லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 15

5
(5)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 15

தீரன் பொதுவாக அவனைப் பற்றி மேலோட்டமாக விஷயங்களை படப்பிடிப்பு தளங்களில் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருந்தானே ஒழிய அன்றைய நாள் வரை இந்தரை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு கூட அவன் அழைத்துச் சென்றதில்லை.. இந்த எப்படி இருப்பான் என்பது கூட அவன் வேலை செய்யும் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கும் அதுவரை தெரிந்திருக்கவில்லை..

படித்து முடித்து இந்தர் நல்ல நிலைக்கு வரும் வரை தான் படப்பிடிப்பில் சந்திக்கும் கஷ்டங்களின் நிழல் கூட அவன் மீது படிய கூடாது என்று முடிவாக இருந்தான் அவன்..

அந்த ஒரு நாள் அவனை அந்த உணவு விடுதியில் சந்தித்தபோது கூட அவனுக்கு அந்த சந்திப்பே ஏன் தான் நிகழ்ந்ததோ என்று இருந்தது.. அதுவும் தான் ஒவ்வொரு சண்டை சாகசத்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறோம்.. எப்படி எல்லாம் தனக்கு அடிபடுகிறது என்று அன்று தீரனுடன் வந்த அந்த நபர் இந்தரிடம் சொல்ல அதைக் கேட்டு இந்தர் முகத்தில் வலியின் ரேகைகள் தெரிந்ததையும் சட்டென அவன் முகபாவம் மாறி போனதையும் அவன் கவனித்து தான் இருந்தான்.. அவன் தீரன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் என்றும் தான் அந்த கால் சென்டரில்  வேலை செய்து படிப்பு செலவினை சமாளித்து கொள்கிறேன் என்று சொன்னபோது அத்தனை நாள் தன்னுடைய எந்த வலியும் அவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தது எல்லாம் வீணாக போய்விடுமோ என்று சிறிது பதட்டம் தான் அடைந்தான் தீரன்..

அதனாலேயே பாண்டி போன்றவர்களுக்கு கூட தீரனுக்கு ஒரு தம்பி இருக்கிறான்.. அவனை தீரன் பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கிறான் என்று தெரியுமே தவிர அவன் தம்பி யார் என்றோ எந்த கல்லூரியில் பயில்கிறான் என்றோ அவன் அதுவரை எவரிடமும் பகிர்ந்ததில்லை..

எப்படி தம்பி விவரங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கிறானோ அதேபோல் தான் மற்றவர்களிடமும் அவர்கள் பற்றிய விவரங்களை திரும்பத் திரும்ப கேட்க மாட்டான் தீரன்.. அவன் படப்பிடிப்பு தளங்களில் பேசுவது ரொம்பவும் அரிது தான்.. அதுவும் அவன் வேலை சம்பந்தமாக மட்டுமே இருக்கும்.. என்ன வேலை செய்ய வேண்டும்.. அன்று என்ன என்ன சாகசங்கள் செய்ய வேண்டும் என்பதை மட்டும் கேட்டு வேலையை முடித்துவிட்டு செல்வதே அவன் வழக்கமாய் இருந்தது..

அதனால் தான் பாண்டியின் மனைவி பார்கவி வேலை செய்வதும் தன் தம்பி தீரன் படிப்பதும் ஒரே கல்லூரியில் தான் என்பது அவனுக்கும் பாண்டிக்கும் இதுவரை தெரியாமலே இருந்தது.. இருவரில் யாராவது ஒருவருக்கு மற்றவரை பற்றி தெரிந்திருந்தால் கூட இவ்வளவு நேரம் மதியழகியை காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்து கொண்டிருப்பது தன் தம்பி தான் என்பது தீரனுக்கு விளங்கி இருக்கும்.. ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போனது..

பாண்டி வீட்டில் சந்தித்த முதல் நாள் தீரன் மதி இருவருக்கும் ஒருவர் பார்வையை இன்னொருவர் தவிர்ககும் முயற்சியிலும் அது முடியாமல் பார்வைகள் சந்திக்கும் வேளையில் பார்வையோடு மனதும் மற்றவர் புறம் தாவி ஓடுவதை தடுக்க முடியாத தவிப்பிலுமே முடிந்து போனது..

அவரவர் வீடு வந்து சேர்ந்த பிறகும் மற்றவரின் நினைவு அகலாமல் துரத்திக் கொண்டே வர அதோடு நிற்காமல் அவர்கள் உறக்கத்தையும் திருடிக் கொண்டு போனது அந்த நினைவு..

அடுத்த நாள் மாலை மறுபடியும் பாண்டி வீட்டில் நால்வரும் குழுமியிருக்க பாண்டி அடுத்த கட்ட வேலைகளை தொடங்க வேண்டும் என்று சொல்லவும் இருவருக்கும் மறுபடியும் உள்ளுக்குள் ஒரு வித பதட்டம் தோன்ற தொடங்கியது..

அன்றைய நாள் அவர்கள் காதலர்கள் போல் நடித்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாமல் ஒருவித இனம் புரியாத அவஸ்தையான உணர்வாய் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பொங்கி வழிந்தது..

பாண்டி முதலில் அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து சென்று “தீரா.. மதி சிஸ்டர்.. ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க.. இப்போ எங்க வீட்டு டைனிங் டேபிள் தான் நீங்க மீட் பண்ண போற ஹோட்டலோட ஒரு டின்னர் டேபிள்.. இந்த டைனிங் ரூமுக்குள்ள வரும்போது நீங்க ரெண்டு பேரும் பார்த்தவுடனே எப்படி ரியாக்ட் பண்ணனும்.. அப்புறம் இங்க வந்து இந்த சேர்ல எப்படி உட்காரணும்.. உட்கார்ந்து எப்படி பேசணும்.. இது எல்லாத்துக்கும் தான் இப்ப ட்ரைனிங் எடுத்துக்க போறீங்க.. இப்ப மொதல்ல தீரா.. நீ இங்க சேர்ல உக்காரு..”

தீவினை அழைத்து அந்த நாற்காலி இல்லாமல் சொல்ல அவனும் சட்டென வந்து சடாரென அமர்ந்தான்..

மதி பக்கம் திரும்பிய பாண்டி “மதி சிஸ்டர்.. நீங்க வெளியில் இருந்து உள்ள வாங்க..”என்க மதிய உடனேயே அந்த அறைக்கு வெளியே போய் நின்று கொண்டாள்..

“மதி உள்ள வந்த உடனே நீ அவங்களை போய் ஆசையா கூட்டிட்டு வந்து இங்க உன் பக்கத்தில் இருக்கற சேர்ல உக்கார வைக்கணும்.. புரியுதா..?”

தீரனை பாண்டி கேட்க “ஓகே பாண்டி.. இப்ப கவுன்ச்சுக்க நீ என் நடிப்பை.. என் நடிப்புல அப்படியே மெர்சலாவ போற பாரு நீ” என்றவன் பட்டென அந்த நாற்காலியில் நேராக விரைப்பாக அமர்ந்திருக்க “அது சரி.. நீ உட்கார்ந்த விதத்திலேயே நான் முழுசா மெர்சலாயிட்டேன் தீரா.. என்ன தீரா இப்படி சொதப்புற..? இப்படி தான் நீ திரும்பி நேரா அதுவும் கஞ்சி போட்ட காட்டன் சட்டை மாதிரி உட்கார்ந்து இருப்பியா? உன் லவ்வர் வர போறாங்க.. எவ்வளவு ஆசையா வாசலை பார்த்துட்டு அவங்களுக்காக எதிர்பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கணும் நீ?”

பாண்டி கேட்க “ஓ.. இப்போ அப்புடியா?” என்றவன் தன் நாற்காலியில் அந்த அறை வாசலை நோக்கி திரும்பி அமர்ந்து மதி எப்போது உள்ளே வருவாள் என்று நிஜமாகவே ஆவலோடு பார்ப்பது போல் பார்த்தான்.. உண்மையாகவே அவனுக்கு மதியின் முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் தான் தோன்றியது.. அதில் அவன் பார்வையும் இயற்கையாகவே காதலியின் வரவை எதிர்பார்த்து இருக்கும் ஒரு காதலனின் பார்வை போலவே இருந்தது..

அவனைப் பார்த்த பாண்டி “சூப்பர் தீரா.. அப்படியே இருக்க லவ்வர் மாதிரி.. கலக்கிட்ட போ.. இப்படியே பாத்துட்டு இரு..” அறையின் வாயிலை நோக்கி “மதி சிஸ்டர்.. உள்ள வாங்க..” என்க.. மதி அடி மேல் அடி வைத்து தயக்கத்துடனே ஒரு திருட்டு விழி விழித்தபடி உள்ளே வர தீரன் பார்வையை சந்தித்த நொடி சட்டென தலையை குனிந்து கொண்டாள்..

“என்ன மதி சிஸ்டர்.. உள்ள வந்த உடனே ஆசையா தீரன் எங்க இருக்காருன்னு தேட வேணாமா நீங்க..? இப்படி தலையை கவுத்துக்கிட்டீங்கன்னா எப்படி.. உங்க ரியாக்சன் தீரனை இதுவரைக்கும் நீங்க பார்த்ததே இல்லங்கற மாதிரியும் இப்ப தான் முதல் முதல்ல அவர் உங்களை பொண்ணு பார்க்க வந்திருக்கற மாதிரியும் இருக்கு.. லவ்வர்ஸ் எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க சிஸ்டர்.. நீங்க உள்ள வரும்போது தீரன் எங்க உட்கார்ந்து இருக்காருன்னு தேடிட்டே வரணும்.. புரியுதா? உங்க கண்ணு தீரனை தேடி உள்ள வந்த உடனே அப்படியே அலை பாயணும்..”

பாண்டி சொல்லவும் அவளோ முகத்தில் ஒரு தர்ம சங்கடமான பாவனையை காட்டி “கிழிஞ்சுது.. பவி பேசாம விட்டிரலாம் டி.. வேற எதாவது செஞ்சு சமாளிச்சுக்கலாம்.. இது ரொம்ப கஷ்டமா இருக்கு டி..” என்க பார்கவி “இங்க பாரு.. இவ்வளவு தூரம் வந்தாச்சு.. உன்னால முடியும்.. இப்படி எல்லாம் பேசி என் மானத்தை வாங்காதே.. பாரு.. தீரா அண்ணன் எவ்ளோ அழகா ரியாக்ஷன் காட்றாரு.. ஒரு நாள் தானடி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி பண்ணுடி..”

பார்கவி சொன்னதை கேட்டவள் மறுபடியும் வெளியே போய் உள்ளே வந்த நேரம் பாண்டி சொன்னபடி அந்த அறை முழுதும் ஏதோ நிறைய மேஜைகள் இருந்தாற் போல கண்களை சுழட்டி அலை பாய்ந்த விழிகளை தீரனிடம் கொண்டு வந்து நிறுத்தினாள்..

மறுபடியும் அவன் விழிகளை பார்த்த நொடி சட்டென அவள் பார்வையை தழைக்கவும் “ஐயோ சிஸ்டர்.. நீங்க தேடுனதெல்லாம் சரிதான்.. ஆனா அவனை பார்த்துட்டு உங்க கண்ணுல அப்படியே சந்தோஷம் தெரியணும்.. உங்க லவ்வரை ஒரு வாரம் கழிச்சு பாக்குறீங்க.. புரியுதா?”

அவன் சொன்னதை கேட்டவள் மறுபடியும் வெளியில் இருந்து உள்ளே வந்து அவன் சொன்னது போலவே தேடி தீரனை கண்டதும் மிகவும் சிரமப்பட்டு விழிகளை தழைக்காமல் ஒரு அரை நிமிடம் அவன் பார்வையோடு தன் பார்வையை கலக்க செய்ய அந்த அரை நிமிடத்திற்கு மேல் ஒரு நொடி கூட அவளால் அந்த விழி கலப்பினை எதிர்கொள்ள முடியவில்லை.. அவனுடைய பார்வை தைக்கும் ஊசியாய் உள்ளே ஊடுருவி துளையிட்டுச் சென்று மனதை தைத்தது அவளுக்கு..

அவஸ்தியாய் மறுபடியும் அவள் தலையை குனிய அவள் அப்படி தலையை குனிவதற்கு முன் “சிஸ்டர்.. சிஸ்டர்.. சிஸ்டர்.. அப்படியே டயலாக் பேசிடுங்க.. அப்போ ஒன்னும் பிராப்ளம் வராது..”

பாண்டியன் அவசரமாக சொல்ல அவளோ “ட,.. டயலாக்கா?” என்று திணறியவளிடம் “ப்ச்.. அவனை கூப்பிடுங்க சிஸ்டர்..”

பாண்டி மறுபடியும் அவசரமாய் அவளுக்கு செய்ய வேண்டியதை சொல்ல “எ..என்ன.. கூப்பிடனுமா..?” என்றவள் முகம் சுருக்கி தயங்கி தயங்கி “ஹ… ஹலோ.. ச..‌சார்..” என்று தீரனை பார்த்து அழைக்க பாண்டி பார்கவி இருவரும் தலையில் கை வைத்து அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்கள்..

“சுத்தம்.. என்ன சிஸ்டர்.. சார்னு கூப்பிடுறீங்க..? அவன் உங்க லவ்வர்.. நீங்க அவனை பேபி செல்லம்னு எல்லாம் கூப்பிடலனாலும் அட்லீஸ்ட் தீரான்னு பேர் சொல்லியாவது கூப்பிடனும் இல்ல..?” என்று கேட்க பார்கவி வந்து “என்னடி இப்படி சொதப்பற? யாராவது லவ்வரை சார்ன்னு கூப்பிடுவாங்களா?” என்று கேட்க “ஏய்.. நான்தான் எனக்கு இதெல்லாம் வராதுன்னு சொன்னேன் இல்ல..? வேண்டாம்.. நாம இதை இங்கேயே முடிச்சுக்கலாம்.. எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு தோணல..” அழும் நிலைக்கே சென்று விட்டாள் மதியழகி..

“சரி.. ஒன்னு பண்ணலாம் பவிமா.. அவங்க வந்து நிக்கட்டும்.. தீரனை பார்த்ததும் அவங்க சந்தோஷமா இருக்கிற மாதிரி எக்ஸ்பிரஷன் மட்டும் பண்ணட்டும்.. தீரா.. அவங்க உள்ள நுழைஞ்ச உடனே நீ நேரா எழுந்து போய் அவங்களோட பேசி அவங்களை கூட்டிட்டு வந்து உன் பக்கத்துல உட்கார வெச்சுக்க சரியா..?”

பாண்டியே அதற்கு ஒரு தீர்வு சொல்ல இப்போது மதிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..

ஆனால் இப்போது தீரனை படபடப்பு சூழ்ந்து கொண்டது.. ஒரு பெருமூச்சை விட்டவன் “ஓகே.. நான் ரெடி பா..” என்று எப்போதும் சண்டை காட்சிக்கு தயார் என்று இயக்குனரிடம் சொல்வது போல அவன் சொல்ல பாண்டி அவனை கலவரமாய் தான் பார்த்தான்..

மதியழகி அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அறை முழுதும் கண்களை சுழற்றி அலை பாய விட்டு அவனைக் கண்டவுடன் சிரமப்பட்டு விழி விரித்து ஏதோ ஆனந்த படுவது போல் ஒரு உணர்வை காண்பிக்க தீரன் எழுந்து வேகமாக அவள் அருகே சென்றான்..

அவசரமாய் அருகில் சென்றவனுக்கோ அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.. பிறகு கடினப்பட்டு அவள் பெயர் சொல்லி மதி என்று அழைக்க முனைந்தவன் “ம.. ம வாங்க.. ஹலோ ஹலோ.. ம.. ம..” என்று குரல் தடுமாற “மதி” என்று அழைக்க வந்தவன் அவளை அப்படி அழைக்க முடியாமல் “ஹலோ மேடம்.. வாங்க.. உள்ள வாங்க..” என்க பாண்டி தலையில் அடித்துக் கொண்டு பார்கவியை அலுப்பாய் ஒரு பார்வை பார்த்தபடி “மேட்டர் ஓவர்..” என்றான்..

பார்கவி பாண்டியை தீவிரமாய் முறைத்தாள்.. “இதுதான் நீங்க மாஸ் பண்ற லட்சணமா? என்ன பாண்டி.. அவ சார்ங்கறா.. அண்ணன் மேடம்ங்கிறாரு..  நம்ம கிட்ட ரொம்ப நேரமும் இல்லை.. ஞாயிற்றுக்கிழமைக்குள்ள இதை பண்ண முடியுமா சரியா?”

பார்கவிக்கு ரொம்பவும் சந்தேகமாக இருந்தது.. இந்து திட்டம் நடைமுறையில் ஒழுங்காக வருமா என்று..

“இல்ல.. மதி சிஸ்டர் இப்படி பண்ணறது ஒரு அளவுக்கு எனக்கு புரியுது.. ஆனா தீரன் ஏன் இவ்வளவு தடுமாறாரு.. அவர் சினிமால ஸ்டன்ட் பண்றவர்தானே..? நிறைய அங்க நடிக்கிறவங்களை எல்லாம் பார்த்து இருக்காரு.. அப்படியும் ஏன் இப்படி சொதப்பறாருன்னு தெரியலையே..”

அவன் நெற்றியை விரலால் நீவி விட்டபடி யோசனையாய் சொல்லிக் கொண்டிருக்க அவன் அருகே வந்த தீரன் “பாண்டி.. அவங்க ரொம்ப பட்ச்சவங்களா இருக்காங்க.. சட்டுனு நம்மளால அவங்கள மருவாதி இல்லாம பேர் சொல்லி கூப்ட மிடியலை பா.. தன்னாலே நாக்குல மேடம் வந்து ஒட்டிக்கிது.. இன்னொரு தபா எனக்கு சான்ஸ் குடு.. இப்போ நெஜமாவே மாஸ் காட்டறேன்.. பாத்துக்க..”

அவன் சொன்னதை கேட்ட பாண்டிக்கு அவன் சொன்னது புரிந்தது.. மதி ஒரு பேராசிரியர் என்று சொல்லி இருக்கவும் அவள் மேல் அவனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது என்று புரிந்தது..

“சரி.. எனக்கு புரியுது.. ஆனா இந்த முறை ஒழுங்கா பண்ணிடுவே இல்ல..?” என்று கேட்டவனிடம் நாளா படமும் தலையை ஆட்டினான் தீரன்..

“மறுபடியும் பண்ணலாம்..” என்றவன் மதியிடம் “சிஸ்டர்.. நீங்க போய் மறுபடியும் வாங்க. நீங்க எதுவும் பேச வேண்டாம்.. தீரன் பார்த்துப்பாரு.. நீங்க கொஞ்சம் ஒரு அந்நியன் ஒருத்தரை பாக்குற மாதிரி பாக்காம லவ்வரை பார்க்கிற மாதிரி பார்த்தா மட்டும் போதும்..”

அவன் சொன்னதைக் கேட்ட அவளின் மனசாட்சி “உனக்கு அவனை பாக்கவே முடியல.. அவனை பார்த்தாலே உனக்கு பதறுது ஒதறுது.. இதுல லவ்வா வேற பார்க்க சொல்றாங்க.. இப்படி சொதப்பறியே மதி..” என்று கேலி செய்ய அவளோ “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எப்படியாவது கஷ்டப்பட்டு நான் பார்த்துடறேன்.. அவரும் மனுஷன் தானே..? அவரை பார்த்து எனக்கு என்ன பயம்? தயக்கம்? அது மட்டும் இல்லாம அவர் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி.. அதனால கொஞ்சம் தயக்கமா இருக்கு.. இந்த முறை பாரு.. நான் எப்படி நடிக்கிறேன்னு” என்று தன் மனசாட்சிக்கு கவுண்டர் கொடுத்துவிட்டு வேலையில் இறங்கினாள் மதி..

மறுபடியும் அந்த காட்சியை அரங்கேற்ற முயற்சி செய்ய இம்முறை அந்த அறையில் தேடி தீரனை கண்டு கொள்ளும் வரை சரியாக முகத்தில் அவள் உணர்வுகளை பிரதிபலித்தாள்.. அவனும் அவளை கண்ட நொடி எழுந்து அவள் அருகில் சென்று “ஹாய் மதி.. வாங்க.. உள்ள வாங்க..” என்க மறுபடியும் அவனை பார்வையில் வெறி கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாண்டியும் பார்கவியும்..

மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி
வந்ததே..
லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக
பூத்ததே..
உன் வார்த்தை
தேன் வார்த்ததே..
மௌனம் பேசியதே..
குளிர் தென்றல்
வீசியதே..

ஏழை தேடிய
ராணி நீ என்
காதல் தேவதையே..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!