படபடத்த படபடத்த நெஞ்சை அழுத்திப் பிடித்த மகிழினி அவனது அனல் பார்வையை சந்திக்க பயந்து, தயக்கத்துடன் அவனைப் பார்க்க.
சித்தார்த்தோ முகத்தில் எதையும் காட்டாமல், “ ஹலோ! மேடம் ஆர் யூ ஓகே.” என்று கனிவாக வினவினான்.
அவனது அறிமுகமற்ற பேச்சில், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேந்த, பேந்த முழித்தாள் மகிழினி.
சுமதியோ,”என்ன பொண்ணு நீ? அந்த மோதிரம் ரொம்ப முக்கியமோ? உங்க தாத்தா கிட்ட சொன்னா, இதைப் போல எத்தனை மோதிரம் வேணும்னாலும் வாங்கித் தருவாங்கத் தானே. கொஞ்சம் கூட அறிவே இல்லை.”என்று மகிழினியை திட்ட.
“அது ஆன்ட்டி…”என்று மோதிரத்தைப் பார்த்து தயங்கினாள்.
சித்தார்த்தின் உடல் இறுகியது.
‘ஆமாம்! உண்மையிலேயே அவளுக்கு அறிவு இல்லை தான். இருந்திருந்தால் என்னை அவாய்ட் பண்ணனும்னு வீட்டை விட்டு கிளம்புனவ, என்னோட ட்ராவல் ஏஜென்சிக்கே வருவாளா? தெரிஞ்சு வந்தாளா, இல்லை தெரியாமல் வந்தாளான்னு தெரியலை. இருந்தாலும் இவ்வளவு அலட்சியம் இருக்கக் கூடாது. எங்கே யாரோட போனாலும் கவனமா இருக்க வேண்டாமா?’ என்று மனதிற்குள் திட்டியவனின் சிந்தனையில், ‘ நாம் எப்படி இவ வர்றதை கவனிக்காமல் விட்டோம்.’ என்ற யோசனை வர,
கையில் வைத்திருந்த ட்ரிப்புக்கு வந்திருக்கும் பயணிகளின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தான்.
கடைசியாக அவளது பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் விடுமுறையை எடுத்துச் சென்றிருந்த போது பயணத்திற்காக டிக்கெட் பதிவு செய்திருப்பது புரிந்தது. இருந்தாலும் வந்தவுடன் செக் செய்து இருக்க வேண்டும்.
‘இவ செய்து வைத்த வேலையால, தான் நானும் கவனிமில்லாமல் விட்டுட்டேன். எல்லாம் இவளால தான்.’ என்று மனதிற்குள் திட்டியவனின் கவனம் எதிரில் நின்றவளின் மேல் பதிய.
அவளோ, முகத்தை பாவமாக மாற்றி வைத்துக் கொண்டு, அவள் வயதை ஒத்த பெண்ணையும், அவளின் தாயாரையும் மாறறி, மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நான் பொறுப்பனவனு சொன்னேனா? நான் சொன்னேனா?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் மகிழினி.
“எல்லாத்துலயும் உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டு தான். சின்ன வயசுல தான் இப்படி இருந்தீங்கன்னு பார்த்தா, வளர்ந்தும் இப்படியே இருக்கீங்க. கீழே விழுந்தா என்னாகுறது? கொஞ்ச நேரத்தில் உசுரே போயிடுச்சு.” என்று சுமதி படபடக்க.
“மேடம்! உள்ளே போய் உங்க சீட்ல உட்காருங்க. அப்புறம் பேசிக்கலாம்.” என்றான் சித்தார்த்.
“ஐயோ! உங்க அப்பா வேற நம்மளை காணும்னு டென்ஷனாகப் போறாரு. வாங்க போகலாம். அங்கே போய் வச்சுக்கிறேன் மிச்ச கச்சேரியை…” என்று விட்டு நகர.
“ஹேய்! மகி எல்லாம் உன்னால தான்டி… இனி நாம ஷீரடிக்கு போற வரைக்கும் வச்சு செய்யப் போறாங்க.”என்று புலம்பியவாறே தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு ரேகா நகர.
“அது கொஞ்ச நேரம் அவ எங்கக் கூட இருக்கட்டுமே சார்.” என்று கெஞ்சலாக அனுமதி வினவியவள், “இவர் என்ன டிடிஆரா? எதுக்கு ரூல்ஸ் போடுறார்?”என்று மகிழினியின் காதில் முணுமுணுத்தார்.
“ஷ்! சும்மா இரு குரங்கே!” என்று தோழியை அடக்கப் பார்த்தாள் மகிழினி.
“ மேம்! நான் டி டி ஆர் கிடையாது தான். ஆனால் அவர் இப்ப வந்து செக் பண்ணுவாரு அதுவரைக்கும் நீங்க உங்க ப்ளேஸ்ல உட்காருங்க. அப்படியே நானும் லிஸ்ட்ல உள்ளவங்க எல்லாரும் வந்திருக்காங்கன்னு செக் பண்ணனும். அதுக்கு அப்புறம் உங்க விருப்பம் போல இருக்கலாம். இப்போ எங்களுக்கு கொஞ்சம் கோஃஆப்ரேட் பண்ணுங்க.” என்று தன்மையாகக் கூறினான்.
“சரி.”என தலையாட்டிய ரேகா, மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
மகிழினியும் தன்னுடைய இருக்கைக்கு செல்ல.
“ஹலோ மேடம்! இந்த ட்ரெயின் பிடிக்கிறதுக்கு தான் அர்த்த ராத்திரியில ஓடி வந்தீங்களா?” என்று அருகே நின்றிருந்த தருண் மகிழினியைப் பார்த்து வினவினான்.
“ஹலோ! அர்த்தராத்திரியில ஒன்னும் ஓடி வரலை. அதிகாலைப் பொழுது தான் தெரிஞ்சுக்கோங்க.” என்றவள், “ ஹான்! எனன சொன்னீங்க? அது வந்து நான் இல்லை. அது யாரோ?” என்று தடுமாற.
“ ஹலோ மேம்! அதான் உண்மையை உளறிட்டீங்களே. அன்னைக்கு முக்காடு அவிழ்ந்து முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிடுச்சு. இருந்தாலும் சின்ன சந்தேகம் இருந்தது. அதையும் உண்மையை உளறி கிளியர் பண்ணீட்டீங்க. ஒரு சின்ன அட்வைஸ். எந்த பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேராக பேஸ் பண்ணுங்க.”என்று அட்வைஸ் பண்ண.
‘ அடக்கடவுளே! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே.’ என்று மனதிற்குள் நினைத்தவள் அமைதியாக நின்றாள்.
“உங்களுக்கு உங்க வீட்ல உள்ளவங்கக் கிட்ட பேச பயமா இருந்தா சொல்லுங்க, நான் பேசி புரிய வைக்கிறேன்.” என்று தருண் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க.
பொறுமையிழந்த மகிழினி வாயை திறப்பதற்குள்,
“தருண்! எதுக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடுற? நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.” என்று நண்பனைக் கண்டித்தான் சித்தார்த்.
“அது இல்லை மச்சி!” என்று தருண் ஏதோ கூற வர.
“ப்ச்! உனக்கு வந்த வேலையைப் பார்க்குற ஐடியா இருக்கா? இல்லையா?” என்று நண்பனைப் பார்த்து முறைத்தான் சித்தார்த்.
“டேய் நீ சொன்னாதானடா நான் செய்யறதுக்கு…” என்று முணுமுணுத்தான் தருண்.
“இங்கே பாரு மச்சி! சொல்லி, சொல்லி செய்யுறதுக்குத் தான் இரண்டு அசிஸ்டன்ட் இருக்காங்களே. என்ன செய்யணும்னு நீயா கேட்டு கத்துக்கணும். சுரேஷும், பிரபுவும் நம்ம லிஸ்ட்ல உள்ளவங்க எல்லாரும் கரெக்ட்டா வந்துட்டாங்களான்னு செக் பண்ண போயிருக்காங்க. நீ போய் அவங்க வேலையை ஒழுங்கா செய்யுறாங்களான்னு கவனி. அப்போ தான் நெக்ஸ்ட் டைம் நீ தனியா மேனேஜ் பண்ணலாம். நானும் ஃபேமிலியை கவனிக்கலாம். வொர்க்ல டெடிக்கேட்டா இருந்த ஒரே காரணத்துனால ஈஸியா ஒருத்தி என்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டா.” என்று மகிழினியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கூறினான்.
“சரி மச்சி! நீ ஃபீல் பண்ணாதே. நான் பார்த்துக்கிறேன். ஒரு முப்பத்தி அஞ்சு பேரே டீல் பண்றது ஒரு வேலையே கிடையாது. அசால்டா பண்ணிடுவேன். நீ போய் உட்காரு.” என்றான் தருண்.
“ஐயோ மச்சி! நான் ஃபீல் பண்ற அளவுக்கு அவங்க வொர்த் இல்லை. அதே போல எல்லோரும் நினைக்குறது போல இது ஈஸியான வேலையும் இல்லை. போகப்போகப் புரியும்.” என்ற சித்தார்த் கதவுக்கருகே சென்று வேடிக்கைப் பார்த்தான்.
மகிழினியோ சித்தார்த் பேசியதைக் கேட்டு கொதித்து போய் அங்கிருந்து நகர்ந்து அவளது இருக்கைக்கு சென்றாள். ‘ எவ்வளவு கொழுப்பு? இருக்கட்டும் எப்பாவது என் கிட்ட மாட்டட்டும் வச்சுருக்கேன். பயப்புள்ள இங்கே வந்ததிலிருந்து கோபப்படாமல் இருக்குதேன்னு பார்த்தா, பாவம் அதுக் கூட வந்த தேவாங்குக் கிட்ட கோபத்தை காண்பிக்குது.’ என்று மனதிற்குள் சித்தார்த்தை வறுத்தெடுத்தவள், தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து ஜன்னல் ஸ்கீரினை விலக்கி வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
இயற்கை எழில் கொஞ்ச, இவ்வளவு நேரம் இருந்த கோபம் குறைந்து மனது லேசானது.
****************
தருண், சித்தார்த்தின் கோபத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மனதிற்குள், ‘சும்மா பயங்காட்டுறான். ராஸ்கல்!’ என்று நண்பனைத் திட்டிக் கொண்டே, அவன் சொன்ன வேலையை செய்ய சென்றான்.
சற்று நேரத்திலே தலையை பிடித்துக் கொண்டு ஓடி வந்தான் தருண்.
தலைத் தெறிக்க ஓடி வருவதற்கு காரணம், அவர்களோடு பயணித்த குடும்பம் தான். அம்மா, பையன், மருமகள் என்று மூவர் வந்திருக்க. மூவருக்குமே, மிடில், அப்பர் பர்த் என ஒதுக்கப்பட்டிருந்தது. வயதான அம்மாவால் மேல ஏற முடியாது என்று பிரச்சனை பண்ணிக் கொண்டிருந்தனர்
வேறு இடத்தில் லோயர் பெர்த் அரேஞ்ச் செய்து தருவதாகக் தருண் எவ்வளவோ சொல்லியும்,அவர்களை சமாளிக்க முடியவில்லை.
“என்னங்க நினைச்சிட்டு இருக்கீங்க? எங்க அத்தை சுகர் பேஷண்ட். அவங்களை தனியா எப்படி விடுறது.” என்று அந்த பெண் எகிற.
“பக்கத்துலேயே அரேஞ்ச் செய்து தர்றேன். கொஞ்சம் பொறுமையா இருங்க.” என்றான் தருண்.
“என்ன பொறுமையா இருக்குறது? வயசானவங்களுக்கு டிக்கெட் பதிவு செய்யும் போதே லோயர் பெர்த்தா பார்த்து செய்ய வேண்டாமா? என்ன தான் ட்ராவல் ஏஜென்சி நடத்துறீங்களோ? முதல்ல எங்கே அந்த சித்தார்த் சார்? அவரை வரச் சொல்லுங்க” என்று அந்தப் பெண் படபடக்க.
“இதுக்கே பயந்தா எப்படி மச்சி? இது வெறும் ட்ரெய்லர் தான். இன்னும் மெயின் பிக்சர் இருக்கு. நாம சமாளிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. வா போகலாம்.” என்ற சித்தார்த் கைப்பிடியாக நண்பனை இழுத்து சென்றான்.
தான் அமர்ந்திருந்த இடத்திற்கு பின்புறம் நடந்த வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த மகிழினி, ‘இந்த லேடி சும்மா இல்லாமல் மிலிட்டரியை வரச் சொல்லியிருக்கு. சும்மாவே பேச்சுலயும், பார்வையிலும் அனல் தெறிக்கும். இந்த அம்மா வேற, மிலிட்டரியோட தொழிலையே தாக்குது. என்ன நடக்கப் போகுதோ?’ என்று மனதிற்குள் எண்ணினாள்.
அவளது எண்ணத்தின் நாயகனோ, புன்னகை மன்னனாக அவளைத் தாண்டி சென்றான்.
அவனது முகத்தை பார்த்து ஸ்தம்பித்து போயிருந்தாள். அவளுக்கு பின்னே நடந்த பேச்சுவார்த்தையில் நிகழ்வுக்கு வந்தவள், தலை உலுக்கிக் கொண்டு அவர்களது பேச்சில் கவனம் வைத்தாள்.
“சாரி பார் த இன்கன்வியன்ஸ் மேம்.” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைத்தான்.
“சாரி கேட்டா எல்லாம் சரியாகிடுமா? எங்க அத்தைக்கு மேல ஏற முடியாது. இப்போ அவங்களுக்கு பதில் சொல்லுங்க.” என்றவளின் கோபம் சற்று குறைந்து தான் இருந்தது.
“இருங்க மேம். நான் எங்கே லோயர் பெர்த் இருக்குன்னு பார்த்து ஏற்பாடு பண்ணுறேன்.”
“வயசானவங்களை எப்படி தனியா விடுறது?”
“பக்கத்துலேயே அரேஞ்ச் பண்ணுறேன். அப்படியே இல்லைன்னா என்ன? நான் பார்த்துக்கிறேன். என்னை நம்பலாம்.”என்று சித்தார்த் புன்னகைக்க.
“விடு சுதா! லோயர் பெர்த் கிடைச்சாலே போதும். அதுவும் இல்லாமல் அந்தத் தம்பி தான் பார்த்துக்கிறேனு சொலலுதே.”என்றார் அந்த வயதான பெண்மணி.
“இதோ ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க.”என்றான் சித்தார்த்.
“சரி!” என்று தலையாட்டினாள் அந்தப்பெண்.
சித்தார்த் தருணைப் பார்க்க.
“எப்ருறா?” என்று வினவினான் தருண்.
“சின்ன லாஜிக் தான். நீ அந்த பையன் கிட்ட பேசிட்டு இருந்த. அங்க தன்னுடைய மாமியாரைப் பார்த்துக்க முடியாமல் டெனஷனாக இருந்தது அந்தப் பொண்ணு தான். அதான் அந்தப் பொண்ணுக் கிட்ட மன்னிப்பு கேட்டேன். அவங்க கோபம் குறைஞ்சது. நிதர்சனத்தை புரிஞ்சுக்கிட்டாங்க.” என்றுக் கூறி புன்னகைத்தான் சித்தார்த்.
“அடங்கேப்பா! நீ புத்திசாலி தான்.”என்று வாயைப் பிளந்தான் தருண்.
“புத்திசாலித்தனம் இல்லை. இது என்னுடைய சாமார்த்தியம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. போகப் போக உனக்கே புரியும். இப்போ அவங்களுக்கு இந்த சீட் பக்கத்திலே இடம் கிடைக்குதான்னு பாரு. இல்லைன்னா வேற இடத்தில் தேடு. சமாளிச்சுக்கலாம்.” என்றான்.
“ஈஸியா ஊர் சுத்துற வேலைன்னு நினைச்சேன். அது ரொம்ப தப்புன்னு புரியுது.”என்றான் தருண்.
மகிழினியும் மனதிற்குள் அதைத்தான் நினைத்தாள்.
தருண் கூறியதைக் கேட்டதும் சித்தார்த்தின் முகம் மாறியது.
‘என் பர்த்டேக்கு என் கூட தான் இருக்கலை. அட்லிஸ்ட் ஒரு வாழ்த்தாவது சொன்னீங்களா?
“ஹனி! வொர்க் டென்ஷன்ல மறந்துட்டேன். ரியலி சாரி!” என்று தவிப்புடன் கூறினான்.
அவனது தவிப்பு அவளது கண்களை எட்டவில்லை.
“ஐயோடா! பார்க்குறது ஜாலியா ஊர் சுத்துற வேலை. இதுல வொர்க் டென்ஷன்னு சொல்லாதீங்க.” என்று படபடத்த அவனின் மனைவியின் முகமே வந்து போனது.