சித்தார்த்தின் அறிமுகமற்ற அந்நிய பார்வையில் குழம்பிய மகிழினியோ அப்படியே திகைத்து நின்றாள்.
‘ஒருவேளை இருட்டில் அடையாளம் தெரியவில்லையோ.’என்று எண்ணியவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.
அவனோ அவளது பார்வையை கண்டு கொண்டாலும் ஃபோனில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தான்.
மகிழினியின் யோசனையைத் தடை செய்வது போல் அவளது ஃபோன் இசைத்து, அவளைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தையும் கவனிக்க வைத்தது.
“சிறகுகள் வீசிச் சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒளி வீசிட போகிறேன் நான்போகிறேன்…” என்று ஒலிக்க…
அவன் அவளை கேலியாகப் பார்த்துக் கொண்டிருக்க, கூட இருந்த தருணோ சும்மா இருக்காமல், “ஏங்க… இந்த ரிங்டோன் எப்பவுமே உள்ளதா? இல்லை கரெண்ட் சிச்சுவேஷனுக்காக மாத்துனீங்களா?” என்று அதி முக்கியமான கேள்வியை எழுப்பினான்.
சித்தார்த்தின் கேலியையும், தருணின் கேள்வியையும் கண்டுக் கொள்ளாமல் சைலண்டாக இருந்த மகிழினி தன் ஃபோனை சைலண்டில் போட முயன்றுக் கொண்டிருந்தாள்.பதட்டத்தில் கைகள் டான்ஸ் ஆட.
ஃபோனிலோ “ஆசைகள் எல்லாம் எனக்கெனக் கொண்டு மீசைகள் இல்லா கனவுகள் கண்டு பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று செருப்புகளே என்சிறகுகள் என்று
போகிறேன் நான் போகிறேன்.” என ரிங்டோன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
சித்தார்த் மீண்டும் ஒரு பொருள் விளங்காப் பார்வையை அவள் மீது வீசி விட்டு அங்கிருந்து நகர.
நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்ட மகிழினி, தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டாள்.”ச்சே! அவன் முன்னாடி அசிங்கமா போயிடுச்சு. ஊபர் புக் பண்ணும் போதே, இந்த ரிங்டோனையும் மாத்தியது தான் தப்பா போயிடுச்சு. மகி… கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டீயே! அவன் என்ன நெனச்சானோ!”என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தவளை, வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டே நண்பனைத் தொடர்ந்தான் தருண்.
மீண்டும் ஃபோன் இசைக்க.
“ ஓ காட்! நமக்கு இருந்த டென்ஷன்ல இவனை மறந்துட்டோமே.” என்றவள், வேகமாக ஃபோனை அட்டெண்ட் செய்தாள்.
“சாரி ப்ரோ! டூ செகண்ட்ஸ் தான் வெளில வந்திடுவேன்.” என்றவள், சற்று முன் நடந்ததை மறந்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
மகிழினி எப்போதும் அப்படித்தான்… எந்த ஒரு நிகழ்வையும், அந்த நொடி அப்படியே எதிர்க்கொள்வாள்.
அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாள். எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று அந்த இளமைக்கே உள்ள துணிச்சலுடன் செயல்படுவாள்.
இன்றும் அது போலவே வீட்டிற்கு தெரியாமல் கிளம்பியவள், தான் கிளம்புவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
ஆனால் சித்தார்த்தோ, நாளை நடக்கும் பூகம்பத்தை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
*****************************
“சாரி ப்ரோ! ரொம்ப நேரமா வெயிட் பண்ண வச்சுட்டேனா.” என்று கூறி புன்னகைத்தவாறே அவளுக்காகக் காத்திருந்த ஊபர் ட்ரைவரிடம் வினவினாள் மகிழினி.
“ இட்ஸ் ஓகே மேம்.” என்ற ட்ரைவரோ, மகிழினியையும், அந்த மண்டபத்தையும் ஆராய்ச்சியாகப் பார்க்க.
மகிழினியோ அவரைக் கண்டுகொள்ளாமல் பில்லியனில் தொற்றிக் கொண்டாள்.
“ என்ன மேம்! லவ்வா? வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போறீங்களா?”என்று வினவ.
லேசாகப் புன்னகைத்தவளோ பதில் கூறாமல் ஃபோனில் கவனத்தை செலுத்தினாள்.
கோயம்புத்தூருக்கு எந்த ட்ரெயினில் டிக்கெட் இருக்கிறது என்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளது நல்ல நேரம் ஏழே முக்காலுக்கு கிளம்பும் ரயிலில் இடம் இருந்தது. நிம்மதியடைந்தவளோ, ‘அவளது தோழிக்கு அழைத்துச் சொல்வோமா.’ என்று எண்ணியவள், ‘இப்போ எல்லோரும் அசந்து தூங்குற நேரம். டிரெயின்ல போகும்போது சொல்லிக்கொள்ளலாம்.’என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
சென்ட்ரலில் இறங்கியவள், அழைத்து வந்தவனுக்கு நன்றி கூறி விட்டு,
டிரெயினுக்காகக் காத்திருந்தாள்.
பலதரப்பட்ட மக்கள் அந்த அதிகாலைப் பொழுதிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருத்தனர். அவர்களைப் பார்த்ததும் தான் எதற்காக ஓடுகிறோம் என்று இலக்கு இல்லாமல் இருப்பதை எண்ணி ஒரு நிமிடம் வருந்தியவள், பிறகு தலையைக் குலுக்கியவள், ‘ஒருவேளை இந்த ரயில் பயணம் எனது தலையெழுத்தை மாற்றினாலும் மாற்றலாம்.’ என்று எண்ணிப் புன்னகைத்துக் கொண்டாள்.
இரயில் வந்ததும் வேகமாக ஏறியவள், அவளது இடத்தில் சென்று அமர்ந்தாள்.
இரயில் மெல்ல, மெல்ல தனது வேகத்தைக் கூட்டியது. இயற்கை காட்சிகள் வேகமாக மறைய, அதை ரசித்துக்கொண்டிருந்தாள் மகிழினி.
அதைத் தடை செய்வது போல் அவளது ஃபோன் இசைத்தது.
**************************
அதிகாலை பொழுது புலர, நிச்சயதார்த்த விழாவுக்காகப் பரபரப்பாக எழுந்து தயாரானார் வசந்தி.
”அக்கா! நீங்களே இன்னும் ரெடியாகலையா? மகிழை ரெடி பண்ற வேலையை உங்க கிட்ட விடுவோம்னு பார்த்தேனே.” என்று பத்மா இன்னும் தயாராகாமல் இருப்பதைப் பார்த்துப் படபடத்தார் வசந்தி.
“அவ என்ன சின்னக் குழந்தையா? எழுப்பி விட்டா, கிளம்பிடப் போறா?” என்று தனது புடவையின் ப்ளீட்ஸை சரி செய்தபடி அலட்டிக் கொள்ளாமல் கூறினார் பத்மா.
“ ஐயோ அக்கா! நம்ம சஹி மாதிரி இவளை நினைச்சிங்களா? புடவை கட்டி தயாராகச் சொல்லணும். எதுக்கு புடவைன்னு கேள்விக் கேட்டே சாகடிச்சிடுவா? அதுவும் மாப்பிள்ளை விஷயம் வேற தெரியாது?”என்ற வசந்தியின் முகம் அவளது மகளை நினைத்துக் கவலைக் கொண்டது.
“ அவளைப் பார்க்க மாப்பிள்ளை வந்தா என்ன? புடவை தான் கட்டிக்கணுமா? அவ விருப்பப்படி ட்ரெஸ் பண்ணிக்கட்டும். விடு வசு.”
“அத்தையோட கோபத்தை நினைச்சு தான் எனக்கு பயமா இருக்குக்கா.”
“அத்தை அந்தக் காலத்து மனுஷி. அவங்க ஏதாவது சொன்னா இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடுவியா? அதை விட்டுட்டு புலம்பிட்டு இருக்க. நீ போய்ச் சஹியையும், மகிழையும் கிளம்ப சொல்லு. நான் மகி கிளம்பிட்டானான்னு பார்க்குறேன்.” என்று பத்மா புன்னகையுடன் கூற.
“சரி!” என்பது போல் தலையாட்டிய வசந்தி பெருமூச்சு விட்டுக் கொண்டே மகள்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கிச் சென்றாள்.
அங்கோ மகிழினி இல்லை. சாஹித்யா மட்டும் பதற்றத்துடன் மெத்தையில் அமர்ந்து இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்த வசந்தி, “சஹி எழுந்திட்டியா. எங்க உன் தங்கச்சியை காணும். குளிக்கப் போயிட்டாளா? அதிசயமா இருக்கே!” என்று வியந்து வினவினார்.
“ அது வந்து சித்தி! மகிழை காணும்.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“என்ன சொல்றடா? மகிழ் எங்கப் போகப் போறா? வெளியே எங்கேயாவது நடந்துட்டு இருக்கப் போறா? நான் போய் பார்த்துட்டு வர்றேன்.”
“இல்லை சித்தி! நைட் என் கூட தான் பேசிட்டு இருந்தா,காலையில் பார்த்தா அவளைக் காணோம். ரூம் லாக் பண்ணது போல தான் இருந்தது. பாத்ரூம்ல செக் பண்ணிட்டு, அங்கே இல்லைன்னதும் பால்கனிக்கு போனேன். அங்கே பெட்ஷீட் தொங்கிட்டு இருந்தது. எனக்கு ஒன்னும் புரியலை.” என்றவளுக்கு பயத்தில் நெற்றியில் வியர்வை பூத்தது.
“ என்ன சொல்ற சஹி?” என்று வினவியவருக்கு பதற்றத்தில் மயக்கமே வருவது போல் இருந்தது. மெத்தையில் அமர்ந்துக் கொண்டவரோ, ‘ஐயோ! இந்த பொண்ணு எங்க போனான்னு தெரியலையே! அத்தைக்கும், மாமாவுக்கும் தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியலை. இவப் பண்ண வேலையால நிச்சயத்தார்த்தம் வேற நடக்குமான்னு தெரியுலையே.’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார்.
மகேஷை எழுப்பி விட்டு வந்த பத்மா, “ ஹேய் வசு! என்னை கிளம்பலையா, கிளம்பலையான்னு காலையிலிருந்து விரட்டிட்டு நீ இப்படி ஹாயா உட்க்கார்ந்துட்டு இருக்க. எங்க மகிழ் ரெடியாகிட்டாளா?” என்று புன்னகையுடன் வினவினார்.
“ அக்கா! “ என்றவருக்கு அடுத்த வார்த்தையே வரவில்லை. அதற்குப் பதிலாக கண்களிலிருந்து கண்ணீர் தான் வந்தது.
“ வசு! என்னாச்சு? எதுக்கு இப்படி அழற?”
“என்னாச்சு வசு? எதுக்கு அழற?” என்று பதட்டமாக வினவ.
வசந்தியால் பதில் சொல்ல முடியவில்லை.
ஏதோ சரியில்லை என்று உணர்ந்த பத்மா மகளிடம் திரும்பினார்.
கலக்கத்துடன் இருந்த சாஹித்யாவைப் பார்த்தவர்,“சஹி! என்னாச்சு? சித்தி ஏன் அழறா? முதல்ல மகிழ் எங்க?” என்று வினவினார்.
“அது வந்து அம்மா!” என்ற சாஹித்யா, சற்று முன் வசந்தியிடம் கூறியதை, மறுபடியும் பத்மாவிடம் கூறினாள்.
மகள் கூறியதைக் கேட்டதும் பத்மாவின் முகமும் கலக்கத்தை சுமந்தது. இது கலங்கும் நேரம் இதுவல்ல என்று உணர்ந்த பத்மா, கண்களை மூடி சற்று நேரம் யோசித்தார்.
“ வசந்தி! அழுறதை நிறுத்து முதல்ல நிறுத்து. அழுதா எல்லாப் பிரச்சினையும் சரியாகிடுமா? அடுத்து என்ன செய்யறதுன்னு முதல்ல யோசிக்கணும்” என்றார்.
“நீங்க சொல்றது எனக்குப் புரியுதுக்கா. ஆனால் எனக்குப் பயமா இருக்கே.” என்ற வசந்தியைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
“வசு! நீ டென்ஷனாகதே. இரு நான் மகிழுக்கு ஃபோன் போட்டு பார்க்குறேன்.” என்று தனது ஃபோனில் இருந்து முயன்றார் பத்மா.
ஆனால் அவரது ஃபோனிலிருந்து, மகிழினியை தொடர்புக்கொள்ள முடியவில்லை. வசந்தியின் ஃபோனை வாங்கியும் முயன்றுப் பார்த்தார். பலன் தான் பூஜ்யம்.
பத்மாவிற்கும் நேரமாக, நேரமாக கலக்கமாக இருந்தது. முதலில் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியவர், வசந்தியை அழைத்துக் கொண்டு அவர்களது அத்தையின் அறைக்குச் சென்றார்.
அங்குச் சித்தார்த், சாந்தியின் கைகளைப் பிடித்து ஆறுதலாக ஏதோ கூறிக் கொண்டிருந்தான்.
“அத்தை!” என்று அழைத்துக் கொண்டு வந்த பத்மாவும் சரி, அமைதியாக வந்த வசந்தியும் சரி சித்தார்த்தை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை.
அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தைச் சித்தார்த் கண்டுக் கொண்டான்.
முதலில் சுதாரித்த பத்மா, “வாங்க மாப்பிள்ளை! நல்லா இருக்கீங்களா?”என்று குசலம் விசாரித்தவரோ, ‘காலங்கார்த்தாலே இங்கே என்ன வேலை இவருக்கு?’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டார்.
லேசாகப் புன்னகைத்த சித்தார்த்தோ,”நல்லா இருக்கேன் அத்தை.” என்றவன், அவர் கேளாமல் மனதிற்குள் கேட்டுக்கொண்ட கேள்விக்கும் தொடர்ந்து பதில் அளித்தான். “மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்காக நாங்க எடுத்த ட்ரஸை கொடுப்பதற்காக வந்தேன் அத்தை.”
“மேடைல தானே கொடுக்குறது வழக்கம்.” என்று பத்மா வினவ.
“ஆமா அப்படித்தான் வழக்கம். ஆனால் பொண்ணு இப்போ ஒரு ட்ரெஸ் போட்டு அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் பண்ணிட்டு, அப்புறம் நம்ம குடுக்குற ட்ரெஸ்ஸை மாத்தி அதுக்கு தகுந்த மாதிரி மேக்கப் பண்ணணும்னா லேட் ஆகும். அதான் இப்பவே அந்த ட்ரெஸ்ஸைக் குடுத்துட்டா நேரம் மிச்சமாகும்னு நம்ம சுபத்ரா சொன்னா. எனக்கும் அந்த யோசனை சரின்னு தான் தோணுது. இப்போ ஃபங்ஷனுக்கு வர்ற எல்லோரும் தான் சுடுதண்ணியை கால்ல ஊத்துன மாதிரி வந்துட்டு போறாங்க
நமக்காக யாரையும் காக்க வைக்க வேண்டாம்.” என்றுசாந்தி விளக்கமளித்தார்.
“ஆமாம்… நல்ல ஐடியா தான்.” என்ற பத்மாவோ, உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தார்.
“ வசந்தி நீ ஏன் வாயைத் திறக்காமல் அமைதியா இருக்குற? உனக்கு விருப்பம் இல்லையா?” என்று தனது இளைய மருமகளைப் பார்த்து வினவினார்.
“ ஹான்! அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை அத்தை.” என்றவருக்கு இன்னும் முகம் சரியாகவில்லை.
தான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு பதில் சொல்லும் இளைய மருமகளை யோசனையாகப் பார்த்துக் கொண்டே, “அப்புறம் ஏன் இப்படி நின்னுட்டு இருக்கீங்க? முதல்ல மகிழை வரச் சொல்லு.” என்று அலுங்காமல் ஒரு குண்டை எடுத்துப் போட்டார் சாந்தி.
சித்தார்த்தோ ஃபோனில் கவனத்தை வைத்திருந்தாலும் என்ன பதில் வரப்போகிறது என்று காத்துக் கொண்டிருந்தான்.
பத்மாவோ, “அது வந்து…” என்று தயங்கியவர், தங்களுக்கு பின்னே வந்து நின்ற சாஹித்யாவைப் பார்த்து, “சஹிட்ட கொடுத்து விடுவோமா அத்தை.” என்றார்.
“ ஏன் உன் மகன் விஷேஷங்கிறதால சாஹித்யா தான் போய் பொண்ணுக்கு முறை செய்யணுமா? ஏன் மகிழினி செய்தால் என்ன? நம்ம எல்லாரும் ஓரே குடும்பமும் தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.” என்று பெரிய மருமகளை அழுத்தமாகப் பார்த்து வினவினார் சாந்தி.
எதற்கும் அசராத பத்மாவே அவரது வார்த்தைகளில் கலங்கி போனார்.
அதற்குள் வசந்தியோ,” அத்தை! அக்கா அப்படி எல்லாம் நினைக்கமாட்டாங்க. சஹி தானே மூத்தவ. அதான் சொன்னாங்க.” என்றார்.
“அதெல்லாம் எனக்கும் தெரியும். நான் சொன்னா அதுல ஏதாவது காரணம் இருக்கும். நீ போய் மகிழினியை வரச் சொல்லு.” என்று அழுத்தமாகக் கூற
அப்போதும் அங்கிருந்த அசையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த மருமகள்களைப் பார்த்து பொறுமை இழந்த சாந்தி, “நானே போய் என் பேத்தியை கூப்பிடுறேன்.”என்று அந்த அறையை விட்டுச் செல்ல முயல.
“அத்தை! மகிழ் அங்க இல்லை.“என்றார் பத்மா.
“அங்க இல்லைன்னா, எங்க இருக்கா? வெளியே எங்கேயும் அனுப்பியிருக்கீங்களா?” என்று இருவரையும் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே வினவினார் சாந்தி.
“ அது வந்து அத்தை! அவ திங்ஸும் இல்லை. நல்லா பார்த்துட்டோம். ஃபோன் போட்டாலும் போக மாட்டேங்குது.” என்று பதட்டத்துடன் கூறினார் வசந்தி.
“ மாப்பிள்ளை வர்றது அவளுக்குத் தெரியுமா? யாரும் சொன்னீங்களா?” என்று சாந்தி வினவ.
அங்கிருந்த சித்தார்த்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “யாரும் மகிழ் கிட்ட சொல்லலை. எப்பிடியோ தெரிஞ்சிருச்சு போல. அதான் நடுராத்திரின்னு கூடப் பார்க்காமல் கிளம்பிப் போயிருக்கா. என் ஃபோன்ல இருந்தும், அக்கா ஃபோன்ல இருந்தும் போடுறோம். நாட் ரீச்சபிள்னே வருது.” என்று புலம்ப.
சித்தார்த்தோ அங்கிருக்க முடியாமல் கிளம்பினான்.
“தம்பி! மகிழ் நம்பருக்கு நீ ஃபோன் போட்டுப் பாருப்பா” என்றார் சாந்தி.
அவனோ அவனது ஃபோனை, சட்டை பாக்கெட்டிலிருந்து எடுக்கக் கூட முயற்சி செய்யவில்லை.
‘அவனுக்கு நன்குத் தெரியும். அவனது நம்பரையும் பிளாக் செய்திருப்பாள். திமிர் பிடித்தவள். இங்கு நடப்பதை தெரிந்து கொள்ள அவளுக்கு துணைப்போறவங்க நம்பரை மட்டும் தான் விட்டு வைத்திருப்பாள்.’ என்று எண்ணியவன், அங்கிருந்த எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.
திருதிருவென முழித்துக் கொண்டிருந்த சாஹித்யாவிடம் கையை நீட்டினான்.
“ ஹான்!” என்று முழித்தாள் சாஹித்யா.
“ உங்க ஃபோனை குடுங்க.” என்ற அவனது குரலிலே பயந்து போய் ஃபோனை நீட்டினாள்.
ஃபோனை வாங்கி ஆராய்ந்தவன், மீண்டும் அவளிடமே நீட்டி,“ லாக்கை ரிலீஸ் பண்ணிக் கொடுங்க.”என்று விட்டு, அவனையே பார்த்துக் கொண்டிருத்த பாட்டியிடம்,”நம்ப நம்பர் எல்லாம் பிளாக் பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கு பாட்டி! “ என்றான்.
சாஹித்யாவோ, ‘ கடவுளே! நான் தான் மகிழ் வெளியே போகக் காரணம்னு பாட்டிக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். நான் தொலைஞ்சேன்.’ என்று எண்ணியவள் நடுக்த்துடன் ஃபோனை அவனிடம் நீட்டினாள்.
அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே, மகிழினிக்கு அழைத்தான்.
“மகிழ்!” என்ற பாட்டியின் கணீர் குரலும், அதையும் மீறி,“ வில் யூ ஷட் அப். உன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை பேசுவியா? இன்னொரு வார்த்தை என்னைப் பற்றிப் பேசுனால் அவ்வளவு தான்.” என்ற சித்தார்த்தின் அனல் பேச்சு, அவளது செவியில் விழுந்தது.