தேவசூரனுக்கு அகமித்ராவைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற அவளது டிபார்ட்மெண்ட் பக்கம் வந்தான். அங்கே ஒவ்வொரு க்ளாஸாக அவளை தேடிய படி வந்தவன் கண்களில் பட்டாள் அகமித்ரா. அங்கே ப்ரொஃபஸர் பாடம் நடத்திக் கொண்டு இருக்க, அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள். அவள் அருகில் இருந்த யாகவிக்கு காலையிலேயே அவரின் பாடம் தூக்கத்தை வரவழைக்க, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஜன்னல் ஓரத்தில் நின்று தேவசூரன், அகமித்ராவைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவள், “ஹாய் அண்ணா…” என்றாள். அவளைப் பார்த்து சிரித்து விட்டு கையசைத்தான். மெல்ல அகமித்ராவின் தோளில் சாய்ந்து அவளின் கையைத் தட்டினாள். அதில் திரும்பிப் பார்த்த அகமித்ராவிடம், “மித்து தேவா அண்ணா வெளியே நிற்கிறாங்க…. உன்னைத்தான் பார்க்க வந்திருக்கிறாங்க போல….” என்றாள். உடனே அகமித்ராவின் பார்வை ஜன்னல் பக்கம் சென்றது. அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு, அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவன், அவள் தன்னை பார்க்கும் போது, ஒரு பக்க இமையைத் தூக்கி உதடுகளை குவித்து காற்றில் அவளுக்கு முத்தத்தை அனுப்பினான். அவனின் செயலில் அகமித்ராவிற்கு விழிகள் விரிந்தன. அவளது விரிந்த கண்களை இரசித்த தேவசூரன், “உன்னை பார்க்கத்தான் வந்தேன்… சரி நீ படி நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அகமித்ராவிற்குத்தான் நடப்பது கனவா நினைவா என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்தாள்.
இப்படியாக இருவரும் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தனர். அகமித்ராவிற்கு தேவசூரனை கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கத் தொடங்கியது. காலையில் அவனிடம் இருந்து வரும் குட் மார்னிங் அழைப்புடன் ஆரம்பிக்கும் அவளது நாள் இரவு நேரத்து உரையாடல்களுடன் நிறைவுறும்… காலேஜ்ஜில் இருவரும் பார்த்து பேசிக் கொண்டு இருந்தாலும். தேவசூரன் அவளுடன் கண்ணியத்துடனே நடந்து கொண்டான். இவர்களை பார்த்துக் கொண்டே ரேணு இருந்தாள். அவள் அவளுக்கான நேரம் வரட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒருநாள் அவர்கள் வழமைபோல உட்கார்ந்து பேசும் மரத்தின் கீழே இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது அகமித்ரா தேவசூரனிடம், “உங்ககிட்ட நான் ஒண்ணு கேட்கலாமா…?”
“இதென்ன கேள்வி அம்மு… நீ எங்கிட்ட என்ன வேணும்னாலும் தாராளமாக கேட்கலாம்….” என்றான்.
“இல்லை நான் உங்களை லவ் பண்றேன்னு இப்போ வரைக்கும் சொன்னதே இல்லை… ஒருவேளை நான் கடைசி வரைக்கும் உங்களை லவ் பண்ணாமல் போனால் நீங்க என்ன பண்ணுவீங்க….?” என்று கேட்டாள். அதற்கு சிரித்த தேவசூரன், “என்னோட செல்ல அம்மு…” என்று அவள் தலையைப் பிடித்து லேசாக ஆட்டினான்.
“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க….” என்றாள்.
“பதில்தானே சொல்றேன்… நான் முன்னாடியே சொன்னதுதான் என்னோட பதில்… நீஎன்னை லவ் பண்ணுவா…. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…. ஒருவேளை நீ அதை எங்கிட்ட சொல்லலைனாலும் பிரச்சனை இல்லை… நீ எப்பவும் என்கூட இருப்ப…”
“நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறன்னு எனக்கு சுத்தமா தெரியலை அம்மு… அப்படி உன்னை விட்டுட்டு நான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைச்சாலும்… அந்தப் பொண்ணால என்னை ஏத்துக்க முடியாது…”
“ஏன் முடியாது…?”
“அம்மு நாம ரெண்டு பேரும் பேசிக்க ஆரம்பிச்சு ஆறுமாசமாகுது… இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரலையா… சரி பரவாயில்லை… ஏன் அந்தப் பொண்ணால என்கூட வாழ முடியாதுனு தெரியுமா…?” என்றவன் அவனின் ஷர்ட்டில் மேலே இருந்த முன்று பட்டனைக் கழட்டி அவனின் நெஞ்சைக் காட்டினான். அதில் அகமித்ராவின் முகம் டாட்டூ போடப்பட்டு இருந்தது. “சொல்லு அம்மு… இப்படி ஒருத்தனோட நெஞ்சில் ஒரு பொண்ணோட முகம் பச்சை குத்தியிருக்கிறதைப் பார்த்து எந்தப் பொண்ணு அவன்கூட வாழ்வாள்…? அப்படி வாழத்தான் முடியுமா…? இங்க நான் உன்கூட டைம்பாஸ்கு பழகிட்டு இருக்கல அம்மு….” என்றான். அகமித்ரா தனது நடுங்கும் விரல்களால் அவனின் நெஞ்சில் இருந்த அவள் முகத்தை தடவிப் பார்த்தாள். அவள் உடல் சிலிர்த்துப் போனது. அவளது கையை அப்படியே தன் நெஞ்சில் வைத்த தேவசூரன், “இந்த இதயம் அம்மு… அம்முனு துடிக்கிறது உனக்கு கேட்குதா…?” என்று அவள் முகம் பார்த்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து ஹாஸ்பிடலுக்குச் சென்று விட்டாள். தேவசூரன் போகும் அவளைத் தடுக்கவில்லை. ஷர்ட் பட்டனை மாட்டிக் கொண்டு, நண்பர்களிடம் சென்றான்.
“என்ன மச்சான் மித்து என்ன சொல்றா…?”
“அவ நல்லா பேசிட்டு இருப்பா… ஆனால் இந்த லவ் மேட்டரை எடுத்தா மட்டும் அமைதியாகிடுவா… சரி அப்படி எதைப் பார்த்திட்டு இருக்கிறீங்க நீங்க எல்லாம்…?”
“அதை ஏன் கேட்கிற தேவா… வழமையா வருஷத்துல ஒரு கேம்ப் ஐந்து நாள் போவமா…? இந்த தடவை பத்து நாள் அரேஞ்ச் பண்ணியிருக்கிறாங்க…”
“என்னடா சொல்ற… எப்போ போகணும்….? ரெண்டு நாள்ல… இந்த தடவை யாரும் வரமாட்டோம்னு சொல்லக் கூடாதாம்… ஃபைனல் இயரை மட்டும்தான் கூட்டிட்டு போவாங்களாம்…” என்றான் வர்மன்.
“எனக்கு அம்முவை விட்டுட்டு வர மனசே இல்லைடா…”என்று தேவசூரன் சொல்ல, “மச்சான் இதுதான் நம்ம காலேஜ்ல போற கடைசி கேம்ப்… கண்டிப்பா வரணும்னு வேற சொல்லியிருக்கிறாங்க… பத்து நாள்தானே அதெல்லாம் சீக்கிரமா போயிடும்… அதுமட்டுமல்ல தேவா நீ எப்பவும் மித்து கூட பேசிட்டு இருக்கிறதனால அவள் உன்மேல இருக்கிறது நட்பா காதலானு புரிஞ்சிக்க முடியாமல் தடுமாறிட்டு இருக்கிறா.… நீ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்க… பத்து நாள் உன்கூட பேசாம.. உன்னைப் பார்க்காமல் மித்துவால இருக்க முடியுதானு பாரு… கண்டிப்பா நீ கேம்ப் முடிஞ்சி திரும்பி வரும் போது அவ உன்கிட்ட வந்து அவளோட காதலை சொல்லுவா…” என்றான் சதீஷ். இப்படியாக பேசிப் பேசி தேவசூரன் இழுத்துக் கொண்டு கேம்பிற்குச் செல்ல தயாராயினார்கள்.
காலேஜில் இருந்து வந்ததில் இருந்து அழுது கொண்டு இருந்தாள் அகமித்ரா. யாகவி எவ்வளவு கேட்டும் பதில் சொல்லவில்லை. அவளும் தேவசூரனுடன் ஏதாவது பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டாள். அடுத்த நாள் காலையில் காலேஜிற்கு யாகவி ரெடியாகிக் கொண்டு இருந்தாள். ஆனால் அகமித்ரா எழும்பாமல் படுத்திருந்தாள். அவள் அருகில் வந்த யாகவி, “மித்து என்னடி… நீ ஏன் ரெடியாகாமல் இருக்க…?” என்றாள்.
“இல்லை யாகவி… நான் இன்னைக்கு காலேஜ் வரலை… நீ போயிட்டு வா…” என்றாள்.
“என்னாச்சி மித்து… உடம்பு சரியில்லையா…?”
“இல்லைடி நான் நல்லாத்தான் இருக்கிறன்… நீ போயிட்டு வா…” என்றாள். அவளும் ரெடியாகி காலேஜிற்கு சென்று விட அகமித்ரா எழும்பாமல் படுத்திருந்தாள்.
காலேஜிற்கு வந்த தேவசூரன் யாகவி மட்டும் தனியே வருவதைப் பார்த்து, “அம்மு எங்க யாகவி…?”என்றான்.
“அண்ணா அவ இன்னைக்கு வரலைன்னு சொல்லிட்டா… நேற்று காலேஜ் விட்டு வந்ததில இருந்து அழுதிட்டு இருந்தா… என்னனு கேட்டும் எதுவும் சொல்லலை…”
“இப்போ உடம்பு சரியில்லையா யாகவி…?”
“இல்லை அண்ணா… நல்லாத்தான் இருக்கிறா… ஆனால் வரலைன்னு சொல்லிட்டா…”
“சரிமா நீ க்ளாஸ்கு போ…” என்றவன் அகமித்ராவிற்கு கால் பண்ணினான். அவள் அடிக்கும் போனை பார்த்துக் கொண்டு இருந்தாளே அன்றி அதை ஆன்சர் பண்ணவில்லை. தேவசூரனும் விடாமல் எடுத்துக் கொண்டு இருக்கு, அவளும் போனை எடுக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேலே தேவசூரனுக்கு கோபம் வர போனை எடுப்பதை நிறுத்தினான். நண்பர்களுடன் சேர்ந்து கேம்ப் போவதற்கு தயாராகினாலும் அவனது மனம் அவளைப் பற்றிய சிந்தித்துக் கொண்டு இருந்தது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Wow super divima
Thank you so much akka 💙💙