லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 16

5
(5)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 16

 

தீரனை கோபவெறி கொண்டு பார்த்து கொண்டிருந்த பார்கவியையும் பாண்டியையும் பார்த்த பிறகும் தான் எவ்வளவு லட்சணமாக நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று விளங்கவில்லை தீரனுக்கு.. இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தவன் “புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் இன்னாத்துக்கு இப்படி என்னிய மொறைச்சி பாத்துக்கினுக்கீறீங்கோ?” 

 

அவன் நிஜமாகவே புரியாமல் கேட்க “ம்ஹூம்.. இது சரியா வராது..” என்ற பாண்டி “பவி குட்டி.. இனி இவங்க ரெண்டு பேரையும் நம்பி புண்ணியம் இல்ல.. நம்மளே நேரா களத்துல குதிக்க வேண்டியது தான்..” என்று சொல்லவும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று பார்கவிக்கே புரியவில்லை..

 

“என்ன சரவணா.. என்ன சொல்ற நீ? இதுல நம்ம என்ன பண்ணமுடியும்?” 

 

அவள் புரியாமல் விழிக்க “ம்ம்ம்.. நம்ம கல்யாணத்துக்கு முன்ன லவ்வர்ஸா சுத்திட்டு இருந்தோம் இல்ல? அந்த நேரத்தை மறுபடியும் கொண்டு வந்து இவங்க ரெண்டு பேருக்கும் லவ்வர்ஸ்னா எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு காட்டணும்..” என்றான்..

 

அவன் சொன்னதை கேட்ட பார்கவி முகத்தில் அடுத்த கணம் காதலும் வெட்கமும் கலந்த புன்னகை தோன்ற ஆசையும் நேசமும் கலந்த பார்வையோடு ஒரு நொடி அவனை பார்த்தவள் அடுத்த நொடி விழி தழைத்தாள்..

 

பார்கவியின் அருகே சென்ற பாண்டி அவள் தோள்களை தன் இரு கைகளால் பிடித்து புருவத்தை ஏற்றி இறக்கி “என்ன பேபிமா.. லவ் பண்ணி காட்டலாமா?” என்றவன் முகத்தை பார்த்து குப்பென வெட்கத்தில் முகம் சிவக்க “ஹையோ.. என்ன சரவணா இது..? அவங்க முன்னாடி.. வரவர உனக்கு விவஸ்தையே இல்லாம போச்சு..”

 

அவன் மார்பில் செல்லமாய் அடித்தவள் இன்னும் வெட்கப்பட்டு சிணுங்கினாள்..

 

“அடியே ஜாங்கிரி.. என்னடி இது? இப்படி செவக்கற? இன்னும் புது பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுக்கிட்டு உன் வெக்கத்தாலேயே மாமனை கெறங்கடிக்கிறியேடி.. இதுதாண்டி உன்னை தினம் தினம் எனக்கு புது அழகோட காட்டுது.. உன் மாமனை வேற பக்கம் திரும்ப கூட விட மாட்டேங்குது.. அப்படியே இரும்பை தன்னோட இழுத்து வெச்சுக்கற மேக்னட்டை மாதிரி என்னை உனக்குள்ள இழுத்து வெச்சு கொல்றியேடி..” ரகசியமாக அவள் காதை கடித்தான் பாண்டி..

 

தீரனும் அதே நேரம் மதியழகியை பார்க்க அவளோ பார்கவி பாண்டியன் இருவருடைய அழகான காதல் பேச்சுக்களை கேட்டு உதித்த எழிலான குறுநகையோடு யோசனையில் இருந்தாள்..

 

“ஏ பாண்டி.. போதும் பா.. உங்க ரெண்டு பேரோட ரொமான்ஸூம் பார்க்க அழகா தான் கீது.. ஆனா எங்களுக்கு ரொம்ப டைமில்லியே.. எங்க மேட்டரை கொஞ்சம் கவன்ச்சிக்க பா..”

 

அவனைப் பார்த்த பார்கவி “அண்ணா.. நீங்க இந்த மாதிரி பேசும் போது எனக்கு நீங்க  டயலாக் பேசும்போதும் உங்களோட இந்த மெட்ராஸ் பாஷை நடுவுல தப்பி தவறி வந்தடுமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ணா.. நீங்க எங்க கூட இப்ப பேசும்போது சாதாரணமா எங்களை மாதிரியை பேச ட்ரை பண்ணுங்களேன்..”

 

அவள் சொன்னதைக் கேட்டு தன் புருவம் உயர்த்தி தலையை சொரிந்தபடி அவளை சங்கடமாக பார்த்த தீரன் “இதுல இப்படி ஒரு மேட்டர் வேற கீதா..? நீ சொல்ற மாதிரி டக்குனு நம்ம பாஷை ஊடால வந்துச்சுன்னா ரொம்ப பேஜாரா தான் ஆய்டும்.. சரி தங்கச்சிமா.. நீ சொல்ற மாதிரியே பண்ணிக்கிறேன்..”

என்றவனை மூவரும் தீவிரமாய் முறைக்க “சரி சரி.. சாரி.. எல்லாரும் காண்டாவாதீங்கோ..” என்றவன் அவர்களின் முகபாவனையை  பார்த்து நாக்கை கடித்துக் கொண்டு “சரி.. எல்லாரும் கோவப்படாதீங்க.. நான் இனிமே இப்படியே பேசுறேன்..”

 

“அப்பா.. அண்ணா இப்ப நீங்க பேசுறதை கேட்கிறப்போ எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? நீங்க இப்படியே பேசுனா மதிக்கும் உங்களோட நடிக்க கொஞ்சம் தைரியம் வரும்.. இல்லைன்னா எனக்கு என்னவோ அவ உங்க பாஷையை கேட்டு தா ன் உங்க பக்கத்துல வந்து நடிக்கிறதுக்கே தயங்குறானு தோணுது..”

 

பார்கவி சிரித்துக் கொண்டே சொல்ல அதைக் கேட்டவன் “டேய் தீரா.. அந்த பொண்ணு அம்மாம் மெர்ஸல் ஆவுது இல்ல? உன் மெட்ராஸ் பாஷையை கண்ட்ரோல் பண்ணுடா..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் “சரிமா.. இனிமே இப்படியே பேசுறேன்..”

 

சாதாரண தமிழில் பேசினானே தவிர யோசித்து யோசித்து மிகவும் மெதுவாய் தான் பேசினான் தீரன்..

 

அவன் தனக்காக தான் இப்படி பேச முயற்சி செய்கிறான் என்ற எண்ணம் மதியின் மனதில் அவனைப் பற்றிய ஒரு மதிப்பான அபிப்பிராயத்தை கோர்த்தது.. அவனைப் பார்த்தாலும் பாவமாய் தான் இருந்தது.. இயல்பாய் இருக்க முடியாமல் எதையோ தூக்கி பாரமாய் தலையில் வைத்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறான் அவன்..

 

“சரி.. ஜில்லு.. வா.. நம்ம போய் அவங்களுக்கு லவ்வர்ஸ்னா எப்படி இருக்கணும்னு காட்டி கிளாஸ் எடுக்கலாம்.. நம்ப நிஜத்திலயே அப்படித்தான்.. அதை பார்த்து அவங்க அதே மாதிரி நடிச்சுகிட்டம்” என்று பாண்டி சொல்ல “அது சரி ..” என்று தலையை ஆட்டியபடி அந்த அறைக்கு வெளியே போய் நின்று கொண்டாள்..

 

மதியழகி முழுவதுமாக அவள் முகத்தின் முகபாவனைகளை பின்பற்ற ஆரம்பித்தாள்..

 

அறைக்கு வெளியே இருந்து உள்ளே வந்து கண்களை அலைபாய விட்டு சாப்பாட்டு மேஜை எதிரில் அமர்ந்திருந்த பாண்டியிடம் வந்து பார்வைக்கு நிலைக்க வைக்க அவனோ அதுவரை அந்த அறை வாயிலையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தவன் பார்கவி உள்ளே வந்த நொடி கண்களை பெரிதாய் விரித்து முகம் மலர்ந்து  “ஹாய் பவி பேபி..” என்றபடி ஓடிவந்து அவளை அழுத்தமாய் தன்னோடு அணைத்துக் கொண்டான்..

 

மதியழகியும் தீரனும் கண்களில் இருந்த கருவிழிகள் வெளியே வந்து விழுந்து விடும் போல அவர்களை அதிர்ச்சியோடு பார்த்திருந்தார்கள்.. 

 

பாண்டியோ வெகு இயல்பாக பார்கவி தோளை சுற்றி கையை வளைத்து போட்டவன் “ஏய் ஜில்லு.. நீ எப்ப வருவன்னு பார்த்துக்கிட்டே இருந்தேன்.. கொஞ்சம் லேட் ஆன உடனே எங்க வராம போய்டுவியோன்னு அப்படியே என் ஹார்ட்டு படபடன்னு அடிச்சுக்க தொடங்கிருச்சு.. இங்க பாரு..” என்று பார்கவியின் கையை எடுத்து உள்ளங்கையை விரித்து தன் மார்பில் வைத்துக் காட்டினான்..

 

அவளோ கண்களில் காதல் ஒழுக அவன் கன்னத்தை தன் கையில் தாங்கி “அதுதான் வந்துட்டேனேடா..” என்றாள் அவனை கூர்ந்து நோக்கியபடி.. 

 

கன்னத்தில் இருந்த அவளின் கை மீது தன் கையை பதிய வைத்தவன் அதை எடுத்து அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து

மேஜை வரை அவளை அப்படியே தோளணைத்தார் போல் அழைத்துப் போனவன் அவளை அங்கே நிற்க வைத்துவிட்டு நாற்காலியை பின்னே இழுத்து சேவகன் போல் வளைந்து நின்று நாற்காலியை ஒரு கையால் காண்பித்து அவளை அமரச் சொன்னான்..

 

அதுவரை அங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் வாயை மூடி பார்த்துக் கொண்டிருந்த மதியழகி “ஏய் பவி.. என்னடி இது..? என்னால இப்படி எல்லாம் பண்ண முடியாது.. நான் கிளம்புறேன்..” அவள் மனம் விட்டு போய் வீட்டுக்கு போக திரும்பினாள்..

 

பார்கவி நாற்காலியில் அமர போனவள் வேகமாய் மதியழகியின் அருகில் ஓடி வந்து அவள் முன்னே வழி மறித்தார் போல நின்று கொண்டு “ஏன்டி.. மறுபடியும் என்னடி பிரச்னை? என்ன ஆச்சு? திடீர்னு எதுக்கு கெளம்புறேங்கற?” புரியாமல் கேட்டாள் ..

 

அவளோ “என்னடி விளையாடுறியா? அவரு என்னவோ உன்னை கட்டிக்கிறாரு.. அப்புறம் உன்னை அணைச்சா மாதிரி கூட்டிட்டு போய் உட்கார வைக்கிறாரு.. உன் கையை எடுத்து அவரு நெஞ்சில் வச்சுக்கறாரு.. கைல முத்தம் கொடுக்கறாரு.. நீங்க புருஷன் பொண்டாட்டி.. உங்களுக்குள்ள இதெல்லாம் ஒன்னும் இல்லாத விஷயமா இருக்கலாம்.. ஆனா நாங்க எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடியும்? என்னால முடியாது.. நான் கிளம்புறேன்..” என்று தலையை உதறிய படி அவள் சொல்ல அவள் கையை பிடித்து தடுத்தாள் பார்கவி..

 

“அடியேய்.. நாங்க பண்ற மாதிரி அப்படியே பண்ணனும்னு உங்களை சொல்லலடி.. உங்களால முடிஞ்ச வரைக்கும் சகஜமா எவ்வளவு தூரம் பண்ண முடியுமோ பண்ணலாம்.. பாண்டி மாதிரி நான் ஒன்னும் தீரன் அண்ணனை உன்னை இறுக்கமா அணைச்சுக்க சொல்லல.. ஆனா உன் தோள் மேல லேசா கையை போட்டு அழைச்சிட்டு போய் உட்கார வைக்கலாம் இல்ல..? அதே மாதிரி தான் நெஞ்சில கை வைக்கிறதும்.. என் கையை எடுத்து என் பாண்டி அவன் நெஞ்சில அழுத்தமா வச்சுக்கிட்டான்.. தீரா அண்ணா கையை லேசா வைக்கட்டும்.. அவர் சட்டை மேல உன் கை லேசா படுறதுனால உன் கை ஒன்னும் தேஞ்சு போகாது..” அவள் நிஜமாகவே கோபப்பட்டாள் மதியழகியிடம்..

 

பாண்டியும் கூட வந்து “சிஸ்டர் நீங்க நடிக்க போறது லவ்வர்ஸா.. ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிக்கிறவங்களே  இந்த காலத்துல இப்படித்தான் நடந்துக்கிறாங்க.. அப்படி இருக்கும்போது லவ்வர்னு சொல்லி நீங்க அதுல ஒரு 10% கூட பண்ணலேன்னா எப்படிம்மா..? கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா..”

 

அவன் பங்குக்கு அவனும் கெஞ்சினான்.. அதற்குள் அங்கே வந்த தீரன் பாண்டியை கண்ணை மூடி திறந்து ஆசுவாசப்படுத்திவிட்டு மதியழகியிடம் “நான் சொல்றதை கேளுங்க மதி மேடம்.. நான் நிச்சயமா உங்க கையெல்லாம் அழுத்தி பிடிக்க மாட்டேன்.. சும்மா அவங்களுக்கு காட்டுறதுக்காக உங்க தோள்ல அணைச்ச மாதிரி லேசா கை வெச்சுக்குவேன்‌‌.. அந்த மாதிரி நடிக்க போறேன்.. அவ்வளவுதான்.. என் கை உங்க தோள்ல லேசா பட்டிருக்கும்.. இப்ப நீங்க பஸ்ல போகும்போது பஸ் கூட்டமா இருந்தா உங்க மேல அடுத்தவங்க கை படற மாதிரி தான் இதுவும்.. அந்த ஒரு நாள் நம்ம அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சிட்டோம்னா அதுக்கப்புறம் நிம்மதியா இருக்கலாம்..”

 

அவன் மிகவும் சிரமப்பட்டு மெதுவாக தன் சென்னை தமிழ் இடையில் வராமல் விட்டுவிட்டு தயங்கி தயங்கி பேசினான்..

 

அவளும் அவன் சொன்னதை கேட்டு சிறு கலக்கத்துடனே “சரி நடிக்க ட்ரை பண்ணலாம் வாங்க..” எனவும் மறுபடியும் அங்கே நாடக ஒத்திகை துவங்கியது..

 

இந்த முறை தீரன் அப்படியே பாண்டி செய்ததை அக்ஷரம் பிசகாமல் முகத்திலும் சரி வார்த்தைகளிலும் சரி எந்தவித மாற்றங்களும் இல்லாமல் ஒரு நிஜமான காதலனின் உணர்வுகளை அழகாக முகத்திலும் செய்கையிலும் பிரதிபலித்தான்..

 

அவள் அருகில் வந்து அவள் தோளில் அணைத்தார் போல் பட்டும் படாமல் கை வைத்தவன் மெல்ல அவளோடு நடந்து அவள் அமர வேண்டிய இருக்கையை பின்னால் தள்ளி அவளை அமரச் சொல்லவும் அவளும் ஏதோ ஒரு எந்திர பதுமை அமர்வது போல ஒரு சிறு படபடப்புடனே அந்த நாற்காலியில் அமர்ந்தாள்..

 

அவளை திட்ட வேண்டும் என்று பார்கவி ஏதோ சொல்ல வாய் எடுக்க அவளை கையமர்த்திய பாண்டி “இப்ப நீ ஏதாவது சொன்னேனா அவங்க கிளம்பி போயிருவாங்க.. வேணாம்.. இப்படியே கண்டினியூ பண்ணிக்கட்டும்.. இன்னும் மூணு நாலு நாள் இருக்கு இல்ல? பாத்துக்கலாம்..” என்று ரொம்பவும் தழைந்த குரலில் அவளிடம் சொல்ல அவளுக்கும் அவன் சொன்னது சரிதான் என தோன்றவும் அப்படியே அமைதியாகி போனாள்..

 

“ம்ம்.. ஓகே தான்.. மதி சிஸ்டர்.. நீங்க இன்னும் கொஞ்சம் நேச்சுரலா சகஜமா பதட்டம் இல்லாம இருக்க ட்ரை பண்ணுங்க.. நீங்க அப்படி இருந்தாலே மிச்சத்தை தீரன் பாத்துக்குவான்..”

 

பாண்டி சொல்ல அவள் முகத்தில் கவலையின் ரேகை அதிகரித்திருந்தது..

 

“சரி.. இப்ப இது முடிச்சிட்டோம்.. அடுத்தது சேர்ல உக்காந்த பிறகு என்ன பண்ணனும்னு பார்க்கலாமா?” 

 

பாண்டி கேட்க “இல்லண்ணா.. எனக்கு வீட்டுக்கு போக டைம் ஆயிடுச்சு.. நான் கிளம்புறேன்.. நாளைக்கு வந்து மிச்சத்தை பாத்துக்கலாமே..” இப்போதைக்கு அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்றால் போதும் என்பது போல் இருந்தது அவளுக்கு..

 

“சரிங்க சிஸ்டர்.. நீங்க கிளம்புங்க.. ஆனா நாளைக்கு வந்த உடனே நடிச்சு பாக்குறதுக்கு முன்னாடி சாப்பாட்டுல.. கலர்ஸ்..  அப்புறம் எல்லா விஷயங்கள்லயும் உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் என்னென்னன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி நல்லா ஞாபகத்தில வெச்சுக்கோங்க.. ஏன்னா அடுத்து நீங்க டின்னருக்கு ஏதாவது சாப்பாடு ஆர்டர் பண்ணும்போது ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணனும்.. நீங்க போட்டுட்டு வர டிரஸ் இது எல்லாமே ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிச்சதா இருக்கணும்..”

 

“சரி நாளைக்கு நான் ஒரு பேப்பர்லயே எல்லாத்தையும் எழுதிக்கிட்டு வர்றேன்..” என்றாள் மதி.. 

 

“என் கையெழுத்து எல்லாம் நல்லா இருக்காது.. புரியவும் புரியாது.. கோழி கிளறுன மாதிரி இருக்கும்.. நான் வேணா இங்க வந்தப்பறம் வாயிலேயே சொல்லிக்கறேன்..” எனவும் பார்கவியும் மதியும் களுக்கென சிரித்தார்கள் அதை கேட்டு..

 

அவன் வெட்கத்தோடு முகத்தில் அசடு வழிய தலை குனிந்து அமர “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ வாயாலே சொல்லு தீரா..” என்று சொல்லி பிரச்சனையை முடித்து வைத்தான் பாண்டி..

 

அதன் பிறகு ஒருவழியாய் மதி தன் வீடு வந்து சேர்ந்தாள்..

 

இரவு முழுவதும் அவளால் உறங்கவே முடியவில்லை.. என்ன என்னவோ எண்ணங்கள்.. உறங்கிய பிறகும் என்னென்னவோ கனவுகள்.. எல்லாவற்றிலும் தீரன் மட்டுமே நிறைந்திருந்தான்.. 

 

காலையில் எழுந்ததும் “எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் அவரைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கேன்..? என்னன்னே தெரியலை.. ரொம்ப டென்ஷனா இருக்கு..” என்று தனக்குள்ளேயே புலம்பி கொண்டவள் கல்லூரி செல்ல வேண்டும் என்ற நினைப்பு வரவும் வேகவேகமாய் காலை வேலைகளை பார்த்து முடித்து கல்லூரிக்கு கிளம்பினாள்..

 

இங்கே தீரனுக்கும் அதே நிலைதான்.. இரவு முழுவதும் கண்ணில் உறக்கம் அண்டாமல் மதி முகத்தை மட்டுமே மனதில் தாங்கி இருந்தான் அவன்.. எங்கு பார்த்தாலும் அவள் முகமே அவன் கண் முன் வந்து நின்று அவனின் தவிப்பான நிலையை பார்த்து கைகொட்டி சிரித்தது…

 

அப்படியே புரண்டு புரண்டு படுத்திருந்து எழுந்தவன் மறுநாள் பத்து மணிக்கு படப்பிடிப்பு என்று சொல்லி இருக்க அதிகாலையிலேயே கிளம்பி ஏழு மணிக்கே படபடப்பு தளத்திற்கு வந்திருந்தான்.. 

 

யாரும் இன்றி அந்த இடத்தை பெருக்கும் தொழிலாளி ஒருவர் மட்டும் பெருக்கிக் கொண்டிருக்கவும் அவர் தீரனை பார்த்து “ஏன்பா இன்னும் யாருமே வரலையேப்பா.. நீ என்ன இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்க? எல்லாம் ஒன்பது மணிக்கு மேல தான் வருவாங்கன்னு பேசிக்கிட்டாங்களே..”

 

“ஆமா ணே.. எனக்கு இந்த பக்கம் வேற ஒரு வேலை இந்துது.. அதுக்காக வந்தேன்.. அப்படியே அது முடிஞ்சா மாறிக்கு மறுபடியும் வூட்டுக்கு போய் வர ஒரே சோம்பலா இருந்திச்சுண்ணே.. அதான் இங்கே வந்து குந்திக்கிலாம்னு வந்துட்டேன்..”

 

எதையோ சொல்லி அவன் சமாளிக்க அவரும் தலையாட்டி கொண்டே போய்விட்டார்..

 

இங்கே கல்லூரிக்கு வந்த மதியழகிக்கோ பாடம் எடுப்பதில் மனம் செல்லவே இல்லை.. எதை செய்தாலும் தீரனின் முகம் வந்து கண்முன் நின்று அவளை தடுமாற வைத்தது.. பாடம் எடுக்கும் போது கூட இரண்டு மூன்று இடங்களில் அவள் ஏதோ தவறாக சொல்லி விட அதை மாணவர்கள் சுட்டிக்காட்டி அவளை திருத்தும் அளவிற்கு அவள் நிலை போய் இருந்தது..

 

உன்னைப் பார்த்த பின்பு

நான் 

நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான்

இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று

நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று

இதயம் தெளிந்தேன் 

இளமை இளமை 

பாதித்தேன் 

கொள்ளை கொண்ட 

அந்த நிலா என்னைக்

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி இன்னும்

வேண்டும் வேண்டும் என்றதே..

 

ஏன் பிறந்தேன் என்று

நான் இருந்தேன்

உன்னைப் பார்த்தவுடன் 

உண்மை நான் அறிந்தேன் 

என் உயிரில் நீ

பாதி என்று

உன் கண்மணியில்

நான் கண்டு கொண்டேன்

எத்தனை பெண்களைக்

கடந்திருப்பேன்

இப்படி என் மனம்

துடித்ததில்லை

இமைகள் இரண்டையும்

திருடிக்கொண்டு

உறங்கச் சொல்வதில்

நியாயமில்லை 

நீ வருவாயோ

இல்லை மறைவாயோ 

ஏ ஏ ஏ ஏ 

தன்னைத் தருவாயோ

இல்லை கரைவாயோ..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!