அடுத்து வந்த ஒரு வாரமும் பாரிவேந்தன் கான்ஃபரன்ஸிற்காக தயாராகுவதிலேயே பிஸியாக இருந்தான். ஆகையால் யாருமே அவனை தொந்தரவு செய்ய முயலவில்லை.
மிகப் பெரிய அளவில் நடக்கவிருக்கும் கான்ஃபரன்ஸ் அது..
முக்கிய மருத்துவர்கள், மருத்துவ துறையை சார்ந்தவர்கள் என அங்கே வருகை புரிய போகும் அனைவருமே பெரிய பெரிய ஆட்கள்.
பாரிவேந்தன் இப்பொழுது தான் வளர்ந்து வரும் மருத்துவன். அவனுக்கு அங்கே தன் படைப்பை பிரசன்டேஷன் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமாக தான் அனைவருக்கும் பட்டது.
பாரிவேந்தன் மட்டுமல்லாமல் அரவிந்தும் விதுஷாவும் கூட அக்கான்ஃபரன்ஸிற்கு அவனுடன் செல்ல இருக்கின்றனர். ஆனாலும் அங்கே பங்கேற்க போவது என்னவோ பாரிவேந்தன் மட்டும் தான். இவர்கள் இருவருக்கும் அவ்வாய்ப்பு அமையவில்லை.
இந்த ஒரு வாரம் தன் கவனம் முழுவதையும் பிரசன்டேஷன் தயார் செய்வதிலேயே செலுத்தி கொண்டு இருந்தான்.
இந்த ஒரு வாரத்தை கடப்பது விதுஷாவிற்கும் அரவிந்திற்கும் தான் பெரும் பாடாக இருந்தது.
விதுஷாவிற்கோ பாரியை அவள் பார்க்கும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஏதோ ஒரு வித ஈர்ப்பு அவன் மேல் கூடிக் கொண்டே போனது.
அவளின் மனநிலை மாறுவதை கவனித்துக் கொண்டு இருந்த அரவிந்திற்கு தான் இதய துடிப்பும் ரத்த அழுத்தமும் தாறுமாறாக ஏறியது.
எங்கே இந்த இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு பாரியின் மேல் காதல் ஏற்பட்டு விடுமோ என்று உள்ளுக்குள் பதறிக் கொண்டே இருந்தான்.
முடிந்தவரை அவளின் சிந்தனையை மாற்றும் பொருட்டு அவளிடம் ஏதாவது பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான். எதையாவது பேசி அவளின் மனதில் இருக்கும் பாரியின் மேலான எண்ணத்தை மாற்ற அவனும் முயற்சித்துக் கொண்டு தான் இருந்தான்.
வேறு என்ன செய்ய முடியும் இப்படியான சூழலில் தன் காதலை அவளிடம் உரைக்க முடியுமா என்ன.. மனதளவில் பாரியின் மீது இருக்கும் சிறிய ஈர்ப்பு காதலாக மாறிவிட்டாள்.
அதனால் இவனின் காதலை அவள் நிராகரித்து விட்டாள் என்று என்னவெல்லாமோ எண்ணம் எழுந்து அவனின் மனதை அழுத்தியது.
மூவரும் சேர்ந்து கான்பரன்ஸிற்கு புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. பாரிக்கோ ப்ரசன்டேஷனை தவிர்த்து வேறு எதிலுமே அவனின் சிந்தனை செல்லவில்லை.
அவனின் முழு கவனமும் இன்று அவன் பேச போவதை பற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அதில் விதுஷாவின் பார்வை மாற்றம் கூட அவனின் கண்களுக்கு தென்படவில்லை.
ஆனால் அரவிந்திற்கு தென்படாமல் விட்டுவிடுமா என்ன..
நாளை எப்படியாவது தன் மனதில் இருப்பதை பாரியிடம் கேட்டு விட வேண்டும் என்ற ஆவலோடு பயணப்பட்டு கொண்டிருந்தாள் விதுஷா.
விமானம் தரையிறங்கியதும் தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த அறையை அடைந்தனர். மறுநாள் கான்பிரன்ஸ் ஆரம்பம் ஆகிறது. அன்றைய நாள் முழுவதும் பாரிவேந்தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
அரவிந்தும் விதுஷாவும் தான் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்க முடியாமல் சற்று நேரம் காலார நடந்து கொண்டு இருந்தனர்.
விதுஷாவின் முகமோ புன்னகையை பூசி இருந்தது.
“எனக்கு ரொம்ப எக்ஸ்சைட்டடா இருக்கு அரவிந்த் பாரி என்ன சொல்ல போறான்னு தெரியல”.
“எனக்கு என்னமோ நீ ஓவரா எக்ஸைட் ஆகுறியோனு தோணுது விது. இன்னும் பாரிகிட்ட இதை பத்தி பேசக்கூட இல்ல அதுக்குள்ள நீ ஓவரா கற்பனை பண்ணாத”.
அவனின் வார்த்தையில் முகம் சுணங்க, “ஏன்டா இப்படி எல்லாம் சொல்ற பாரிக்கும் என்னை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்”.
“நான் ஒன்னும் இல்லன்னு சொல்லலையே.. பிடிக்கும் தான் ஆஸ் அ ஃப்ரெண்டா பிடிக்கும். லைஃப் பார்ட்னரா அவனால் உன்னை பார்க்க முடியுமான்னு தெரியாதுல. சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கீங்க உங்க வீட்ல பேசினதும் நீ உன் மனசை மாத்திக்கிட்ட மாதிரி அவனும் மாத்த சம்மதிக்கணும் இல்ல.. ஒருவேளை, அவன் உன்னை பிரண்டா மட்டும் தான் பார்க்கிறேன்னு சொல்லிட்டான்னா..”.
இந்த சந்தேகம் அவளுக்குள்ளும் அவ்வபொழுது இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது அவனை நோக்கி காந்தமாய் ஈர்க்கும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளின் நெற்றி யோசனையில் சுருங்குவதை கவனத்த அரவிந்த் எப்படியாவது அவள் பாரியிடம் இதை பற்றி பேசுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, “இங்க பாரு விது அவசரப்பட்டு நீ இதை பத்தி பேசி உங்களுடைய பிரண்ட்ஷிப்குள்ள ஏதாவது பிராப்ளம் வந்திடுமோனு தான் எனக்கு பயமா இருக்கு. எதுக்கும் இதை பற்றி பாரிகிட்ட பேசணுமானு நல்லா யோசிச்சுக்கோ”.
“என்னடா இப்படி எல்லாம் சொல்ற.. இன்னைக்கு பாரிகிட்ட கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் இதை பத்தி பேசணும்னு நான் என் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டேன். நான் பேசலைனாலும் எப்படியும் வீட்டில் இருக்கிறவங்க பேச தான் போறாங்க. அதுக்கு நானே பேசிட்டா அவன் மனசுல என்ன இருக்குன்னு ஓபனா சொல்லிடுவான் இல்ல”.
“அதுக்கு இல்ல விது..”.
“ப்ளீஸ் அரவிந்த் நீ எதையும் பேசி என்னை கன்பியூஸ் பண்ணாத. என்ன நடந்தாலும் சரி கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் நான் பாரிகிட்ட இதை பத்தி பேச தான் போறேன். பேசி அவன் இல்லைனு சொல்லிட்டான்னா இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுடுவேன். இதனால் நிச்சயமா எங்க பிரண்ட்ஷிப்குள்ள எந்த பாதிப்பும் வராது. சப்போஸ் அவன் ஓகே சொல்லிட்டா வீட்டுல சொல்லி நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு பேசலாம்” என்று விட்டு அவள் இலகுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அரவிந்திற்கு தான் அதற்கு மேல் அசைய முடியவில்லை.
சட்டென்று அவனின் மனதிற்குள் வேறு ஒரு யோசனை வர. அதை செயல்படுத்தலாமா வேண்டாமா என்று தடுமாற்றத்துடனே தன் அறை நோக்கி சென்று விட்டான்.
அன்றைய இரவு முழுவதும் அதே எண்ணம் தான் அவனை அலைக்கழித்தது. ஒரு வழியாக வேறு வழி இல்லை செய்து தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் கண்ணயர்ந்தான்.
மறுநாள் கான்பரன்ஸ் நல்ல விதமாக முடிந்தது. நிறைய பாராட்டுகளையும் கை தட்டல்களையும் பெற்றுக் கொண்டே பாரிவேந்தன் மேடையை விட்டு கீழ் இறங்கினான்.
இப்பொழுது தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியேறியது.
விதுஷா முதல் ஆளாக கீழ் இறங்கியவனுக்கு கை குலுக்கியவள், “சூப்பர் டா.. ஒரு கலக்கு கலக்கிட்ட இப்போ உனக்கு சந்தோஷம் தானே”.
அவளின் தோளை சுற்றி கையை போட்ட பாரிவேந்தன் ஒற்றை கையை தன் நெஞ்சின் மீது வைத்தவாறு, “இப்போ தான் டி ரிலாக்ஸா இருக்கு. லாஸ்ட் பியூ டேஸ் எதுலயுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியல. மண்டைக்குள்ள இந்த கான்பரன்ஸ் தான் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ எல்லாம் நல்ல படியா முடிச்ச பிறகு தான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு” என்று இலகுவாக அவன் கூறவும்.
அவர்கள் இருவரின் நெருக்கமும் அரவிந்துக்குள் கோபத்தீயை மூட்டியது.
இது நாள் வரையிலும் பலமுறை இப்படி நெருக்கமாக இருவரும் இருந்திருக்கின்றனர். அப்பொழுது எல்லாம் அவர்களை பார்த்த அரவிந்திற்கு இதை பெரிதாக எடுத்துக் கொள்ள தோன்றவில்லை.
ஆனால் இன்றோ இதை அப்படியே இலகுவாக கடந்து செல்ல முடியவில்லை. ஏனெனில், விதுஷாவின் பார்வை பாரியின் மேல் படியும் விதம் அரவிந்திற்குள் சொல்லல்லா கோபத்தை தூண்டியது.
அன்றைய இரவு உணவும் அவர்களே ஏற்பாடு செய்திருந்தனர். மூவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து முடியவும் தன் மனதில் இருப்பதை பாரியிடம் வெளிப்படுத்த பதட்டம் கலந்த படபடப்போடு காத்துக் கொண்டிருந்தாள் விதுஷா.
ஆனால் விருந்து முடிந்த பிறகு கை கழுவிவிட்டு வருவதாக சொல்லி சென்ற பாரி எங்கு தேடியும் அவள் கண்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அரவிந்தின் இதழில் மட்டும் கோணல் புன்னகை.
அதற்கான அர்த்தம் அவன் மட்டுமே அறிந்த உண்மை.
“என்னடா பாரியை எங்க தேடியும் ஆளே காணும்” என்று தன் பார்வையால் அவ்விடத்தை அலசி ஆராய்ந்த படி அரவிந்திடம் அவள் கேள்வி எழுப்பவும்.
“எனக்கு என்னடி தெரியும்.. ஒருவேளை டயர்டா இருக்குனு ரூம்ல போய் படுத்துட்டானோ”.
“என்னடா இன்னைக்கு தான் அவன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா பேசணும்னு நினைச்சேன்”.
‘அவன் இங்க இருந்தா தான நீ ஓப்பனா பேசுவ.. இனி நீயே நினைச்சாலும் அவன் கிட்ட உன்னால் பேச முடியாது. விதுஷா இந்த அரவிந்துக்கு மட்டும் தான்’ என்று வன்மமாக எண்ணிக் கொண்டான்.
மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு இங்கு இருந்து புறப்படுவதாக இருந்தனர். அதன்படி விதுஷாவும் அரவிந்தும் உணவு உண்ணும் இடத்தை வந்தடைந்தனர்.
பஃபே முறையில் அங்கே உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
“என்னடா இந்த பாரியை இன்னும் காணும். அப்படி எங்க தான் போனான். கால் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது. மூணு பேரும் ஒண்ணா தானே இருந்தோம் நம்மகிட்ட எதுவுமே சொல்லாம எங்க போனான்” என்று புலம்பிக் கொண்டே கையில் தட்டை ஏந்தியவாறு நடந்து வந்து கொண்டிருந்த விதுஷாவின் கால்கள் அப்படியே ஒரு நிமிடம் நின்றது.
அவள் தன்னுடன் நடக்காமல் நின்றதும் அவளை திரும்பி பார்த்த அரவிந்த் அவள் பார்வை போகும் திசையில் பார்த்தான்.
பாரிவேந்தன் தான் அங்கே என்னவோ போல் அமர்ந்திருந்தான்.
சட்டென இருவரும் கையில் இருந்த பிளேட்டை அருகில் வைத்து விட்டு அவனை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினர்.
அரவிந்திற்கு முன்னதாக பாரி வேந்தனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்த விதுஷா, “என்ன ஆச்சு பாரி நைட்ல இருந்து உன்னை நான் தேடிக்கிட்டு இருக்கேன் எங்க போன நீ?”.
அரவிந்த் அவனிடம் எந்த ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. அவனின் முகத்தை நோட்டம் விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“என்னடா ஆச்சு ஏன் டல்லா இருக்க ஒன்னும் பேசவும் மாட்டேங்குற.. ஏதாவது பிரச்சனையா எதுவா இருந்தாலும் சொல்லு” என்றவாறு அவள் அவனின் கையை பற்றவும்.
சட்டென்று தீ சுட்டார் போல் அவளிடம் இருந்து தன் கையை விளக்கியவன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டு, “நத்திங்.. கிளம்பலாம்”.
இப்பொழுது தான் அரவிந்தின் முகத்தில் யாரும் அறியா வண்ணம் புன்னகை அரும்பியது.
பாரிவேந்தனின் செயலில் விதுஷா அவனை திகைத்து பார்க்க.
இக்காட்சியை பார்க்கவே அரவிந்திற்கு மனம் குளுகுளுவென்று இருந்தது. என்று வீட்டில் இவர்கள் இருவருக்கும் திருமண பேச்சு எழுந்ததோ அன்று முதல் தூக்கம் இன்றி நிம்மதி இன்றி அலைந்து கொண்டு இருந்தவனின் மனம் இப்பொழுது தான் அமைதி அடைந்த உணர்வு.
Ada pavi ennamo pannitan
Mm ama