அத்தியாயம் – 5
வர்ஷி திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகும் கூட மகேந்திரனின் முகம் எரித்தனலாகவே தான் இருந்தது.. யாரிடமும் அவ்வளவாக பேசவில்லை. அப்படியே வாயை இறுக்க மூடிக்கொண்டு இருக்க.. ஆதிசங்கரன் தான் அவரிடம் போய் பேசினார்…
“ஏன்ப்பா இப்டி அமைதியா இருக்கேள்… உங்க ஆச பேத்திக்கு விவாகம் முடிஞ்சிட்டு ஆனா உங்க முகத்துல அதுக்கான சந்தோஷமே இல்லையேப்பா…”என்று கேட்க
“எப்டி ஆதி சந்தோசமா இருக்க சொல்ற… அதான் நான் வாழ்நாள் ஃபுல்லா யார பார்க்கவே கூடாதுன்னு நினைச்சின்டு இருந்தனோ அவனே எனக்கு முன்னாடி வந்து நிறுத்திட்டீங்களே.. அப்புறம் நான் எப்படி சந்தோசமா இருப்பேன்னு நோக்கு தெரிய வேணாம்…”என்று கோவமாக பேசியவர்… “ம்ச் இது என் ஆசை பேத்தியோட விவாகம்தான்.. நான் இல்லன்னல… ஆனா அதை கூட அனுபவிக்க முடியாத அளவுக்கு அந்த படுபாவி பய செஞ்சுன்டு போயிட்டானே.. காலம் ஃபுல்லா அவன் மூஞ்சிலேயே முழிக்க கூடாதுனு நான் நினைச்சுன்டு இருந்தேன்… ஆனா இப்படியான என் பேத்தி கல்யாணத்துக்கே வர வச்சு என் முகத்தில அவன முழிக்க வச்சிட்டீங்களே…” என்று ஆற்றாமையாகவும், எரிச்சலாகவும் கூறியவரின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம் பொங்கி வழிந்தது..
அதனைக் கேட்ட சிவசங்கரனோ “ஐயோ அப்பா நாங்க யாரும் அவன கூப்பிடலப்பா…”என்று சங்கடமாக கூற
“பின்ன வேறு யாருடா அவன கூப்ட்டா…” என்று வெறுப்பாக கேட்டவருக்கு கோவத்தில் இருமல் வந்து விட…
“லொக் லொக்…”என்று இருமியவாறெ இருந்தவரை அவ்வளவு நேரமாக பார்த்துக்கொண்டிருந்த தமையாவோ சட்டென்று தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு அவரிடம் ஓடிவந்தவள் அவரிடம் கொடுக்க… அவரோ வேகமாக தண்ணீரை அருந்தியவர் அப்போதும் அடங்காதவராக “அந்த ராசி இல்லாத பையல என்னோட கண்ணுல காட்டுனதுனால தான் என் முகம் எப்படி இருக்கு போதுமா…” என்றார்
அதனை கேட்ட தமையாவிற்கு தான் மனம் கேட்கவே இல்லை.. பின்னே அவளுக்கு மிகவும் பிடித்த அவளின் மாமாஜியை பார்த்து அப்படி கூறினால் கோவம் வராதா என்ன… “அய்யோ தாத்தா நீ கொஞ்சம் வாயை மூடுறியா… இன்னிக்கு அக்காவுக்கு விவாகம் அத நிம்மதியா அனுபவிக்காம ஏன் இப்டி இம்சை பண்ணிக்கிட்டு இருக்கேள்…” என்ற தமையா கத்த
அதனைக் கேட்ட மகேந்திரனோ கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டார்… ஏனென்றால் தமையாவின் மீது அவருக்கு கொள்ளை பிரியம்… மற்ற பேரன் பேத்திகளை விட தமையா ஒரு படி மேல்தான் அவருக்கு… ஏனென்றால் அவள் பிறந்த விதம் அப்படி… தமையா ஒன்றும் சாதாரணமாக பிறந்தவள் இல்லை…
தமையா எட்டு மாதம் அவள் தாய் சுபஸ்ரீயின் வயிற்றில் இருக்கும்போது.. ஒருநாள் மாடியில் துணி காய வைத்திருந்ததை எடுப்பதற்காக சென்ற சுபஸ்ரீ கால் தடுக்கி மாடியிலே விழுந்து விட அவரை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்றவர்களுக்கு மனம் பயத்தில் வேகமாக அடித்துக்கொண்டது.
ஏனென்றால் சுபஸ்ரீயின் தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் நிறைய ரெத்தம் போய்விட்டதென்றும் அவர் பிழைப்பது கடினம் என்றும் கூறிவிட்டனர்.. அதனால்தான் இந்த பயம்… வேக வேகமாக மகேஸ்வரன் தங்களுடைய குலதெய்வமான சிவனுக்கு வேண்டிக்கொண்டவர் “என் மகளுக்கும் அவ வயித்துல இருக்குற குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது கடவுளே… எப்படியாச்சும் ரெண்டு உயிரையும் காப்பாத்தி கொடுத்துரு… ரெண்டு பேரையும் கண்ணு மணியா வச்சு நான் பாதுகாக்கிறேன்..” என்று அவர் வேண்டிக் கொள்ள
அதனை நிறைவேற்றுவது போல அடுத்த அரை மணி நேரத்தில் தமையாவும் நலமாகவே பிறந்துவிட்டாள்… அதேபோல சுபஸ்ரீக்கும் எந்த ஒரு ஆபத்தும் நேராமல் போக அன்றிலிருந்து சுபஸ்ரீயும் தமையாவும் அவருக்கு உயிராகி போனார்கள்… யார் என்ன சொன்னாலும் முரண்டு பிடிப்பவர் தமையாவோ அல்லது சுபஸ்ரீயோ ஏதாவது கூறினால் அதனை உடனே ஏற்றுக் கொள்வார்… இந்த இருவருக்கு மட்டுமே அந்த சலுகை இருக்கின்றது.. தன் பேத்தியையும் மகளையும் பிரிய முடியாமல் தான் அவர்கள் குடும்பத்தையே தங்கள் வீட்டிலேயே வைத்திருக்கிறார் பெரியவர்… அதனால் அவருக்கு மற்ற பேரன் பேத்திகள் மீது அவருக்கு அன்பு இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது…
இவர்கள் எல்லாம் ஒரு படி மேல்தான் அவருக்கு… அவருக்கு பிடிக்காத ஒரே பேரன் என்றால் அது நளன் மட்டுமே…தன் பேத்தி தமையா அதட்டுவதை அமைதியாக கேட்டுக் கொண்டவர் சரண்டர் என்பது போல கையை தூக்கிக்கொண்டு “சரிடாமா நான் எதுக்கும் கோபப்படல போதுமா…” என்று அமைதியாக கூறினார்.
“ம்ம்ம்.. அது தான் மகேஸ்வரனுக்கு அழகு…“என்று தன் தாத்தாவின் கன்னத்தை பிடித்து கிள்ளியவளோ… “இப்டி எதுக்கெடுத்தாலும் கத்த கூடாது தாத்து..அப்புறம் உனக்கு பிரஷர் அதிகமாயிடும்… நான் சொல்றது உனக்கு புரிதா…”என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல சொல்ல…
இவர்கள் இருவரையும் பொறாமையாக பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி. அவனுக்கு தன்னை விட யாரிடமும் தனக்கு நெருக்கமானவர்களோ, அல்லது தன்னுடைய உரிமைப்பட்டவர்களோ பாசத்தை பொழிவது பிடிக்காது.. “ஹலோ மேடம்..நான்தான் இங்க டாக்டர்… நீ ஒன்னும் டாக்டர் இல்ல… நீ சமையலுக்கு தான் படிச்சின்டு இருக்க…” என்று அவளை பார்த்து பரிகாசமாக கூறியவாறே அங்கு வந்து ஆஜர் ஆகினான் ரிஷி…
அவனுக்கு எப்போதும் தமையாவை மட்டம் தட்டுவது முதன்மை வேலையாகி போனது… ஏனென்றால் தாத்தாவிற்கு தமையா என்றால் உயிர் என்பதே அவனுக்கு போதுமானதாக ஆக… அவளை எப்படியெல்லாம் மட்டம் தட்டுவானோ அப்படி எல்லாம் மட்டம் தட்டுவான்.
தமையாவோ அவனை நிமிர்ந்து முறைத்துப் பார்த்தவள்… “ரிஷி மாமா நீ வேணா டாக்டரா இருக்கலாம்… ஆனா தாத்தாவோட செல்ல பேத்தி நான் தான்… நா என்ன சொன்னாலும் அத தாத்தா கேப்பாரு… அதுவே நீ சொல்லி பாரேன் அவர் கேட்பாரா என்ன பார்க்கலாம்…” என்று அவளும் இளக்காரமாக கூற
ரிஷிக்கோ அவள் கூறுவதை கேட்டு கோவத்தில் பல்லை கடித்துக் கொண்டு நின்றான்… “ம்ச் தாத்தா நீங்க எப்ப பார்த்தாலும் அவளுக்கு அதிக டிஸ்கவுன்ட் தரதுனால தான் அவ இப்டிலாம் பிஹேவ் பண்ணிட்டு இருக்கா… நீங்களே பாருங்கோ என்ன கொஞ்சம் கூட மதிக்கவே மாற்றா…” என அவளை பற்றி குறை வாசிக்க…
தமையாவோ தன் இடையில் கை வைத்து அவனை புருவம் உயர்த்தி உறுத்து பார்த்தவாறே “அத எதுக்கு தாத்தா கிட்ட சொல்ற என்கிட்ட சொல்ல வேண்டியது தானே… சரி பெரியவரே இனிமே நான் உங்களை மதிக்கிறேன் ஓகேவா… இந்த மரியாதை போதுமா…” என்று அவனை ஏதோ வயதானவன் போல பேச
அதில் இன்னும் காண்டாகி போனவன் ஏதோ பேச வர… “அட ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க… அங்க வர கெஸ்ட் எல்லாம் பாக்குறதுக்கு ஆள் பத்தலையாம் இப்பதான் வகி போன் பண்ணான் ரெண்டு பேரும் முதல்ல ஸ்டேஜிக்கு போங்கோ…” என்று ஒரு அதட்டலை போட்டார் சிவசங்கரன்.
அதில் தமையாவும், ரிஷியும் வாயை கப்பென்று மூடிக்கொண்டனர்… ஆனால் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் முறைக்க மட்டும் தவறவில்லை.
மகேஸ்வரனோ இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவருக்கு சிறிது நேரத்திற்கு முன்பு வரை இருந்த சுணக்கமோ, கோவமோ மறைந்து போனது.. அதற்கு பதில் புன்னகையே வந்து குடிக்கொண்டது அவர் முகத்தில்… “டேய் பசங்கள அதட்டாதடா…”என்று அவர்கள் இருவருக்கும் வக்காலத்து வாங்க…
“போதும்ப்பா நீங்க தான் இவங்கள கெடுக்குறது..”என்றவர்… “ம்ம் தமையா போ போய் உன் அக்கா பக்கத்து போய் நில்லு…”என்றவறை பொய்யாக முறைத்து பார்த்தளோ….
“அந்த பக்கம் தள்ள பேசாம இந்த பக்கம் தள்ளிவிடுங்கோ மாமா… என் அக்காளுக்கு இதோ இந்த டெரர் பீஸே எவ்வளவோ மேலு…”என்று ரிஷியை காட்டி கூற.. அதுவோ மற்றவர்களுக்கு சிரிப்பையும், ரிஷிக்கு கோவத்தையும் தான் உண்டாக்கியது.
“யார பாத்துடி டெரர் பீஸுன்னு சொல்ற…”என்று ரிஷி எகுற..
“உங்கள பாத்துதான் அப்டி சொன்னேன் மாமா…”என்றவள்.. “அப்புறம் இப்டிலாம் என்ன பாத்து வாடி போடின்னு சொல்லாதேள்.. அப்புறம் நம்ம வாயோ சும்மான்னு இருக்காது.. உங்கள பாத்து நானும் வாடா போடா சொல்ல வேண்டியதா இருக்கும்.. புரிஞ்சிதோன்னோ…”என்றவள் அவனை முறைத்தவாறே மேடை ஏற…
ரிஷியோ கோவத்தில் புஸ் புஸ்வென மூச்சை வெளியிட்டவன்.. “பாத்தீங்களாப்பா.. இவளுக்கு எத்தன வாயின்னு.. கொஞ்சமாச்சும் பெரியவாள்ன்னு அடங்கி போறாளான்னு பாருங்கோ.. இதுல எல்லாரும் அவளுக்கு சப்போட்டு வேற…”என்று அலுத்துக்கொள்ள..
“போதும் ரிஷி.. அவ விளையாட்டு புள்ள… நீதான் பெரியவன் கொஞ்சம் அவள பொருத்து போய்க்கோ கண்ணா..”என்ற சிவசங்கரனொ… “ம்ம் போய் மேடையில இருக்குற வேலைய பாருப்பா..”என்று அனுப்பி வைக்க..
“ஆமா இதையே சொல்லுங்கோ ப்பா…”என்று அலுத்துக்கொண்டவனோ மேடையை நோக்கி நடக்கலானான்.
இருவரும் ஒரே போல மேடைக்கு செல்ல… “இவங்க ஜோடி பொருத்தமே நன்னா இருக்குல்ல…” என்று என்றால் மகேஸ்வரன் கீழே அவர்களை ரசித்தவாறே
அதனைக் கேட்ட சிவசங்கரனோ சிரித்தவர்… “யாரப்பா சொல்றேள்… இவாளையா… இவங்களோட ஜோடி பொருத்தமா.. ஏன்பா இப்படி காமெடி பண்றேள்…எப்ப பாத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்ட தான் போட்டுன்டு இருக்கா.. அவங்க ரெண்டு பேரையும் போயி நல்ல ஜோடி பொருத்தம் சொல்றீங்களே..” என்று கிண்டல் செய்ய
அதனை கேட்ட மகேஸ்வரனோ “அடேய் உறவுக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் இப்டித்தாண்டா செல்ல கோவமோ, சண்டையும் இருந்துச்சுன்னா அவங்க வாழ்க்கை நன்னா இருக்கும்… நானும் உன் அம்மாவும் சண்டை போடாமலா வாழ்ந்தோம்.. அதெல்லாம் நிறைய சண்டை போட்டோம் இல்ல கோசலை..” என்று அருகில் இருக்கும் கோசலையை திரும்பிப் பார்க்க அவர் முகமோ கலையிழந்து இருந்தது.
அவர் எதற்கு இப்படி இருக்கிறார் என்பது மகேஸ்வரனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அதனை பற்றி பேச அவருக்கு விருப்பம் சுத்தமாக இல்லை. “சரி விவாகம் நல்லபடியா முடிஞ்சின்டு இல்லையா.. மாப்பிள்ளையும் பொண்ணையும் கூட்டின்டு முதல்ல நம்ம ஆத்துக்கு தானே வரீங்க..” என்று பேச்சை மாற்றும் வகையில் அவர் கேட்க
“இல்லப்பா சம்மந்தி அவங்கள அவங்க ஆத்துக்கு கூட்டின்டு போறதா சொல்லிட்டாரு… நம்ம ஆத்துக்கு நாளைக்கி மறுவீட்டுக்கு கூட்டிட்டு போங்கோன்னு சொல்லி இருக்காங்க…” என்று கூற
மகேஸ்வரனோ அனைத்திற்கும் தலையாட்டிக்கொண்டார். இப்படியே வர்ஷியின் திருமணம் நல்லபடியாக முடிய… வர்ஷியையும்,வம்சியையும் அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள் மகேஸ்வரன் குடும்பத்தார். சம்மந்தி வீட்டுடன் சுபாவும்,குணாவும் சென்றுவிட்டனர்.
மற்றவர்கள் அனைவரும் தங்களின் வீட்டிற்கு சென்று அடைத்து விட்டார்கள்… வர்ஷினி முகமோ காரில் செல்லும்போது எல்லாம் அவ்வளவாக சந்தோஷத்தில் இல்லை.. ஒருவித குழப்பத்திலையே தான் இருந்தது. அதனை பார்த்த வம்சிக்கோ சரி அவர்களின் வீட்டினரை பிரிவதில் உண்டான கஷ்டமோ என்று நினைத்தவாறு அப்படியே விட்டுவிட்டான்.
“ம்ச் ஏன் மாப்ள உங்களுக்கு இந்த வேல.. எதுக்கு அவன வர்ஷியோட விவாகத்துக்கு கூட்டின்டு வந்தீங்க… எங்க எல்லாருக்கும் தெரியும் அவன கூட்டின்டு வந்தது நீங்களாதான் இருப்பீங்கன்னு…” என்று நாகராஜிடம் கடிந்துக்கொண்டிருந்தார் தர்மேந்திரன்… அவருக்கு அருகில் நின்று அவரை முறைத்துக் கொண்டிருந்தார் ஜான்வி.
“அதானே நானும் கேட்கிறேன்… சும்மா வேலியில போறவனை தூக்கி வேட்டில விட்ட கதையா அவனை எதுக்கு இந்த கல்யாணத்துக்கு கூப்பிடுறீங்க…” என்று ஜான்வியும் பிற்பாடு பாட…
அவர்கள் இருவரையும் கேவலமான ஒரு பார்வையை பார்த்த நாகராஜோ… “ஆமா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க ரெண்டு பேரும் தானே அவனை பெத்தவங்க..” என்று கேலியாக கேட்க
அதில் இருவரின் முகமும் சட்டென்று இருளடைந்துவிட்டது… ஆனாலும் அதனை காட்டிக்கொள்ளாமல்… “அட நாங்க என்ன கேட்கிறோம்.. நீங்க என்ன பதில் சொல்றீங்க மாப்ள…” என்று தர்மேந்திரன் கேட்க
“இல்ல எனக்கு இந்த வீட்டில கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து இந்த டவுட் இருக்கு அதனால தான் கேட்கிறேன்… சும்மா சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் தான அவனை பெத்தீங்க…” என்று அழுத்தமாக திரும்ப கேட்க
அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தலையை குனிந்துக் கொண்டு நின்று இருந்தவர்கள்… அவர்களை ஏற இறங்க நக்கலாக பார்த்தவறோ… “இல்ல யாரோ பெத்த புள்ள மாதிரி அவன இப்டி கேவலமா ட்ரீட் பண்றீங்களே அதான் எனக்கு டவுட்..” என்று நாகராஜன் கேட்க… அதில் இருவரும் அவரை முறைத்தவாறே அங்கிருந்து சென்று விட்டனர்.
இங்கு நளனோ தன்னுடைய காரை அந்த ரிசார்ட்டின் ஓரமாக நிறுத்தியவனோ அப்படியே ஸ்டேரிங்கிலையே படுத்துவிட அவன் இமைகளின் நடுவே ஏற்பட்ட சுருக்கத்திலையே ஏதோ தேவை இல்லாத நியாபகம் வந்து அவனை அலக்கழிப்பது நன்றாக தெரிந்தது.
(நீயடி…)