அருவி போல் அன்பை பொழிவானே : 06

5
(14)

அருவி : 06

வலி தாங்க முடியாமல் கதறினாள். அவளது கதறலையும் பொருட் படுத்தாமல், அறையில் இருந்து அவளது நீண்ட கூந்தலை பிடித்து மணமேடைக்கு தரதரவென்று இழுத்து வந்தாள். அங்கயற்கண்ணியின் செயலை தடுக்க யாரும் முன்வரவில்லை. முன்வரவும் முடியாதே. கார்த்தியாயினிக்காக கவலைப்பட்டனர் அந்த மண்டபத்தில் இருந்தவர்கள். கன்னத்தின் வலியோடு கூந்தலின் வலியும் இணைந்து கொண்டதும் கார்த்தியாயினி மிகுந்த வேதனை அடைந்தாள்.

இழுத்து வந்து மணமேடையில் வைத்த அங்கயற்கண்ணி ஐயரைப் பார்த்து, “ஐயரே மந்திரம் சொன்னது எல்லாம் போதும், தாலியை எடுத்து கொடுங்க, செந்தில் தாலியை இவ கழுத்தில கட்டு….” என்றாள். 

அப்போது, ” ஐயரே ஒரே ஒரு நிமிடம்… நான் இங்க இருக்கும் போது என்னை மீறி இந்த கல்யாணம் நடந்திடுமா….?” என்ற சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தனர். அங்கே கல்யாண மண்டபத்தின் வாசலில் ஸ்டைலாக நின்றிருந்தான் யுவராஜ். அவனைப் பார்த்ததும் இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டு, நிம்மதியாக பெருமூச்சு விட்டார் சந்திரமோகன். 

“யாருடா நீ…? என்ன தைரியம் இருந்தா என்னோட ஊருக்கு வந்து இப்பிடி பேசுவ…? இது அங்கயற்கண்ணியின் கோட்டை… இங்க நான் நினைக்கிறதுதான் நடக்கும்… நடக்கணும்….” என்று சத்தமிட்டார் அங்கயற்கண்ணி. 

“ஹலோ இந்த சத்தம் போடுறது எல்லாம் இவங்க கிட்ட வச்சிக்க… என்கிட்ட சத்தம் போடுற வேலை வச்சிக்கிட்ட.. உன்னையும் உன் பொறுக்கி மகனையும் சத்தமே இல்லாமல் சுட்டுட்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்….” என்றவன் மேடை அருகே வந்தான். அங்கிருந்த கார்த்தியாயினியை பார்த்தான். 

தலைமுடி எல்லாம் நன்றாக கலைந்து, கண்களில் கண்ணீருடன், கன்னங்களில் கைவிரல்களின் அச்சினால் சிவந்த தடங்களுடன், தனது கூந்தலை இறுக்கிப் பிடித்த அங்கயற்கண்ணியின் கையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, அவளிடமிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள். பள்ளிச் சீருடையில் சின்னப் பிள்ளை போல இருந்தவள், இப்போது புடவையில் பெரிய பொண்ணாக தெரிந்தாள். 

“முதல்ல அவமேல இருக்கிற கையை எடு…” என்றான் யுவராஜ். 

“எடுக்க முடியாது என்னடா பண்ணுவ….?” என்றவரை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டினான். 

அப்போதும் அங்கயற்கண்ணி பயப்படாமல், “என்னடா துப்பாக்கியை எடுத்து காட்டினா, பயந்துடுவன்னு நினைச்சியா….? நான் அங்கயற்கண்ணிடா எதுக்கும் பயப்பட மாட்டேன்…..” என்றவரை நக்கலாகப் பார்த்து தனது இதழை சுழித்த யுவராஜ் துப்பாக்கியை எடுத்து மேலே நோக்கி சுட்டான். 

அவன் சுடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதில் பயந்த அங்கயற்கண்ணி அவளை அறியாமல், கார்த்தியாயினி மீதிருந்த தனது கையை எடுத்தாள். அவளிடம் இருந்து விடுபட்ட கார்த்தியாயினி நிமிர்ந்து யுவராஜை பார்த்தாள். 

அவளைப் பார்த்த யுவராஜ், “இங்க வா கார்த்தியாயினி….” என்றான். அவ்வளவு தான் அவனின் அந்த வார்த்தை அவளுக்கு தெம்பைக் குடுத்தது போல… எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது என்று அவளுக்கு தெரியவில்லை. ஓடி வந்து அவனது கையைப் பிடித்தபடி நின்றாள். இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர். இதுவரை யாரையும் தொட்டுப் பேசாத பொண்ணு, ஆண்களைப் பார்த்தாலே பத்தடி தூரம் தள்ளி நின்று பேசுபவள், இப்போ யார்னே தெரியாத ஒருத்தனோட கையைப் பிடித்தபடி நின்றதால் வந்த அதிர்ச்சி அது.. யுவராஜும் அவள் அருகில் வந்து நிற்பாள் என நினைத்தான், ஆனால் அவள் கையை பிடித்துக் கொண்டு நிற்பாள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. 

“ஏய் அநாதை நாயே… இத்தனை நாள் உன்னை பார்த்துக்கிட்டதுக்கு இதுதான் நீ செய்ற நன்றிக்கடனா…? யாருன்னே தெரியாத ஒருத்தனோட கையை பிடிச்சிட்டு நிற்கிற….? உனக்கு வெட்கமா இல்லை… சீ வாடி இங்க… மரியாதையாக இங்க வா… இல்லை நடக்கிறதே வேற…” என்று கோபத்தில் பற்களைக் கடித்தார் அங்கயற்கண்ணி. 

“இல்லை எனக்கு இவரை தெரியும்…” என்றாள். அவளது பதிலில் இம்முறை அதிர்வது யுவராஜ்ஜின் முறையாயிற்று. 

“அப்போ முன்னமே உனக்கு இவன்கூட பழக்கம் இருக்கா சொல்லுடி எத்தனை நாளாக பழக்கம்….?” என்று அங்கயற்கண்ணி அவளை தப்பாக பேசினார். அதற்குள் அங்கிருந்த ஒருவர், 

“இந்தப் பொண்ணா இப்பிடி, இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லாத மாதிரி தெரியலையே.. நான் கூட நேற்று இரவு செந்தில் இந்த பொண்ணோட அறைக்குள் போயிட்டு வந்ததை பார்த்தேனே.. ஏம்மா இந்த வயசிலேயே நீ இப்பிடி இருக்க… உனக்கு வெட்கமா இல்லை..” என அவரும் நரம்பிலா நாக்கால் பேசினார். 

தவறே செய்யாமல் தலைகுனிந்து நின்றாள் கார்த்தியாயினி. அவர்கள் பேசுவதைக் கேட்டவளுக்கு செத்திடலாம் போல இருந்தது. பிறர் தப்பாக பேசுவதை கேட்கும் போது ஏற்படும் வலியை அனுபவித்த யுவராஜ்க்கு கோபம் வந்தது. 

“இதுக்கு மேல அவளை பற்றி ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை தப்பா பேசினாலும் அவங்க உடம்புல உயிர் இருக்காது… அதை ஞாபகம் வச்சிக்கோங்க… ” 

“ஆமா, நீ யாரு நீ பாட்டுக்கு வந்த, சத்தம் போட்டுட்டு இருக்க, இது எங்க ஊர் பிரச்சனை இதில நீ தலையிடாத… அந்த பொண்ணோட அத்தை அவ பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறா.. இதை கேட்க நீ யாரு….?” என்று அங்கயற்கண்ணியின் ஆதரவாளர் ஒருவர் கேட்க, அவரைத் தொடர்ந்து பலரும் அதற்கு ஒத்து ஊதினர். 

யுவராஜ்க்கு எங்கிருந்து அத்தனை கோபம் வந்தது என்று தெரியவில்லை. மேடையில் இருந்த தாலியை எடுத்து, தவிப்போடு நின்றிருந்த கார்த்தியாயினியின் கண்களை பார்த்தவாறு, அவளது கழுத்தில் கட்டினான். 

அங்கே நடப்பதை பார்த்த அங்கயற்கண்ணியும் செந்திலும் கோபத்தில் கத்தினர். அங்கயற்கண்ணி அவளது தாலியை கழற்ற வர, யுவராஜ்ஜின் முதுகின் பின்னால் மறைந்து கொண்டு, அவனது கையை இறுக்கிப் பிடித்தாள். 

“இவ இனிமே என்னோட பொண்டாட்டி…. இப்போ இவளை பற்றி பேச எனக்கு உரிமை இருக்கு.. எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு… இவ மேல யாராச்சும் கையை வச்சிங்க.. அப்புறம் என்னோட மறு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்… நான் என்கூட கார்த்தியாயினியை.. சாரி என்னோட பொண்டாட்டியை என்கூட கூட்டிட்டுப் போறன்… இங்க இருக்கிறவங்களால முடிஞ்சா தடுத்துப் பாருங்க…” என்றான். 

அங்கயற்கண்ணி கோபத்தில் அநாதை நாயே.. உன் அப்பனும் ஆத்தாளும் செத்த பிறகு உன்னை வளர்த்த எனக்கு நல்ல மரியாதை செஞ்சிட்ட.. நீ நல்லாவே இருக்க மாட்ட…” என்றார். 

கார்த்தியாயினியை அநாதை என்று சொன்னதை கேட்டதும் யுவராஜ்க்கு கோபம் வந்தது, “யாரைப் பார்த்து அநாதை என்று சொல்ற…? இவ என்னோட பொண்டாட்டி.. அவளோட புருஷன் ஆறடி உயரத்தில, அவ பக்கத்தில இருக்கும் போது அவ எப்பிடி அநாதையாவா….? அவளுக்கு எப்பவும் நான் இருப்பேன்….” என்றான். 

அதைக் கேட்ட கார்த்தியாயினிக்கு இதுவரை இருந்த பயம் எல்லாம் விடைபெற்று செல்ல, சில நாட்களாக உண்ணாமல் இருந்தது எல்லாம் சேர்த்து கண்களை இருட்டிக் கொண்டு வர, யுவராஜ்ஜின் கைகளில் மயங்கி விழுந்தாள். 

அவளை பூப்போல் ஏந்தியவாறு வந்து தனது காரின் பின் சீட்டில் அவளை படுக்க வைத்து விட்டு, வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்து, “இனிமேல் அவளுக்கும் இந்த ஊருக்கும் சம்மந்தம் இல்லை.. அவளை தேடி யாரும் வரவும் கூடாது” என்றவன், சந்திரமோகனைப் பார்த்து கண்களால் விடைபெற்றான். அவரும் அவனை நன்றியுடன் பார்த்து தலையசைத்தார். 

யுவராஜ் காரில் ஏறி, கார்த்தியாயினியுடன், அவ் ஊரை விட்டு சென்றான்.

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அருவி போல் அன்பை பொழிவானே : 06”

  1. சூப்பர் டா திவி குட்டி 😘😘😘😘❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🤩🤩🤩🤩🤩🤩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!