உயிர் -10
ஈஸ்வரன் புகழினிக்காக மருத்துவமனை கட்டுவது ஆதிக்குத் தெரிய வந்தது .
ஆனால் ஈஸ்வரனுக்கு இடத்தை விற்பனை செய்ய இருப்பது வேலு என்ற நபர் என அறிந்தான். தனது மடிக்கணினியில் நிலம் யாருடைய பெயரில் உள்ளதென்பதை அறிந்துக் கொண்டான்.
அதில் சங்கர பாண்டியனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு துரை என்பவர் வாங்கியிருந்தார். இன்னுமே அந்த நிலம் அவரது பெயரில் தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டான்.
ஈஸ்வரன் இவையனைத்தும் சரி பார்த்து தான் வாங்கியிருக்கின்றானா…?என்ற சந்தேகம் ஆதக்கு இருந்தது. அதை வேலுவிடமே கேட்கின்ற விதத்தில் கேட்டு உண்மையை தெரிந்து கொண்டான். ஆதியிடம் தான் தனது அண்ணன் இடத்தை விற்கப் போகின்றார் என்ற விபரம் புரியாமலே வேலு தன்னுடைய பெயரில் தான் நிலம் உள்ளது என்றும் அதை ஈஸ்வரனிடம் விற்கப் போவதாகவும் கூறினான்.
அப்பொழுதே ஆதிக்கு புரிந்தது வேலு ஏதோ தகிடுத்தித்தோம் வேலைப் பார்க்கிறான் என்று. ஏனெனில் துரை வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார் என்று முன்னதாக அவனுக்குத் தெரியும். அவர் வெள்ளிக்கிழமை காலையில் ஊருக்கு வந்து விடுவதாக கூறியிருந்தார்.
ஆதி நினைத்திருந்தால் அப்பொழுதே ஈஸ்வரனுக்கு உதவியிருக்கலாம் தான். ஆனால் அங்கு தான் அவனது புத்தி கோணலாக வேலை செய்தது.
ஈஸ்வரனுக்கும் சங்கரபாண்டியனுக்கும் உள்ள பகை ஆதி நன்றாகவே அறிவான். சங்கர பாண்டியனது மனம் எப்போது எப்படி மாறும் என்று கூறவே முடியாது. எனவே இருக்கின்ற பகையை இன்னும் பெரிது படுத்த வேண்டும். ஜென்மத்திற்கு இவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அது மட்டுமல்ல ஈஸ்வரனின் குணத்தை பற்றி நன்றாக அறிந்தவன் ஆதி. தன்மானத்திற்கு முன்பு அவனுக்கு எதுவுமே பெரிதில்லை என ஆணித்தரமாக நம்பினான்.
தனக்கானது தனக்கு கிடைக்க வேண்டுமெனில் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பவன் முதல் சதுரங்க காயை நகர்த்தத் தொடங்கினான்.
ஆம்…! ஈஸ்வரன் மருத்துவமனை கட்ட நினைத்திருந்த இடத்தை தனது மாமன் சங்கர பாண்டியன் மூலம் லாவகமாக தான் பள்ளிக்கூடம் கட்டுவத்ற்காக எடுத்துக் கொண்டான்.. ஏற்கனவே அந்த இடத்தை ஈஸ்வரன் வாங்கியிருந்தது , பத்திரப்பதிவு மற்றும் பூமி பூசை நடத்த திட்டமிட்டுருப்பது சங்கர பாண்டியனுக்கு தெரியாமல் போனது. ஒரு வகையில் அந்த நிலம் சங்கர பாண்டியனுக்கு சொந்தமானது . அது கைமாறி இரண்டாவது ஆளாக வாங்கியிருந்தவரின் தம்பி வேலு தனது அண்ணனின் மேலிருந்த பகையினால் அவருக்குத் தெரியாமல் ஈஸ்வரனுக்கு நிலத்தை தர சம்மதித்தார். ஆனால் அந்த நிலம் துரைப்பாண்டியின் பெயரில் தான் அரசாங்க தளத்தில் இருந்தது .
போலிக்கும் அசலுக்கும் சிறிது கூட வித்தியாசம் தெரியாமல் பத்திரத்தை தயாரித்து ஈஸ்வரனை நம்ப வைத்து விட்டான் அந்த ஏமாற்றுக்காரன். புகழனிக்குமே அது உண்மையான பத்திரம் போலவே இருந்ததால் அவளுக்குமே சந்தேகம் சிறதளவும் வரவில்லை. இந்த விஷயம் எதுவும் தெரியாமல் பூமி பூசையும் பத்திரப்பதிவும் ஒரே நாளில் வைத்திருந்தான்.
ஈஸ்வரனுக்கு நிலத்தை விற்ற வேலுவிற்கு ஆதி இந்த நிலத்தை வாங்குவது தெரியாது. ஆனால் ஆதிக்கு உண்மையான நிலவரம் என்னவென்பது நன்றாகவே தெரியும்.
கலகத்திற்கு வழி வகுத்தான் ஆதி. சங்கர பாண்டியனுக்கு ஈஸ்வரன் மருத்துவமனை இடம் பார்ப்பது பற்றி மட்டுமே தெரியும். அவன் குறிப்பிட்ட இடத்தை பேசி முடிந்தது எதுவும் தெரியாது. அது மிகவும் வசதியாக போயிற்று ஆதிக்கு. இவ்வாறு ஒருவர் மீது ஒருவருக்கிருந்த பகை அடுத்தவர் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட தூண்டவில்லை.
மீனாட்சியும் கோமதியும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் ஈஸவரனது பூமி பூசைக்குச் செல்வதாக சங்கர பாண்டியனிடம் முன்பே கூறியிருந்தார்கள் . அவர் ஒன்றும் கூறவில்லை . அமைதியாக ஆனால் அழுத்தமாக மீனாட்சியை பார்த்தார்.
” பாவம் பா…” என்றாள்.
” ஆத்தாளும் மகளும் ஏதோ பண்ணித் தொலைங்க…என் பேச்சு இந்த வீட்டுல எடுபடறதேயில்ல…” என துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.
கோமதியோ அவசரமாக அவளருகே வந்து ,” இந்தா… உங்க அப்பாவை அப்பறம் ரசிச்சுக்கோ…இப்ப கிளம்பு சீக்கிரம். வேற ஏதாவது பண்ணப்போறாரு மனுசன் ” என அவளை அவசரப்படுத்தி கிளம்பச் சொன்னார்.
ஈஸ்வரன் தனது அக்கம்பக்கத்தினர் அனைவரையும் பூமி பூசை போடுவதற்காக அழைத்திருந்தான்
மீனாட்சி மற்றும் கோமதி வீட்டை விட்டு கிளம்பினர்.
மீனாட்சி ஈஸ்வரனுக்காக பார்த்து பார்த்து தன்னை அலங்கரித்துக்
கொண்டு சென்றாள்.
மெல்லிய தங்கக் கரையிட்ட அரக்குநிற புடவையும் அதற்கு தோதாக மெல்லிய அணிகலன்கள் அணிந்துகொண்டு, இரு முழம் நெருக்கமாக கட்டிய மல்லிகை சரத்தை சூடிக் கொண்டு செதுக்கிய சிலைப்
போல கிளம்பினாள்.
பூந்தூவாலையினால் தலையை துவட்டியபடி தங்களுடைய வீட்டிலிருந்து வெளியே வந்தவன் விழிகளில் விழுந்தாள் மீனாட்சி. ரசனையை மீறி ஏதோ ஒன்று அவனை ஆட்டிப் படைத்தது. தலையை துவட்டியபடி விழிகளால் அவளை சிறையெடுத்துக் கொண்டிருந்தான்.
சிரித்தபடி கை வளையல்கள் குலுங்க ,முன்னுச்சியில் விழுந்த முடியை சரி செய்தபடி கோமதியுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ஆதியின் விழிகள் அவளது மான் விழியையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவர்கள் கிளம்பிய பின்னர் இந்த சந்தப்பத்திர்க்காகவே காத்திருத்தவன் போல் சங்கர பாண்டியனின் இல்லத்திற்குள் நுழைந்தவன் “மாமா…மாமா..” என்றழைத்துக் கொண்டே சட்டையை மடக்கி விட்டுக் கொண்டுடே வந்தான்.
பூஜையறையிலுருந்து வெளியே வந்த சங்கர பாண்டியன், “என்னப்பா…ஆதி காலையிலயே வெளியே கிளம்பியாச்சா..? “ என்றார்.
“ஆமா…மாமா பள்ளிக்கூடம் கட்டப் போற இடத்தை நாம போய் பாத்துட்டு வந்துடலாம்…”
சங்கர பாண்டியனோ, “இவ்வளவு வெள்ளனயேவா…? , நம்ம துரைப்பாண்டி வரணுமே பா…. ஊருக்கு போயிருக்கானே அம்புட்டு தூரத்துல இருந்து வரணும் ல…”என்று யோசனையுடன் கூறினார்.
சற்று தடுமாறி விட்டு, “அது… நான் அப்பவே கிளம்பி வரச் சொல்லிட்டேன். இன்னைக்கு நல்ல நாளா இருக்கு…அதுவும் ஆறுல இருந்து ஏழரை வரைக்கும் தான் நல்ல நேரம் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம். ஆமா…அத்தையும் மீனாட்சியும் வெளியே கிளம்பின மாதிரி தெரிஞ்சதே. அவங்களையும் அழைச்சிட்டு போகலாம்னு நினைச்சேன்…” என்றான்.
“ஆமா..பா இன்னைக்கு ரொம்ப விசேசமான நாள் தான். அவுக ரெண்டு பேரும் பூமி பூசைக்கு போயிருக்காவ. அதான்அந்த பைய…ம்ம் …ஈஸ்வரன் ..அவனோட தங்கச்சிக்கு ஆசுபத்திரி கட்டுறானாக்கும். அதுக்கு தான் ரெண்டு பேரும் போயிருக்காவ….எங்க …? ஏதுன்னுலாம் நமக்குத் தெரியாது. நம்மள மதிக்காதவன நாம் போய் பாக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. நீ சித்த இரு நான் கிளம்பி வர்றேன் “ என்றவர் அவனுடன் கிளம்பிச் சென்றார். அவனுடனே நேஹாவும் சென்றாள்.
நிகழப் போகும் விபரீதம் அறியாமல் புன்னகை முகத்துடன் ஈஸ்வரனும் ,புகழினியும் பூஜை சாமான்களை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். மீனாட்சி மற்றும் கோமதியை வரவேற்றனர் முத்துக்காளை தம்பதியினர்.
ஈஸ்வரனது விழிகளில் ரசனை தெரிந்தது. அவளின் எளிமையான அழகில் மெய் மறந்து நின்றான் ஈஸ்வரன். புகழனி இருவரையும் ரகசியமாக கலாய்க்க வெட்கச் சிரிப்புடன் நகர்ந்தனர்.
இருவரது பார்வையும் அடிக்கடி ஒருவரை ஒருவர் தொட்டு மீண்டது.
வெள்ளை வேட்டி சட்டையுடன், முறுக்கு மீசையும் அகன்ற தோள்களும் அவனது ஆண்மையை அதிகரித்து காட்டியது. ஈஸ்வரனின் புன்னகை முகமே மீனாட்சியின் மனத்தை நிறைத்தது.
பூஜைக்காக வெற்றிலை,பாக்கு, பூ ,பழம் என அனைத்து பூஜை சாமான்களை சரி செய்துவிட்டு அனைவரும் பத்திரப் பதிவு செய்ய நின்று கொண்டிருந்தனர்.
பதிவாளர் அமர்ந்திருக்க , அவரருகில் ஈஸ்வரன் மலர்ச்சியான முகத்துடன் நின்றிருந்தான். அவனருகே அவனது குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் நின்றிருந்தார்கள். எதிர் புறம் கோமதி மும் மீனாட்சியும் நின்றிருந்தார்கள்.
துரைப்பாண்டியின் தம்பி வேலு கலவரமான முகத்துடனே நின்றிருந்தான்.
சீக்கிரமாக பத்திர பதிவு செய்து விட்டு இடத்தை காலி செய்து விட வேண்டும் என்ற பதட்டம் அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை.
ஏனெனில் பத்திரப்
பதிவாளர் வருவதற்கு, பூமி பூசைக்கு என கணிசமான தொகையை அவன் ஈஸ்வரனிடமிருந்து வாங்கியிருந்தான்.
கையெழுத்து போடும் நேரம் வேகமாக வந்து நின்றது அந்த உயர் ரக கார் . அனைவரும் நிமிர்ந்து பார்க்க அதிலிருந்து மெதுவாக இறங்கி தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கையில் வைத்து சுழற்றினான் ஆதித்யன் .
அதற்கடுத்து இறங்கினார் சங்கர பாண்டியன் மற்றும் அவரது தங்கை வடிவாம்பாள்.
ஈஸ்வரனோ புருவம் சுருக்கி உடனே மீனாட்சியை அனலாகப் பார்த்தான்.
அவளது முகமும் குழப்பத்தை தத்தெடுத்திருக்க, ஒரு பெருமூச்சுடன் மெதுவாக நடந்து ஆதியின் அருகில் வந்தான்.
ஆதியின் பார்வையோ அலட்சியமாக இருக்க ஈஸ்வரனின் பார்வை அவனைக் கக்கியது.
வேலு மெதுவாக நழுவப் பார்க்க , அதற்குள் அவனை பார்த்த துரைப் பாண்டி , “ஏலேய்….வேலு இங்கன என்ன பண்ற ..? என்னோட இடத்தில இவங்க யாருல்லே…? “என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே வந்தவர் நழுவி ஓடப் பார்த்த வேலுவைப் பிடித்துக் கொண்டார். முத்துக்காளையோ , “ஏப்பா …என்ன பிரச்சினை உனக்கு…? நாங்க இந்த இடத்தை வேலு கிட்ட இருந்து வாங்கியிருக்கோம். நீ என்னவே புதுசா கதை விடுற…?” என ஆத்திரத்துடன் கூறினார். ” யோவ்…பெரியவரே.. பாக்க நல்ல மாதிரி இருக்கீக. யாரோட இடத்தை யாரு விலைபேசுறது…? இந்த இடத்தை சங்கர பாண்டியன் அண்ணன் கிட்ட இருந்து நாலே வருசம் முன்ன நான் கிரயம் பண்ணிருக்கேன். பட்டா, சிட்டா எல்லாம் எம் பேர்ல இருக்கும்போது எப்படி நீரு இந்த இடத்தை வாங்குவீரு..? நானா கதை விடுதேன்.. இந்த இடத்தை சங்கர பாண்டியன் அண்ணனோட மருமகனுக்கு விக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. அவரு இந்த இடத்துல நம்மூருக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டப் போறாரு. யாருல்ல இந்த இடத்தை உங்க கிட்ட வித்தாக..? இடத்தோடு பட்டா…சிட்டா எடுத்து காமிங்க …” என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த ஈஸ்வரன்,
“இங்க பாருங்க அவரு பெரிய மனுசன் கொஞ்சம் மரியாதையா பேசுங்க. கண்டவங்களை கூட்டிட்டு வந்து வம்பு பண்ணாதீக. இந்தா இங்கன நிக்க வேலு தான் இந்த இடத்தை எங்களுக்கு முடிச்சி கொடுத்தாக. நான் இந்த இடத்தில தான் நம்மூருக்கு இலவச ஆஸ்பத்திரி என் தங்கச்சிக்காக கட்டப் போறேன். வீண் வம்பு பண்ணாதீக. அப்பறம் நல்லா இருக்காது அம்புடுத்தேன்…” மீசையை முறுக்கிக் கொண்டு பேசியவன் நிலத்திற்கான போலி பட்டா , சிட்டாவை எடுத்து துரையிடம் கொடுத்தான்.
அதைப் பார்த்த துரை இடி இடியென சிரித்தபடி , ” இது போலியான பத்திரம். ஏம்மா புகழினி படிச்ச பொண்ணு தானே நீ…? அதுக்கும் போலிக்குமா வித்தியாசம் தெரியலை உனக்கு…?உண்மையானது என் கிட்ட இருக்குது…” என்றவர் , பளாரென தனது தம்பியை அடித்தார்.
இதை எதிர்பார்க்காத அனைவரும் திகைத்து நின்றனர்.
” ஏண்டா..…ஈடுபட்ட நாயே…உன்னை நம்பி என்னோட நிலப் பட்டாவைக் கொடுத்தா அதே மாதிரி போலியா தயாரிச்சி இவங்க கிட்ட விக்க பாத்துருக்க… உன்னை இனி சும்மா விடப்போறதில்லை “ என்றவர் அடித்து துவைத்து விட்டார் தனது தம்பியை.
சங்கர பாண்டியனோ துரையை நிதானப்படுத்தி,
“மொத நிலத்துக்கான உண்மையான பட்டாவை அவங்க கிட்ட காட்டு. அப்பவாவது புத்தி வரட்டும். யாரு நிலத்துக்கு யார் சொந்தம் கொண்டாடுறது. இதுல என் மருமகப் புள்ளதான் பள்ளிக்கூடம் கட்டனும். இதுகளை எல்லாம் மொத இடத்தை காலி பண்ணச் சொல்லு….” என்றவுடன் ஈஸ்வரனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.
” என்ன பெரிய மனுசரே..?அதுக இதுகன்னுட்டு இருக்கீக…முத அவங்க வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க. “ என்றான்.
துரையோ தனது பையிலிருந்து உண்மையான பத்திரத்தை எடுத்துக் காட்டினார்.
இப்போது அனைவருக்குமே அதிர்ச்சி .
ஏனெனில் இரண்டிற்கும் சற்றும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஸ்வரன் மற்றும் புகழினிக்கே அதிர்ச்சியாக இருந்தது.
பிள்ளையும் கிள்ளி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி தனது மடிக்கணினியுடன் ஈஸ்வரன் மற்றும் புகழினியின் அருகில் வந்து ,” நம்புலன்னா இங்கப் பாருங்க….இது ஆன்லைன் போர்டல். அரசாங்கத்தோடது. இதுல பாருங்க இந்த நிலம் யாரு பேர்ல இருக்குதுன்னு. இதெல்லாம் நீங்க செக் பண்ணாம எப்படி இந்த ஃப்ராடு கிட்ட ஏமாந்தீங்க…?நீங்க படிச்சவங்க தானே புகழினி..நீங்களே செக் பண்ணி பாருங்க..”என அவளிடம் மடிக்கணினியைக் கொடுத்தான்.
அதனைப் பார்த்ததும் அவளது விழிகள் கலங்கியது. எவ்வளவு கீழ்த்தரமாக ஏமாற இருந்தோம் ..?என்ற கழிவிரக்கம் தோன்றியது.
ஆம் ..! அதில் தெளிவாக சங்கர பாண்டியன் பெயரில் இருந்து துரைக்கு மாற்றிய விபரம் . அவரது பெயரில் தான் தற்போது வரை நிலம் இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈஸ்வரனோ மெதுவாக அவளருகே வந்து அவளது தோளைத் தொட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆமாண்ணே… நம்ம ஏமாந்துட்டோம்…நிலம் அவுக பேர்ல தான் இருக்கு. நாம தான் தப்பு பண்ணிட்டோம். இவனோட பேச்சைக் கேட்டு போலி பத்திரத்தை நம்பி ஏமாந்துட்டோம்…” என கண்களில் நீர் வழிய அப்படியே அமர்நதுவிட்டாள்.
இந்த இடத்தை விட்டால் வேறு இடம் நிச்சயமாக கிடைக்கும் ஆனால் இந்த ஏமாற்றம் அவளுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது.
அவளின் வாழ்வின் முதன்மையான லட்சியம் அல்லவா. அதன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அழுகை வந்தது அவளுக்கு. அதை விட படித்த தானே இவ்வாறு ஏமாந்து உள்ளோமே என்ற கழிவிரக்கம் தோன்றியது அவமானமாக இருந்தது.
அவளது ஓய்ந்த தோற்றத்தைக் கண்ட ஈஸ்வரன் பதறி , “ என் சாமி…அழாத மா..தங்கம்…ஒண்ணுமில்லை டா. அண்ணே இருக்கேன் டா. இந்த இடம் இல்லைன்னா என்ன..? இதை விட நல்ல பெரிய இடமா நா பாக்குறேன் மா…” என அவளது தோளணைத்து ஆறுதல் கூறினான். ஏதோ கூற அருகில் வந்த மீனாட்சியை பார்வையால் எட்டி நிறுத்தினான்.
அவளுக்கோ அது உயிர் போகும் வலியைக் கொடுத்தது. அவளது கால்கள் தன்னிச்சையாக பின்னால் நகர்ந்தது
இவையனைத்தும் தூரத்தில் நின்று கூர்மையாக பார்த்து ஆதியின் விழிகள் பளிச்சிட்டு அவனது முரட்டு இதழ்கள் மெலிதாக விரிந்தது .
ஈஸ்வரனை மீனாட்சியிடமிருந்து விலக்கும் மார்க்கத்தை கண்டறிந்தது.