“என்ன சாந்தி? ஏன் கோபமா இருக்குற?”என்று ஒன்றும் புரியாமல் மகேந்திரன் வினவ.
“அதானே எதுக்குமா இப்போ அப்பாவை முறைக்கிறீங்க? “ என்று தந்தைக்கு ஆதரவாக நரேந்திரன் வந்தார்.
சுரேந்திரனோ,’வீட்ல உள்ள நாய்க்கு அடிபட்டா கூட, அங்க சுத்தி இங்க சுத்தி அப்பா தான் காரணம்னு அம்மா சொல்லுவாங்க. இப்போ அவரோட செல்ல பேத்தி செஞ்சு வச்ச காரியத்துக்கு சும்மாவா இருப்பாங்க? இந்த அண்ணன் அமைதியா இல்லாமல் ஏன் ஏத்தி விடுறாரு.’ என்று மனதிற்குள் நினைத்தார்.
அவர் நினைத்தது சரி தான் என்பது போல் சாந்தினி பேச்சை ஆரம்பித்தார்.
“ சும்மா ஆசை அதான் உங்க அப்பாவைப் பார்த்து நான் முறைச்சுட்டு இருக்கேன். என்னமோ ஈஸியா இவர் நிச்சயதார்த்தத்தை முடிச்ச மாதிரி வந்து, நல்லபடியா முடிஞ்சிடுச்சு சொல்றாரு.
என் பேரன் சித்துவால தான் இந்த நிச்சயதார்த்தம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தது. நம்ம வீட்டுலையும் தான் பொறந்துருக்கிறதுங்களே. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசுல. ஒருத்தி பயந்தாங்கொல்லி. இன்னொருத்தியோ பயம் என்றால் என்னன்னே தெரியாத அவசரக்குடுக்கை. பேரனாவது புத்திசாலியா இருப்பான்னு நினைச்சா, அவனும் அவங்க தாத்தா மாதிரி நிரூபிச்சிட்டான்” என்று ஒரே நேரத்தில் தாத்தாவையும், பேரனையும் சேர்த்து டேமேஜ் செய்துக் கொண்டிருந்தார் சாந்தினி.
“நான் என்ன செஞ்சேன் பாட்டி.”என்று முணுமுணுத்தான் மகேஷ்.
“நிச்சயத்தன்னைக்கே என் பேத்தியை கண் கலங்க வச்சுட்டுப் பேச்சைப் பாரு. இதே சித்துவப் பார்த்தியா எப்படி யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசி சூழ்நிலையை மாத்தினான்.”
“என் தங்கச்சி பத்தி தப்புத் தப்பா பேசணுனா, நான் சும்மா கேட்டுட்டு இருக்க முடியுமா? அவனும் அவன் தங்கச்சிக்கு தானே சப்போர்ட் பண்ணான்.” என்ற மகேஷை, ‘அட அறிவுக் கெட்டவனே!’என்பதுப் போல பார்த்தார் சாந்தினி.
“என்ன பாட்டி?” என்று பாட்டியின் பார்வை புரியாமல் வினவினான் மகேஷ்.
“அடே மடையா! உன் மச்சான் சொல்லாமல் சொன்னது, உன் தங்கச்சியை எந்த இடத்திலும் அவன் விட்டுக் கொடுக்கலையாம். நீயும் அதேப் போல அவன் தங்கச்சியை விட்டுக் கொடுக்காமல் இருக்கணும்னு சொன்னான். அது உன் மரமண்டைக்கு உரைக்கலையா.”
“பின்னே நீ பண்ண காரியத்துக்கு திட்டாமல் கொஞ்சுவாங்களா? இன்னைக்கு சொல்றது தான் நல்லா மனசுல பதிய வச்சுக்கோ. நம்ம வீட்டுக்கு வாழ வர பொண்ணோட மனசு என்னைக்கும் நோகக் கூடாது. இன்னொரு முறை ரூபா கண்ணுல இருந்து தண்ணி வந்துச்சு நான் உன்னை சும்மா விட மாட்டேன்.” என்றார்.
பாட்டியின் பேச்சில் முகம் கன்ற சரியென தலையசைத்தான் மகேஷ்.
“இதுக்கு ஏன் முகம் வாடுற. பாட்டி உன் நல்லதுக்குத் தான் சொல்லுறேன் கண்ணா. சரி போய் ஓய்வெடு. காலையில் நேரத்தோட எழுந்தது வேற தலைவலிக்குது, நானும் போய் படுக்குறேன்.” என்றவரின் பார்வையில் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்த வசந்தி தென்பட்டார்.
“ இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க?” என்று வசந்தியைப் பார்த்து சாந்தினி சிடுசிடுக்க.
வசந்தியின் கையை ஆதரவாகப் பற்றிய பத்மாவோ, “பாவம் வசு! மகிழ் எங்க இருக்குளோ? என்ன கஷ்டப்படுறாளோ?தெரியலை. மகளைப் பத்தின கவலை அவளுக்கு இருக்கத் தானே செய்யும்!” என்றார்.
“வசந்தி! எதுக்கு எடுத்தாலும் அழறதை முதல்ல நிறுத்து. உன் மகளை கவலைப்படத் தேவையில்லை. பத்மா சொல்றதுப் போல எல்லாம் உன் மக கஷ்டப்படலை. ஷாப்பிங் போயிட்டு ஜாலியா தான் இருக்கா. அவ அங்கே கார்டை தேய்க்குறதுக்கு எனக்கு இங்கே மெசேஜ் வந்து விழுது.” என்று சாந்தினி ஃபோனை காட்ட.
பத்மாவும், வசந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மனதிலோ, ‘இந்த அத்தை நம்ம கூடத் தானே மண்டபத்துல பரபரப்பா இருந்தாங்க. இதுக்கு நடுவுல இதை எப்ப கவனிச்சாங்க. நாமளும் தானே இருக்கோம்.’ என்று நொந்துக் கொண்டனர்.
மருமகள்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துக் கொண்ட சாந்தினி இருவரையும் முறைத்துக் கொண்டே நகர்ந்தார்.
அவர் அங்கிருந்து கிளம்பவும், “அப்பாடா!”என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு எல்லோரும் அங்கிருந்து களைந்தனர்.
தனதறைக்குச் சென்ற சாஹித்யாவோ, வைஃப்ரேஷனில் இருந்த ஃபோனை எடுத்து ஆன் செய்தாள்.
அங்கிருந்த பார்ஸல்களைப் பிரித்துக் கொண்டிருந்த மகளின் தலையில் லேசாக தட்டி, “இன்னைக்கு தானே உன் ஃப்ரெண்ட் ஊருல வந்தா, இன்னைக்கே ஷாப்பிங் போகணுமா. பாரு அவ முகமே வாடி இருக்கு. கொஞ்சம் ஓய்வெடுத்து நாளைக்கு போனா தான் என்ன?” என்றுக் கடிந்துக் கொண்டார்.
“அம்மா! எந்த செயலா இருந்தாலும்,
“ இன்றே செய்.
நன்றே செய்.” என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க தெரியுமா?” என்றாள்.
“இப்போ எது முக்கியமோ அதை முதல்ல செய்யணும்? ஷீரடி போறதுக்கு மகிக்கு டிக்கெட் புக் பண்ண சொன்னேனே பண்ணிட்டியா?”
“ஃபோன் பண்ணேன். அந்த சார் எடுக்கலை.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“ஆள் தான் வளர்ந்திருக்கியே தவிர அறிவு வளரவே இல்லை. நீயெல்லாம் டாக்டருன்னு வெளியிலே சொல்லிக்காதே.” என்று மகளை காய்ச்சி எடுத்தார் சுமதி.
“அந்த ஆள் ஃபோன் எடுக்காததுக்கும், நான் டாக்டருக்கு படிச்சதுக்கும் என்ன சம்பந்தம் மா?” என்று கோபமாக வினவினாள் ரேகா.
மகிழினிக்கோ, தன்னால் தான் தோழி திட்டு வாங்கிறாள் என்று தவிப்பாக இருந்தது.
“அந்த தம்பி அன்னைக்கு என்ன சொன்னது. ரெண்டு நாளைக்கு வெளியூர் போறேன். ஃபோன் எடுக்க மாட்டேன். எதுனாலும் ஆபீஸ்க்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கோங்க எந்த சந்தேகம் இருந்தாலும், எப்ப வேணும்னாலும் ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லுச்சா, இல்லையா? இந்த சின்ன விஷயம் கூட ஞாபகம் இல்லைனா நீ டாக்டருக்கு படிச்சதெல்லாம் எப்படி ஞாபகம் வைச்சிக்கிட்டு வைத்தியம் பார்ப்ப?” என்று கேட்க.
மகிழினியோ சற்று முன் தாங்கள் குடித்த காஃபிகஃபுகளை எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள்.
“இங்கே குடுமா. நான் எடுத்துட்டு போறேன்.”என்று சுமதி தடுக்க.
“பரவாயில்லை ஆன்ட்டி!”என்றவள் அதை கழுவி வைத்து விட்டு தோழியை தேடிச் சென்றாள்.
அங்கு ரேகவோ, “பிக்கப்! காட் பிக்கப் ப்ளீஸ்!” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு ரேக்ஸ்? ஏன் டென்ஷனா இருக்க?”
“டிராவல் ஏஜென்சிக்கு கால் பண்ணேன்.எடுக்க மாட்டேங்கறாங்க.” என்றவளது முகம் கவலையாக இருக்க
“சாரி ரேக்ஸ்!” என்றாள் மகிழினி.
“எதுக்குடி?” என்றவள், மீண்டும் அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தாள்.
“என்னால தானே ஆன்ட்டி உன்னை திட்டுனாங்க.”
“அட லூசே! உன்னை ஓய்வெடுக்க விடாமல் அலைய விட்டேன்னு தான் ,அம்மா திட்டினாங்க. என்னை அமமா திட்டுறதும், கழுவி ஊத்துறதும் புதுசா? சின்ன வயசுல உன்னையும் சேர்த்து வச்சு தானே திட்டுவாங்க. அதெல்லாம் மறந்துட்டியா?” என்று கிண்டலாக ரேகா வினவ.
“ஆமாம்! இதெல்லாம் நம் அரசியலில் சாதாரணம் தான்.”என்றவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ரேகாவின் விடாமுயற்சிக்கு பலனாக அந்தப் பக்கம் அவளது அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது.
“ஹலோ! ஷீரடிக்கு இன்னும் ஒரு டிக்கெட் வேண்டும்.”என்று வினவினாள்.
அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ அவளது முகம் வாடியது.
“ஓகே சார்! நீங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் அனுப்பிடுறேன்.” என்றாள் ரேகா.
அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த மகிழினியோ, “டிக்கெட் இல்லையா ரேக்ஸ். பரவாயில்லை விடு.”என்று தனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, தோழியை சமாதானம் செய்தாள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த சுமதியோ, “டிக்கெட் கிடைக்கலையா?” என்று கவலையாக வினவினார்.
இருவரையும் பார்த்த ரேகாவோ, டிக்கெட் இருக்காம். ஆனால் வேற கோச்ல தான் கிடைக்குமாம்.”என்றாள்.
அதைக் கேட்ட சுமதியோ,”எருமை! கொஞ்ச நேரத்தில பதற வச்சுட்ட. வேற கோச்சா இருந்தா என்ன? பார்த்துக்கலாம். வேணும்னா உங்க அப்பாவை அங்கத் தள்ளி விட்டுடுவோம்.” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. அங்கிளுக்கு போரடிக்கும். நான் சமாளிச்சுக்குவேன்.”என்றாள் மகிழினி.
“ அப்பாவுக்கு போரடிக்காது மகி. நாம ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்தாத் தான் ஜாலியா பேசிட்டு வரலாம்.” என்று ரேகாவும், மகிழினியிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.
“அங்கிள் உங்கக் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு தானே இந்த டூரே அரேஞ்ச் பண்ணியிருக்கார். அதுல எந்த குளறுபடியும் வேண்டாம். நான் என் சீட்டுல இருந்துக்குறேன்.” என்று முடிவாக மகிழினி கூற.
மகிழனியின் உணர்வுகளை புரிந்து கொண்ட சுமதி புன்னகைத்தார்.
ரேகாவோ அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவளை சற்றும் கண்டுக் கொள்ளாத சுமதியோ, “சரி என்ன பர்சேஸ் பண்ணிட்டு வந்தீங்க காட்டுங்க.” என்று மகிழினியிடம் வினவினார்.
அதைக் கேட்டதும் உற்சாகமான ரேகா, அவர்கள் வாங்கி வந்ததை கடைப்பரப்பினாள்.
அவர்கள் வாங்கி வந்த துணிமணிகளையும், பொருட்களையும் பார்த்த சுமதியோ, “ பரவாயில்லையே டூருக்குத் தேவையான பொருட்களை பார்த்துப். பார்த்து வாங்கியிருக்க.”என்று மகிழினியைப் பார்த்து புகழ்ந்தவர், அருகே இருந்த மகளின் தலையில் லேசாக தட்டி, “ஒன்னும் தெரியாமல் நீயும் தான் இருக்கீயே. இவளைப் பார்த்தாவது எப்படி பொறுப்பா இருக்கணும்னு கத்துக்க.”என்று கூற.
மகிழினியும், ரேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் ரகசியம் பேசிக் கொள்ள.
“என்ன ரெண்டு பேரும் பார்வையே சரியில்லையே.”என்ற சுமதி இருவரையும் சந்தேகமாக பார்க்க.
“அது ஒன்னும் இல்லை ஆன்ட்டி! நீங்க சொன்னதை ரெக்கார்ட் பண்ணி எங்கப் பாட்டிக் கிட்ட காண்பிச்சாலும் கூட என்னை நம்ப மாட்டாங்க. நீ ஏதோ ஐஸ் வச்சு இருப்ப. உன் விளையாட்டுத்தனம் பத்தி அவங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்குத்தான் உன்னைப் பத்தி நல்லாத் தெரியுமேன்னு கழுவி ஊத்துவாங்க.” என்ற மகிழினியின் நினைவில் சித்தார்த்தின் நினைவும் வந்துப் போனது. ‘பொறுப்பே இல்லாமல் என்ன விளையாட்டுத்தனம்.’என்று எரிச்சலை மறைக்காத குரல் காதில் ஒலித்து, தான் எடுத்த முடிவு சரி தான் என்று எண்ணத்தை விதைத்தது.
அவளது முக வாட்டத்தைப் பார்த்த சுமதியோ, “நீயும் ரேகாவைப் போல விளையாட்டுத்தனமாத் தான் இருப்ப. ஆனாலும் உன் கிட்ட இயல்பிலே பொறுப்பும் இருக்கு. இரண்டு பேருக்கும் தான் டீ குடுத்தேன். அவ குடிச்சிட்டு அப்படியே வச்சுட்டு போயிட்டா. நீ அதை எடுத்துட்டு போய் வச்ச. சின்ன வயசுலேயும் அப்படித்தான் விளையாடுற நேரம் விளையாடுவ, அப்புறம் எனக்கு ஏதாவது உதவி செய்வ.”என்றுக் கூற.
சிறிய வயதின் மலரும் நினைவுகள் மனதில் வந்துப் போக மகிழினியின் முகம் மலர்ந்தது.
ரேகாவோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “ மாம்! திஸ் இஸ் நாட் ஃபேர். நானே டிக்கெட் கிடைக்குமோ, கிடைக்காதோ டென்ஷன்ல எழுந்திருச்சு போயிட்டேன்.”என.
“இல்லைன்னா மட்டும் செஞ்சுடடு தான் மறுவேலைப் பார்ப்ப. உன்னைப் பற்றி நல்லா எனக்குத் தெரியும். அதுனால காதுல பூ சுத்துற வேலை எல்லாம் விட்டுட்டு ஊருக்கு பேக் பண்ற வேலையைப் பாரு.” என்று மகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே சுமதி கூற.
“அதெல்லாம் பேக் பண்ணிடலாம். இன்னும் தான் இரண்டு நாளிருக்கே” என்று ரேகா அலட்சியமாக கூற.
“உதை வாங்கப் போற ரேகா. எல்லாத்துலேயும் விளையாட்டுத்தனம்.” என்று மகளை கடிந்துக் கொண்டவர், மகிழினியிடம், “மகி நீ பேக் பண்ணிட்டு, இவளுக்கும் கொஞ்சம் உதவி பண்ணுமா.எப்பவுமே இந்த மாதிரி எங்கேயாவது ட்ரைன்ல கிளம்பும்போது அந்த நேரத்துல தான் எடுத்து வச்சுட்டு இருப்பா. அப்புறம் ட்ரெயின் பிடிக்க தமன்னா மாதிரி ஓடி தான் ஏறணும். இவ வயசுக்கு முடியும். எங்களால முடியுமா? எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறா.”என.
“மாம் அதெல்லாம் அறியா வயசுல செஞ்சது.”என்ற ரேகாவை, வெட்டவா, குத்தவா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் சுமதி.
“வொய் மம்மி இந்த கொலைவெறி?”என்று அவரது தோளைத் தொட.
“போன தடவை உங்க அத்தை மக கல்யாணத்துக்காக வந்தியே, அப்ப என்ன நடந்தது.”
“ அது வந்து…”என்று ரேகா தயங்க.
“திருச்செந்தூருக்கு போனோமே அப்ப என்ன நடந்தது?”
“அது வந்து…”என்று ரேகா முழிக்க.
“அதெல்லாம் கூட பரவாயில்லை. லீவ் முடிஞ்சு நீ அப்ராட் போறதுக்காக சென்னைக்கு கிளம்புனோமே அப்போ என்ன நடந்தது?”என்று சுமதி விடாமல் கேள்விக் கணைகளால் துளைக்க.
“அம்மா! தாயே! நடந்தது நடந்துப் போச்சு. இனி நான் பொறுப்பா இருக்கேன். இப்போ என்னை டேமேஜ் பண்ணாமல் ஆளை விடு.”என்று ரேகா இரு கைகளை எடுத்து கும்பிடு போட.
“அதைத்தான் நானும் சொல்றேன். நடந்ததெல்லாம் விட்டுத் தள்ளு. இந்த தடவை என்னை டென்ஷன் பண்ணக் கூடாது.” என்று மகளிடம் கறாராக கூறிய சுமதி, மகிழினியிடம் திரும்பியவரோ, “நீ இருக்குறதால கொஞ்சம் நிம்மதியாக இருக்கு. இவளைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை. நீ பார்த்துப்ப.”என்றுக் கூறி புன்னகைத்தார்.
இந்த முறை மகிழினியும் சேர்ந்து அவரைப் பதற வைக்கப் போகிறாள் என்பதை அறியாத சுமதி நிம்மதியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.