லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 22
அடுத்த நாள் சொன்னது போலவே தன் அத்தையோடு பெண் கேட்க வந்திருந்தான் தீரன்.. அவனோடு இந்தரும் வந்து இருக்க அவர்களை பார்த்த மலரழகியோ சற்று திடுக்கிட்டு தான் போனாள்..
தங்களை சமாளிக்க கல்யாணம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள் என்று எண்ணியவள் இப்போது நிஜமாகவே திருமணம் பேச தீரன் வந்திருக்க வாயடைத்துப் போனாள் அவர்கள் செய்கையில்..
மதியழகி ஒரு தேவதையாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு டிஃபன் காஃபி தட்டோடு வந்து நின்றாள்.. முதல் நாளே தன் தந்தையிடம் விஷயத்தை கூறியிருந்தாள் அவள்.. மதியழகி ஒருவரை விரும்பி இருக்கிறாள் என்று தெரிந்த கணமே தன் மகளுக்காக அந்த தந்தை தன் வாழ்வில் பெரும் ஆனந்தம் கிடைத்தது போல் பூரித்து போனார்..
மதி அழகி ஒருவரை மனதார விரும்பி இருக்கிறாள் என்றால் அவர் நிச்சயமாக ஒரு பத்தரை மாத்து தங்கமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார் அவர்.. தீரனை பற்றி வேறு ஏதும் விசாரிக்க கூட இல்லை அவர்..
அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று மட்டும் கேட்டுக்கொண்டு “அவங்க பேச வரட்டும்மா.. இந்த கல்யாணத்தை கூடிய சீக்கிரம் நடத்தி முடிச்சிடலாம்..” என்று அவர் சொல்லவும் மதியிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளி வந்தது..
தீரனும் மதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று சொல்லி இருந்ததால் அதிகம் தாமதிக்காமல் அடுத்த முகூர்த்தத்திலேயே அவர்கள் திருமணத்தை வைத்து விடுவது என்று முடிவு செய்து அந்த வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம் இருக்க அருகில் இருந்த கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று பேசி வைத்தார்கள்..
தீரனின் அத்தையும் மதியின் தந்தையும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள எளிமையாய் அந்த திருமண நிச்சயதார்த்தம் மதியின் வீட்டிலேயே முடிவடைந்தது..
திருமண நாளான அந்த வெள்ளிக்கிழமை வந்தது.. தன் மகளை திருமண கோலத்தில் என்றைக்காவது பார்த்து விடமாட்டோமா என்று ஏக்கத்தோடு இருந்த தமிழ்வாணன் மதியின் கல்யாண கோலத்தைக் கண்டு அப்படியே மனம் உருகிப்போய் கண்களில் ஆனந்த கண்ணீர் நிறைந்திருக்க தன் மகளை வாஞ்சையாய் வருடியவர் “இந்த நாளை நாம் பார்ப்பேனான்னு நெனச்சேன் டா.
நீ வேற வேலை குடும்பம் தங்கச்சி அவ படிப்புன்னு ஓடிக்கிட்டே இருந்தே.. நீ களைச்சு ஓய்ஞ்சு போனா இளைப்பாற உனக்கும் ஒரு இடம் வேணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. பரவால்ல தீரன் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்கணும்னு இருந்திருக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு.. நல்லா இருக்கணும் நீ.. மாப்ளையோட ஒன்னா வாழ்ந்து குழந்தை குட்டிகளோட தீர்காயுசா இருக்கணும் மதிமா..”
அவரை கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தவள் தன் மனதில் இருந்த சோகத்துக்கு வடிகாலாய் அப்படியே அவர் நெஞ்சில் சாய்ந்த படி இருக்க ஐயர் அவளை மணமேடைக்கு கூட்டி வரச் சொல்லவும் அவளை தன்னில் இருந்து விலக்கி அவள் கண்களை துடைத்து விட்டார் தமிழ்வாணன்..
“ம் போடா போ.. போய் உன் வாழ்க்கையை நல்லபடியா வாழணும்.. எப்போவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும்.. இதுதான் நீ அழற கடைசி அழுகையா இருக்கணும்.. உன்னை எப்பவுமே தீரன் சந்தோஷமா வச்சிருப்பாருங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லடா.. மணவறையில கூப்பிடுறாங்க பாரு..” அவள் தலையை வருடி அனுப்பி வைத்தார் தமிழ்வாணன்..
என்னதான் தீரனை விரும்பினாலும் தன் அக்காளை உள்ளே வந்து அந்த கோலத்தில் பார்த்த மலரழகிக்கு நெஞ்சம் நிறைந்து ஆனந்தத்தில் விம்மி புடைத்தது..
“அக்கா நீ ரொம்ப அழகா இருக்க அக்கா.. ஒரு பக்கம் என் தீரனை என்கிட்ட இருந்து பறிக்க பாக்குறேன்னு கஷ்டமா இருந்தாலும் இன்னொரு பக்கம் உன்னை இந்த கோலத்துல பார்க்கறப்போ இதே மாதிரி என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கணும்னு தோணுது அக்கா.. நீ சொல்ற மாதிரி என் தீரனும் நீயும் உண்மையா விரும்பி இருந்தா நீங்க நல்லபடியா இருங்க.. ஆனா ஒருவேளை இந்த காதல் பொய்யா இருந்தா அது இன்னும் உனக்கு கஷ்டத்தை தான்கா கொடுக்கும்..”
மலரழகியின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியவள் “நீ அதை பத்தி கவலைப்படாத மலரு.. நான் தீரனை மனசார விரும்பறேன்.. அதனால இந்த கல்யாணத்துல என்னை பொறுத்த வரைக்கும் எந்த தப்பும் இல்லை.. நான் யாரை உயிருக்குயிரா அதிகமா விரும்புறேனோ அவரைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எனக்கு இன்னும் நல்ல சந்தோஷத்தை கொடுக்கணும்னு நீ நெனைச்சா உன் படிப்பில கவனத்தை செலுத்தி ஒரு நல்ல நிலைமைக்கு வா.. அது எனக்கு ஆயிரம் மடங்கு சந்தோஷத்தை கொடுக்கும்..”
சொல்லிவிட்டு மனமேடையை நோக்கி நகர்ந்தவளின் தோளை பிடித்து மனதில் ஒருவித பாரத்தோடு அழைத்து வந்தாள் மலரழகி..
ஐயர் கூப்பிட்டதிலிருந்து மணமகளின் அற வாசலையே பார்த்துக் கொண்டிருந்த தீரன் மாலை செங்கதிராய் அரக்கு நிற பார்டர் கொண்ட மாம்பழ நிற புடவையில் விசிறி வாழை மடிப்புக்கள் மெல்ல முன்னே ஆட மிதமான நகைகளுடன் அதிக ஒப்பனை இல்லாமலேயே அழகு தேவதையாய் மெல்ல நடந்து வந்தவளை கண்ணசைக்காமல் பார்த்திருந்தான் தீரன்..
தன் தம்பியை தவிர வேறு உலகம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு புது உலகத்தை காட்ட மணப்பெண்ணாய் அவன் வாழ்வில் இன்னுமோர் அர்த்தமுள்ள உறவாய் நுழைய வந்து கொண்டிருந்தாள் மதியழகி..
அவன் பக்கத்தில் அவள் வந்து அமரவும் இந்த உலகத்தை வென்று விட்டதாய் உணர்ந்தான் தீரன்.. அவளைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவள் அவனுக்குள் நிறைந்து விட தன் மனது அவள் புறமே ஓடிக் கொண்டிருக்க அதுவரை பிரம்மச்சரிய விரதத்திற்காக ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவன் அந்த நொடியில் இருந்து மதியழகியை தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைப்பதில்லை என்று தீர்மானமாய் முடிவெடுத்துக் கொண்டான்..
என் வாழ்வில் மனைவி என்று சொல்லுக்கு உரியவள் மதியழகி.. என் பாதியாய் அவள் மட்டும் தான் இருக்க முடியும்.. இப்படி எல்லாம் அவன் மனம் நினைத்தாலும் அவனுக்கு படிப்பு இல்லாதது.. அவன் அவளைப் போன்ற நாகரீகமான நடை உடை பாவனை இல்லாமல் இத்தனை நாளாய் ஒரு அடிதடி செய்யும் ஆளாகவே பிறருக்கு தோன்றிக் கொண்டிருப்பதாலும் தான் அவளுக்கு ஏற்ற ஜோடி இல்லை என்று உள்ளுக்குள்ளே தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தான் அவன்..
அதனால் அவளிடம் தன் அன்பை சொல்லிவிட முடியாவிட்டாலும் இன்று அவள் தன் மனைவியாக போகிறாள்.. அவள் தன்னை காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை.. தன் முழு காதலையும் அன்பையும் நேசத்தையும் அவள் மீது அக்கறையாக பொழிந்து ஒரு நல்ல தோழனாக இனிமேல் அவளோடு வாழ வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்..
இப்படி யோசனைகளில் இருந்தவனை ஐயரின் குரல் அதிலிருந்து மீட்டது.. தாலியை எடுத்து அவனிடம் கொடுத்தவர் அதை மதியழகியின் கழுத்தில் கட்ட சொல்லவும் அவளின் கயல் விழிகளை பார்த்தபடி அவன் மங்கள நாணை அவள் கழுத்தில் கட்ட அவளுக்கோ தன் காதல் திருமணத்தில் நிறைவேறிய ஆனந்தத்தில் கண்கள் குளமாகின..
அதைக் கண்டவன் அதையும் அவள் வேதனையில் கண்ணீர் உகுக்கிறாள் என்று தவறாகவே புரிந்து கொண்டு “சாரி மதி..” என்று அவள் காதுகளில் மட்டும் கேட்குமாறு ரகசிய குரலில் மன்னிப்பு கேட்க அவளை அந்த வார்த்தை ரெண்டாய் கூறு போட்டு அதீத வலியை கொடுத்தது..
நான் வேதனைல அழல தீரா.. என் காதல்.. நான் யாரை உயிருக்குயிரா காதலிக்கிறேனோ.. அவரே என் கணவனா கிடைச்ச சந்தோஷத்தில அழறேன்.. வேண்டாம்.. சாரி சொல்லி என்னை கொல்லாதடா..” மானசீகமாக பேசிக்கொண்டிருந்தாள் அவனிடம்.. இந்த வார்த்தைகளை வெளிப்படையாக அவனிடம் சொல்ல தைரியம் இல்லாது உள்ளுக்குள்ளேயே வேண்டிக் கொண்டாள்..
அவனும் அடுத்ததாய் அவளை அணைத்தார் போல் அவள் நெற்றி வகுட்டில் குங்குமம் இட அப்போது மானசீகமாக அவளுக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தான்..
“எனக்கு தெரியும் மதி.. நான் உன்னை மனசார விரும்புறேன்.. ஆனா நீ என்னை காதலிக்கலைன்னு எனக்கு தெரியும்.. வேற வழியில்லாம தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறே.. நீ அன்னைக்கு சொன்ன மாதிரி இந்த கல்யாண வாழ்க்கையில நான் உனக்கு ஒரு நல்ல தோழனா இருப்பேன்.. என்னைக்கும் ஒரு கணவன்ற உரிமையை நான் உன்கிட்ட எடுத்துக்க மாட்டேன்.. சில வருஷங்களுக்கு பிறகு நாம பிரியும்போது நீ எப்படி இப்ப ஒரு புத்தம் புது பூவா எனக்கு கிடைச்சிருக்கியோ.. அதே மாதிரி தான் இந்த கல்யாண வாழ்க்கையிலிருந்தும் வெளியே போவேன்.. எந்த மன வருத்தமோ உறுத்தலோ இல்லாம உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கணும்னா தாராளமா நீ சந்தோஷமா அமைச்சுக்கலாம்.. இது இந்த தீரன் உனக்கு கொடுக்கிற வாக்கு..”
அக்னியின் முன்னாள் அமர்ந்தபடி மானசீகமாக இப்படி சத்தியம் செய்திருந்தான் தீரன்..
அதன் பிறகு திருமணம் சடங்குகள் எல்லாம் முடிந்து அவர்கள் திருமணத்தை பதிவு செய்து முடித்திருந்தனர்..
கொஞ்சம் கொஞ்சமாக மலரழகி இந்தர் இருவரின் மனமும் மாறிக்கொண்டிருக்க அதை மாறவிடாமல் கல்யாணம் நடந்து கொண்டிருந்த கோவிலுக்கும் வந்து சேர்ந்திருந்தான் சேகர்..
அந்த திருமணத்தை காண வரவில்லை அவன்.. மதியழகி தீரனுடன் திருமணச் சடங்குகளை முறையாக செய்து கொண்டிருக்க அவனோ அவர்கள் கண்களில் படாமல் நேராக சென்று இந்தர் மற்றும் மலரழகியை சந்தித்திருந்தான்..
ஆனால் இருவரும் அவனை கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை.. அதை உணர்ந்தவன் “என்ன ரெண்டு பேரும் அதுக்குள்ள சமாதானம் ஆயிட்டீங்களா? இனிமே ஒன்னும் பண்ண முடியாதுன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?”
அவன் கேட்ட கேள்வியில் அவனை இளக்காரமாய் பார்த்த இந்தர் “வேற என்ன பண்ணுவாங்க.. அதான் பார்த்தே இல்ல..? ரெண்டு பேருக்கும் கல்யாணமே முடிஞ்சிடுச்சு.. இனிமே நாங்க என்ன பண்ண முடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டது என் அண்ணாவும் இவளோட அக்காவும்.. இதுக்கு அப்புறமா நாங்க எப்படி அவங்கள வேற கண்ணோட்டத்தில பார்க்க முடியும்? நீ பேசாம உன் வேலையை பாத்துட்டு போ.. நீ மதியழகி கிட்ட.. சாரி.. என் அண்ணி கிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்கு உன்னை அங்கேயே அடிச்சு கொன்னு இருப்பேன்.. ஆனா நீ எங்களுக்காக தான் வந்து எதோ சொல்லிட்டு இருந்தேன்னு உன்னை சும்மா விட்டுட்டேன்..”
அவன் சற்றே கோவமாய் பேசவும் “பேசி முடிச்சிட்டியா? நீ அடிக்கலன்னா என்ன..? அதுதான் உங்க அண்ணன் என்ன அடி பின்னி எடுத்து அந்த குறையை தீர்த்து வச்சிட்டானே.. இப்ப கூட அதனால தான் அவன் பார்வையில படாம ஒளிஞ்சு ஒளிஞ்சு உங்களை பார்க்க வந்தேன்.. உங்க அண்ணன் அக்கா இவங்க ரொம்ப உத்தமம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க.. உங்களையும் வாழ விடாம அவங்களும் வாழாம எல்லார் வாழ்க்கையும் நாசம் பண்ணி வச்சிருக்காங்க.. ரெண்டு பேரும் உண்மையிலேயே விரும்பல.. சும்மா உங்க மனசை மாத்தறதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காங்க..”
மறுபடியும் ஏற்கனவே பாடிய பாட்டை அவன் மறு ஒலிபரப்பு செய்யவும் இருவருக்கும் எரிச்சல் மண்டியது அவன் பேச்சில்..
“ஓ அப்படியா? சரி.. அப்படியே இருக்கட்டும்.. நீ கிளம்பு..” குரலில் எரிச்சலோடு சொன்னான் இந்தர்..
மலரழகியோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.. வேறு பக்கம் பார்த்து சலிப்பான முக பாவனைகளை காட்டிக் கொண்டிருந்தாள்.. மொத்தமாய் அவனை அலட்சியப் படுத்திக் கொண்டிருந்தாள் அவள்..
“நான் இப்போ சொல்ல போற விஷயத்தை கேட்டீங்கன்னா உங்களுக்கு அவங்க எவ்ளோ துரோகம் செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு புரியும்.. எனக்கு நிச்சயமா தெரியும்.. மதியழகி தீரன் மாதிரி ஒரு ஆளை எந்த ஜென்மத்திலயும் விரும்ப மாட்டா.. அதனால அங்க ஹோட்டல்ல அவ சொன்னதுல நம்பிக்கை இல்லாம ஹோட்டலுக்கு வெளியே தான் காத்துக்கிட்டு இருந்தேன்.. தீரன் வண்டியில அவ போக போறான்னு தெரிஞ்சதும் அவன் வண்டி பின்னால ஃபாலோ பண்ணிக்கிட்டு போனேன்.. கொஞ்ச தூரம் அமைதியா போனவங்க ஒரு இடத்துல இறங்கி தனியா பேசினாங்க.. நானும் இறங்கி அவங்க என்ன பேசுறாங்கன்னு மறைஞ்சு நின்னு கேட்டேன்..” என்று கதை சொன்னவன் அவர்கள் பேசிய அத்தனை விஷயத்தையும் மொத்தமாய் இந்தரிடமும் மலரழகியிடமும் சொல்லி முடித்திருந்தான்..
“இப்ப புரியுதா? ரெண்டு பேரும் எவ்வளவு கேவலமான வேலை பண்ணி இருக்காங்கன்னு.. உங்க காதலை உங்களுக்கு கிடைக்க விடாம பண்ணறதுக்காக அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்காங்க.. அதுவும் பொய் கல்யாணம்.. அந்த பய சினிமாவுல் நடிக்கறவன் தானே.. அதான் சினிமா கல்யாணம் மாதிரி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டான்.. ஒன்னு கேக்குறேன்.. இந்த மாதிரி ஒரு பொய் கல்யாணத்துக்காக நீங்க எதுக்கு உங்க காதலை விட்டுக் கொடுக்கணும்..? பேசாம அவங்க கல்யாணத்தை ஒரு பொருட்டாவே மதிக்காம நீங்க உங்க காதலை கண்டினியூ பண்ணுங்க..” அவன் மிகவும் சாதாரணமாக சொல்ல இந்தருக்கும் மலரழகிக்கும் அதைக் கேட்க கூட பிடிக்கவில்லை..
“அவங்க காதலிச்சாங்களோ இல்லையோ அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. காதலிக்கலைன்னாலும் இது ஒரு அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம் இல்ல..?”
இந்தர் சொன்னதைக் கேட்டு தலையை இடவலமாய் ஆட்டிய சேகர் “நிச்சயமா மாட்டாங்க.. ஏன்னா உங்க அண்ணனுக்கு தான் படிக்காதவன்.. மதியழகிக்கு பொருத்தமானவன் இல்லைன்கிற தாழ்வு மனப்பான்மையும் இருக்கு.. அது மட்டும் இல்லாம அவன் ஆஞ்சநேயர் மேல் வச்சிருக்கிற பக்தி உண்மையானது..அது மாறவே மாறாது.. அவன் அவனோட பிரம்மச்சரிய விரதத்தை எதுக்காகவும் மாத்திக்க மாட்டான்.. மதியழகி இந்த நாடகத்துக்கு அவனை சூஸ் பண்ணதுக்கு காரணமே கல்யாணத்துல ஈடுபாடு இல்லாதவன்கிறதுனாலதான்..”
அவன் சொன்னதைக் கேட்டவனுக்கு ஏனோ அவன் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று தோன்றியது.. ஆனால் அப்படியும் கல்யாணம் முடிந்த பிறகு தாங்கள் என்ன செய்ய முடியும் என்ற யோசனை இருக்கவும் “இருந்தாலும் இப்ப கல்யாணம் ஆனப்புறம் நாங்க ஒன்னும் பண்ண முடியாது.. நீ இங்க வந்து பேசறதெல்லாம் வேஸ்ட்.. முதல்ல நீ அவங்க பேசுனதூ ஒட்டு கேட்டதா சொல்றதே பொய்யோன்னு எனக்கு தோணுது.. நீ முதல்ல கிளம்பு” என்றாள் மலர்ழகி..
“உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரலைன்னா நான் ஒன்னு சொல்றேன்.. ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் நிஜமாவே கல்யாணம் பண்ணிட்டதனால புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா நீங்க அவங்களை பத்தி நினைக்கவே வேண்டாம்.. ஆனா ஒருவேளை அந்த மாதிரி வாழ ஆரம்பிக்கலைன்னா அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க அவங்க பேசிக்கிட்ட மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருந்தாங்கன்னா.. உங்க அண்ணனோட ஃப்ரெண்டை நீ காதலிக்கிறதுல என்ன தப்பு..? அதே மாதிரி உங்க அக்காவோட ஃப்ரெண்ட்டை நீ லவ் பண்றதுல ஒரு பாதகமும் இல்லையே.. அவங்க கொஞ்ச நாளைக்கு அப்புறம் டிவோர்ஸ் பண்ணும் போது உங்க மனசு என்ன பாடு படும்னு யோசிங்க..”
“சரி.. அப்படியே அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழலனா அது எப்படி எங்களுக்கு தெரியும்?”
இந்தர் கேட்க “அதை தெரிஞ்சுக்க ஒரு வழி இருக்கு.. இன்னிக்கு நைட் அவங்க ரெண்டு பேருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கும் இல்ல..? நீ வேணா அங்க போய் பாரு..” அவன் சொன்ன மறுநொடி அவன் கழுத்தை நெரித்து இருந்தான் இந்தர்..
“என்னடா நெனச்ச.? உன்னை மாதிரி நானும் கேடு கெட்டவன்னு நெனைச்சியா? சீ போ.. இங்க இருந்து..” இன்று அவன் உரும மலரழகியோ “எனக்கு என்னவோ எங்க அக்கா நிம்மதியா இருக்கறது பிடிக்காம நீ எதோ சதி பண்றதுக்காக இதெல்லாம் சொல்றியோன்னு தோணுது.. அனாவசியமா எங்ககிட்டயும் அடி வாங்காம கிளம்பி போ..”
“நான் சொல்றதை சொல்லிட்டேன்.. கேட்கிறதும் கேட்காததும் உங்க இஷ்டம்.. தேவையில்லாம உங்களோட காதலையும் உங்க நல்ல வாழ்க்கையையும் இழக்கிறீங்களோன்னு தோணுது.. எனக்கு தான் என் காதல் கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. நீங்களாவது அதுக்கு முயற்சி பண்ணலாமேன்னு தான் நான் சொன்னேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..” சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் சென்று விட்டான்..
ஆனால் அவன் சொல்லிவிட்டு சென்ற விஷயங்கள் இருவர் மனதிலும் உறுத்திக் கொண்டே இருந்தது..
தொடரும்..