நளிர் 8, 9
கால் பண்ணி பார்த்து சலித்து போனவராக அடுத்து வீடியோ காலிலேயே அழைப்பு விடுக்கவும், அருகில் இருவரும் எடுப்பாளா மாட்டாளா என்று அவளையே பார்த்திருக்கவே, அவர்கள் முன் கட்பண்ணவும் முடியாது, வேறு வழியில்லாமல் அதை ஏற்றாள்.
“என் செல்லப் பொண்ணுக்கு இந்த அங்கிள் மேல கோபமோ?…” அவள் அவர் முகம் பார்க்காது அமர்ந்திருக்கவும் ஜெயராமன் அவளைக் கொஞ்சினார்.
எதிரில் அமர்ந்திருந்த சந்தனுவும் சகாயமும் நண்பனின் கொஞ்சல் குரல் கேட்டு புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார்கள்.
அவளோ அவரைப் பார்க்காமலேயே அமர்ந்திருந்தாள், “தாட்சா நீ பாட்டுக்கு லீவு போட்டுட்டு அங்கே உட்கார்ந்துட்டே. இங்கே நான் தனியா என்ன செய்யட்டும்?… கொஞ்சம் கருணை வையும்மா…” ஜெயராமன் அவளை பாவமாய் பார்த்து வைக்க.
“ஆஹா…! ஊரையே கட்டி ஆள்கிற ராஜாவுக்கு, ஒரு பி. ஏ இருந்தாதான் வேலை ஓடுமா? உங்களுக்கு வழக்கம் போல தோள் பட்டை வலிக்குதுன்னு சொல்லுங்க அங்கிள். சும்மா கண்ட கதையும் அளக்க வேண்டாம் என்கிட்டே…” தாட்சா கோபமாய் சொல்லவே.
“தாட்சா என்ன இதெல்லாம்? பெரியவங்ககிட்ட இப்படியா பேசுவே?…” அவளைக் கண்டிக்க முற்பட்ட சந்தனுவை தடுத்த சகாயம், “விடு சந்தா அவங்களே முட்டிக்கிட்டு தெளியட்டும்…” என்று விட. வேறு வழியில்லாமல் நண்பனிடம் கோபப்படும் மகளை முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.
“நிஜமா சொல்றேன் தாட்சா. பாரு நீயில்லைன்னு இந்த ஸ்டீபன் எனக்கு உன்னோட குலாப்ஜாமுனை சாப்பிட தரான்…” என்கவே.
தாட்சா குலாப்ஜாமுன் என்றதும் லேசாய் பார்வையைத் திருப்பி வீடியோ பக்கம் எட்டிப் பார்க்க. ஸ்டீபன் எட்டி பார்த்து அவளுக்கு ஒரு ஹாய் சொல்லவே, மேலும் கடுப்பானவள், என்னை துரத்திவிட்டுட்டு அங்கே ஸ்வீட் சாப்பிடுறாங்களா என்று கடுப்பாகி சண்டைக்கு போனாள்.
“அங்கிள் ப்ளீஸ் நடிக்காதீங்க. நான் அத்தனை தடவை சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க. என்னால எல்லாம் அங்கே வர முடியாது…” தாட்சா மறந்தும் அவரின் முகம் பார்க்காது பேசியவள்.
“என்னை விட தகுதி உள்ளவங்க அங்கே இருக்காங்கதானே அங்கிள்?… அவங்களை உங்க மகனுக்கு அசிஸ்டெண்டா போட்டுக்கோங்க…” அவள் படபடவெனக் கூறினாள்.
“அதில்லைம்மா இங்கே இருக்கிறவங்க அந்த அந்த துறையில்தான் வேலை செய்யறாங்க. நீ மட்டும்தான் பாராபட்சம் பார்க்காம எல்லாப் பக்கமும் போய்க்கிட்டு வர்றே. அதுவுமில்லாம அவனை சமாளிக்க உன்னாலதான் முடியும். என் செல்ல பொண்ணு இல்ல. சரின்னு சொல்லிடுடாம்மா…” ஜெயராமன் கெஞ்சலில் செய்வதறியாது விழித்தவள். வழக்கம் போல சகாயத்திடமே சரணடைந்தாள். அவரிடம் என்ன சொல்வதென விழிகளால் கேட்டாள்.
சகாயமும் அவள் குழப்பத்தை உணர்ந்து கொண்டவர் போல, ‘சரின்னு சொல்லு பார்த்துக்கலாம்…’ என்று கண்ணசைவில் ஆறுதல் கூறினார்.
சந்தனுவோ அப்பாவியாய், “என்னம்மா தாட்சா?. ஜெயன்தான் இந்த அளவுக்கு கேட்கிறாரே. அப்புறம் எதுக்கு தயங்கிகிட்டு இருக்கே. இங்கே நான் பார்த்துக்கிறேன். நீ சரின்னு சொல்லிடு…” என்று கூறவும்.
அப்பாவிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாதவளாய், “சரிங்க அங்கிள் நான் வர்றேன். ஆனால் காலை பத்து மணியில் இருந்து சாயந்திரம் ஆறுமணி வரைதான் நான் வேலை செய்வேன். அதுக்குமேல ஒரு நிமிஷம் கூட நான் அங்கே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” கொஞ்சம் கறாராகவே சொன்னாள்.
“சரிம்மா இதுக்கும் மேல உன் விருப்பம்தான். நான் என்ன சொல்லட்டும்…” ஜெயராமன் சோர்வாக சொல்லவே.
அழுப்புற்றவளாக, “அதான் சரின்னு சொல்லிட்டேனே அங்கிள். அப்புறம் என்ன சலிப்பு உங்களுக்கு. கொஞ்சம் சிரிச்சும் பேசலாம் என்கிட்டே…” அவரிடம் செல்லமாய் குறைபட்டாள்.
“அவனை பத்தி என்னை விட உனக்குத்தான் அதிகம் தெரியும். சோ டைம் முன்னே பின்னே ஆனால் பார்த்துக்கோம்மா. இப்போ வந்து சேரு முதல்ல மத்ததை அப்புறம் பார்க்கலாம்…” ஜெயராமன் சொல்லவே.
சிறு புன்னகையுடன் தான் அங்கே வருவதாய் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினாள் தாட்சா…
இருக்கையில் இருந்து எழுந்தவள், “சரி கைஸ் நான் கிளம்பறேன். ஈவ்னிங் பார்ப்போம்…” என்றவாறு கிளம்பிவிட்டாள்.
அறைக்குள் சென்றவளுக்கு யோசனைதான். ஆனால் அவளுக்கு அங்கே செல்வதைத் தவிர வேறு ஆப்ஷனும் கிடையாதே.
அபிக்கும் சஜித்துக்கும் மற்ற பக்கங்களில் படிக்க இடம் கிடைக்காததால் வேறுவழியில்லாமல் பீஸ் அதிகம் என்றாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று ஒரு
காண்வெண்டில் சேர்த்துவிட்டாள்.
வேன் பீஸ் முதற்கொண்டு அங்கேயே மதிய உணவு அது இதென்று இருவருக்கும் சேர்த்து வருடம் இரண்டு லட்சங்களுக்கு மேல் ஆகிவிடும்.
ரெஸ்ட்டாரெண்ட் வருமானம் அவர்கள் சாப்பாட்டு செலவுக்கும், அவ்வப்போது வரும் மருத்துவ செலவுக்கும் சரியாகிவிடும்.
எனவே தாட்சாவுக்கும் வேலைக்கு சென்றே ஆகவேண்டிய சூழல். இப்போ அவள் எதற்கு பயப்படுகிறாள் என்றால்,
விக்ரம் மனநிலை இப்பொழுது எப்படி என்று தெரியாது, அதேசமயம் வெளிநாடு எல்லாம் சென்று வந்தவன் சாதாரண டிகிரியை கையில் வைத்திருக்கும் தன்னை அசிஸ்டெண்டாக ஏற்பானா?… நினைக்கவே பயமாகவும் வந்தது அவளுக்கு.
ஹோட்டல் சென்றவளை எதிர்கொண்ட ஜெயராமன், “தாட்சா நாளைக்கு காலையில் விக்ரம் இங்கே வந்திடுவான். எனக்கும் அவனைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடமாகிடுச்சு. சொல்லப்போனா அவனை பார்க்கற ஆர்வத்தில் எனக்கு பிரஷர் அதிகமாகிடும் போல இருக்கே…” என்றவர் பரபரக்க.
அவரை பார்த்தவளுக்கு கவலைதான் வந்தது, பிரஷர் அதிகமானால் என்ன செய்வதென்று. அதனால் முதலில் அவரை சரிசெய்யவேண்டும் என நினைத்தவள்.
அவரை இருக்கையில் அமரச் சொன்னாள் முதலில், “அங்கிள் ப்ளீஸ் முதல்ல உட்காருங்க…” அவரை அமர வைத்தவள்.
“நாளைக்கு காலையில் வந்திடுவார்தானே? இப்படி எக்ஸைட் ஆனா, அப்புறம் ஹாஸ்பிட்டல்தான்
போகணும்… சோ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாகுங்க பார்க்கலாம்…” அவரை நிதானப்படுத்தியவள்.
“இப்போ என்ன உங்க மகன் வர்றார் அவ்ளோதானே? அதுக்கு இன்னும் பத்து மணி நேரம் மீதம் இருக்கு. அதனால அவர் வந்து பொறுப்பேத்துக்கணும்னா, இங்கே இருக்கற சூழ்நிலையையும் கொஞ்சம் தயார் செய்யணும் இல்லையா? வந்தவுடனே குழம்பி திரும்பவும் வெளிநாட்டுக்கு அவர் ஓடிடக்கூடாது அங்கிள்…” திட்டிக்கொண்டே அவரை வேலையில் ஈடுபடுத்தினாள் தாட்சா.
ஜெயராமன் மகனின் பெருமையை பக்கம் பக்கமாக அளந்து கொண்டிருக்க, விக்ரமைப் பற்றிய பேச்சே அவரை பம்பரமாய் செயல்பட வைத்தது.
அவரது குதூகலத்தை ரசித்திருந்தாள். அவருக்கு அறுபது வயது என்றால் கொஞ்சம் நம்ப கடினமாய்த்தான் இருந்தது. இன்னும் யோகா, உடற்பயிற்சி என்று தன்னை இளமையாக வைத்துள்ளார். அதுமட்டும் அல்ல மனைவி ஹாசினியும் என்னதான் மற்றவர்களிடம் கரடுமுரடாக நடந்து கொண்டாலும், ஜெயராமனிடம் அவர் குணமறிந்தவளாக நடந்துகொள்ள, இன்னுமே காதல் மன்னன்தான் அவர். நல்ல தந்தையும் கூட அவர்.
அதுமட்டுமா அவளது உற்ற தோழனும் அவர்தான். அவரிடம் எதையும் மறைத்ததில்லை இதுவரை. நினைத்தவளுக்கு அவரிடம் தான் மறைத்த முக்கியமான விஷயம் நினைவுக்கு வரவும் முகம் இருண்டு போனது. அது மட்டும் அவருக்கு தெரிந்தால் தன்னை மன்னிப்பாரா அவர். முகம் கொடுத்துக்கூட பேசமாட்டாரே. நம்பிக்கை துரோகி என்றும் சொல்வாரே பதறினாள்.
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு தன் வேலையில் ஆழ்ந்தவளுக்கு முடியவில்லை. அத்தோடு அவர் வேறு அவன் கிளம்பிய நாளைப்பற்றி பேசலானார்.
“என்ன ஆச்சு ஏதுன்னு ஒண்ணுமே புரியலை தாட்சா. அவன் பாட்டுக்கு அந்த அன்னைக்கு மதியமே கோபமாய் இந்த ஊரில் இருந்து போனவன் அப்படியே வெளிநாடு போயிட்டான்… நானும் சரி ஏதோ சுற்றுலா அப்படி இப்படின்னு போயிருப்பான்னு நினைச்சேன். பார்த்தா அப்படியே இருந்துட்டான். இங்கே ஹாசினியும் எதுவும் கேட்டுக்கலை. ஒருவழியாய் இப்போவாவது வரதுக்கு மனசு வந்துச்சே அவனுக்கு…” இப்படி அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க.
அவளுக்கு வேலை செய்ய இயலாமல் கைகள் நடுங்கின. அத்தோடு அந்த நாளின் நினைவுகளும் எழுந்தன.
ஆம் அன்று அவன் தன்னை பேசிய பேச்சுக்கள், அவன் தன்னை நடத்திய விதம். தன் காதலுக்கு விலையாக அவன் கொடுத்த செக், இன்னுமே சுமையாக அவளிடம் பத்திரமாய் இருக்கிறதே. அந்த மோதிரம்… அவள் தன் எண்ணங்களில் மூழ்க ஆரம்பித்து பலவீனம் ஆகும் வேளையில் அவளை அழைத்த ஜெயராமன்.
“தாட்சா உனக்கு ஒன்னு தெரியுமா? அவனுக்கு பிடிவாதமும் அதிகம்தான். தான் நினைத்ததை சாதித்தே ஆகவேண்டும் அவனுக்கு…”
அவர் சொல்லவும் அவனது நினைவில் அவள் இதழ்களிலும் புன்னகை விரிந்தது.
9…
அவளிடம் காதலை சொன்னவன் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை, அவள் மனதை உறுத்தாத வண்ணம் அவளிடம் மென்மையாக அதை புரியவைக்க முயன்று கொண்டிருந்தான்.
அவளோடு மேலும் நெருங்கிப்பழகி பழகி, கொஞ்சம் கொஞ்சமாய் தான் இல்லாமல் அவளால் இருக்கமுடியாது என்ற நிலையை அவளுக்கு உருவாக்கிக்கொண்டிருந்தான்.
அப்படி ஒரு சூழ்நிலையில்தான்
ஒருமுறை விக்ரமும், தாட்சாவும் விக்ரமின் எஸ்டேட்டுக்கு சென்றனர். பனிரெண்டாம் வகுப்பு முடிந்து விடுமுறை சமயம் அவளுக்கு.
“சேனா இந்த நேரம் வேண்டாம்னு சொன்னாலும் கேட்கலை நீங்க. நாளைக்கு வந்திருக்கலாம். ரொம்ப குளிருது இங்கே…” புலம்பியவாறே இருகரங்களையும் மார்போடு சேர்த்து குளிருக்கு இதமாய் கட்டிக்கொண்டு. அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“ப்ச்…! அதான் வந்தாச்சுல்ல தாட்சா. அதைப்பத்தியே பேசனுமா என்ன. இப்ப என்னவோ அதை அனுபவி…” அவன் கண்கள் இயற்கையை ரசித்திருக்க மிருதுவாய் சொன்னான்.
“உங்களுக்கென்ன, ஜெர்கின் போட்டிருக்கீங்க. ஆனா நான் அப்படியா?…” அவள் ஆரம்பிக்கவே. அவளைத் தடுத்தவன்.
“நீ போட்டிருக்கும் சுடிதார் குளிர்தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. உன்னோட பாதம், முகம், கைவிரல்கள் தவிர அங்கே ஒன்னும் தெறியலை. பத்தாதற்கு இந்த துப்பட்டா வேற உன்னைப் பாதுகாக்குது அப்புறம் என்ன குறை உனக்கு?…” அவன் சிரிப்புடன் கேட்க.
“அதானே நீங்களும் ஆண் வர்க்கம்தானே?. சினிமால கூட பொண்ணுங்க அரையும் குறையுமா பனியில் உருளனும். ஆனால் ஆண்கள் குளிருக்கு பாதுகாப்பாய் எல்லா உடைகளையும் போட்டுட்டு வருவாங்க. சுயநலவாதிகள் நீங்க எல்லோரும்…” தன் குளிரை அவன் மதிக்காமல் போனானே என்ற கோபத்தில் அவள் முன்னே செல்ல.
அவளை தன் அருகே இழுத்தவன், “இப்போ உன் குளிரை போக்கணும். அவ்வளவுதானே சிம்பிள்…” என்றவன் அவளை தன்னோடு அணைக்க முயல.
“சேனா. விடுங்க என்னை…” அவனிடம் இருந்து விலகி முன் சென்றவளின் முகம் வெட்கத்தில் சிவந்து கிடந்தது.
இரண்டு வருடங்களாய் அவன் மீது காதல் என்ற உணர்வு வர ஆரம்பித்திருந்ததோ அவளுக்கு…!
காப்பி, மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை கிராம்பு போன்ற நறுமணப்பொருட்களின் மனம் அவள் நாசியை நிறைக்க ஆழ்ந்து சுவாசிக்கலானாள்.
மசாலாப்பயிர்கள் என்பார்கள் இதை.
பொதுவாக எஸ்டேட் என்பது விவசாய நிலங்கள் போல சரிசமமாய் இராது. ஏற்றத்தாழ்வுகளுடனும், பள்ளத்தாக்குகளும் கலந்துதான் இருக்கும் அங்கே.
சில்வர் ஓக் மரங்கள், ரப்பர் மரங்கள் போன்றவை உருண்டு திரண்டு உயர்ந்து வளர்ந்திருக்க, அதனோடு மிளகுகொடிகள் ஊடுபயிராக அந்த மரங்களை தழுவி படர்ந்திருக்கும். மரங்கள் முழுவதும் பச்சை மற்றும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிற பாசி மணிகள் போன்ற மிளகுகள் கண்களுக்கு குளிர்ச்சியாக தெரியும்.
அத்தோடு காபி, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை போன்ற வாசனைப்பயிர்களும் ஊடுபயிர்களாக அங்கே நிறைந்திருக்கும்.
தாட்சாவுக்கு அந்த காப்பிக்கொட்டையின் நிறங்களும், மிளகின் நிறங்களும் ரொம்பவே பிடிக்கும், ஆர்வமாய் ரசித்துக்கொண்டே வருவாள்.
“ஹேய் தாட்சா தேன் வேணுமா?…” அவன் கேட்கவும்.
ஆர்வமாய் அவனை பார்த்தாள் இங்கே எப்படி என்பது போல.
ஓரிடத்தில் கைகாட்டியவன், அந்த தேன் கூட்டை எடுக்க முயன்றான். “சேனா தேன்பூச்சி இருந்தா கொட்டிடும் உங்களை. வாங்க தேனும் வேணாம் ஒன்னும் வேணாம்…” அவன் கரங்களைப் பற்றி அவள் இழுக்கவே.
“இன்னைக்கு நிலவு வராது தாட்சா. சோ இங்கே அதுங்க இருக்காது…” என்றவனாய் தேன் கூட்டை தேவையான அளவு கையில் எடுத்தான்.
அப்படியே இருகரங்களிலும் அதை எடுத்து வந்தவன், அவளுக்கு கொடுக்க. இருவரும் சுவைத்தவாறே முன்னோக்கி செல்லலானார்கள்.
“சேனா கை கழுவனுமே நான்…” உடைகளில் படாது கைகளை தூக்கிக்கொண்டு அவள் சொல்லவே.
சற்றே யோசித்தவன், அப்படியே விட்டால் கையெல்லாம் பிசிபிசுப்பாக இருக்கும் என்றணர்ந்தவனாய், அருகில் இருந்த ஓடைக்கு அவளை அழைத்துச் சென்றான். “தாட்சா கவனம். தண்ணீர் மேல படவேண்டாம். கையை மட்டும் கழுவிக்கோ. சரியா?…” என்றவனாய் அவளிடம் எச்சரிக்கை செய்ய.
தலையாட்டிவாறே கையை மட்டும் கழுவிக்கொண்டு வர, அவனும் வாஷ் பண்ணிக்கொண்டு அவளிடம் வந்தான்.
தன்னுடைய கைக்குட்டையை எடுத்து கையை குளிர் போக நன்கு துடைத்தவள், அதை அவனிடம் துடைக்க கொடுத்தாள்.
அதை வாங்கியவன் பார்வை அவள் கன்னத்தில் லேசாய் தீற்றியிருந்த தேனைக்கண்டு மாறிப்போக.
அவள் அருகே சென்றவன், “நான் உன்கிட்டே காதல் சொல்லி ரெண்டு வருஷம் ஆகுது தாட்சா. இன்னுமா உனக்கு என்மேல் காதல் வரலை…” கேள்வியாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன், அவள் கன்னத்தில் இருந்த தேனை ருசிக்கலானான். அதில் விழிகள் சொருக கண்மூடியவள், அடுத்து தன்னிடம் அத்துமீறும் அவன் செயலைக்கண்டு அதிர்ந்தவளாய், அவனை தன்னிடம் இருந்து விலக்கியவாறே, வேகமாய் அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
“இப்பவே நாம கிளம்பனும் சேனா…” என்றவளாய் விலகி வந்த வழியே திரும்பி நடக்கலானாள்.
“தாட்சா இப்போ என்ன நடந்ததுன்னு இந்த கோபம் உனக்கு…? நமக்குள் இது இயல்பான ஒன்றுதானே…?” அவன் அவள் பின்னே வரவே.
நின்று அவனை முறைத்தவள், “எது இயல்பான விஷயம் சேனா?… இப்படி தப்பான அர்த்தத்தில் கட்டிபிடிக்கறதும், லிப் கிஸ் பண்றதுமா?…” என்றவள்.
அவனை கலங்கிய கண்களுடன் பார்த்து, “இதுவரை நீங்க இப்படி இல்லையே சேனா… உங்ககிட்ட பாதுகாப்பாய் உணர்வேன் எப்பவும். ஆனால் இப்போ அதெல்லாம் காணாம போயிடுச்சு. இப்போக் கூட உங்களை நம்பித்தானே இங்கே வரைக்கும் வந்தேன்? ஆனால் நீங்க?…” அதற்கு மேல் பேச விரும்பாதவளாய் வேகமாய் நடக்கலானாள்.
முகம் இறுக தானும் எதுவும் பேசாதவனாய் அவளை வீட்டில் விட்டவன், அவள் பின்னேயே அவள் அறைக்கு சென்றான்.
கதவை சாத்தியவன், அவளது கையை பிடித்து இழுத்து தன் முகம் பார்க்க வைத்தவன், “நீ என்னை லவ் பண்ணலையா தாட்சா?… உனக்குத்தான் என்னை பிடிக்குமே… அப்புறம் என்ன தயக்கம்?. என்கிட்டே ஐ லவ் யூ ன்னு சொல்லுடி ப்ளீஸ்…” அவன் அவள் முகம் பற்றி கேட்க.
“அச்சோ ப்ளீஸ் சேனா. இப்படி கட்டாயப்படுத்தினால் காதல் வராது. உங்க மேல பயம்தான் வரும் எனக்கு…” என்றவள், “நான் உங்க கூட பேசவோ. உங்களை இனிமேல் பார்க்கவோ கொஞ்சமும் விரும்பலை சேனா. தயவு செய்து வெளியே போய்டுங்க…” வெளியே கைகாட்ட.
“இனிமேல் நானாய் உன்னை பார்க்கவோ பேசவோ வரமாட்டேண்டி. உனக்காய் என்மேல் காதல் வந்தால் மட்டும் என்னை கூப்பிடு. நமக்கிடையில் இனிமேற்கொண்டு நட்புங்கற பேச்சுக்கே இடமில்லை. இனிமேல் நாம சந்தித்தா காதலர்களாக மட்டும்தான் இருக்க முடியும் புரியுதா?…” என்றவன் கோபமாய் வெளியேறிவிட்டான்.
அவன் சென்றதும் அப்படியே அமர்ந்துவிட்டாள் குழப்பத்துடன்.
தாட்சா கோபமாய் வருவதையும், விக்ரம் கண்கள் நிறைய காதலுடன் வருவதும். பிறகு அறைக்குள் சென்ற விக்ரம், கடும்கோபத்துடன் இங்கிருந்து வெளியேறுவதும்.
என நடப்பதையெல்லாம் கவனித்திருந்த சகாயத்திற்கு ஏதோ புரிவது போல இருக்கவும், குழப்பமாய் தாட்சாவை தேடி வந்தவருக்கு. அவள் அவன் புகைப்படத்தை பார்த்தவாறு அழுதுகொண்டிருக்கவும் எல்லாம் புரிந்து போனது.
ஆம் தாட்சா காதலில் விழ ஆரம்பித்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டவர், “தாட்சா நாம் கொஞ்சம் பேசலாமாம்மா?…” என்றவாறே அவள் அருகே அவர் அமர்ந்து கொள்ள.
அவரை மிரட்சியுடன் பார்த்தாள் தாட்சா, அதேசமயம் குற்றஉணர்வுடனும்.
“தாட்சா நம்ம கிட்ட ஒருத்தர் பழகினா, அது நட்பு என்ற வரையில் நாம எதையும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லைம்மா. நட்புக்கு வயது, அந்தஸ்து, ஜாதி மத பேதமெல்லாம் தேவையில்லை… ஆனால் அதற்குமேல் காதல் என்ற நிலைக்கு போக விரும்பினா முதல்ல தடையா இருப்பது அந்தஸ்து, அவங்க கோடீஸ்வரங்கம்மா.
ஹாசினியம்மாவோட அப்பாவீடு பெரிய தலைக்கட்டு அவங்ககிட்ட செல்வவளம் கொட்டிக் கிடக்குது. அப்படியிருக்கையில் நம்மை அவங்க கொசு மாதிரி தட்டி விட்டுடுவாங்கம்மா…” என்றவர்.
தாட்சாவின் குழப்பம் சுமந்த கண்களை பார்த்துவிட்டு, “உங்க வயசுக்கு இதெல்லாம் எளிதாய்த்தான் தெரியும்மா. ஆனால் கொஞ்ச காலம் பொறுமையாய் இரு அப்புறம் இந்த காதல் பற்றியெல்லாம் யோசிக்கலாம்மா…” அவர் சொல்லவும்.
“காதல் எல்லாம் இல்லை அங்கிள்…” அவள் வேகமாய் மறுக்கவும்.
“நானும் இந்த வயசில் வேண்டாம்னுதான் சொல்றேன். பருவம் பார்த்து பயிர் செய்ன்னு ஒரு பழமொழியே இருக்கும்மா. அதனால உனக்கு சரியான வயசு வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்… நீ செய்யற இந்த தப்பு உங்கப்பாவை முழுசாக உடைச்சு போட்டுடும். அதனால தெளிவாய் இருந்துக்கோம்மா. அடுத்த தடவை நான் நிதானமாய் பேசமாட்டேன் கவனத்தில் வைச்சுக்கோ…” என்றவர் சென்றுவிடவும்.
யோசனையுடன் அமர்ந்திருந்தவளுக்கு பைத்தியம் பிடிக்கும்போல ஆனது.
“தாட்சா என்ன பண்ணி வச்சிருக்கே நீ…” ஜெயராமன் சத்தம் போட்டுக் கூப்பிடவும். அதிர்ந்து போய் நிகழ்காலத்திற்கு வந்தவளுக்கு.
ஒருவேளை தான் சகாயம் அங்கிள் சொல்படி கேட்டு நடந்திருந்தால் தனக்கு அந்த இழி நிலை வந்திருக்காதோ. அப்படியெல்லாம் பழகிவிட்டு அவனால் எப்படி அப்படி செய்ய முடிந்தது? காதலுக்கே விலைபேசிவிட்டானே.
அழுகை வரவே வேகமாய் வாஷ் ரூம் சென்றுவிட்டாள்.