லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 14
தீரன் பேசிய விதத்தை கேட்டு மதியழகி முகம் போன போக்கை பார்த்ததிலேயே பார்கவிக்கு அவள் நிலை புரிந்தது..
ஆனாலும் அப்போதைக்கு தீரனை சமாளிக்க முனைந்தவள் “அண்ணா.. உங்களை பத்தி தப்பா எதுவும் நினைச்சு இருக்க மாட்டாண்ணா அவ.. அவளுக்கு ஏதோ அவளால நடிக்க முடியுமான்னு சந்தேகம் இருந்திருக்கும்.. அதனால அப்படி சொல்லி இருப்பா.. நீங்க ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க.. நான் அவளை கூட்டிட்டு போய் பேசி சரி பண்ணி கூட்டிட்டு வரேன்..”
தீரனிடம் சமாதானமாய் நான்கு வார்த்தைகள் சொல்லிவிட்டு மதியின் கையைப் பிடித்து எழுப்பி அவளை உள்ளே இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்றாள் பார்கவி..
“ஏய் பாண்டி.. இதெல்லாம் சரிப்பட்டு வருமா? அந்த பொண்ணு ஏதோ என்னை பத்தி கலீஜா நினைச்சுட்டு இருக்கு போல.. நம்ம பாஷை தான் இப்படி.. ஆனா நம்ம ஆளு ரொம்ப ரீஜெண்டுன்னு நீ அந்த புள்ளை கிட்ட சொல்லிக்கலியா..?”
“எல்லாம் சொல்லி இருக்கேன்.. பார்கவிக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும்.. ஆனா அவ மதி சிஸ்டர் கிட்ட சொல்லல போல.. அந்த பொண்ணு நீ பேச ஆரம்பிச்சப்புறம் அப்படியே ஷாக் ஆகி உட்கார்ந்துருச்சு.. பார்க்கலாம்.. திரும்பி வரும் போது என்ன சொல்லிட்டு வருதுன்னு..”
அதைக் கேட்ட பிறகு தீரனுக்கு மனதில் நிம்மதி இல்லாது போனது.. ஒருவேளை திரும்பி வரும்போது இந்த திட்டங்கள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பரிதவித்த மனதோடு இருதயம் விட்டுவிட்டு துடிக்க அவர்கள் சென்ற அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் தீரன்..
இங்கே அறைக்குள் வந்த பார்கவி “ஏய் மதி.. என்னடி திடீர்னு இப்படி சொல்ற..? உன்னை நம்பி அவர் வேற அவர் பின்னாடி சுத்துற பெண்ணை கழட்டி விடுறதுக்கு பிளான் பண்ணி வந்துட்டாரு.. இப்ப முடியாதுன்னு சொன்னேன்னா உனக்கு மட்டும் இல்ல.. அவருக்கும் கஷ்டம் தான்.. இப்ப எதுக்கு வேணாங்குற..?”
“ஏய் பவி.. அவருக்கும் எனக்கும் எப்படிடி ஒத்து போகும்? அவர் பேசுற பாஷையை பார்த்த இல்ல? சத்தியமா எனக்கு அதுல பாதி வார்த்தைங்க புரியவே இல்லை.. வேணாம்டி.. ஒரு மாதிரி ரௌடிங்க பேசற மாதிரி பேசறாருடி.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. சொன்னா கேளு பவி.. நான் பஸ்ல போகும்போது டிக்கெட் வாங்க கூட இந்த மாதிரி பேசுற ஆளுங்க கிட்ட கேக்க மாட்டேன்.. பேச்சே இப்படி இருக்குதுன்னா ஆள் எப்படி டீசண்டா இருப்பாரு..? வேணாம் பவி.. எனக்கு ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு..”
“ஏய்.. லூசு மாதிரி உளறாதேடி.. அவர் சின்ன வயசிலருந்தே அந்த ஷூட்டிங் ஸ்பாட்லயே எல்லா விதமான ஆளுகளோடயும் கலந்து பழகிக்கிட்டு எப்போவும் அவங்களோடயே இருக்கறதுனால அவங்க பேசற பாஷை அவருக்கு ஒட்டிக்கிச்சு.. அதான் இப்படி பேசறாரு.. ஆனா அவரு ரொம்ப நல்ல குடும்பத்தில இருந்து.. அதுவும் நம்மள மாதிரி ஒரு டீசன்ட்டான குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து வந்தவரு தான்டி.. அவர் தம்பி இன்ஜினியரிங் காலேஜ்ல தர்ட் இயர் இன்ஜினியரிங் படிக்கிறான்.. இவர்தான் அவனை படிக்க வைக்கிறாரு.. ரொம்ப பொறுப்பான மனுஷன் டி.. அது மட்டும் இல்லாம அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தன்.. தன் வாழ்க்கையில பொண்ணுங்களுக்கு இடமே கிடையாதுன்னு சொல்லிட்டு இருக்குறவரு.. எந்த காரணத்தை கொண்டும் உன் கிட்ட தப்பா நடந்துக்க மாட்டாரு.. நீ அவரோட தைரியமா நடிக்கலாம்.. என்ன.. வாயில வர பாஷை தான் இப்படி வரும்.. அதை மட்டும் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.. ஆனா மத்தபடி வேற எந்த தொந்தரவும் உனக்கு இருக்காது.. அவரை பார்த்த இல்ல.. ஹீரோ கணக்கா எப்படி இருக்கிறார்னு.. அவருக்காக எத்தனை பொண்ணுங்க அவரோட ஒரு பார்வை கிடைக்காதான்னு காத்துகிட்டு இருக்கு தெரியுமா? அப்படிப்பட்டவர் உன்னோட நடிக்கிறேன்னு வந்து இருக்காரு.. அதுக்கு ஒரே காரணம் அவரை ஒரு பொண்ணு தொந்தரவு பண்ணுது.. அந்த பொண்ணை கழட்டி விடணுன்றது தான்.. நீ 100% இல்ல 150% அவரை நம்பி நடிக்கலாம்.. அதுக்கு நான் கியாரண்டி.. என் பாண்டி கூட எப்பயாவது தடுமாறிடுவானோ என்னவோ எனக்கு தெரியாது.. ஆனா தீரன் அண்ணன் தடுமாறவே மாட்டார்.. அப்படி ஒரு ஜெம் ஆஃப் எ பெர்சன் டி அவரு..”
அவள் அவ்வளவு தூரம் சொல்லவும் அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உண்டானது மதிக்கு.. ஆனாலும் அவனை பார்க்கும் போதே ஏதோ ஒரு கலவையான உணர்வு அவளுக்குள் தோன்றுவது அவளுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தையே ஏற்படுத்தியது..
“இல்லடி.. எனக்கு பயம்னு கூட சொல்ல முடியாது.. அவர் நல்லவர் தான்.. ஆனா அவரை பார்க்கும்போதே எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்குடி.. அவரோட நடிச்சா ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவேனோனு பயமா இருக்கு.. நிச்சயமா என்னால அவரோட சாதாரணமா நடிக்க முடியும்னு தோணலை… எதையாவது உளறி கொட்டுனா அதோட அவருக்கும் பிரச்சனையாகிடும்.. அதுக்கு தான் யோசிக்கிறேன்..”
“இங்க பாரு.. அது.. இப்பதானே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. அதனால கொஞ்சம் அன் ஈஸியா இருக்குமா இருக்கும்.. அங்க ஒரு நாள் தான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க போறீங்க.. அதுக்கப்புறம் அவங்க தொல்லை விட்டு போய்டும்.. அப்படியே இல்லனாலும் அதுக்கப்புறம் இன்னும் ஒரு ரெண்டு மூணு தடவை மீட் பண்ண வேண்டியதா இருக்கலாம்.. அதுக்கப்புறம் நீ அவரை பார்க்க போறது கூட கிடையாது.. இந்த நாலு நாள் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா நடிக்கறதுக்கு ப்ராக்டிஸ் பண்ண போறீங்க.. அப்போ ரெண்டு பேரும் கம்ஃபர்டபுள் ஆயிடுவீங்கடி.. இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு சொல்லிக்கிட்டு இருக்காத.. இவ்வளவு தூரம் வந்தாச்சு.. இனிமே தைரியமா செய்ய வேண்டியதை செஞ்சு அந்த இந்தர் பயலை கொஞ்சம் அடக்கி வை..”
“சரிடி.. நான் ட்ரை பண்றேன்.. ஆனா ஒன்னு.. சனிக்கிழமைக்குள்ள என்னால சரியா நடிக்க முடியலன்னா நம்ம இதை டிராப் பண்ணிடலாம்.. அங்க போய் ஏதாவது சொதப்பினா கஷ்டமாயிடும்.. அட்லீஸ்ட் நான் இல்லனா அவர் வேற ஏதாவது பொண்ணை வச்சு நடிச்சு அந்த சின்ன பொண்ணை அட்லீஸ்ட் டைவர்ட் பண்ண முடியும் இல்ல..”
அவள் சொன்னதை கேட்ட பார்கவி “ஏய்.. நீயாடி இப்படி பேசுற? எந்த நேரத்திலயும் பாசிட்டிவா பேசுற நீ ஏண்டி இந்த விஷயத்துல மட்டும் இப்படி நெகட்டிவா பேசுற? நிச்சயமா சனிக்கிழமைக்குள்ள நீங்க ரெண்டு பேருமே நல்லா நடிப்பீங்க.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு வா..”
அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனவள் “சரவணா மதிக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வெச்சுட்டேன்.. அவளுக்கும் இந்த பிளான்ல ஓகே தான்.. ஆனா எதுவும் சொதப்பல் ஆகாம அவங்களுக்கு நல்லபடியா சொல்லிக் கொடு.. நீ நெஜமாவே நல்ல அசிஸ்டன்ட் டைரக்டர் தானே..? இப்ப நீ இவங்கள நடிக்க வைக்க போறதுல தான் நீ ஒரு நல்ல டைரக்டரா இல்லையான்னு எனக்கு தெரிய போகுது..”
“ம்ம்.. அது சரி.. ஏய் பொண்டாட்டி.. இத்தனை நாளா எவ்ளோ படத்துல அசிஸ்டென்டா இருக்குறேன்.. இப்பதான் ஒரு ப்ரொடியூசர் படம் டைரக்ட் பண்ண என்ன அப்ரோச் பண்ணி இருக்காரு.. இந்த நேரத்துல மாமனுக்கு சவாலா..? எப்படி நடிக்க வைக்கிறேன் பாருடி அவங்களை.. நிஜ லவ்வர்ஸே தோத்துடுற அளவுக்கு பெர்ஃபார்மன்ஸ் இருக்கும் பாரு….”
பாண்டி சொன்னதை கேட்டு அப்படியே அதிர்ச்சி விழி விரித்தாள் மதியழகி.. மாறாக தீரனும் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான் அவன் சொன்னதை கேட்டு..
மதியழகி தன் தோழியை தனக்கு நெருக்கமாக இழுத்து ரகசியமாக அவ “ஏய் என்னடி.. உன் புருஷன் லவ்வர்ஸ் அது இதுன்னு என்னென்னமோ சொல்லிட்டு இருக்காரு.. பாரு.. நான் அவ்வளவு நெருக்கமால்லா நடிக்க மாட்டேன்.. ஏதோ பார்த்து பேசுறது அது வரைக்கும் போதும்..”
அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்த பார்கவி “ம்ம்.. உனக்கு அது வரைக்கும் போதும்.. ஆனா உன் பின்னாடி சுத்துறானே அவனுக்கு அது போதாது.. நீ மட்டும் சரியா நடிக்கலைன்னா அவன் சந்தேகம் போகாம மறுபடியும் உன்னை தேடி வந்துக்கிட்டே இருப்பான்.. அண்ணனுக்கும் அதே நிலைமைதான்.. சொன்னா புரிஞ்சுக்கடி.. ஒரு நாள் தானே..? கொஞ்சம் கைய புடிச்சுகிட்டு ஆசையா பாக்குற மாதிரி நடிக்கிறதுல உனக்கு என்னடி பிரச்சனை? எதோ ட்ராமால நடிக்கிறோம்னு நினைச்சுக்கிட்டு முடிஞ்ச உடனே அத்தனையும் மறந்துடுடி..”
அவள் சொன்னதை கேட்டதும் மதியழகிக்கு இன்னும் படபடப்பு கூடிக் கொண்டே போனது..
இரண்டு பேருமே ஒரு மாதிரி பதட்ட நிலையில் இருக்க அவர்களை கண்ட பாண்டி “சரி.. இன்னிக்கு முதல் நாள்.. ரெண்டு பேருமே டென்ஷனா இருக்கீங்க.. அதனால இன்னைக்கு நடிக்க வேண்டாம்.. நம்ம என்னென்ன பேசணும்.. என்ன கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லணும்.. இதை மட்டும் ப்ராக்டிஸ் பண்ணி வச்சுக்கலாம்.. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என்ன பேசினாலும் ஒரே மாதிரி பேசணும்.. அது மட்டும் இல்லாம இப்போ உங்க பின்னாடி சுத்துற பையனும் பொண்ணும் ஒருவேளை மீட் பண்ணிட்டாங்கனா அவங்களுக்குள்ள பேசிக்கிட்டா கூட ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி தான் உங்க லவ் விஷயம் தெரிஞ்சு இருக்கணும்.. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் மீட் பண்றதை அவங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில தான் வந்து பார்க்க போறாங்க.. அவங்க ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு.. அதனால நம்ப என்ன பண்ண போறோம்.. எப்படி பண்ண போறோங்கறதை சரியா பிளான் பண்ணி வைக்கிறது முதல் வேலை.. அதை சரியா பண்ணிட்டோம்னா அதுக்கப்புறம் நம்ம பிளான் பண்ணதுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறது ரொம்ப ஈஸி தான்..”
அவன் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இப்போதே ஆயாசமாக இருந்தது..
“சரி.. நானே தொடங்கி வெக்கிறேன்.. முதல்ல நீங்க ரெண்டு பேரும் எங்க மீட் பண்ணீங்க..? அப்புறம் எவ்வளவு நாளா லவ் பண்றீங்க? நீங்க இப்ப என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க? உங்களுக்கு ஏன் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது? இதெல்லாம் இப்பவே நல்லா தீர்மானமா பேசி வச்சுக்கோங்க..”
“எனக்கு இதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. மதி சிஸ் ஒரு கால் சென்டர்ல வர்க் பண்றாங்க.. இப்போ நம்ம ஷூட்டிங் எடுக்கிறோமே அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு அந்த கால் சென்டர்..”
“நம்ம பில்டிங்காண்ட கீதே அதா..?”
தீரன் கேட்க அவன் ஒவ்வொரு முறை பேசும்போதும் முகத்தை சுளித்தாள் மதி.. பார்கவி பக்கம் பாவமாய் அவள் பார்த்து வைக்க அவளோ கண்களாலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி என்பது போல் கெஞ்சினாள்..
“அதே தான் தீரா.. அங்கதான் இவங்க ஈவ்னிங்ல வொர்க் பண்ணிக்கிட்டு இருக்காங்க..”
“ஆமா.. அதுக்கு நேர பார்த்தாப்புல ஒரு டீக்கடை கீது இல்ல..?”
“ஐயோ.. அது டீக்கடை இல்ல தீரா.. அது ஃபாஸ்ட்ஃபுட்..”
“அதான்.. அது ஏதோ ஒரு ஃபுட்டு.. அந்த கடையில நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கிணோம்னு சொல்லிக்கலாமே..”
“நல்ல ஐடியா தான்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ஏன் புடிச்சதுங்கறதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் தேவையில்லை.. ஏன்னா ரெண்டு பேருமே ரொம்ப அழகானவங்க தான்.. ஹீரோ ஹீரோயின் மாதிரி பக்காவா இருக்கீங்க.. அதனால ஒருத்தரோட ஒருத்தர் அழகை பாத்து பிடிச்சு போச்சுன்னு நம்ம சொல்லிக்கலாம்..”
“நெசம் தானே அது..” என்று சட்டென தீரன் வாயை விட மதி புருவம் சுருக்கி பார்க்கவும் “இல்ல இல்ல.. ரெண்டு பேருமே ஹீரோ ஹீரோயின் கணக்கா நல்லா இருக்கோம் தானேன்னு சொல்ல வந்தேன்.. நீங்க ஒன்னியும் என்னை தப்பா ஃபீல் பண்ணிக்காதீங்க..”
மதியழகிக்கோ அவன் பேசுவதை கேட்க கேட்க அவனோடு நடிக்கப்போவதை நினைத்து ஒரு மிரட்சியே உண்டானது..
“ஐயோ.. இந்த பாஷையை கேட்டாலே இந்தர் நம்ப மாட்டான் இந்த ஆளை நான் லவ் பண்ணினேன்னு.. இப்ப என்ன பண்ணறது..?”
அவள் யோசனையுடன் இருக்க பார்கவி அவள் பக்கம் திரும்பி “என்னடி.. தீவிரமா யோசிக்கிற..?” என்று கேட்க “இந்தர் நான் இந்த ஆள லவ் பண்றேன்னு நம்பவே மாட்டான்டி.. இந்த மாதிரியே இந்த ஆளு பேசிகிட்டு இருந்தா இந்தர் நிச்சயமா இவனை நான் லவ் பண்ணி இருக்க சான்சே இல்லன்னு ஒரேடியா முடிவு கட்டிருவான்..”
அவள் சொன்னதைக் கேட்டவளுக்கு அவள் சொன்னதிலும் நியாயம் இருப்பதாக பட்டது..
“சரவணா.. மதி ஒரு விஷயம் சொல்றா.. எனக்கும் அது கரெக்ட்னு தான் படுது.. அண்ணன் கொஞ்சம் மெட்ராஸ் பாஷையில பேசுறாரே.. அப்படியே அவரு அன்னைக்கும் பேசினாருன்னா மதி இவரை லவ் பண்ணி இருப்பாருன்னு என்னாலயே நம்ப முடியாது.. அப்புறம் அந்த பையன் எப்படி நம்புவான்..? நம்ப சும்மா அவனை கழிச்சு கட்டறதுக்காக பொய் சொல்றோன்னு தான் நினைப்பான்.. இது கொஞ்சம் சரியா வருமா..?”
பார்கவி சந்தேகமாக கேட்க “அவ்வளவு தானே? இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. விடு.. தீரா.. உனக்கு என்ன சாதாரண தமிழ்ல பேச வராதா? நீ வழக்கமா காலையில சாமிக்கு ஒருஸமந்திரம் சொல்லுவியே அதை சொல்லு.. அதுக்கப்புறம் இவங்க இப்படியே பேசிகிட்டு இருக்காங்களான்னு நான் பார்க்கிறேன்..”
அவனும் அஞ்சிலே ஒன்றை தாவி என்று ஆஞ்சநேயர் பற்றிய துதி பாடலை பாட ஆரம்பிக்க அப்படியே மெய்மறந்து கேட்டிருந்தாள் மதியழகி..
அவன் பாடி முடித்ததும் பாண்டி பார்கவி பக்கம் திரும்பி “தமிழ் எவ்வளவு சுத்தமா வருது பாத்தியா அவனுக்கு? அவன் நெனச்சா நல்லாவே தமிழ் பேச முடியும் அவனால.. இது அவனுக்கு சுலபமாக வர்றதனால இப்படி பேசிகிட்டு இருக்கான்.. நடிப்புக்காக இப்படி தான் பேசணும்னு சொல்லி கொடுத்தா அவன் அந்த டயலாக்கை நம்ம சொல்ற படியே பேசுவான்.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. அதனால இந்த கவலையை விடுங்க.. என்ன தீரா.. நான் சொல்றது சரிதானே..?”
மதியழகிக்காக அவனை இப்போது நெருப்பிலே குதிக்க சொன்னாலும் தலையாட்டும் நிலையில் இருந்தவன் சரவணன் என்ன கேட்டான் என்று கூட காதில் வாங்காமல் “அதல்லாம் மாஸ் பண்ணிக்கலாம் பா..” என்றான் உடனடி பதிலாய்..
அவன் சொன்ன ஆஞ்சநேயர் துதிக்கும் இப்போது அவன் பேசிய வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை பார்த்து இது எங்கே போய் முடியப் போகிறதோ என்று ஒரு பெருமூச்சு விட்டாள் மதியழகி..
“அப்புறம் தீரா அவங்க சாயங்காலத்துக்கு கால் சென்டர் போறாங்க.. பகல்ல என் வைஃப் வேலை செய்யற காலேஜ்ல ப்ரோஃபசரா இருக்காங்க..” பாண்டி சொன்னது தான் அதைக் கேட்ட தீரனின் உடலில் ஒரு அதிர்வு தெரிந்தது மதியழகிக்கு..
இவ்வளவு நேரம் அவளைப் பற்றி மனதில் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு அவள் ஒரு பேராசிரியர் என்று தெரிந்ததும் அவனுடைய கனவு கற்பனை அத்தனையும் இருட்டறைக்குள் சிக்கிக் கொண்டது..
அவன் படிக்காதவன்.. அந்த பெண்ணுக்கு இணையாக நடிப்பதே தவறு என்று தோன்றியது அவனுக்கு இப்போது.. அந்தப் பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இப்போதைக்கு இதை செய்தாலும் வேலை முடிந்த பிறகு அவள் பக்கம் பார்க்கும் தகுதி கூட தனக்கு இல்லை என்று முடிவு கட்டியவனுக்கு இப்போது மதியழகியின் அதே நிலைதான்.. அவளை நிமிர்ந்து பார்க்கவும் தயங்கினான் அவன்..
ஆனால் எவ்வளவுதான் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டாலும் அவனால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை..
முதன் முதலில்
பார்த்தேன் ..
காதல் வந்ததே..
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே..
என்னில் இன்று
நானே இல்லை..
காதல் போல
ஏதும் இல்லை..
எங்கே எந்தன்
இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா..?
நந்தவனம் இதோ
இங்கேதான்..
நான் எந்தன்
ஜீவனை நேரினில்
பார்த்தேன்..
நல்லவளே
அன்பே
உன்னால்தான்
நாளைகள் மீதொரு
நம்பிக்கை
கொண்டேன்..
நொடிக்கொரு தரம்
உன்னை
நினைக்க
வைத்தாய்..
அடிக்கடி என்னுடல்
சிலிர்க்க
வைத்தாய்..
முதல் பார்வை
நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே
உயிர் வாழுமே…
தொடரும்..