குளிர் ஊசியாய் உடலைக் குத்த ஆரம்பித்திருத்தது. தோட்டத்திலிருந்த மினி ஜிம்மருகே கால்மடக்கி அமர்ந்து, உள்ளங்கைகளில் முகம் புதைத்துக் கண் மூடியிருந்தாள் மான்ஷி.
ஈற்றாய் யுகன் இறுகிப் போன குரலில் கூறிய வரிகள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
‘எவ்ளோ வெறுப்பு அந்த குரல்ல?’ என நினைக்கும் போதே செத்து விடலாம் போல் தோன்றியது மான்ஷிக்கு.
அவனின் காதல் ஒன்றே போதுமென சகலத்தையும் உதறித் தள்ளி விட்டு ஓடி வந்திருக்கிறாள். படிப்புக்காக அப்ராட் வரை சென்றிருந்தவள் யுகனின் பாராமுகத்தையும், அலட்சியப் போக்கையும் நினைத்து மனம் வருந்தி, சந்தர்ப்பம் வாய்த்ததும் தந்தையின் மிரட்டலையும் மீறி ஓடி வந்து விட்டாள் அவனைக் காண..
இத்தனைக்கும் அவள் தன் படிப்பை மொத்தமாய் முடித்திருக்கவில்லை.
இன்று, குடும்பமே வேண்டாம் என இவன் பாதம் நாடி ஓடி வந்தவள் வார்த்தைகளாலே அவன் ஓங்கி மிதிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் மினி ஜிம்மருகே கால்மடக்கி அமர்ந்து விட்டாள்.
அழுது அழுது கண்களில் கூட நீர் வற்றி விட்டதோ என்னவோ, அவளிடமிருந்து சிறு கேவல் மட்டுமே வெளி வந்து கொண்டிருந்தது.
‘இவ்வளவு வெறுப்பை உமிழ்கிறானே! இருந்தும் ஏன் உன்னால் அவனை வெறுக்க முடியவில்லை? அவனை விட்டு ஒதுங்கி, விலகி இருக்க முடியவில்லை.. அவனை மறந்து விட்டு உனக்கானதொரு வாழ்வை அமைத்துக் கொள்ள முயன்றால் தான் என்ன?’ என அவளது சுயபுத்தி கேள்வி எழுப்பினாலும்,
“அவன் என் உயிரோட கலந்திருக்கான். எப்படிப்பா மறப்பேன்? எப்படி விலகி நிப்பேன்? என்னை நானே வெறுக்குறது எந்தளவுக்கு சாத்தியம்!” என அழுகையுடனே பதில் அளிப்பாள் பைத்தியக்காரி!
சிவதர்ஷன் வாய் மூடாமல் அறிவுரை மழை பொழிந்த கடுப்பில் காலையுணவைக் கூட முழுமையாக உட்கொண்டு இருக்கவில்லை. மதிய உணவு வேளையிலும் தூங்கி விட்டவள் இருள் படர்ந்த இந்நேரத்தில் தான், ‘காலையிலிருந்தே சாப்பிடவே இல்ல..’ என கவலைக் கொண்டாள்.
வயிறு தன்பாட்டிற்கு கூப்பாடு போட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டிருந்தது. இருக்கும் நேரத்தில் கொடுக்கவில்லை, இப்போது எதுவுமின்றி அமர்ந்திருக்கும் போது எதைக் கொடுப்பாள்? இயலாமையுடன் கைகளால் வயிற்றை இறுக்கிக் கொண்டாள்.
‘பட்டினியிலயும், உடம்பைக் குத்துற இந்த குளிர்லயும் நின்னு என் உசுரு போய்டுமோ என்னவோ..’ என கவலையாய் நினைத்தவள் லேசான தள்ளாட்டத்துடன் எழுந்து நிற்கும் போது,
“மான்ஷி..” என்ற அழைப்புடன் அவளருகில் ஓடி வந்த காமினி, துப்பட்டாவுக்குள் மறைத்து எடுத்து வந்திருந்த தோசைத் தட்டை அவளிடம் நீட்டினாள்.
மான்ஷி மயக்கத்தில் இருக்கும் போதும், கஞ்சி காய்ச்சி வந்து பருக்கி விட்ட இரக்க குணமுடையாள் அல்லவா..
அவளுடைய காலைப் பார்ப்பதுவும், அறைக்கும் கூடத்துக்குமாய் நடை பயில்வதுமாய் இருந்தவனின் தவிப்பைtத் தனமு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மான்ஷிக்கு உணவிட்ட விடயத்தை எங்கனம் மறப்பாளாம்..
“பசியா இருப்பிங்கனு எடுத்துட்டு வந்தேன்ம்மா..” என்றவளை கனிவோடு பார்த்தவள் உணவுத் தட்டை தன்னை விட்டுத் தூரமாக்கியவாறே, “அவர் தூங்கிட்டாரா அக்கா?” என்று கேட்டாள் சிறு குரலில்.
மனம் பொறுக்காமல், “அப்படினா வீட்டுக்காவது கிளம்பி போகலாம்ல? இந்த குளிர்ல இன்னும் அரைமணி நேரம் நின்னா உடல் விறைச்சே மூச்சடங்கி போய்டும்..” என்றாள் சோகமாய்.
சரியென்பது போல் தலையசைத்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு கொள்ளைப் புறமாய் நடக்க, ‘எங்கே போறா?’ என்ற யோசனையுடன் அவளைப் பின்தொடர்ந்து நடந்த காமினி, மான்ஷியின் செயலைப் கண்டு ஆவென வாய் பிளந்தாள்.
*******
நல் உறக்கத்தில் இருந்தான் யுகேந்த். மான்ஷியை வெளியே தள்ளி கதவை மூடிவிட்டு வந்து கட்டிலில் சாய்ந்தவன், களைப்பின் காரணமாகவோ என்னவோ அயர்ந்து தூங்கி விட்டிருந்தான்.
திடீரென நாசியில் ஏறிய வித்தியாசமான வாசனையில் லேசாக அசைந்தவன் மூச்சை இழுத்து வாசம் பிடித்தபடி சட்டென கண்களைத் திறந்தான். அவன் தூங்கினாலும் உணர்வுகள் என்றென்றும் விழிப்புடன் தான் இருக்கும்!
அது, நாட்டைக் காக்கும் காவலனாகிய தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட மோப்ப சக்தியாகக் கூட இருக்கலாம்.
இருளில் எதுவும் தெரியவில்லை என்றாலும், ஏதோவொரு வித்தியாசம்.. தூங்கும் போது திறந்து விட்டிருந்த ஜன்னல் இப்போது இழுத்து மூடப்பட்டு, அரை இருளில் இருந்த அறையை கும்மிருட்டில் ஆழ்த்தி இருந்தது.
புருவம் நெறித்தவன் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு வேகமாகக் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயன்றபோது தான், தன்னைப் பின்னிருந்து இரு கரங்கள் இறுகத் தழுவி இருப்பதே தெரிந்தது.
அது யாரென கணிக்க முடியாத அளவுக்கு அவன் என்ன குழந்தையா?
கண்களை இறுக மூடித் திறந்து சீறியெழவிருந்த உணர்வுகளைக் கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன் அறைக்குள் தெரிந்த வித்தியாசத்துக்கும், நாசியில் ஏறிய வாசத்துக்கும் காரணம் அவள் தானென புரிந்து கொண்டு கைகளை இறுக்கினான்.
அவளை வேகமாக உதறித் தள்ளிவிட்டு கட்டிலை விட்டு எழுந்து நின்றான் யுகன்.
அதே வேகத்தில் கட்டிலில் எழுந்தமர்ந்த மான்ஷி, “ஏன் யுகன், தூக்கமா வருது..” என்றாள் சிணுங்கலாய்.
கள்ளத்தனமாய் அவனது கை வளைவுக்குள் சுருண்டு கொள்ளலாம் என வந்திருந்தவள் மாட்டிக் கொண்டேனே என நுனி நாக்கைக் கடித்து விடுவித்துக் கொள்ளவும் மறக்கவில்லை.
“வாட் த ஹெல் ஆர் யூ டூயிங் ஹியர்!” என்ற சீறலுடன் மேஜை மேலிருந்த பொருட்களை இழுத்துக் கீழே தள்ளினான் யுகன். கோபத்தில் தோள்களில் முறுக்கேறி, நொடிப் பொழுதில் கண்கள் சிவந்து விட்டிருந்தன.
“ச்சை!” என முகத்தில் காறி உமிழாத குறையாய் அறுவருப்பில் உதடு சுளித்தவன், அணிந்திருந்த டீஷர்ட்டைக் கழற்றி அறை மூலையில் தூக்கி எறிந்துவிட்டு திரும்பிப் பாராமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
‘ஏன்டா ஏன்.. உனக்கு நிஜமாவே என்னைப் பிடிக்கலையா?’ என மனதோடு கேள்வி எழுப்பியவள் வாழ்வே வெறுத்து போன மாயையுடன் அடித்துச் சாற்றிய குளியலறைக் கதவை வெறித்தாள்.
நடந்தது இதுதான்,
வீட்டுக்குச் சென்று விடுமாறு கூறிய காமினியிடம் சரியென தலையசைத்து விட்டு கொள்ளைப் புறமாய் நடந்தவள் யுகனது அறையின் ஜன்னல் கதவு மூடப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு முகம் மலர்ந்து நின்றாள்.
அவன் இரவு நேரங்களில் பெரும்பாலும் அறை சாளரங்களை மூட மாட்டான் என அவள் அறிந்தது தான். அவனது சிறு வயதுப் பழக்கங்களில் அதுவும் ஒன்று! இரவு வானில் வெட்கச் சிரிப்புடன் உலாவரும் நிலவைப் பார்த்தபடி கண்மூடுவது வழக்கம்.
அமாவாசை தினங்களில் மாத்திரம் பெரும்பாலும் ஜன்னல் மூடப்பட்டு இருக்கும். இன்று வளர்பிறை நிலவு வானில் சிரித்துக் கொண்டிருக்கிறதே! பிறகு ஏன் ஜன்னலை இழுத்து மூடப் போகிறானாம்..
சற்றும் சிந்திக்காமல், கீழிருந்து மேல்மாடிக்கு நீண்ட அகண்ட குழாயைப் பற்றியபடி மேலேற ஆரம்பித்து விட்டாள் மான்ஷி. தான் அறைக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காய் எப்படியும் அறைக்கதவை உட்புறமாக தாளிட மறந்திருக்க மாட்டானென்ற உண்மையை ஊகித்து விட்டதால் தான் இந்த முயற்சி!
அவள் பின்னாலே வந்த காமினி குழாயைப் பற்றியவாறு ஏறிக் கொண்டிருந்த மான்ஷியைக் கண்டதும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றாள்.
ஏற்கனவே காலையிலிருந்து சாப்பிடவில்லை. குளிரில் வேறு பலமணி நேரமாய் நின்றிருந்தவள் கைகால் தவறி கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவளின் கண்களில் கலக்கம் தெரிந்தது.
அவளின் பயத்துக்கு அவசியமே இல்லை என்பது போல், முயன்று, அறையின் பேல்கனி கம்பியின் மீதேறி அமர்ந்தவள் சிலையென நின்றிருந்தவளைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
காமினிக்கு அதன் பிறகு தான் மெல்ல மூச்சு சீராகியது.
கட்டை விரலை உயர்த்திக் காட்டி, ‘நான் செல்கிறேன்..’ என செய்கை செய்து விட்டு அத்தோடு அங்கிருந்து நகர்ந்து விட, பேல்கனி கம்பியில் வழுக்கி சத்தம் எழாதவாறு இறங்கி நின்றவளின் முகத்தில் சிறு புன்னகைக் கீற்று!
பூமியில் முளைவிட்டிருந்த மலர்க் கொடி இரண்டாம் மாடி வரை சுவரைப் பற்றுக்கோலாகக் கொண்டு வளர்ந்து, அறை பேல்கனியின் ஒரு பக்கமூலையில் வாடிய மலர்களுடன் காட்சி அளித்தது. காலை நேரங்களில் அந்த அழகிய காட்சியை ரசிக்க இரு கண்கள் பத்தாது.
அதிலும், பேல்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தபடி தூரத்தில் தெரிந்த மலைகளுக்கிடையிலிருந்து நாணத்துடன் அவனியை எட்டிப் பார்க்கும் ஆதவனின் அழகை ரசிக்கும் போது.. செந்தூர நிறமாய் மாறிப் போகும் அந்தி வானத்தைப் பார்க்கும் போது.. அப்பப்பா! நினைக்கும் போது உடல் சிலிர்த்தது மான்ஷிக்கு.
அவன் தன்னை மடியில் தாங்கி செல்லம் கொஞ்சிய நினைவுகளையும்,
‘உங்கம்மா பேச வேணாம்னா, அப்படியே என்கிட்டே பேசாம இருந்திடுவியாக்கும். ரூம் கதவைக் கூட கிளோஸ் பண்ணி வைச்சிருந்த! டென்ஷன் ஆகிட்டேன் தெரியுமா?’ என அவள் வயதுக்கு வந்த ஒரு வாரத்தில் அவன் குறைப்பட்டுக் கொண்ட நொடிகளையும்,
‘மானு.. மானு..’ என மூச்சுக்கு முன்னூறு தடவை தன் பெயரை ஏலம் விட்ட நாட்களையும்,
ஊஞ்சலில், தனக்கருகே நெருங்கி அமர்ந்து அவன் கதை பேசிய தருணங்களையும் என.. இருவரது வாழ்வின் அணைத்து முக்கிய பொழுதுகளையும் தாங்கிய இடமிது நினைவுப் பொக்கிஷங்களை சுமந்த பழங்கால ஊஞ்சல்.
கலங்கிய கண்களுடன் ஊஞ்சலை வருடிப் பார்த்தவள், “யாரும் என்னைக் கண்டுக்கலைனு கவலைப்படாத! சீக்கிரத்துல அவனையும் கூட்டிட்டு உன்கிட்டத் தான் வரப் போறேன். இந்த இடத்தை விட, உன் மடியை விட அழகான நினைவுகள் சுமந்த இடம் இங்க வேறெங்கும் இருக்க முடியாது.. “என்றாள் கிசுகிசுப்பான குரலில்..
ஊஞ்சலில் அமர்ந்து இரவின் நிஷப்தத்தையும், அதன் அழகையும் ரசிக்க ஆசையாக இருந்தாலும், பயம் அவளைத் தடுத்தது.
இந்த ஊஞ்சல் ஒருநாள், இருநாள் அல்ல.. வருடக் கணக்கில் உபயோகப்படுத்தப்படாதது என்பது அவளின் ஊகம்.
இரும்பால் செய்யப்பட்டதாயிற்றே! இத்தனை நாட்கள் கழித்து அதை உபயோகப்படுத்த முயன்றால் ‘வீல்’ என அலறி சத்தம் வைத்து விடுமோ என்ற கலக்கம் நெஞ்சைக் கவ்வியது.
“அவனோட ரூம் வரைக்கும், அவன் அனுமதி இல்லாமலே வந்துட்டேன். கூடிய விரைவுல மனசுக்குள்ளயும் புகுந்துடுவேன் நிலா. நீயும் பார்க்க தான் போற.. இந்த ஊஞ்சல்ல உக்காந்துட்டு உன்னை ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பார்ப்போம்..” என்றாள், நிலவைப் பார்த்து.
‘என் நேசத்துக்கு இந்த நிலா தான் சாட்சி! நீ உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் நிலாவை துணையாக் கூட்டிக்கிட்டு உன்னைத் தேடி வருவேன். வாழுறப்போவும் யுகனோட உடமை, உலகத்தை விட்டு விடைப் பெற்று போறப்போவும் யுகனோட உடமையாவே இருக்கணும். உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..’-
யுகன் அடிக்கடி அறுதியிட்டுக் கூறும் நினைவில் முறுவலித்தவள். “நான் இருக்கும் போது நீ நிலவைப் பார்க்க அவசியம் இல்ல..” என பைத்தியகாரத் தனமான பொறாமையோடு கூறி, ஜன்னலை இழுத்து மூடி இருந்தாள். அவ்வளவே!
நிலவின் மங்கிய வெளிச்சத்தில் அறையின் ஒவ்வொரு மூலையையும் கண்ணார ரசித்தாள்.
அவனது சிரிப்பொலியும், கொஞ்சல்களும், கெஞ்சல்களும், செல்லச் சண்டைகளும் சமாதானங்களும், ஓடி ஒழிந்து விளையாடிக் களைத்த நினைவுகளும் என சகலமும் அவளது நெஞ்சை சாரலாய் வருடிச் சென்றது..
அந்த நாட்களுக்காய் நெஞ்சம் ஏங்கியது.
குளிரில் விறைத்துப் போயிருந்த கையால் நெஞ்சை நீவி ஆசுவாசமாய்ப் பெருமூச்சு விட்டவள், ‘பலநாள் கனவே..’ எனப் பாட ஆரம்பித்த மனசாட்சியைப் பார்த்து வெட்கப் புன்னகை சிந்திவிட்டு, யுகனது முகம் பார்த்தாள்.
நாள் முழுவதும் ரசித்தாலும் தெகிட்டாது அவளது மனம் கொள்ளையிட்டவன் முகத்தை.. ரசித்தாள்; ரசித்துக் கொண்டே இருந்தாள். எவ்வளவு நேரம் மெய்மறந்து நின்றாளென அவளே அறியாள்.
இத்தனைக்கும் பிறகு, கட்டிலில் அவனருகில் தலை சாய்த்து, அவனது இடுப்போடு கைப்போட்டு அணைத்து இதமாய் கண்மூட இருந்த நேரத்தில் தான் அரிமா கண் விழித்துக் கொண்டதும், சத்தம் வைத்ததும்!
குளியலறை விட்டு வெளிக்கிட்டு, சீற்றத்துடன் டவலை வீசியடித்து விட்டு அங்கிருந்து வெளியேறியவனை ஏக்கத்துடன் வெறித்தன, மான்ஷியின் கலங்கிய விழிகள்.
‘ஏன்டா ஏன்?’ என்ற கேள்வியுடன் மனம் கதறித் தீர்த்தது.