என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்)

5
(26)

பிழை – 50 (இறுதி அத்தியாயம்)

“ஐயோ! எதுக்குங்க இப்போ இதெல்லாம் பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க.. இது என்ன முதல் குழந்தையா இவ்வளவு பெருசா பங்ஷன் செய்றதுக்கு சிம்பிளா வீட்டோட செஞ்சுக்கலாமே” என்று பாரிவேந்தனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் இனியாள்.

“ஷெட் அப் டி.. நம்ம நிலா பேபி உன் வயித்துக்குள்ள இருக்கும் பொழுது இதை எல்லாம் நம்மளால செஞ்சு பாக்க முடியல. அப்போ நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ அது எல்லாத்துக்கும் சேர்த்து நீ சந்தோஷமா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். வாய மூடிக்கிட்டு சும்மா இருடி” என்றான் அதட்டலாக.

அதன் பிறகு பாரிவேந்தன் வர வழைத்திருந்த பியூட்டிஷியன் அவளை அழகாக தயார்படுத்தி முடித்திருந்தார்.

இன்று தான் இனியாளுக்கு ஏழாம் மாதம் வளைகாப்பு விழா நடத்த பாரிவேந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாராயணன் தாங்கள் இந்த விசேஷத்தை நடத்துவதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் பாரிவேந்தன் அதை ஒப்புக் கொள்ளாமல் மறுத்து விட்டான்.

இனி இனியாளுக்கு அனைத்தையுமே நான் தான் செய்வேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டான். அவனை மீறி செய்ய முடியாமல் நாராயணனும் அமைதியாகிவிட்டார்.

நித்யாவிற்கு தான் காதில் புகை வராத குறையாக இருந்தது.

அத்தனை பிரமாண்டமாக அவளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான் பாரிவேந்தன்.

முதல் பிரசவத்திலேயே அவளுக்கு இதையெல்லாம் செய்து பார்க்க முடியாமல் போனதால் அதற்கும் சேர்த்து மிகச் சிறப்பாக இன்று இவ்விழாவை நடத்த முடிவெடுத்து விட்டான்.

தங்க சிலை போல் பிங்க் நிற பட்டுடுத்தி அதற்கு ஏற்ப அலங்காரத்துடனும், அணிகலன்களுடனும் தயாராக அழைத்து வரப்பட்ட இனியாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் பாரிவேந்தன்.

வழக்கம் போல் அனைவரும் வளையலை அணிவித்து முடிய இறுதியாக அவளுக்கு இரு வைர வளையல்களை அணிவித்தவன், “போன தடவை உன்னை நிறையவே ஹர்ட் பண்ணிட்டேன். பட், இனி அப்படி ஒரு சூழ்நிலையில் உன்னை தவிக்க விட மாட்டேன். ஐ லவ் யூ சோ மச் டி” என்றான் உணர்வு பூர்வமாக.

அவளின் கண்களும் கூட உயிர்ப்புடன் புன்னகைக்க, “நானும் தான்!” என்றாள் வெட்கத்தோடு.

அப்பொழுது அவர்கள் அருகில் ஓடி வந்த யாழ்நிலா, “டேடி நானும் மம்மிக்கு வலையல் போடணும்” என்றாள் மழலை மொழியில்.

“ஓ! தாராளமா போடலாமே” என்றவாறு அவளின் கையை பிடித்து வளையலை அணிவிக்கச் செய்தான் பாரிவேந்தன்.

இந்த அழகிய தருணத்தை கேமராக்கள் அழகாக தங்களுக்குள் புதைத்துக் கொண்டது.

“மம்மி எனக்கு தம்பி தான் வேணும்”.

“ஓகே டா.. மம்மிக்கு தம்பி பாப்பாவையே பொறக்க வச்சிடலாம் ஓகேவா” என்று யாழ்நிலாவுடன் சேர்ந்து பாரிவேந்தனும் ஹை ஃபை அடித்துக் கொண்டான்.

அடுத்த அடுத்த நாட்களும் வேகமாக நகர்ந்தன.

யாழ்நிலா உடன் நாராயணன் கார்டனில் விளையாடிக் கொண்டு இருந்தார்.

அவர்கள் அருகில் சென்ற இனியாள், “பார்த்துப்பா அடி பட்டுட போகுது. நீங்க கொஞ்சம் நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்க”.

“என் பேத்தி கூட விளையாடுறதை விட எனக்கு இந்த ரெஸ்ட் எல்லாம் முக்கியமே கிடையாது மா. எனக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதே” என்றவரோ சற்று தயக்கமாக, “உன்னை அப்பா ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன் இல்ல சாரி டா”.

“என்னப்பா பேசுறீங்க நீங்க.. அதெல்லாம் விடுங்க நடந்ததையெல்லாம் மறந்திடுவோம் திரும்ப பழசை பத்தி பேச வேண்டாம்”.

“ஒவ்வொரு பொண்ணுக்கும் தல பிரசவம்ன்றது மறு ஜென்மம் மாதிரினு சொல்லுவாங்க. உனக்கும் அப்படி தானே ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். உன்னை நாங்க எல்லாரும் அப்படியே விட்டுட்டோம்ல.. நீ போன பிறகு தான் நான் அதை உணர்ந்தேன் தப்பு பண்ணிட்டோம்னு தோணுச்சு. ஆனா, திரும்ப உன்னை வந்து கூட்டிட்டு வர அளவுக்கு என் உடம்புல அப்போ தெம்பு இல்லாம போயிடுச்சு. உன்னை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். எங்க இருக்கியோ, எப்படி இருக்கியோனு ரொம்ப கவலைப்பட்டேன். நல்ல வேளை அந்த கடவுள் தான் உன்னை மாப்பிள்ளை கையில் ஒப்படைத்திருக்கார்”.

“நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லப்பா.. நமக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்.  எத்தனை கஷ்டத்தை கடவுள் கொடுத்தாலும் அதிலிருந்து வெளியில் வருவதற்கும் நமக்கு உதவி பண்ணுவாரு.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” என்று அவரை சமாதானம் செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

இனியாளின் பிரசவ தேதியும் வந்து சேர்ந்தது. சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாரி வேந்தனை போலவே அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் இனியாள்.

யாழ்நிலாவிற்கோ தனக்கு தம்பி பிறந்ததில் அத்தனை மகிழ்ச்சி‌ துள்ளி குதித்துக் கொண்டிருந்தாள்.

இம்முறையும் பாரிவேந்தன் தான் இனியாளுக்கு பிரசவம் பார்த்தான்.

என்ன தான் அடுத்தவர்களுக்கு அவன் இலகுவாக பிரசவம் பார்க்கும் பெரிய மருத்துவனாக இருந்தாலும் கூட, தன் மனைவிக்கு என்று வரும் பொழுது ஒரு நொடி பதறி தான் விடுகிறான்.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் தன்னையும் மீறி அவளின் வலியும் வேதனையும் இவனையும் வலிக்கத்தான் செய்கிறது.

அவள் குழந்தையை பிரசவிப்பதற்குள்ளாகவே இவனோ பலமுறை மனதளவில் வலியை அனுபவித்து விட்டான்.

சில நாட்கள் கழித்து,

“குழந்தை கொழு கொழுன்னு அழகா இருக்கான் பாரு.. சின்ன வயசுல நீயும் இப்படித்தான் இருந்த.. சரி, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று முத்துலட்சுமி ஆவலாக தன் மகனை பார்த்து கேட்கவும்.

பாரிவேந்தனின் பார்வையோ இனியாளை நோக்கியது.

“உங்க மருமக ஏதோ பேர் யோசிச்சு வச்சிருக்காளாம். அந்த பெயரை தான் வைக்கணும்னு ஒரே பிடிவாதம்”.

உடனே அனைவரின் பார்வையும் இனியாளை தழுவ..

“யாழ் வேந்தன்” என்றாள் பாரி வேந்தனையே பார்த்துக் கொண்டு.

“ம்ம்.. பேர் ரொம்ப நல்லா இருக்குமா” என்று நாராயணன் புன்னகைக்கவும்.

மகிழ்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி அவர்களின் நாட்கள் உருண்டோட தொடங்கியது.

இரண்டு வருடங்கள் கழித்து,

“என்ன அண்ணா வேந்தன் என்ன பண்றான்?” என்ற முத்துலட்சுமியை பார்த்து புன்னகைத்த நாராயணன், “ஒரே சேட்டை தான் மா ஒரு இடத்தில் நிற்க மாட்டேங்குறான்”.

“நிலா என்ன பண்றா?” என்று அவர் பதிலுக்கு கேள்வி எழுப்பவும்.

“நிலா ரொம்ப சமத்து குட்டி அண்ணா அப்படியே இனியாள் மாதிரி கதை சொல்லி தூங்க வச்சா போதும். அவளே எல்லா வேலையும் சரியா பண்ணிடுவா”.

யாழ்நிலாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முத்துலட்சுமி உடையதாகவும், யாழ் வேந்தனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நாராயணன் உடையதாகவும் அவர்கள் இருவருமே பிரித்துக் கொண்டனர்.

பாரிவேந்தனும், இனியாளும் மருத்துவமனைக்கு சென்று அங்கிருக்கும் நோயாளிகளை கவனித்தால் மட்டும் போதும் வீட்டை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டனர்.

இதுவே அவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுக்க. இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் கூட இருவரும் காதல் ஜோடிகளை போல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

முதலில் காதலித்து..

பிறகு, திருமணம் செய்து..

அதன் பிறகு, குழந்தை பெற்றுக் கொள்வார்கள்..

ஆனால், இவர்களின் வாழ்விலோ அனைத்துமே தலைகீழாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

முதலில் பிள்ளை பெற்றவர்கள்..

பின்னர், திருமணம் செய்து..

இப்பொழுதோ காதலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இருவரும் ஜோடியாக கை கோர்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழையவும்.

“என்னப்பா வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்று கேள்வி எழுப்பிய முத்துலட்சுமி, “இங்க வா மா இனியாள் கொஞ்ச நேரம் உட்காரு.. மாசமா இருக்க பொண்ணு நல்லா ரெஸ்ட் எடுக்கணும். சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற” என்று கோபித்துக் கொண்டார்.

ஆம், இனியாள் இப்பொழுது மூன்றாம் முறையாக தாயாகப் போகிறாள்.

தன் ஏழு மாத வயிற்றை தூக்கிக்கொண்டு மூச்சு வாங்க நடந்து வந்தவள், “நான் ரூமுக்கு போயிட்டு பிரஷ் ஆகிவிட்டு வரேன் அத்தை” என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள்.

அவளின் பின்னோடு பாரி வேந்தனும் அறையை நோக்கி சென்றுவிட.

முத்துலட்சுமியும் சிரிப்போடு தன் பேத்தியை பார்க்கத் தொடங்கி விட்டார்.

“என்னடி ரொம்ப டயர்டா இருக்கா?”

“ம்ம்.. பின்ன.. கொஞ்சமாவது கேப் விடணும். வேந்தனுக்கு இப்போ தான் டூ இயர்ஸ் ஆகுது. அதுக்குள்ள அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாகுனா எப்படி?” என்று நொடிந்து கொண்டு குளியல் அறைக்குள் சென்றவள், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து சோர்வாக காலை நீட்டியவாறு கட்டிலில் அமரவும்.

அவளுக்கு எதிர்ப்புறம் அமர்ந்தவன் அவளின் கால்கள் இரண்டையும் தன் மடியின் மீது ஏந்தியவாறு மெதுவாக அவளின் காலை பிடித்து விட தொடங்கினான்.

இது அன்றாடம் அவர்களின் வீட்டில் நடக்கும் விஷயம் தான். அவள் என்ன தான் வேண்டாம் என்று மறுத்தாலும் இவன் விடமாட்டான்.

ஆரம்பத்தில் அவனின் செயல் இவளுக்கு நெருடலாக இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அவன் அன்போடு செய்வதை முழு மனதோடு ஏற்க தொடங்கி விட்டாள்.

“போதும் விடுங்க” என்றவாறு அவன் மடியில் இருந்து தன் காலை நகர்த்தியவள்.

அவன் அருகில் சென்று அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

அவளின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தவன், “நம்ம ரெண்டு பேர் லைஃப்லயும் என்னெல்லாமோ நடந்து எப்படி எல்லாமோ போய் கடைசியில நாம இப்படி ஒன்னு சேர்ந்துட்டோம் இல்ல” என்றவனுக்கு இன்னமுமே அவர்களின் வாழ்க்கையை நினைத்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

அவனுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவளுக்குமே அவ்வபொழுது இந்த ஆச்சரியம் எழுவதுண்டு.

“என் வாழ்க்கையிலேயே நான் விட்ட பெரிய பிழை நீ தான்.. ஆனா, இப்போ அந்த பிழையின் திருத்தமும் நீ தான்.. பிழைய கூட அழகா திருத்தி என் வாழ்க்கையையும் அழகா மாத்தி கொடுத்துட்ட லவ் யூ டி” என்றவாறு அவளின் நெற்றியில் நெகிழ்ச்சியோடு அழுத்தமாக இதழ் பதித்தான்.

தன் தந்தையின் நெகிழ்ச்சியை உணர்ந்த அவர்களின் குழந்தையும்

வயிற்றுக்குள் துள்ளி குதிக்க துவங்கியது.

அவன் பிழையின் திருத்தமாக அவளும்…

அவள் பிழையின் திருத்தமாக அவனும்…

***** முற்றும் *****

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்)”

Leave a Reply to Manish Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!