அருவி போல் அன்பை பொழிவானே : 02

5
(8)

அருவி : 02

தெருவில் அங்கேயும் இங்கேயும் பார்த்தவாறு நடந்து கொண்டு இருந்த கார்த்தியாயினியின் அருகே வந்து தனது வண்டியை நிறுத்தினார் அவளது பள்ளிக்கூடத்தின் அதிபர் சதாசிவம். அவரை பார்த்ததும், “வணக்கம் ஐயா…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவர், “அம்மாடி கார்த்தியாயினி உன்னை பார்க்க உன்னோட வீட்டுக்கு இப்போதான் போயிட்டு வர்றன்… அவங்க என்னென்னவோ சொல்றாங்க என்னம்மா இது…?”என அவர் மிகவும் பரிவாக கேட்டார். 

அவர் அப்படிக் கேட்டதும் தடைபட்டு நின்ற அவளது கண்ணீர் மீண்டும் அணை தாண்டியது. அவரை நிமிர்ந்து பார்க்காது நின்றவளைப் பார்த்தவருக்கு அவளது நிலைமை நன்கு புரிந்தது. “கார்த்தியாயினி எனக்கு நல்லாத் தெரியும்… உனக்கு டாக்டராகணும்னு ஆசை… நீ எடுத்த மார்க்ஸ்க்கு கண்டிப்பா டாக்டர் சீட் உனக்கு கிடைக்கும்… ஆனால் உன்னைப் படிக்க வைக்க அவங்க விரும்பலையே… 

நல்லா படிக்கிற உன்னை இப்பிடி ஊதாரித்தனமா சுத்தித்து திரியிற அந்த செந்திலுக்கு போய் உன்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறதை என்னால தாங்கிக்க முடியல்லை…. அவங்களை எதிர்த்து நிற்க இங்க யாராலையும் முடியாதுமா… அந்த கடவுள் விட்ட வழிமா… எனக்கும் உனக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு ஆசைதான்.. ஆனால் உன்னோட அத்தை என்னை கொன்று வாங்க கார்த்தியாயினி… உன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்…” என்று ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றார். 

தனது கண்ணீரைத் துடைத்து விட்டு, தங்கக் கூட்டிற்குள் செல்ல விருப்பம் இல்லா விட்டாலும் செல்ல வேண்டுமே என பெருமூச்சு விட்டு விட்டு சென்றாள். அவள் வீட்டிற்குள் செல்லும் போது, வெளியே செல்ல வந்த செந்தில் அவளை லேசாக இடித்து விட்டு சென்றான். 

அவன் இடித்த வலது பக்கத் தோளினை தனது கைகளால் தேய்த்து விட்டவள், வேகமாக அவளது சிறிய அறைக்குள் செல்ல முயன்றாள். அப்போது அவளைத் தடுத்தது அத்தை அங்கயற்கண்ணியின் குரல். பார்க்க சொர்ணா அக்கா போல இருப்பார். அந்த ஊரில் அவருக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாது. அதை மீறி ஏதாவது செய்ய முயன்றால் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து ஏனையவர்கள் அவருக்கு எதிராக செயல்படவே பயப்படுவார்கள். 

அங்கயற்கண்ணியின் கணவன் மனைவி சொல்லைத் தட்டாதவர். பெயர் சுந்தரம். இவரின் தங்கையின் மகளே கார்த்தியாயினி. சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவளை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். 

அங்கயற்கண்ணியின் குரல் கேட்டு பயந்துடனே அவர் அருகில் வந்தாள் கார்த்தியாயினி. “எங்கடி போயிட்டு வர்ற…..?” என்றார். 

“ஆலமரத்தடி பிள்ளையார் கோயிலுக்கு போனேன் அத்தை….” என்றாள் தனது நடுங்கும் குரலில்.. 

அவளை பார்த்தவர் எதுவும் பேசாது, “அடுத்த வாரம் நல்ல நாள் இல்லை… அதனால நாளைக்கு உனக்கும் செந்திலுக்கும் கல்யாணம்.” என்று ஏதோ செய்தியை சொல்வது போல சொன்னார். அதற்கு ஒன்றும் சொல்லாமல் நின்றாள். அவள் எது சொன்னாலும் அதை அங்கயற்கண்ணியின் செவிகளில் விழாது என்பதை இத்தனை வருடங்களில் நன்கு அறிந்து வைத்திருந்தாள். கொஞ்ச நேரத்தின் பின் அவளை அறைக்குள் போக சொல்லிவிட்டு கல்யாணத்திற்கான வேலையை ஆரம்பிக்க சென்றார். 

…………………………………………………

ரகுவரனின் கார் அந்த சிட்டியில் உயர்ந்து நிற்கும் யமுனா ஹாஸ்பிட்டலின் முன்னால் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தவன் நேராக தனது தந்தை ஜனார்த்தனன் அறைக்குள் நுழைந்தான். 

மகனை பார்த்து, “குட் மார்னிங் மை டியர் சன்…. ” என்றார். 

ரகுவரனும் தந்தைக்கு “குட் மார்னிங்” சொல்லிவிட்டு அன்று நடக்க வேண்டிய ஆபரேஷன் பற்றி பேசிக் கொண்டு இருந்தான். அவரும் அவரது ஆலோசனைகளை அவனுக்கு கூறினார். 

சிறிது நேரத்தின் பின்னர் தந்தையிடம் சொல்லி விட்டு தனது அறைக்கு வந்தவன் நர்ஸை அழைத்து அன்று ஆபரேஷன் பண்ண வேண்டிய நோயாளியின் ரிப்போர்ட்டை ஒருதடவை நன்கு பார்த்து விட்டு ஆபரேஷனுக்கு தேவையானதை தயார் பண்ணுமாறு கூறினான். 

தனது நண்பனுக்கு கால் பண்ணிய ரகு அன்றைக்கு அவன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி கூறினான். மறுபுறம் இருந்த அவனது நண்பனோ ரகுவரன் சொல்வதை எல்லாம் நன்றாக கேட்டு விட்டு, வேலையை முடித்து விட்டு கால் பண்ணுவதாகக் கூறி போனை வைத்தான்.

………………………………………………

இங்கே குவாட்டஸ்கு வந்த யுவராஜ்க்கு கோபம் தணியவே இல்லை. அவனை கொன்றுபோட்டால் என்ன என்ற எண்ணமே அவனுக்கு ஓடிக் கொண்டிருந்தது. தனது கோபத்தை குறைப்பதற்காக பாத்ரூம் சென்று குளிர்ந்த நீரில் நின்றான். நீண்ட நேரம் தனது கோபம் குறையும் வரை குளித்தவன், அதன் பின்னரே வெளியே வந்தான். காக்கிச் சட்டை அணிந்து கண்ணாடியில் முகம் பார்த்தவன் தனது முறுக்கு மீசையை முறுக்கிக் கொண்டான். 

தனது கையில் போட்டிருந்த காப்பினை மறு கையால் உயர்த்தியவாறு வெளியே வந்தவன் கண்களில் பட்டது மேசை மீதிருந்த பத்திரிகை. அதை எடுத்துப் பார்த்தான். விமலாம்பிகை பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு பெரிய விழா ஒன்று கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு யுவராஜை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். நடந்த பிரச்சனையில் அதை மறந்து விட்டான் யுவராஜ். இப்போது பத்திரிகையைப் பார்க்கவும் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.  

வரும் போது கடையில் வாங்கி வந்த உணவை எடுத்து உண்டவாறே அமுதனுக்கு போன் பண்ணினான். அங்கே மீனாட்சியை ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தி விட்டு, சாப்பிட்டுக் கொண்டு இருந்த அமுதன் போன் சத்தமிட, அவனை சாப்பிடக் கூறிவிட்டு, போனை எடுத்தாள் மீனாட்சி. 

யுவராஜ் அழைப்பை பார்த்தவள் சிரிப்போடு, “அண்ணா நல்லா இருக்கிறீங்களா…… ?” என்றாள். 

மறுபக்கம் இருந்த யுவராஜ், “ஹலோ மீனாட்சியா.. நான் நல்லா இருக்கிறன் மா.. நீ நல்லா இருக்கிறியாமா….?” என்றான். 

“ஆமா அண்ணா, நான் நல்லா இருக்கிறன்.. என்ன அண்ணா ஏதாச்சும் முக்கியமான விஷயமா…? மாமா சாப்பிட்டுட்டு இருக்கிறாங்க… அதுதான் நான் போனை எடுத்தேன்….” என்றாள். 

அதைக் கேட்டவன், “இல்லை மீனாட்சி…. அவசரம் இல்லைமா… நான் விமலாம்பிகை காலேஜ் ஃபங்ஷனுக்கு போறேன்… அவனை ஆபீஸ்க்கு போக சொல்லுமா.. நான் ஃபங்ஷனை முடிச்சிட்டு அப்பிடியே வந்திடுறன்னு சொல்லுமா….”

“சரி அண்ணா.. சொல்லிடுறன்… அண்ணா இந்த தங்கச்சியைப் பார்க்க வந்து ரொம்ப நாளாச்சு…” என்றவளிடம் கண்டிப்பாக அவளைப் பார்க்க வருவதாக கூறியதும் சரி என்று போனை வைத்து விட்டுச் சென்று அமுதனிடம் யுவராஜ் சொன்னதைச் சொன்னாள். 

இங்கே யுவராஜ் தனது ஜீப்பில் விமலாம்பிகை காலேஜ்க்கு வந்தான். அவனை கல்லூரி முதல்வர் பூச்செண்டு கொடுத்து வரவேற்று விழா மண்டபத்திற்கு அழைத்து வந்தார். விழா சிறப்பாக ஆரம்பமானது.. கண்களைக் கவரும் கலை நிகழ்வுகளை தொடர்ந்து கல்லூரி முதல்வர் உரை இடம்பெற்றது. அவரது உரை முடிந்ததும் யுவராஜை மாணவர்கள் முன்னிலையில் பேச அழைத்தனர். அதனை மறுக்க முடியாது என்பதால் யுவராஜ் பேச சென்றான். 

யுவராஜ் மேடை ஏறியதும் கைதட்டல்கள் அவ் மண்டபத்தையே அலற வைத்தது. பின்னர் கைதட்டல் வராமல் இருக்க முடியுமா? அவன் ஏசிபியாக பொறுப்பேற்றதன் பின்னர் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளான். பல ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளான். இதனால் பலருக்கு ரோல்மாடலாக யுவராஜ் இருக்கிறான். 

அவர்களது கைதட்டல்களை தலையசைத்து ஏற்றவன் பேச ஆரம்பித்தான். “என்னை இங்கு அழைத்த கல்லூரி முதல்வருக்கு எனது வணக்கம்…. நாளைய சமூதாயத்தை நல்வழிப்படுத்தும் இன்றையை மாணவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்….. இங்கே அதிக பெண்கள் கல்வி கற்க வந்திருக்கிறீர்கள்…. என்னை பொருத்த வரைக்கும் பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியமானது…. ஒரு சமூதாயம் உயர வேண்டுமானால் அந்த சமூதாயப் பெண்கள் நிச்சயமாக கல்வி கற்க வேண்டும்.…

நீங்க எல்லோரும் பல இடங்களில் இருந்து இங்கே கல்வி கற்க வந்திக்கிறீங்க. உங்களுக்கு சென்னை புது இடம்… உங்களோட பாதுகாப்பை நீங்க உறுதிப்படுத்திக்கணும்… உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய எங்களோட டீம் தயாராக இருக்கு. உங்களுக்கு ஏதும் ஆபத்துனா உடனே என்னோட பெர்சனல் நம்பர் ******** இதுக்கு கால் பண்ணுங்க… உங்களுக்கு உதவி செய்ய நாங்க தயாராக இருக்கிறம்… யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது… தைதைரியமாக இருக்கணும்…” என்று மேலும் சில விடயங்களை யுவராஜ் பேசி முடித்ததும் பெண்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். யுவராஜின் நம்பரையும் தமது போனில் பதிவு செய்து கொண்டனர். 

………………………………………………

இங்கே செழும்பூரில் (கார்த்தியாயினியோட ஊர்) இருந்த கார்த்தியாயினியின் பள்ளிக்கூடத்தின் அதிபரும் யுவராஜ்ஜின் பேச்சை கேட்டு கொண்டிருந்தார். இதைக் கேட்ட அவருக்கு ஒரு யோசனை வந்தது.  

கார்த்தியாயினி நன்றாக படிக்கும் பிள்ளை என்பதாலும், அவருக்கு பிள்ளைகள் இல்லாததாலும் அவருக்கு அவள் மீது பிரியம் அதிகம். அதனால் அங்கயற்கண்ணியை மறைமுகமாக எதிர்க்கத் துணிந்தார். உடனே யுவராஜின் போனுக்கு அழைப்பு விடுத்தார். அந்தோ பாவம், அவருக்கு லைன் கிடைக்க வில்லை. 

……………..………………………………

விமலாம்பிகை பெண்கள் கல்லூரியில் இருந்து வெளியே வந்த யுவராஜ்க்கு போன் வந்தது. போனை எடுத்து பார்க்க அமுதன் அழைத்திருந்தான். உடனே எடுத்து, “என்ன அமுதா… ?” என்றான். 

அமுதனோ, “யுவா இப்போ மீனாட்சி ஹாஸ்டலுக்கு முன்னாடி ஒரு பொண்ணை கடத்தியிருக்கிறாங்க….” 

இதைக் கேட்ட யுவராஜ்க்கு கோபம் வந்தது. கண்கள் சிவக்க, ” யாரு கடத்தியிருக்கா….?” 

“சேம்தான் யுவா இதுவரைக்கும் காணாமல் போன பொண்ணுங்களை கடத்தின அதே வேன் தான்…. நம்பர் பிளேட் இல்லைடா….. ” 

“நான் உடனே ஸ்பாட்க்கு வர்றன்….” என்றவன், அமுதன் சொன்ன மீனாட்சி ஹாஸ்டலுக்கு பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான். அங்கே ஏற்கனவே விசாரணை செய்து கொண்டு இருந்த அமுதன் அருகில் வந்தான். 

“என்ன அமுதா ஏதாச்சும் நியூஸ் கிடைச்சிதா…. ?” 

“விசாரிச்ச வரைக்கும் அந்த வேன்ல இருந்தவங்க யாரையும் வெளியே இருந்தவங்க பார்க்கலைனு சொல்றாங்க….. அந்த பொண்ணை வேன்ல இருந்து ஒருத்தன் கையை பிடிச்சு உள்ளே இழுத்திருக்கிறான்….” 

“சரி….” என்றவன் அந்த இடத்தை நன்றாக சோதனையிட்டான். அப்போது அவன் கண்ணில் பட்ட ஒன்றை கீழே குனிந்து எடுத்தவன் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். பின் அமுதனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து தனது ஆபிஸ்க்கு சென்றான். 

அங்கே அவனுக்கு முன்னர் அவனது இடத்தில் கமிஷனர் அவனுக்காக காத்திருந்தார். யுவராஜ் அவரைப் பார்த்து சல்யூட் வைத்து விட்டு நிற்க, தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, அவனது தோளை தட்டிக் கொடுத்தார். 

“யுவா உன்னை ஒவ்வொரு தடவையும் இந்த காக்கிச்சட்டையில பார்க்கும் போது என் பையன் மித்ரன் தான் ஞாபகம் வர்றான்….. அவன் எங்களை விட்டு போனாலும் உன்னோட உருவத்தில அவனை நான் பார்க்கிறன்….. உன்னோட உயிர் நண்பன் மித்திரனை கொன்னது அவன் கடைசியா எடுத்த இந்த கேஸ்தான்…. இப்போ நீயும் அந்த கேஸை கையில எடுத்திருக்க, இதோட விளைவு என்னவா வேணும்னாலும் இருக்கலாம் யுவா.. அதனால இந்த கேஸை நீ நேரடியாக பார்க்காமல் மறைமுகமாக பாரு…” என்று அவர் சொன்னதும் தான் தாமதம் அருகிலிருந்த கதிரையை தூக்கி கண்ணாடிக் கதவின் மேல் வீச கண்ணாடி உடைந்தது. 

அவனது கோப முகத்தைப் பார்த்த கமிஷனரும் ஒரு நிமிடம் பயந்து விட்டார். “என்ன யாரோ பொறம்போக்கு பயப்பட சொல்றீங்களா… ? என்னோட மித்திரன் சாவுக்கு காரணமானவனை சித்திரவதை செய்து கொல்லலை…. நான் அவனோட பிரண்ட் இல்லை. அவனுக்காக மட்டும் தான் இந்த கேஸை நான் எடுத்திருக்கிறேன்…” என்றவன், அங்கிருந்த மற்றுமொரு கதிரையை காலால் தட்டி விட்டு வெளியே சென்று விட்டான். கமிஷ்னரும் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார். 

தனது குவாட்டஸ்கு வந்த யுவராஜ் நேராக சென்றது தனது கேஸ் சம்பந்தப்பட்ட தகவல்கள் அடங்கிய அறைக்குள் தான். அங்கே வெண்பலகையில் அவன் குறித்து வைத்திருந்தவற்றை பார்த்தவாறு, எதிரில் இருந்த கதிரையில் அமர்ந்தான். 

கைகளை கட்டியவாறு யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு காலையில் தான் கண்டெடுத்த மோதிரம் ஞாபகம் வந்தது. அதை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்தான். அதை முன்னரே எங்கோ பார்த்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. 

அன்பு பொழியும்…. 

உங்களோட கருத்துக்களை சொல்ல மறக்காதீங்க செல்லம்ஸ்.. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!