லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 4
இந்தர் மேலும் மேலும் அவளை லவ்வர் என்று சொல்லி பேசிக் கொண்டே போக மதியோ அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தளர்ந்து போனாள்..
“இன்காரிஜிபிள் யூ ஆர்..”( திருத்த முடியாதவன் நீ) என்று அவனை திட்டி விட்டு விடு விடு என தன் ஸ்டாஃப் ரூமுக்கு நடந்து சென்று விட்டாள்..
ஸ்டாஃப் ரூமுக்கு போய் தனக்கென இருந்த மேஜையில் தலையை கவிழ்த்து அமர்ந்தபடியே படுத்தாள்..
அப்போது அவளைப் போலவே அந்த கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் சேகர் அவள் அருகில் வந்து மேஜையை லேசாக தட்ட நிமிர்ந்து பார்த்தாள்..
“ஹலோ சேகர் சார்.. சொல்லுங்க..”
எப்போதும் அவளிடம் காணப்படும் உற்சாகம் குரலில் இல்லாமல் போயிருக்க அவள் மிகவும் சோர்ந்து போய் இருப்பதை பார்த்த சேகர் “என்ன ஆச்சு..? ஏன் இப்படி இருக்கீங்க மதி மேம்.. ஏதாவது பிரச்சனையா? வீட்லயா? காலேஜ்லயா? சொல்ல இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்.. ஆனா என்கிட்ட சொல்லக்கூடிய பிரச்சனைனா சொல்லுங்க.. ஏதாவது செஞ்சு சால்வ் பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..”
இந்த சேகர் 90களில் பிறந்து இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் 30 வயதுக்கு மேல் ஆன பேரிளைஞன்.. அழகு அறிவு பண்பு என சகல குணங்களும் நிறைந்திருந்த மதியழகியை தன் வாழ்க்கை துணையாய் பெற்றால் தான் இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த அதிர்ஷ்டக்காரன் ஆகிவிடுவோம் என்று நினைப்பவர்களில் இவனும் ஒருவன்..
அவன் சொன்னதைக் கேட்டு மதி அழகி சிறிது தயக்கத்துடனே அன்று நிகழ்ந்தது முழுவதையும் அவனிடம் சொன்னாள்..
“இதான் பிராப்ளமா? இது ரொம்ப சிம்பிள்.. டீனேஜ் முடிஞ்சு இப்பதான் அடல்ட் ஹூட்க்கு உள்ள காலடி எடுத்து வைக்கிற இந்த மாதிரி விடலை பசங்க எல்லாம் இப்படி நடந்துக்கறதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பேசாம நாளைக்கு அவன் மறுபடியும் இதே மாதிரி நடந்துக்கிட்டானா நான் சொல்ற மாதிரி சொல்லுங்க.. எல்லாம் சரியாயிடும்..” என்று சிறந்த யோசனை என நினைத்து ஒரு யோசனையை சொன்னான் அவன்..
அந்த யோசனை அவள் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை எல்லாம் நிகழ்த்தப் போகிறது என்று தெரியாமல் அவளும் “ட்ரை பண்ணி பார்க்குறேன் சார்.. ஆனா எனக்கு என்னவோ இது வொர்க் அவுட் ஆகும்னு தோணல.. அவன் கொஞ்சம்..” என்று நிறுத்தியவள் ஒரு பெருமூச்சை விட்டு “கொஞ்சம் இல்ல.. ரொம்பவே பிடிக்காதகாரனா இருக்கான்.. நான் நிறைய பேசி பாத்துட்டேன்.. எனக்கு என்னவோ அவன் அவ்வளவு லேசுல புரிஞ்சுப்பான்னு தோணல.. சரி சார்.. எனக்கு அடுத்த கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு.. பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு.. நான் அந்த கிளாசுக்கு போறேன்..” என்றவள் சோர்ந்த முகத்துடனேயே அடுத்த வகுப்புக்கு சென்றாள்..
“இந்த மேட்டரை வச்சே இவளை நம்ம லைஃப் பார்ட்னர் ஆக்கிக்க வேண்டியதுதான்..” இப்படி எண்ணமிட்டு கொண்டே போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்..
####################
வீட்டு வாசலில் தன்னுடைய ஸ்கூட்டி பெப்பை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த மலரழகியை பார்த்த அவளுடைய தநமா மலரு..? என்ன இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்ட போல? காலேஜ்ல சீக்கிரம் விட்டுட்டாங்களா?”
“இல்லப்பா.. அது.. அப்பா.. நான் ஒன்னு சொல்றேன்.. ஆனா எனக்கு நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.. அக்கா கிட்ட அதை சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணீங்கன்னா சொல்றேன்..” என்றவளை முறைப்பாய் சந்தேக பார்வை பார்த்தவர் “என்ன..? நீ ஏதாவது தில்லு முல்லு செஞ்சிருந்தா தானே இந்த மாதிரி ப்ராமிஸ் கேப்ப.. என்ன செஞ்சுட்டு வந்த இன்னைக்கு? முதல்ல உங்க அக்காக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதை ஏன் செஞ்ச?”
அவர் சரியாய் அவள் நாடி பிடித்து கேட்க தலையை குனிந்து கொண்டு தன் கைவிரல்களை அளைந்தபடி “அது.. ரொம்ப ஆசையா இருந்துச்சு பா.. அதான் போயிட்டேன்.. எங்க காலேஜ் பக்கத்துல இன்னிக்கி ஒரு சினிமா ஷூட்டிங் நடந்தது பா.. எனக்கு ரொம்ப நாளா சினிமா பட சூட்டிங் பார்க்கணும்னு ரொம்ப ஆசை பா.. புது பட ஷூட்டிங் பா அது.. ஃப்ரெண்ட்ஸூம் ஃபோர்ஸ் பண்ணாங்கப்பா.. அதான்.. ஆசையில கிளாஸ் கட் அடிச்சிட்டு அங்க போயிட்டேன்ப்பா.. என் ஃபிரெண்ட்ஸ் கூட போயிருந்தேன் இல்ல? நான் அங்க அந்த ஷூட்டிங் முடிஞ்சு திரும்பி காலேஜ்க்கு வரலாம்னு தான் நினைச்சேன்.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து படத்துக்கு போலாம்னு சொன்னாங்க.. அதான் ஒரு படத்துக்கும் போயிட்டு வந்தோம்பா..”
காலையில் அந்த படப்பிடிப்பு முடிந்து தீரன் அங்கிருந்து சென்றவுடன் தன் நண்பிகளுடன் சேர்ந்து ஏதோ ஒரு ஹீரோவுக்கு டூப்பாய் அவன் சண்டை சாகசம் செய்திருந்த ஒரு படத்திற்கு எல்லோரையும் கிளப்பிக் கொண்டு போய் விட்டு வந்தவள் தன் தந்தையிடம் இப்படி ஒரு கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்..
“ஏன் மா.. உங்க அக்கா உன்னை படிக்க வைக்க எவ்வளவு பாடுபட்டுட்டு இருக்கா.. நான் ஒரு நல்ல கம்பெனியில் மேனேஜரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன்.. நான் அந்த வேலையிலேயே இருந்திருந்தா நீ எப்படி இருந்தாலும் படிப்பை முடிச்சு நீ ஒரு டாக்டரா ஆனா போதும்னு நானும் விட்டு இருப்பேன்.. ஆனா நம்ம விதி.. அந்த கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க.. எனக்கும் 50 வயசுக்கு மேல ஆயிட்டதனால நல்ல வேலை எதுவும் கிடைக்கலயேடா தங்கம்.. இப்ப பிரைவேட்டா ஒரு கம்பெனியில சூப்பர்வைசரா சொற்ப சம்பளத்துக்கு ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.. உங்க அக்கா அந்த இன்ஜினியரிங் காலேஜ்ல நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செஞ்சு சம்பாதிக்கிறா.. அவ சம்பாதிக்கறதுனால தான் ஒன்னை டாக்டருக்கு படிக்க வைக்க முடியுது.. அவை எப்படி உன்னோட ஃப்யூச்சர பத்தி நெனச்சு மாடா உழைச்சிட்டு இருக்கா.. இப்படி இருக்கும் போது நீ உன் முழு கவனத்தை படிப்புல வச்சு ஒழுங்கா படிக்க வேண்டாமா டா தங்கம்? உங்க அக்கா உன்னை பத்தி நிறைய கனவு கண்டுக்கிட்டு இருக்கா.. அதான் ஒவ்வொரு நாளும் இப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம பாடு பட்டுக்கிட்டு இருக்கா.. எந்த காரணத்துக்காகவும் அவ கனவை பொய்யாக்கிடாதடா..”
அவர் கவலையோடு தன் சின்ன மகளுக்கு அறிவுரை சொல்ல “அப்பா.. ஒரே ஒரு நாள் ஒரு சினிமாக்கு போனதுக்காக ஏம்பா இவ்வளவு ஃபீல் பண்றீங்க? எனக்கு தெரியாதாப்பா அக்கா எவ்வளவு கஷ்டப்படறான்னு.. நான் நல்லா தான் பா படிக்கிறேன்.. இப்பவே நான்தான் பா க்ளாஸ் டாப்பர்.. இன்னிக்கி நான் வெளியில் வந்தப்போ என் ஃபிரண்ட்ஸே நீ கிளாசே கட் பண்ண மாட்டியே.. இன்னிக்கு எப்படி கட் பண்ணன்னு சொல்லி ஆச்சரியமா கேட்டாங்கன்னா பார்த்துக்கங்க.. எனக்கும் பொறுப்பு இருக்குப்பா.. எல்லாத்துக்கும் மேல ஒரு நல்ல டாக்டராகி என் அக்காக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கணும்னு மனசு நிறைய ஆசை இருக்கு.. எதோ இன்னைக்கு தோணுச்சு பா.. போய்ட்டேன்.. இனிமே போக மாட்டேன்.. நீங்க அக்கா கிட்ட சொல்லாதீங்க பா..”
அவள் கெஞ்சி அவர் நாடியில் கை வைத்து கொஞ்சி கொஞ்சி கேட்க ஆசை மகள் அப்படி கேட்கும் போது எந்த தந்தையால் மறுக்க முடியும்..?
“சரி.. நான் சொல்லல.. ஆனா உங்க அக்காவே கண்டுபிடிச்சிட்டான்னா நான் பொறுப்பில்லை.. உன் திருட்டு முழியை வச்சி அவ நிச்சயமா கண்டுபிடிச்சுடுவா..” சிரித்தபடி அவர் சொல்ல முகத்தை குழந்தை போல உம் என்று வைத்துக் கொண்டு “போங்கப்பா.. அதெல்லாம் நான் அவளை கண்டு பிடிக்க விட மாட்டேன்.. எப்படி சமாளிக்கிறன்னு பாருங்க..” என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்டபடி..
“ஆனா அக்காக்கு சாயங்காலம் நாலு மணிக்கு எல்லாம் காலேஜ் முடிஞ்சிடுது.. பஸ் ஏறி டிராஃபிக்ல வீட்டுக்கு அஞ்சு மணிக்கு வரா.. அப்புறம் நம்மளுக்கு காஃபி டிஃபன் கொடுத்துட்டு நைட்டுக்கு டின்னர் ரெடி பண்ணி வெச்சிட்டு அவளும் டிஃபன் எடுத்துட்டு மறுபடியும் அவசரமா அரக்கபறக்க 6:00 மணிக்கு கிளம்பி எங்கயோ போறா.. கேட்டா எங்க போறேன்னு கூட சொல்ல மாட்டேங்குறா.. அதுக்கப்புறம் நான் தூங்கின அப்புறம் தான் வீட்டுக்கு வர்றா.. அப்படி எங்க தான் போறா பா அக்கா?”
“அது எனக்கும் சரியா தெரியல டா.. ஏதாவது கேட்டா ஏதோ தன்னோட திறமையை வளர்த்துக்கறதுக்காக ஈவ்னிங் காலேஜ் நடக்குற கிளாசுக்கு போறேன்னு சொல்றா.. நானும் மாத்திரை போடுறதனால சீக்கிரம் தூங்கி போயிடறேன்.. அவ எப்ப வீட்டுக்கு வர்றான்னே எனக்கு தெரிய மாட்டேங்குது..”
“ஆமாம்பா.. ஒரு நாள் நான் கஷ்டப்பட்டு 11 மணி வரைக்கும் முழிச்சிட்டு இருந்தேன்பா.. அன்னிக்கு கூட அக்கா 11:00 மணி வரைக்கும் வரவே இல்ல பா.. அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்.. ஏன்னா அடுத்த நாள் எனக்கு முக்கியமான எக்ஸாம் இருந்தது.. ஆனா பாவம் பா அக்கா.. நமக்காக கஷ்டப்பட்டு வேலையும் பார்த்துட்டு அப்புறம் அவசிய வாழ்த்துக்கள் எங்கேயோ போய் படிச்சிட்டு ரொம்ப லேட்டா தான் படுக்குறா.. எவ்ளோ டயர்டா இருக்கா தெரியுமா? காலையில் எழுந்திருக்கிறதுக்கு கூட ரொம்ப கஷ்டப்படுறா.. ஆனாலும் அஞ்சு மணிக்கு எழுந்து பரபரன்னு என்னையும் கிளப்பி அவளும் கிளம்பி.. பாவம் பா அக்கா..”
“என்னமா செய்ய..? அவ பிடிவாதம் அப்படி.. நம்ம ரெண்டு பேரையும் எந்த வேலையும் செய்யவும் விட மாட்டேங்குறா.. ஏதாவது கேட்டா எனக்கு வயசு ஆயிடுச்சுங்கறா..”
“ஆமாம்பா.. உங்களுக்கு தான் வயசாயிடுச்சு.. நான் செய்யலாம் இல்ல..? ஏதோ ஒரு நாள் சமையல் செய்றேன்னு கைய சுட்டுக்கிட்டேன்.. அதிலிருந்து சமையல் ரூம் பக்கமே நீ வரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி அவ இல்லாதப்போ நம்ம எங்கேயாவது வேலை செய்ய போறோன்னு சமையல் ரூம் கதவை பூட்டிவிட்டு கீயை கையோட எடுத்துட்டு போயிடறா.. இதெல்லாம் ரொம்ப டூ மச் பா..”
“அவ அப்படி தான்டா.. அவளை மாத்த முடியாது.. சரி நீ போய் ஃபிரஷ் ஆயிட்டு வா.. அதுக்குள்ள அக்காவும் வந்துருவா.. எல்லாரும் ஒண்ணா டிஃபன் காஃபி சாப்பிடலாம்..”
உள்ளே சென்றவள் அடுத்த அரை மணி நேரத்தில் வரவேற்பறைக்கு வர அதற்குள் மதியழகி கல்லூரியில் இருந்து வந்திருந்தாள்..
தந்தை தங்கைக்கு வசதியாய் கல்லூரி சென்றுவர ஸ்கூட்டி பெப் ப்ளஸ் வாங்கி கொடுத்திருந்தவள் தான் எப்போதும் பேருந்திலேயே பயணம் செய்திருந்தாள் எல்லா இடத்திற்கும்.. தனக்காக தன் வசதிக்காக கூட மிகையாக ஒரு செலவும் செய்து கொள்ள அவள் மனம் ஒப்பாது.. தன்னுடைய உழைப்பு.. அன்பு.. தான் ஈட்டும் பொருள்.. எல்லாமே தன் தந்தைக்கும் தங்கைக்கும் உரியது என்றே நினைத்திருந்தாள் அவள்..
அதனால்தான் இதுநாள் வரை தன் திருமணம் என்ற ஒன்றைப் பற்றி அவள் யோசித்தது கூட கிடையாது.. அவளுடைய தந்தை தமிழ்வாணன் அதைப்பற்றி பேச்சு எடுத்தால் ஏதேதோ பேசி அந்த பேச்சை மாற்றி விடுவாள் அவள்..
சமையலறையில் அவள் மணக்க மணக்க ஏதோ சிற்றுண்டி செய்யும் வாசம் வரவும் ஓடிச்சென்று அவளை தோலை கட்டிக் கொண்ட மலரழகி “என்னக்கா பண்ற இன்ட்ரஸ்டிங்கா.?” என்று வாசம் பிடித்துக் கொண்டே கேட்டாள்..
“என் தங்கத்துக்கு பிடிக்கும்ன்னு பணியாரம் பண்ணிட்டு இருக்கேன்.. ஆமா இன்னைக்கு காலேஜ்ல நீ என்ன பண்ண?”
அவள் கேட்டது தான் உடனேயே மலரழகி உளற ஆரம்பித்து இருந்தாள்.. “அதுவா.. அது.. அ..து.. காலையில காலேஜுக்கு போனேனா.. பேனேனா.. அதுக்கு அப்புறம் முதல்ல ஃபிசியாலஜி கிளாஸ் இருந்ததா? அதுக்கப்புறம் .. அதுக்கப்பறம்.. ஐயோ அக்கா.. அதை விடு.. நீ சமைச்சாலே வாசனை தெரு வரைக்கும் வருது கா.. உன் கையில அப்படி என்ன மாய மந்திரம் இருக்குன்னு தெரியல என்று பேச்சை மாற்ற அந்த ஒரு உளறலிலேயே அவளின் திருட்டு தனத்தை கண்டு பிடித்தாள் மதி..
“அழகி.. இன்னைக்கு என்ன சேட்டை பண்ண? ஒழுங்கா சொல்லு.” மதி மிரட்டலாக கேட்க அதற்கு மேல் அவளிடம் உண்மையை மறைக்க முடியாது “அது வந்துக்கா.. எங்க காலேஜ் பக்கத்துல ஒரு ஷூட்டிங் நடந்தது.. சினிமா சூட்டிங் கா.. அதுக்கு கட் அடிச்சுட்டு..”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை மதியழகி ஏகத்துக்கு முறைக்க “சாரிக்கா.. இன்னிக்கு ஒரு நாள் தான்.. நாளைலருந்து ஒழுங்கா காலேஜ் போயிடுவேன்.. அப்படியே என்னோட ஃபேவரிட் ஆக்டர் மூவிக்கும் போயிட்டு வந்தேன்.. இனிமே போகமாட்டேன் கா..”
“இங்க பாரு அழகி.. நீ சூட்டிங் பார்க்க போறது பத்தியோ சினிமாக்கு போறதை பத்தியோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா காலேஜ் கட் அடிச்சிட்டு போகாத டா.. எதுவா இருந்தாலும் லீவு நாள்ல போ.. வீக் என்ட் ஃபுல்லா நீ எங்க போனாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன்.. ஆனா காலேஜ் கட் அடிக்கிறது.. எக்ஸாம்க்கு படிக்காம போறது.. இதெல்லாம் நீ பண்ணாத தங்கம்.. ஏன்னா உன் அக்கா ஒரு காலேஜ் ப்ரொஃபசர்.. நான் மத்த பிள்ளைகளுக்கு எப்படி எப்படி நடக்கணும்னு சொல்லி தர்றவ.. என் தங்கை நீயே இப்படி நடந்துக்கிட்டா அப்புறம் எல்லாரும் என்னை எப்படி மதிப்பாங்க சொல்லு..”
அவள் அமைதியாய் அன்பாய் அதே சமயம் உறுதியான குரலில் கேட்க “சாரிக்கா..” என்று இரண்டு காதுகளையும் பிடித்து மன்னிப்பு கேட்ட மலரழகி “இனிமே நிச்சயமா இந்த மாதிரி பண்ண மாட்டேன்.. மதர் பிராமிஸ்.. சாரி.. சாரி.. அக்கா ப்ராமிஸ்.. நான் இந்த மாதிரி பண்ணவே மாட்டேன்..” என்றவளின் தலையை வாஞ்சையாய் வருடிவிட்ட மதியழகி “சரி.. பணியாரம் ரெடி ஆயிடுச்சு.. நீயும் சாப்பிட்டேன் அப்பாக்கு குடு.. நான் கிளாசுக்கு கிளம்பனும்..” என்றவள் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வர அதே சமயம் மலர் அழகியை பார்த்து தமிழ்வாணன் கிண்டலாய் சிரித்து கொண்டிருந்தார்..
“நீயே உன் வாயால மாட்டிக்கிட்டியா?” அவர் கேலியாய் கேட்க அவரைப் பார்த்து முகத்தை வெட்டு விட்டு “அப்படியே உங்களுக்கு குளுகுளுன்னு இருக்குமே என்று விட்டு பணியாரத்தோடு வரவேற்பறையில் சென்று அமர்ந்து கொண்டாலள் கோபமாக.. ஆனாலும் பணியாரம் மட்டும் அதன் பாட்டுக்கு அவள் வாய்க்குள் போய்க்கொண்டிருந்தது..
அவளைப் பார்த்து சத்தமாய் சிரித்த தமிழ்வாணன் மதி பக்கம் திரும்பி “இன்னும் இவ குழந்தையாவே இருக்கா டா.. ஏன்மா மதி.. அது என்ன..? நாங்க எல்லாம் அவளை மலரு மலருன்னு கூப்பிடறோம்.. நீ மட்டும் அவளை அழகினு கூப்பிடுறே..?”
“என்னை பொறுத்த வரைக்கும் அவ அழகி தான் பா.. அவ மட்டும் தான் அழகி.. இந்த உலகத்திலேயே.. அதனால நான் எப்பவும் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன்.. அப்புறம் அப்பா.. நைட்டுக்கு சப்பாத்தி குருமா பண்ணி வெச்சிருக்கேன்.. மிச்சம் வைக்காம சாப்பிடணும்.. எனக்கு நான் கையில எடுத்துட்டு போறேன் சரியா?” அரக்க பறக்க தன்னறைக்குச் சென்று வேகமாய் உடை மாற்றிக் கொண்டு தங்கையிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டாள் மதி..
அவள் பகலில் கல்லூரி வேலையை முடித்துவிட்டு மாலையில் ஒரு கால் சென்டரில் இரவு 12 மணி வரை வேலை செய்கிறாள்.. வீட்டில் தன் தந்தையிடமும் தங்கையிடமும் இதைச் சொன்னால் அவர்கள் அவளை போக வேண்டாம் என்று தடுத்து மரிப்பார்கள் என்று தான் ஏதோ ஒரு வகுப்புக்கு செல்வதாக சொல்லி சென்றாள்..
அவள் தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஏதோ வகுப்பு செல்வதாய் சொல்லவும் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தமிழ்வாணன் அவள் அந்த வகுப்பில் சேர்வதற்கு சம்மதம் கொடுத்திருந்தார்.. அவள் வேலைக்கு போவது தெரிந்தால் அவர் தன்னால் தன் மகள்களுக்கு சிறு வயதிலேயே இவ்வளவு பெரிய குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்படுவார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால் தான் வேலைக்கு போவது அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தாள் அவள்..
தன் கம்பெனியை இழுத்து மூடியதிலிருந்து உடலாலும் மனதாலும் நொடிந்து போயிருந்தார் அவளின் தந்தை.. தாய் இறந்த பிறகு தன் குடும்பத்தை அப்படியே விட முடியாமல் அந்த பாரத்தை தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று முழுதாய் நம்பியவள் அதை மனமுவந்து சுமக்க தயாரானள்.. அவளைப் பொறுத்தவரை அவளுடைய தங்கை அவளுடைய பெறாத மகள் தான்.. அவளுக்காக எந்த சுமையையும் இன்முகத்தோடு தாங்குவதற்கு தயாராகத்தான் இருந்தாள் அவள்..
அவள் தந்தைக்கும் தங்கைக்கும் தான் அவள் மாலையில் வேலைக்குப் போகும் விஷயம் தெரியாமல் இருந்ததே தவிர எப்போதும் அவள் நினைவு உடனே இருக்கும் ஒருவனுக்கு அவள் மாலையில் வேலைக்குப் போகும் விஷயம் நன்கு தெரிந்தே இருந்தது.. சரியாக அவள் அந்த கால் சென்டர் கம்பெனிக்கு வாயிலில் வந்து நுழையும் நேரம் அந்த கட்டிடத்தின் எதிரில் இருந்த ஒரு சிறிய உணவகத்தின் வாசலில் நின்று அவளை கவனிப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்தான் இந்தர்..
வேலை முடித்து 12 மணிக்கு அவள் வெளியில் வரும் வரை அங்கேயே காவலுக்கு நின்று கம்பெனி கேபில் ஏறி அவள் வீட்டுக்கு செல்லும் வரை அவளை தன் வண்டியில் பின் தொடர்ந்து வந்து அவள் வீட்டுக்குள் சென்ற பிறகுதான் தன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான் அவன்..
தொடரும்..