லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 19
தன்னை கட்டி அணைத்து தன் மீது தலை சாய்த்திருந்த மதியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.. ஓரிரு நிமிடங்கள் அவனுக்கு உடலிலும் நினைவிலும் எந்த அசைவும் இல்லை.. நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிசயத்தை நம்ப முடியாமல் அப்படியே உறைந்து இருந்தான் அவன்..
சில நொடிகளில் தன் உரைநிலையில் இருந்து வெளியே வந்தவன் அவள் நாடியில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி அவள் கண்களோடு தன் பார்வையை கலக்க விட்டவன் “வரமாட்டேன்னு சொன்னீங்க?” அவள் காதில் மட்டும் கேட்கும்படியாக ரகசியமாய் கேட்க அவளோ “வேற வழியில்லாமல் வர வேண்டியதா போச்சு.. இனிமே உங்களை தவிர எனக்கு வேற வழி கிடையாது.. ப்ளீஸ்.. இதுக்கு மேல இப்ப எதுவும் கேட்காதீங்க.. எதுவா இருந்தாலும் நம்ம இங்கிருந்து கிளம்பினப்பறம் நான் விவரமா சொல்றேன்..”
சொன்னவளை கண்களில் இன்னும் வியப்பு விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தோளில் கை வைத்து அணைத்தார் போல் அவளை அழைத்துக் கொண்டு நடக்க தொடங்கவும் அவளோ அவன் வயிற்றை சுற்றி தன் கைகளால் வளைத்து அவனோடு தன்னை இன்னும் இறுக்கிக் கொண்ட படி நடந்தாள்..
அவளுடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு வரிசையாக வியப்பையும் ஆச்சரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தது.. மெல்ல அவளை அழைத்து போய் இருக்கையில் அவளை அமர வைக்க அவன் கையை விட்டு தன் கையை விலக்கினாள் இல்லை அவள்..
ஏனோ அவனை உடும்பு பிடியாய் பிடித்துக் கொள்ளும் எண்ணத்தில் வந்திருப்பது போலவே காட்சி தந்தாள் அவள்..
தீரனுக்கே அவ்வளவு நேரத்திற்கு பிறகும் பிரமிப்பு அகலாமல் இருக்க அங்கே அமர்ந்திருந்த இன்னும் இருவருக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் யாரோ ஒரு கூடை நெருப்பு கனலை தூக்கி தங்கள் தலையில் கொட்டினார் போல் உடம்பெல்லாம் எரிந்தது அந்த காட்சியை பார்த்து..
இந்தர் மலரழகி இருவரும் தாங்கள் பார்த்ததை நம்ப முடியாமல் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் எதிரில் நடந்து கொண்டிருந்த காட்சியை தெளிவாக பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்..
இங்கே தீரன் அருகில் இருந்த விடுதியின் சிப்பந்தியை அழைத்து இருவருக்கும் பிடித்த உணவாக எடுத்து வரச் சொல்லிக் கொண்டிருந்தான்..
அந்த சிப்பந்தி அவைகளை எடுத்து வர செல்ல தீரன் தன் கையை எடுத்து மேஜை மேல் வைக்க இயல்பாக தன் கை விரல்களை அவன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டாள் மதி.. அவளுக்கோ அவனோடு அப்படி அன்னியோன்யமாக நடந்துக் கொள்ள.. ஒரு இம்மி அளவு தயக்கம் கூட இல்லை..
அவர்கள் சொல்லி வைத்திருந்த உணவு மேஜை தேடி வந்துவிட அதை எடுத்து இரண்டு தட்டுகளிலும் பரிமாறியவள் தன் முன்னே தன் தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து மசாலாவில் தோய்த்து அவன் வாய்க்கு நேரே நீட்டவும் அவனோ தான் பூலோகத்தில் தான் இருக்கிறோமா என்பது போல் பெரிதாக விழிகளை விரித்து உருட்டினான்..
“என்ன தீரா.. சாப்பிடுங்க.. நான் எவ்வளவு ஆசையா கொடுக்கிறேன்.. வாங்கிக்க மாட்டீங்களா?”
அவள் அப்படி கேட்ட பிறகு அதை மறுப்பதற்கு தீரன் என்ன இப்போது பழைய ஆஞ்சநேயர் பக்தனா.. இல்லையே.. ஆஞ்சநேயரிடம் அவன் தன் பிரம்மச்சர்ய விரதத்தை விடுவதாக சொல்லி மன்னிப்புக் கோரி கிட்டதட்ட நான்கைந்து நாட்களாகின்றன..
என்று மதியை கண்ணால் கண்டானோ அன்றே ஆஞ்சநேயர் படத்திற்கு முன் நின்று தன் மனம் அலை பாய்வதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டவன் ஆனால் அதை தடுக்க முடியவில்லை.. என்றும் இனிமேலும் தடுக்க முடியாது என்றும் இறுதியாக அவரிடம் முறையிட்டிருந்தான்..
அவளே உணவை அவனுக்கு ஊட்டிய பிறகு அவனுக்கு இருந்த அத்தனை தயக்கமும் பறந்தோடி போனது.. அவன் தட்டில் இருந்த பிரியாணியை கொஞ்சமாக எடுத்து அவள் வாய்க்கு நேராக நீட்டினான்.. அவளோ மொத்தமாய் அவன் கை விரல்கள் நாவில் படுமாறு அவன் கொடுத்த சாப்பாட்டை தன் வாய்க்கு உள்ளே இழுத்துக் கொண்டாள்..
நாடி நரம்புகள் எல்லாம் மதியழகியின் இதழ்கள் மற்றும் நாவின் ஸ்பரிசம் ஒரு புது சிலிர்ப்பை உண்டாக்க உடம்பில் ஏதோ புது ரத்தம் பாய்ந்தது போல் ஒரு நொடி காதல் உணர்வுகளின் எல்லையை தீண்டி வந்தான் தீரன்..
அதன் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி கொண்டும் கலகலவென்று பேசிக்கொண்டும் உண்டு முடித்தார்கள்..
“உங்களை தொந்தரவு பண்றதா சொன்னிங்களே அந்த பையன் வந்திருக்கானா? நம்ம நடந்துக்கறதெல்லாம் பாக்கறானா?” என்று மெதுவாய் ரகசியமாய் தீரன் கேட்க அவளோ “அவன் மட்டும் இல்லை.. உங்களை தொந்தரவு செய்யறதா சொன்னீங்களே அந்த பொண்ணும் வந்து இருக்கா..”
எந்த அதிர்வும் இல்லாமல் சாதாரண குரலில் சொல்ல அவனோ “நான் உங்ககிட்ட அந்த பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லையே.. உங்களுக்கு எப்படி அவளை தெரியும்?” என்றான்..
“தெரியும்.. நீங்க சொல்லல.. ஆனா நான் அவளை பாத்துட்டேன்..”
“எப்ப பாத்தீங்க எப்படி பார்த்தீங்க?” அவன் கேட்க “இங்க பாருங்க.. அவங்க ரெண்டு பேரும் நம்மளையே தான் பாத்துட்டு இருக்காங்க.. நீங்க எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசாதீங்க.. சாதாரணமா நீ வா போ னே பேசுங்க.. அதுதான் சரியா இருக்கும்.. நம்ம இப்ப ரகசியமா பேசறது அவங்க காதுல விழாம இருக்கலாம்.. ஆனா இதுல ஏதாவது ஒரு வார்த்தை காதில விழுந்தாலும் அவங்க உஷார் ஆயிடுவாங்க.. நம்ம ரெண்டு பேரும் காதலிக்கறதை நம்ப மாட்டாங்க.. தயவு செஞ்சு பாண்டி அண்ணன் சொன்ன மாதிரி சாதாரணமா நீ வா போனே கூப்பிடுங்க..”
அவள் சொல்லவும் “சரி மதி.. அப்ப கெளம்பலாமா கண்ணம்மா..?”
அன்றும் அவன் அப்படித்தான் அவளை அழைத்தான்.. ஏனோ அவன் அப்படி தன்னை கண்ணம்மா என்று அழைக்கும் போது அந்த ஒரு வார்த்தையில் உயிரே உருகி விடுவது போல் ஒரு உணர்வு அவளுக்கு..
கண்கள் பனித்து விட இமை சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவள் “நீங்க இப்படி கண்ணம்மான்னு என்னை கூப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எப்பவும் என்னை இப்படியே கூப்பிடுவீங்களா?”
அவள் கேட்டதும் அவனோ “இது ஒரு நாள் நடிப்பு தானே? அதுக்கப்புறம் அப்படி கூப்பிடுறதுக்கு எனக்கு எங்க வாய்ப்பு கிடைக்கப் போகுது..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே “உனக்கு பிடிச்சிருக்குன்னா அப்போ காலம் முழுக்க உன்னை அப்படியே கூப்பிடுறதுக்கு கூட நான் ரெடி தான்..”
அவன் சொன்னதை கேட்டவள் இடம் மறந்து அவனை அணைத்து மறுபடியும் அவன் மார்பில் சாய்ந்தாள்..
அவனுக்கோ தான் ஏதோ இன்ப லோகத்துக்கு நிஜமாகவே போய்விட்டோமோ என்று சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது..
“சரி.. நம்ப போய் அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணலாமா?”
கேட்டவளை புரியாமல் பார்த்தவன் “அவங்க எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்க “நல்லா தெரியும்.. உள்ள நுழையும் போதே பாத்துட்டேன்.. வாங்க.. என்று அணைத்தாற் போலவே அவனோடு இந்தர் மலரழகி இருந்த மேஜையை நோக்கி நடந்தாள்..
அங்கே இந்தரும் மலரழகியும் நேரெதிர் நாற்காலிகளில் அமர்ந்து இருக்க அவர்கள் அருகே போனதும் “மலர்.. நீ கொஞ்சம் தள்ளி அந்த பக்கம் உட்கார்ந்திக்கிறாயா? நான் என் தீரனோட பக்கத்தில தான் உட்கார்ந்துப்பேன்..”
மலரழகியை அர்த்தமாய் பார்த்துக் கொண்டே உரிமையோடு அவள் கேட்க மலரோ இன்னும் கூட தன் உடன் பிறப்பை அந்த இடத்தில் கண்ட அதிர்ச்சியிலிருந்து விலகாமல் அப்படியே விழி விரித்தவள் “ஹான்.. ஹா..ஹான்.. இதுல உட்கார்ந்துக்கறீங்களா?” சட்டென்று சொல்லவும் அதைக் கேட்டு இந்தர் தீரன் இருவருமே வாயை பிளந்தார்கள்..
தீரனுக்கு ஏற்கனவே மலர் அழகியின் மேல் படிக்கும் வயதில் அவள் நடந்து கொள்ளும் விதத்தை எண்ணி அதிகமான கோபம் இருக்க இப்போது அவள் மதியழகியின் தங்கை என்று தெரிந்ததில் இன்னும் அதிகமாக கோபப்பட்டான்.. அவனுக்கு தான் தெரியுமே அவளைப் படிக்க வைக்க மதி அழகி இரவு பகல் பாராமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறாள் என்று..
அப்படி இருக்கும்போது இந்தப் பெண்ணுக்கு எப்படி காதல் அதுவும் தன்னைவிட 12 வயது மூத்தவனை விரும்ப தோன்றியது..
முழுமூச்சாக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்க வேண்டும் அல்லவா அவள்.. இப்படி மலர் அழகியின் மீது அவ்வளவு கோபம் பொங்கி எழுந்திருக்க அங்கே தன் தம்பியை கண்டவனுக்கோ தான் காண்பது ஏதேனும் கனவு காட்சியோ என்று தோன்றியது..
இந்தர் இப்படி ஒரு வேலையை செய்திருப்பான் என்ற எண்ணம் கூட அவன் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
“என்னடா இது..? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற… என் வளர்ப்பா நீ.. உன்னால எப்படி இப்படி யோசிக்க முடிஞ்சது? வெக்கமா இல்ல.. சோமாரி.. பேமானி”
அவன் பேசியதை கேட்ட மதி அவன் கையை இறுக்கிப்பிடித்து இருங்க தீரா.. சாருக்கு நான் புரிய வைக்கிறேன்.. நான் உன்கிட்ட சொன்னப்ப நீ நம்பல.. நல்லா பாத்துக்கோ.. இவர்தான் தீரன்.. என்னோட லவ்வர்.. நான் இவரைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..” என்றவழி தீரன் பக்கம் திரும்பி கொஞ்சலாய் “என்ன தீரா? என் எதிரே அந்த மெட்ராஸ் பாஷை பேச மாட்டேன்னு சொல்லி இருந்தீங்க இல்ல..? அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” என்று கேட்க தீரனோ அதிர்ச்சியில் இருந்தவன் இவளால் எப்படி இந்த சூழ்நிலையிலீ இவ்வளவு சகஜமாக நடிக்க முடிகிறது என்ற யோசனையில் ஆழ்ந்து விட்டிருந்தான்..
அப்போதைக்கு அவனால் அவ்வளவு இயல்பாக நடிக்க முடியவில்லை.. உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த பதைபதைப்போடு இந்தர் பக்கம் திரும்பியவன் “டேய் நீ மதியை தொந்தரவு பண்ணியா? அவளை லவ் பண்றேன்னு சொன்னியா?” என்று கேட்க அவனோ பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்று இருந்தான்..
அவன் சட்டையை கொத்தாக பிடித்தவன் அவன் கன்னம் மாறி கன்னம் நான்கு அறை வைத்தவன் “என் தம்பியாடா நீ? இதுக்கு நீ செத்துப் போய் இருக்கலாமேடா.. ஒரு பொண்ணுக்கு எவ்வளவு வலி தந்து இருக்கு நீ.. அவளை விரும்பினது கூட தப்பில்லடா.. அவ இஷ்டம் இல்லைன்னு சொன்ன அப்புறம் அவளை திரும்பத் திரும்ப தொந்தரவு பண்ணி இருக்க இல்ல.. எப்படிடா உனக்கு மனசு வந்தது.. சீ.. இனிமே என்னை அண்ணன்னு கூப்பிடாத..”
மதி தீரனின் கையைப் பிடித்து இந்தரிடமிருந்து விலக்கிவிட்டு “தீரா நீங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தெரிஞ்சிருச்சில்ல? இனிமே அவங்க சரியா நடந்துப்பாங்க.. என்ன இந்தர்.. என்ன மலர்.. நான் சொல்றது சரிதானே..?”
அவள் கேட்க மலர்ழகியோ அவள் கேள்வியில் விக்கித்துப் போனாள்.. முதல் முறையாக தன்னை அழகி என்று அழைக்காமல் தன் உடன் பிறந்தவள் மலர் என்று மற்றவர்களைப் போலவே அழைத்திருக்கிறாள்.. அது அவளுக்கு அதிக வலியை கொடுக்க “அக்கா நீ என்ன அழகின்னு தானே கூப்பிடுவ.. ஏன் கா இப்ப எல்லாரும் கூப்பிடுற மாதிரி மலர்னு கூப்பிடற?” என்று குரலில் வருத்தம் சொட்ட சொட்ட கேட்க அவளைக் கூர்ந்து பார்த்த மதி “என்ன செய்ய மலர்.. நீ செஞ்ச வேலை அழகானதா இல்லையே.. இந்தர் எனக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தானோ அதைதானே நீ தீரனுக்கு பண்ணி இருக்கே.. நீ தீரனை விரும்புனதை கூட நான் மன்னிச்சிடுவேன்.. ஆனா அவரை துரத்தி துரத்தி வலுக்கட்டாயமா உன்னை ஏத்துக்கிட்டே ஆகணும்னு அவரை நிம்மதி இல்லாம பண்ணி இருக்க பாரு.. அதை என்னால மன்னிக்கவே முடியாது.. ஒருத்தரை விரும்புறதுக்கு உனக்கு முழு சுதந்திரம் உண்டு.. ஆனா அவர் உன்னை திரும்ப விரும்பி தான் ஆகணும்னு சொல்றது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.. காதல் விருப்பம் இதெல்லாம் இயல்பா வரணும்.. எப்ப அது தீரனுக்கு உன் மேல வரலையோ அப்பவே நீ உனக்குள்ள உன் காதலை வச்சுக்கிட்டு தனியா இருக்கேன்னு சொல்லி இருந்தா கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன்.. ஆனால் அவர் காதலிச்சு தான் ஆகணும்னு அவரை வற்புறுத்தனதை என்னால மன்னிக்கவே முடியல மலர்.. இனிமேலும் உன்னை அழகினு நான் கூப்பிட மாட்டேன்.. ஏன்னா என்னை பொறுத்த வரை மனசால நீ அழகாய் இருந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு..”
மலரழகி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்..
“அக்கா.. நீ இவரை லவ் பண்றேன்னு எனக்கு தெரியாது அக்கா.. தெரிஞ்சிருந்தா அவர் பக்கம் கூட நான் திருப்பி இருக்க மாட்டேன்.. உன் அன்பு இல்லாம நான் ரொம்ப கஷ்டப்படுவேன் அக்கா.. ப்ளீஸ் அக்கா என்னை வெறுத்துறாத..”
“அது மட்டும் என்னால முடியாதுடி.. நான் செத்தே போனாலும் நான் செத்ததுக்கு அப்புறம் உயிரோடு இருக்கிற அந்த கடைசி நிமிஷத்துல கூட என் இதயம் உனக்காக தான் துடிச்சிட்டு இருக்கும்.. ஏன்னா நான் என்னைக்குமே உனக்கு அக்காவா இருந்தது இல்லையே.. அம்மாவா தான் இருந்து இருக்கேன்.. அம்மாவால என்னிக்கும் தன் பிள்ளைகளை வெறுக்க முடியாது..”
அதற்குள் தீரனின் கைகளை இறுக பற்றியவள் “உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் உறுதியா சொல்லிக்கிறேன்.. கேட்டுக்கோங்க.. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.. கூடிய சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்க போறோம்.. இதுல எந்த மாற்றமும் இல்லை.. இதுக்கு அப்புறம் எங்க ரெண்டு பேர்ல யாரை நீங்க தொந்தரவு பண்ணாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்.. அதுக்கப்புறம் நடக்கிற எல்லா விளைவுகளுக்கும் நீங்கதான் பொறுப்பு..”
சொன்னவள் தீரனின் கைப்பிடித்து அந்த இடத்தை விட்டு விலக திரும்ப அங்கே வந்து அவர்கள் எதிரில் நின்றவனை பார்த்து அப்படியே ஒரு நொடி மூச்சடைத்து சிலையாகி விட்டாள் மதி..
அவர்கள் எதிரில் வந்து நின்றான் சேகர்..
தொடரும்..