இன்னுழவனை பார்த்தவர், “டேய் பேரண்டி நீ டசன் கணக்குல பெத்து போடுவ தான். உன்ன அந்த கணக்குல சேர்த்துக்கலாம் தான். ஆனா…” குரல் இழுக்க
“ஆனா…”
அகரனை அடி முதல் நுனிவரைப் பார்த்து உதட்டை சுழித்தவர் “இவன் கொஞ்சம் டவுட்டு தான் டா… இவன் அதுக்கு சரி பட்டு வரமாட்டான் டா…” என்றார் கேலி பேச்சுடன்.
அகரனோ புருவம் தூக்கி முறைத்தவனாய் “ஏன் ஆத்தா நான் டசம் கணக்குல பெத்து போட மாட்டேனா…?” கேட்ட அவனிடம்,
“ம்க்கு…” என அலுத்துக் கொண்டவர், “எங்க ஒரு முத்தத்துக்கே என் பேத்தி தான் உங்கிட்ட முக்கால தொங்கணும் போல இருக்கு. இதுல நீ டசன் கணக்குல பெத்து போட்டுட்டாலும்…” என அவன் இடுப்பில் ஒரு இடி இடித்துவிட்டு தோட்டத்தை நோக்கி சென்றார் அம்பிகாம்மா.
செல்லும் அவரை பார்த்தவன், “ஆத்தா இதுக்காகவே நான் டசன் கணக்குல பிள்ளைங்கள பெத்து போட்டு உன்னை சுத்தி சுத்தி வர வச்சி என்ன இடிச்சிட்டு போற உன் இடுப்பு எலும்பு முறிக்கல நான் அகரன் இல்லையாக்கும்” என அவர் கேட்கும் வண்ணம் கூச்சலிட்டு அவன் சபதம் கொள்ள…
திரும்பாது கையை உயர்த்தி முடியாது என்ற பாணியில் செய்கை செய்தவர், “நடக்கிற காரியமா இருந்தா சொல்லுடா டேய். இன்னுழவா அவனுக்கு நாலு குச்சி மிட்டாய் வாயில அமுக்கடா. சில்லி தனமா பேசிட்டு சுத்துறான் வெஸ்ட்பாலோ (வேஸ்ட் ஃபெல்லோ)” என்றவராய் சென்றார் அம்பிகாமா.
“இரு… இரு வச்சிக்கிறேன் ஆத்தா ஒன்ன. என்றவன் வர வர ஆத்தாக்கு ஓவர் குசும்பு…” அகரன் நகைத்து கொள்ள இன்னுழவன் மென்புன்னகை சிந்தியவன், “என்னடா அப்பாயின்மென்ட் கிடைச்சுதா?” என்றான் தோளில் கைப்போட்டு நடந்தவனாய்.
அகரனும் அவனுடன் நடந்து பைக்கை ஆன் செய்ய, பின்புறம் அமர்ந்தவனிடம் “ஹிம்… கிடைச்சிருக்குடா பட் டூ வீக் அப்பறமா தான் கிடைச்சிருக்கு. இப்போ கொஞ்சம் பிஸியாமாம். அதுக்கு அடுத்த வீக்ல தான் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க” என்றான் பைக்கை செலுத்திய வண்ணம்.
அதைக் கேட்டவனாய் இன்னுழவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
நிவர்த்தனன் ஆஸ்திரேலியா பறந்து செல்ல… இரண்டு நாட்களில் வருவதாக கூறிய சோமசுந்தரத்திற்கு திடீர் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதன் விளைவால் கல்யாணத்திற்கு ஒரு நாள் முன்பாக சென்று கொள்ளலாம் என தீர்வாக சொல்லிவிட்டார் மைதிலி.
கூறிய காலத்தில் வராது போன மாமனை எண்ணி மனம் கேட்காது இன்னுழவனே சோமசுந்தரிடம் அழைத்து பேச… அவரும் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லியிருந்தார்.
அதை அவன் புரிந்து கொண்ட போதும் பாவம் கோதாவரி தான் வாடிப்போனார் தம்பியவன் வருகையை ஆதரவாக எதிர்பார்த்தவர்.
ஏன் வரவில்லை என இன்னுழவனிடம் அவர் வினவிய போதும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை மறைத்து கல்யாண வேலை அதான் தாமதம் என மாற்றி கூறி விட்டான் இன்னுழவன். தாயவளின் மனநிலை கருத்தில் கொண்டவனாய்.
தினமும் காலையில் தவறாது இன்னுழவன் அழைக்க, மேக விருஷ்டியும் சந்தோஷத்துடன் அதை ஏற்க… அவனின் காதல் பரிபாஷனைகளும் அவளின் வெளிப்படுத்தா உள் மன காதல் சம்பாஷனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது தித்திப்பாக நாளுக்கு நாள்.
அனைவரும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருக்க, எனினும் தவித்துப் போய் இருந்தது என்னவோ மேகவிருஷ்டி தான் மனதளவில்.
தினமும் காலையில் இன்னுழவனிடன் காற்றலையில் பேசும் அந்த ஓரிரு மணித்துளிகள் மனதை இதம் செய்தாலும், அவள் மனம் கவர்ந்தவனின் குரல் இனி கேட்க முடியாது என சிந்தை அவளுக்கு உரைக்க மனமோ மறக்க முடியாது தவிக்க அரும்பாடு பட்டுப்போனது மண நாள் நெருங்க நெருங்க.
மறுநாள் கல்யாணம் என்ற நிலையில் முதல் நாள் இரவே மைதிலியும் சோமசுந்தரமும் வந்து இறங்கி இருந்தனர் கிருஷ்ணகிரியில். மேக விருஷ்டியோ மறுநாள் காலை கடைசி நாள் நிகழ்ச்சியை முடித்த பின்பே வருவேன் என கூறிவிட்டாள்.
கூறினால் என்பதை விட மைதிலியிடம் கெஞ்சினால் என்றே கூறலாம்.
தனியாக அவள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தவர் பின் அவளின் கெஞ்சுதலில் மனம் உருக… எனினும் ஊர் எல்லையை தாண்டு முன் தங்களின் பாதுகாப்போடு ஊருக்குள் அவள் வரவேண்டும் என கண்டிப்புடன் கூறியிருந்தார். அதுவே நிவர்த்தனனுக்கும்.
சொந்த ஊர் செழிமையும் சொந்த ஊர் காற்றும் பட்டவுடன் சோமசுந்தரத்தின் உயிர் நாடி அனைத்தும் சிலிர்த்தடங்கியது. மைதிலிக்கும் சொந்த ஊரை கண்டவுடன் பரவசம் ஏற்பட்டாலும் மனதுக்குள் பதட்டம் பெருமளவிற்கு குடி கொண்டிருந்தது.
இருவரும் வீட்டு வாசலில் இறங்க அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார் பழனி. சோமசுந்தரத்தின் வாலிய சிநேகிதன்.
“வாடா சோமு… வாமா… நல்லா இருக்கீங்களா. கல்யாணம்னு சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க பிள்ளைங்களை யாரும் காணும்” என்றவர் கேள்விக்கு,
“பொண்ணு நாளைக்கு காலைல வேலைய முடிச்சிட்டு வருவாடா. பையன் கல்யாணத்துக்கு கரெக்ட்டா வந்துருவான். ரெண்டு பேருக்கும் கொஞ்சம் வேலை, முடிச்சுட்டு வந்துருவாங்க கல்யாணம் ஏற்பாடு ஆல்ரெடி எல்லாம் முடிஞ்சிடுச்சி தான ” என்று கூறிக்கொண்டே தன் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார் சோமசுந்தரம் வருடங்கள் கழித்து.
தன் வீட்டை சுற்றிப் பார்த்தவருக்கு மனம் எங்கும் தன் சகோதரியின் நினைவே மையம் கொண்டிருந்தது.
தாயாய் தன்னை கண்டித்து ஓடி ஆடி தூக்கி வளர்த்த வீடு அல்லவா!
“இத்தனை வருஷம் ஆச்சு ண்ணா. ஆனாலும் வீடு இப்பவும் நல்லா மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்கீங்க” என பிரம்மிப்போடு அனைத்தையும் சுற்றி பார்த்தவராய் மைதிலி.
“இல்ல தங்கச்சிமா கடந்த 10 வருஷமா என்னால இத மெயின்டெய்ன் பண்ண முடியல. கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிருச்சு, ஆனாலும் இதை ஃபுல்லா மெயின்டெயின் பண்ணது உன் மருமகன் இன்னுழவன் தான்.
என்னைக்கா இருந்தாலும் என் மாமாவும் அத்தையும் இந்த ஊருக்கு வருவாங்கனு இந்த வீட்டு பூட்டிக்கிடக்க விடாம சுத்தபத்தமா பாத்துக்க வெச்சது உன் மருமகன் தான். நாள் தவறாம விளக்கு போட்றதுல இருந்து எல்லாம் இந்த வீட்டுல நடக்கும். நீங்க மட்டும் தான் இல்ல” என்றார் கவலையுடன்.
அதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் சோமசுந்தரம் உள்ள நெகிழ்ந்தது என்றால் ஆச்சரியத்துடன் பார்த்தார் மைதிலி.
அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த பழனியோ, “நீ எதுக்கு அப்படி பாக்குறேன்னு எனக்கு புரியுதுமா. அன்றைக்கு நீங்க பார்த்து சந்திச்ச ஊர் கிடையாது மா இப்ப இருக்கிற ஊரும் இந்த ஊர் மக்களும்” என்றவர் மேலும் சோமசுந்தரம் புறம் திரும்பினார்.
“எல்லோருக்குமே பரஸ்பரமா சாதி, மத, பேதம், இல்லா உணர்வுகளையும் உரிமைகளையும் ஏகத்துக்கு விதைச்சிருக்கான் டா உன் மருமகன் இன்னுழவன்” என இன்னுழவனை சில்லாகித்தார் பழனி.
“ரொம்ப சந்தோஷம் அண்ணா, இனி வரக்கூடிய ஜெனரேஷனாவது இந்த ஊர்ல எங்களை மாதிரி கஷ்டப்பட வேண்டாமே. அதுக்கு அந்த குடும்பத்திலிருந்து ஒரு தீர்வு கிடைக்குதுன்னா ரொம்ப சந்தோஷம்” என பெரும் மூச்சு விட்டு அறைக்குள் அடைந்து கொண்டார் மைதிலி.
வழமைப் போல் மறுநாள் காலை வேளைப் பொழுதில் தனது ஓட்டப் பயிற்சி முடித்து செவிவழி வாயிலாக அழைத்திருந்தான் மேக விருஷ்டியினை இன்னுழவன் காற்றலையில்.
“அழகான அருமையான காதல் வணக்கம் ஏஞ்சல்” இன்னுழவன் ஆரம்பிக்க…
மேக விருஷ்டிக்கோ இந்தபுறம் கடைசியாக தான் கேட்கும் அவன் குரல் என தூக்கம் தொண்டையை அடைத்தாலும், எச்சிலை விழுங்கி கடினப்பட்டு தன் வழமை குரல் வளத்தை மீட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் பேச ஆரம்பித்தாள்.
“ஹலோ… இன்னுழவன் சார். ஹாப்பி மார்னிங்” என்றவளின் குரலில் ஜீவன் இல்லாது அவளின் முதற்கண் வணக்கத்தை வைத்தாள் அவன் பாரா இதழ் கசிந்த புன்னகையோடு.
அவளின் மனமோ அதுவே நீ அவனுக்கு வைக்கும் கடைசி வணக்கம் என உள்ளுக்குள் சஞ்சரித்தது ஆயிரம் முறை.
புருவம் வளைய “ரெயினி ஏஞ்சல் நீ ஓகே தானே. வழக்கமா உங்க குரலில்ல இருக்கிற ஸ்ருதி இல்லையே இன்னைக்கி. உங்க குரல் ரொம்ப தளர்ந்து நீங்க சோர்வா தெரியுது?” என அவளின் குரல் வளத்திலேயே யூகித்து விட்டான் அவள் சரியில்லை என்பதை இன்னுழவன்.
“இல்ல… இல்ல… இன்னுழவன் சார் நான் நல்லா தான் இருக்கேன்” வேகமாக மறுத்துவள், அவனுடன் அதிகமாக பேச முடியாது வார்த்தைகள் திக்குமுக்காட…
“உங்களுக்கு உங்களுக்கு… இன்னைக்கு என்ன பாட்டு வேணும்?” என்றாள் அடுத்த கணம்.
எப்பொழுதும் ஐந்து நிமிடமாவது சிரித்துப் பேசி இறுதியில் பாட்டை கேட்பவள் இன்று எடுத்த இரண்டாம் வார்த்தையிலேயே பாட்டை கேட்டு தன்னுடன் ஆன பேச்சை முறிக்கும் அவளின் மனநிலையை எண்ணியவனுக்கு ஏதேதோ எண்ணங்கள்.
எண்ணங்களின் ஓட்டங்களோடு அவளுக்காக அவன் கேட்கவிருக்கும் பாடலையும் பாடவும் ஆரம்பித்திருந்தான் இன்னுழவன்.
“கடல் கொண்ட
நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன்
ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே…
மழைக்காற்று
வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து
இசை பாடுமா
மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி…”
பாடலின் வரிகளை கேட்ட நொடி விழிகளில் விழுக்கென்று விழிநீர் புரண்டோட…
எச்சிலை கூட்டி விழுங்கியவள், “நீங்க கேட்ட பாடல் இதோ உங்களுக்காக” என கடைசியாக ஒரு முறை இன்னுழவன் என அவனின் நாமத்தை அழுத்தமாக கூறியவள் “குட் பாய் அண்ட், ஐ மிஸ் யூ லாட் இன்னுழவன். நீங்க இன்று போல் எல்லா நாளும் சந்தோசமாவும் நலமுடன் இருக்கணும்” என வாழ்த்தி மறுகணம் அழைப்பை துண்டித்திருந்தாள்.
எப்பொழுதும் இன்னுழவன் சார் என அழைக்கும் அவளின் இன்றைய இன்னுழவன் என்ற உரிமை அழைப்பில் மனம் நெகிழந்தாலும் அவள் கடைசியாக கூறி வைத்த வார்த்தைகளின் அர்த்தத்தை நிதானித்தவனுக்கோ இதயமானது துடிக்க தொடங்கியிருந்தது அதிவேகத்தில்.
மறுபுறம் மேக விருஷ்டியோ வார்த்தைகள் வெளிவராது அவன் கூறிய பாடல் வரிகள் செவிவழியோடு உறவாடி செல்ல மௌனமாய் கரைந்தாள் மேனி குலுங்க ரேடியோ அறைக்குள் அவனுடனான நினைவுகளை புதைத்து மனதிற்கு கடிவாளயிட்டவளாய்.