லவ்.. லவ்.. எத்தனை வயது..!! -2
அந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் இறக்கையில்லா குறையாக சீறிப் பாய்ந்து பறந்து வந்து அந்த கல்லூரி வாசலில் ஒரு வட்டமிட்டு நின்றது.. அதை ஓட்டி வந்த இளம் யுவனை இறுக்க அணைத்தபடி அவன் பின்னால் அமர்ந்திருந்தாள் ஒரு இளம் யுவதி..
ஒரு நீல நிற டெனிம் ஷாட்ஸூம் மேலே உடம்பை இறுக்கி பிடித்தாற் போல் ஒரு வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தவள் வண்டி நின்ற பிறகும் அந்த இளைஞனை விடாமல் இறுக கட்டி அணைத்தபடியே அவன் வேகத்தில் பயந்து கண்களை மூடி அவன் முதுகில் சாய்ந்திருந்தாள்..
“ஹே பேபி.. காலேஜ் வந்துருச்சு.. என்ன பயத்துல தூங்கிட்டியா?”
“பயமா தான் டா இருந்தது.. ஆனா உன்ன கட்டி புடிச்சிகிட்டா பயமே தெரியல.. டேய் நான் அப்படியே உன்னை கட்டி பிடிச்சுட்டு வரேன் டா.. இப்படியே நீ என்னை டிரைவ் கூட்டிட்டு போயிட்டே இரு.. நம்ம எங்கேயாவது போய்க்கிட்டே இருக்கலாம்.. அப்படியே ஏதாவது மூவி டேட் போய் ஜாலியா மூவி பாத்துட்டு பீச்சுக்கு போயிட்டு ஈவினிங் அங்க ரிசார்ட்ல..”
அந்தப் பெண் இளமை மயக்கத்தில் கிறக்கமாய் பேசிக்கொண்டே போக அவனோ “சாரி பேப்ஸ்.. அது மட்டும் என்னால முடியாது.. எனக்கு இப்ப காலேஜுக்கு போயே ஆகணும்.. இந்த டைம மட்டும் நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீ கிளம்பி போ.. நாளைக்கு பார்க்கலாம்.. நாளைக்கு காலைலயும் இன்னிக்கு மாதிரி அந்த ஐஸ்கிரீம் பார்லர்லயே மீட் பண்ணலாம்.. நாளைக்கு மூவி போலாம்.. இன்னிக்கு மாதிரி 11 மணிக்கு எல்லாம் காலேஜ் வர வேண்டாம்.. ஒரு 12 மணிக்கு மேல வந்தா போதும்..”
அவள் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினாள்.. “என்னடா இப்படி டீல்ல விடுற?”
விழிகளில் ஏக்கத்தோடும் கிறக்கத்துடன் கேட்க “சாரி பேப்ஸ்.. எனக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சு.. இப்போ உன்னோட பேசறதுக்கு டைம் இல்ல.. பாய்..” சொல்லிவிட்டு காலேஜ் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக தன் வகுப்பிற்கு சென்றான் அவன்.. அவன் இந்தர்..
நிஜமாகவே பெயருக்கேற்றார் போல் இருபது வயது இந்திரனாகவே இருந்தான் அவன்.. ஆறடி உயரத்தில் உடலின் எந்த பாகத்திலும் ஒரு துளி மிகையான சதை இல்லாத ஒட்டிய வயிறும் அகண்டு விரிந்த தோள்களும் என பார்த்த உடனேயே பெண்களை விட்டில் பூச்சிகளாய் அவன் அழகு என்னும் நெருப்பு மயக்கி விழ வைத்தது.. அவனோ அவர்களுக்கு எப்போதுமே எட்டா கனியாய் தான் இருந்தான்..
அழகான பெண்கள் எல்லோரையும் தன் நட்பு வட்டத்திற்குள் இணைத்திடுவான் தான்.. ஆனால் எவரிடமும் எல்லை மீற மாட்டான்.. அதே சமயம் ஆண் நண்பர்களுடன் வெளியே சுற்றுவதை விட அழகான பெண் நண்பர்களோடு சுற்றுவதில் நேரம் செலவழித்தான்..
அவனுடைய ஆண் நண்பர்கள் அது குறித்து கேட்டால் “அவங்களோட போறதுல ஒரு கிக் இருக்குடா.. எங்க போனாலும் எல்லாரோட பார்வையும் நம்மள சுத்தி இருக்கும்.. அந்த கியூரியஸான அட்டென்ஷன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா.. அதுல ஒரு திரில் இருக்கு.. அவங்க எல்லாரும் இது தப்புன்னு சொல்ல சொல்ல அதையே தான் பண்ணனும்னு தோணுது..”
அவன் சொல்லும்போது அவனுடைய நண்பர்கள் “அப்படி பார்த்தா உனக்காக என்ன வேணா செய்யறதுக்காக அவ்வளவு பொண்ணுங்க காத்துகிட்டு இருக்காங்க.. ஆனா ஒருத்தரையும் ஓரளவுக்கு மேல உன்னை நெருங்க விட மாட்டேங்கறியே..”
அவர்களுக்கெல்லாம் அவனுக்கு அமைவது போல் தங்களுக்கு நண்பிகள் அமைந்திருந்தால் இத்தனை நேரம் ஒரு நாலு பேரையாவது கரெக்ட் செய்திருப்போமே என்ற ஏக்கமும் பொறாமையும் உள்ளுக்குள்..
அவனோ அவனுடைய இளமைக்கும் அழகுக்கும் பரிசாய் கிடைக்கும் இந்த பொக்கிஷ தருணங்களை இப்படி வீணாக்கி கொண்டிருக்கிறானே என்ற ஆதங்கமும் சேர்ந்து கொள்ளும் அவர்களுக்கு..
அவர்கள் அப்படி கேட்கும் போது “அவங்களும் உங்களை மாதிரி எனக்கு ஃப்ரெண்ட்ஸா இருக்கற கேர்ள்ஸ்.. அவ்வளவுதான்.. யாரும் என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது.. என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கணும்னா அதுக்கு தகுதி இருக்கிறது ஒரே ஒரு ஆளுக்கு தான்.. வேற யாரும் அந்த இடத்தை நெருங்க கூட முடியாது..”
சொல்லிவிட்டு அந்தப் பெண் யார் என்று சொல்லாமலேயே அப்படியே மழுப்பி கடந்து விடுவான்.. இது தினந்தோறும் அவனுக்கு வாடிக்கையாகவே போயிருந்தது..
கல்லூரி வாயிலில் தன்னுடைய பைக்கில் நின்று கொண்டு மற்ற நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் இந்தரின் நெருங்கிய நண்பன் ரகு..
“டேய் ரகு.. இந்த இந்தருக்கு என்னடா ஆச்சு? தினமும் காலேஜுக்கு வந்துடறான்.. என்னைக்காவது ஒரு நாள் காலேஜ் முழுசா கட் அடிச்சிட்டு ஃபுல் டே நம்ம கேர்ள்ஸோட ஊரு சுத்தலாம்னு சொன்னா அதுக்கு மட்டும் ஒத்துக்கவே மாட்டேங்குறான்.. இவன் ஏன்டா இப்படி இருக்கான்? நம்ம எல்லாம் பொண்ணுங்க கிட்ட இருந்து ஒரு பார்வைக்கு கூட வழியில்லாம இருக்கோம்.. இவனை பார்த்தவுடனே பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து கட்டிக்கிட்டு முத்தம் கொடுக்கறதுன்னு எல்லாத்துக்கும் ரெடியா இருக்காங்க.. ஆனா அதுக்கு எல்லாம் அசைஞ்சு கொடுக்காம எல்லாரையும் கொஞ்சம் தள்ளியே நிக்க வைக்கறான்.. அவனுக்கு எல்லாம் ஈசியா கிடைக்குதுல்ல..? அதன்டா அதோட அருமை அவனுக்கு புரியல.. ம்ம்.. என்கிட்ட மட்டும் பொண்ணுங்க இப்படி நடந்துக்கிட்டாங்கன்னா இந்நேரம் நான் இருக்கிற ரேஞ்சே வேற.. எத்தனை பொண்ணுங்களை இவ்வளவு நேரம் மடிச்சிருப்பேன்.. தெரியுமா..?”
இந்தரின் மற்றொரு நண்பன் ரகுவிடம் புலம்ப “அதாண்டா உன்னை கடவுள் அவனை மாதிரி படைக்கல.. பொண்ணுங்க எல்லாம் பாவம் இல்ல.. அப்புறம் தப்பி தவறி கூட இந்த முன்னாடி இந்த மாதிரி பேசி வைக்காத அவன் பொண்ணுங்களோட ஊர் சுத்தறானே தவிர அவர்களை ரொம்ப மதிக்கிறான் நீ இப்படி பேசினது தெரிஞ்சது உன் பிரெண்ட்ஸ் இப்பவே கட் பண்ணிடுவான்…”
ரகு சொன்னதைக் கேட்டு “ஐயையோ இவனோட ஃப்ரெண்டா இருக்கறதனால தான் ஏதோ ஒன்னு ரெண்டு பொண்ணுங்களாவது நம்ம பக்கம் பார்க்குது.. அதுக்கும் வேட்டா? இனிமே இப்படி பேசவே மாட்டேன் டா..” பம்மினான் அந்த நண்பன்..
“ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.. டேய்.. அவன் தினமும் காலேஜுக்கு வர்றதே ஒருத்தரை பாக்குறதுக்காக தான்.. அது யாருன்னு அவன் வெளிப்படையா சொல்லலன்னாலும் அது யாருன்னு எனக்கு தெரியும் டா..” என்றான் ரகு
“யாருடா அது?”
“அவன் எந்த கிளாஸ்க்கு கட் அடிக்காம காலேஜ் ரெகுலரா வரான்னு கவனிச்சு இருக்கியா? மதியழகி மேம்.. அவங்க கிளாஸை அவன் இதுவரைக்கும் கட் பண்ணதே இல்ல.. ஏன் தெரியுமா? அவங்களை தினமும் பார்க்கலன்னா பையனுக்கு அன்னைக்கு நாளே ஓடாது..”
“மதியழகி மேமா? டேய்.. அவங்க நம்மள எல்லாம் விட அட்லீஸ்ட் ஒரு அஞ்சாறு வயசாவது பெரியவங்களா இருப்பாங்களேடா..”
“ஆமா.. அது உனக்கு தெரியுது.. எனக்கு தெரியுது.. ஆனா அவனுக்கு தெரியலையே.. சொல்லுவாங்க இல்ல? காதலுக்கு கண் இல்லைன்னு.. அவனுக்கு கண்ணு தெரியாம போய் ரொம்ப நாள் ஆகுது டா..”
“ஓ.. பையன் இப்படி ஏடாகூடமா சிக்கிட்டானா? அதானா வேற யாருகிட்டயும் சிக்க மாட்டேங்குறான்..? பார்ப்போம்.. அது சரி.. வீக் எண்ட்ல காலேஜ் கிடையாதேடா.. அப்ப என்ன பண்ணுவான்..?”
“அந்த ரெண்டு நாள் அவன் வேற யாரோடயும் இருக்க மாட்டான்.. அந்த ரெண்டு நாள் அவங்க அண்ணனுக்கு மட்டுமே சொந்தமான நாள்.. முழுக்க முழுக்க அவங்க அண்ணனோட தான் இருப்பான்.. அவங்க அண்ணனும் சனி ஞாயிறுன்னா எந்த ஷூட்டிங்கும் போகாம அவனோட தான் ஃபுல்லா ஸ்பெண்ட் பண்ணுவார்.. அப்படி ஒரு பாசம் அண்ணன் தம்பிக்குள்ள..”
“இவன் இப்படி ஏடாகூடமா சிக்கி இருக்கிறது தெரிஞ்சா.. பாவம்.. தீரன் அண்ணா என்ன பண்ணுவாரு..?”
“ஆமாண்டா.. அதை நினைச்சா எனக்கும் ரொம்ப கவலையா தான் இருக்கு.. அவன் மதி மேம் மேல அவனுக்கு இருக்கறது லவ்வுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கானோ என்னவோ தெரியல.. எனக்கு தெரிஞ்சு அது ஒரு இன்ஃபேக்சுவேஷன் அவ்வளவுதான்.. அவனுக்கு அது புரிஞ்சா நல்லது.. புரியலன்னா.. என்ன என்ன சிக்கல்ல மாட்ட போறானோ தெரியல..” பெருமூச்சை விட்டு கொண்டு சொன்னான் ரகு..
மதியழகியின் வகுப்பு நேரத்திற்கு சற்று முன்னதாகவே வகுப்பில் டாண் என்று ஆஜராகி இருந்தான் இந்தர் என்று அழைக்கப்படும் இந்திரஜித்..
அந்த வகுப்பு மாணவர்களை பொறுத்த வரை அது தினமும் நிகழும் நிகழ்வு தான்.. மற்ற வகுப்புகளில் வாரத்திற்கு இருமுறை கூட வராமல் கட்டடித்துவிட்டு ஊர் சுற்றும் இந்தர் மதியழகியின் வகுப்பிற்கு மட்டும் ஒரு நாள் கூட தவறாமல் சரியான நேரத்திற்கு ஆஜராகி விடுவான்..
தன் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தவன் தலையை இந்த பக்கம் அந்த பக்கம் திருப்பாது வாயிலிலே கண் பதித்து தன் நினைவில் நிறைந்திருந்தவளை எதிர்நோக்கி காத்திருந்தான்..
அவன் நினைவை அப்படி முழுவதுமாய் ஆக்கிரமித்து இருந்தவள் மதியழகி.. மற்ற மாணவர்களால் ‘மதி மேம்.. மதி மேம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அழகி.. அவள் செய்யும் எதிலும் ஒரு நேர்த்தி.. ஒரு அழகு இருக்கும் அவளை போலவே.. படிய வாரி பின்னலிட்ட கூந்தல் இடை வரை நீண்டிருக்க செவிகளில் சின்ன தோடும் அதற்கேற்ற சிறிய ஜிமிக்கியும் ஆடிக்கொண்டிருக்க முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் புருவங்களுக்கிடையே சிறிய நட்சத்திரமாய் ஒரு சிகப்பு திலகப்பொட்டும் கழுத்தில் மெல்லிய சங்கிலியும்.. விசிறிவாழையாய் மடிப்பு எடுத்து நேர்த்தியாய் கட்டிய காட்டன் புடவையும் இயல்பாகவே மாணவர்களை அவள் புறம் ஈர்த்தது..
அவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை ஆகி போனாள் அந்த கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே..
அவள் பாடம் சொல்லிக் கொடுக்கும் அழகு.. அவளின் அமைதியாக பேசும் இயல்பு.. எதையும் பொறுமையாக கையாளும் பண்பு.. மாணவர்களிடம் பொதுவாக அவள் காட்டும் அன்பு.. ஏதேனும் தவறு செய்தால் அந்த தவறை சுட்டி காட்டி அதை திருத்திக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அவள் பார்க்கும் உறுதியான பார்வை.. இது எல்லாமே இந்தருக்குள் அவளை பார்த்த முதல் நாளே அப்படியே அச்சாய் பதிந்து விட்டன..
மாடர்ன் மங்கைகளாய் அவனை சுற்றி மொய்க்கும் பெண்களுக்கு நடுவில் பார்த்தவுடன் மரியாதையும் மதிப்பும் தனிச்சையாய் தோன்றும்படி நேர் கொண்ட பார்வையும்.. யாருக்கும் அஞ்சாத துணிவும் நேர்மையும்.. எதையும் அடுத்தவருக்கு புரியும் படி சொல்வதில் நிதானமும்.. தெளிவும்.. நேர்த்தியும்.. மொத்தத்தில் ஏதோ ஒரு தனித்துவம் அவள் புறம் அவனை கட்டி இழுக்க மதியழகி இந்தரின் தாய்க்கு அடுத்த படியாய் அவனை ஆள்வதற்கான தகுதி பெற்ற ஒரே பெண்ணாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள்..
தாய்க்குப் பின் தாரம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தாய் இல்லாத தனக்கு தாரமாக வரக்கூடிய தகுதி பெற்றவள் அவள் ஒருத்தி தான் என்று முடிவு கட்டியிருந்தான் அவன்..
இன்று அவளை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. அவள் வருவதற்கு முன் அவளின் பிரத்யேக மணம் நாசியை தீண்ட கண்ணை மூடி அவளின் வாசத்தை சுவாசித்து தனக்குள் நிரப்பி அனுபவித்துக் கொண்டிருந்தான்..
அதை முழுதாய் அனுபவித்து முடிக்கும் முன் வகுப்பினுள்ளே வந்தவள் தன் செங்கனி வாய் திறந்து “மார்னிங் கைஸ் அண்ட் கேர்ள்ஸ்.. எப்படி இருக்கீங்க எல்லாரும்..?” என்க அவள் வாசத்தை சுவாசிப்பதிலும், வார்த்தைகளை வாங்கிக்கொள்வதிலும் நாசிக்கும் செவிக்கும் போட்டி நடக்க இவை இரண்டையும் அடக்கி வைத்து விழிகளோ அவளை கண்டு அவள் அழகை வாசிக்க ஏக்கம் கொண்டது..
மூன்றுக்கும் நடந்த போட்டியில் கண்களே வெற்றி கண்டது.. அவளின் கனிவான கண்களின் நேர்பார்வை.. அவளின் செவ்விதழின் தேன்மொழிகள்.. அவள் கைகளில் இருந்த பிஞ்சு வெண்டை விரல்களின் அபிநயங்கள்.. அவள் முன்னும் பின்னும் நகரும்போது சரசரத்த அவளின் சேலை மடிப்பு.. செவியில் அவள் அசைவுக்கேற்ப நடனமாடி கொண்டிருந்த குட்டி ஜிமிக்கிகள் என அவனின் பார்வை அவளையே கவனத்தில் முழுதாய் வைத்திருந்தது..
அவள் நடத்திய பாடம் எதுவுமே அவன் கவனத்தில் இல்லை.. வெளிர் கத்திரிப்பூ நிற காட்டன் சேலை அப்படியே அவள் உடலுக்கேற்றார் போல் பொருந்தி நிற்க அவள் நேர்த்தியாய் அந்த புடவையை அணிந்திருந்த பாணியையும் அவளுடைய கம்பீரமான தோற்றத்தையும்.. அவளின் தைரியத்தோடு கூடிய ஆளுமையையும்.. தன்னம்பிக்கையோடு கூடிய வித்யா கர்வத்தையும்.. அதே சமயம் ஒரு சிறு கறை இல்லாத தெளிவான ஒளிர்முகத்தையும் கண்களாலேயே மெச்சி ரசித்து கொண்டிருந்தான் இந்தர்.. கண்களை வேறு புறம் நகர்த்த முடியவில்லை அவனால்..
ஆனால் மதியழகியோ எப்போதும் போல பாடத்தை முடித்து விட்டு மாணவர்களை கேள்வி கேட்கும் நேரம் இந்தரை பார்த்து “இந்தர்.. கேன் யூ எக்ஸ்ப்ளெயின் த ஸ்டேஜஸ் ஆப் டிசைன் திங்கிங் பிராசஸ்?” என்று பட்டென கேட்டுவிட அவனோ அப்போதும் அவள் பேசும்போது அவள் இதழ் அசைவதையும் அவளின் அழகு முக பாவனைகளையும் மட்டுமே ரசித்துக் கொண்டு மௌனமாய் அமர்ந்து இருந்தான்.. அவளிடம் மொத்தமாய் தன்னை இழந்திருந்தான் பையன் அவன்..
“ஹலோ இந்தர்.. உங்களை தான் கேட்கிறேன்.. நான் கேக்குறது காதுல விழுதா.. இல்ல.. க்வெஸ்டின் புரியலையா? டு யூ வாண்ட் மீ டு ரீஃப்ரேஸ் த க்வெஸ்ட்டின்..?”
அப்போதும் அவன் அப்படியே அவளை கண்ணிமைக்காமல் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க அவன் அப்படி குறுகுறுவென பார்த்ததே அவளுக்கு தர்ம சங்கடமாய் போனது..
“இ..ந்..தர்..” சற்று குரலை உயர்த்தி அவள் அழைக்கவும் இந்தரின் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவன் அவனை உலுக்கி அவன் கனவுலகத்தில் இருந்து அவனை எழுப்பி விடவும் சரியாக இருந்தது.. “டேய் இந்தர்.. எங்கடா இருக்க..? உன்னை தான்டா கேக்குறாங்க..?” அவன் அப்படி கேட்டு உலுக்கவும் தான் தன்னிலை உணர்ந்தான் இந்தர்..
சற்றே அதிர்ந்தவன் திருதிருவென விழித்துக் கொண்டு “சாரி.. என்னை ஏதாவது கேட்டீங்களா?” என அது நேரம் வரை அந்த வகுப்பில் தான் அவன் இருந்தானா என்று எல்லோரும் சந்தேகிக்கும் படி கேட்டான் அவன்..
அவனுடைய அந்தக் கேள்வியில் பொறுமை இழந்த மதியழகி அவனை முறைத்தப்படி “ஏன் இவ்வளவு நேரமா இங்க தான உட்கார்ந்து இருந்தீங்க? உங்களை நான் கேள்வி கேட்டேனா இல்லையான்னு கூட உங்களுக்கு தெரியலையா? அப்படி என்ன சார் பண்ணிட்டு இருந்தீங்க என் கேள்வி கூட காதுல கேட்காத அளவுக்கு?”
கையை குறுக்காக கட்டிக்கொண்டு அழுத்தமான குரலில் அவள் கேட்க அவளுடைய அந்த அழகான திமிரோடு கூடிய பாவனையை மறுபடியும் ரசிக்க தொடங்கினான் கள்வன் அவன்..
“இதுல என்ன டவுட்? உங்களையே தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. உங்க அழகை தான் ரசிச்சிட்டு இருக்கேன்.. அதனால தான் நீங்க கேட்டது எதுவுமே என் காதுல விழல..” தெளிவாக பதில் சொன்னான் இந்தர்..
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே..
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே..
பல வருட பரிச்சயம் போலிருக்கும்..
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்..
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..
மரகத சோம்பல் முறிப்பாளே..
புல்வெளி போலே சிலிர்ப்பாளே..
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே..
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே..
அவள் கன்னத்தின் குழியில்…
சிறு செடிகளும் நடலாம்..
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்..
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்..
ஏதோ ஏதோ.. தனித்துவம்.. அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே..
மகரந்தம் தாங்கும் மலர்போலே..
தனி ஒரு வாசம் அவள்மேலே..
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்..
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்..
அவள் கடந்திடும்போது..
தலை அனிச்சையாய் திரும்பும்..
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்..
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்..
என்ன சொல்ல.. என்ன சொல்ல..
இன்னும் சொல்ல.. மொழியினில் வழி இல்லையே..
தொடரும்..