ஐந்தாறு நிமிடங்களிலே அவனது அந்த துடிப்பு குறைந்து விட்டது…
இசிஜி மெஷினை பார்த்த தாதி அவனையும் நன்றாக சோதித்து விட்டு, “மகிமாவை பார்த்து நீங்க டென்ஷன் ஆகாதீங்க… உங்க ஹஸ்பெண்ட் கான்சியன்ஸ்க்கு வந்துட்டு இருக்கிறார்… எந்த பிரச்சினையும் இல்ல அவருக்கு” என்று கூற…
அவர் சொல்வதை அவளால் நம்ப தான் முடியவில்லை…
ஆனா அவன் எதற்காக இவ்வாறு துடித்தான் என்று அவளுக்கு புரியவில்லை…
அதை வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை…
அவள் முக உணர்வை வைத்து அவள் மனதை கணித்திருக்க வேண்டும் அவர்…
இந்த ஆறு மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார், “எல்லாரும் நார்மலா எந்திரிக்க மாட்டாங்க… கோமால இருந்து எழுபும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிம்டம்ஸ் காட்டும். உங்க புருஷனுக்கு இந்த மாதிரி காட்டி இருக்கு பயப்படாதீங்க” என்று சிரித்தபடி படி அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே…
மெதுவாக கண்களை திறந்தான் அபின்ஞான்…
அவனுக்கோ கண்கள் கூசின…
கண்ணை திறந்து மூடி… அவன் இந்த ஆறு மாத காலமாக வாழ்ந்து கொண்டிருந்த இருட்டு உலகத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வர தன் கண்களை பழக்கிக் கொண்டிருந்தான்…
கண்களை நன்றாக திறந்து பார்த்தான்…
அவன் அருகே அவனை அன்பொழுக பார்த்த படி அன்னபூரணி அம்மாள் நின்றிருந்தார்…
அவரை பார்த்து, “அம்மா” என்று வாயாசைத்தான்.
அவன் வாயெல்லாம் வறண்டு போய் இருந்தது.
அவன் தலையை வருடியவர், “எங்கள ரொம்ப பயமுறுத்திட்ட அபி” என்றார் பெருமூச்சுடன்…
மகிமாவும் மெதுவாக அவனை நோக்கி வர, அவள் தன் அருகில் வருவதை கண்டு புருவம் சுருக்கி பார்த்த அபின்ஞான், அன்னபூரணி அம்மாளை பார்த்து, “யாரும்மா இந்த பிரக்னெட் லேடி” என்று கேட்டானே பார்க்கலாம்…
அன்னபூரணி அம்மாளுக்கோ அவன் கூறியதை கேட்டு மயக்கம் வராத குறை தான்…
அவனை அதிர்ந்து பார்த்தபடியே ஓரடி பின்னே சென்றாள் மகிமா…
அவனை சோதித்துப் பார்த்தவர், “மிஸ்டர் அபி இது யாருன்னு உங்களுக்கு தெரியுதா?” என்று அன்னபூரணி அம்மாலை சுட்டிக்காட்டி கேட்க,
“என் அம்மாவ எனக்கு தெரியாத டாக்டர்… எதுக்கு என் கிட்ட இப்படி எடக்கு மொடக்கா கேள்வி கேக்குறீங்க?” என்று அவரிடம் அவன் திருப்பிக் கேட்க,
அந்த வைத்தியரும் பல கோமா நோயாளிகளை பார்த்து அனுபவப்பட்டிருந்ததால் அதைக் கண்டு கொள்ளாது மகிமாவை காட்டி, “இவ யார்ன்னு தெரியுமா?” என்று கேட்டார்…
“திடீர்னு ஒரு பொண்ண காட்டி யாருன்னு கேட்டா எனக்கு எப்படி தெரியும் டாக்டர்” என்று அவன் இடக்காக கேட்க,
அவனை வெறித்து பார்த்த படி நின்றவள் முகத்திலோ தாங்க முடியாத வேதனை நிலவியது…
“நீங்க இப்ப எந்த வருஷத்துல இருக்கீங்க” அவர் மீண்டும் கேட்க,
அவரை லூசா என்பது போல் பார்த்தவன், “2024” என்று கூற மகிமா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்….
ஒரு வருடம் முழுவதும் நடந்ததை மறந்து விட்டானா…
வைத்தியரும் அன்னபூரணி அம்மாளை வெளியே அழைத்து வந்தவர், “பொதுவா கோமால இருந்து எழுந்தா சிலருக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்… சிலருக்கு ஒண்ணுமே ஞாபகம் இருக்காது… அப்படி இருந்தாலும் ஒரு சில நாட்களில் எல்லாம் ஞாபகம் திரும்பிடும்… சிலாக்களுக்கு லைப் லாங் ஒண்ணுமே ஞாபகம் வராது… இப்ப அவர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்… ஃபுல் பாடி செக்கப் ஒன்னு பண்றது பெட்டர்…” என்று கூறிவிட்டு சென்றார்…
அவன் எழுந்து விட்டதை கேள்விப்பட்ட உடனே பசுபதியும் வந்து விட்டார்…
அபின்ஞானின் அறையில் தான் மகிமா அன்னபூரணி அம்மாள் பசுபதி மூன்று பேரும் இருந்தனர்…
அந்த பெரிய மனிதருக்கும் இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று புரியவில்லை…
அவன் மறந்திருந்தாலும் இது மறைக்கக் கூடிய விஷயமா என்ன…
பசுபதி சங்கடமாக மகிமாவை பார்த்துவிட்டு அபின்ஞானை பார்த்தவர்… “அபி நீ இவள யாருன்னு கேட்டுட்டு இருந்தல்ல… இவதான் உன் பொண்டாட்டி” என்றார்.
அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தவன், “எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்று நம்ப முடியாமல் கேட்டான்…
“ம்ம்… கல்யாணமாகி உனக்கு குழந்தையும் பொறக்க போகுது” என்றவர், அருகில் இருந்த நாட்காட்டியை காட்டி, “நீ இப்ப 2025ல இருக்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே… ரிலாக்ஸா இரு…” என்றார்.
அவனால் தனக்கு திருமணம் முடிந்ததை ஏற்கவே முடியவில்லை. அருகே இருந்த மகிமாவை அவன் துளைப்பது பார்க்க, அவளும் அவன் பழுப்பு நிற விழிகளை ஆறு மாதங்களுக்கு பிறகு உயிரை கையில் வைத்துக் கொண்டு பார்த்தாள்.
அவன் புரியாத பார்வையை அவளால் எதிர் கொள்ளவே முடியவில்லை.
அவன் முன் கண்ணீர் வடிக்க விருப்பம் அந்த அறையிலிருந்து வெளியேரி விட்டாள்.
அவள் பார்வை அர்த்தம் அவனுக்கும் புரியவில்லை.
அவனுக்கு தனிமை தேவை என்பதை உணர்ந்த பசுபதி அன்னபூரணி அம்மாளுடன் வெளியே சென்றார்…
வெளியே வந்தவள் சோபாவில் அமைதியாக அமைந்து கொண்டாள்…
பசுபதியுடன் தான் மகாதேவும் வந்திருந்தான்… அவளை அணைத்தபடியே அவள் அருகே அமர்ந்து கொண்டவன், “டென்ஷன் ஆகாதே மகி… அவன் எழும்பினதே பெரிய விஷயம் தான்… இனி கவலைப்படாதே எல்லாமே சரியாகிடும்… நான் இப்ப அபிய பார்க்கல… என்ன மனநிலைல இருக்கான்னோ தெரியல… பொறகு வந்து பார்க்கிறேன்” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்…
ஏன் அவளுக்கு மட்டும் இத்தனை பிரச்சினைகள் என்று தெரியவில்லை…
அவன் எழும்பியதற்கு சந்தோஷப்படுவதா… இல்லை தன்னை மறந்ததை நினைத்து கவலைப்படுவதா என்றும் யோசிக்க முடியவில்லை…
அவள் மனதுக்கு சரியான அழுத்தமாக இருந்தது…
அடுத்த இரு நாட்களும் அவள் அவன் அரை பக்கமே செல்லவில்லை…
அன்னபூரணி அம்மாளும் அவளை புரிந்து கொண்டதால் அவரே அவனை பார்த்துக் கொண்டார்…
அபின்ஞான் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான்…
போசனையான உணவுகளும், ஏற்கனவே அவன் ஆரோக்கியமானவன் என்பதாலும் வேகமாக தேரி வந்து கொண்டிருந்தான்…
வீட்டில் நடமாடுகிறான்… வெளியே செல்கிறான்… தந்தையுடன் பேசுவான்… டிவி பார்ப்பான்…
ஆனால் அவன் கண்ணில் தான் மகிமா படவே இல்லை…
அன்று அவன் தந்தையிடம் கம்பெனியை பற்றி பேசி விட்டு வந்தவன் சாப்பாட்டு மேசையில் அமர அன்னபூரணி அம்மாள் அவனுக்கு உணவை பரிமாரிக் கொண்டிருந்தார்…
மகிமா தன் அறைக் கதவின் ஓரத்தில் நின்று மறைந்து நின்று பார்த்துக் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்குத் தெரியாமல் அவன் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவன் முன்னால் சென்று நின்று அவன் பார்க்கும் பார்வையை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை…
அன்னபூரணி அம்மாளை அழுத்தமாகப் பார்த்தவன், “அம்மா உண்மையிலுமே அவ என் பொண்டாட்டி தானா?” என்று கேட்க, ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமா சுவரில் சாய்ந்து நின்று கண்ணை விரித்தாள்.
“ஏண்டா அப்படி கேக்குற” என்று அதிர்ந்து கேட்டார் அன்னபூரணி அம்மாள்…
“கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க… நான் எழும்பி மூணு நாளாச்சு… இன்னும் அவ ஏன் பக்கம் கூட திரும்பி கூட பார்க்கல” என்றான் கராறான குரலில்…
“சரி அதுக்குன்னு இப்படி விலகியா இருப்பா… இனி அவ என்ன பார்க்கட்டும்” என்றான் அதிகாரமாக,
திருமணத்தின் பின் கொஞ்சம் மென்மையாக மாறியிருந்தான்…
ஆனால் அவன் பிறவிக் குணம் முழுதாக மாறிப் போய்விடுமா என்ன…
அவரும் மகிமாவை சென்று அழைக்க, அவளும் அவன் அருகே வந்து அவனுக்கு தயங்கியபடியே பரிமாறினாள்…
தலை குனிந்த படி பரிமாறிக் கொண்டிருந்தவளின் கையை பற்ற சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள், “நீயும் சாப்பிடல்ல தானே… என் கூடவே சாப்பிடு” என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினான்.
அவளும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, “என்ன நெனச்சா நீ இவ்ளோ மெலிஞ்சு போய் இருக்க” என்ற அவனது கேள்வியில் விழுங்கிய உணவு அவள் தொண்டையில் சிக்கிக் கொள்ள இரும ஆரம்பித்தாள்.
“சரியா பார்த்தா கோமாவிலிருந்து எழுந்த என்ன நீ தான் கவனிச்சிருக்கணும்… ஆனா நீ என்ன திரும்பி கூட பார்க்காம இருக்க… நான் தான் உன்ன தேடி வந்து கவனிக்க வேண்டியதா இருக்கு” என்றவன் அவள் தலையில் தட்டி நீரை கொடுத்தான்…
அவள் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, “எதுக்கு இவ்ளோ ஷக்காகுற… சாப்பிட்டு முடிஞ்சதும் என் ரூமுக்கு வா… உன் கூட பேசணும்” என்றவன் அறைக்குள் நுழைய, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் பின்னாலே சென்றாள்…
என்ன கதைக்கப் போகிறானோ என்ற பதற்றத்தில் அவள் கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்.
கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் தன் அருகில் அமருமாறு சைகை செய்ய அவளும் அமர்ந்து கொண்டாள்…
“மகிமா தானே உன் பெயர்” என்று கேட்டான்…
“ஐயோடா… மறுபடியும் முதலில் இருந்தா” என பெருமூச்சு விட்டவள், ஆம் என்பது போல் தலையசைத்தாள்…
“வாய தொறந்து பேச மாட்டியா என்ன?” என்று கேட்டான்…
அவளுக்கு பழைய அபின்ஞான் தான் அவள் கண் முன்னால் வந்தான்…
“பழைய படி பொறுக்கியா மாறிடான்” என்று நினைத்துக் கொண்டவள், “என் பெயர் மகிமா தான்” என்றாள் அழுத்தமாக…
இப்போது அவனிடம் எதை சொல்வது… முதலில் அவனை ஏமாற்றியதை பற்றியதா? அல்லது மகாதேவின் தங்கை என்று கூறுவதா? எதை கூறினாலும் அவன் மனதில் அவளை பற்றி நல்ல அபிப்பிராயம் வரப்போவதில்லையே…
எச்சிலை கூட்டு விழுங்கிக் கொண்டவள், “சொல்றது போல பெருசா எதுவும் இல்லை… எனக்கு அம்மா அப்பா இல்ல ஒரு அண்ணா மட்டும் தான்… அவன் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்” என்றாள் பட்டும் படாமல் சமாளிப்பாக…
“ஓஹ்… நாம எப்படி கல்யாணம் பண்ணோம்… லவ் மேரேஜா இல்லன்னா அரேன்ஞ்ச் மேரேஜா?” என்று கேட்டான்…
“ரெண்டும் இல்லடா நீ என்ன மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று நினைத்தவள், “லவ் மேரேஜ்” என்றாள்…
“நான் உன்ன லவ் பண்ணேனா… ஐ காண்ட் பிலிவ் திஸ்” என்றான் அதிர்ச்சியாக…
“தெரியல” என்று வாய் தவறி சொல்லிவிட்டவள் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்…
“என்னது?” என்று சந்தேகமாக அவளை பார்க்க…
“ஐயோ ஐயோ… நானே உலரி வெச்சிடுவேன் போலிருக்கே” என நினைத்தவள், “நீங்க வேற யாராவது லவ் பண்ணா இல்லையான்னு தெரியல” என்றாள்…
நெற்றியை அழுத்தமாக வருடியவன், “நான் உன்ன லவ் பண்ணான்னு தான் கேட்டேன்… எதுக்கு லூசு மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்க… நானும் ஆரம்பத்தில் இருந்தே பாத்துக்கிட்டு இருக்கேன்… திருடி மாறி முழிச்சிட்டே இருக்க… ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி என்கிட்ட மறைக்கிறியா என்ன?” என்று புருவம் சுருக்கி வினவ,
“அடப்பாவி… என்ன வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி குழந்தையை குடுத்துட்டு என்ன கேள்வி எல்லாம் கேட்கிறான் பாவி” என்னை நினைத்த வேலைக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவனோ அவள் வாய் மூலமாக தனக்கும் அவளுக்கும் இடையில் நடந்ததை கறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஆனால் வெளிப்படையாக அதை அவளிடம் கேட்கத்தான் அவனுக்கு சங்கடமாக இருந்தது.
“நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன், நீ இன்னும் பதில் சொல்லல” என்றான் அதட்டலாக…
“ம்ம்… நீங்க லவ் பண்றேன்னு தான் சொன்னீங்க” என்றாள்…
“அப்ப நீ என்னை லவ் பண்ணலையா?” என்று அடுத்த கேள்வி வர,
“சரியான கேள்விக்கு பொறந்தவனா இருக்கான்” என்று நினைத்தவள், “நானும் உங்கள லவ் பண்றேன்” என்றாள்..
“அப்ப ஏன் இவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்க” என்று இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை பார்த்து கேட்டானே பார்க்கலாம்.
“இன்னும் ஒண்ணுமே ஞாபகம் இல்ல, ஆனா குசும்ப பாரேன்” என நினைத்தவள் ஒன்றும் பேசாமல் அவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
அவள் தொளில் கையை போட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டவன், தன் பழுப்பு நிற விழிகளால் அவளை நோக்கி, “நான் ஒரு பொண்ண லவ் பண்ணுவேன்னு நினைச்சு கூட பார்க்கல” என்றவன்… “சரி அத விடு… இனி நீ தான் என் கூடவே இருந்து என் வேலய பார்த்துக்கனும்” என்றான் அதிகாரமாக…
‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்…
அந்த நேரம் மீனாட்சியும் அபின்ஞானை வந்தார்…
மகிமா அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.
அவன் அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவர், “அபி… நீ இப்போ ஓகே தானே” என்று அவன் அருகில் வந்தவர் கேட்க, “ஓஹ் அத்தை… இப்ப எல்லாம் சரியாயிடுச்சு… சஞ்சனா எப்படி இருக்கா” என கேட்டான்.
“ம்ம் அவளுக்கு என்ன அவ நல்லா இருக்கா… நீதான் எங்கள நல்லா பயமுறுத்திட்ட… ஆமா நீ இந்த சிறுக்கிய மறந்துட்டியாமே” என்று மகிமாவை இகழ்ச்சியாக பார்த்து கேட்க,
“ம்ம்…” என்றான் அபின்ஞான்…
“இவ உனக்கு பொருத்தமே இல்ல… எதுக்கு இவள கூடவே வெச்சிருக்க” என்று அவர் தன் வழமையான பல்லவியை ஆரம்பிக்க…
“அண்ணி” என்று அழைத்த அன்னபூரணி அம்மாள், “உங்கள உங்க அண்ணா பேசுறார்” என்று கூற,
பசுபதி அங்கே இருப்பதை அறிந்து சத்தமில்லாமல் சென்று விட்டார்…
அன்று இரவு நீண்ட நாட்களில் பின் சேர்ந்து மகிழ்ச்சியாக உண்டானர்…
சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவள் படுக்க ஆயத்தமாக… அவள் அருகே சென்றவன்… அவள் வயிற்றைத் தொட்டு பார்த்து, “ட்வின்சா” என்று அவள் வயிற்றை வருடியபடியே ஆர்வமாக கேட்டான்…
மகிமாவும் புன்னகையுடன் “ம்ம்” என்றாள்.
வெளியே அவள் புன்னகைத்தாலும் அவன் தன்னை புரியாது பார்க்கும் ஒவ்வொரு பார்வைகும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் அருகருகே படுத்துக் கொண்டனர்.
நடு ஜாமத்தில் எழும்பி அவனை பார்த்துக் கொண்டிருப்பாள்.
இவ்வளவு நாளும் அவளுக்கு நிம்மதியான உறக்கம் என்பதே இல்லை.
அவனை நினைத்து அவள் மனம் எப்போதும் நிலையில்லாமல் துடித்துக் கொண்டே இருக்கும்.
அவன் எழும்பியதன் பின்னரும் அதே நிலைதான்.
ஆனால் இன்று தான் அவன் அருகே நிம்மதியாக உணர்ந்தாள்.