அருவி போல் அன்பை பொழிவானே : 01

4.5
(18)

அருவி : 01

பெரிய பெரிய விஐபிகள் வசிக்கும் அந்த தெருவில் உயர்ந்து நின்றது இல்லத்தரசியின் பெயரில் இருக்கும் மாளிகை போன்ற யமுனா இல்லம். வீட்டிற்கு வெளியே இருந்து பார்த்தாலே அதன் பணத்தின் செழுமையை அறிந்து கொள்ள முடியும். வீட்டிற்கு முன்னால் உள்ள வாசனை மிக்க பூக்கள் நிறைந்த தோட்டம், தெருவில் செல்வோரையும் ஒரு நிமிடம் நிற்க வைக்கும். 

வீட்டின் உள்ளே உள்ள பூஜை அறையில் பூஜை செய்து கொண்டு இருந்தார் யமுனா. முகத்திற்கு மஞ்சள் பூசி குளித்து, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் நிறைந்து முகத்தில் சாந்தம் ததும்ப இரண்டு கரங்களையும் ஏந்தி இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தார் யமுனா. கண்களில் இருந்து வந்த இரு துளி நீர் அவர் ஏந்திய கைகளில் விழுந்தது. கண்களை துடைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சை விட்டு, பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார். 

சமையலறைக்குச் சென்று மூன்று கோப்பைகளில் அவரவர்க்கு ஏற்ற வகையில் டீ போட்டு எடுத்துக் கொண்டு மாடியின் கீழே இருந்த அறைக்குச் சென்றார். அங்கே, ரெடியாகி விட்டு தனது மூக்குக் கண்ணாடியை துடைத்து கண்களில் மாட்டியவாறு நின்றிருந்தார் ஜனார்த்தனன். தனது கணவனைப் பார்த்து சிரித்த யமுனா, டீ கோப்பையை அவரிடம் நீட்ட, அவருக்கு பதில் புன்னகையை பரிசளித்து விட்டு டீயை வாங்கினார். 

தனது கணவர் முகத்தில் இருந்த சிரிப்பு அவருக்கு தெம்பினை அளிக்க, தான் பேச வந்ததை பேசுவதற்கு உரிய நேரமாக இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். அவரைப் பார்த்து, நான் “என்னங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….” 

டீயை குடித்து விட்டு யமுனாவின் கைகளில் கோப்பையை கொடுத்து விட்டு, “என்னனு சீக்கிரமா சொல்லு யமுனா ஹாஸ்பிடல் போக டைமாகுது……” என்றார். 

இதைக் கேட்ட உடனே யமுனா “அதுவந்துங்க நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்ங்க.. அவனுக்கும் வயசாகிட்டே போகுது….” என்றார். இதைக் கேட்டதும் ஜனார்த்தனன் சத்தம் போடுவார் என்று நினைக்க, ஜனார்த்தனனோ “நானே இதைப் பற்றி பேசணும்னு நெனச்சேன்…. வேலையில மறந்திட்டேன் யமுனா. என்னோட பிரண்ட் வசீகரன் இருக்கிறான்ல அவனோட பொண்ணு ஐஸ்வர்யா.. அவளும் டாக்டர் தான்… வசீகரனோட ஹாஸ்பிடல்ல பார்த்துக்கிறா… அவளை நம்ம பையன் ரகுவுக்கு(ரகுவரன்) பேசலாம்னு நினைக்கிறன்…. நம்ம பையனும் ஐஸ்வர்யா போல டாக்டர்…. நம்மளோட ஹாஸ்பிடலையும் என்கூட சேர்ந்து அவன்தான் பார்த்துக்கிறான்…. அதனாலதான் நான் இந்த முடிவை எடுத்தேன்….” என்றார். 

இதைக் கேட்ட யமுனாவிற்கு இடி விழுந்தது போல இருந்தது. மெல்ல தன்னை சரிபடுத்திக் கொண்டு,”ஏங்க நான் பேச வந்தது ரகுவோட கல்யாணத்தை பற்றி இல்லை. நம்ம பெரிய பையன் யுவா (யுவராஜ்) பற்றி…..” எனச் சொல்லும் போதே, 

“நிறுத்து யமுனா, உனக்கு என்னைப் பற்றி தெரியும்ல.. அவனை பற்றி எங்கிட்ட பேசினா எனக்கு பிடிக்காதுனு… பிறகு எதுக்கு அவனை பற்றி பேசுற…? என்ன பொருத்த வரைக்கும் எனக்கு ஒரு பையன் தான் அது ரகுவரன் மட்டும் தான்….” என்றார். 

ஜனார்த்தனன் சொன்னதை கேட்ட யமுனாவிற்கு கண்கள் கலங்கின. “என்னங்க ஏன் இப்பிடி பேசுறீங்க….? இன்னும் எத்தனை நாளுங்க அவனை இப்படி வெறுத்திட்டு இருக்கப் போறீங்க….?” என்று கேட்ட யமுனாவின் கைகளை பிடித்து தன் பக்கம் திருப்பியவர், 

“நான் செத்தாலும் அவன் மேல இருக்கிற கோபம் போகாது. அவனையும் என்னைப் போல டாக்டராக்கணும்னு நெனச்சேன்…. ஆனால் அவன் என்னால டாக்டராக முடியாது போலிஸாகணும்னு சொன்னான்…. சரி நம்ம ஆசைப்பட்ட மாதிரி டாக்டராகல… கல்யாணமாவது பண்ணிப்பான்னு நினைச்சா.. அவன் பண்ண வேலையில என்னோட மரியாதையே போயிட்டு.. எப்போ என்னை அவமானப்படுத்தினானோ அப்பவே என்னை பொருத்த வரைக்கும் அவன் செத்திட்டான்…. 

இதுக்கு மேல அவனை பற்றி பேசி என்னை டென்சன் பண்ணாத, நான் ஈவ்னிங் வசீகரன்கிட்ட ரகுவைப் பற்றி பேசிட்டு வர்றன்…..” என்றவர் அங்கிருந்து சென்றார். 

“கடவுளே….! என் பையனுக்கு ஒரு வாழ்க்கை அமையாதா.. அவனோட வாழ்க்கை சந்தோசமா இருக்காதா…?” என்று அவசரமாக கடவுளிடம் வேண்டுகோள் வைத்தவர். தனது இரண்டாவது மகனான ரகுவரனை எழுப்புவதற்காக சென்றார். 

………………………………………………… 

அலறல் சத்தம் அவ் அறை எங்கும் எதிரொலித்தது. ஆனால் அந்த சத்தம் எல்லாம் என்னை எதுவும் செய்யாது என்பது போல அங்கிருந்த கதிரையில் தெனாவட்டாக காலுக்கு மேல் கால் போட்டவாறு, வலது கை அவனது மீசையை முறுக்க, இடது கையில் லத்தியை ஸ்டைலாக சுழற்றியவாறு, கோபத்தில் சிவந்த கண்களுடன் உட்கார்ந்திருந்தான் யுவராஜ்.. ஏசிபி யுவராஜ். 

அவன் முன்னால் இருந்த கதிரையில் கயிற்றினால் கட்டப்பட்டவாறு இருந்தான் ஒருவன். அவனது மேலே இருந்த காயங்களும், இரத்தத்தின் தடங்களும் அவன் யுவராஜால் நன்றாக கவனிக்கப்பட்டிருப்பதை கூறியது. 

மீண்டும் தனது லத்தியை எடுத்து சுற்றியபடி, அவன் அருகில் வந்தான். அவனைப் பார்த்து சிரித்து விட்டு, தனது லத்தியை அவனை நோக்கி உயர்த்த, “நான் சொல்லிடுறன்.. என்னை விட்டுடுங்க….” என்று பேச முடியாமல் பேசினான். 

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தனது கதிரையில் மீண்டும் அமர்ந்தான் யுவராஜ். “சொல்லு…” என்று அவன் சொன்னதும் அடிவாங்கியவன், 

“சார் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்.. குணாணு ஒருத்தன் இருக்கிறான்…. அவனுக்கு கீழே நாங்க பத்து பேரு வேலை செய்றம்… அவன் சொல்ற நேரத்தில, சொல்ற இடத்துக்கு நாங்க போகணும்.. அப்புறம் அவன் எங்ககிட்ட நாங்க என்ன பண்ணணும்னு சொல்லுவான். அதை நாங்க முடிச்சி குடுத்திட்டு வந்திடுவம்…”

“அவன் என்ன மாதிரியான வேலை சொல்லுவான்…..?” 

“சார் சில நேரங்களில் பெட்டியை கொடுத்து அதை வேற ஒரு இடத்தில கொடுக்க சொல்லுவாரு… சில.. சில நேரங்களில்… “

” ம்.. சொல்லு… ” என்று சத்தமிட்டான் யுவராஜ். 

அவனது சத்தத்தில் பயந்தவன் முகத்தில் வியர்வைக் கோடுகள் படிந்தன..”சார்.. பொண்ணுங்களை.. பொண்ணுங்களை கடத்திட்டு போய் அவன்கிட்ட விட்டுட்டு வந்திடுவம்…” என்று சொன்னதும் தான் தாமதம், அவனது வாயிலிருந்து பொல பொலவென ரத்தம் வடிந்தது.. ஆம், அவன் பெண்களை கடத்துவோம் என்று சொன்னதைக் கேட்டதும் யுவராஜ் அவனது வாயை உடைத்திருந்தான். 

அடிவாங்கியவனோ அவனது அடியை தாங்கிக் கொள்ள முடியாமல் மயங்கி விட்டான். மயங்கியவனை மீண்டும் அடிக்கப் பாய்ந்தவனை பிடித்து நிறுத்தினான் யுவராஜின் நண்பன் அமுதன். 

அவனிடம் இருந்து திமிறிக் கொண்டு தனது காலால் அவனை எட்டி உதைத்தான் யுவராஜ். யுவராஜை இழுத்து அந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தான் அமுதன். 

“யுவா.. இது கோபப்படுவதுக்கான நேரம் இல்லை… இதோட ஆணிவேரை கண்டுபிடிச்சி அதை அடியோட அழிக்கிற வேலையை பாரு..” அமுதன் சொன்னதை கேட்ட யுவராஜ் தனது கோபத்தை கண்களை மூடி, ஒரு கையால் தனது தலையை கோதி கட்டுப்படுத்தினான். பின் அமுதனிடம், “அமுதா இவனுங்க பொண்ணுங்களை எதுக்காக கடத்துறானுங்க….? சமீபத்தில கூட ஒரு பொண்ணோட பாடியை சிட்டிக்கு ஒதுக்குப் புறமான இடத்தில இருந்து எடுத்தோம்….. ஆனால் அந்த போஸ்மாட்டம் ரிப்போர்ட்ல அந்த பொண்ணு கற்பழிக்கப்படல.. எந்த பாதிப்பும் இல்லைனு சொன்னாங்க.. அப்பிடி இருக்கும் போது எதுக்காக பொண்ணுங்களை கடத்தணும்….?”

யுவராஜ் சொன்னதை யோசிச்ச அமுதன்,”யுவா ரிப்போர்ட்ல தப்பு நடக்க வாய்ப்பில்லை.. ஏன்னா உங்களோட ஹாஸ்பிடல்ல தான் பாடியை போஸ்மாட்டம் செய்தது..”

“நிறுத்து அமுதா.. அது என்னோட ஹாஸ்பிடல் இல்லை.. ஏன் அந்த ஹாஸ்பிட்டல்ல தர்ற ரிப்போர்ட்ல பிழை இருக்காதுனு உறுதியா சொல்ல முடியாது.. இந்த கேஸ் நமக்கு பெரிய சவாலான கேஸாக இருக்கும்னு நினைக்கிறேன்….”

“எவ்வளவு சவாலாக இருந்தாலும் நீ கூலாக முடிச்சிடுவனு எனக்கு தெரியும். நீ நைட் புல்லா டியூட்டில இருந்திருக்க, போய் ரெஸ்ட் எடு….” என்றான் அமுதன். 

நண்பன் தன்மீது கொண்டுள்ள அக்கறையை உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டாது,”இல்லை எனக்கு பிரச்சனை இல்லை. நான் குவாட்டஸ் போயிட்டு பிரஸ்ஸாகிட்டு வர்றன்….” என்றவன் தனது வேக எட்டுக்களால் நடந்து ஜீப்பில் நெருங்கினான். ஜீப் டிரைவர் ஓடி வந்து ஜீப்பை ஸ்டார்ட் பண்ணினார். அவன் ஏறியதும் மிக வேகமாக சென்றது ஜீப்.. வேகமாக செல்லும் ஜீப்பை பார்த்துக் கொண்டு நின்ற அமுதனின் போன் சத்தம் போட்டது. அதை எடுத்துப் பார்த்த அமுதனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. 

“சொல்லு மீனுக் குட்டி….” என்றான். அதற்கு அந்த பக்கம் இருந்து வசை பாட ஆரம்பித்தாள் அமுதனின் காதல் மனைவி மீனாட்சி. 

“என்ன மாமா.. காலையிலேயே சாப்பிடாமல் போயிட்டீங்க. நேரத்திற்கு சாப்பிடலனா உடம்பு என்னத்துக்காகும்…?” என பொரிந்து கொண்டு இருந்தவளை நிறுத்தி, “போதும் மீனு, நான் வீட்டுக்குத்தான் வந்திட்டு இருக்கிறன்.. பத்து நிமிடத்தில வந்திடுவன்….” என்றான். 

அதற்கு அவள் சமாதானமாகவில்லை. “நீங்க ஏன் சாப்பிடாமல் போனீங்க…?” என்று அதையே கேட்க, அவளை சமாதானம் செய்வதற்காக போனில் இச் சென்று ஒரு முத்தம் வைக்க, அந்தப் பக்கம் சத்தமே இல்லை. தன்னவளின் சத்தம் இல்லை என்பதை உணர்ந்தும் சிரிப்பு வந்தது அமுதனுக்கு, “என்னடி சத்தத்தையே காணலை….” என்றவனுக்கு, 

“போங்க மாமா, நீங்க ரொம்ப மோசம்…. சீக்கிரம் வாங்க….” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள். மீனாட்சியை நினைத்து சிரித்த அமுதன் வீட்டிற்கு செல்ல தனது காரை எடுத்தான். 

………………………………………………… 

பாய்ந்து செல்லும் அருவியின் ஓரமாக ஓங்கி வளர்ந்து, பல பறவைகளின் புகலிடமாகவும், நிழல் தேடி வருபவர்களுக்கு நிழல் தரும் விருட்சமாகவும் வளர்ந்து நின்றது பல கிளைகளுடன் கூடிய ஆலமரம். அந்த ஆலமரத்தின் கீழே பல சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். 

அந்த ஆலமரத்தின் மறுபுறம் விக்கினங்களை தீர்க்கும் விநாயகரின் சிலை ஒன்று இருந்தது. அதற்கு மூன்று வேளையும் பூஜை நடக்கும். பிள்ளையாரும் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை வழங்கிக் கொண்டிருந்தார். 

அங்கே கால்களின் கொலுசு ஓசை எழுப்ப, கையின் வளையல்களும் கொலுசுக்கு ஈடாக சத்தமிட தாவணி பாவாடையில் இரட்டை ஜடையுடன் ஓடி வந்து பிள்ளையார் முன்னால் ஓடிவந்ததால் மூச்சிறைக்க நின்றாள் அவள். அவள் கார்த்தியாயினி. 

விக்கினங்களை தீர்க்கும் விக்னேஷ்வரனைப் பார்த்தும் அவளை அறியாமல் அவளது கயல்விழிக் கண்களில் பொல பொலவென கண்ணீர் பெருகியது. முகம் களையிழந்து வாடிப்போய் இருந்தது. பிள்ளையாரை சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தாள். பின்னர், “ஏன் பிள்ளையாரப்பா என்னை மட்டும் இப்பிடி சோதிக்கிற….? உனக்கே தெரியும் அந்த வீட்ல அத்தை என்னை எவ்வளவு கொடுமை படுத்துறாங்கனு… அத்தையோட மகன் அந்த செந்தில்.. அவன் என்னை பார்க்கிற நேரம் எல்லாம் உடம்பு கூசுது… பொண்ணா பொறந்ததே பாவம்னு தோணுது… உனக்கு தெரியும்ல பிள்ளையாரப்பா எனக்கு டாக்டராகணும்னு என்றது எவ்வளவு பெரிய ஆசைனு.. அதனால தானே நல்லா படிச்சேன் இப்போ பள்ளிக்கூடத்தில் முதல் பிள்ளையா வந்திருக்கிறன்…..

என்னோட அம்மா வைத்தியம் பார்க்க முடியாம செத்த மாதிரி யாரும் சாகக் கூடாதுனு நினைக்கிறன். அது தப்பா பிள்ளையாரப்பா…? ஆனால் இவங்க, என்னை படிச்சது போதும்னு சொல்றாங்க… அதுகூட பரவாயில்லை… ஆனால் அந்த பொம்பளை பொறுக்கி செந்திலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்றாங்க.. பிள்ளையாரப்பா அவன்கூட என்னோட கல்யாணம் நடந்திச்சி நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. பிளீஸ் பிள்ளையாரப்பா என்னை எப்பிடியாவது காப்பாத்து.. என்னோட டாக்டராகணும்ற ஆசையை நிறைவேற்றி வைச்சிடு பிள்ளையாரப்பா…..” என தனது வேண்டுதலை வைத்துவிட்டு எழுந்தவள், திரும்ப வீட்டிற்கு செல்லப் பிடிக்காமல் அந்த தெருவில் நடந்து கொண்டு இருந்தாள். 

அன்பு பொழியும்….

 

மறக்காமல் உங்களோட ரேட்டிங்கையும் கருத்துக்களையும் கொடுத்துட்டுப் போங்க பட்டூஸ்.. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!