தேவசூரனின் வேட்டை : 01

4.8
(37)

வேட்டை : 01

மலைகளின் மீது வெண் பஞ்சு போன்ற மேகங்கள் அழகாக தவழ்ந்து, மிதந்து, மகிழ்ந்து இருக்கும் அந்த அழகான காட்சியைப் பார்ப்பதற்கு கோடி கண்கள் வேண்டும். அதிகாலை நேரத்து குளிர் உடலை துளைக்க, அதை சிறிதும் பொருட்படுத்தாமல் எழுந்து குளித்துவிட்டு தனது அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் அகமித்ரா. 

அகமித்ரா சற்று உயரமானவள். பார்ப்போரை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. சிறுவயதிலேயே தாய் தந்தையை விபத்து ஒன்றில் பறி கொடுத்தவள். ஊட்டியில் உள்ள ஒரு கான்வென்ட்டில் ஒரு புண்ணியவான் சேர்த்து விட்டு, அவள் படிப்பிற்கு உதவி செய்தார். 

அவளும் நன்றாகப் படித்தாள். படித்த பின்னர் அவள் படித்த கான்வென்ட்டிலேயே தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகின்றாள். பாடசாலையில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்த ஒரு ஆசிரியர் என்றால் நிச்சயமாக நமது அகமித்ராவை கைகாட்டி விடுவார்கள். 

பாடசாலை மாணவர்கள் மட்டுமல்ல, அதன் அருகில் இருக்கும் முன் பள்ளிக்கும் கூட அகமித்ரா சென்று அங்கிருக்கும் பிள்ளைகளுடன் அவர்களுக்கு இணையாக பேசி அவர்களை சிரிக்க வைப்பாள். அவர்களுக்கும் அகமித்ரா என்றால் மிகவும் பிரியம்.

இப்படியாக சின்னச்சிறு பிள்ளைகளுடன், தனது வாழ்க்கையை எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள். காலையில் நேரத்துக்கு எழுவது, வீட்டு வேலைகளை செய்துவிட்டு, காலை உணவு தயார் செய்து சாப்பிட்டுவிட்டு, மதியத்துக்கு தேவையான உணவை பாக்ஸில் போட்டு எடுத்துக்கொண்டு செல்வாள். 

பின்னர் அந்தி நேரத்தில் வந்து அருகில் இருக்கும் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பதும் அகமித்ராவிற்கு பிடிக்கும். அவள் நன்றாக கற்றுக் கொடுப்பதாலயே அருகில் உள்ள பிள்ளைகள் எல்லாம் அவளிடம் படிப்பதற்கு ஓடி வருவார்கள். இரவு எட்டு மணி வரையிலும் பிள்ளைகளுடன் இருப்பாள்.

அவர்களது வீட்டுப் பாடங்களை சொல்லிக் கொடுத்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் அகமித்ரா, அவர்கள் சென்றதும் தனி மரமாக அந்த வீட்டில் இருப்பாள். 

ஏதாவது செய்து உண்டு விட்டு வந்து வீட்டின் முன்னால் இருக்கும் தோட்டத்தில் கால் வலிக்கும் வரை நடந்து விட்டு, பின் சென்று படுத்துக் கொள்வாள். இதுதான் அகமித்ராவின் அன்றாட வாழ்க்கை முறை. 

வழமை போல இன்றும் நேரத்திற்கு எழுந்து தனது வேலைகளை செய்துவிட்டு, சமையல் கட்டில் சமைத்துக் கொண்டிருந்தாள் அகமித்ரா. அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டது. “மித்துக் கண்ணு, மித்துக் கண்ணு….” என்று ஒரு பெண் அழைக்கும் சத்தம் கேட்டது. அகமித்ரா எட்டிப் பார்க்க கையில் மல்லிகைப் பூவுடன் முகத்தில் புன்னகை சிந்தியவாறு நின்றிருந்தார் மல்லிகா. 

மல்லிகா அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒருவர். அருகிலுள்ள முருகன் கோயில் ஒன்றில் தினமும் பூக் கட்டிக் கொடுப்பவர். அவர் முதல் முதலில் பூ கொடுப்பது நமது அகமித்ராவிற்குத்தான். மித்ராவின் கைராசி அன்று முழுவதும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது அவரின் நம்பிக்கை. 

அது பொய்யோ இல்லை உண்மையோ, ஆனால் மித்ரா அவரிடம் அவரது மனத்திருப்திக்காக தினமும் பூவாங்கிடுவாள். பூவை வாங்கி வைத்துவிட்டு, அன்றைய பூக்கான காசையும் அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தாள். 

பின் காலை உணவை சமைத்து தட்டில் போட்டு வைத்துவிட்டு, மதியத்துக்கான உணவையும் எடுத்து பாக்ஸில் போட்டாள். தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைத்தாள். அதன்பின் உள்ளே சென்று பாடசாலை செல்வதற்காக அழகிய நீல நிறத்தில் அமைந்த புடவையை அணிந்தாள். அது ஆடம்பரமும் இல்லாத மிகவும் சாதாரணமான அடக்கமான புடவையாக இருந்தது. அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. 

புடவை கட்டி விட்டு, கண்ணாடிக்கு முன் நின்று ஒரு கருப்பு நிற பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டாள். பின் வழமை போல, அவளது கரிய நீண்ட கூந்தலை பேண்ட் போட்டு ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள். பின் சுவாமி அறைக்குச் சென்று, மல்லிகா தந்து விட்டுப் போன மல்லிகைப் பூச்சரத்தில் ஒன்றை சாமிக்கு போட்டுட்டு, அங்கிருந்த விபூதி எடுத்து நெற்றியில் பொட்டின் மேலே வைத்தாள். 

பின் பூவை எடுத்து தலையில் வைத்தவாறு வெளியே வந்தாள். அங்கே இருந்த டீவியை போட்டு விட்டு சாப்பாட்டு மேசையில் தட்டில் இருந்த உணவை உண்டவாறு செய்தியை பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அதில் “காலேஜ் பெண் சுமதியின் கொலை வழக்கில் சந்தேகப்பட்ட எம்எல்ஏவின் மகன், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…. இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது… இதனை செய்தவர் சூரனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது… மேலதிக விசாரணைகளை போலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்….” 

இந்த செய்தியை கேட்ட அகமித்ராவுக்கு கோபம் வந்தது. ‘ஒரு உயிரை எடுக்கிற உரிமையை இந்த சூரனுக்கு யாரு குடுத்தாங்க…? எப்போ செய்தியை போட்டாலும் இவன்தான்… எந்தப் பக்கம் திரும்பினாலும் அவன்தான்….’ என்று புலம்பினாள். 

மேசையில் இருந்த மதிய நேரத்துக்கான உணவினையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து தனது பைக்குள் வைத்தவள், மீண்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து வீட்டை பூட்டிவிட்டு ரோட்டில் இறங்கி நடந்தாள். 

அந்தப் பெரிய பங்களாவின் வெளியே கையில் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு கேட்டிற்கு அருகில் சிலரும், வீட்டைச் சுற்றி பலரும் சுற்றிக் கொண்டே இருந்தனர். இவர்களுடன் சேர்ந்து கையில் கட்டைகளையும் கத்திகளையும் வைத்தவாறும் பலர் காவல் புரிந்தனர். நீங்கள் நினைப்பது போல அது அரசியல் வாதியோட வீடு இல்லை. ஊட்டியையே தனது கைக்குள் வைத்திருக்கும் சூரன். தேவசூரனுடையது. 

அவன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியாது. அவன் ஊட்டிக்கு வந்து மூன்றே மூன்று வருடங்களில் ஊட்டியையே தனது கைக்குள் எடுத்துக் கொண்டான். அவனுக்கு அவன்தான் நீதிபதி. அவனுக்கு சரியென்று படுவதை செய்வான். அவன் கண்முன்னாலோ அல்லது அவன் காதுகளுக்கு அக்கிரமங்கள் கேட்டாலோ கொந்தளித்து விடுவான். அவனை அடக்க யாராலும் முடியாது. மக்களுக்கு நல்லது செய்வதால் இவனை அவர்கள் கடவுளின் அவதாரம் என்பார்கள். 

வெளியே அடியாட்கள் காவலில் இருக்க, பஞ்சு மெத்தையில், அந்த குளிரிலும் ஏசியை அதிகமாக்கி வைத்து உறங்கிக் கொண்டு இருந்தான் சூரன். ஹாலில் அவனுக்காக காத்திருந்தனர் பலர். ஆனால் அவனை போய் எழுப்ப யாருக்கும் தைரியம் இல்லை. எனவே அவனாக எழும்பி வரும் வரைக்கும் காத்திருந்தனர். 

அரை மணி நேரத்தின் பின்னர் அவனது அறையில் சத்தம் கேட்டது. அது அவன் எழும்பி விட்டான் என்பதை உணர்த்தியது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த தேவசூரனை பார்த்தவர்கள் சோபாவில் இருந்து தங்களை அறியாமல் எழுந்து நின்றனர். 

தீபாவளி போட்டிக் கதைக்கான கதையோட வந்திட்டேன் பட்டூஸ்… இந்த கதையை நான் விரைவாக எழுதி முடிக்க உங்களோட சப்போர்ட் வேண்டும் பட்டூஸ் 😊😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “தேவசூரனின் வேட்டை : 01”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!