வேந்தன்… 48

4.6
(8)

வேந்தன்… 48

 

வீட்டில் பேச்சும் சிரிப்புமாக வீடே கலகலவென இருந்தது.

 

வேலையாட்கள் சமையல்கட்டில் ஒழுங்குபடுத்தும் வேலையைப் பார்க்க, பெண்கள் ஓய்வாக அமர்ந்துவிட்டனர்.

 

சகோதரிகள் மூவரும் வீட்டிற்கு வெளியே ஒரு மரத்தின் அடியில் தரையிலேயே அமர்ந்து கொண்டார்கள். கல்லால் ஆன பென்ச் போடப்பட்டு இருந்தாலும் அதன் மீது கால்களை நீட்டியும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும் வசதியாக அமர முடியாது.

 

அதனால் தரைதான் வசதி என்று மூவரும் அமர்ந்து கொண்டார்கள்.

 

சிபின் மருத்துவமனைக்கு சென்றுவிட, சகோதரிகளுடன் நேரம் செலவிட நிறைய நேரம் கிடைத்தது நளிராவுக்கு.

 

“எப்படியும் ரெண்டு மாசம் போனா வளைகாப்பு பண்ணுவாங்க இல்லக்கா?” அதற்குப் பிறகு ஆர்த்தியும் சைத்ராவும் பிறந்த வீட்டில்தான இருப்பாங்க என்ற ஏக்கம் அவளுக்கு.

 

“ஆமாடி. நீயும்தான வருவ?” சைத்ரா கேட்க. நளிரா தன் ஏக்கத்தை தனக்குள் மறைத்தாள்.

 

“என்ன புதுப்பொண்ணே வாயே திறக்க மாட்டேங்குற?” ஆர்த்தி நளிராவின் தோளில் தட்டிக் கேட்க.

 

தேகமெங்கும் ரத்தம் கட்டியது போல வலிக்க, ஆர்த்தி மெதுவாக அடித்ததற்கே வலித்தது நளிராவிற்கு “ஸ்ஸ்ஸ் ஆஆ… அடிக்காதடி பிசாசு” ஆர்த்தியின் கன்னத்தில் கிள்ளினாள் செல்லமாக.

 

அதற்குப் பிறகு ஆர்த்தி மட்டுமே வளவளவென்று பேசிட்டு இருக்க, நளிரா தரையில் இருந்த புற்களை பிச்சுப் பிச்சு வீசி விளையாட்டிட்டு இருந்தாள்.

 

“ஆர்த்தி அம்மாகிட்ட கேட்டு சாப்பிட எதுவும் வாங்கிட்டு வாடி” சைத்ரா ஆர்த்தியிடம் சொல்ல.

 

மறுப்பு ஏதும் சொல்லாமல் ஆர்த்தியும் அங்கிருந்து கிளம்பினாள்.

 

“நளி என்னாச்சுடி?” தங்கையை மடியில் படுக்க வைத்தவள் அவள் கன்னம் தட்டிக் கேட்டாள்.

 

“அக்கா அது வந்து” தயங்கிய நளிராவுக்கு பெரும் யோசனை. தான் நினைப்பதைக் கேட்கலாமா வேண்டாமா என்று.

 

“அடடா நளி தங்கத்துக்கு இப்போல்லாம் எங்கிட்ட பேசக்கூட தயக்கமா இருக்கு போலவே. அவ்வளவு தூரம் சிபின் மேல காதலாடி?” சைத்ரா சந்தோசமாகவும் ஆதங்கமாகவும் கேட்டாள்.

 

எல்லாவற்றையும் தங்களிடம் சொல்லும் பெண் சிபின் விசயத்தில் அப்படியே மறைத்து விட்டாளே என்று.

 

இப்பொழுது திருமணம் ஆகிவிட்டிருந்தாலும் சிபின் செய்தது தப்புதானே. ஒரு பெண்ணை பார்த்ததும் பிடித்துப் போனால் ஒன்று முறையாக அவளிடம் காதலை சொல்லணும். இல்லையா அவளிடம் அனுமதி வாங்கிக்கிட்டு பெற்றவர்களிடம் திருமணம் பற்றிப் பேசலாம்.

 

அவர் இஷ்டத்துக்கு அவளை ஆட்டி வைத்திருக்காரே. அதுமட்டுமா இவளும்தானே அவர் சொன்னபடியெல்லாம் கேட்டுகிட்டு தலையாட்டி பொம்மை போல நடந்திருக்கா.

 

விஷயம் தங்களுக்கு தெரிஞ்சதாலயும் சிபின் குடும்பம் பற்றி சைத்ரா மாமனாருக்கு தெரியுன்றதாலையும் எல்லாம் நல்லவிதமாய் முடிந்தது. இல்லாவிட்டால் இவளின் நிலை…

 

இதைப் பற்றி தங்கையிடம் பேசவேண்டாம் என்றுதான் சைத்ரா நினைத்திருந்தாள். ஆனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

 

“அக்கா!” நளிரா எழுந்து அமர்ந்தாள். இப்போது என்ன புதுசா என்ற அதிர்ச்சி அவளுக்கு.

 

“எப்பவுமே உனக்கு அக்காதான். உனக்குத்தான் எல்லாமே மறந்துருச்சுடி” குற்றம் சாட்டினாள் அவளை.

 

“என்ன பேசறக்கா. எனக்கு ஒன்னும் புரியலை” நளிரா புரியாமல் விழித்தாள். சிபின் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறான் என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தவளுக்கு, நடந்து முடிந்த ஒன்றை விசாரிக்கவும் குழம்பிப் போனாள்.

 

“சிபின் உன்னை அவ்ளோ தொந்தரவும் பண்ணிருக்கார். எங்ககிட்ட எதுவும் சொல்லாம மறைச்சிட்ட. ஏன்?” சைத்ரா அவளுக்கு தான் மறைமுகமாக பேசுவது புரியவில்லை எனவும் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.

 

“அப்ப நம்ம வீட்டுலே கல்யாணம் அக்கா. என்னால தேவையில்லாம பிரச்சனை வேண்டாம்னு நினைச்சேன்” தவறு செய்த பிள்ளை போல தலைகுனிந்தாள் நளிரா.

 

“இதுல எங்க மாமனார் வேற எனக்குத் தெரிஞ்ச இடம்தான். பொண்ணை கட்டி வைக்கலாம்னு அவ்ளோ சிபாரிசு. யாருக்குமே இங்கே அறிவில்லையாடி. அப்பாக்கு சம்மந்தி சொன்னா சரியா இருக்கும்னு நினைப்பு. உனக்கு யார் மனசும் காயப்படக் கூடாதுன்னு நினைப்பு.

எல்லாம் சரியா நடந்திருக்குன்னு இப்ப இங்கே மாப்பிள்ளை வீட்டுலே உட்கார்ந்து பேசுறோம். இல்லைன்னா உன்னோட நிலைமை என்னடி. யாருன்னு தெரியாத ஒருத்தனை நம்பி தனியா போற அளவுக்கு உனக்கு எங்கிருந்துடி தைரியம் வந்துச்சு?” அத்தனை நாளாக கேட்காமல் விட்டதை சைத்ரா கேட்டுவிட.

 

“அக்கா” முற்று முழுதாக உடைந்து போனவள் சகோதரியின் மடியில் படுத்துக் கதறிவிட்டாள்.

 

“உன்னை ஆத்திரம் தீர அடிச்சா என்னன்னு இருந்துச்சிடி. ஆனால் உன்னை அடிச்சுட்டு நானில்ல மனசு நோகணும்” சைத்ரா விழிகளில் கண்ணீர் வழிந்தது.

 

“என்னை மன்னிச்சிடுக்கா. தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்ககிட்ட பேசியிருக்கணும்” தன் வாழ்க்கையைப் பற்றிய குழப்பம் அவளை அலைகளிக்க, தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டதைப் போல அழுதாள் நளிரா.

 

அழும் தங்கையின் முதுகில் தட்டிக் கொடுத்த சைத்ரா “சாரிடி. ஏதோ ஆதங்கத்தில் கேட்டுட்டேன். அதான் நல்லபடியா இருக்கியே அதுவே போதும்” சைத்ரா தங்கையை சமாதானம் செய்தாள்.

 

“சாரிக்கா” நளிரா கண்ணீரை துடைக்க.

 

“அதைவிடுடி. இப்போ என்ன குழப்பம் உனக்கு?”

 

“அவர் முகத்துல சிரிப்பே காணோம் அக்கா. கொஞ்சம் கோபமா இருக்கற மாதிரியே இருக்கார்” தயங்கித் தயங்கிப் பேசினாள் நளிரா.

 

“நைட் உங்களுக்குள்ள எல்லாம் ஓகேதானடி?” சைத்ரா கூர்மையான பார்வையுடன் தங்கையைப் பார்த்தாள்.

 

“அக்கா ப்ளீஸ்” முகம் சிவந்து போன நளிரா அவள் கையில் நறுக்கெனக் கிள்ளியும் வைத்தாள்.

 

“அப்போ ஓகேதான்” நிம்மதியாக புன்னகைத்த சைத்ரா “அவரோட தம்பி கோமாவுல இருக்கார்டி. அந்தக் கவலை இருக்கும்ல” சைத்ரா அவளை சமாதானம் செய்தாள்.

 

“ஓ ஆமால்ல” அப்படியும் இருக்குமோ என்று ஓரளவு சமாதானம் ஆனவளுக்கு சிபினின் குத்தல் பேச்சும், கோபமும் உருத்தலைக் கொடுக்க. இன்னும் குழப்பமாக இருந்தது அவளுக்கு.

 

“அக்கா வாங்க வீட்டை சுத்திப் பார்ப்போம்” ஆர்த்தி அங்கே வரவும், இருவரின் பேச்சும் வேறு திசைக்குத் திரும்பியது. மூவரும் பெரியவர்கள் இருக்கும் திசைக்கு நடந்து சென்றார்கள்.

 

மதிய சமையலை இரண்டு மணிநேரம் கழித்து செய்து கொள்ளலாம், அதுவரை வீட்டை சுற்றிப் பார்க்கலாம் என்று மிரா சொல்லிவிட. அனைவரும் வீட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். வீட்டை சுற்றிப் பார்த்து முடித்தவர்கள் வீட்டிற்கு வெளியே நடந்தனர்.

 

வாணிக்கும் மனோகரிக்கும் வீட்டை சுற்றி வந்ததிலேயே கால்கள் ஓய்ந்து போக, “எங்களால இதுக்கும் மேல முடியாதுப்பா, நீங்க நடங்க” என்று சொன்னவர்கள் மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த நீளமான கல் பெஞ்சில் அமர்ந்து விட்டார்கள்.

 

மலர்விழிக்கும் நாதனுக்குமே அப்படித்தான் இருக்கவும், அவர்களும் அமர்ந்து கொண்டனர் அவர்களுடன்.

 

“அத்த நாம நடப்போம் வாங்க” ஆர்த்தி மிராவை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

 

தன் பிறந்த வீட்டுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு சந்தோஷமாக இருக்கும் நிமிடங்களை கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவளாய் மனதின் வருத்தம் அத்தனையையும் குழி தொண்டி புதைத்து வைத்தாள் அப்போதைக்கு.

 

மீராவையும் பேச்சுக்கு அழைத்துக் கொள்ள, மூன்று பெண்களையும் மீராவுக்குப் பிடித்துப் போனது.

 

வாணியும் மனோகரியும் மலர்விழியும் விருந்தே சமைத்திட, ஆர்த்தியும் சைத்ரா மிரா மூவரும் அவர்களுக்கு உதவி செய்தனர்.

 

காய்கறி வெட்டுவது முதல் அரைத்து தருவது வரைக்கும் இவர்கள் பார்த்துக் கொள்ள.

 

பெரியவர்கள் இனிப்பு காரம் என்று செய்தனர்.

 

“எனக்கு லட்டுன்னா ரொம்ப பிடிக்கும் சம்மந்திம்மா. அதும் இதுமாதிரி சிம்பிளா பழைமையான முறைப்படி இருந்தா ரொம்ப பிடிக்கும்” மிரா சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்ல.

 

“எங்க மாமியாரோட மாமியார் சொல்லித் தந்தது மிராம்மா இது, நான் செய்யறப்ப பாரத்துக்குங்க. எழுதியும் தரேன். நீங்க உங்க மருமகளுக்கு சொல்லித் தாங்க” மலர்விழி சொல்லிக் கொண்டே முறுக்கும் அதிரசமும் அழகாய் ஒரு சம்படத்தில் அடுக்கி வைத்தார்.

 

“ஆமா அத்த. உங்க மருமகளுக்கு சுடு தண்ணி வைக்கக் கூட நீங்கதான் சொல்லித் தரணும்” ஆர்த்தி நளிராவை கேலி செய்ய.

 

எல்லாவற்றிற்கும் அழகான ஒரு புன்னகையை மட்டுமே தந்தாள் நளிரா. நிச்சயம் சிபின் மனது மாறும் என்று நம்பியவளுக்கு இவர்களிடம் தன் நிலையைச் சொல்லி அவர்களையும் வருத்தி, சிபின் பற்றிய தவறான எண்ணங்களைத் தரவேண்டாமே என்று எண்ணினாள்.

 

அதனால் மனதில் உள்ள குழப்பங்களை மறைத்தே அவர்களுடன் பேசினாள்.

 

“அதெல்லாம் போகப் போகக் கத்துப்பா சம்மந்தி. இப்பவே கத்துக்கணும்னு என்ன இருக்கு. சின்னதுங்க சந்தோஷமா இருக்கட்டும்” மிரா சொல்லிவிட.

 

“அதுவும் சரிதான்” மனோகரி உதட்டைப் பிதுக்கினார். வேலைக்கு ஆள் இருக்கு. அதனால இப்படி சுளுவா சொல்லிட்டாங்க.

 

ஆதியில இருந்து அந்தம் அவரைக்கும் வீட்டுப் பொண்ணுங்கதான் வீட்டு வேலை செஞ்சாகணும்னு இருக்குற வீட்டில மருமகளும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கத்தானே வேணும். இதை மனதில் நினைத்தவர் வெளியே சொல்லவில்லை.

 

“நளிரா சிபின் வந்திருக்கான். நீ போய் ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு வாம்மா” மிரா அழைத்துச் சொல்லவும், அவன் பெயரைக் கேட்டதும் திக்கென்று அதிர்ந்த விழிகளோடு மாமியாரைப் பார்த்தவள், தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

 

“இதோ போறேன் அத்த” சொல்லிவிட்டு கையில் இருந்த சர்க்கரை கின்னத்தை, “அம்மா சர்க்கரை போதுமான்னு பாத்துக்கோங்க” என்று தாயிடம் தர.

 

“சரிம்மா. நீ ரூமுக்கு போ. மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு. உனக்கு இங்க எந்த வேலையுமே இல்ல. சாப்பிட வந்தா போதும்” என்று அனுப்பி வைத்தார்.

 

மாடிப்படியில் ஏறி நடந்து சென்றவளின் முகத்தில் புதுப்பெண்ணிற்கே உண்டான ஆர்வமும் இல்லாது பயமும் கவலையும் அப்பிக்கிடக்க, அதைப் பார்த்திருந்த மிராவின் நெஞ்சில் கவலை குடியேறியது.

 

பிள்ளைகளை நன்றாக வளர்த்திவிட்டோம் என்ற நிம்மதியில் இருந்தவளுக்கு பெருத்த அடியாகப் போனது.

 

ஒரு தவறும் செய்யாத அப்பாவிப் பெண்ணிடம் சிபின் காட்டும் கோபமும். தன்னுடைய அவசரத்தால் கோமா வரைக்கும் சென்றிருக்கும் துருவ்வும் இவருக்கு அதிருப்தியையே தந்தார்கள்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!