என் தேடலின் முடிவு நீயா – 06

4.8
(64)

தேடல் 06

அவளின் அகங்காரமான பேச்சில் மூண்ட கோபத்தை அடக்கியவனுக்கு இது கோபப்படுவதற்கான நேரமல்ல என்று தெரியும்… மகிமாவை முறைத்துப் பார்த்தவன், “வேண்டியத பண்ணித்தொலை… ஆனா நான் இருக்கும்போது, உன் அண்ணன் இந்த வீட்டு பக்கத்துக்கும் வரக்கூடாது” என்றான்.

“அதெப்படி? அண்ணா என்ன பார்க்கனும்ன்னா நான் இருக்கிற டைம்க்கு தான் வர முடியும்… நீங்க சொல்ற நேரத்துக்கா வர முடியும்…” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ஒற்றை கையை நீட்டி தடுத்தவன், “நீ என்ன சொல்ல வரன்னு புரியுது… நீயாச்சு… உன் அண்ணாவாச்சு” என்றபடி அவன் அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினான்…

அபின்ஞான் எதுவும் பேச முடியாமல் தன் அறைக்குள் போனதை பார்த்த மகாதேவ், “உன்கிட்ட என் தங்கச்சி மாட்டலடா… நீ தான் அவகிட்ட தெரியாமலே மாட்டியிருக்க…” என நினைத்துக் கொண்டவன் கிளம்புவதற்காக ஆயத்தமாக,

“அத்த அத்தானையே அவ அடக்கிட்டா பாருங்களேன்” என்று சந்தோசமாக சஞ்சனா கூற,

“உனக்கு இப்ப நல்ல திருப்தியா இருக்குமே… போய் வேலைய பாருடி” என்றவர்

 மகாதேவை வழியனுப்பச் சென்றார்.

அவர் பின்னே சஞ்சனாவும் தொத்திக் கொண்டு சென்றவள், அவர் காதருகே குனிந்து, “இவ்ளோ பிரச்சினைக்கும் இவன் தான் காரணம்… ஆனா ஒன்னும் தெரியாத மாதிரி இருக்குறத பாருங்களேன்…” என்று அவர் காதில் கிசுகிசுக்க…

 அன்னபூரணி அம்மாளோ, “வாய மூடிட்டு கொஞ்சம் சும்மா இருடி, கேட்டுடப் போகுது… என் பையனே கோபம் வந்தா சலங்கை கட்டாத குறையா ஆடுவான்… இவ அதுக்கும் மேல இருப்பா போல…” என்று சஞ்சனாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

“ஆமா… அத்த” என்று சஞ்சனாவும் ஒத்துக்கொள்ள,

“இதுக்கு மேல எனக்கு இதெல்லாம் பார்க்க தெம்பு இல்ல” என்று அன்னபூரணி அம்மாள் கூறிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்த மகிமா, “என்ன விஷயம் அத்த” என்று கேட்டாள்.

அன்னபூரணி அம்மாளும் சஞ்சனா வேகமாக ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினர்…

அவர்களது வித்தியாசமான நடத்தையை ஒரு மார்க்கமாக பார்த்தவள், “சரிதான்” என்று முனுமுனுத்துக் கொண்டாள்.

மகாதேவும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான். இதற்கு மேல் இங்கிருந்து அவனும் என்ன தான் செய்வது…

 மகாதேவை அனுப்பி விட்டு வந்தவள், இன்னும் இருவரும் தயங்கியபடியே நின்று கொண்டிருக்க அவர்களை “என்ன” என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்தவள், “வாங்க அத்த நாங்க கதைக்கலாம்” என்று கூற,

மூவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டனர்…

சொல்லப்போனால் அன்னபூரணி அம்மாளோ மனதில் பட்டதை மறைக்காமல் பேசி விடுவார்

அதனால் தான் சஞ்சனாவுக்கும் அவருக்கும் நன்றாகவே ஒத்துப் போகும்.

 அந்த அப்பாவித்தனத்தை பார்த்ததுமே மகிமாவுக்கும் அன்னபூரணி அம்மாளை பிடித்து விட்டது.

“இந்த முரடனுக்கு இப்படி ஒரு அம்மாவா?” என்ற சந்தேகம் அவளுக்கு தோன்றாமல் இல்லை…

அன்னபூரணி அம்மாளோ, என்ன பேசுவது என்று தெரியாது கைகளை பிசைந்தபடி அமர்ந்திருக்க, “அத்த… உங்களுக்கு என்கிட்ட என்ன கேட்கணுமோ… பயப்படாம கேளுங்க, என்ன உங்க பொண்ணு மாதிரியே நினைச்சுக்கோங்க” என்று சிரித்தபடி கூற,

“நீ எனக்கு பொண்ணு மாதிரி இல்லமா… இனி நீ என் பொண்ணு தான்…” என்று கூறி அவளை அணைத்துக் கொண்டார் அன்னபூரணி அம்மாள்.

 இயல்பான அவள் அணுகுமுறை மற்றும் அன்பான இரு வார்த்தைகள் மூலமே தன் மாமியாரை கவர்ந்து விட்டாள்.

“ம்கும்…” என்று அவர்களைப் பார்த்தபடி சஞ்சனா தொண்டையை செருமிக் கொள்ள…

“நீயும் என் பொண்ணு தான்டி” என கூறினார். அதன் பிறகு கதைத்தபடியே மூவருக்கும் நேரம் சென்று விட, அப்போது நேரத்தை பார்த்து சஞ்சனா, “சரி அத்த நான் வீட்டுக்கு கிளம்புறேன்… இனி வீட்ல அம்மா கிட்ட அத்தான் புராணம் கேட்காம நிம்மதியா இருக்கலாம்” என்றபடி சஞ்சனா எழுந்து கொள்ள,

“என்னடி என் பையன பத்தி எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டே இருக்க… இப்ப என் மருமக வந்துட்டா… அவ உன்ன கேள்வி கேட்பா” என்றபடி மகிமாவை திரும்பி பார்க்க,

“அத்த… அவ சரியா தானே சொன்னா” என்று மகிமா சிரித்தபடி சொல்ல,

“சரிதான்.. நல்லா பாத்து கூட்டு சேந்து இருக்கீங்க… எனக்குன்னே வந்து சேர்றீங்க பாருங்க” என்று அன்னபூரணி அம்மாள் தலையில் அடித்துக் கொள்ள,

சஞ்சனா மற்றும் மகிமாவும் சிரித்தபடி ஹைபை அடித்துக் கொண்டனர்.

“ஆனா அத்த… அத்தானுக்கு கல்யாணம் முடிஞ்சது அம்மாவுக்கு தெரியாது… தெரிஞ்சா இனி இருக்கு விளையாட்டு” என்று கூறி சஞ்சனா சிரிக்க,

“இனி தெரிஞ்சிடும்” என்று மகிமா கூறிக் கொண்டிருக்கும் போதே, அபின்ஞான் தன் அறையில் இருந்து ஷார்ட்ஸ் மற்றும் ஆம்கட் சகிதம் கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான்…

குளித்து இருப்பான் போலும்… அவன் முடிகள் முன்நெற்றியில் விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன…

அவனைப் போல் அடங்காத முடியை கோதி சரி செய்து கொண்டான்…

அவன் சிக்ஸ் பேக் தேகமோ அவன் அணிந்திருந்த ஆம் கட்டையும் தாண்டி கட்டி கட்டியாக விளங்கியது.

அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்த மகிமா, “செம்ம ஹேன்சமா இருக்கான்… வாவ் சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிருக்கான்… ஆனா இவ்ளோ நாளும் இத பார்க்கலயே… சரி பரவால்ல… இனி இங்க தானே இருக்க போறேன்…” என நினைத்துக் கொண்டாள்.

 சஞ்சனாவும் அவள் வீட்டுக்கு சென்று விட, அன்னபூரணி அம்மாள் பகல் உணவை சாப்பிட அபின்ஞானை அழைக்க, அவனும் வந்து உணவு மேசையில் அமர்ந்து கொண்டான்…

அன்னபூரணி அம்மாள் உணவை எடுத்து வந்து மகிமாவுக்கும் அபின்ஞானுக்கும் பரிமாறினார்.

மூவரும் உணவு உண்ண ஆரம்பித்தனர் அவ்விடத்தில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை நிசப்தம் மட்டுமே…

 உணவை முடித்ததும் மறுபடியும் அபின்ஞான் தன்னறைக்குள் புகுந்து கொண்டான்…

மகிமா சங்கடமாக நெளிவதை கண்ட அன்னபூரணி அம்மாள், “நீ டிரஸ் மாத்திட்டு வா மகி” எனக் கூறவும் தான் அவளுக்கு, “அப்பாடா” என்று இருந்தது.

மகிமாவுக்கு இப்போது உடைமாற்ற எங்கு செல்வது என்று தடுமாற்றமாக இருக்க, அங்கே இருந்த விருந்தினர் அறையை காட்டிய அன்னப்பூரணி அம்மாள், “நீங்க ரெண்டு பேரும் எப்படியோ கல்யாணம் பண்ணிட்டீங்க… ஆனா மத்த சடங்குகள பார்த்து செய்யணும், அதுவர நீ இந்த ரூம்ல இருந்துக்கோ” என்று அன்னபூரணி அம்மாள் கூற,

மகிமாவோ சங்கடமாக தலையசைத்துக் கொண்டே அந்த அறைக்குள் சென்றாள்.

பட்டுப்புடவை மற்றும் நகைகளை நீண்ட நேரத்திற்கு அணிந்து கொண்டிருந்தது அவளுக்கு அசௌகரியமாக இருக்க குளித்ததற்கு பிறகுதான் அவள் உடலுக்கு இதமாக இருந்தது. சாதாரண நீல நிற காட்டன் சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தவள், அன்னபூரனி அம்மாளுடனே நேரத்தை செலவழித்தாள்.

 மாலையாகியதும் அபின்ஞானின் தந்தை பசுபதியும் வந்துவிட்டார்…

 ஏற்கனவே அழைப்பெடுத்து நடந்த விஷயம் அனைத்தையும் அவரிடம் கூறிவிட்டிருந்தார் அன்னபூரணி அம்மாள்…

அவர் மனதில் சிறு மனத்தாங்கல் மட்டுமே…

ஆனால் அவர் சொல்பேச்சு கேட்டு நடப்பவனா அவரது மகன்…

முன்கூடத்தில் மாமியார் மற்றும் மருமகள் அமர்ந்திருப்பதை கண்ட பசுபதி மகிமாவை பார்த்து மென்புன்னகையை சிந்தியவர், அன்னபூரணி அம்மாளை பார்த்து, “நாம கட்டாயம் ரிசப்ஷன் வெக்கணும்… கல்யாணம் எப்படி பண்ணாலும் ஓகே… ஆனா எல்லாருக்கும் ஆபீஸியல்லா தெரிவிச்சாகணும்… இதுதான் முறையும் கூட… இத பேச உன் பையன வர சொல்லு” என்றவர் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்…

அவரது பேச்சிலே மகிமாவுக்கு புரிந்து விட்டது தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவிய இடைவெளி.

 “மகி நீ போய் அபிய கூட்டிட்டு வாம்மா” என்ற அன்னபூரணி அம்மாள் கூற,

“கம்பெனியில தான் இவன் குரங்கு மாதிரி இருக்கான்னு பார்த்தா வீட்லயும் அதே மாதிரி தான்… எல்லாறையும் பயமுறுத்தி வச்சிருக்கான்” என்று நினைத்தவள் “சரி அத்த” என்றவாறு அபின்ஞானின் அறைக்கு முன்னால் நின்றவளுக்கு கதவை தட்டுவதா வேண்டாமா என்ற சந்தேகம்…

அவள் கதவை மீண்டும் தட்டப்போன போது அபின்ஞானே கதவை திறந்து விட்டான்…

“எவ்வளவு நேரம் வெளியே நிக்கிறதா உத்தேசம்…” என்றவன் திறந்த கதவிலே சாய்ந்து நின்றபடி ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

 “உள்ள வர தான் பார்த்தேன்… அதுக் கிடையில என் சல்வார் சிப் அவுந்துடுச்சு… அதனால தான் வெளிய நின்னுட்டு இருந்தேன்” என்று வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள் மகிமா…

 அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “என்னடி” என்றான் அதிர்ச்சியாக…

“சரி அத வாசல்ல நிக்க வெச்சா கேட்பாங்க” என்றவள் அவனைத் தாண்டி அறையினுள் செல்லும்போது இருவரது தோள்களும் தாராளமாக உரசிக் கொண்டன…

 அவன் அவளிடம் இருந்து வேகமாக விலகிக் கொள்ள, அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள், “அடப் பார்ரா… நான் பண்ண வேண்டியதெல்லாம் இவன் பண்ணிட்டு இருக்கான்” என உதட்டை சுழித்தவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொள்ளவும்,

“சிப் களண்டா அத வெளிய நின்னா போடுவ… யாராவது பார்த்திருந்தா” என்று அவன் அதிர்ச்சி விலகாமல் கேட்க,

 சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டவள், “என்ன யாரு பார்க்க போறாங்க” என்று மகிமா கேட்க,

தலையில் அடித்துக் கொண்டவன், “உன்னோட பேச வந்த என்ன சொல்லணும்…” என்றபடி தன் மடிக்கனணியில் ஏதோ செய்யத் தொடங்கினான்.

“மாமா ரிசப்ஷன் செய்யணும்ன்னு சொன்னார். அத பத்தி பேச உங்கள கூப்பிட்டார்…” என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்து , “ம்ம்” என்றவன் மீண்டும் குனிந்து கொண்டான்.

 அவளும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கீழே செல்ல பார்க்க, “எங்க போற” என்று கேட்டான்.

 “இங்கிருந்து நான் என்ன பண்றது…” என்றவள், “சொல்ல மறந்துட்டேன் அத்த என்ன கீழ் ரூம்ல தங்கிக்க சொன்னாங்க” என்றபடி அபின்ஞானை பார்க்க, அவனோ மடிக்கணனியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

“சும்ம என்கிட்ட கேள்வி கேட்க வேண்டியது, பதில் சொன்னா ரியாக்ட் பண்றானா” என்று முனுமுனுத்த படி அங்கிருந்து சென்றாள்.

அபின்ஞான் கீழே வரும் போது இரவு எட்டு மணியாகி விட்டிருந்தது…

 எப்போதும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டது போல் சுழன்று கொண்டே இருப்பான், வீட்டில் இருப்பதே அரிதுதான்…

ஆபீஸே கதி என்று இருப்பான்…

இன்று அவன் வீட்டில் இருப்பது தான் அதிசயம்…

 பசுபதி, “தொழில் வட்டாரங்கள் குடும்பங்களை அழைத்து கட்டாயம் ரிஷப்சன் செய்ய வேண்டும்” என்று கூறியதால் இரவு உணவின் போது அனைவரும் அதைப் பற்றிய கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்…

“அப்பா ஒன் வீக்ல ரிசப்ஷன வச்சுக்கலாம்” என்று அபின்ஞான் கூற…

“முன்னமே ஹோல் புக் பண்ணனுமே, டைம் போதுமாடா” என்று பசுபதி கேட்க,

“கரன் கிட்ட சொல்லி இருக்கேன், அவன் ரிசப்ஷன் ஹோல் அண்ட் கேட்டரிங்க பாக்குறேன்னு சொன்னான்… மீதி வேலய நான் பார்த்துக்கிறேன்” என்று கூறினான் அபின்ஞான்.

 “ஓகேப்பா அப்ப எல்லாத்தையும் கரெக்டா அரேஞ்ச் பண்ணிடு” என்ற பசுபதி உணவை முடித்துக் கொண்டு தொலைக்காட்சியில் செய்தி பார்க்க ஆரம்பித்து விட்டார்…

அன்னபூரணி அம்மாள் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்க மகிமாவும் அவருக்கு உதவியாக கழுவிய பாத்திரங்களை அடுக்கிக் கொண்டு இருந்தாள்…

 வீட்டில் வேலைகள் செய்ய தாராளமாக வேலையாட்கள் இருந்தாலும் எப்போதும் சமையலை அன்னபூரணி அம்மாளே பார்த்து பார்த்து சமைப்பார்…

அதை யார் கையிலும் அவர் கொடுப்பதில்லை…

தானே தன் மக்களுக்கு சமைப்பதில் அவருக்கு பரம திருப்தி…

 அந்த நேரம் “மகி” என்ற ஒரு கத்தல் சத்தம்…

 அந்த வீட்டில் இவ்வளவு சத்தமாக கத்தி பேசி அடக்கி ஆளக்கூடிய ஒரே ஆள் அபின்ஞான் மட்டுமே…

 மகிமா கையை துடைத்தபடியே முன்னே செல்ல அவள் பின்னே அன்னபூரணி அம்மாளும் வந்தார்.

இரவு பத்து மணி ஆகிவிட்டது… நல்ல வேலை அதனால் பசுபதி தூங்கி விட்டிருந்தார்.

“நீ நம்ம ரூமுக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டானே பார்க்கலாம்.

மகிமாவின் கண்களோ அதிர்ந்து விரிந்து கொண்டன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அல்லவா அன்னபூரணி அம்மாள் கூறியதை கூறி விட்டு வந்தாள். அதுமட்டுமில்லாமல் அவனைப் பிரிந்து இருவரும் வருத்தப்பட அவர்கள் என்ன காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளா என்ன?

“அபி அத்தை சொன்ன…” என்று மகிமா ஏதோ கூற பார்க்க… அவள் கையை பற்றிக் கொண்டவன், “அதுதான் உன் வேல முடிஞ்சிருச்சே வா நாம போகலாம்” என்று அவள் கையை பிடித்து இழுக்க, அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

 அன்னபூரணி அம்மளுக்கு தன் மகனை மீறி பேசவும் முடியவில்லை. பேசினால் அவன் பேசும் பேச்சில் இரவு அவர் தூக்கம் தான் கெட்டு விடும்.

 மகிமா அவரை திரும்பி பார்க்க அவரோ தலையை குனிந்து கொண்டார்.

அவளை தன் பழுப்பு நிற விழிகளால் அழுத்தமாகப் பார்த்தவன், “அஞ்சு நிமிஷத்துல நீ ரூமுக்குள்ள இருக்கணும்…” என்றவன் தன் அறைக்குள் சென்று விட்டான்.

இன்னும் அவளுக்கு அபின்ஞானின் அறைக்குள் போகத் தயக்கமாக இருந்தது. முதல் முறை ஒரு அந்நிய ஆணுடன் தங்குவதற்கு அவளுக்கு சங்கடம்… இதுவரை அவள் யாருடனும் அறையை பகிர்ந்து கொண்டது கூட இல்லை…

 அன்னபூரணி அம்மாளுக்கும் சங்கடமாய் இருந்தது… என்ன கூறுவது என்றும் அவருக்கு தெரியவில்லை.. அதற்கென்று மகனின் விஷயத்தில் தலையிட்டு அவனை மிரட்டி உருட்டி காரியம் சாதித்தும் பழக்கம் இல்லை அவருக்கு… சத்தமில்லாமல் அங்கிருந்து தன் அறைக்குள் சென்று விட்டார்.

 அபின்ஞான் நாடகமாடி எதற்கு அவன் அறைக்குள் அவளை அழைக்கிறான் என்று தான் அவளுக்கு புரியவில்லை…

“ஒரு வேலை பெஸ்ட் நைட் கொண்டாட கூப்பிடுறானோ…” என்று அதிர்ந்து வாயில் கையை வைத்துக் கொண்டாள் மகிமா.

“சே ச்சே… நாவல் ரீட் பண்ணி என் மைண்ட் சரியான டர்ட்டி மைண்டா மாறிடுச்சு” தனக்குள் கூறிக்கொண்டவள், இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவள் ஒரு படபடப்புடனே மெதுவாக அபின்ஞான் அறைக்குள் நுழைந்தாள்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “என் தேடலின் முடிவு நீயா – 06”

Leave a Reply to Sudhaker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!