உயிர் தொடும் உறவே -17

4.3
(6)

உயிர் 17

கருகிய நெற்பயிர்களையும் , அதைக் கண்டு சொல்லண்ணா வேதனையில் இறுகிப் போய் அமர்ந்திருக்கும் மகனை கண்ட முத்துக்காளையின் இரத்தம் கொதித்தது.

 

புகழினி ஈஸ்வரனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

“ அண்ணே..! வெசனப்படாதேண்ணே…! எல்லாம் சீக்கிரம் சரியாகும். பயிர் காப்பீடு போட்டுருக்கோம்ல நிச்சயம் அரசாங்கம் ஏதாவது பாத்து பண்ணுவாங்க . இப்ப ஒண்ணும் குடி முழுகிப் போயிடலை. உன்னால் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பிக்க முடியும். இப்ப ஆஸ்பத்திரி கட்டுறதுக்கு என்னோட நகையெல்லாத்தையும் அடமானம் வைச்சிட்டு , மீதி பணத்துக்கு லோன் போடலாம் . நம்ம புது வீட்டு கட்டிட வேலையை கொஞ்சம் நிறுத்தி வைப்போம்ண்ணே…நீ இப்படி இடிஞ்சி போய் உக்காரதண்ணே…என்னால உன்னைய இப்படி பாக்க முடியலை . எழுந்து வாண்ணே..! வீட்டுக்கு போகலாம். இந்த கருகிப் போனது எல்லாத்தையும் சரி ‌பண்ணி வைப்போம்.” என்று கூறி விட்டு அவனது முகத்தை பார்த்து நின்றாள் புகழனி.

 

வாழ்க்கையில்  எதற்கும் கலங்காத தன் அண்ணன் முதன் முறையாக  துவண்டு போய் அமர்ந்திருந்த கோலம் அவளது மனதை கூர் வாள் கொண்டு அறுத்தது.

அதே சமயம் திருமணத்திற்கு சம்மதிக்காத  சங்கர பாண்டியன் மீது வெறுப்பு தான் தோன்றியது.

மண்டபத்தில் நடந்த விஷயங்கள் எதுவும் புகழினிக்குத் தெரியவில்லை.

மீனாட்சி ஆதியை திருமணம் செய்து கொண்டாள் என்பதை மட்டும் அருகிலிருந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டாள்‌

தக்க சமயத்தில் சங்கர பாண்டியனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தாள்.

 

“ அண்ணே..! ஏதாவது பேசுண்ணே…! ஏன்‌ இப்படி உக்காந்திருக்க…? எழுந்துக்க..” என்று  ஈஸ்வரனின் கைப்பிடித்து எழுப்பினாள்.

 

மெல்ல கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவன் அருகில் கருகிய இருந்த நெற் பயிர்களை தொட்டுப் பார்த்தான்.

உதிர்ந்து விழுந்தன கதிர்கள். எத்தனை நாட்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து கொண்டு பச்சை பசேலென செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் காற்றில் அசைந்தாடும் அழகினை பார்த்து ரசித்திருப்பான்.

சுற்றி சுற்றி வந்து சிறு கிளைகளையும் நீக்கி நோய் தாக்காமல் கண்ணின் மணியாக பார்த்துக் கொண்டான்.

குழந்தைகளை தொலைத்த தந்தை எவ்வளவு வேதனையடைவானோ அதை விட அதிகமாக வேதனையை சுமந்து நின்றது அவனது இதயம்.

 

அருகில் நின்ற மணியை அழைத்து , “ எப்படி தீ பிடிச்சது…? யாராவது இங்கன நின்று பீடி , சிகரெட் பிடிச்சீகளா?” என்றான்.

 

மணியோ , “தெரியல்லண்ணே… அவ்வளவு வெள்ளேன யாரு இங்கன வந்து பீடி சிகரெட் பிடிக்க போறாவ…?” என்றான்.

 

யோசனையுடன் முத்துக்காளை மற்றும் புகழினியுடன் தளர்ந்த நடையுடன் வீட்டிற்குச் சென்றான்.

 

திருமண‌ மண்டபத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் நேஹா.

அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனால் நண்பன் மீனாட்சியின் வெறுப்பினை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்று மட்டும் தெரிந்தது.

 

ஈஸ்வரனை நினைத்து பாவமாக இருந்தது. எத்தனையெத்தனை வேதனைகள் அவனுக்கு.?

எல்லாவற்றிலும் நிமிர்வாகவும் தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு தந்த திமிரிலும் அடங்காத காளையாக இருந்தவன் ,

முதன்முறையாக அவனது தோற்றுப் போன தோற்றத்தை கண்டு அவளுக்கு மனதை பிசைந்தது.

அதே சமயம் சங்கர பாண்டியனின் வரட்டு கவுரவம் அவளுக்கு ஒரு வித ஒவ்வாமையை தந்தது.

சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .

 

மனம் ஏனோ ஏனைய திருமண சடங்குகளில் ஒட்டவில்லை.

மீனாட்சியோ கற்பாறை போல இறுக்கமான முகத்துடன் மற்ற சம்பிரதாயங்களை ஆதியுடன்‌ சேர்ந்து செய்தாள்.

அதில் சிறிதளவு கூட ஒட்டுதல் இல்லை.

 

மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்த நேஹா மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள்.

கால் போன‌ போக்கில் நடந்தவள் ஈஸ்வரனது வரப்பில் வந்து நின்றாள்.

அவளுக்குமே அந்த வரப்பில் நின்று தென்றலோடு அசைந்தாடும் நாற்றுகளை பார்க்க மிகவும் பிடிக்கும். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு இயற்கையை‌‌ மிகவும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.

நகரம் போல் பரபரப்புடன், எந்திரதனத்துடனும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட நேரமில்லாமல் ஓடும் சலிப்பான வாழ்க்கையை விட திண்ணையில் அமர்ந்து கதை பேசும் பாட்டிகள், கிட்டிப்புள், பம்பரம் , வாய்க்காலில் குதித்து நீச்சலடிக்கும் சிறுவர்கள், பாண்டியாட்டம், கண்ணாமூச்சி ஆடும் சிறுமிகள் ,குழாயடியில் நின்று பேசும் பெண்கள், மாமன், மச்சான் என்று உறவுமுறையுடம் பேசிப் பழகும் ஆண்கள் என அனைத்தையும் பார்த்தவளுக்கு இதுவல்லவோ நிம்மதி தரும் வாழ்க்கை..!என்று தோன்றியது.

பேசாமல் இங்கேயே தங்கி விடலாமா..? என நினைத்தாள்.

ஆனால் லண்டன் மாநகரில் பல கோடி‌ மதிப்பலான‌ தனது நிறுவனத்தை என்ன செய்வது…? தனது கடமை அழைப்பதை எண்ணி பெருமூச்சினை விட்டாள்.

சுற்றியுள்ள  மலைகளோடு, ஈஸ்வரனது வயல் வெளியும் சேர்ந்து இயற்கை தந்த அழகினை ரசிக்க வைக்கும்.

 

இவ்வாறு பல்வேறு யோசனையுடன் வந்தவள் வயல் வரப்பை கண்டு ‌அதிர்ந்து‌  தான் போனாள் .

கருகிய நிலையில் இருந்த நெல் மணிகளை கண்டு உள்ளம்‌ வலித்தது.

எப்படி நடந்தது..? யாரேனும் வேண்டுமென்றே செய்திருப்பார்களா..? என்ற‌ எண்ணம் தோன்றியது.

 

எத்தனையோ ஆசைகளோடு ‌ஈஸ்வரன் ‌இந்த‌ வரப்பில் அமர்ந்து தன்னை மறந்து ரசித்து கொண்டிருப்பதை கண்டிருக்கின்றாள் ‌தான்.

“அப்படி என்ன தான் உள்ளதோ..?” என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு மற்றவர்களுக்கு தோன்றலாம்.

உணர்வுகளோடு கலந்த சில விஷயங்களை  யாருக்கும்‌ விவரித்துக் கூற முடியாது அல்லவா..? அதுபோல தான் இதுவும் என்று நினைத்து கொள்வாள்‌ நேஹா.

 

அவளுடைய மனமோ ஏதோ சொல்ல முடியாத வேதனையை தத்தெடுத்தது.

மீனாட்சியின் திருமணம், தீக்கிரையான நெற்கதிர்கள் என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் ஈஸ்வரனை நிச்சயமாக அவனை துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் என நினைத்தவள் வேக வேகமாக ஈஸ்வரனின்‌ வீட்டினை நோக்கிச் சென்றாள்.

 

தயக்கத்துடன் அவனது வீட்டின் முன்பு நின்றாள்.

ஏதோ ஒரு வேகத்தில் வந்து விட்டாள்.

அவனிடம் என்னவென்று கேட்பது..? கோபித்துக் கொண்டு விட்டால்..? என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு வீட்டிற்கு வெளியே நின்றிருந்தாள்.

 

ஜன்னல் வழியாக எதேச்சையாக அவளை பார்த்த புகழினி அவள் தயக்கத்துடன் கதவை தட்ட வருவதும்.. பின்னர் திரும்ப போவதுமாக இருப்பவளை கண்டு புருவம் சுருக்கினாள்.

 

நேஹா எதிர்பாராத நேரத்தில் பட்டென்று கதவை திறந்தாள் புகழினி.

 

திடீரென கேட்ட சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள் நேஹா.

 

“ உள்ள வரலாமா…?”

 

அவளை முறைத்தபடி புகழினியோ , “ வா..” என்றழைத்து விட்டு

உள்ளே சென்றாள்.

 

உள்ளே சென்ற நேஹா ஈஸ்வரனைத் தேடினாள்.

 

“ என்னத்தை தேடுதீக…?” என்றாள் புகழினி.

 

“ ஒண்ணுமில்லை…அது வந்து எப்படி வரப்பு எரிஞ்சி போச்சு..? இப்ப தான் பாத்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு “

 

“ ஓ…ஓ அதேன் துக்கம் விசாரிச்சிட்டு போக வந்துருக்கீகளோ..? அது மட்டுந்தானா…? இல்ல உங்க‌ ஃப்ரெண்ட் மீனாட்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால எங்கண்ணன் இருக்கா..? இல்லை செத்துடுச்சான்னு பாக்க வந்தீகளா…? அந்த மீனாட்சி அம்மையார் சொல்லி விட்டாகளா…? ரொம்ப வசதியனவன் கிடைச்ச உடனே எங்கண்ணன் கசந்து போச்சா..?அந்த அம்மணிக்கு…? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு எல்லா பயலுகளுக்கும் விசம் வச்சிப்புடனும்ன்னு வருது…என்ன பண்றது..? எங்கண்ணனுக்காக பேசாம இருக்கேன். அந்த மீனாட்சி முகத்துல இந்த ஜென்மத்துக்கு முழிக்க மாட்டேன்னு சொல்லிடு. ச்சீ…பொண்ணா…அவ..? “ என பேசிக்கொண்டே போக , ” வில்…யூ.ப்ளீஸ் ஷட் அப்…”என கத்தினாள் நேஹா.

 

என்னவென்பது போல் பார்த்தாள் புகழினி.

 

“ ஏங்க.. உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே மீனாட்சி..?அவளை பத்தி நீங்க இவ்வளவு தான் புரிஞ்சி வச்சிருக்கீங்களா…? அங்க என்ன நடந்தது என்று தெரியாம உங்க இஷ்டத்து

க்கு பேசாதீங்க…உங்க அண்ணனுக்கு இருக்குற வலியும் வேதனையும் அவங்களுக்கும் இருக்கும். உங்க அண்ணனோட கவுரவத்துக்காக தான் அவங்க இந்த கல்யாணத்தை பண்ணிகிட்டாங்க.  சுத்தி இருக்கிற சொந்தக்காரங்க முன்னாடி உங்கண்ணனை தன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொன்னாரு…சங்கர பாண்டியன். உங்கண்ணனும் விழப் போனாரு…அதை பாக்க சக்தி இல்லாம, அவரோட கவுரவம் எந்த விதத்திலும் கீழே இறங்கிட கூடாதுன்னு தான்‌ அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. இவ்வளவு வருஷமா விரும்புன அவருக்கு அவங்க மரியாதை தான் செஞ்சிருக்காங்க…அவர் மன்னிப்பு கேட்டு அவங்க கல்யாணம் நடந்திருந்தா ஆயுசு பூராவும் ரெண்டு பேருக்குமே அது உறுத்தலா தான் இருந்திருக்கும். போராடி ஜெயிச்சா தான் உண்மையான காதல்ன்னு இல்லை. அவரோட கவுரவத்தை காப்பத்தி அவரை நிமிர்ந்து நிக்க வச்சதும் ஒரு வகையில ஜெயிச்ச மாதிரி தான். அது மீனாட்சி உங்கண்ணனுக்கு கொடுத்த மரியாதை.  இவ்வளவு நாள் நிமிர்ந்து இருந்த உங்கண்ணன் மீனாட்சிக்காக தன்னோடு இயல்பை மாத்திக்கிட்டு சங்கர பாண்டியனோட கால்ல விழுந்ததும் ஒரு வகையில காதல்ல ஜெயிச்ச மாதிரி தான். இது புரிதலோட உண்டான‌ பிரிவு. தயவுசெய்து மீனாட்சியை கொச்சைபடுத்தாதீங்க. அவ‌ங்களோட மனசு அந்த வார்த்தையை சொல்ல எவ்வளவு பாடுபட்டிருக்கும்ன்னு யோசிங்க…ஐ யம் சாரி ரொம்பவே பேசிட்டேன்னு நினைக்கிறேன். முதல்ல வயலுக்கு யார் நெருப்பு வச்சதுன்னு கண்டுபிடிங்க…நிச்சயமாக தானே நெருப்பு பிடிக்க வாய்ப்பில்லை. ஏர்லி மார்னிங் பனி இருக்கும் போது தானாக நெருப்பு பிடிக்காது. கொஞ்சம் விசாரிச்சு பாருங்க…அப்பறம்…” என நிறுத்தினாள்.

 

“என்ன சொல்லு…?” என்றாள் புகழினி.

 

“ தவறா எடுத்துக்காதீங்க…இவ்வளவு பெரிய நஷ்டம் எப்படி சரி பண்ணச் போறீங்க…? சோ‌‌..இஃப் யூ டோண்ட் மைண்ட்…எதாவது ஃபினான்ஷியல் ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க…ப்ளீஸ்…ஓவரா அட்வான்டேஜ் எடுக்கறாளேன்னு நினைக்காதீங்க… நீங்க வேணா திரும்ப கொடுத்துடுங்க…நான் வாங்கிக்குறேன். “ என தவிப்புடன் புகழினியிடம் கூறினாள்.

 

“ அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அந்தளவுக்கு வக்கத்து போகலை இந்த ஈஸ்வரன்…நான் பாத்துக்குறேன்…நீங்க கிளம்புங்க…” என வாசலை நோக்கி கை காட்டினான் ஈஸ்வரன்‌.

 

திடீரென கேட்ட அவனது குரலால் அவளது உடல் தூக்கி வாரிப்‌ போட்டது.

 

புகழினிக்கோ , “ஹப்பா…!அண்ணன் பழைய‌‌ மாதிரி ஃபார்முக்கு வந்துடுச்சு..” என்று நினைத்தவள் ,

நேஹாவைப்‌ பார்த்து ,  “தேங்க்ஸ்..” என மொட்டையாக கூறினாள்.

 

திருதிருவென‌ முழித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் நேஹா.

 

அவள்‌ பேசியது அனைத்தையும் பின் கட்டிலிருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தான் ஈஸ்வரன்.

 

இங்கோ ஆதித்யனுக்கும் மீனாட்சிக்கும் வடிவாம்பாள் முதலிரவுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!