ப்ரதாப் வரவில்லை.. ஏன் வரவில்லை.. நேற்று இரவு அவளிடம் பேசும் போது வந்து விடுவேன் என்று தானே கூறி இருந்தான்.. காமாலைக்காரனுக்கு கண்டது எல்லாம் மஞ்சள் என்பது போல் தான் விஷ்ணுவின் நிலை இப்போது.. அவள் மனம் கண்டதையும் கற்பனை செய்ய ஆரம்பித்தது.. உடனே ப்ரதாப்புக்கு அழைத்து விட்டாள்..
“முக்கியமான வேலை அதான் இன்னைக்கு வரமுடியவில்லை.. அடுத்த ப்ளைட்ல இல்லைன்னா அடுத்த நாள் வரேன்” என்றான்..
“என்ன வேலை, நேத்து நைட்டு எல்லாம் முடிஞ்சுது சொன்னீங்க.. ராம் அண்ணாவும் வந்துட்டாங்களே, அப்புறம் என்ன வொர்க்” என கேட்டாள் விஷ்ணு..
இரண்டு விநாடி அமைதியாக இருந்தவன் “இந்த வொர்க்கு அவன் தேவை இல்லை அதான் அனுப்பிட்டேன்” என்றான்.. அந்த இரண்டு நொடி அமைதி விஷ்ணுவை கலவரப்படுத்தியது..
அப்புடி என்ன முக்கியமான வேலையோ விஷ்ணுவுக்கு கோவம் வந்தது..
லில்லி சிங்கப்பூரிலிருந்து திரும்பி விட்டாளா இல்லையா அந்த தகவலும் தெரியவில்லை.. அவள் ஆன்லைனில் ஆக்டிவ் வாக இல்லை.. நேற்று இரவு ராம் பார்டி என்று எந்த பப்பு பெயரை சொல்லி இருந்தானோ, லில்லியும் அங்கு போவதாக இன்ஸ்டா ஸ்டோரி இருந்தது.. அதோடு சரி அதன் பின்பு அவள் ஆன்லைனிலே இல்லை..
வேலை விஷயமா தானே நீங்க கூட போனீங்க அண்ணா, உங்களை அனுப்பிட்டு அவருக்கு மட்டும் அப்புடி என்ன வேலை ராமிடம் பொறிந்தாள்.. அவனோ பதில் சொல்லவில்லை.. என்னவோ போல் இருந்தான்..
அந்த லில்லி வந்துட்டாளா என கேட்கவும்..
ஏன் என்கிட்டயே கேட்கிற, இதே போல் பேசறதா இருந்தா இனிமேல் என்கிட்ட பேசாதா ப்ரியா என்று பயங்கரமாக கோவப்பட்டான் ராம்.. இந்த கோவம் ராமிடம் அவள் எதிர்பார்க்கவில்லை..
சொன்னது போல் அடுத்த நாள் ப்ரதாப் வந்து சேர்ந்தான்.. “ஏன்? என்னாச்சு? நேத்து ஏன் வரலை” விஷ்ணு கேட்கவும்,
“எத்தனை தடவை சொல்றது விஷ்ணு வேலைன்னு, அப்புறம் என்ன ஏன் ஏன்னு கேட்டுட்டே இருக்க” ப்ரதாப் எரிந்து விழுந்து விட்டு பாத்ரூம் சென்று விட்டான்..
கலங்கிய கண்ணை கட்டுப்படுத்திக் கொண்டு விஷ்ணு அப்புடியே மெத்தையில் அமர்ந்தவள், அவசரமாக தன் போனை எடுத்து பேஸ்புக் இன்ஸ்டா பக்கம் சென்றாள்..
இப்போதும் லில்லி ஆன்லைன் வரவில்லை.. “ச்சே” என்று போனை தூக்கி போட்டாள்..
இப்போது அவளுக்கே தான் செய்வது கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றியது.. இருந்தாலும் அவளால் அமைதி பெற முடியவில்லை.. அவன் தன்னவன் தனக்கு மட்டும் தான் சொந்தம்.. எங்கு கை மீறி போய் விடுவானோ என்கிற பயம்.. அது தான் அப்புடி எல்லாம் கிறுக்கு தனம் செய்து கொண்டு இருக்கின்றாள்..
பாத்ரூமிலிரூந்து வெளி வந்த ப்ரதாப் விஷ்ணு அமர்ந்து இருப்பதை பார்த்தான்.. அவளிடம் எரிந்து விழுந்த தன்னை கடிந்து கொண்டு விஷ்ணு அருகே சென்று அமர்ந்தான்..
தோளில் இடது கையை போட்டு தன்னருகே அவளை இழுத்தான்
தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் விஷ்ணு .. மற்றோரு கையால் நாடியை பிடித்து நிமிர்த்தி தன் முகம் பார்க்க செய்தவன் நெற்றியில் முத்தமிட்டு “என்னாச்சு”? என்று கேட்டான் மென்மையாக,
கண்மூடி அவன் இதழ் தந்த இதத்தை அனுபவித்தாள்.. இந்த முத்தமும் மென்மையும் இந்த ஒரு வார காலம் சரியாக தூங்கமால் கொள்ளாமல் அதிகமான யோசனையில் இருந்தவளுக்கு ஆறுதலாக இருந்தது..
“விஷ்ணு கண்ணை திறடி என்னாச்சுன்னு கேட்டேன்.. வரும் போதே பார்த்தேன் உன் முகமே சரியில்லை என்னாச்சு”? திரும்பவும் ப்ரதாப் கேட்டான்..
என்ன சொல்வது அவளுக்கு இருப்பது எல்லாம் யூகம், கற்பனை அதை எப்புடி கேட்பது, கேட்டு ப்ரதாப் கோவம் கொள்வானோ சண்டை போடுவானோ என்கிற பயத்தில் ஒன்னுமில்லை என்றாள்..
ப்ரதாப் சந்தேகமாக பார்க்க “ஒன்னுமில்லை இந்த ஒரு வாரமும் சரியா தூங்கலை அதான் இப்புடி இருக்கு” என்றாள்..
“ஏன்? என்னாச்சு? உடம்பு சரியில்லையா? நெற்றியில் கை வைத்து பார்த்தான் அக்கறையாக,
இந்த அக்கறையில் அவளுக்கு தான் குற்ற உணர்வாகி போனது.. நீ தான்டி விஷ்ணு தப்பு அவர் சரியா தான் இருக்கார் என்றது மனது..
“என்னம்மா” ப்ரதாப் கேட்கவும், “அது எல்லாம் எதுவும் இல்லை.. ஆனா தூக்கம் வரலை” என்றாள்..
ப்ரதாப் உதட்டுக்குள் சிரித்து கொண்டான்.. அவனும் இந்த ஒரு வாரமும் மனைவியின் அருகாமை இல்லாமல் சரியாக தூங்கவில்லையே, அதே போல் தான் அவளுக்கும் தன்னை தேடி இருக்குமோ என்ற எண்ணம் வந்தது..
“ஏன் தூங்கலை, வாசுகி மேடம்க்கு நான் பக்கத்தில் இல்லாம தூக்கம் வரலையோ” சீண்டினான்..
இந்த சீண்டலும் கேலியும் விஷ்ணு மனநிலையை மாற்றியது.. இவ்வளவு நேரம் சந்தேகம் பயம், இப்புடி சந்தேகப்படுகின்றனே என்ற குற்ற உணர்வு என அலைகழிந்த மனது அமைதி கொண்டது..
கணவன் சொன்னது பாதி உண்மை தானே, அவன் இல்லாது அவன் அருகாமை அவன் வாசம் இல்லாதது தானே அவளால் தூங்க முடியவில்லை.. ஒப்புக்கொள்வாளா? இவர்கள் இருவரின் பிரச்சினையுமே இது தானே, நெஞ்சை முட்டும் அளவு துணை மீது இருக்கும் நேசத்தை காதலை வாய் வார்த்தையாக வெளிப்படுத்தாமல் இருப்பது, தேவையற்ற பேச்சுகள் நிறைய இருந்தாலும், தேவையான சமயம் வாயையும் மனதையும் மூடி கொள்வது,
“அது எல்லாம் இல்லை” என்றாள் உதட்டை சுழித்து,
“அப்புறம் ஏன் தூங்கலை?”,
“தூக்கம் வரலை தூங்கலை அவ்ளோ தான்” என்றவள், “ஏன் இப்புடி கேட்கிறீங்க.. ஒரு வேளை உங்களுக்கு தான் நான் இல்லாம தூக்கம் வரலையோ அதான் அதே போல நானும் தூங்காமல் இருந்திருப்பேன் நினைச்சு கேட்கிறீங்களா” என கேட்டாள்..
அவன் ஆமாடி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுனேன் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசையும் வேண்டுதலும் அவளிடம், இவளே மறைக்கும் போது
அவனா சொல்லுவான் சரியான விடாகண்டனாச்சே,
நீ ஒத்துக்க மாட்ட, நான் மட்டும் ஆமா சொல்லனுமா போடி மனதிற்குள் நினைத்தவன்,
“ஆசை தான் வாசுகி மேடம்க்கு” என்று மூக்கை பிடித்து ஆட்டியவன், “என்னை பார்த்தா தூங்காது போலவா இருக்கு, நான் நல்லாவே தூங்குனேன்.. இங்க விட அங்க தான் நல்லா நிம்மதியான தூக்கம் வந்துச்சு” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தபடி,
“அப்புடியா ரொம்ப சந்தோஷம்” என்றவளுக்கு கோவம் வந்தது.. தன் தோள் மீது இருந்த ப்ரதாப் கையை தட்டி விட்டு எனக்கு தூக்கம் வருது என்று முறைத்தபடி சொல்லி படுத்து விட்டாள்..
“ஓகே” என்ற ப்ரதாப்க்கு சிரிப்பு தான் வந்தது.. நிச்சயம் அவள் தூங்க போவது இல்லை.. இந்த ஒரு வார கால பிரிவு ஏக்கம் தீர்க்க அவனுக்கு அவள் வேண்டும்.. அவளுக்கு அவன் வேண்டும்..
விளக்கை அணைத்து விட்டு அவள் அருகே வந்து படுத்தான் ப்ரதாப்.. அவனாக தன்னை நெருங்குவான் என்று அவள் நினைத்து இருக்க, இப்புடி படுத்து தூங்குகிறானே, இப்ப எப்புடி தானாக அவனை நெருங்குவது, தனக்கு அவன் தேவை இருப்பது போல் கணவனுக்கு தன் தேவை இல்லையோ, ஏன் ஒரு வேளை தப்பாக மனம் யோசிக்க ஆரம்பிக்க அதை தலையில் தட்டி தப்பாக யோசிக்காத என்று அடக்கினாள்..
“எனக்கு தூக்கம் வரலை சும்மா சொன்னேன்” என்றாள்..
“ஓ.. அப்புடியா ஆனா எனக்கு உண்மையாவே பயங்கரமா தூக்கம் வருது” என்றவன் கண்மூடிக் கொண்டான்.. முறைத்தாள்.. தலையணையை தூக்கி அடிக்க பார்த்தவள் ச்சே என்று வைத்தும் விட்டாள்..
அவளை பார்க்கவில்லை என்றாலும் அவள் முறைப்பை செயலை அவனால் உணர முடிந்தது.. சிரித்து கொண்டான். மற்றவர்களிடம் அளவாக பேசுபவனுக்கு மனைவியிடம் மட்டும் அளவில்லாத பேச்சு வருகிறது.. அது என்ன மாயம் அவனுக்கே விளங்கவில்லை.. அவளை பார்த்தாலே சீண்ட தான் தோன்றுகிறது.. அவன் சீண்டும் போது அவளுக்கு எழும் கோவம் அவளின் முறைப்பு அவனை ரசிக்க வைக்கிறது.. அதனால் சீண்டி விளையாடுகிறான்..
அழுகையே வரும் போல் இருந்தது அவளுக்கு, ச்சே என கட்டிலில் இருந்து இறங்கி பார்க்க, கைபிடித்து இழுத்து அவளை கட்டிலில் சரித்து அவன் மேல் படர்ந்தான் ப்ரதாப்.. இதழையும் ஆக்கிரமித்து கொண்டான்..
இவ்வளவு நாளும் மென்மையாக மட்டுமே முத்தமிட்டவன் இன்று வன்மைக்கு தாவி இருந்தான்..
வார்த்தையாக சொல்லாத தவிப்பை செயலில் காட்ட எண்ணி, விஷ்ணுவும் இறுக்கி அவனை அணைத்து தன் தவிப்பை காட்டி கொண்டு இருந்தவள், தீடிரென எதுவோ தோன்ற அவன் தலையை பற்றி இதழிலிருந்து கஷ்டப்பட்டு விலக்கினாள்..
“என்னடி” முத்தம் பாதியில் தடை பட்ட எரிச்சலில் ப்ரதாப் கேட்க, “வளையல் மறைந்துட்டிங்க” என்றாள்..
“நாளைக்கு பார்த்துக்கலாம்டி எனக்கு இப்ப அந்த அளவு பொறுமையில்லை” என்றவன் விட்டதிலிருந்து தொடர ஆரம்பித்தான்.. அவளை முழுமையாக ஆட்கொண்டு விட்டு விலகி படுக்க, அவன் மார்ப்போடு இறுக்கி அணைத்து படுத்து கொண்டாள் விஷ்ணு.. இப்போது தான் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது..
மறுநாள் இருவரும் ஒன்றாகவே ஆபிஸ் சென்றார்கள்.. வழக்கம் போல ஆபிஸில் விஷ்ணு செய்யும் தவறுகளுக்கு பாரபட்சம் பார்க்காமல் வறுத்து எடுப்பான் ப்ரதாப்.. இரவு வீட்டிற்கு வந்தால் கட்டிலில் தஞ்சம் அடைந்து விடுவர்.. இப்புடியே ஒரு மாதம் நாட்கள் நகர்ந்தது..
கடவுளே வாழ்க்கை இப்புடியே போகனும்.. இந்த லில்லி என் நினைப்பிலும் வாழ்க்கையிலும் வரவே கூடாது என விஷ்ணு வேண்ட, அந்த வேண்டுதல் கடவுள் செவியில் விழவே இல்லை போல, அடுத்த நாளே லீலா அன்னை சாலா குட்டையை குழப்புவதற்கென விஷ்ணுவை பார்க்க வந்து இருந்தார்..