“என்ன பண்ணுன என் அண்ணாவை” வம்சி தான் கேட்டது.. தன் முன் அழுது கொண்டு இருக்கும் விஷ்ணுவிடம், அவன் முகமோ கோவத்தில் இருந்தது..
அன்று ப்ரதாப் கதவை திறந்து வெளிவர கல்யாணி தான் கையை பிசைந்து கொண்டு செய்வதறியாது நின்று கொண்டு இருந்தார்..
உள்ளே பேசியது அவருக்கு கேட்கவில்லை என்றாலும் ஏதோ சண்டை என புரிந்து கொள்ள முடிந்தது..
“மாப்பிள்ளை சின்ன பொண்ணு ஏதும் தப்பு செஞ்சாலும் பெரிசா எடுத்துக்காதீங்க”, அவளுக்கு சொல்லி புரிய வச்சு அனுப்பி வைக்கிறேன்” என்றார் கொஞ்சம் தயக்கத்துடன்,
ப்ரதாப் எதுவும் சொல்லவில்லை திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
மகளை திட்டலாம் என உள்ளே சென்ற கல்யாணிக்கு அவள் அழுது வடிந்த முகமும் ப்ரதாப் அழுத்தியதால் சிவந்திருந்த கழுத்தை பார்த்ததும் திட்ட மனம் வரவில்லை.. உடனே பார்த்தி உதயகுமாருக்கு அழைத்து சொன்னார்.. பதறியடித்து வந்தனர் இருவரும்,
விஷ்ணுவை பார்த்த உதயகுமாருக்கு ப்ரதாப் மீது கோவம் வந்தது.. என்ன இருந்தாலும் இப்படியா கை நீட்டுவது என, பெற்றவராச்சே ஆசை மகளை அடித்ததை ஏற்க முடியவில்லை..
பார்த்திக்கோ இந்த அளவு என்றால் பிரச்சினை பெரிதோ என கவலைப்பட்டான் தங்கைக்காக, “என்ன பிரச்சினை” என கேட்க அவள் வாயே திறக்கவில்லை.. இவ்வளவு நேரம் அந்த பேச்சு பேசியவள் இப்போது வாய் திறக்க மாட்டேன் என அமர்ந்து அழ, பொறுமை இழந்த பார்த்தி அடிக்கவே போய் விட்டான்..
“பார்த்தி” என கண்டித்த உதயகுமார்.. “கொஞ்ச நேரம் அவளை எதுவும் கேட்காம நிம்மதியா இருக்க விடுங்க” என மனைவி மகன் இருவரையும் கண்டித்தார்.. மகளின் அழுகையும் தோற்றமும் அவரை கவலை கொள்ள செய்தது.. தப்பு தன் பொண்ணு மேல் என்றாலும் கூட இப்படி அடித்திருக்க வேண்டாம் என்று கோவம் கொண்டது தந்தை மனம்..
ப்ரதாப்போ விஷ்ணு வீட்டிலிருந்து சென்றவன் தான் இரண்டு நாட்களாகி விட்டது.. வீட்டிற்கும் வரவில்லை ஆபிஸ்க்கும் செல்லவில்லை.. மொபைலிலும் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.. எங்கு இருக்கிறான் என தெரியவில்லை..
வம்சியும் ராமும் தான் தேடி திரிகிறார்கள்.. இங்கு இருக்கும் இவர்களுக்கு சொந்தமான மற்ற வீடுகள் இரண்டு ப்ளாட்களுக்கே சென்று பார்த்தாச்சு ப்ரதாப் அங்கு இல்லை.. ஆந்திராவில் இருக்கும் வீடு ஆபிஸ் கம்பெனிகளிலும் விசாரித்து பார்த்தாச்சு ப்ரதாப் எங்குமே இல்லை..
வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் வெளிநாடு என செல்வதால் வீட்டில் உள்ளவர்கள் அப்புடி தான் எங்காவது சென்று இருப்பான் என நினைத்து கொண்டார்கள்.. தன் அண்ணன் எவ்வளவு பெரிய பெரிய பிரச்சினைகளை பார்த்தவர்.. அனைத்தையும் இடது கையால் டீல் செய்தவர், அவரையே இந்த கல்யாண வாழ்க்கையும் ஒரு பெண் மீது கொண்ட நேசமும் இப்புடி கொண்டு வந்து நிறுத்தி விட்டதே கவலை கொண்டான்..
காதல் என்ன பாடு படுத்தும் அவன் அறியாததா அதன் அவஸ்தையை, காதலின் அவஸ்தை எதிரிக்கு கூட வரக்கூடாது என அவன் நினைக்க, அவன் அண்ணாய்யாவேயே அதில் தள்ளி விட்டாளே, ப்ரியா உன்னை என கோவம் எழ வந்து விட்டான்..
“ஏன் இவ தான் ஏதும் பண்ணி இருக்கனுமா, உங்க அண்ணா ஏதும் பண்ணி இருக்க மாட்டாங்களா?” என கேட்டாள் நிவேதா..
அவளும் அங்கு தான் இருந்தாள்.. விஷ்ணுவை பார்ப்பதற்கென அவள் வந்த நேரம் தான்.. வம்சி மும் அங்கு வந்தது..
வம்சியை முறைத்தவன் உதட்டின் மீது கை வைத்து அமைதியா இருக்கனும் என செய்கை செய்தவன்
“உன்னால தான் நீ அவ காதில் கண்டதையும் ஓதி ஓதி தான் அவ இப்புடி இருக்கா, சும்மா நிற்கிறதுன்னா இரு, முடியாதுன்னா வெளிய போ வேதாளம்” என கோவமாக நிவேதா விடம் கூறியவன்
விஷ்ணு புறம் திரும்பி “நீ சொல்லு என்ன பண்ணுன?” மீண்டும் கேட்க,
“அவருக்கு என்ன பிடிக்கவே இல்லை” என்ற விஷ்ணுவை பார்த்து கேலியாக சிரித்தவன்,
“நீ இன்னுமா இதை சொல்லிட்டு இருக்க, கேட்டு கேட்டு புளிச்சு போயிட்டுமா”.. மேல சொல்லு,
“அந்த லில்லியை தான் பிடிச்சு இருக்கு” என்றாள் மூக்கை உறிஞ்சி கொண்டு
“ஹா ஹான் இது வேறையா” என சிரித்தவன் “அப்புறம் இப்புடி எல்லாம் யாரு சொன்னது உன்கிட்ட என் கேட்க விஷ்ணு அமைதியாக இருந்தாள்..
“அண்ணா சிங்கப்பூர் போய் இருக்கும் போது ராமை நீ என்ன பாடு படுத்துன்னு அவன் சொல்லிட்டான்.. உன் மனசில் இருக்கிற சந்தேக குப்பையை முழுசா வெளிய கொட்டு அப்ப தான் நீயும் நிம்மதியா இருக்க முடியும்.. சுத்தி இருக்கவங்களும் நிம்மதியா இருக்க முடியும்.. சோ சொல்லு என்ன ஆச்சு”
“லில்லி அம்மா என்ன பார்க்க வந்தாங்க”..
“அவங்க ஏன் உன்னை பார்க்க வந்தாங்க” வம்சிக்கு அதிர்ச்சி “என்ன சொன்னுச்சு” என புருவம் சுருக்கி கேட்டான்..
விஷ்ணு அன்று தனியே கோவில் சென்று இருக்க.. அங்கு வந்த சாலா “உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா” என் சொல்ல, விஷ்ணுவுக்கு யார் என்றே தெரியவில்லை..
“யார் நீங்க?” என கேட்க, அவரே தன்னை லில்லி அம்மா என் அறிமுக்ப்படுத்தி கொண்டார்..
“என்கிட்ட நீங்க என்ன பேசனும்?” என கேள்வியாக அவரை பார்த்தவள், “எனக்கு உங்ககிட்ட பேச விருப்பமில்லை” என கோவமாக பதிலளித்தாள்.. அவரிடம் பேச என் இருக்கின்றது.. ஏதோ தவறாக பட பேச மறுத்தாள்..
சாலாவோ “ஒரு ஃபைவ் மினிட்ஸ் ப்ளீஸ்மா.. ப்ளீஸ்” என கெஞ்சி கேட்க.. வேறு வழியில்லாது “சரி சொல்லுங்க” என்றாள்..
அவளிடம் ப்ரதாப் லில்லி கல்யாண பேச்சு ஆரம்பித்தது.. ப்ரதாப் லில்லியை பிடிக்கும் என சொன்னதாக அளந்து விட,
இதை கேட்கும் போது விஷ்ணுவுக்கு பயங்கர கோவம் எழுந்தது.. “இருக்கட்டும் இது எல்லாம் பழைய முடிஞ்சு போன கதை.. இப்ப அப்புடி எல்லாம் எதுவும் இல்லை.. இதை பேச தான் நிற்க சொன்னீங்களா”? என கோவப்பட்டாள்..
“அய்யோ கொஞ்சம் பொறுமா இது முடிஞ்சு போன கதையா இருந்தா நான் ஏன் உன்னை தேடி வர போறேன்.. அது இப்ப தொடர்ந்ததால் தான் உன்னை தேடி வந்து இருக்கேன்” என்ற சாலா நயமாக சொல்லவும்,
இல்லை என தலையாட்டினாள் விஷ்ணு..
“இருக்கும்மா.. தனக்கு முன்ன கல்யாணம் பேசின பொண்ணு, தான் பிடிச்சு இருக்குன்னு சொன்ன பொண்ணு, வேலைக்கு கேட்கும் போது, மனைவி மேல் எண்ணம் இருக்க யாராவது அந்த பொண்ணை வேலைக்கு எடுப்பாங்களா, அதுவும் நீயும் அங்க இருக்கும் போதே”,
“சத்தியமா நீயும் அங்க இருக்குன்னா, நான் லில்லியை அங்க அனுப்பியே இருக்க மாட்டேன்.. நீயும் ப்ரதாப்பும் பிரிய போறீங்க விவாகரத்து எடுக்க போறீங்கன்னு தேவகி சொன்னாங்க… அவங்க தான் லில்லியை திரும்பவும் கேட்டாங்க.. லில்லிக்கும் ப்ரதாப் மேல் எண்ணம் இருக்கவும், போவேன் ரொம்ப அடம் தான்.. அதான் அனுப்பி வச்சேன்”..
“எனக்கு மனசே இல்லை.. கொஞ்ச நாள் அப்புறம் தான் தெரிஞ்சுது.. நீயும் அங்க தான் வேலை பார்க்கிறன்னு, தெரிஞ்ச அப்புறம் ஒரு பொண்ணா உன் இடத்தில் இருந்து பார்த்த எனக்கு அதுக்கு அப்புறமும் லில்லியை அங்க அனுப்ப மனசே இல்லை.. அதான் வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லி வேலையை விட வச்சுட்டேன்” என்றாள்..
“அவர் தானே வேலையை விட்டு அனுப்புனது.. நீங்க ஏன் மாத்தி சொல்றீங்க” விஷ்ணு கோவமாக சீற
“அப்புடின்னு யாருமா உன்கிட்ட சொன்னது.. ப்ரதாப்பா? வேலையை விட்டு அனுப்புறவர் ஏன் எடுக்கனும்..ப்ரதாப் அனுப்பவே இல்லை.. நான் தான் லில்லியை வேலைக்கு போக வேணாம் சொல்லி நிறுத்தினேன்.. அவ ரொம்ப அடம்.. போயே தீருவேன்.. அவருக்கு என்ன தான் பிடிக்கும் அவளை பிடிக்காதன்னு சொல்லி, உன்னை நினைக்க எனக்கு ரொம்ப கவலையாக இருந்துச்சு, அதான் என் பொண்ணை அடிச்சு புத்தி சொல்லி வீட்டில் இருக்க வச்சது” என்றார்.. விஷ்ணுவின் கலங்கிய கண்ணை பார்த்து தனக்கு தானே சபாஷ் சாலா என சொல்லியபடி,
“ரொம்ப சந்தோஷம்.. அதான் முடிஞ்சு போயிருச்சே.. எனக்காக இனி நீங்க கவலைப்பட வேண்டாம்” என வந்த அழுகையை அடக்கி கொண்டு விஷ்ணு எழும்ப,
அவளின் கைபிடித்து தடுத்த சாலா “உண்மையா இப்ப கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என் குடும்பமும் பொண்ணும் தான்மா”,
“பாவி மக எவ்வளவோ சொன்னேன்.. பிரிஞ்சவங்க சேர்ந்துடாங்க.. இனி நீ ப்ரதாப் மேல் வச்சு ஆசையை மறந்துரு.. ஒரு பொண்ணு வாழ்க்கைக்கு இடையில் போகதன்னு, சரி சரின்னு என்கிட்ட தலையாட்டுனா”,
“தீடிர்னு சிங்கப்பூர் போறேன்மா வந்து நின்னா, நானும் இங்க இருக்கிறதை விட வெளிநாடு போனா நல்லது தான் நினைச்சு அனுப்பி வச்சேன்.. ஆனா இப்ப தான் தெரிஞ்சது உன் வீட்டுக்காரும் அந்த டைம் சிங்கப்பூர் போய் இருக்கார்ன்னு,”
“அவர் ஃபேக்டரி விஷயமா தான் போனாங்க.. கூட ராம் அண்ணாவும் போனாங்க.. இரண்டு பேரும் ஒரே நேரம் அங்க போனா தான் என்ன? சும்மா நீங்களா ஏதாவது கதை கட்டாதீங்க கையை விடுங்க, கத்திய விஷ்ணு கையை உருவ முயன்றாள்.. சாலா ஏதோ தவறாக தான் சொல்ல போகிறார் அதை தாங்கும் சக்தி தனக்கு இல்லை என, விடாது கையை அழுத்தமாக பற்றிய சாலா..
“ராம் கூட போனாலும், ராமும் உன் வீட்டுக்காரும் ஒரே ரூமில்லா தங்கி இருக்க முடியும்.. இதை சாதரணமாக எடுத்துகிற நிலை தாண்டிருச்சும்மா.. கை மீறி போயிட்டு, போன இடத்தின் தனிமை, குடிச்ச மதுவோட போதை, பிடிச்சவங்களோட அருகாமை, அதான் எல்லை தாண்டிட்டாங்க” வாய்கூசாமல் சாலா சொல்ல..
“பொய் பொய் பொய்.. நீங்க பொய் சொல்றீங்க… நான் நம்பவே மாட்டேன்.. அப்புடி எல்லாம் எதுவும் இல்லை” என்று பயங்கரமாக கத்த ஆரம்பிக்க, அந்த இரண்டு போட்டோவை காண்பித்தார்..
“லில்லி போன்லிருந்து எடுத்தேன்.. இன்னும் நிறைய இருக்கு.. ஆனா அதை இப்புடி பப்ளிக்கா எடுத்துட்டு வர முடியாது அந்த நிலையில் இருக்கு.. உனக்கு போட்டோ போலின்னு சந்தேகமா இருந்தா செக் பண்ணி பார்த்துக்கோ”
“நீயே நல்லா யோசிச்சு பாருமா.. பிரச்சினை பார்த்திபன் பவித்ராவுக்கு தான் உங்களுக்குள்ள இல்லைன்னு விசா சொன்னா, அப்புடி இருந்தும் உன்னை ஏன் வீட்டுக்கு கூப்பிடாம அம்மா வீட்டிலே விட்டு இருக்கனும்.. உன் மேல் விருப்பம் இருந்தா ப்ரதாப் அப்புடி விட்டு இருப்பாங்களா”,
“திரும்ப கூட நீயா தான் வந்த போல” போலி வருத்ததுடன் சொன்னவர், “கல்யாணம் கூட விருப்பமே இல்லாமலா பவித்ராவுக்கா நடந்தது.. இப்பவும் பவிக்காக தான் உன்னை சகிச்சு வீட்டில் விட்டு இருப்பாங்க போல”,
“அதோட லில்லி நான் பெத்த பொண்ணு, எந்த அம்மாவது தன் பொண்ணை பத்தி இப்புடி வந்து சொல்லுவாங்களா? கோவில் இது, அந்த சாமி மேல்ல சத்தியமா நான் சொன்னது எல்லாம் உண்மை, என இவரின் காவாலி தனத்துக்கு கடவுளையும் கூட்டு சேர்ந்து கொள்ள, ஏற்கெனவே குழப்பத்தில் இருப்பவளுக்கு இது போதாதா, இதை அனைத்தையும் விட சாலா அடுத்து சொன்னதை கேட்டவளுக்கு தன்னை நிலை கொள்ள முடியவே இல்லை.. கீழே விழாமல் இருக்க சாலாவின் கரத்தையே பற்றி கொள்ள வேண்டிய பரிதாப நிலை விஷ்ணுவிற்கு,
அப்புடி சாலா சொன்னது.. சிங்கப்பூரில் நடந்த தவறு இப்ப லில்லி வயிற்றில் என்றார்.. தலையில் இடி விழுந்தது போல் இருந்தது விஷ்ணுவுக்கு, நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. நீ நம்பி தான் ஆக வேண்டும் என சாலா வேறு இன்னும் இன்னும் தூபம் போட்டு கொண்டு இருந்தார்..
அவருக்கு தெரியும் ப்ரதாப் தொழிலில் யாராவது சிறு சந்தேக பார்வை பார்த்தால் கூட அவர்களின் டீலிங்கை ஒட்டு மொத்தமாக முடித்து கொள்வான் என அவரின் கணவர் நாயுடும் சொல்லி இருக்கிறார்.. விசாலாட்சியும் சொல்லி இருக்கிறார்.. அதான் விஷ்ணுவிடம் இவர் இப்புடி அளந்து விட்டு கொண்டு இருக்கிறார்.. இதை கேட்டு விஷ்ணு ப்ரதாப்பிடம் சண்டை போட்டு பிரிய வேண்டும்.. தன்னை சந்தேகப்பட்டவள் கூட நிச்சயம் ப்ரதாப் வாழ மாட்டான்.. இதில் தன் பெயர் அடிபட்டால் நான் அப்புடி எல்லாம் சொல்லவே கிடையாது எல்லாம் இவளே கற்பனை பண்ணிட்டு வந்து பேசுறா என கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதோடு,
இதை வைத்தே என் பொண்ணோட வாழ்க்கையே போயிருச்சு.. உங்க கூட சேர்த்து வச்சு அதுவும் கர்ப்ப அளவு சொல்லிட்டா, இதை வெளிய தெரிஞ்சா என்ன பொண்ணை யார் கட்டுவா என நாடகம் ஆடி ப்ரதாப்புக்கே லில்லியை கட்டி வைத்து விடவேண்டும்.. ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்ற கேடு கெட்ட திட்டம் வைத்து குழி வெட்ட. அந்த குழியில் போய் சிக்கி கொண்டது விஷ்ணுவின் அறியாமை,