எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால் விவாஹா மஹால் திருமண மண்டபம் சற்று பரபரப்பாகவே தான் இருந்தது.
எஸ். எம்.எஸ் குழுமத்தின் நிச்சயத்தார்த்த விழா நடைப்பெற உள்ளது. அதற்கே ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. பின்புறம் உள்ள மினிமஹாலில் ஒரு திருமணம். அதனால் அந்த மண்டபமும் பரபரப்பாகவே இருந்தது.
எஸ்.எம்.எஸ் குழுமத்தினருடைய ஹோட்டல் மற்றும் ரிசார்ட் சென்னை, கோவை, ஊட்டி என பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டின் பணக்காரர் பட்டியலில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருந்தனர்.
எஸ்.எம்.எஸ் குழுமத்தின் வீட்டினருக்கு அவர்களது ஹோட்டலிலே நிச்சயத்தார்த்த விழாவை ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அங்கு செய்தால் சில வேண்டாத நினைவுகள், மனசஞ்சலங்கள் உண்டாகும் என்பதால் இந்த மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த நிச்சயத்தார்த்த விழா அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்களது மன சஞ்சலத்தில் இருந்து மீட்பது போல் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு வைபவம்.
எஸ். எம்.எஸ் குழுமத்தின் மூத்த வாரிசுக்கு திருமண நிச்சயம் நடக்க இருக்கிறது.
விழா நாயகன் உறங்காமல் விழித்திருந்தான். நாளை நடக்கப்போகும் விழாவைப் பற்றிய இனிய தவிப்பு என்று நினைத்தால் அது தான் இல்லை. நாளை எந்தவித தடங்கலும் இல்லாமல் அவனது நிச்சயத்தார்த்தம் நடக்குமா? இல்லையா ? என்று எண்ணித் தவித்துக் கொண்டிருந்தான். பாவம் காத்திருந்து கைப்பிடித்த காதல் அல்லவா?
‘நிச்சயத்தார்த்தம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் கடவுளே!’என்று மனதிற்குள் நூறாவது முறையாக வேண்டிக் கொண்டிருந்தான் மகேஷ்.
அவனது நிச்சயத்தார்த்தம் மட்டும் என்றால் எந்த குழப்பமும் இன்றி நிம்மதியாக இருந்திருப்பான். ஆனால் தனது தங்கையின் பிரச்சனையையும் இதில் இழுத்து விட்ட தாத்தா, பாட்டியை நொந்துக் கொள்வதா? இல்லை தன்னை இந்த நிலைக்கு தள்ளிய விதியை நொந்துக் கொள்வதா என்று தவித்துக் கொண்டிருந்தான்.
‘பாவம் மகிழினி! அவளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான்.
கடவுளே! அவளுக்குத் தெரியாமல் நீதான் காப்பாத்தணும்.”என்று புலம்பியவாறே அந்த மண்டபத்தை ஒரு முறை சுற்றி வந்தான் மகேஷ்.
அவனது புலம்பலுக்குக் காரணமான அந்த வீட்டின் மூத்த தலைமுறையான அவனது தாத்தா மகேந்திரனும், பாட்டி சாந்தி மகேந்திரனும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
நிச்சயத்தார்த்ததிற்கான எல்லா பொறுப்புகளையும் பிரபல காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்திருந்தனர்.
அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தனர்.
அதையெல்லாம் ஒரு பார்வை பார்த்த மகேஷ், தங்கைகளுக்கென ஒதுக்கிய அறையைப் பார்த்தான்.
எந்த சலசலப்பும் இல்லாமல் இருந்தது. ‘நாளை வரை எந்த பிரச்சனையும் வரக்கூடாது கடவுளே!’ என்று கடவுளுக்கு மீண்டும் ஒரு மனு போட்டான் மகேஷ்.
மகேஷின் வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்க்கவில்லை. அவனது உடன்பிறந்த தங்கையான சாஹித்யா, சித்தப்பா மகளான மகிழினியிடம் பேச சென்றாள்.
இவர்களது குடும்பம் கூட்டுக் குடும்பம்.
மகேந்திரன் சாந்தினிக்கு இரண்டு மகன்கள்.
மூத்தவர் நரேந்தர். அவரது மனைவி பத்மா. மகன் மகேஷ் . அவனை விட மூன்று வயது இளையவள் மகள் சாஹித்யா.
இரண்டாவது மகன் சுரேந்தர் மனைவி வசந்தி. ஒரே மகள் மகிழினி. அந்த வீட்டின் கடைக் குட்டி. சாஹித்யாவை விட ஒரு வயது இளையவள்.
“ மகி! ஒரு விஷயம் உன் கிட்ட சொல்லணும்.” என்று மகேஷ் எந்த விஷயம் தங்கைக்குத் தெரியக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுதலுக்கு மேல் நினைத்தானோ, அந்த விஷயத்தை தயங்கித், தயங்கி சொல்ல ஆரம்பித்தாள் சாஹித்யா.
“ சொல்லுக்கா…” என்ற மகிழினியின் ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில் தங்கையை தவிப்புடன் பார்த்தாள் சாஹித்யா.
“ அது வந்து மகி…” என்று இழுத்தாள் சாஹித்யா.
“ அது தான் வந்திட்டியே அக்கா? அப்புறம் என்ன? எதுக்கு தயங்குற? பயமா இருந்தா சொல்லு நம்ம ஹிட்லரை வரச் சொல்லுறேன். தைரியம் தன்னாலே வந்துடும்.“ என்று தனது தமக்கையை வம்பிழுத்தாள் மகிழினி.
ஹிட்லர் என்ற வார்த்தையில் பயந்து விழித்தாள் சாஹித்யா.
சாஹித்யா ரொம்ப அமைதி. சற்று பயந்த சுபாவம். ‘நாளைக்கு நடக்க இருப்பதை தங்கைக்கு தெரிய வைக்க முயற்சி செய்தாள். ஆனால் தங்கை எப்படி எடுத்துக் கொள்வாளோ!’ என்று பயமும் இருக்கவே தயங்கிக் கொண்டிருந்தாள்.
தமக்கையின் இயல்பை நன்கு அறிந்த மகிழினியோ கேலி செய்து அவளை தொடர்ந்து பேச ஊக்குவித்துக் கொண்டிருந்தாள்.
‘ஐயோ! பாட்டிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.’ என்று எண்ணிய சாஹித்யாவோ, “நாளைக்கு அண்ணனோட நிச்சயத்தார்த்தம் மட்டும் இல்லை. உனக்கும் மாப்பிள்ளையோட பேச்சுவார்த்தை நடத்தப் போறாங்க.”என்று தயங்கித் தயங்கி உளறினாள்.
“ பொய் சொல்லாதே சஹி! பொண்ணு வீட்ல இருந்து வந்தவங்களைத் தான் நானும் பார்த்தேனே. மாப்பிள்ளை சார் இல்லையே. அதுவும் இல்லாமல் நான் தான் தெளிவா சொல்லிட்டேன். என் லைஃப்ல நான் தான் முடிவு எடுப்பேன். யாரும் கம்பெல் பண்ண வேண்டாம்னு. அப்புறம் அண்ணாவோட வாழ்க்கைல தான் தேவையில்லாத பிரச்சினை வரும்னு சொன்னேனே.” என்ற மகழினியின் முகத்தில் எரிச்சல் மண்டியது.
“ அது வந்து… ஒரு தடவை மாப்பிள்ளையோட பேசிப் பாரு. பிடிக்கலைன்னா விட்டுடு மகி.” என்று சொல்வதற்குள், வியர்த்து விறுவிறுத்துப் போனாள் சாஹித்யா.
“ அந்த மூஞ்சை பார்க்கவே பிடிக்கலை. இதுல பேசி வேறப் பார்க்கணுமா? எப்பப் பார்த்தாலும் முறைச்சு, முறைச்சு பார்க்க வேண்டியது. ஆமாம் உனக்கு யார் இந்த விஷயத்தை சொன்னா?”
“ அம்மாவும், சித்தியும் பேசிட்டு இருந்தாங்க.”
“ ஓஹோ! பாட்டி மட்டும் தான் ஹிட்லர் மாதிரி அடக்குமுறைப் பண்றாங்கனு நினைச்சா, இவங்களும் அந்த ஹிட்லருக்கு உடந்தையா? ஜாலியா பேசி, சிரிச்சிட்டு இருந்தால் நான் விளையாட்டு பொண்ணா? எனக்குனு உணர்வுகள் கிடையாதா? இதை எப்படி பேஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும். என்னோட பெரியவ நீ. உன்னை விட்டுட்டு என்னை ஏன் படுத்துறாங்க?” என்று பொறிந்த மகிழினி, தமக்கையின் முகம் மாறவும், தன் தலையில் தட்டிக் கொண்டவள்,
“ சாரிக்கா! ஜாதகம், நேரம், காலம்னு இந்த காலத்திலும் நம்ப வீட்டுல இப்படி இருக்காங்க.” என்று எரிச்சலாக கூறினாள் மகிழினி.
சாஹித்யாவிற்கு திருமணம் செய்வதற்காக ஜாதகத்தை எடுத்த போது வந்த வினை தான். இப்போது நடக்கும் குழப்பம் எல்லாவற்றிற்கும் காரணம்.
“சாரி எல்லாம் எதுக்கு மகி. அதை விடு. நாளைக்கு என்ன பண்ணப் போற? இங்கே இருந்தா பாட்டி நினைக்கிறது தான் நடக்கும்.” என்றாள் சாஹித்யா.
சாஹித்யா கூறியதைக் கேட்டதும் மகிழினியின் முகம் மலர்ந்தது.
“ஆமாம்… இங்கே இருந்தா ஹிட்லர் அது நினைச்சதைத் தான் சாதிக்கும். குட் ஐடியா. தேங்க்யூ சோ மச் சஹி!” என்று தமக்கையின் தாடையை பிடித்துக் கொஞ்சிய மகிழினி, கைப்பையை எடுத்தாள்.
“என்ன ஐடியா? நான் என்ன சொன்னேன்?” என்று வினவியவளின் முகம் பயத்தில் வெளிறியது.
“ நீ சொன்னது போல நான் நாளைக்கு இங்கே இருந்தா அவங்க ப்ளான் படி தான் நடக்கும்.”
“அதுக்கு?” என்ற சாஹித்யா முழிக்க.
“ஓடிப்போகப் போறேன்?”
“மகி விளையாடதே…” என்றவளுக்கு மயக்கம் வராத குறை தான். ‘தான் செய்த காரியத்தின் வீரியம் இப்போது தான் புரிந்தது. அவசரப்பட்டு தங்கையிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டோம். நாளைக்கு இவளைக் காணும்னா நம்மளை தானே உலுக்குவாங்க.’என்று எண்ணிய சாஹித்யா முகம் வெளிறி நின்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்த மகிழினி, “அக்கா! பயப்படாதே… நான் பார்த்துக்கிறேன். நீ போய் படு.”
“ விளையாடதே மகி!”
“நான் ஒன்னும் இந்த விளையாட்டை ஆரம்பிக்கலை. நம்ம வீட்டு ஹிட்லர் பண்ண வேலை. என்னப் பார்த்தா விளையாட்டு பொம்மை போலத் தெரியுதா? அவங்க இஷ்டத்துக்கு விளையாடுறதுக்கு? நான் யாருன்னு காட்டுறேன்.” என்று படபடத்தாள் மகிழினி.
“ மகி! இந்த நடுராத்திரி எங்க போக போறே? எனக்கு பயமா இருக்கு.”
“ ப்ச்! பயப்படாத அக்கா. என் ஃப்ரெண்ட் ரேகா தெரியும் தானே.”
“சிரிக்காதேக்கா… எவ்வளவு போராடியும் என்ன, ஒன்னும் வேலைக்கு ஆகலை.”
“மகி! இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா? நீ படிச்சது டூரிஸம் சம்பந்தமான படிப்பு. உன் ஃப்ரெண்ட்டோ மெடிசின் படிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு போனா. அவளோட எப்படி உன்னை அனுப்ப முடியும்.”
“சரி! சரி விடு சஹி!”
“ நானும் அதைத் தான் சொல்றேன். இப்ப எதுக்கு அந்த பழைய கதை?”
“அந்த பழைய நட்பை புதுப்பிக்கத்தான்கா. ரேகா படிச்சு முடிச்சிட்டு இந்தியாவுக்கு வந்துட்டா. வீட்டுக்கு வர சொல்லி ரொம்ப நாளா கூப்பிட்டுட்டு இருக்கா. அதான் அவ வீட்டுக்கு போகப் போறேன்.”
“தனியா இந்த நைட்டு நேரத்துல எப்படி போவ?”என்ற சாஹித்யாவுக்கு தங்கையை நினைத்து கவலையாக இருந்தது.
“அக்கா! பேசிட்டு இருத்ததுல பொழுது விடிஞ்சதையே நீ கவனிக்கலை. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லோரும் முழிச்சுடுவாங்க. நான் கிளம்புறேன்.” என்றவள், வேகவேகமாக அவளது பர்ஸில் ஃபோன், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு எல்லாம் இருக்கிறதா என்று பார்த்தவள், அதையெல்லாம் எடுத்து தன்னுடைய பேக் பேக்கில் வைத்தாள்.
அதில் இருந்தோ நாளைக்கு ஃபங்ஷனுக்கு அணிவதற்காக எடுத்து வைத்த லெஹங்காவும், அதை மாற்றி அணிவதற்காக இலகுவான சல்வாரும் தான் இருந்தது.
‘இப்போ நைட் ட்ரஸ்ஸோட எப்படி போக முடியும்.’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள், “அக்கா! நாளைக்கு மாத்தி போட என்ன ட்ரெஸ் எடுத்து வச்சிருக்க.” என்று வினவ.
“லாங் ஸ்கர்ட்… ஆனால்…”என்று தயக்கத்துடன் ஏதோ கூற முயன்றாள் சாஹித்யா.
“ ஓ! சூப்பர்.”என்ற மகிழினி, சாஹித்யாவிடம் பர்மிஷன் கூட கேட்காமல் அவளது பேகிலிருந்து அந்த உடையை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.
சாஹித்யாவிற்கோ ஏமாற்றம். நாளை அவளும், அவளது தோழியும் ஒரே மாதிரி அணியலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தனர்.
சாஹித்யாவின் வருங்கால அண்ணியான ரூபாவின் அண்ணி ஸ்வேதா. சாஹித்யாவின் சிறு வயதிலிருந்து உடன் பயின்ற உயிர்த்தோழி.
அவளது கலக்கம் எல்லாம் சில நொடி தான். ‘நாளைக்கு நிச்சயத்தார்த்தமே நடக்குதா இல்லையான்னு தெரியலை. இதுல இந்த ட்ரஸ் போடாதது ஒன்னு தான் குறைச்சல்.’ என்று அலுத்துக் கொண்டாள்.
இருந்தாலும் தன் தோழி எப்போதோ கூறியது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“ சஹி! இது எங்க சித்துவுக்கு ரொம்ப பிடிச்ச கலர்.”என்று சொன்னதிலிருந்தே ஸ்கை ப்ளூ தான் அவளது முதல் சாய்ஸ்.
மகிழினி வேகமாக உடைமாற்றியவள், ஃபோனில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.
தலையை உலுக்கிய சாஹித்யா, தங்கையைப் பார்க்க அந்த நீல நிற உடையில் தேவதையாக தெரிந்தாள்.
ஃபோனை பேகில் போட்டவள், ஷாலை எடுத்து கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டிருந்தாள். கண்கள் மட்டும் தெரியுமாறு அந்த ஷாலை வைத்தே முகத்தை மூடியிருந்தாள்.
“பை!” என்று கையசைத்தவள், அவர்கள் இருந்த ரூம் பால்கனி கதவை திறந்தவள், தான் போட்டிருந்த பேக் பேக்கை சரி செய்துக் கொண்டு சரசரவென கீழே இறங்கினாள்.
“ஏய் மகி! பார்த்து…” என்று சாஹித்யா பதற.
“பயப்படாதே சஹி! சின்ன வயசுல இருந்து எத்தனை தடவை நம்ம வீட்டு பால்கனியில் ஏறி இறங்கியிருக்கோம்.” என்று குரல் கொடுத்துக் கொண்டே தரையில் இறங்கினாள் மகிழினி.
மண்டபத்தின் முன்பக்கம் கலகலப்புடன் இருக்க, இவளோ பக்கவாட்டில் இறங்கி மண்டபத்திற்கு வெளியே செல்ல முயன்றவளின் முன்னே, வேகமாக ஒரு பைக் குறுக்கே வந்து நின்றது.
“ ஹேய் அறிவில்லை!” என்று கத்தியவள், உணர்சிகளற்ற பார்வையுடன் வண்டியில் அமர்ந்து இருந்த நெடியவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
கைகள் அனிச்சை செயலாக முகம் மூடி இருக்கிறதா என்று சரிப் பார்த்துக் கொண்டு நிம்மதியடைந்தாள்.
சித்தார்த் ஒரு நிமிடம் அவளை, கூர்ந்துப் பார்த்தவன்,அவளை ஒரு பொருட்டாக கண்டுக் கொள்ளாமல் பைக்கை பார்க் செய்தான்.
ஆனால் அவன் பின்னே அமர்ந்து இருந்த தருணோ இறங்கி அவளருகே வந்தான்.
மகிழினியோ அங்கிருந்து வேகமாக வெளியேறுவதிலே கவனமாக இருந்தாள்.
“ஹலோ மிஸ்.” என்று அழைத்து அவளைத் தடுத்தான் தருண்.
‘நானே மாட்டிக்காமல் இங்கிருந்து ஓடணும்னு பார்க்குறேன். இவன் வேற குறுக்கால வர்றான்.’ என்று மனதிற்குள் எரிச்சலாக எண்ணிக் கொண்டே என்ன என்பது போல் பார்த்தாள்.
“உங்களுக்கே இது நியாயமா இருக்கா?”
“சாரி! கவனிக்காமல் வந்துட்டேன்.” என்று தன்மையாகக் கூறினாள் மகிழினி.
“பைக்ல குறுக்க வந்ததை நான் கேட்கலை. ஒரு பையனோட வாழ்க்கையில் குறுக்க வந்துட்டு இப்போ அம்போன்னு விட்டுட்டு ஓடிப் போறீங்களே. அதைத் தான் கேட்குறேன்.”என்றான் தருண்.
“என்ன சொல்றீங்க? யார் வாழ்க்கையில குறுக்க வந்தேன்.” என்று புரியாமல் வினவியவளின் பார்வை, சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த சித்தார்த்தின் மேல் சென்று வந்தது.
அவனது கவனம் இங்கில்லை. யாருக்கோ ஃபோன் செய்துக் கொண்டிருந்தான்.
“என்னங்க இப்படி சொல்றீங்க? உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா வேண்டாமென்று முன்னாடி சொல்லணும். அதை விட்டுட்டு இப்படி ஓடிப் போனீங்கன்னா, அந்த மாப்பிள்ளைக்கு தான அசிங்கம்.” என்று நியாயம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஹலோ! ஸ்டாப்! ஸ்டாப்! விட்டால் நீங்க பாட்டுக்கு எதேதோ பேசிட்டு போவீங்க போல இருக்கு. நீங்க என்ன அகில உலக ஆண்கள் நல சங்கத் தலைவரா? வந்துட்டீங்க, வரிஞ்சுக் கட்டிக்கிட்டு… நான் ஒன்னும் கல்யாணப் பொண்ணு இல்லை. ஆனால் நாளைக்கு இங்கே இருந்தால் அவ்வளவு தான். நான் எஸ்கேப் ஆகுறது தான் எல்லோருக்கும் நல்லது. வர்றட்டா?” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
தருணோ அவளது பேச்சில் ஒன்றும் புரியாமல் நின்றுக் கொண்டிருந்தான்.
“ஒன் செகண்ட்!”என்ற சித்தார்த்தின் அழுத்தமான குரலில், அவளது கால்கள் அசையாமல் நின்றது.
அவளருகே வந்த சித்தார்த்தோ, ஷாலை முக்காடு போட்டு செல்லுமாறு சைகை செய்ய.
விழிகள் தெறிக்க முகத்தில் கை வைத்துப் பார்த்தாள்.
அவள் போட்டிருந்த முக்காடு அவிழ்ந்து, அவளது முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
சித்தார்த்திடமிருந்து அனல்பார்வையை எதிர்ப்பார்த்து அவனது முகத்தைப் பார்க்க.