அத்தியாயம் 3
மண்டபத்தில் அனைத்து சடங்குகள் முடிந்து, தீரனும் – இஷானியும் வீட்டிற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.. சிதம்பரம் முதலிலேயே சென்று விட்டார்..
காரில் இருந்தது என்னவோ ஆதவ், யாழினி, தீரன், இஷானி தான்..
ஆதவ் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.. யாழினிக்கு சற்று சோம்பலாக இருந்ததால் ஜன்னலை ஒட்டியபடி அமர்ந்திருந்தாள். தீரனும் – இஷானியும் அருகருகே ஒட்டியபடி பின்னால் சீட்டில் அமர்ந்திருந்தனர்.
தீரனும் பேசிக் கொள்ளவில்லை, இஷானியும் பேசிக் கொள்ளவில்லை.
ஒரு வித அமைதி தான் அந்தக் காரில் நிலவியது..
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பிராயணம் அது. யாரும் எதுவும் பேசாததாலோ என்னவோ, வெகுதூரம் பயணிப்பதை போன்று உணர்வு இஷானிக்கு..
தீரனுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை, ஜன்னல் வழியாக ரோட்டை வெறித்து பார்த்தபடி பயணித்தான்.
ஆதவ்வை கேட்கவே வேண்டாம், வலியின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், தன் அண்ணனுக்காக சாதாரணமாக முகத்தை வைத்திருந்தான்..
இவர்களை பற்றி அறியாத யாழினி ஒருமணி நேரம் நன்றாக தூங்கியவள், மெல்ல கண்களை விரிக்க, ஆளாளுக்கு ஒரு புறம் பார்த்துக் கொண்டிருந்தனர்..
ஐந்து நிமிடங்கள் வரை அமைதியாக இருந்து பார்த்தாள் யாழினி. அதற்கு மேல் அவளாலேயே முடியவில்லை..
“என்னடா இது?.. இவ்வளவு சைலண்டா இருக்குது” என்றவள், ‘சரி நாம சாங்க் கேட்போம்’ என தன் இயர் பட்ஸை காதில் சொருகியபடி போனோடு கனெக்ட் பண்ணியவள்,
தன் போனில் பாட்டு ஒன்று போட, “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, கண்ணாளா கட்டிப்பிடிடா” என்ற பாட்டு அமைதியை கிழித்துக் கொண்டு அந்தக் காரெங்கும் ஒலிக்க,
ஆம், அவள் போட்ட பாட்டு அது தான்… அவள் ப்ளுடூத்தில் சரியாக கனெக்ட் ஆகாமல், அந்த காரில் இருந்த ப்ளுடூத்தோடு கனெக்ட் ஆகி, பாட்டு காரெங்கும் கேட்க ஆரம்பித்தது..
இரு காதிலும் ப்ளுடூத் மாட்டியிருந்ததால் யாழினிக்கு பாட்டு காரில் ஒலிப்பதை அறியவில்லை..
கேட்பது கில்மா சாங்க், ஆனால் ஏதோ கர்நாட்டிக் சாங்க் கேட்பது போல முகத்தில் வேறொரு பாவனையைக் காட்டிக் கொண்டிருந்தாள்..
வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…
கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…
என்ற வரி அவளுக்கு மிகவும் பிடித்திருந்ததோ, என்னவோ மீண்டும், மீண்டும் கேட்டாள்..
தீரனோ, இஷானியோ அதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.. ஆதவ்விற்கு எரிச்சல் கூட ஆரம்பித்தது..
அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லையே,
கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…
வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…
நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…
என பாடலை முணுமுணுக்க, “போதும் நிறுத்துறீயா?” என்ற ஆதவ்வின் கர்ஜனைக் குரல் கூட அவள் காதில் கேட்கவில்லை..
அவள் தான், பாட்டில் லயித்துப் போயிருக்கிறாளே, தான் இவ்வளவு கத்தியும், அவள் காதில் விழாதது ஒரு வித எரிச்சலைக் கொடுத்தது.
வேகமாக அவள் காதில் சொருகியிருந்த ப்ளுடூத்தை எடுத்தவன், ஜன்னல் வழியே எறிந்து விட்டான்..
அவன் எறிந்த அடுத்த கணமே திடுக்கிட்டாள், இன்னொரு ப்ளுடூத்தையும் தன் காதில் இருந்து எடுத்தாள் யாழினி..
“எதுக்கு என் ப்ளுடூத் வெளியே போட்டிங்க?.. காரை நிறுத்துங்க” என்றவளை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டே காரை நிப்பாட்டினான் ஆதவ்..
காரை விட்டு வேகமாக இறங்கி ஓடிவர, அவளின் கெட்ட நேரம், அந்த ப்ளுடூத்தின் மேல், அங்கு சென்ற லாரியின் டயர் ஒன்று ஏறியிருந்தது..
அதைப் பார்த்தவளின் விழிகள் சற்று கலங்க ஆரம்பித்து விட்டது.. மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய ப்ளுடூத் அது.. எங்குச்சென்றாலும் பத்திரமாக தன் பர்ஸில் வைத்து பாதுகாப்பாக வைத்திருப்பாள்.
இன்று அது தன் கண் முன்னால் சிதைந்து கிடப்பதை பார்க்கும் பொழுதே அழுகை கண்ணில் முட்டியது.. அதீத கோபமும் ஆதவ்வின் மேல் வந்தது..
“எதுக்கு இப்படி பண்ணீங்க?” என கோபத்துடன், காரினுள் ஏறியமர்ந்து ஆதவ்விடம் சண்டை போட ஆரம்பித்தாள்..
“வேற எப்படி பண்றது?.. பார்க்க பால்வாடி பாப்பா மாதிரி இருந்துட்டு, கட்டிப்பிடி கட்டிப்பிடி சாங்க் கேட்குதா உனக்கு?” என்றவனை ஒரு கணம் அதிர்ந்து பார்த்தாள் யாழினி..
சட்டென்று தன் நாக்கை கடித்தவாறே, “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளின் கம்மிய குரலிலேயே அவளின் புறம் இருந்த தவறு புரிந்தது..
“ப்ளுடூத்தை நீ சரியா கனெக்ட் பண்ணலைன்னு நினைக்கிறேன்.. சாங்க் கார் முழுக்க நல்லா கேட்டுது.. அதுலையும் ஒரு ரியாக்ஷன் கொடுத்திங்களே, என்ன லைன் அது..”
“எந்த இடத்தில் சுகம் மிக” என்றவனின் வாயை சட்டென்று தன் கரம் கொண்டு மூடினாள் யாழினி..
“ப்ளீஸ் என் மானத்தை வாங்காதே ஆதவ்.. அம்மாவுக்கு நான் இப்படி பாட்டு கேட்கிறேன்னு தெரிஞ்சது என்னை கொன்னுடுவாங்க” என கெஞ்சியவளை தான் இப்பொழுது ஆதவ்வும் பார்த்துக் கொண்டிருந்தான்..
பலவித கலவையான உணர்வுகள் அவளின் கண்களில், ஒரு நேரம் கொஞ்சினாள், மறு நேரம் கெஞ்சினாள்.. அடுத்த கணமே சண்டையிடவும் தயாராக இருப்பாள் என்பதையும் அவன் அறிவான்..
இருவரின் நெருக்கத்தை பின்னால் இருந்த இருவரும், ஜடமே என்று பார்த்துக் கொண்டுதானிருந்தனர்..
அவர்கள் சண்டையை தடுக்கவும் இல்லை..
“காரை எடுக்கச் சொல்லுங்க மாமா” என இஷானி தீரனை ஏவிட, தீரனோ தன்னருகில் இருந்தவளை தான் திகைத்துப் பார்த்தான்.
‘இதை ஆதவ்விடமே நேரடியாக சொல்லி விடலாமே.. நான் எதுக்கு இவர்களுக்கிடையில்’ என்ற எண்ணம் தான் அவனுக்கு..
ஆனால் ஆதவ் என்ற மனிதனை அறவே தவிர்க்க நினைக்கிறாள் என்பது தான் தீரனுக்கு புரியவில்லை..
இஷானியின் குரல் கேட்ட அடுத்த நிமிடமே காரை ஸ்டார்ட் பண்ணினான் ஆதவ்..
யாழினிக்கு ப்ளுடூத் உடைந்தது கவலை என்றாலும், அவள் பாட்டுக் கேட்டதை பற்றி மற்றவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என சங்கடமாக இருந்தது..
“ப்ச்ச்.. யாழி, உன்னைப் பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என மனதுக்குள், ஒரு வித கூச்சம், பயம் என ஒரு வித தவிப்புடன் அங்கு அமர்ந்திருந்தாள்..
ஒன்றரை மணி நேர பயண முடிவில்லை பிரம்மாண்டமான வீட்டை வந்து அடைந்திருந்தது அந்தக் கார்..
ஊரைச் சுற்றி பச்சைப்பசேல் வயல்களும், தென்னந்தோப்பும், மாங்காய் தோப்புகளும், ஊரின் தொடக்கத்தில் சலசலவென ஆறும் ஓடிக் கொண்டிருந்தது.
அதைக் கடந்து உள்ளே நுழையும் போதே, அவள் நாசிக்குள் மெல்ல மண் வாசனை வீசியது..
தஞ்சாவூரில் இருக்கும் பூஞ்சோலை கிராமம் தான் அது.. அவர்கள் ஊரில் பெரிய குடும்பம் என்றால், அது சிதம்பரத்தினுடையது..
பல வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற அடையாளத்துடன் இருந்ததை, தூக்கி நிறுத்தியதே விருகோத்திரன் தான்..
தன்னுடைய பதினைந்தாவது வயதில் ஏர் கலப்பையை தூக்கினான்.. இன்று வரை அதை இறக்கவில்லை, அதை இறக்கும் எண்ணமும் அவனுக்கில்லை.
ஏர் கலப்பை பிடித்தபொழுதும் அவனுக்கு விவசாயத்தின் மேலிருந்த மோகம் குறையவில்லை.. இன்று பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரனாய், தோப்பு, தொறவுடன் வாழ்பவனுக்கு இன்றும் விவசாயத்தின் மேலிருந்த மோகம் குறையவில்லை..
எந்த சமயம் எந்த பயிர்களை நட்டால், லாபம் ஈட்டு எடுக்கலாம் என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்பிடி. தான் மட்டும் லாபம் பார்க்காது, சுற்றியிருக்கும் ஊரையே செளுமையாக வைத்திருந்தான் தீரன்..
அதனாலேயே ஊருக்குள் அவனுக்கு மரியாதை அதிகம்.. 32 வயது ஆண்மகனுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைப் பார்த்து பொறாமைக் கொண்டவர்களும் அங்கு அதிகம்.. படிப்பை விட அவனின் குணம் அவர்களிடத்தில் மிகுந்த செல்வாக்கை வாங்கிக் கொடுத்திருந்தது..
இன்றும் அவன் வீதியில் நடந்து போனால் அவனை வணங்கி செல்பவர்கள் அதிகம்.
அவனை ரசிக்கும் கன்னிப்பெண்களும் அதிகம்..
சிலுசிலுவென்று வீசிய தென்றல் காற்றோ, தன் நாசி உணரும் மண் வாசனையோ, இஷானியை சிறிதும் அசைக்கவில்லை..
கார் நின்று 5 நிமிடங்கள் கடந்தபின்னும் இஷானி இன்னும் கீழே இறங்கவில்லை..
அவள் இறங்குவாள் என்று அனைவரும் காத்திருக்க, மனம் முழுவதும் வெறுத்துப் போன நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள்..
ஆதவ்விற்கு தான் ஒரு மாதிரியாகி விட்டது..
காரின் ஜன்னல் கதவை நெருங்கும் வேளையில், “இறங்கு ங்க” என்ற தீரனின் குரலில் சட்டென்று நின்று விட்டான் ஆதவ்..
அவன் குரல் கேட்ட இஷானி மெல்ல திரும்பினாள்.. தன் எதிரில் தெரிந்த பிரம்மாண்ட வீட்டை வெறித்துப் பார்த்தாள்..
காரை விட்டு இறங்கியவள், ஒரு வித வெறுமையான மனதுடன் அடியெடுத்து வைத்தாள் அவளின் புகுந்த வீட்டினுள்..
அவள் உள்ளே அடியெடுத்து வைக்க, சில சடங்குகள் அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்தது.. உறவுகள் சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமல் சென்றவளின் முகத்தில் கிஞ்சித்தும் புன்னகையில்லை..
பெயரளவிற்கு கூட அவளால் சிரிக்கவில்லை.. மனம் செத்துக் கொண்டிருக்கையில் ஒருத்தியால் சிரிக்க முடியுமா என்ன? சத்தியமாக அவளால் முடியவில்லை..
வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் இதயம் அப்படியே நின்று விட்டால் நன்றாக இருக்குமோ? என்ற எண்ணம் தான் அவளுக்கு..
தீரனின் அத்தை காமாட்சி, யாழினியின் அன்னை தான் எல்லாவற்றையும் எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்..
அவளை வீட்டில் விளக்கேற்ற வைத்து, பால் பழம் கொடுத்து என ஒவ்வொன்றாக செய்ய வைத்தார்..
தீரன் அதை தடுக்கவும் இல்லை.. ஆதரிக்கவும் இல்லை, அவனுக்குத் தான் உண்மை எல்லாம் தெரிந்து விட்டதே.. இனிமேல் சாந்தி முகூர்த்தத்திற்கு என்ன வேலை என்று தான் தோன்றியது அவனுக்கு..
இன்று ஒரு நாள் மட்டும் ஒரே அறையில் படுத்துக் கொள்ள வேண்டும். நாளையில் இருந்து யாரும் அறியாமல் அவளை வேறொரு அறைக்கு மாற்ற வேண்டும் என அவனுக்குள் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தான்..
விதி அவனுக்கென்று வேறொரு திட்டம் போட்டிருக்கிறதை அறியாமல்.
“சரிம்மா நீ போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு.. ஏய்ய்ய. யாழினி” என்றதும், வேகமாக தன்னறையில் இருந்து ஓடி வந்தாள் யாழினி..
“என்னம்மா?”
“அக்காவை அவளோட ரூம்ல ரெஸ்ட் எடுக்கட்டும். நீ துணையா இரு” என்றதும்,
‘ம்ம்’ என தலையாட்டிக் கொண்டே இஷானியை அழைத்துக் கொண்டு சென்றாள் யாழினி..
“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க அக்கா.. நான் போன் பார்க்குறேன்” என்றவளின் கையைப் பிடித்த இஷானி,
“நான் டிரஸ் சேன்ஜ் பண்ணணும் யாழினி.. நீ உன் அம்மாக்கிட்ட கேட்டு வர்றீயா? கல்யாண சேலையை மாத்தலாமான்னு” என அவளை திசைதிருப்ப, ம்ம் என வேகமாக கீழே ஓடினாள் யாழினி..
அவள் ஓடிச்செல்லவும், இஷானி வேகமாக ஆதவ்வின் அறைக்கு செல்லவும் சரியாக இருந்தது..
அவளுக்கு இன்னமும் அவன் மேல் இருந்த கோபம் போகவில்லை..
ஆனாலும் அவனிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டியதாக இருந்தது..
அறைக்குள் திடுதிடுப்பென்று உள்ளே நுழைந்தவளைக் கண்டு திருதிருவென முழித்தான் ஆதவ்..
அப்பொழுது தான் சென்னைக்கு சென்று விடலாம் என பையினுள் தன் பொருட்களை திணித்துக் கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது..
இந்நேரத்தில் அவள் தன் அறையில் இருப்பது முறையல்ல என்பதை உணர்ந்தவன், “இஷா வெளியே போ.. யாராவது பார்த்தா தப்பாயிடும்” என சீறியபடி கூறினான்..
அவனையும், படுக்கையில் இருந்த பெட்டியையும் பார்த்தவளின் இதழோரம் சிறு இளக்கார புன்னகை..
“ஓஹோ.. சார் என்னை மட்டும் அழ வச்சிட்டு, நீ உன் பொழைப்பை பார்க்க ஓடிப்போற அப்படித்தானே?” என்றவளை அதிர்ந்து பார்த்தான் ஆதவ்..
“இல்ல இஷானி..” என்பதற்குள்,
“அண்ணிஈஈஈஈ” என அழுத்தமாக திருத்தினாள் இஷானி..
“சரி.. அண்ணி. நீயும், நானும் இனிமேல் ஒரே வீட்டுல இருக்கிறது சரி வராது” என்றவனை பார்த்து அடுத்துக் கேட்ட கேள்வியில் ஆடிப் போய் விட்டான் ஆதவ்..
“இஷானி” என கர்ஜனைக்குரல் அறையெங்கும் ஒலித்தது.
“சொல்லு ஆதவ்.. இப்படி நீ அவசர அவசரமா ஓடிப் போறதுக்கு என்ன காரணம்.. நான் உன்னையும், உன் அண்ணனையும் சேர்த்தே வச்சிப்பேன்னு நினைக்கிறீயா?” என அமிலத்தை வார்த்தைகளால் கரைத்து அவன் மேல் துப்பினாள்..
“ப்ளீஸ். ப்ளீஸ் இஷானி.. இல்லை அண்ணி.. வார்த்தையால என்னைக் கொல்லாத.. ஏற்கனவே நான் சாவோட விளிம்புல தான் நிக்கிறேன்..” என கண்ணீருடன் நின்றவனைக் கண்டு எரிச்சலுடன் பார்த்தவள்,
“இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ ஆதவ்.. இனிமேல் என்னோட வாழ்க்கையில நீ இல்லை.. உனக்கான அத்தியாயம் எப்பவோ முடிஞ்சிருச்சி, அதே சமயம் உன் அண்ணனோடவும் என்னால வாழ முடியாது.. அவரை நான் வாழவும் விட மாட்டேன்” என்றவளை அதிர்ந்து பார்த்தான்..
முதல் பாதியைக் கேட்கும் பொழுது இருந்த சந்தோஷம், அவள் இரண்டாம் பாதியான வார்த்தையை கேட்கும் பொழுது மறைந்தே போனது..
தன்னை மறந்து அவள் அண்ணனுடன் வாழ வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்..
அவனின் செய்கைக்கு உருவகம் கொடுக்க அவள் ஒன்றும் கை பொம்மையில்லையே.. உயிருள்ள மனிதி.. அதீத வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதி..