“யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ”
சுந்தர் கேட்க “இல்லப்பா.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அக்கா வீட்ல இருக்கா.. அவ அக்கா புருஷன் ஒரு குடிகாரன்.. ராவணன்.. ரொம்ப தகராறு பண்ணுவான்.. அதனால துணைக்காக அந்த பொண்ணு என்னோட வந்து இருக்கும்.. அவ அக்கா குழந்தையை எடுத்துட்டு வந்துடுவா… அது மட்டும் இல்லாம நானும் ஒண்டிகட்டைதானே.. என் புள்ள ஒரு பணக்கார பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ வீட்டோடயே போயிட்டான்.. நான் இருக்கேனா செத்தேனான்னு கூட திரும்பி பார்க்கலை.. அப்படி இருக்கும்போது இந்த பொண்ணுதான்பா அப்பப்ப வந்து என்னை கவனிச்சிக்கறா..” என்றார் பாட்டி..
“ஓ.. அப்படியா? சரி பாட்டி.. போயிட்டு வாங்க.. பாவம் அவங்களுக்கு துணையா இருக்கணும்னா நீங்க போய் இருங்க..” என்று சொல்லி பாட்டியை அனுப்பி வைத்தான்..
தன் வீட்டிற்கு வந்த பாட்டி அங்கே ஏற்கனவே சுந்தரி அவள் அக்கா குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து தன் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பதை பார்த்து நடை வேகத்தை கூட்டி “வாம்மா.. சுந்தரி.. என்ன..? உன் மாமன்காரன் வந்துட்டானா? இன்னும் வரலையா?” என்று கேட்டார்..
“வந்துட்டாரு பாட்டி.. உள்ள கத்திக்கிட்டு ஒரே அமர்க்களம்.. அதான் புள்ளைய தூக்கிட்டு நான் இங்க வந்துட்டேன்.. வீடு பூட்டி இருந்ததுல்ல? அதான் வெளியிலேயே உட்கார்ந்துட்டேன்.. அந்த வீட்ல இருக்கறதை விட இங்க வெளியில உட்கார்றது பரவால்ல பாட்டி..” என்றாள் அவள்…
“என்னத்த சொல்றது.. வயசு பொண்ணை வீட்ல வச்சுட்டு அவன் பண்ற அராஜகம் இருக்குதே.. கடவுளுக்கே அடுக்காது.. சரி உள்ள வா நீ..” என்று அவளை அழைத்துக் கொண்டு போய் இருவரும் படுத்து உறங்கினார்கள்…
நடுராத்திரிக்கு யாரோ தடால் என்று கீழே விழும் சத்தம் கேட்கவே எழுந்த சுந்தரி பாட்டி குளியலறை வாசலில் கீழே விழுந்து முனகிக் கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டாள்..
“பாட்டி பாட்டி எ…என்ன ஆச்சு? என்ன ஆச்சு பாட்டி?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து பாட்டியை தூக்க முயல பாட்டியால் கை காலை சிறிதும் அசைக்க கூட முடியவில்லை..
“அய்யோ பாட்டி.. என்ன ஆச்சு பாட்டி? கொஞ்சம் எழுந்திரிக்க ட்ரை பண்ணுங்க..” என்று சொன்னவளிடம் “இல்லம்மா கண்ணு.. என்னால எந்திரிக்கவே முடியல.. இடுப்பு ரொம்ப வலிக்குது மா… ”
பாட்டி வலியில் முகத்தை சுருக்கி சொன்னாள்..
என்ன செய்வதென்று யோசித்த சுந்தரி “சரி.. ஒரு நிமிஷம் இருங்க பாட்டி.. இதோ வரேன்..” என்று சொன்னவள் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பாட்டி வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருந்த ராசாத்தி அக்காவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினாள்..
“அக்கா அக்கா.. கதவை திறங்க அக்கா..”
அவள் வேகமாக தட்டவும் உள்ளிருந்து வந்த ராசாத்தி அக்கா “என்ன சுந்தரி? இந்நேரத்துக்கு வந்திருக்க.. ரொம்ப பதட்டமா வேற இருக்க.. என்ன ஆச்சு?” என்று கேட்டாள்..
“அக்கா.. பாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. திடீர்னு பாத்ரூம்க்கு எழுந்து போனவங்க கீழே விழுந்துட்டாங்க.. அவங்களால எந்திரிக்கவே முடியல.. அக்கா கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்றீங்களா? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்..”
“சரி இரு சுந்தரி.. நான் போய் அந்தாள கூட்டிட்டு வரேன்.. நம்மளால பாட்டியை தூக்க முடியாது..”
சொன்னவர் உள்ளே சென்று அவருடைய கணவரை அழைத்துக் கொண்டு வந்தார்,.
அதற்குள் சுந்தரி அக்கா குழந்தையை எடுத்துக் கொண்டு “அக்கா நீங்க போய் பாட்டியை தூக்க ட்ரை பண்ணுங்க.. நான் அதுக்குள்ள குழந்தையை எங்க அக்கா கிட்ட கொடுத்துட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு ரதிமீனாவின் வீட்டு கதவை தட்டவும் எழுந்து வந்து கதவை திறந்த ரதிமீனா.. “என்ன ஆச்சு சுந்தரி? இந்த டைமுக்கு குழந்தைய தூக்கிட்டு வந்து இருக்கே?” என்று கேட்டாள்..
உள்ளே இருந்து பாஸ்கரின் சத்தம் கேட்டது “ஏய்.. எவடீ அவ? மனுஷனை நிம்மதியா தூங்க விடாம லொட்டு லொட்டுன்னு நைட்டு 12 மணிக்கு வந்து கதவை தட்டறது?” குடி போதையில் உளறிக் கொண்டிருந்தான் அவன்..
“அக்கா நான் சொல்றதை கேளு.. பாட்டி பாத்ரூம் போகும்போது கீழே விழுந்துட்டாங்க.. இடுப்புல ரொம்ப அடிபட்டுருச்சு.. ராசாத்தி அக்கா புருஷன் தான் வந்து தூக்கி ஆட்டோல ஏத்துறேன்னு சொல்லி இருக்காரு.. நான் அவங்களோட ஆஸ்பத்திரிக்கு போகணும்.. இந்தா.. குழந்தையை பிடி.. நான் போய் அவங்களை ஆஸ்பத்திரில சேர்த்துட்டு வரேன்” என்றாள் சுந்தரி…
“ஏய் சுந்தரி.. கையில ஏதாவது பணம் வச்சிருக்கியா? நீ உன் இஷ்டத்துக்கு பாட்டியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்கிற?”
ரதிமீனா கேட்க “பணம் எதுவும் என்கிட்ட இப்ப இல்லக்கா.. ஆனா நான் ராசாத்தி அக்கா கிட்ட கடன் கேட்டுக்குறேன்..” சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஓடினாள்..
பாட்டி வீட்டுக்குள் அவள் போவதற்கும் பாட்டியை ராசாத்தி அக்காவின் கணவர் தூக்கி வந்து கட்டிலில் கிடத்துவதற்கும் சரியாக இருந்தது..
ராசாத்தி அக்காவின் கணவர் “நீங்க ரெண்டு பேரும் பாட்டியை பார்த்துக்கோங்க.. நான் போய் ஆட்டோ ஏதாவது கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்..”
தெருமுனையில் இருந்த ஆட்டோ நிறுத்தத்திற்கு வேகமாக ஓடினார்..
ராசாத்தி அக்காவிடம் “அக்கா ஆஸ்பத்திரிக்கு பணம் ஏதாவது வச்சிருக்கீங்களா? கடனா கொடுங்க.. நான் ரெண்டு நாள்ல திருப்பி கொடுத்திடறேன்” என்றாள் சுந்தரி..
“ஐயோ.. என்கிட்ட எதுவும் பணம் இல்லையே இப்போ.. இரு அவர் ஆட்டோ எடுத்துட்டு வரட்டும்.. அவரை வேணா கேட்கிறேன்”
ராசாத்தி அக்கா சொல்லி கொண்டு இருக்கும் போதே பாட்டி சுந்தரியை அருகில் அழைத்தார்..
“என்ன பாட்டி? என்ன விஷயம்?” என்று கேட்டவளிடம் “அம்மாடி அங்க அலமாரியில என் பர்ஸ் வச்சிருக்கேன்.. அதுக்குள்ள 2000 ரூபா பணம் இருக்கு.. அதை கைச்செலவுக்கு எடுத்துக்கோ..” என்று சொன்னாள் பாட்டி..
“சரி பாட்டி.. எடுத்துக்கிறேன்..” என்று சொன்னவள் வேகமாக சென்று அந்த பணத்தை எடுத்து வந்தாள்..
பாட்டி கையை பிடித்துக் கொண்டு அவர் அருகில் அமர்ந்தவள் “ஏன் பாட்டி.. எப்படி திடீர்னு விழுந்தீங்க? நீங்க பாத்ரூம்குள்ள கூட போகலையே.. பாத்ரூம் வெளியவே விழுந்து இருந்தீங்க.. என்ன ஆச்சு?” என்று கேட்கவும் “அம்மாடி பாத்ரூம் கிட்ட போகும்போது ஏதோ தலை சுத்துன மாதிரியே இருந்துச்சு மா.. அப்படியே கீழ விழுந்துட்டேன்” என்றார் பாட்டி..
ஐந்து நிமிடங்களுக்குள் ஆட்டோவை எடுத்து வந்த ராசாத்தி அக்காவின் கணவர் ஆட்டோ ஓட்டுநரை கூட அழைத்துக் கொண்டு இருவருமாக பாட்டியை தூக்கிச் சென்று ஆட்டோவில் பின் இருக்கையில் முதலில் சுந்தரியை ஏறிக்கொள்ள சொல்லி அவள் மடியில் பாட்டியின் தலை வைத்து கிடத்தினர்..
ராசாத்தி அக்காவின் கணவர் “சுந்தரி.. நீ ஆட்டோல போ.. நான் பின்னாடியே என் பைக்ல வரேன்..” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு அவர்கள் வீட்டுக்கு சென்று அவருடைய வண்டியை எடுத்துக் கொண்டு ஆட்டோவின் பின்னாலேயே சென்றார்.
மருத்துவமனையில் பாட்டியை உள்நோயாளியாக அனுமதித்தவர்கள் விரைவாக அவர் உடல்நிலையை பரிசோதித்தார்கள்..
சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவரிடம் ஓடி சென்ற சுந்தரி “டாக்டர் பாட்டிக்கு என்ன ஆச்சு? ஒண்ணும் பயப்படற மாதிரி இல்ல இல்ல?” என்று கேட்கவும் “இப்போதைக்கு அவங்க உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லம்மா.. ஆனா பாட்டி கீழே விழுந்ததுல அவங்க முதுகு தண்டில அடிபட்டு இருக்கு.. ஐ அம் சாரி டு சே.. அவங்களால இனிமே எழுந்து நடக்க முடியாது.. படுத்த படுக்கையா தான் இருப்பாங்க.. பிபி ரொம்ப ஹையா இருந்தது.. இன்னைக்கு அவங்க என்னென்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டேன்.. அதெல்லாம் நார்மல் ஃபுட் மாதிரி தான் இருந்தது.. அதுல பிபி ரைஸாக சான்ஸ் இல்லை.. ஏதாவது ஸ்ட்ரெஸ் ஃபுல்லான விஷயம் நடந்துதா இன்னைக்குன்னு கேட்டதுக்கு அவங்க ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க.. அவங்க மனசை பாதிக்கிற மாதிரி இன்னைக்கு ஏதோ நடந்திருக்கு.. அதனாலதான் அவங்க பிபி ரைஸ் ஆகி தலை சுத்தி இருக்குன்னு நான் நினைக்கிறேன்.. உங்க கிட்ட சொல்லுவாங்கன்னா நீங்க வேணா கேட்டு பாருங்க அவங்க கிட்ட… சரி பார்த்துக்கோங்க.. யாராவது ஒருத்தர் மட்டும் அவங்க கூட இருக்கலாம்..” சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அவர்..
பாட்டியால் இனி எழுந்து நடக்கவே முடியாது என்று அவர் சொன்னதை கேட்ட சுந்தரிக்கு பூமி நழுவி தான் கீழே விழுவது போல் இருந்தது..
தனக்கு இருந்த ஒரே ஆறுதலான துணை பாட்டி தான்.. அவளும் படுத்த படுக்கையாகிவிட்டாள் என்பது அவளுக்கு மிகுந்த கலக்கத்தை தந்தது..
இருந்தாலும் பாட்டிக்கு இரவும் பகலுமாய் பணிவிடைகள் செய்து அவரை எப்படியாவது மறுபடி பழைய நிலைக்குக் கொண்டு வர தான் முயற்சிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள் சுந்தரி..
ராசாத்தி அக்காவினுடைய கணவர் சுந்தரியிடம் வந்து “சுந்தரி.. அப்ப நீ பாட்டியோட இருக்கியா? நான் கிளம்பி போகட்டுமா? வேற ஏதாவது வேணுமா உனக்கு?” என்று கேட்டார்..
“இல்லண்ணா எதுவும் வேண்டாம்..” என்றவள் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் திரும்பி “அண்ணா.. உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும்?” என்று கேட்டாள்..
“அம்மா நீயே யாரோ ஒருத்தி அவங்களுக்கு.. ஏதோ உதவி செய்ய வந்திருக்கே.. உன்கிட்ட இருந்து நான் பணம் வாங்க மாட்டேன்.. நான் பாட்டிக்கு இந்த உதவியை செஞ்சதா இருக்கட்டும்.. நீ பாட்டியை பத்திரமா பாத்துக்கோ.. அது போதும்…” என்றவர் அங்கிருந்து கிளம்பி விட்டார்..
ராசாத்தி அக்காவினுடைய கணவரும் தன்னிடம் இருந்த ஒரு 300 ரூபாயை அவள் கையில் கொடுத்து “கூட இதையும் செலவுக்கு வச்சுக்கம்மா.. ஏதாவது மருந்து மாத்திரை வாங்க சொல்லுவாங்க..” என்று சொல்லிவிட்டு அவரும் கிளம்பி போனார்..
அவர் சென்ற பிறகு பாட்டியை தேடி வந்தவள் “பாட்டி.. ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டாள்…
“ஏதோ இன்ஜெக்ஷன் போட்டாங்கம்மா.. இப்ப கொஞ்சம் பரவாயில்லை..” என்றாள் பாட்டி..
“ஏன் பாட்டி.. இன்னைக்கு ஏதாவது உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்ததா? நான் உங்க பேத்தி மாதிரின்னு சொல்லுவீங்களே.. என்கிட்ட சொல்ல கூடாதா?” என்று கேட்டாள் சுந்தரி..
“உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா? உனக்கு தான் தெரியுமே.. என் புள்ள அவனோட மாமனார் வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டான்… இன்னைக்கு காலையில அவன் கிட்ட இருந்து ஒரு ஃபோன் வந்துச்சு.. அவன் மாமனார் ஏதோ புதுசா இன்னொரு பிசினஸ் ஆரம்பிக்கிறாராம்… அதுக்கு பணம் நிறைய தேவைப்படுதாம்.. இப்ப நான் இருக்கிற வீடு என்னோட சொந்த வீடு தானே? தாத்தா எழுதி வச்சிட்டு போன வீடு என் பேர்ல… அந்த வீட்டை அவன் பேருக்கு மாத்தி கொடுக்கணும்னு என்னோட சண்டை போட்டான்.. நான் இருக்கேனா செத்தேனான்னு கூட இத்தனை நாள் பார்க்காதவன் இன்னைக்கு ஃபோன் பண்ணுனதும் ஏதோ பாசத்துல தான் ஃபோன் பண்ணான்னு நெனச்சு சந்தோஷப்பட்டேன்… ஆனா அவன் இப்படி கேட்டப்போ எனக்கு உயிரையே உரிச்சி எடுத்த மாதிரி இருந்தது மா..” கண்ணீர் விட்டுக் கொண்டே கூறினாள் பாட்டி..
“ஐயோ பாட்டி… ஏன் பாட்டி மனுஷங்க இப்படி இருக்காங்க..?” என்று கேட்டாள் அவள்..
“ஈவு இரக்கம் இல்லாத உலகம்மா இது.. இதுல நல்ல மனுஷங்களை கைவிரல் விட்டு எண்ணிடலாம்.. அவன் இதுக்காக தான் ஃபோன் பண்ணி இருக்கான்னு தெரிஞ்ச உடனே அவன் பெயருக்கு வீட்டை எல்லாம் எழுதி கொடுக்க முடியாதுன்னு நான் சொல்லிட்டேன்..” என்றார் பாட்டி..
“சரிதானே பாட்டி? இந்த வீட்டை எழுதி கொடுத்துட்டீங்கன்னா நீங்க எங்க போயிருப்பீங்க?” என்று கேட்டாள் சுந்தரி…
“அதுக்கு தான் அந்த கேடு கெட்டவன் சொல்றான்.. உனக்கு என்னத்துக்கு இந்த வயசுல சொந்த வீடு.. போய் ஒரு வாடகை வீட்டில இருக்க வேண்டியதுதானே..? என் மாமனாருக்கு நான் பணம் கொடுத்தா என் பிள்ளைகளுக்கு இன்னும் நல்ல வசதி பண்ணிக்க முடியும்.. உன் பேரன் பேத்திக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? அப்படின்னு கேட்கறாம்மா.. இவ்ளோ பேசுறவன் பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் என் பேரன் பேத்தியை என் கண்ணுல கொண்டு வந்து காட்ட கூட இல்லை.. இவன்லாம் வந்து சொத்து கேட்க வந்துட்டான் என்கிட்ட..” என்றாள் பாட்டி..
தன்னை பெற்ற தாயை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் பிள்ளையை நினைத்து அவளுக்கு “சே.. இப்படியும் கூட மனிதர்கள் இருப்பார்களா?” என்று தோன்றியது..
“கவலைப்படாதீங்க பாட்டி.. இப்ப அவர் பேசுனதெல்லாம் மறந்துருங்க.. அவருக்கு காலம் நல்ல பாடம் கத்து குடுக்கும்.. நீங்க உங்க உடம்பை கவனிச்சுக்கோங்க.. இப்படி ஒரு புள்ளையை பத்தி யோசிச்சு உங்க உடம்பை ஏன் கெடுத்துக்குறீங்க? நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க பாட்டி.. கூடிய சீக்கிரம் நீங்க நல்லா எழுந்து நடமாடுவீங்கன்னு டாக்டர் சொல்லி இருக்கிறார்..” பாட்டிக்கு ஆறுதலாய் சொன்னாள்..
அவளைப் பார்த்து சிரித்த பாட்டி “எனக்கு தெரியும் சுந்தரி.. என் முதுகு உடைஞ்சு போச்சு.. இனிமே என்னால எந்திரிக்க முடியாது.. பாவம் நீ தான் எனக்காக என் பக்கத்துல உக்காந்து இருக்கே.. நீயும் இல்லைனா இந்த பாட்டி அனாதையாதான் கெடக்கணும்..” என்றார் பாட்டி..
“அனாதை கினாதைன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசக்கூடாது.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க பாட்டி.. தூங்குங்க” என்று சொன்னவள் பாட்டி தலையை கோதி விடவும் அந்த அரவணைப்பில் அப்படியே உறங்கிப் போனாள் பாட்டி..
அப்போது பாட்டியின் கைபேசி ஒலிக்கவும் அதை எடுத்து பார்த்தவள் அவர் பிள்ளையின் பெயரை அதில் பார்த்தவுடன் எங்கேயாவது பாட்டி எழுந்து மறுபடியும் கவலை கொள்ளப் போகிறார் என்று அணைத்துவிட்டாள் அந்த கைபேசியை..
மறுநாள் விடியலும் வந்தது.. சுந்தர் தன் அறையிலிருந்து எழுந்து கீழே வந்தவன் வரவேற்பறை இருண்டு இருந்ததை பார்த்து “என்ன ஹால் இருட்டா இருக்கு? நம்ம பாட்டி 6 மணிக்கெல்லாம் வந்து கதவை திறந்து வாசல்ல கோலம் போட்டு.. உள்ள சமைச்சு வச்சு.. டிபன் வாசனை இவ்வளவு நேரம் வந்து மூக்கை துளைக்குமே.. இன்னும் லைட்டே போடல.. பாட்டி வரலையா?”
நினைத்துக்கொண்டே மின் விளக்கை போட்டு பார்த்தவன் பாட்டி வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டான்..
“மணி எட்டாகுது.. பாட்டி ஏன் இன்னும் வரல?” என்று யோசித்தவன் பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.. ஆனால் அதைத்தான் சுந்தரி அணைத்து வைத்திருந்தாளே..
தொடர்ந்து வருவார்கள்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்
துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து