பாகம் 9
அறைக்குள் வந்தவளை நோக்கி ப்ரதாப் ஒரு பத்திரத்தை நீட்ட விஷ்ணுவிற்கு இதயம் ரயில் வண்டியை விட அதிவேகமாக துடித்தது..
அதிர்ச்சியில் சிலையென ப்ரதாப் நீட்டிய பத்திரத்தை கூட கையில் வாங்கமால் அவன் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தவளை
“இந்தா பிடி” என்ற ப்ரதாப் குரல் கலைத்தது..
“ஆஹான்” என்று விழித்தவளுக்கு அந்த பத்திரம் ஒரு வேளை விவாகரத்து பத்திரமோ என்ற பயம் வந்தது.. “இது நடக்கும்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலையே” என்று நினைத்தவளுக்கு அந்த பத்திரத்தை கையில் வாங்க துளி கூட விருப்பமில்லை..
“ம்பச் ம்” என்று ப்ரதாப் வாங்கு என்று கண்ணால் பத்திரத்தை காட்டி முறைக்கவும்,
வேறு வழி இல்லாமல் கை நடுக்கத்துடன் வாங்கினாள்.. கண்கள் கலங்கி நீர் திரண்டது.. அதோடு பத்திரத்தை பிரித்து பார்க்க டால்பின் சிமெண்ட் உறுதியானது உன்னதமானது என்பது தான் முதலில் தெரிந்தது..
“ஹாங் என்னது” என அதிர்ந்தவள் இது விவாகரத்து பத்திரம் மாதிரி தெரியலையே வேற என்னவோ போட்டு இருக்கே என தலையை உலுக்கி கண்ணீரை வெளியேற்றி விட்டு நன்றாக உற்று பார்க்க, அது டால்பின் சிமெண்ட் கம்பெனியுடன் போட்டு இருக்கும் கான்ட்ராக்ட்கான அக்ரிமெண்ட் டாக்குமெண்ட் என்பது புரிந்தது..
இதை எதுக்கு கொடுத்து இருக்கார் என்று ஒன்றும் புரியாத குழப்பத்துடன் ப்ரதாப்பை பார்த்து
“என்னது இது” என்று கேட்டாள்..
“ஏன் உனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியாதா”, B.E ரெஸ்யூம்ல போட்டு இருந்த,அது டால்பின் கம்பெனியோட போட்டு இருக்க அக்ரிமெண்ட் டாக்குமெண்ட்” என்றான்..
இது இது எதுக்கு என்கிட்ட கொடுத்து இருக்கீங்க குழப்பமாய் ப்ரதாப்பை பார்த்து தட்டு தடுமாறி கேட்டாள்..
“இந்த அக்ரிமெண்ட் பேப்ர்ஸ் எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு ஒரு டைம் செக் பண்ணி கொடுக்க தான் வர சொன்னேன்” என்றான்..
ஆ.. என விழித்தவள், இதுக்கா, இதுக்கு நான் எதுக்கு, என்ற ரிதியில் விஷ்ணு ப்ரதாப்பை பார்க்க,
அவள் பார்வையின் அரத்தம் புரிந்தவன் “வந்ததே லேட், இதுல வேலையை பார்க்கமா சீட்ல சாஞ்சு தூக்கிட்டு இருக்கீங்க.. உங்களை தூங்க வச்சிட்டு சம்பளம் கொடுக்க முடியுமா என்ன? குடுக்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை வாங்கனுமே அதான்,இப்புடி என் முன்னாடி உட்கார்ந்து வேலை பாருங்க.. எப்புடி தூக்கம் வருதுன்னு நானும் பார்க்கிறேன்” என்றவனை பார்த்தவளுக்கு இந்த அறைக்குள் வரும் போது இருந்த பயம் போய் கோவம் தான் வந்தது..
தலைவலின்னு கண்ணை இரண்டு செகன்ட் முடினதுக்கு தூங்குனேன் சொல்லி ஸ்கூல் குழந்தைகளுக்கு மிஸ் என் முன்னாடி உட்கார்ந்து எழுதுன்னு சொல்ற மாதிரி என் முன்னாடி உட்கார்ந்து வேலை பாருன்னு சொல்லுது பாரு என்று எப்போதும் போல் மனதிற்குள் வறுத்தெடுக்க..
“எப்பவும் போல நின்னுட்டே கனவு காணமா உக்கார்ந்து வேலையை பாருங்க” ஃப்ரியா” என்றான்.. ப்ரதாப் கணினியில் கண் பதித்தபடியே சொல்ல,
அவனின் ஃப்ரியா என்ற அழைப்பில் இன்னுமே கோவம் எழுந்தது.. அவர்களின் அந்த ஐந்து மாத வாழ்வில் மற்றவர்கள் முன்பு விஷ்ணு என்று அழைத்தாலும் தனிமையில் பெயர் சொல்லி அழைப்பதே அரிது.. அப்புடி எப்போதாவது அழைத்தாலும் அவனின் அழைப்பு ஃப்ரியா என்பதாக தான் இருக்கும்..
என் பேர் ஃப்ரியா இல்ல ப்ரியா என்று அவள் எவ்வளவு திருத்தினாலும் அவன் கேட்பதாக இல்லை.. எனக்கு எப்புடி கூப்பிட தோனுதோ அப்புடி தான் கூப்பிடுவேன்.. என்னை அது செய் இதை செய்ன்னு அதிகாரம் பண்ற வேலையை வச்சுக்காத என்று அவளை காய்ந்து விட அமைதியாகி விட்டாள்..
இப்போதும் ரொம்ப நாள் கழித்து அவ்வாறு அழைக்க, ப்ரியாங்கிற பேரை வேணும்னே ஃப்ரியான்னு கூப்பிடறதை பாரு,எத்தனை தடவை சொல்லி இருப்பேன் அப்புடி கூப்பிடாதீங்கன்னு, வேணும்னே கூப்பிடறதை பாரு முசுடு முனுசாமி என்று கடுப்பானவள்..
“சார் என் பேர் ப்ரியா ஃப்ரியா இல்ல” என்று திருத்தி கூற,
அவளை நிமிர்ந்து பார்த்தவன் “இப்ப இந்த விளக்கம் ரொம்ப முக்கியமா வேலையை பாருங்க” என்றான்…
கோவம் வந்தது.. “ஓகே சார்ர்ர்ர்ர்ர் பார்க்கிறேன் சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அந்த சாரை ஒரு ராகத்துடன் இழுத்து கூறி விட்டு அமர்ந்து வேலை பார்க்கலானாள்..
அந்த பேப்ர்ஸை படிக்க ஆரம்பித்தவள், “இந்த டாக்குமெண்டை கையில்ல வாங்கவா நான் அவ்ளோ பயந்தேன், ச்சே இதை தான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்வாங்களோ” என்று நினைத்தபடி பேப்ர்ஸை படித்தவளுக்கு இன்னுமே தலைவலி இருக்க தான் செய்தது.. ஷ்… என்றபடி நெற்றியை நீவி கொண்டு இருந்த நேரம்,
“சார்”என்று அனுமதி கேட்டு விட்டு உள்ளே வந்த ஆபிஸ் பாஸ் டேபிள் மீது ஒரு ட்ரேயை வைத்து விட்டு சென்றான்..
என்னவென்று விஷ்ணு பார்க்க அதில் ஒரு கப்பில் ப்ளாக் டீயும் இன்னோரு கப்பில் காபி இருந்தது.. ப்ளாக் டீ ப்ரதாப்புக்கு என்று புரிந்தது.. அவனுக்கு தான் பால் பிடிக்காதே, எப்போதுமே ப்ளாக் டீ தானே குடிப்பான்..
அப்ப காபி யாருக்கு அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே, ப்ளாக் டீயை கையில் எடுத்த ப்ரதாப் விஷ்ணுவை பார்க்கமாலே கணினியை பார்த்தபடி குடிக்க ஆரம்பித்தான்..
காபி அவளுக்கு தான் என்பது புரிந்தது.. “எதுக்கு இந்த தீடீர் கரிசனம்” என்று விஷ்ணு நினைக்க, “வேற எதுக்கு நீ தூங்கிட்டா, சம்பளம் கொடுக்கிற அவருக்கு தானே நஷ்டம் அதான்.. இந்த கரிசனம் அக்கறை எல்லாம் ஒன்னும் கிடையாது” என கேள்வியும் நானே பதிலும் நானே என தனக்கு தானே கேள்வி கேட்டு பதில் கூறி கொண்டாள்..
எனக்கு இந்த காபி ஒன்னும் வேணாம் என்று ரோஷமாக நினைத்தாலும், தலைவலி ஒருபுறமும் சாப்பிடற பொருளை வேஸ்ட் பண்ணுவது ப்ரதாப்புக்கு பிடிக்காது.. அதனால் அவன் திட்டுவானோ என்ற பயம் வர காபியை குடிக்க கப்பை கையில் எடுக்க, அந்த காபி கப்பின் பக்கம் சின்னதாக ஒரு தைல பாட்டில் இருந்தது..
அதை கையில் எடுத்தவள் ஹய் “இது முசுடு தைலமாச்சே இதை போட்டா தலைவலி ஐந்து நிமிஷத்தில் சரியாகிடுமே” என்று சத்தமாக சொல்ல, ப்ரதாப் அவளை பார்த்து முறைத்தான்..
தலையை குனிந்து கொண்டாள் விஷ்ணு.. “எப்பவும் உன் வாய் தான்டி உனக்கு எதிரி” என்று தன்னை தானே திட்டி கொண்டாள்…
அது மூலிகை தைலம் சின்ன பாட்டிலில் கீரின் கலரில் லீக்யூட்டாக இருக்கும் ஒரு ட்ராப் எடுத்து இருபுறமும் தடவினாளே போதும் தலைவலி பறந்து போகும்.. முன்பு தலைவலி என்று சொல்லி மாத்திரை போடவோ இல்லை அமிர்தாஞ்சன் சென்ட் பாம் என்று தடவ போனாளோ அதை தடுத்த ப்ரதாப் அவளிடம் இந்த தைலத்தை தான் கொடுப்பான்..
அதனுடைய பெயர் தெரியாததாலும் ப்ரதாப் அவளுக்கு கொடுத்தாலும் அவனை முசுடு என்று அழைப்பவள் அந்த தைலத்துக்கும் முசுடு தைலம் என்றே பெயர் வைத்து விட்டாள்..
எனக்கு தலைவலின்னு இவருக்கு எப்புடி தெரியும்.. இதை கொண்டு வர சொல்லி இருக்கார்.. இதுவும் எனக்கா, இல்லை அவருக்கா என்று கேள்வி எழும்பினாலும், யாருக்காக கொண்டு வந்திருந்த என்ன, எனக்கு இப்ப தேவைப்படுது என்று உபயோகப்படுத்தி கொண்டாள்.. அனைத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தான் ப்ரதாப்..
முசுடு தைலம் மாயத்தில் ஐந்து நிமிடத்தில் தலைவலி பறந்து போனது.. உண்மையில்லே அது முசுடு தைலத்தின் மாயமா இல்லை அதை கொடுத்த முசுடுவின் மாயமோ யாருக்கு தெரியும்.. ஆனால் விஷ்ணுவிற்கு தலைவலி பறந்து போய் இருந்தது.. பார்த்தி பவித்ரா விஷயம் கூட இப்போது நினைவில் இல்லை..
அறைக்குள் வரும் போது நிறைய கவலை, நிறைய யோசனை என பயத்துடன் வந்தாள்.. இப்போது அது எதுவும் இல்லாமல் மனது அமைதியானது போல் இருந்தது… டாக்மெண்டை முழுதாக சரி பார்த்து ப்ரதாப் கையில் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள்… ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த ப்ரதாப் தலையை இருபுறமும் ஆட்டியவன் மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்..
குழப்ப மேகமாய் சென்ற தோழி தெளிந்து வருவதை பார்த்த நிவி,”என்னடி ஆபிஸ் ரொமான்ஸா”என்று கேட்க,
அவளை முறைத்த விஷ்ணு “ரொமான்ஸ் அதுவும் எங்க இரண்டு பேருக்குள்ள போடிங்க, கூட இருக்கும் போதே ஒன்னும் இல்ல.. முறைச்சிட்டே இருப்பார்.. இதில் இப்ப இருக்க சூழ்நிலையில் ரொமான்ஸா போடி” என சலித்து கொண்டாள்..
“அப்ப இவ்வளவு நேரம் உள்ள என்ன பண்ணுன” என்று நிவி கேட்கவும், விஷ்ணு நடந்ததை சொன்னாள்..
அதை கேட்ட நிவி “எங்க சாருக்கு பொண்டாட்டி மேல்ல எவ்வளவு அக்கறை பாரேன்” என்றதும் அவளை விஷ்ணு முறைத்தாள்..
“என்னை அசிங்கமா திட்ட வச்சுராத, இதுல என்னடி அக்கறை இருக்கு.. நான் தலைவலின்னு சொல்லி வேலையை ஈவினிங்க்குள்ள முடிக்கலைன்னா அது அவர்க்கு தானே நஷ்டமாகும்.. அதனால்ல தான் இது எல்லாம் பண்றார்..
உனக்கு தான் எனக்கு நடந்தது எல்லாம் தெரியுமே, அப்புடி இருக்கும் போது எப்புடி தான் இப்புடி சொல்றியோ”, சலித்து கொண்டாள் விஷ்ணு..
“அவ்வளவு அக்கறை இருந்தா ஏன்டி என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகமல் என் வீட்டுல விட்டு இருக்க போறாங்க.. இனிமே என்னை இப்புடி சொல்லி கடுப்பாகாத” என்ற விஷ்ணு வேலையை தொடர்ந்தாள்..
நிவிக்கு தான் விஷ்ணு தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றாளோ என்று தோன்றியது.. தலைவலி என்று இவள் வாய் திறந்து சொல்லாமலே அதை புரிந்து தீர்த்த வைத்து இருக்கின்றாரே,
இதே இந்த ஆபிசில் இருக்கும் வேறு யாருடைய தலைவலிக்காவது தைலம் கொடுத்து காபி வாங்கி கொடுப்பாரா காய்ச்சி எடுத்து காதில் இரத்தம் தான் வர வைப்பார் தனது பாஸ் என்று நினைக்கையில் நிவிக்கு சிரிப்பு வந்தது..
இது மிசஸ் விஷ்ணுவுக்கான ஸ்பெஷல் கவனிப்பு, இது மட்டுமா இந்த அலுவலகத்தில் நிறைய சட்ட திட்டம் உள்ளது..
ஆனால் அது அவ்வபோது விஷ்ணுவிற்காக மட்டும் வளையும்.. இன்று மீட்டிங்க்கு விஷ்ணு லேட்டாக வந்தால்.. ஆனால் அவள் வரும் வரை மீட்டிங் ஆரம்பிக்கவில்லை.. இதே வேறு யாராவது லேட்டாக வந்தால் அவர்களை மீட்டிங் ஹால்க்குள்ளே கூட விட மாட்டான் ப்ரதாப்.. லேட்டா வந்ததுக்கு இதான் தண்டனை என்று கடுமை காட்டுவான்.. அலுவலக சட்டம் மட்டுமல்ல அலுவலக முதலாளியும் விஷ்ணுவிற்காக சில சமயம் வளைந்து தான் கொடுப்பார்..
தவறு செய்தால் விஷ்ணுவிற்கு திட்டு விழும்..ஆனால் திட்டும் நபர் அவர்களின் பாஸை தவிர வேறு யாரும் அவளை ஒன்றும் சொல்லி விட முடியாது.. அந்த திட்டில் கூட அக்கறை இருப்பதாக தான் தோன்றும்..
ஆனாலும் விஷ்ணு சொல்வது போல் அவ்வளவு அன்பு அக்கறை பாசம் இருந்தால், ஏன் இப்புடி பிரித்து வைத்திருக்க வேண்டும்.. விஷ்ணு கூறுவது உண்மையா இல்லை தனக்கு தோன்றுவது உண்மையா என்று நிவிக்கு இப்போது குழப்பம் வந்தது..
நிவி அப்புடியே வேலை எதுவும் செய்யாமல் அமர்ந்து யோசித்து கொண்டே இருக்க, அவளின் கையில் கிள்ளிய விஷ்ணு என்ன கனவு வேலையை பாருங்க நிவேதா என்று கூறவும்..
“சரிங்க முதலாளியம்மா” என்ற நிவி சிரித்தபடி வேலையை பார்க்க,
“அப்புடி சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என்று விஷ்ணு முறைத்தாள்..
“இங்கிலீஷ்ல எம்.டி சொன்னா இனிக்குது.. அதையே தமிழ்ல சொன்னா கசக்குதா முதலாளியம்மா” என்றாள் நிவி..
அடிங்க என்ற விஷ்ணு நிவியை ஏதோ சொல்ல, திரும்ப நிவேதா பேச இருவரும் சிரித்து பேசியபடி வேலை செய்து கொண்டு இருக்க, அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை என்றாலும் விஷ்ணுவையே அவளின் சிரிப்பையே பார்த்தபடி இருந்தான் அஸ்வின்..
“பார்த்து பார்த்துடா நீ விடுற ஜொள்ளுல ப்ளோர் கடல்ல மாறிட போகுது.. ஒழுங்கா வேலையை பாருடா” என்ற பூரணி அஸ்வின் தலையில் தட்ட, அவனும் ஹி ஹி என்று அசட்டு சிரிப்பு சிரித்தான்…
அஸ்வினுக்கு விஷ்ணுவை அலுவலகத்தில் பார்த்த முதல் நாளிலிருந்தே ஈர்ப்பு.. அந்த ஈர்ப்பு நாளைடைவில் அடுத்த நிலைக்கு சென்று இருந்தது.. அவனுக்கு தெரியாது விஷ்ணு திருமணமானவள் என்பது,
மாலை ஆறு மணியானதும் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.. விஷ்ணு நிவி இருவரும் ஒன்றாக தான் வீட்டிற்கு செல்வர்..
நிவி ஆபிஸ்க்கு கேட் அருகே நிற்க சொன்ன விஷ்ணு தன் வண்டியை எடுக்க பார்க்கிற்கு சென்றாள்..
இவர்க்கு இன்னமும் விஷயம் தெரியலை போல, யாரும் சொல்லலையோ,அதான் இவ்வளவு கேஷுவலா இருக்காங்களோ, நாமளே சொல்லிடலாமா என்று நினைத்தவள், வேண்டாம் இப்ப இருக்க இந்த நிலையை கெடுத்துக்க வேணாம்.. இன்னைக்கு வீட்டுக்கு போனதும் அவரே தெரிஞ்சிக்கிட்டும்.. அதற்கு அப்புறம் அவர் என்ன முடிவு பண்ணுராரோ பண்ணட்டும்.. வாழ்க்கை போற போக்கில் நாமளும் போகலாம்.. தேவையில்லாம குழப்பிக்க வேணாம் என்று தெளிந்தவள் தன் வண்டி அருகே வர,
“ப்ரியா ஒரு நிமிஷம்” என்று அஸ்வின் அவள் அருகே வந்தான்..
“என்ன அஸ்வின்” என்று விஷ்ணு கேட்கவும்..
அது வந்து அது வந்து என தயங்கியவன் ஒரு நிமிஷம் என அலுவலகத்தில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டு இருந்த செடியில் இருந்து பூவை பறித்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் கை விட,
என்ன பண்றான் இவன் என விஷ்ணு புரியாது அவனை பார்த்தபடியே இருக்க
அவள் அருகே வந்து விஷ்ணுவின் இரு கையையும் தன் கைக்குள் பொத்தியபடி ஐ லவ் யூ ப்ரியா ஐ லவ் யூ சோ மச் என்றான்.. விஷ்ணு கண் அதிர்ச்சியில் தெறித்து கீழே விழும் அளவு விரிந்தது..
அஸ்வின் சொன்னது ஒரு அதிர்ச்சி என்றால், அதை விட அதிர்ச்சி இவர்களை கடந்து சென்ற காரிலிருந்து ப்ரதாப் இதை பார்த்தது.. அந்த அதிர்ச்சியில் அஸ்வின் இவள் கரத்தை பற்றி இருப்பதையும் அதை விடுவிக்க வேண்டும் என்பதை கூட அவள் உணரவில்லை.. ப்ரதாப்போ விஷ்ணுவையும் அஸ்வின் பற்றி இருந்த கரத்தையும் அழுத்தமாக பார்த்து விட்டு காரை அதிவேகமாக ஓட்டி சென்றான்..
தொடரும்…