில் இருக்க அவங்க சொத்து முழுக்க உனக்கு தான்.. அரசியல் செல்வாக்கு இருக்க வீடு.. உன் அண்ணியை விட பெரிய இடம்.. சொந்த தொழில் தொடங்க அப்பா உனக்கு பணம் தர மாட்டேங்கிறாங்க தானே.. அதே அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா அவங்க பிசினஸ் முழுக்க நீ தான் பார்த்துக்கனும்.. அதே அப்பா சொல்ற மகாவை கட்டிக்கிட்டா உனக்கு என்ன கிடைக்கும்..யோசிச்சு பார் என்று பேச பேச ஜெகதீஷ் மனதில் மகா பின்னோக்கி சென்று ஆடம்பரம் முதலில் வந்து நின்றது.. ஆனால் திருமணம் பத்திரிகை அடித்து ஊர் முழுக்க கொடுக்கப்பட்டது இருந்தது..

அந்நிலையில் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு வரதனுக்கு போன் செய்த ஜெகதீஷ் அப்பா நான் ஆந்திரா வந்த இடத்தில் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டேன்..சீக்கிரம் அம்மாவையும் அண்ணாவையும் கூட்டிட்டு நீங்களும் வாங்கப்பா என்று பதட்டதுடன் கூற, பயந்து போன வரதன் சுந்தரத்திடம் கூட எதுவும் கூறாமல் குடும்பத்தை அழைத்து கொண்டு ஜெகதீஷ் சொன்ன இடத்துக்கு செல்ல, அங்கு ஜெகதீஷ் மணக்கோலத்தில் இருந்தவர் எனக்கு மகாவ கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்லைப்பா, இவ பேர் விசாலாட்சி இவளை தான் விரும்புறேன்.. உங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கனும் தான் உங்களை வர சொன்னேன் என்று ரங்கநாயகி சொல்லி கொடுத்ததை அப்புடியே ஜெகதீஷ் கூற, அதிர்ச்சியாக நின்ற வரதன் முன்னே விசாலாட்சியை திருமணம் செய்து கொண்டார்..

விஷயம் அறிந்த சுந்தரமும் குடும்பத்தினரும் இடிந்து போய் அமர்ந்து இருக்க.. காதலன் செய்த துரோகத்தில் ஏற்பட்ட வலியை பொறுத்து கொள்ள முடியாத மகா அந்த வலியிருந்நு தப்பிக்க உயிரை மாய்த்துக் கொண்டாள்.. அதன் பிறகு தான் இரு குடும்பமும் பேசி கொள்வதில்லை..

இதை எல்லாம் நினைத்து பார்த்த வெங்கடேஷ்க்கு குற்ற உணர்வாகவும் இருந்தது.. அதே நேரம் இந்த கல்யாணம் நல்ல படியாக நடந்தா தன் நண்பனுடன் பழையபடி இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ச்சியும் இருந்தது.. ரங்கநாயகிக்கும் குற்ற உணர்வு மனதில் இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் அமர்ந்து இருந்தார்.. இதனால் தான் ஜெகதீஷ் கூட இங்கு இல்லாமல் வெளியே சென்று விட்டார்..

உதயகுமார்க்கு ரங்கநாயகி ஜெகதீஷ் மேல் எழுந்த கோவத்தை விட, இவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டாமல் கோழையாக தற்கொலை செய்து கொண்டாளே என்று தங்கை மேல் தான் அதிக ஆதங்கம்.. அதோட நடந்து முடிஞ்ச விஷயத்தை பத்தி நினைச்சுக்கிட்டே பார்த்திபனையும் பவித்ராவையும் கஷ்டப்படுத்த அவர் விரும்பவில்லை.. அதற்காக தான் மகன் காதலை ஏற்று இங்கு வந்தார்..

நீண்ட நெடிய மௌனத்திற்கு பின் ரங்கநாயகியே பேச்சை ஆரம்பித்தார்.. “உதயா எப்புடி இருக்கப்பா வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா” என்று கேட்க,

நல்லா இருக்கோம் எனும் விதமாக தலை அசைத்தார் உதயகுமார்..

“இங்க பாருப்பா நடந்த முடிஞ்ச பழைய விஷயங்களையே நினைச்சிட்டு சின்ன பிள்ளைங்க வாழ்க்கையை அழிக்க வேணாம்” நான் நினைக்கிறேன்..

“நானும் அவங்க வாழ்க்கையை பத்தி யோசிச்சு தான் பழைசை எல்லாம் மறந்திட்டு இந்த வீட்டுக்கு வந்து இருக்கேன்” என்றார் உதயகுமார்..

“என் பேத்தி இந்த காதல் விஷயத்தை வீட்டில் சொன்ன போது, பழையபடி நம்ம இரண்டு குடும்பமும் ஒன்னா இருக்க போகுதுன்னு நினைச்சு நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா”, என்ற ரங்கநாயகியை வெங்கடேஷிடம் பவித்ராவும் முறைக்க,

தேவகி விசாலாட்சி இருவரும் அடப்பாவி எனும் ரீதியில் பார்த்தனர்..

மேலும் தொடர்ந்த ரங்கநாயகி “எனக்கு பார்த்திபன் பவித்ரா கல்யாணத்தில் முழு சம்மதம் கூடவே எனக்கு இன்னோரு ஆசையும் இருக்கு, என்னை விட என் வீட்டுக்காரோட ஆசைன்னு தான் சொல்லனும், ஆனா நீ ஏற்றுக் கொள்வியான்னு தயக்கமா இருக்கு என்ற ரங்கநாயகி நிறுத்த,

உதயகுமார் கல்யாணி இருவரும் குழப்பமாக அவரை பார்த்தனர்..

மேலும் தொடர்ந்து ரங்கநாயகி “எங்களுக்கு ரொம்ப உதவி செஞ்ச சுந்தரம் அண்ணா பொண்ணை இந்த வீட்டு மருமகளாக்கினும் ரொம்ப ஆசைப்பட்டாங்க.. அது நடக்காமல் இடையில் என்னனென்னமோ நடந்திருச்சு, அதில் அவர் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிட்டார்.. அதுவும் சுந்தரம் அண்ணா பேசாம இருந்தது அவரை ரொம்ப கஷ்டப்படுத்துச்சு” என்று ரங்கநாயகி வருத்தப்பட,

“பழசு எதுக்கு இப்ப பேசுறீங்க அதை விடுங்க இந்த கல்யாண விஷயத்தை பத்தி மட்டும் பேசுவோம்” என்றார் உதயகுமார்..

“இல்ல உதயா அவர் இல்ல உன் மாமா இப்ப உயிரோட இருந்திருந்தா என்ன கேட்டு இருப்பாரோ அதை நானும் கேட்க போறேன்.. நீ மறுக்க கூடாது” என்று பீடிகை போட்டவர்,

“உன் பொண்ண என் பேரன் விஷ்ணுக்கு கொடுப்பா”, பார்த்திபன் பவித்ரா கல்யாணத்தோட அவங்க கல்யாணத்தையும் பண்ணிடலாம் என்ன சொல்ற என்றதுமே,

உதயகுமார் இருக்கையில் இருந்து எழுந்து விட்டார்.. கல்யாணிக்கோ பயங்கர அதிர்ச்சி,

வெங்கடேஷ் தேவகி பவித்ராவுக்கு கூட இது அதிர்ச்சி தான்.. அதுவும் தேவகிக்கு என் பையனுக்கு  அந்த பொண்ணா ஏற்க முடியவில்லை.. ஆனால் பேச முடியாத சுழலில் அமைதியாக இருந்தார்..

“என்னப்பா ஏன் எழுந்துட்ட” ரங்கநாயகி கேட்க,

“இல்ல இது சரிபட்டு வராது
பார்த்திபன் பவித்ரா கல்யாண விஷயத்தை பத்தி மட்டும் பேசுறது இருந்தா பேசலாம் இல்லானா”,

“இல்லைன்னா எதுவுமே வேண்டாம்ன்னு சொல்றீயா உதயா”,

“இப்ப தானே நீ சொன்ன பழைசை மறந்துட்டேன்னு, அப்ப அது பொய்யா,  நீ இன்னும் அதை மனசில் வச்சுக்கிட்டு தான் இருக்கியா, பழைசை எல்லாம் மறந்திடு உன் மாமாவோட ஆசைக்காக தான் இப்ப நான் உன்கிட்ட இதை கேட்கிறேன்”,

“எனக்கு இந்த எண்ணம் பவித்ரா காதல் தெரிஞ்ச அப்புறம் வந்தது இல்ல.. ரொம்ப நாளா என் மனசுக்குள்ளே இருந்துச்சு.. ஆனா நேரா உன்கிட்ட பேச  தயக்கம்..  அதான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன் இப்ப சமயம் கிடைச்சதும் கேட்கிறேன்.. இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா முடிக்கலாம் என்ன சொல்ற, உன் மாமாவே நேர்ல வந்து கேட்கிறதா நினைச்சுக்கோ” காரியத்தை சாதிக்க ரங்கநாயகி நயமாக பேசினார்..

உதயகுமாருக்கு வரதன் மேல் தனி மதிப்பு இருந்தது.. தங்கை விஷயத்தில் அவர் மீதும் வெங்கடேஷ் மீதும் தவறு இல்லை என்பது தெரியும்.. அதனால் அவர் பெயரை ரங்கநாயகி சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்‌.

ரங்கநாயகிக்கு யாரை எப்புடி பேசி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரியும்.. அதான் வரதன் பெயரை இழுத்து உதயகுமாரை குழப்பி விட்டு இருக்கிறார்..

வெங்கடேஷ்க்கு தன் அம்மாவை பற்றி தெரியும், அவர் பக்கா சுயநலவாதி என்றும், அவர் திட்டம் என்ன என்பதும்,  அவர் என்ன நினைத்து இதை சொன்னாரோ, ஆனால் இது நடந்தால் நன்றாக இருக்கும்.. அப்பா ஆசைப்பட்டது போல் அவர் நண்பரோடு மகள் மகா இந்த வீட்டுக்கு வரலை..  பேத்தி  விஷ்ணு வந்தா அவர் சந்தோஷப்படுவார்.. அது நடக்கனும் என்று நினைத்தவருக்கு மகன் நினைவு வரவும் அமைதியானார்..
 

விஷ்ணு சின்ன பெண் அவளால் தன் மகனின் கோவத்தையும் பிடிவாதத்தையும் தாங்க இயலாது என்று எண்ணி,

உதயகுமார் அமைதியாக நிற்கவும்,”என்ன உதயா நான் இவ்வளவு சொல்லியும் நீ அமைதியா இருக்க உன் பொண்ணை இங்க கல்யாணம் பண்ணி கொடுத்தா நாங்க அவளை கஷ்டப்படுத்துவோம்னு எங்களை சந்தேகப்படுறீயா, அதான் வேண்டாம் சொல்றீயா”,

“இல்ல அது எல்லாம் இல்ல என்று அவர் தடுமாறவும், கணவன் ஒத்துக்கொள்வாரோ என்ற பயம் கல்யாணிக்கு வந்தது.. ஏற்கெனவே திருமண பேச்சு எடுத்து கல்யாணம் வரை கொண்டு வந்து அதை நிறுத்தி மகாவை இல்லாமல் செய்தவர்கள், இப்போதூ அதே போல் தன் பொண்ணை கேட்கிறார்களே மகளை நினைத்து கல்யாணிக்கு பயம் வந்தது..  எதுவும் வேண்டாம் வாங்க போகலாம்” என்ற கல்யாணி உதயகுமாரை அங்கிருந்து நகர்த்த பார்க்க,

ரங்கநாயகி விடவில்லை..  “அப்புறம் என்ன உதயா”? ,”உன் குடும்பத்து மேல் இருக்க நம்பிக்கையில் பவித்ராவை நாங்க தர சம்மத்திக்கும் போது, உன் பொண்ணை இங்க அனுப்ப ஏன் தயங்குற”,

“இல்ல ப்ரியா சின்ன பொண்ணு,  ஆனா உங்க பேரன் வயசு”,

“என்ன பத்து வயசு தானே வித்தியாசம் அது எல்லாம் பெரிய விஷயமா”, உங்க அம்மா அப்பாவுக்கு 13 வயசு வித்தியாசம், எனக்கும் உங்க மாமாவுக்கும் கூட 11 வயசு வித்தியாசம்.. சந்தோஷமா தானே வாழ்ந்தோம் என்றார்..

“ப்ரியா இன்னும் படிச்சு முடிக்கலை”,

“இங்க வந்து படிக்கட்டும்.. நாங்க அவளை நல்லா பார்த்துப்போம்” என்றார்..

“ப்ரியாக்கு இதுல விருப்பமான்னு கேட்கனும்” என்று உதயகுமார் நாசுக்காக மறுக்க பார்க்க,

“ஏன் உன் பொண்ணு உன் பேச்சை கேட்க மாட்டாலா”? என்று நக்கல் தொனியில் ரங்கநாயகி கேட்க,

கல்யாணிக்கு கோவம் வந்து விட்டது.. “எங்க பொண்ணு எங்க பேச்சை மீற மாட்டா,நாங்க அப்புடி வளர்க்கலை, ஆனா உங்க வீட்டுல தான் கடைசி நிமிஷத்தில் அப்பா பேச்சை கேட்காம அவங்களை அசிங்கப்படுத்தறவங்க இருக்காங்க, என்று குத்திய கல்யாணி,

“உங்க பேரனுக்கு முழு சம்மதமானு பர்ஸ்ட் நல்லா கேட்டுக்கோங்க.. ஏன்னா இந்த தடவையும் நீங்க அவமானம் பட கூடாது அதுக்கு தான் சொல்றேன்.. அப்புறம் வந்து எங்க கிட்ட பேசுங்க.. இரண்டு கல்யாணமும் ஒன்னா நடக்கிறதா இருந்தா எங்களுக்கு சம்மதம் என்று கல்யாணி கணவனை அவர் சீண்டியதால் கோவத்தில் சம்மதம் கூறி விட்டார்.. மனைவி சொன்ன பின் உதயகுமார் என்ன சொல்ல அவரும் அதையே சொல்லி விட்டு அங்கிருந்து விடை பெற்றனர்..

அவர்கள் சென்றபின் “அத்தை ஏமி இதி என் ப்ரதாப்க்கு அந்த சின்ன பிள்ளவாடு ஜோடியா.. எனக்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்று தேவகி ஆதங்கபட்டார்..

“நேனு ஏமி செய்யாலு என் பேரன் அழகுக்கும் கம்பீரத்திற்கும் ஜமின் வம்சத்து பொண்ணா பார்க்கனும் நினைச்சேன்.. ஆனா உன் பொண்ணு அந்த பார்த்திபன் தான் வேணும்னு விடாபிடியா இருக்கா, அவளுக்கு அங்க எந்த பிரச்சினையும் வரக்கூடாது அதுக்காக தான்.. இப்புடி கேட்டேன் என்று ரங்கநாயகி கூறினார்…

அவருக்கு பயம் தான் செய்தற்கு பழிவாங்க தான் இந்த காதலோ, கல்யாணம் கிட்ட வந்து பின்பு நிறுத்தி விடுவார்களோ, அன்று மகா செய்தது போல் பவித்ரா ஏதும் செய்து விட்டால், இல்லை திருமணம் முடிந்த பின் அவளை ஏதும் கஷ்டப்படுத்தூ விடுவார்களோ என, அதனால் தான் விஷ்ணுவை பெண் கேட்டது.. அவர்கள் வீட்டு பெண் இங்கு இருந்தால், அவளுக்காக பவித்ராவை கஷ்டப்படுத்தூ மாட்டார்கள் என,

 என்ன இருந்தாலும் எனக்கு பிடிக்கலை என்ற தேவகி..  “இதுக்கு ப்ரதாப் ஒதுக்கவே மாட்டான்,” எப்படி அவனை சம்மதிக்க வைக்க போறீங்க” என்றதும் ரங்கநாயகிக்கு அதை எண்ணி இப்பவே பயமாக இருந்தது..

அவரின் வாய் ஜாலம் எல்லாம் அவனிடம் பலிக்காதே.. அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் தானே செய்வான்.. அவனை சம்மதிக்க வைப்பது குதிரை கொம்பு, அவனிடம் இதை பற்றி பேசவே அவருக்கு பயமாக இருந்தது..

  • பவித்ராவுக்கும் அதை நினைத்து பயமாக இருந்தது..‌

அவர்கள் பயந்தது போலவே அடுத்த நாள்…

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

1 thought on “Mr and Mrs விஷ்ணு 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!