சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 48
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சுந்தர் தன்னையும் அறியாமல் சுந்தரியை உரிமையோடு ஒற்றையில் நீ வா போ என்று பேச ஆரம்பித்திருந்ததை உணர்ந்து தனக்குள்ளேயே வியந்தான்..
சுந்தரியும் அதை உணராமல் இல்லை.. எந்த நிலையிலும் அவன் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டான் என்பதும் அவளுக்கு புரிந்தது.. தானும் எந்த நிலையிலும் அவனை விட்டுக் கொடுக்கக் கூடாது.. அவனது ஒவ்வொரு ஆசையையும் பார்த்து பார்த்து நிறைவேற்ற வேண்டும்.. எந்த நிலையிலும் அவன் தலை மற்றவர்கள் முன்னால் நிமிர்ந்து இருக்க வேண்டும்.. அவன் தலை குனிவது போல் தன்னால் எந்த விஷயமும் நடக்கக் கூடாது என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டாள்..
ஆனால் அவள் இப்படி முடிவு எடுத்ததுதான் அவர்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று அவர்களுக்கு தெரியாது.. இருவரும் தங்கள் வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைக்க சந்தோஷமாக தங்கள் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்..
இங்கே மாடியில் தன் அறைக்கு சென்ற ஷாலினி மாதேஷின் கைப்பேசிக்கு அழைத்து அழைத்து சோர்ந்து போனாள்.. அவன் கைபேசியை எடுக்கவே இல்லை..
“உன்னோடு உடனே பேச வேண்டும் மிக முக்கியமான விஷயம்.. சுந்தரை பற்றி” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள்..
சுந்தரி காரில் வந்து கொண்டிருந்த போதே ஷாலினியிடம் சுந்தர் தன்னை பற்றி பேசியதை யோசித்துப் பார்த்து உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டு இருந்தாள்..
அவன் தன் புற அழகை பார்க்கவில்லை.. தன் அக அழகை தான் பார்க்கிறான் என்பது அவளுக்குள் அவ்வளவு ஆனந்தத்தை தூண்டி விட்டிருந்தது.. ஏற்கனவே சுந்தரின் மேல் அவள் கொண்டிருந்த காதல் இன்னும் பெரிதாக வளர்ந்து அவள் மனதில் கல்லில் பதித்த கல்வெட்டாய் அவனை அழிக்க முடியாத சிற்பமாக செதுக்கி விட்டிருந்தது..
இருவரும் வீடு வந்து சேர வாசலில் சுந்தரின் கார் சத்தம் கேட்ட அடுத்த நொடி ரதி.. மேகலா.. நடராஜன் மூவரும் வாசலுக்கு விரைந்தார்கள்.. சுந்தர் சுந்தரியை அழைத்துக் கொண்டு வாயிலுக்கு வர மேகலாவும் ரதியும் அவர்களை ஜோடியாய் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள்..
“ஜோடியா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பார்த்தா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..” என்று சொல்லியபடி அவர்கள் நெற்றியில் ஆரத்தி குங்குமத்தை இட்ட மேகலா ரதியிடம் வந்து ஆரத்தி தட்டை கொடுத்து “இதை வெளியில் கொண்டு போய் கொட்டிட்டு வரியாம்மா..?” என்று கேட்டாள்.. ரதியும் அதை வாங்கி எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்..
உள்ளே வந்த இருவரையும் சோஃபாவில் அமர வைத்து வாழைப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வைத்திருந்த ஒரு தட்டை சுந்தரின் முன் நீட்டினார் மேகலா..
“சுந்தர்.. இதுல ஒரு துண்டு வாழைப்பழம் எடுத்து சுந்தரிக்கு கொடு..” என்று சொல்ல
அவன் ஒரு வாழைப்பழத்தை எடுத்து சுந்தரி கையில் கொடுக்கப் போக அப்போது அங்கே வந்த ரதி “ம்.. ஹூம்.. கையில இல்லை.. வாயில கொடுக்கணும்..” என்று சொல்ல
இது இப்படியே போனால் ரதியின் கிண்டலையும் கேலியையும் தாங்க முடியாது என்று உணர்ந்த சுந்தர் சுந்தரியின் நாடியில் கை வைத்து அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் வாய்க்கு அருகில் அந்த வாழைப்பழத் துண்டினை எடுத்துக் கொண்டு போகவும் அவளும் அவன் கண் பார்த்து வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்..
ரதியோ “சூப்பர்.. சூப்பர்..” என்று கைதட்ட அவள் குழந்தையும் அவள் தட்டியதை பார்த்து தானும் கை தட்டியது..
அதைப் பார்த்து சுந்தர் சிரிக்க மேகலா தட்டை இப்போது சுந்தரி முன் நீட்டினாள்..
அதிலிருந்து ஒரு வாழைப்பழத்துண்டை எடுத்த சுந்தரி சுந்தரின் பக்கம் திரும்பாமலேயே கையை மட்டும் எடுத்துக் கொண்டு போய் அவன் வாய் அருகில் வைக்க தானே விழி அகற்றாமல் அவள் நாணத்தின் சிதறல்களை கண்களால் விழுங்கியபடி அவள் விரலில் வாய் வைத்து அந்த வாழைப்பழத் துண்டை தன் வாய்க்கு கடத்தி சுந்தரியின் வெட்கம் பூத்த முகத்தின் அழகையும் சேர்த்து ரசித்து சாப்பிட்டான்.. சுந்தர்..
“சரி.. சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சிடுச்சு.. மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாண சாப்பாடு சாப்பிட வேண்டாமா? வாங்க சாப்பிடலாம்..” என்று சொல்லி
இருவரையும் அழைத்துக் கொண்டு போய் சாப்பாட்டு மேஜையில் ஜோடியாக அமர வைத்தவர்கள் அவர்களுக்கு இலை போட்டு பரிமாற ஆரம்பிக்க அவர்கள் இலையில் நிரம்பிய பதார்த்தங்களை பார்த்து இருவரும் வாய் பிளந்தார்கள்..
“நிஜமாவே கல்யாண சாப்பாடு மாதிரி இவ்வளவு ஐட்டம் செஞ்சு இருக்கீங்க.. எப்ப செஞ்சீங்க இவ்ளோ ஐட்டங்களையும்?”
சுந்தரி கேட்க “இது என்ன கேள்வி சுந்தரி.. நாங்க ரெண்டு பொம்பளைங்க இருக்கோம்.. இதெல்லாம் ஒரு விஷயமா? நானும் மேகலா அத்தையும் சேர்ந்து எல்லாத்தையும் பண்ணிட்டோம்.. சாப்பிட்டு பார்த்து எங்க ரெண்டு பேர் சமையல் எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுங்க..” என்றாள் ரதி..
சுந்தர் “நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு அன்போட பண்ணி இருக்கீங்க.. நிச்சயமா உலகத்திலேயே இதுதான் ரொம்ப ரொம்ப ருசியான சாப்பாடா இருக்கும்..” என்று சொன்னான்..
இருவரும் உணவு உண்டு முடித்தவுடன் கை கழுவிட்டு வந்த சுந்தரி “இப்ப நீங்க எல்லாரும் உட்காருங்க.. நான் உங்களுக்கு பரிமாறுறேன்” என்றாள்..
“அது என்ன நீ மட்டும்..? நானும் பரிமாறுறேன்..” என்று சொல்லி சுந்தர் தன் வேட்டியை மடித்து கட்டினான்..
“அது எப்படி..? கல்யாண மாப்பிள்ளையும் பொண்ணும் இன்னைக்கு எப்படி வேலை செய்ய முடியும்? அதெல்லாம் நாங்களே சாப்பிட்டுக்கிறோம்..” என்று மேகலா சொல்ல
“இன்னிக்கு எங்க கல்யாண நாள் அதுவுமா நாங்க முழு சந்தோஷத்தோட இருக்கணும்னு நினைச்சீங்கன்னா எங்களை பரிமாற விடுங்க.. இல்லைன்னா நீங்களே சாப்பிடுங்க..” என்று பொய் கோபத்தோடு சொன்னாள் சுந்தரி..
“ம்ம்ம்ம்.. எங்களை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு தான் உனக்கு நல்லா தெரியுமே.. ” என்று சுந்தரி முதுகில் தட்டிக் கொண்டே சொன்னாள் மேகலா இதழில் புன்னகையுடன்..
அதன் பிறகு அவர்கள் அனைவருக்கும் ஜோடியாய் உணவு பரிமாறினார்கள் சுந்தரும் சுந்தரியும்..
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின் “எனக்கு நல்லா தூக்கம் வருது.. வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டீங்க.. நான் ரூமுக்கு போய் தூங்குறேன்” என்று சொல்லி கிளம்பிய சுந்தரை அழைத்தார் நடராஜன்..
“சொல்லுங்கப்பா.. என்ன விஷயம்?” என்று கேட்டவனிடம் “சுந்தர்.. நீ சுந்தரியை கூட்டிக்கிட்டு கோவில்லருந்து எங்கப்பா போன?” என்று கேட்டார்..
“அது ஷாலினி வீட்டுக்கு தான் பா போனேன்..” என்று சொல்ல அங்கு இருந்த மூவரும் அவன் பதிலை கேட்டு அதிர்ந்தார்கள்..
“இல்லம்மா.. என்னால ஷாலினி கிட்ட இன்னும் சொல்லலையே.. சொன்னா என்ன சொல்லுவாளோனு மனசு உறுத்திக்கிட்டே இருக்கறப்போ இந்த மாதிரி ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருந்திருக்க முடியாது.. இப்போ அவ கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்.. எனக்கு நிம்மதியா இருக்கு.. இன்னும் கேட்க போனா.. நல்ல வேளை.. நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கலைன்னு கூட நான் இப்ப நினைக்கிறேன்..” என்று அவன் சொல்ல அனைவரும் அவனை கேள்வியாய் பார்த்தார்கள்..
ஷாலினி வீட்டில் நிகழ்ந்த அத்தனையும் அவன் அவர்களிடம் சொன்னான்..
“சரிப்பா.. அந்த பொண்ணு வேதனைலயும் கோவத்திலயும் ஏதோ பேசியிருப்பா.. அதை விடு.. போனது போகட்டும்.. உனக்கு கல்யாணம் நடந்தது நம்ம குடும்பத்துக்கு.. ஷாலினி குடும்பத்துக்கு.. தவிர வேற யாருக்கும் தெரியாது இல்லையா.. அதனால எல்லாருக்கும் தெரியப்படுத்தறதுக்கு ஒரு ரிசப்ஷன் ஒன்னு ஏற்பாடு பண்ணலாம் பா.. அது பத்தி பேச தான் உன்னை கூப்பிட்டேன்..” என்று நடராஜன் சொல்லவும்
“ஆமாம் பா.. நான் கூட அதை பத்தி யோசிச்சேன்.. காலைல கடையிலிருந்து உங்களுக்கு பேசும்போதே ஒரு ஹோட்டல்ல ஃபோன் பண்ணி பேசினேன்.. அவங்க எல்லா ஏற்பாடும் பாத்துக்குறேன்னு சொன்னாங்க.. இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன் வச்சுக்கலாம் பா.. நான் என் ஃபிரண்ட்ஸ்.. நம்ம முக்கியமான உறவுக்காரங்க.. அவங்களுக்கெல்லாம் ஒரு மெசேஜ் அனுப்பி விடுறேன்.. சுந்தரி.. அதே மாதிரி உங்க சைடு யாரு இருந்தாலும் நீயும் உங்க அக்கா ரதியும் அவங்களுக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி விடுங்க.. அதுவும் இப்ப நீ காலேஜ் போற இடத்துல நிறைய ஃபிரண்ட்ஸ் இருப்பாங்க இல்ல..? அவங்களுக்கும் அனுப்பிவிடு..” என்றான் சுந்தர்..
“சரி..” என்று தலையாட்டியவள் “அப்புறம் ராகினி தேவி மேடம்க்கும் ஒரு மெசேஜ் அனுப்பணும்.. அதை நீங்க அனுப்புறிங்களா இல்ல..” என்று அவள் கேட்க
அவள் அருகே வந்து அவள் கையை பிடித்தவன்.. “நான் அவங்கள நேர்ல பாத்து ஒரு விஷயம் பேசணும்.. இப்ப மணி 12 ஆவது.. ஒரு மூணு மணிக்கு நான் அவங்ககிட்ட போய் பேசிட்டு நேரிலேயே அவங்கள இன்வைட் பண்ணிட்டு வரேன் ரிசப்ஷனுக்கு.. ஓகேவா..?” என்றான்..
அவன் ஏதோ அவனுடைய வியாபார விஷயம் குறித்து பேசுவதற்காக அங்கு போகப் போகிறான் என்று எண்ணிய சுந்தரி “அப்படின்னா அப்படியே என் ஃப்ரண்டு வனிதாவையும் ரிசப்ஷனுக்கு கூப்பிட்டுட்டு வந்துடரீங்களா..?” என்று கேட்டாள் சிறிதாய் புன்னகைத்தபடி..
அவள் புன்னகையில் சிறைப்பட்டு போனவன் “இப்படி அழகா சிரிச்சுக்கிட்டே கேட்டா என்னால முடியாதுன்னு சொல்ல முடியுமா? நிச்சயமா உன் ஃபிரண்டை இன்வைட் பண்ணிட்டு வரேன்.. அங்க வேலை செய்ற அத்தனை பேரையும் நான் இன்வைட் பண்ணிட்டு வரேன்.. இப்ப சந்தோஷமா?” என்று அவள் கன்னத்தில் கை வைத்து நெற்றி முட்டி சுந்தர் கேட்க அவளும் தலையாட்டி புன்னகையிலேயேயே பதில் தந்தாள்..
ஆதுரமாய் அவளுக்கு ஒரு பார்வையை தந்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தான் சுந்தர்..
அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற சுந்தரி ரதி தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்டு திரும்பினாள்..
“ஒருத்தர் கண்ணுக்கு நாங்க யாருமே தெரியல போல..” என்று அவளை கேலி செய்ய முகத்தை மூடிக்கொண்டு சமையல் அறைக்குள் ஓடி விட்டாள் வெட்கத்தில் பெண்ணவள்..
ஷாலினி அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்த மாதேஷ் அதில் சுந்தர் பற்றிய விஷயம் என்று படித்தவுடன் அடுத்த நொடியே ஷாலினிக்கு அழைத்தான்..
“ஹாய் ஷாலு டார்லிங்..இத்தனை முறை எனக்கு கால் பண்ணி இருக்க..? என்ன விஷயம்..?” என்று கேட்க
“அப்போ.. சுந்தர் பத்தி ஏதாவது விஷயம்னா தான் நீ என்னோட பேசுவ.. இல்லன்னா இந்த மெசேஜையும் நீ பார்க்காம அப்படியே விட்டுருப்பே.. அப்படித்தானே..?” என்று கேட்டாள் ஷாலினி..
“அப்படிலாம் இல்ல செல்லம்.. நான் தான் உன்கிட்ட சொன்னேன்ல..? புதுசா என் பிசினஸ்ஸ பில்டு பண்ண ஒரு வழி கிடைச்சிருக்கு.. அந்த வேலையா பிசியா இருக்கேன்னு” என்று சொன்னவுடன்
“சரி சரி.. அட்லீஸ்ட் 10 நாளைக்கு ஒரு தடவையாவது கால் பண்ண ட்ரை பண்ணு.. ஏண்டா ஒரு கால் பண்ணறதுக்கு உனக்கு எவ்வளவு நேரம் ஆகும்..?” என்று கேட்டாள் ஷாலினி..
“ஓகே.. ஷாலு பேபி.. இனிமே தினமும் கால் பண்றேன்.. சரியா..? சரி.. சுந்தர் பத்தி ஏதோ விஷயம்னு போட்டு இருந்தியே.. என்ன விஷயம்?” என்று கேட்டான் மாதேஷ்..
“அதானே.. அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில உன் விஷயத்துல தான் நீ குறியா இருப்பே.. சொல்றேன்..” என்று சொன்னவள் அன்று நிகழ்ந்ததத்தனையும் அவனிடம் ஒப்பித்தாள்..
“இந்த சுந்தரை ஒரு வழி பண்ணலாம்னு நினைச்சேன்.. இப்படி ஆயிடுச்சே..” என்று சொன்னவன்
“நீ எப்படி ஷாலுமா இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்த..? அவன் அந்த சுந்தரியை கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நீ அவனை கவனிக்காம விட்டுட்டியா..? உங்க எங்கேஜ்மென்ட் வரைக்கும் நீங்க போனதை பார்த்து எப்படியும் அவன் சொத்தை எழுதி வாங்கிடலாம்ன்னு நான் நினைச்சேன்.. ச்சே.. நான் நினைச்சதெல்லாம் வீணா போச்சே..”
புலம்பினான் மாதேஷ்…
“இல்ல மாதேஷ்.. இது அவனே நினைக்காம நடந்தது.. ஆக்சுவலா இந்த கல்யாணம் அவனுக்கே ஒரு ஷாக்கா தான் இருந்திருக்கும்.. அவனையும் அறியாம சுந்தரி உயிரை காப்பாத்தறதுக்காக தாலி கட்டிட்டான் படுபாவி பையன்.. இந்த சுந்தரியால நம்ம பிளான் எல்லாம் சொதப்பல் ஆயிருச்சு.. உன்னோட பிசினஸ்க்கு ஹெல்ப் பண்ணறதுக்கு தானே நீ இப்படி பண்ண சொன்ன..? எனக்கு அதை பண்ண முடியலையேன்னு ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு..”
“அதை பத்தில்லாம் நான் கவலைப்படலை ஷாலினி.. இப்போ அதுக்கு வேற வழி கிடைச்சிருச்சு.. ஆனா அந்த சுந்தரை எப்படியாவது கீழே கொண்டு வரணும்ன்னு நினைச்சேன்.. அவன் கலர்.. பேக்ரவுண்டு.. அவன் ஒரு பட்டிக்காட்டான்.. அவனால இந்த ஃபீல்ட்ல எல்லாம் ஒரு நாள் கூட தாக்குபிடிக்க முடியாதுன்னு நினைச்சேன்.. ஆனா எப்படியோ அவன் மேல வந்துட்டான்.. அவன் ஒவ்வொரு வாட்டி என்னை பார்க்கும்போதும் என்னை அவ்வளவு கேலி செஞ்சியே.. என்னால எதுவுமே செய்ய முடியாதுன்னு சொன்னியே.. நான் எப்படி வளர்ந்து மேல நிற்கிறேன் பார்த்தியான்னு கேட்கிற மாதிரி ஒரு திமிர் தெரியும் அவன் பார்வையில.. அந்த திமிரை அடக்கணும்னு நான் நினைச்சேன்.. ஆனா இப்ப அது முடியலன்னு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு..”
மாதேஷின் விழிகளில் வன்மம் நிறைந்திருந்தது..
“அது மட்டும் இல்ல மாதேஷ்.. இன்னைக்கு அந்த சுந்தரியை சப்போர்ட் பண்ணி என்னை ரொம்ப கேவலப்படுத்திட்டான்.. அதுக்காகவே அவனையும் அந்த சுந்தரியையும் சந்தோஷமா வாழவே விட கூடாது.. அதுக்கு நிச்சயமா ஏதாவது பண்ணனும்..” என்றாள் ஷாலினி..
அப்பொழுது அவன் கைபேசியில் ஏதோ ஒரு குறுஞ்செய்தி வரவும் அதை எடுத்து பார்த்தவன் அது சுந்தரிடமிருந்து வந்திருக்கிறது என்று அறிந்தவுடன் அவசர அவசரமாக அது என்ன செய்தி என்று படித்தான்.. அதில் சுந்தர் தனக்கும் சுந்தரிக்கும் நடந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்..
“இனிமே அவங்க சந்தோஷமா வாழவே முடியாது.. இன்னிக்கு சாயங்காலமே அதுக்கு ஒரு விதை விதைச்சுட்டு
வந்திடறேன்..” என்று கண்களில் குரூரத்துடனும் வன்மத்துடனும் இதழில் ஒரு ஏளன புன்னகையுடனும் சொன்னான் மாதேஷ்..