லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 11
மலரழகியை தீரன் அறைந்ததில் அங்கிருந்த மற்ற இருவரும் அதிர்ந்து போனார்கள்.. மலரழகிக்கோ கன்னம் அப்படி ஒரு எரிச்சல் எடுத்தது.. பின்னே.. ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு என்பது போல் அது என்ன வெறும் கையா.. ஏதோ உலக்கையால் அடித்தது போல் வலித்தது அவளுக்கு..
“ஏய் ஏதோ சின்ன பொண்ணுன்னு நானும் கம்முனு கெடந்தா ரொம்ப ஓவரா தான் துள்ளிக்கினு கீற? உனக்கெல்லாம் அறிவே கிடையாதா? உயிரை விடறேன்னு அவ்ளோ அசால்டா சொல்லிக்கினியே.. உன் வாய்க்கையில நான் மட்டும்தானா கீறேன்.. உன்னை பெத்தவங்க.. வளர்த்து ஆளாக்குனவங்க.. உனக்காக கவல படுற மனுஸங்க இவங்க எல்லாரையும் பத்தி எல்லாம் யோசிக்க மாட்டியா? இதோ உன் தோஸ்து அது உன் மேல எம்மாம் பிரியத்தோட உன்னோட ஜாலியா இருக்கணும்னு வந்து கீது. சுத்தி இருக்கிற யாரைப் பத்தியுமே யோசிக்காம ஏதோ ஒரு உதாருக்காக உயிரை வுடுறேன்னு சொல்லிக்கினு கீறியே.. உனுக்கு கொஞ்சமாவது ஹார்ட்டுன்னு ஒன்னு கீதா? அப்படியே இருந்தாக்க உன் மேல இம்மாம் அக்கறை வச்சிருக்கவங்கள எல்லாம் நீ நென்ச்சு பார்த்திருப்பே.. நேத்து பார்த்த எனுக்காக அத்தினி பேரையும்.. ஒதுக்கீட்டு உயிரை வுடறேன்னு சொல்லின்னுக்கற? படிக்கிற வயசுல இது இன்னாடி வேலை..? வெக்கமா இல்ல உனுக்கு..?”
அவன் சரமாரியாக வைது தீர்க்க அவள் கண்களிலோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.. அதே சமயம் அந்த விழிகளில் வைராக்கியமும் தெரிந்தது அவனுக்கு.. இந்தப் பெண் என்ன செய்தாலும் தன் சொல் பேச்சு கேட்க மாட்டாள் என்று முடிவாக தெரிந்தது தீரனுக்கு அவளின் தீர்க்கமான பார்வையில் இருந்தே..
“ஏம்மா அந்த புள்ள தான் சொல்ச்சுன்னா நீயும் வந்து அவளுக்கு தற்கொலை பண்ணிக்க ஹெல்ப் பண்ணிக்கினிருக்கியா? உனக்கு தெரிய வோணாம்..? இது எவ்வளவு பெரிய பிரச்சனைல போய் முடியும்னு..” என்று மலரின் தோழியை கேட்க “சார்.. நான் எவ்வளவோ சொன்னேன்.. இவ தான் கேட்கவே இல்லை.. ஐ அம் சாரி சார்.. ஏய்.. வாடி போலாம்..”
அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த கடற்கரையை விட்டு வெளியேற போனாள் உமா..
“இங்க பாருங்க.. நீங்க அடிச்சதுனாலயும் பேசுனதுனாலயும் நான் அமைதியா போயிட்டதா நினைச்சு சந்தோஷ படாதீங்க… இனிமே தினமும் வருவேன்.. உங்ககிட்ட வந்து என் காதலை சொல்லுவேன்.. எனக்கு பதில் சொல்லியே ஆகணும் நீங்க..”
அவளை தரதரவென்று அவள் தோழி இழுத்துப் போக அவனை திரும்பி பார்த்தது சத்தமாக சொல்லிக் கொண்டே போனாள் மலரழகி..
தீரன் புருவத்தை நீவி விட்டபடி “டேய்.. இந்தரூ.. இது இன்னாடா புது பிரச்சனை? இந்த பொண்ணு ஏன்டா இப்படி ரவுசு பண்ணுது? ஒரே பேஜாரா இருக்குதுடா எனக்கு..”
“அண்ணா கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாயிடும்.. ஆனா நான் ஒரு விஷயம் சொன்னா கோவிச்சுக்காம கேக்குறீங்களா? அந்த பொண்ணு சொல்றதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கண்ணா.. பாவம்ணா அவ.. சின்ன பொண்ணுங்கறதுக்காக அவ உங்களை விரும்பறது சரி கிடையாதுன்னு நீங்க எப்படிண்ணா சொல்றீங்க? கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணா..”
முதல்முறையாக தம்பியை தீவிரமாக முறைத்தான் தீரன்.. “அப்படியே ஒன்ன வுட்டேன்னு வையி.. செவுளு கிவுளு எல்லாம் திரும்பிக்கும்.. தா பாரு நீ ஒன்னும் அவளுக்கு ஒத்தி ஊத வோணாம்.. அவ பெரிய பொண்ணா சின்ன பொண்ணா இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டிரே இல்லை.. நான் ஆஞ்சநேயர் சாமி கும்பிடுறவேன்.. என் மனசுல எப்பவும் அனுமார் மட்டும்தான் இருப்பாரு.. வேற யாருக்கும் அந்த ப்ளேஸை குடுக்கமாட்டான் இந்த தீரன்..”
“ஓ.. அப்ப எனக்கு கூட அங்க இடம் கிடையாதா?”
அவன் வேண்டும் என்றே சீண்டுவது போல் கேட்க “டேய்.. ஆஞ்சிநேயருக்கு என் ஹார்ல மட்டும்தான்டா இடம் குட்த்துகுறேன்.. இந்த தீரன் மேலருந்து கீய வரிக்கும் சப்ஜாடா உனக்கு தான் டா.. இந்தரு கண்ணூ..
அவன் சொன்னதை கேட்ட இந்தர் உணர்ச்சிவசப்பட்டு தன் அண்ணனை இறுக தழுவி கொண்டான்..
இங்கே பார்கவி வீட்டுக்கு வந்த மதியழகியிடம் பார்கவி காபி கோப்பையை கையில் கொடுத்துவிட்டு “இப்ப சொல்லுடி.. என்னதான் பிரச்சனையாம் அந்த இந்தருக்கு..?”
“அதே பிரச்சினை தாண்டி. அவன் என்னை தான் லவ் பண்றானாம்.. என்னை தான் கல்யாணம் கட்டிக்குவானாம்.. வேணாம்னு எவ்வளவோ பேசி பாத்துட்டேன்.. வழிக்கே வர மாட்டேங்குறான்.. அவன் பிடிவாதத்திலேயே நிற்கிறான்..”
“ஓ.. அதுக்காக தான் அந்த சேகர் சொன்னதை கேட்டு நீ இன்னொருத்தனை லவ் பண்றேன்னு அவன் கிட்ட உளறி வச்சியாக்கும்..”
“வேற என்னடி பண்ண சொல்ற? எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்கிறான்..? எனக்கு வேற வழி தெரியல.. சரி.. அப்படி சொன்னாலாவது லவ் பண்ணற எண்ணத்தை மாத்திக்குவான்னு நெனைச்சேன்.. ஆனா எல்லாமே தலகீழ ஆயிடுச்சு.. இன்னிக்கி நீ மட்டும் வந்து உண்மையை சொல்லலன்னா பிரின்ஸ்பல் என்னை தப்பா தாண்டி நினைச்சு இருப்பாங்க..”
“அதுவும் சரிதான்.. உனக்கு இதுக்கு ஒரு ஐடியா சொல்றேன்.. இப்ப எப்படியும் அந்த இந்தர் கிட்ட நீ அடுத்த சண்டே உன் ஆளோட டேட்டுக்கு போறதா சொல்லி இருக்கே இல்ல..? அப்போ அதுக்குள்ள உனக்கு ஒரு லவ்வர் வரணும்..”
அவள் சொல்லவும் அவளை தீவிரமாய் முறைத்தாள் மதி..
“என்னடி.. என்னை வச்சு காமெடி பண்றியா?”
மதி அவளைப் பார்த்து கண்ணை சுருக்கி முறைத்தபடி கேட்க “வேற என்னடி பண்ண முடியும்? நீ தானே அவன் கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்க..? உனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு.. ஒன்னு ஒரு வாரத்துக்குள்ள யாராவது ஒரு நல்ல ஆளா பார்த்து லவ் பண்ணு.. இல்ல பேசாம உன் ஆளா நடிக்கிறதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிடு..”
“என்னது நடிக்கறதா? நானா? விளையாடுறியா நீ? அது எப்படி ஒருத்தர் லவ்வரா நடிக்க முடியும்..? அதுக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி.. அதெல்லாம் கஷ்டம் டி.. முன்ன பின்ன யாருமே தெரியாத ஒரு ஆளை எப்படி என் லவ்வர்னு சொல்லிக்கிட்டு.. அதெல்லாம் சரிப்பட்டு வராது கவி..”
“ஓ.. அப்படியா? அப்போ யாராவது ஒரு நல்லவரா.. உனக்கு ஏத்தவரா பார்த்து ஒரு வாரத்தில லவ் பண்ணிடு..”
“ஏய்.. நீ இப்ப என்கிட்ட அடி தான்டி வாங்க போற.. ஏதாவது நடக்கிற காரியமா சொல்றியா? வேற ஏதாவது யோசி டி..”
“இது ரெண்டையும் விட்டா ஒரே ஒரு வழி தான் இருக்கு..”
பார்கவி சொன்னதும் விழிகளை விரித்து “என்னடி..? சொல்லு சொல்லு..” என்று மதி ஆர்வமாய் கேட்டாள்..
“பேசாம அந்த இந்தர் பயலையே நீ லவ் பண்ணிடு..”
இன்னும் தலையில் ஓங்கி தட்டியவள் “ஐடியா கொடுன்னா என்னை மாட்டிவிட பார்க்கிறயா நீ..?” கோவமாய் கேட்டாள்..
“பின்ன என்னடி..? நீதான் எந்த ஐடியா கொடுத்தாலும் கட்டையை போடுறியே..?!”
“அதுக்குன்னு.. நடிப்பெல்லாம் எனக்கு செட் ஆகாதுடி.. அதெல்லாம் சரிபட்டு வராது.. நீ வேற ஏதாவது சொல்லு..”
அவசரமாய் மதி மறுக்க “என்னடி சரிப்பட்டு வராது..? நம்ம காலேஜ் டிராமால பசங்களும் பொண்ணுங்களும் சும்மா லவ்வர்ஸா ஆக்ட் பண்றது இல்ல..? அதே மாதிரி தாண்டி இதுவும்.. இந்தர் வந்து பார்க்கும்போது ஒரு ஒன் ஹவர் நீ அந்த ஆள் கூட கொஞ்சம் க்ளோசா இருக்குற மாதிரி நடிச்சா போதும்.. ஒன்னும் இல்ல.. சும்மா கையை பிடிச்சுக்கிட்டு கொஞ்சம் ஆசையா பேசுற மாதிரி நடிச்சா போதும்.. அதுக்கு அப்புறம் இந்தர் இந்த ஜென்மத்துக்கு உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டான்..”
“அடியே.. அவன் என்னோட லவ்வர் யாருன்னு பார்த்து அவரை மீட் பண்ணி பேச போறேன்னு வேற சொல்றான் டி.. அப்படி மீட் பண்ணும் போது அது இன்னும் பிரச்சனையாகாது..? அது மட்டும் சொதப்பிச்சு மொத்தமா அவன் கிட்ட மாட்டிப்பேன்டி நான்..”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. யார் உன்னோட நடிக்க வர்றாரோ அவர் கிட்ட இந்தர் கிட்ட என்ன என்ன சொல்லணும்.. எப்படி பேசணும்.. அப்படிங்கறதை எல்லாம் முன்னாடியே சொல்லிட்டா.. அவர் அப்படியே பேசிட்டு போறாரு.. அந்த இந்தர் மட்டும் அவர் பேசறதை நம்பிட்டான்னா உனக்கு ஒரு தொல்லை விட்டுப் போகும் இல்ல..?”
சற்றே யோசித்தவன் “சரி.. நீ சொல்றதும் சரிதான்… ஆனா எனக்கு என்னவோ பயமா இருக்குடி.. தலைவலி போய் திருகு வலி வந்த மாதிரி இந்த பிரச்சனை போய் வேற ஏதாவது பிரச்சனை வந்திட போகுதுன்னு..”
“அதெல்லாம் எதுவும் வராது.. உனக்கு தான் தெரியும் இல்ல..? என் ஹஸ்பண்ட் சினிமால அசிஸ்டன்ட் டைரெக்ட்டரா இருக்காரு.. அவர் சினிமாக்கு காஸ்டிங்க் ஏற்பாடு பண்றவரு தான்.. அவர் கிட்ட சொன்னா உன்னோட நடிக்க யாராவது ஒரு ஆளை கூட்டிட்டு வந்துருவாரு.. நம்ம அந்த ஆள் கிட்ட பேசி கரெக்ட் பண்ணிக்கலாம்.. என்ன ஓகேவா?”
“என்ன..? கரெக்ட் பண்ணிக்கலாமா..? என்னடி.. உன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கு.. ஐயோ.. கடவுளே.. இது எங்க போய் முடிய போகுதோ தெரியலயே.. சரி.. ஏற்பாடு பண்ணு..”
“ஏற்பாடு பண்றேன்.. ஆனா இன்னைக்கு நாளைக்கு முடியாதுடி.. அவர் வெளியே ஷூட்டிங் போயிருக்காரு.. திங்கட்கிழமை தான் வருவாரு.. அன்னிக்கு சாயந்திரம் அவர் வந்த உடனே அவர் கிட்ட விஷயத்தை சொல்றேன்.. அடுத்த நாளே அவர் யாரையாவது ஆள் புடிச்சு கொடுத்துருவாரு.. அதுக்கப்புறம் மிச்சம் இருக்குற நாலு நாள்ல அவரை ட்ரெயின் பண்ணிக்கலாம்..”
“அவரை ட்ரெயின் பண்றதா? ஆக்டர் தானேடி அவரு.. நான் தான்டி ட்ரெயின் பண்ணிக்கனும்.. எனக்கெல்லாம் நடிக்கவே வராது.. நீ வேணா பாரு.. அந்த டேட்டிங் சீன்ல ஆக்ட் பண்ற நேரத்துல எனக்கு கை காலெல்லாம் உதறி எதுவும் பேச முடியாம ஏதாவது உளறி சொதப்ப போறேன்..”
“கவலைப்படாத டி.. உனக்கும் சேர்த்து டிரைனிங் கொடுத்துட்டா போச்சு.. என் வீட்டுக்காரர் கிட்ட சொன்னா அவரே உனக்கும் சேர்த்து ட்ரைனிங் கொடுத்துடுவாரு.. இப்போ ஓகேவா?”
“ஏதோ ஃபிசிகல் எக்சர்சைஸ் ட்ரைனிங் மாதிரி சாதாரணமா சொல்றே.. ஆக்டிங் டி.. சரி.. கேட்டு வை பார்க்கலாம்.. என்னதான் நடக்குதுன்னு..”
அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் ஊர் கதையெல்லாம் பேசி கொண்டு இருக்க சற்று இருட்டி விடவும் அங்கிருந்து கிளம்பினாள் மதி..
கதவை தட்டிய சத்தம் கேட்டு வாயிற்கதவைத் திறந்தார் தமிழ்வாணன்.. அங்கே சேகர் நின்று இருப்பதை பார்த்து “நீங்க..?” என்று இழுக்க “ஹலோ சார்.. நான் உங்க பொண்ணு மதியழகி வேலை செய்ற காலேஜ்ல அவங்க கூட ஒர்க் பண்ற ப்ரொஃபசர்..”
அவன் சொன்னவுடன் முகம் மலர்ந்து “ஓ அப்படியா.. ப்ளீஸ் உள்ள வாங்க.. உக்காருங்க..” என்று இருக்கையில் அமர வைத்து உபசரித்தார் அவனை..
“இப்ப மதி இல்லையே.. வெளியில அவ ஃப்ரெண்டை பார்க்க போய் இருக்கா.. ஒன் ஹவர் கழிச்சு தான் வருவா.. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா நீங்க வேணா அவளுக்கு ஃபோன் பண்ணி பேசுறீங்களா?”
“இல்ல சார்.. நான் மதியை பாக்க வரல.. உங்களை பாக்க தான் வந்தேன்..”
“என்னையா.. என்னை எதுக்கு பாக்கணும் நீங்க? நான் இதுக்கு முன்னாடி உங்களை மீட் பண்ணது கூட கிடையாதே..”
“மதி விஷயமா தான் சார் உங்களை பாக்க வந்தேன்.. உங்ககிட்ட மதியை பத்தி ஒரு சில விஷயங்கள் சொல்லணும்.. நீங்க வீட்டிலேயே இருக்கிறதால அவங்களை பத்தி எந்த விஷயமும் தெரியாம இருக்கீங்க..”
“என்ன.. விஷயம் தெரியாம இருக்கேன்..? என் பொண்ணை பத்தி ஏதாவது தப்பா பேச போறீங்கன்னா தயவு செஞ்சு இங்கிருந்து கிளம்பிடுங்க.. எனக்கு அவளை பத்தி நல்லாவே தெரியும்.. அவ எந்த தப்பும் பண்ண மாட்டா..”
“இப்படியே நீங்க நம்பிட்டு வீட்டிலேயே இருக்கீங்க.. உங்க பொண்ணு என்னன்னா காலேஜ்ல ஒரு பையன்.. வெளியில் ஒரு ஆளுன்னு.. ரெண்டு பேரை லவ் பண்றதா சொல்லி ஏமாத்திட்டு இருக்காங்க..”
“மிஸ்டர்.. மொதல்ல இங்க இருந்து வெளியே போங்க.. இதுக்கு மேல நீங்க சொல்ற எந்த வார்த்தையும் கேட்க எனக்கு பொறுமை கிடையாது..”
தன் இருக்கையை விட்டு எழுந்து வாசல் பக்கம் கையை காட்டி சேகரை விரட்டினார் தமிழ்வாணன்..
ஆனால் சேகரோ தன் முயற்சியை விடுவதாக இல்லை..
“சார் சார் உங்க கோபம் எனக்கு புரியுது.. நீங்க பெத்த பொண்ணை பத்தி தப்பா சொல்லும் போது உங்களுக்கு கோவம் வர்றது ரொம்ப நார்மல் தான்.. ஆனா நீங்க கோபப்படுறீங்கங்கறதுக்காக உங்ககிட்ட என்னால விஷயத்தை சொல்லாம இருக்க முடியல.. ஏன்னா இதை நான் உங்க பொண்ணுக்காக பண்ணல.. என் காலேஜ்ல என்கிட்ட படிக்கிற ஒரு ஸ்டூடண்டோட ஃப்யூச்சர் நல்லா இருக்கணுங்கறதுக்காக பண்றேன்.. ஒரு ஸ்டுடென்ட் உங்க பொண்ணு பின்னாடி பைத்தியமா திரியுறான்.. உங்க பொண்ணு அவனுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இருக்காங்க.. அது மட்டும் இல்லாம வெளியில இன்னொரு ஆளோடயும் பழகிட்டு இருக்காங்க.. அடுத்த வாரம் அவரோட டேட்டிங் போக போறாங்க உங்க பொண்ணு.. உங்களுக்கு தெரியுமா?”
“யோவ்.. ஏதோ ப்ரொஃபசர்ன்னு சொன்னியேன்னு மதிச்சு உள்ள விட்டா உன் இஷ்டத்துக்கு பேசிகிட்டே போறே.. முதல்ல வெளியில போயா..” என்றார் தமிழ்வாணன் அவனை கொன்று விடும் பார்வையோடு..
அவன் முதுகில் கை வைத்து வெளி பக்கமாய் அவர் பிடித்து தள்ள “சொல்ல வேண்டியது என் கடமை சொல்லிட்டேன்.. நாளைக்கு அந்தப் பையன் அந்த ஆளு உங்க பொண்ணு மூணு பேரையும் வச்சு ஊருக்குள்ள கதை பேசும்போது அவமானப்பட்டு நிற்பீங்க இல்ல? அப்ப தெரியும்.. நான் ஏன் வந்து இப்படி உங்ககிட்ட கத்தி கத்தி உங்க பொண்ணை பத்தி சொன்னேன்னு..”
அதை சொல்லி முடிப்பதற்குள் அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளி இருந்தார் தமிழ்வாணன்…
அவனோ ஒரு வில்லத்தனமான கோணல் சிரிப்புடன் “என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னேல..? அடுத்த வாரம் யாரோ ஒருத்தனை டேட் பண்ண போறேன்னு அந்த இந்தர் கிட்ட சொல்லி வச்சிருக்க இல்ல..? எப்படியும் நீ வேற யாரையும் ஒரு வாரத்துல லவ் பண்ணவும் மாட்டே.. வேற வழி இல்லாம அவன் மனசை மாத்தறதுக்காக யாராவது ஒரு ஆளை புடிச்சு நீ லவ்வர்னு அவன்கிட்ட சொல்லுவ.. ஆனா அந்த காட்சியை இந்தர் மட்டும் பார்த்தா போதாது.. உங்க அப்பாவும் பார்க்கணும்.. அப்பதான் எனக்கு நடந்த அவமானத்துக்கு ஈடாக உனக்கும் வலி கிடைக்கும்.. உன்னை எவ்வளவு கெஞ்சினேன் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி.. உன் கண்ணுக்கெல்லாம் நான் தெரியவே இல்லல்ல? இப்ப தெரிவேன்டி..”
மதியை எண்ணி உருமினான் சேகர்..
பன்னென்டு வயசில்
மனசில் பட்டாம்பூச்சி
பறக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
கண்ணை
பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன்
பேர் லவ் இல்லே
கிழிஞ்ச பாயில்
கவுந்து படுக்கும்போது
உன் கனவிலே
கிளியோபட்ரா
வந்தா லவ் இல்லே
ஜவுளிக்கடை
பொம்மைய பாக்கும்போது
உன் புத்திக்குள்ள
கவுளி கத்தும்
அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசிர
கொடுக்கணும்
எது நிஜம்
புரிஞ்சி நடக்கணும்
காதல்
ஒன்னியும் கடவுள்
இல்லையடா
இந்த இழவு
எல்லாம் ஹார்மோன்
செய்யும்
கலகம் தானடா..!!
தொடரும்..