விருகோத்திரனின் துருபத கன்னிகை – 4

4.8
(4)

அத்தியாயம் 4 

 

“என்ன விளையாடுறீயா? இஷானி.. உன்னை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே, அவரோட நீ வாழணும்னு தான்” என்றவனை எரிச்சல் மேலோங்க பார்த்தவள், 

 

“என்னை இஷானின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லுறது” என்றவளை தான் பார்த்துக் கொண்டேயிருந்தான். 

 

அவள் எப்படியொரு வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவனும் அறிவானே?.. ஆனால் விதி அவனை கைகட்டி நின்று வேடிக்கை தான் பார்க்க வைத்தது.. 

 

“உன் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. அட் த சேம் டைம், உன்னை பழிவாங்காம இருக்கக்கூடாதுன்னு தோணுது.. கண்டிப்பா இதுக்கான விலையை நீ கொடுப்ப ஆதவ்.. சத்தியமா என் கண்ணீரோட வலி, உன் கண்ணீரா மட்டும் தான் இருக்க முடியும்.. நீ உன்னை அடிச்சா தாங்கிப்ப, அதுவே உன் அண்ணனை அடிச்சா, தாங்கிக்க மாட்டல்ல.. அடிக்கிறேன்.. உன் அண்ணனை துடிதுடிக்க வைக்கிறேன்.. உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா” என்றவளின் கண்களில் அப்படியொரு பழிவெறி தான் தெரிந்தது.. 

 

காதலெல்லாம் எங்கோ போயிருந்தது.. தன்னை அழ வைத்தவனை அழ வைக்க வேண்டுமென்ற குரூரம் தான் கண்ணில் தெரிந்தது.. 

 

“என்னஹ்?..” என கேட்டவனின் குரலில் சற்று நடுங்க ஆரம்பித்தது.. அவளின் கண்களில் தெரிந்த ரெளத்திரத்தைக் கண்டு.. 

 

“ஒரு பெண்ணோட வலி என்னன்னு தெரியுமா ஆதவ் உனக்கு.. மனசுல ஒருத்தனை சுமந்துக்கிட்டு, படுக்கையை இன்னெனாருத்தன் கூட பகிர்ந்துக்கிறது தான்.. எனக்கு இப்படியொரு வலியைக் கொடுக்க உனக்கு எப்படி மனசு வந்தது?..” என்றவளை, நடுங்கிய இதயத்தோடு பார்த்தான் ஆதவ்..

 

“அழ வச்சிட்டல்ல.. ஆதவ்.. என்னைய்யே அழ வச்சிட்டல்ல.. கண்டிப்பா இதுக்காக நீ அனுபவிப்ப?.. அனுபவிக்க வைப்பேன்..” என்றவளின் குரலில் அவ்வளவு வலி.. 

 

அவளின் வலியை உணர்ந்தவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.. 

 

அவனையே தான் நிலைக்குத்திய பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இஷானி.. 

 

அவனின் பார்வையைக் கண்ட இஷானியின் இதழ்களில் சிறு கர்வ புன்னகை..  

 

அழ வேண்டும், துடிக்க வேண்டும்.. தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் துடிப்பதைக் கண்டு அவனும் துடிக்க வேண்டும் என்பது தான் அவளின் அவா.. 

 

“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு சந்தோஷமா இருந்திடலாம்னு நினைச்ச, உன் ஆணவத்துக்கு கண்டிப்பா நான் திருப்பி பதிலடி கொடுப்பேன் ஆதவ்.. 

 

கல்யாணம் ஆனாலே அப்பாங்கிற அடையாளத்துக்காகத் தானே, இந்த ஆம்பிளைங்க எல்லாரும் ஓடுறாங்க.. உன் அண்ணனுக்கு அப்படியொன்னு நடக்கவே நான் விடமாட்டேன்.. உன் அண்ணனுக்கு வம்சங்கிற அடையாளமே இல்லாம பண்றேன்..” என உள்ளம் கொக்கரிக்க, தன் ஆற்றாமையை அவனிடத்தில் கொட்டித் தீர்த்தாள்.. 

 

“இஷானி..” என ஆதவ் அழைக்க, சட்டென்று வாசலில் நின்று திரும்பியவளின் விழிகளில் வேள்வித்தீ எரிய, 

 

“இஷானி இல்லை.. அண்ணிஈஈஈஈ.. நான் இப்போ துருபத இஷானி இல்லை.. துருபத இஷானி விருகோத்திரன்” என அழுத்தமாக சொன்னவள், வேகமாக வெளியேறி விட்டாள்.. 

 

அவன் தன் அண்ணனுக்கு நல்லது நடக்கும் என்று பண்ணி வைத்த கல்யாணம், இப்படி தன் அண்ணன் வாழ்க்கையை புரட்டிப் போடும் என கனவில் கூட நினைக்கவில்லை.. 

 

தன் அண்ணனின் வாழ்க்கையை சரி பண்ணாமல், அவனால் இங்கிருந்து செல்லவும் முடியவில்லை.. தலை வேறு விண்விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.. 

 

அப்பொழுது தான் யாழினி தன் அறைக்கு தாவி தாவி குதித்துச் செல்வதை தான் பார்த்தான்.. 

 

“யாழினி..” என்றவனை, திரும்பிப் பார்த்து முறைத்தவள், வெடுக்கென்று முகத்தை திருப்பிக் காெண்டு சென்றாள்.. 

 

அவளின் முகத்திருப்பலில் சட்டென்று கோபம் தான் வந்தது அவனுக்கு.. 

 

“ஏய்ய்ய்.. நில்லுடி..” என்றவன் எம்பி, அவள் ஜடையினை பிடித்து இழுத்தாள்.. 

 

“ஷ்ஷ்ஷ்.. அம்மாஆஆஆ..” என அலறியபடி தன் கைகளால் பின்னோக்கி கொண்டு சென்றவள், தன் ஜடையினை பிடித்திருந்த கைகளை விலக்க முயன்றான்.. 

 

அவனோ இறுக்கமாக பற்றிருந்ததை எங்கிருந்து விலக்க, “ப்ச்சச். விடுங்க வலிக்குது..” 

 

“ஏன்டி கூப்பிட்டா, என்னன்னு கேட்டா என்னவாம் உனக்கு?..” என இஷானி மேல் கோபத்தை, இவள் மேல் காண்பிக்க, 

 

“அடியேய்ய்யனு கூப்பிட்டதும், என்னன்னு கேட்க நான் என்ன உங்க பொண்டாட்டியா?.. விடுங்க.. என்னை ஜடையை பிடிச்சி இழுத்துக்கிட்டு..” என்றவளின் ஜடையை சட்டென்று விட்டான் ஆதவ்.. 

 

அவள் பொண்டாட்டி என்ற சொன்னதும், ஒரு கணம் ஆகினும் இஷானியின் முகம் வந்துப் போனது.. 

 

சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தவன், அங்கிருந்த யாழினியை காணாது ஒரு நிமிடம் திகைத்தான்.. 

 

“எங்கே போனா?..” என நினைத்துக் கொண்டே அங்குமிங்கும் தேடினான்.. 

 

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. இஷானியின் திட்டம் இது தான் என அறிந்தவனுக்கு, யாரிடமும் எதுவும் சொல்லவும் தோன்றவில்லை.. 

 

யாழினியிடம் நைசாக பேசி, இஷானியை அவளுக்கே தெரியாமல் வேவு பார்க்க வைக்க வேண்டுமென்று நினைத்து தான் அவளை தேடினான்.. 

 

ஆனால் அவளோ சிட்டாக பறந்து விட்டாளே அவன் கைகளில் சிக்காமல்.. 

 

ஆனால் இஷானியை அப்படியே விடவும் மனமில்லை.. இஷானியை எப்படியாவது தன் அண்ணனுடன் நல்லபடியாக வாழ வைக்க வேண்டுமென்று நினைத்தான்..

 

கல்யாணம் முடிந்தவர்களின் எதிர்பார்ப்பில் மிக முக்கியமானது முதலிரவு..

 

தீரனுக்கும், இஷானிக்கும் முதலிரவிற்கான நேரம் குறிக்கப்பட்டது.. 

 

இஷானியின் கண்களில் அதீத வலி இருந்தாலும், அமைதியாக ரெடியாகிக் கொண்டிருந்தாள்.. 

 

மஞ்சள் நிற சேலை, மன்னவன் கைப்பட்டு கசங்க வேண்டுமென்பதற்காகவே தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தார் காமாட்சி.. 

 

உருத்தாத நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள்..

 

இதழில் அடர் சிவப்பு லிப்ஸ்டிக் அடித்துக் கொண்டிருந்தாள் யாழனி.. 

 

யாழினியின் உதட்டில் சிறு புன்னகை கலந்த ஆர்வம்.. 

 

அதற்கு நேர் மாறாக இஷானியின் உதட்டில் புன்னகை சிறிதளவும் இல்லை.. 

 

“அக்கா..” என யாழினியின் குரலில் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் இஷானி.. 

 

தன் முன்னால் அலங்கார பொம்மையாக இருந்தவளை இரு கரம் கொண்டு நெட்டி முறித்தவள், “எம்புட்டு அழகா இருக்கீங்க.. எங்க மாமா கிறங்கி நிக்க போறாக..” என கள்ளம் கபடம் இல்லாமல் பேசியவளை எந்த சலனமும் இன்றி பார்த்தாள் இஷானி.. 

 

“அக்கா..” என யாழினி ஏதோ கேட்பதற்கு முன்பாகவே, 

 

“யாழினி..” என்ற காமாட்சியின் அழுத்தமான குரல் தான் கேட்டது.. 

 

தன் அன்னையின் குரல் கேட்டதும் தான் தாமதம், தன் வாயை கப்சிப்பென மூடிக் கொண்டாள்.. 

 

“யாழினி உன் ரூம்க்குப் போ..” என்றவர் நேராக வந்து நின்றது என்னவோ இஷானியின் முன்பாகத் தான்.. 

 

“இந்தாம்மா..” என தன் கையில் இருந்த பால் சொம்பை அவள் கையில் நீட்டினார்.. 

 

“பார்த்து நடந்துக்கோ இஷானி.. இந்த வீட்டுக்கு மூத்த மருமக நீ தான் ம்மா, எங்க அண்ணி இருந்த வரைக்கும் குடும்பத்துல ஒரு குறை வந்தது கிடையாது.. எங்க அண்ணாவோட கஷ்ட காலத்துக்கு அண்ணி சிக்கீரமாவே இறந்துட்டாங்க.. அதுக்கப்புறம் இந்த வீட்டுல பொண்ணுங்க வாசமே கிடையாது..” என்றவரை அழுத்தமாக ஏறிட்டுப் பார்த்தாள்.. 

 

“பொண்ணுங்க வாசம் இல்லைன்னா, நீயும்.. உன் பொண்ணும் யாரு?..” என கேளாமல் கேட்டது அவள் பார்வை..

 

“நானும், என் பொண்ணும் இங்கே வந்து இரண்டு வருஷம் தான் ஆகுது.. யாழினி அப்பா இறக்குற வரைக்கும் நாங்க திருச்சியில தான் இருந்தோம்.. அவுங்க இறந்ததுக்கப்புறம் தான் நாங்க இங்கே வந்தோம்..” என்றவர் சிறு தயக்கத்துடனே, 

 

“இஷானி.. சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதே.. நீ பட்டணத்துல வளர்ந்த புள்ள.. இந்த புள்ளை பெத்துக்கிறது எல்லாம் உங்களுக்கு கேலிக்கூத்தா கூட இருக்கும்.. ஆனா எங்களுக்கெல்லாம் அது பெரிய விஷயம்.. எங்க அடுத்த தலைமுறை, வம்ச விருத்தி எல்லாமே.. அதுனால குழந்தையை தள்ளிப் போடாம பெத்துக்க..” என்றவர், அமைதியாக நின்றிருந்த இஷானியின் தலையை வருடிவிட்டவாறே அங்கிருந்து வெளியே சென்றார்.. 

 

அவரின் கண்களில் தன் அண்ணன் மகனின் வாழ்க்கை மட்டும் தான் தெரிந்தது.. 

 

அவர் சொல்வதைக் காதில் கூட இஷானி வாங்கவில்லை என்பது கிளைக்கதை.. 

 

அய்யோ பாவமாக சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.. 

 

கையில் இருந்த பால்சொம்பை உருட்டியபடி, தீரன் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் இஷானி.. 

 

முகத்தில் எந்த வித உணர்வுகளும் இல்லை.. 

 

அவள் உள்ளே நுழைந்ததும் தான் தாமதம், அரக்க பறக்க எழுந்து அமர்ந்தான் தீரன்.. 

 

அவன் எழுந்து நின்றவன், அவள் அமர வழியை விட்டான்.. அவன் செய்வதை புருவம் சுருக்கிப் பார்த்தவள், தோரணையாக கட்டிலில் சென்று அமர்ந்தாள்.. 

 

“அப்புறம் என்ன முடிவெடுத்துருக்கீங்க?..” என்றவளை குழப்பமாக பார்த்தான் தீரன்.. 

 

“முடிவுன்னா?..” என சற்று பணிவாக தான் கேட்டான் தீரன்.. 

 

அவனுக்குத் தான் எல்லா உண்மையும் தெரிந்து விட்டதே, இதற்குப் பின் ஒளித்து மறைத்து பேச வேண்டிய அவசியமில்லையே என்பது அவள் எண்ணம்.. 

 

“ப்ச்ச்.” என சலித்தவள், “அதான் காலையிலே உளறி கொட்டுனீங்களே, என் தம்பிக்காக நான் என் பொண்டாட்..” என்பதற்கு முன்பாகவே ஓடிச் சென்று அவள் வாயைப் பொத்திக் கொண்டான் தீரன். 

 

“தப்பா பேசாத இஷா.. நான் சொன்னது உங்களை டிவோர்ஸ் பண்றேன்.. நீ என் தம்பி கூட வாழுங்கன்னு தான் சொன்னேன். என் பொண்டாட்டியை விட்டுக் கொடுக்கிறேன்னு நான் எப்பவும் சொன்னதில்லை..” என்றவனைக் கண்டு நக்கலாக புன்னகைத்தாள்.. 

 

“ஓஹோ.. அப்போ உங்க பொண்டாட்டியை நீங்க விட்டுக் கொடுக்க மாட்டீங்க, அப்படித்தானே..” என அழுத்தமாக கேட்டவளின் உள்ளூணர்வில் இருந்த அர்த்தத்தை அவன் அறியவில்லை.. 

 

“ஆமாங்க எனக்கானவளை நான் என்னைக்கும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. ஆனா நீங்க எனக்கானவ இல்லை..”

 

“ஓஹோ.. அப்போ அதுனால தான் இந்த அதீத மரியாதையா?..” என அவன் ‘வாங்க, போங்க’ என்பதை சுட்டிக் காட்டிப் பேசினாள்.. 

 

“ம்ம்.. ஆமா..” என்றவன், மர பீரோலிற்கு மேலாக வைத்திருந்த பாயை எடுத்து தரையில் விரித்தான். 

 

அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, அதை ஏன் என்று கேட்கவுமில்லை.. தடுக்கவுமில்லை.. 

 

தீரன் எதுவும் பேசாமல் தரையில் படுத்து விட்டான்.. இஷானியோ ‘எப்படியோ போய்த்தொலை’ என்பதை போல் கட்டிலில் ஜம்மென்று படுத்துக் கொண்டாள்.. 

 

சிறிது நேரத்திலேயே இருவரையும் நித்திராதேவி வந்து அணைத்துக் கொள்ள, இருவரும் நன்றாகவே உறங்க ஆரம்பித்திருந்தனர். 

 

ஆனால் அங்கு உறங்காமல் முழித்துக் கொண்டிருந்தது என்னவோ ஆதவ் தான்.. 

 

அவனுக்கு இஷானி சொன்ன வார்த்தைகளின் தாக்கம் அதிகளவில் இருந்தது.. 

 

தன் அண்ணனுடன் வாழ மாட்டாளா?.. வாழ வேண்டுமே.. அவள் நன்றாக வாழ வேண்டும் தன் அண்ணனுடன் என நினைக்கும் போதே, கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது.. 

 

எத்தனை ஆசைகள், எத்தனை நாள் ஏக்கங்கள் இருவரும் ஒருமொத்த தம்பதிகளாய் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்பது. 

 

இப்படித்தான் திருமணம் நடக்க வேண்டுமென்று எத்தனை நாள் பேசியிருப்பார்கள்?.. என நினைக்கும் போதே மனதில் தோன்றும் வலியை தடுக்க முடியவில்லை.. 

 

“ஐயம் சாரி இஷானி..” என்றவனுக்கு, மனதில் அவளுக்கு செய்த துரோகம் தான் உருத்திக் கொண்டேயிருந்தது.. 

 

அடுத்த நாள் காலை பொழுது யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது. 

 

காலை ஏழு மணிக்கே தீரன் எழுந்து வயலுக்குச் சென்று விட்டான்.. பதினோரு மணியளவில் வீட்டின் வேலையாள் இஷானி அறையின் கதவை தட்டிட, அங்கு கதவு உடனே திறந்துக் கொண்டது.. 

 

வீடெங்கும் அலசி ஆராய்ந்தனர், ஆனால் எங்குமே இஷானி இல்லை.. 

 

வேலையாள் உடனே ஓடி வந்து சிதம்பரத்திடமும், காமாட்சியிடமும் விஷயத்தை சொல்ல அதிர்ந்து போயினர் இருவரும்.. 

 

“என்ன சொல்லுற மாரி, மருமகளை காணுமா?..” என கேட்ட சிதம்பரத்தின் பார்வை, அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த தீரனின் மேல் அழுத்தமாக படிந்தது.. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!