பக்குனு இருக்குது பாக்காத-2

4.6
(16)

அத்தியாயம்-2
“என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க
அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற கதை எல்லாம் கட்டுனான்.. பாவி பாவி நானும் இந்த கட்டையில போறவன நம்பி கைய புடிச்சிட்டு வந்தேன்.. ஆனா இப்ப என்னை எப்டி வச்சிருக்கான் பாரு..”அலுத்தவாறே சாம்பாரையும், அவனையும் தாளித்துக்கொட்டி கொண்டிருக்க..
உடனே காமினியோ.. “இப்போ இன்னானா சாம்பாருக்கு தாளிச்சு கொட்டிட்டு இருக்கேன்..” என்று குமுதா போல மாடுலேஷனில் பேச
அதில் பொய்யாக முறைத்த குமதாவோ “பேசுவடி பேசுவ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ.. கசுமாலம் நல்லா ஊருக்கு நடுவுல இளவரசியா இருந்தவள.. இப்படி சேரில கொண்டு வந்து நிறுத்திட்டான்.. அப்படியே என் பின்னாக்க சுத்தும்போது இந்த சினிமாக்காரன் இருப்பானே.. ஹான் இந்தா மாதவன் அவன மாதிரியே டிரஸ் பண்ணிட்டு வந்து நிப்பா.. ஆனா இங்க வந்து பார்த்தா தான தெரியுது ஒரு கிழிஞ்ச வேஷ்டி, ஒரு கிழிஞ்ச ஜட்டிய வச்சிக்கிட்டு என்ன கவுத்துக்கின்னு இருந்துருக்கானு படுபாவி.. “என்று தன் வீணாபோன கணவரை கழுவி ஊற்ற.
அதில் குலுங்கி சிரித்த காமினியோ “ஆனாலும் அப்பா ரொம்பவே ஏமாத்தினு இருந்துருக்காம்மோய்..” என்று கூற.
“அட அந்த நாய உன் அப்பன்னு சொல்லாத.. அந்த நாய் பண்ணுற சோலிக்கு அதுக்கு அப்பன்ற பேரு வேற கேக்குது..”என்று குமுதா கத்த.
“சரி சரி சொல்லல சொல்லல.. ஆமா எங்க அந்த டாடிய ஒரு வாரமா இந்த பக்கமே மிஸ்ஸிங்கு..” என்று காமினி கேலியாக கேட்க
அதில் முறைத்த குமுதாவோ “நீ இப்ப என்னக்கிட்ட சரியா வெளுப்பு வாங்க போற பாத்துக்கினே இரு… அந்த வீணா போனவன, வெளங்காம போனவன பத்தி பேசிக்கினு இருக்காம ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பி ஓடு..”என்று இட்லி பானையை திறக்க.. அதுவோ புஸ்ஸ்ஸ் என்ற புகையுடன் திறந்துக்கொண்டது.. அதனை எடுத்து வெளியில் வைத்த குமுதாவோ அதன் மீது தண்ணீரை தெளித்து வைத்தவர் தன் மகளுக்கு அதில் நான்கு இட்லியை எடுத்து வைத்துக்கொடுத்தார்.
“சரிம்மோய் சரிம்மோய் வொய் ஆங்கிரி..” என்றவளோ தன் அன்னை கொடுத்த நான்கு இட்லியையும் வேகமாக விழுங்க..
“அட மெதுவா திண்ணுதான் தொலையேன்.. விக்கிக்க போது..”என்றவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தட்டில் இட்லியையும், சாம்பாரையும் வைத்துக்கொடுத்தார். குமுதாவின் கை பக்குவத்திற்கென்றே அங்கு பல வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுவும் நான்கு இட்லி பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் சாப்பிடாமலா போவார்கள்.
“அக்கோய் கொஞ்சுண்டு சாம்பாரு ஊத்தேன்..”என்று ஒருவன் கேட்க
“ஆமாடோய் நீ சாப்டுறது மூணு இட்டிலி.. அதுக்கு ஒரு குண்டான் சாம்பாரு கேட்குது.. த்தூ தேறி அடுத்த இட்டிலி வாங்க கஞ்சத்தனம் பட்டுக்கினு சாம்பாரா மொக்குவானுவோ.. கேப்மாறி..”என்று அவர்களை குமுதா கழுவி ஊற்ற..
அவர்களும் குமுதாவின் வாய்க்கு பயந்துக்கொண்டு வாயை மூடி சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இல்லை என்றால் இரண்டு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அந்த குப்பத்தில் அவரால் வாழ்க்கையை ஓட்டிவிட முடியுமா என்ன..
அழகு பதுமையாக இருந்த குமுதாவை அவள் வீட்டில் இருந்து ஓடிவர வைத்து கல்யாணம் கட்டி இந்த பேட்டைக்கு அழைத்து வந்தான் வெங்கடேஷன். முதலில் குமுதாவின் பெற்றோர்கள் அவளை தங்களுடன் வருமாறு கேட்க.. ஆனால் அவளோ காதல் கண்ணை மறைக்க.. “நான் இவரோட தான் இருப்பேன்.. என்ன யாரும் கூப்டாதீங்க.. நான் வரமாட்டே..”என்று அடித்து கூற.. அவளின் பெற்றோர்களோ கலங்கி போனார்கள்.
ஆனால் அவளின் அண்ணன்மார்களோ அவளை அடிக்கவே பாய்ந்தார்கள்.. அப்போது வெங்கடேஷன் பாயும் புலியாக அவதாரம் எடுத்தவன்.. “இன்னா இன்னா நெனைச்சிட்டு அவ மேலுக்கா கை வச்சிக்கின்னு இருக்கீங்க.. இப்போ அவ உங்க வூட்டு பொண்ணு இல்ல.. என் பொண்டாட்டி அவ.. அவ மேல கீல கை வச்சின்னு வந்தீங்க அவ்ளோ தான் நெஞ்சில இருக்குற எலும்ப என்னோட தோஸ்த்துங்க எண்ணிடுவானுங்க..”என்று நாலு உருப்புடாத நண்பர்களை அழைத்து வந்து நாடகம் போட..
அதில் சினம் கொண்ட குமுதாவின் அண்ணன்களோ.. “அட அவ தான் சொல்றால்லம்மா அவன் தான் வேணும்னு அப்புறம் எதுக்கு அவளுக்காக அழுதுட்டு, கெஞ்சிட்டு இருக்கனும்..அவ வாழ்க்க நாசமா தான் போவும்.. வாங்க நாம நடைய கட்டுவோம்.. இங்க இருந்தா அப்புறம் நமக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் பறந்துடும்..”என்று கூற
பெற்றவர்களால் தான் அதனை ஏற்க முடியவில்லை. “கண்ணு சுத்திமுத்தி பாருடா நீ எப்டி வளந்தவ இந்த குப்பத்துல உன்னால குடும்பம் நடத்த முடியுமா..”என்று அவள் தந்தை கதற
குமுதாவோ காதலில் மிதந்தவளுக்கு அந்த இடமெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. “இவரோட நான் எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பன்.. மொதல நீங்க இங்க இருந்து கெளம்புங்க..”என்றாள் தெனாவட்டாக குமுதா
“ம்ம் அப்புறம் அதான் அவளே சொல்லிட்டால்ல.. காதல் அவ கண்ண மறைக்கிது.. நல்லது தான் இங்கையே கெட்டு சீரழிஞ்சி போட்டும்..”என்று அவள் அண்ணங்கள் இருவரும் அவர்கள் தாய் தந்தையை இழுத்துக்கொண்டு போக.. குமுதாவிற்கோ அதன் பின் தான் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. அவள் முகம் கலங்க நிற்பதை பார்த்த வெங்கடேஷனோ..
“அட இன்னா குமு அவங்கதான் ஏன்னமோ பொலம்பிட்டு போறாங்கனா நீயும் மொறச்சிட்டு நிக்கிற.. ம்ச் இன்னிக்கிதான் நாம கண்ணாலம் பண்ணிருக்கோம்.. நமக்கு இன்னிக்கி மொத நைட்டு தான..”என குழைந்த குரலில் கேட்க
அதில் குமுதாவிற்கு பகீர் என்று இருந்தது.. சுட சுட இட்லி போல சுட சுட திருமணம் ஆகி வந்ததும் அடுத்தக்கட்டத்தை பற்றி பேசுகிறானே.. “ஆமா உங்க அம்மா, அப்பா எங்க.. தம்பி வேற இருக்கான்னு சொன்னீங்களே..”என்று அவள் கேட்க அதில் வெங்கடேஷன் தான் திருத்திருவென விழிக்க வேண்டியதாகியது.
அவனுக்கு தான் சொல்லிக்கொள்ள என்று யாருமே இல்லையே.. சிறுவயதில் குப்பை தொட்டியில் கிடந்தவன் ஆயிற்றே அவன். அவனாக நடந்தான், அவனாக சாப்பிட்டான் அவனாக வேலைக்கு சென்று வயிற்றை கழுவிக்கொண்டான். அப்படி இருக்க எங்கே இருந்து அம்மா,அப்பா,தங்கை வருவார்கள். ஏதோ அவளை காதலில் வீழ்த்துவதற்காக அம்மா இருக்காங்க.. அப்பா இருக்காங்க பத்தாததுக்கு தம்பி இருக்கான் என்று இழு இழுவென இழுத்து வைக்க.. இப்போது அதுவோ அவனை விழிக்க வைத்தது.
“இன்னாது இந்த கசுமாளத்துக்கு அம்மா, அப்பா, தம்பியா.. அட பேம்மா நீ வேற.. குப்பத்தொட்டில கிடந்தவனுக்கு இந்த ஒறவுலா வானத்துல இருந்தா குதிப்பாங்க.. அவனே ஒன்னும் இல்லாத சோம்பேறி.. இப்போ நீயும் அவன நம்பி வந்துட்ட..”என்று பக்கத்து வீட்டு பெண்மணி அவனின் லட்சணத்தை எடுத்து கூற.. குமுதாவோ அப்படியே அதிர்ந்து சிலையாக நின்றுவிட்டாள்.
குமுதா அதிர்வுடன் வெங்கடேஷை பார்க்க.. அவனோ திருட்டு முழி முழித்தவாறே நின்றான்.. “அவங்க என்ன சொல்றாங்கங்க..”என்று அவள் அழுகையுடன் கேட்க
“அட ஆமா எனக்கினு இந்த ஒலகத்துல உன்ன விட்ட யாரு இருக்கா குமு.. நீ என்னாண்ட வந்தன்னாலே என் அம்மோய், அப்போய் அல்லாரும் வந்துதுக்கு சமம் தான.. அத தான் அப்டி சொன்னே..”என்று திருத்திருத்த விழிகளுடன் கூற
குமுதாவிற்கு பயம் அல்லுவிட்டது. அவன் திருட்டு விழிகளையே அவன் திருட்டுத்தனம் தெரிந்து போனதே.. “அப்போ என்ன ஏமாத்திருக்கீங்க..”என்று அவள் கத்த
“ந்தா.. சும்மாக்காட்டியும் கத்தாத.. ம்ச் உன்ன பாத்த டைமே உன் மேல காதல் வந்துனுச்சி எனக்கு.. ம்ச் அதுக்காண்டி தான் இம்மாந்துண்டு பொய் சொன்னே.. அத போயி தப்புன்னுட்டு கத்திக்கினு கிடக்க.. ம்ச் சரி உன்னாண்ட பேசி பேசி எனக்கு டயர்டா போச்சி.. நான் போயி ஒரு டீய குடிச்சிப்புட்டு அப்டியே மீனு கொண்டாறேன்.. இதான் நம்ம குடுச.. உள்ள எல்லா ஐட்டமும் அடிக்கி வச்சிருக்கேன் நானு.. போய் என்ன என்ன இருக்குனு பாரு..”என்று அவன் நழுவ பார்க்க..
“ஆமா ஆமா அப்டியே மெட்ராஸுல இருக்குற ஜவுளி கட, அப்புறம் பாத்துர கடை எல்லாம் உள்ள தான் கொட்டி வச்சிருக்கான் இந்த பீட போய் அத பாரு..”என்று அண்டை வீட்டுக்காரி பத்தி வைக்க.. அதில் கடுப்பானவனோ… “எக்கோவ்வ்வ் இப்போ உன் ஊத்த வாய மூட போறீயா இல்லையா.. சும்மாக்காட்டியும் இல்லாம அவள இன்னாத்துக்கு பயமுறுத்துற..”என்று அவன் எகுற
குமுதாவோ பயத்துடனே வீட்டினுள் நுழைய அதிர்ந்துவிட்டாள். பேருக்காக நாலு சுவர் மத்தப்படி வீட்டில் ஒன்றும் இல்லை. மேல் கூரை கூட கிழிந்து போய் தொங்கியது.. அதனையே குமுதா பயத்துடன் பார்க்க.. அவள் பார்வை சென்ற திசையில் பார்த்த வெங்கடேஷனோ.. “அட அத இன்னாத்துக்கு பாக்குற.. ம்ச் அடுத்த மாசம் கூலி தருவாங்க மொதலாளி. அத வச்சி இதலாம் மாத்திக்கலாம்.. நீ ஒன்னும் வொரி பண்ணாத..”என்று குமுதாவின் தோளில் கை வைக்க.. குமுதாவிற்கோ அவனின் தொடுகை பற்றிக்கொண்டு வந்தது.
எவ்வளவு பெரிய பொய் கூறி இங்கு அழைத்து வந்திருக்கின்றான் என்று நினைக்க நினைக்க வயிரு எரிந்தது. ஆனால் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே அதனால் வாயை மூடிக்கொண்டவளுக்கு எதிர்க்காலத்தை நினைத்தால் அழுகை பீறிட்டது. ஆனால் உயிர் இல்லாத ஜடமாய் மாறினால் தான் அங்கு வாழ முடியும் என்பதை குமுதா அன்றே உணர்ந்துக்கொண்டாள்.
வெங்கடேஷனுக்கு புது மனைவி சம்மதித்தாலும் சரி, சம்மதிக்காவிட்டாலும் சரி வாழ்க்கை ஜகஜோராக சென்றது. ஆனால் குமுதா கல்லூரியை கூட ஒழுங்காக தாண்டாதவள் வீட்டின் வாசலில் இட்லி கடை போட்டு தான் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
அவளுக்கு பிடிக்காத கணவன் எல்லாம் இல்லை அவன்.. ஆனால் அவனின் செயல்களே பிடிக்காது அதும் ஆரம்பக்கட்டத்தில் அதன் பின் அவன் செயல்களை கண்டவள் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இப்போது அவர் வாழ்வதற்கு காரணம் அவரின் இரு மகள்களே ஆகும்.
“யக்கா கொஞ்சம் வியாபாரத்த பாக்குறது.. அத உட்டுப்புட்டு அடிக்கடி கனாக்கு போய்டுற.. என்ன சங்கதி..”என்றவாறே வந்தான் ராகவன்.
அவனை பார்த்ததும் அவ்வளவு நேரம் இருந்த கடுப்பு மறைய.. மெல்ல புன்னகைத்தவறோ.. “வா தம்பி இன்னா காலையிலையே இந்த பக்கம்..”என கேட்க
“அட நான் கேட்டுக்கின்ன கேள்விக்கு ஒன்னியும் பதில் வரலையே…”என்று அவன் புன்னகைத்தவாறே கேட்க..
“அட என்னத்தப்பா பெருசா கனா கண்டுக்க போறேன் நானு.. எல்லாம் அந்த நசாமா போனவன பத்திதான் யோசிக்கின்னு இருக்க.. ம்ச் இந்த பெரிய கழுத வேற நான் சொல்ற ஒன்னிக்கும் அடங்க மாட்டுது.. என்னாத்த சொல்லி என்னாத்த ஆவ போது.. அதான் சும்மா புலம்பினு இருக்கேன்..”என்றவாறே ராகவனுக்கு நான்கு இட்லியை வைத்துக்கொடுத்தார் தட்டில்.
அதனை சிரிப்புடன் வாங்கிய ராகவனின் முகமோ பெருசு என்ற அவரது வார்த்தையில் பளீச் என்று ஆனது. அதனை குமுதாவும் தான் கண்டுக்கொண்டார். ராகவன் மிகவும் நல்லவன், அமைதியானவன், இதுவரை அவனிடமிருந்து எந்த கெட்ட பழக்கத்தையும் குமுதா பார்த்ததில்லை. குமுதா வீட்டின் தெருவிற்கு பக்கத்து தெரு தான் அவன்.
அம்மா அப்பா என்று யாரும் இல்லை. ஒற்றை தங்கை மட்டுமே. ஜனனி அவள் பேர் குமுதா பெருசு பெருசு என்று அழைப்பவளின் பெரிய மகளின் தோழிதான் ஜனனி. சினிமாவில் ஸ்டென்ட் மாஸ்டராக இருக்கின்றான். ஆனால் பார்க்க அப்படி இருக்கமாட்டான் ஹீரோவுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல தோற்றம் கொண்டவன். குமுதாவே பல தடவை கேட்டிருக்கிறார்..
“ஏன்ப்பா இப்டி ஸ்டென்ட் மாஸ்டரா ஆனதுக்கு பதிலு ஹீரோவாகிட வேண்டியது தான.. பாக்கவும் ஹீரோ கணக்கா தான் இருக்க..”என்று சிரிப்புடன் கேட்பார்.
“அட அதுலாம் நமக்கு செட் ஆவும்னா நினைக்கிற.. ம்ச் எனக்கு இதாங்க்கா பிடிச்சினு இருக்கு.. அதுனால அத அப்டிகா விடு..”என்பான். அவனின் அமைதியை பார்த்தே குமுதாவிற்கு மனதில் ஒரு திட்டம் உதயமாகியது.
இப்போது ராகவன் அவரின் பெரிய பெண்ணை நினைத்து பார்த்தவாறே இட்லியை சாப்பிட்டுக்கொண்டிருக்க.. “ஏன்ப்பா ராகவா என்னமோ சொன்னியே வீட்ட மாத்த போறேனுட்டு எதோ சென்னைக்கு நடுவால ஜனனிய கூட்டிக்கினி போ போறேன்ன..”என்று அவரின் விடயத்திற்கு சரியாக வந்தார்.
ராகவனும் அவரை கண்டு சிரித்தவாறே.. “ஆமா குமுதாக்கா இங்கனயே இருந்தா ஜனனிக்கு செட் ஆவும்னி எனக்கு தோணல.. அதான் வீட்ட மாத்திக்கினு போய்டலாம்னு இருக்கேன்..”என்றவன் இட்லியை விழுங்க ஆரம்பித்தான்.
“அதுதான் சரின்றேன்.. இந்த சேரில குந்திக்கினு என்னத்த பண்ண முடிது.. நானும் வேகமா இந்த பெரியகுட்டிய எவனையாவது நல்லவனா பாத்து தள்ளிவுட்டுன்னு இங்க இருந்து போலம்னு தான் நெனைக்கிறது..”என்றவர் ராகவனின் முகத்தையே பார்க்க..
அவனின் முகமோ மேலும் பளீச் என்று ஆனது. ஆனால் அவன் தங்கை ஜனனியின் வாழ்க்கைக்கு ஒரு வழி செய்துவிட்டுப் தான் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று யோசித்தவன்.. “அதெல்லாம் நல்லபடியா அல்லாம் நடக்கும்க்கா.. நீ ஒன்னிக்கும் ஃபீல் பண்னிக்கின்னு இருக்காத..”என்றவனின் கண்கள் குமுதாவின் வீட்டினுள்ளே ஆர்வமாக படிய.. அதனை கண்ட குமுதாவோ மெல்ல சிரித்துக்கொண்டார்.
“பெருசு தான் இன்னியும் அந்த நாசமா போனவங்களோட ஜிம்முல இருந்து வரல ராகவா..”என்று எடுத்துக்கொடுக்க.. அதில் நாக்கை கடித்து சிரித்தவனோ..
“ஆஆன் சரிக்கா அப்பாலிக்கா பாக்கலாம்.. எனக்கு இன்னிக்கி ஷூட் போனும்..”என்றவன் கையை கழுவிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
குமுதாவோ போகிறவனையே பார்த்தவர்.. “நல்ல பய பெருசுக்கு ஏத்தவனா இருப்பான்..”என்றவர்..
“யக்கா..”என்ற வாடிக்கையாளர்களின் குரலுக்கு வேலை பார்க்க ஆரம்பித்தார்.

(பாக்காத..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!