மலர்னிகாவின் நாடி பிடித்துப் பார்த்த விசாகம், துர்க்காவை திரும்பி பார்த்தார். பின்னர் மலர்னிகாவின் கைகளை விட்டு விட்டு எழுந்தார் விசாகம். “என்ன விசாகம் பேத்திக்கு என்னாச்சி?” என்றார் பெருந்தேவனார். ராமச்சந்திரனும், “அம்மா என்ன எதுவும் சொல்லாமல் இருக்கிறீங்க?” என கேட்டார்.
விசாகம் துர்க்காவை பார்த்தவர், “உன்னோட பொண்ணுக்கு என்ன பிரச்சனை?” என கேட்டார். அதற்கு துர்க்கா, “ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் விபத்து நடந்திச்சி. இப்போ நைட்ல இருந்து எதுவும் பேசவே இல்லை. அமைதியாக இருக்கிறா. என்ன கேட்டாலும் பதிலே இல்லை. சாப்பிடவும் இல்லை அம்மா.” என்றார் துர்க்கா.
அனைவரையும் பார்த்த விசாகம்,” மலரு எதையோ நினைச்சி அழுத்தமா இருக்கிறா. அவ சரியா சாப்பிடாதனால அவளுக்கு மயக்கம் வந்திருக்கு. மயக்கம் தெளிஞ்சதும் சாப்பிட குடுக்கலாம். நல்லா தூங்கி எழட்டும்.” என்று விசாகம் சொன்னார்.
தேவச்சந்திரன்,”துர்க்கா நீ உன்னோட அறைக்கு போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். மதி நீ போய் நிஷாக்கு ஒரு அறையை தயார் பண்ணிக் குடுமா. நிஷா நீ மதிகூட போ. அண்ணி நீங்க மலருக்கு ஒரு அறையை தயார் செய்ங்க.” என்றார்.
முதலில் மலர்னிகாவின் மயக்கத்தை தெளிய வைக்கலாம் என நினைத்த காளையன், தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான். சிப்பி போல மெதுவாக இமைகளை திறந்தாள் மலர்னிகா. அவள் அருகில் தெரிந்த காளையனின் முகத்தைப் பார்த்ததும் வேகமாக எழுந்து அமர்ந்தாள். அவள் கண்விழித்ததும் அங்கிருந்து நகர்ந்து நின்றான் காளையன். மகள் அருகில் ஓடி வந்து அவளது தலையை வருடிக் கொடுத்தார் துர்க்கா.
தாயைப் பார்த்தவள் எதுவும் பேசவில்லை. துர்க்காதான், “மலர் முதல்ல போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு. மற்றதை அப்புறம் பேசலாம்.” என்றார். அவளும் எதுவும் பேசாமல் எழுந்து நிற்க, காமாட்சிதான் வந்து, “வாங்க மலர் நான் உங்களை அறைக்கு கூட்டிட்டு போறன்.” என்று அவளை அங்கிருந்து கூட்டிட்டு போனாள். காமாட்சியுடனும் எதுவும் பேசாமல் போனாள். நிஷாவும் அவளது அறைக்குச் செல்ல, துர்க்காவும் அவரது அறைக்குள் சென்றார்.
குணவதியும் நேசமதியும் காலை உணவை தயாரிக்கச் சென்றனர். விசாகம் பாட்டி பூஜை அறைக்குச் சென்று, விளக்கேற்றி வைத்து கைகளை கூப்பி, சுவாமியை வணங்கினார். பெருந்தேவனார், ராமச்சந்திரன், தேவச்சந்திரன் மூவரும் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்த வீட்டில் இன்றுதான் அத்தனை மகிழ்ச்சி நிலவியது. காளையனும் அங்கிருந்த சோபாவில் இருந்து அவர்களின் மகிழ்ச்சியை ரசித்துக் கொண்டு இருந்தான். ” இந்த மகிழ்ச்சியை எப்பவும் நான் அழிய விடமாட்டேன். உங்களுக்கு வர்ற எந்த பிரச்சினையும் என்னை தாண்டித்தான் உங்ககிட்ட வரணும்.” என்று அவர்களைப் பார்த்துக் கொண்டு மனசுக்குள் பேசிக் கொண்டான்.
சொந்த பந்தம் யாரும் இல்லாமல் திருமணம் செய்யப் போகிறோம் என்ற கவலை இல்லாமல், உற்சாகமாக ரெடியாகி ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சென்றான். அங்கே அழகிய சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் அழகாக நின்றிருந்தாள் மோனிஷா. பட்டு வேட்டி சட்டையில் நடந்து வரும் சபாபதியைப் ரசித்தவாறு கேசவன் அருகே நின்றாள் மோனிஷா.
கேசவன் சபாபதியுடன் கைகுலுக்கி வரவேற்றார். மோனிஷாவும் சபாபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். ரெஜிஸ்டர் வந்ததும் நல்லபடியாக இருவருக்கும் திருமணம் நடந்தது. கேசவன் மாலையை இருவரிடமும் குடுக்க, சபாபதியும் மோனிஷாவும் மாலை மாற்றிக் கொண்டனர். பின் மோதிரத்தை குடுத்து இருவரையும் மாற்றக் கூறினார். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மோனிஷா வெட்கத்துடன் சபாபதியை நிமிர்ந்து பார்க்காமல் இருந்தாள்.
ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கேசவனுக்கு போன் வந்தது. போனை எடுத்துப் பேசியவர், “மோனி, மாப்பிள்ளை எனக்கு ஒரு எமர்ஜென்சி, நான் உடனே மும்பைக்கு போகணும். நீங்க ரெண்டு பேரும் வீட்டிற்கு போங்க. நான் மும்பை போயிட்டு வந்து உங்களை பார்க்கிறன். மோனி பத்திரம்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் மோனியின் காருக்கு வந்தனர். கேசவன் மோனிஷாவின் காரை டிரைவரிடம் சொல்லி ஹோட்டலுக்கு வரவழைத்து இருந்தார். அதனால் இருவரும் காரில் சென்று சபாபதியின் பிளாட்டிற்கு சென்று இறங்கினர்.
முறையாக வலது காலை எடுத்து வைத்து சபாபதியின் கைகோர்த்துக் கொண்டு உள்ளே வந்தாள். இருவரும் சென்று சோபாவில் இருந்தனர். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
மும்பையில் தனது வீட்டில் சந்தோசமாக ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தான் முகேஷ். வந்ததும் வராததுமா வந்த கேசவன் மகனை அணைத்துக் கொண்டார். “முகேஷ் நீ சாதிச்சிட்ட. எப்படி அவளோட அத்தனை சொத்தையும் நீ எழுதி வாங்கின? உன்னை என்னோட மகன்னு சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு. இனிமேல் அவங்க பிஸ்னஸ் பக்கமே வரமாட்டாங்க. இந்த பிஸ்னஸ் உலகத்தில இனிமேல் நாமதான் முதல் இடம்.” என்றார். அதை ஆமோதித்தான் முகேஷ்.
தந்தையும் மகனும் சேர்ந்து மலர்னிகாவின் சொத்துக்களை எப்படி அனுபவிக்கலாம், என்று திட்டம் போட்டனர். பின்னர் கேசவன்,” முகேஷ் உன்னோட தங்கச்சிக்கு இன்னைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருச்சி. மாப்பிள்ளை நம்மளோட ஐடி கம்பனியில வேலை செய்ற சபாபதி.” என்றார். அதைக் கேட்ட முகேஷ், ” என்ன அப்பா சொல்றீங்க? நம்ம கம்பனியில வேலை பார்க்கிறவனை எதுக்காக மோனிஷாக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சீங்க அப்பா? எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவே இல்லை. ” என்று அவரிடம் சத்தம் போட்டான்.
அதற்கு கேசவன்,” நம்ம மோனிஷா அவனை லவ் பண்ணிட்டா. கல்யாணம் பண்ணினா அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. அதுமட்டுமல்ல முகேஷ், நான் ஒரு காரியம் பண்ணினா, அதுக்கு பின்னாடி ஒரு பெரிய காரணம் இருக்கும்னு உனக்கு தெரியாதா? அவங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சதிலேயும் காரணம் இருக்கு. ஆனால் அதை இப்போ என்னால சொல்ல முடியாது முகேஷ். “என்றார். அவர் அவ்வளவு சொன்ன பிறகு முகேஷ் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
காமாட்சியுடன் அறைக்கு உள்ளே வந்த மலர்னிகா எதுவும் பேசாமல் குளியலறைக்குள் சென்றாள். அவள் உள்ளே சென்றதும், காமாட்சி அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவளது பெட்டியில் இருந்து எடுத்து வைப்பதற்காக பெட்டியைத் திறந்தவள் உள்ளே இருப்பதைப் பார்த்து முழித்தாள்…
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😀
Super divi