06. காதலோ துளி விஷம்

4.9
(63)

விஷம் – 06

கதவு திறக்கும் சத்தமும் டாக்டர் வந்துவிட்டார் எனச் சிரிப்போடு அமர் கூறிய வார்த்தைகளும் அர்ச்சனாவை நொறுக்கி விட்டிருந்தன.

அவளைக் கூட்டமாக இணைந்து சிதைக்கப் போகிறார்கள் என எண்ணி நடுநடுங்கிப் போனாள் அவள்.

உடல் முழுவதும் உதறியது.

தான் இருந்த கோலத்தைக் குனிந்து பார்த்தவள் ஓடிச்சென்று அங்கிருந்த சிலிண்டர்களின் பின்னே மறைந்து கொண்டாள்.

தன்னை சிதைக்கப் போகிறார்களோ..?

தன்னுடைய கற்பு பறிப் போகப் போகின்றதோ..?

இக்கணம் இறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் கூட நிச்சயமாக அவள் இறந்து விடுவாளே.

இந்தக் கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவதை விட இறப்பது மேல் என அறிவுறுத்தியது அவளுடைய பலவீனமான மனம்.

அதே கணம் வந்திருப்பது டாக்டர்தான் என எண்ணிக் கதவைத் திறந்த அமரோ வெளியே நின்ற யாழவனைக் கண்டதும் விழி பிதுங்கிப் போனான்.

நொடியில் அவன் கட்டி வைத்த கனவு மாளிகை அனைத்தும் சீட்டுக் கட்டாய் சரிந்து விழுந்தது.

அவன் யாழவனை இங்கே இந்த நேரத்தில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இவன் இன்னும் வீட்டிற்கு கிளம்பவில்லையா எனப் பதறியவன் “சார்…?” என எதுவுமே நடவாதது போல அவனைப் பார்த்தான்.

“அர்ச்சனா எங்கே..?” சுத்தி வளைக்காமல் நேரடியாகக் கேட்டான் யாழவன்.

அர்ச்சனா உள்ளே வந்தது அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றதும் சட்டென அமரின் முகம் மாறியது.

நெற்றியோரம் வியர்வை அரும்பியது.

“சா.. சார் அது வந்துஉஉ..”

“டேய் அர்ச்சனா எங்க..?” உறுமினான் யாழவன்.

“சார் சாரி.. தப்பா எடுத்துக்காதீங்க சார்… அவளும் நானும் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்.. அதனாலதான் தனியா இந்த ரூமுக்கு வந்தோம்..” என அப்படியே நடந்ததை மாற்றிக் கூறினான் அவன்.

அவனுடைய வார்த்தைகளில் யாழவனின் புருவங்கள் உயர்ந்தன.

“அர்ச்சனா வெளிய வா… இவன் சொல்றது உண்மையா..?” என்ற சத்தமான குரல் சிலிண்டர்களுக்கு பின்னால் மறைந்திருந்த மாதுவின் காதுகளில் நுழைய,

 இது யாழவனின் குரல் ஆயிற்றே என எண்ணியவள் சட்டென எழுந்து வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தாள்.

முகம் முழுவதும் கண்ணீரோடு கதறிக்கொண்டே ஓடிவந்தவளைக் கண்டு பதறிவிட்டான் அவன்.

யாழவனை நோக்கி வேகமாக ஓடி வந்தவளோ ‘அமர் கூறிய இன்னொருவன் இவன்தானோ..?’ என எண்ணி சட்டென அப்படியே நின்று விட்டாள்.

கால்கள் நகர மறுத்தன.

அவளுக்கு இதயம் வாய் வழியாக வந்து வெளியே விழுந்து விடும் போல இருந்தது.

மேலும் அழுகை கூடியது.

இன்று அத்தனை நல்லவன் போல பேசினானே இவனும் இந்தக் கயவனும் கூட்டு சேர்ந்துதான் இந்தத் திட்டத்தை தீட்டினார்களா..?

ஐயோ..!

எப்படித் தப்பிச் செல்வது..?

அவளுக்கு தலை வெடித்து விடும் போல இருந்தது.

“அர்ச்சனா ஆர் யு ஓகே..? என்ன ஆச்சு..? ரிலாக்ஸ்..” எனக் கூறியவாறு அவளை நெருங்க முயன்றான் யாழவன்.

“ஐயோ.. வேணாம்.. கி.. கிட்ட வராதீங்க… நீ.. நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க ப்ளீஸ், நான் வெளிய எதுவுமே சொல்ல மாட்டேன்.. எ.. என்ன போக விடுங்க..” என தன்னை நெருங்கி வந்த யாழவனைப் பார்த்து கைகூப்பி அழுதாள் அர்ச்சனா.

அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து அசைவற்று நின்று விட்டான் யாழவன்.

தன்னையும் அவள் தவறாக எண்ணி விட்டாள் என்பது புரிய அவனுடைய சீற்றமான பார்வையோ அமரின் மீது அம்பாய் பாய்ந்தது.

அமருக்கோ உடல் பயத்தில் உதறியது.

“சார், இவதான் சார் என்னைக் கூப்பிட்டா.. உங்களைக் கண்டதும் நல்லவ மாதிரி நடிக்கிறா.. நம்பலன்னா பாருங்க… என்னை மெசேஜ் பண்ணி இங்க வர சொன்னதே இவதான்..” என அவள் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை எடுத்து யாழவனுக்குக் காட்டினான் அமர்.

யாழவனைக் கண்டு அமர் அஞ்சி நடுங்குவது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

யாழவனுக்கும் அமருக்கும் சம்பந்தம் இல்லை என்பது அந்த நொடியில் புரிந்தாலும் கூட யாழவனை நெருங்கவும் அந்த சூழ்நிலையில் பயந்தாள் அர்ச்சனா.

எப்படி நம்புவது..?

இத்தனை நாட்கள் கூடவே வேலை பார்த்த அமரின் மனதில் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனைகள் இருக்கும் என அவள் கனவில் கூட எண்ணியதில்லையே.

அவனையே நம்ப முடியாத போது புதிதாக வந்த இவனை எப்படி நம்புவது..?

அவள் சிந்தனைகள் தாறுமாறாக தறிகெட்டு ஓடத் தொடங்கியது.

“இவ பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுற மிடில் க்ளாஸ் பொண்ணு சார்.. பணத்துக்காக என்னை கூப்பிட்டுட்டு இப்போ நல்லவ மாதிரி நடிக்கிறா..”

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாயில் வந்தவற்றையெல்லாம் வாய் கூசாமல் உண்மை போலக் கூறினான் அமர்.

தன் மீது அமர் பழி போடுவதைக் கண்டு விக்கித்துப் போய்விட்டாள் மாது.

அவளுக்கோ பேசவே நா வரவில்லை.

ஆடை ஆங்காங்கே கிழிந்திருந்தது.

தன்னால் முயன்றளவு கைகளால் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவளுக்கு அப்படியே நிலத்திற்குள் புதைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

அவளுடைய நிலையை சட்டென புரிந்து கொண்ட யாழவனோ தன்னுடைய ஷர்ட் பட்டனை கழற்றியவாறு வேகமாக அவளை நெருங்கி வந்து தன்னுடைய ஷர்ட்டினை அவளுடைய கரத்தில் கொடுக்க,

முதலில் பயந்தவள் பின் அவன் தனக்கு உதவிதான் செய்கிறான் என்பதைப் புரிந்து நடுக்கத்துடன் அந்த ஷர்ட்டினை வாங்கி தன்மீது போர்த்திக் கொண்டாள்.

அவள் உடல் வெளிப்படையாக நடுங்கியது.

“சார் நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க.. இவதான் என்னை கூப்பிட்டா.. இப்போ எந்த பேஷண்ட்டுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படவே இல்லை..” என தன் மீது தவறு இல்லை என நிரூபிக்க போராடினான் அமர்.

இப்போதும் பேசாமல் அமைதியாக இருந்தால் பழி தன்மீது திரும்பிவிடும் என்பதை உணர்ந்த அர்ச்சனாவோ உதிரமாட்டேன் என்ற வார்த்தைகளை இழுத்துப் பிடித்து கோர்வையாகக் கோர்த்தவள்,

“இ.. இல்ல சார்.. எமர்ஜென்சி வார்ட்ல இருக்க டாக்டர் பிரபுதான் சிலிண்டரை எடுத்துட்டு வரச் சொன்னாரு… அங்க இருந்த ஒரு பேஷண்டுக்கு மூச்சு எடுக்க முடியலை.. அதனாலதான் நான் வந்தேன்.. என்னால தனியா இந்த ஆக்சிஜன் சிலிண்டர தூக்க முடியாது.. ஹெல்ப் கேட்டுதான் இவரை வரச் சொன்னேன்.. ஆ.. ஆனா இவரு.. எ.. என்கிட்ட ” என தட்டு தடுமாறி அர்ச்சனா கூற,

“ஐயோ என்னமா நடிக்கிறா… இவ சொல்றது முழுக்க பொய் சார்… நீங்க வேணும்னா எமர்ஜென்சி வார்ட் டாக்டருக்கு கால் பண்ணி கேட்டுப் பாருங்க அவர் நிச்சயமா இவள அனுப்பி இருக்க மாட்டாரு..” என அமர் கூற அவன் மீதுதான் தவறு என்பது புரிந்தாலும் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் எமர்ஜென்சி வார்ட் டாக்டரின் எண்ணைக் கேட்டு அதை தன்னுடைய அலைபேசியில் அழுத்தியவன் அவரிடம் விசாரிக்க எமர்ஜென்சி வார்டில் இருந்த டாக்டரோ “ஆக்சிஜன் சிலிண்டர் வேணும்னு நான் அர்ச்சனா மிஸ்கிட்ட கேட்கவே இல்லையே..” என மறுத்து விட அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஸ்பீக்கரில் இருந்த யாழவனின் ஃபோனை கிட்டத்தட்ட பறித்து எடுத்தவள் “டாக்டர் நீங்கதானே என்ன ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்துட்டு வரச் சொன்னீங்க.. இப்போ எதுக்காக இல்லைன்னு சொல்றீங்க.. ஒரு பேஷண்ட்க்கு கூட மூச்சு திணறல் வந்துச்சே.. அதனால தானே என்னை எடுத்து வரச் சொன்னீங்க.. இப்போ ஏன் இல்லைன்னு பொய் சொல்றீங்க..?” என அவள் அழுகையோடு கேட்க,

“இல்லையே நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே.. இந்த வார்ட்ல எந்த பேஷண்ட்டுக்கும் மூச்சுத் திணறல் வரவே இல்லை.. வேணும்னா நீங்களே வந்து செக் பண்ணிக்கோங்க.. நான் உங்ககிட்ட ஆக்சிஜன் சிலிண்டர் கேட்கவே இல்லை மிஸ் அர்ச்சனா..” என அந்த வைத்தியர் ஒரேடியாக மறுத்து விட இவளுக்கோ முகம் வெளிறிப் போனது.

அமரின் உதடுகளிலோ வெற்றிப் புன்னகை.

“சார் நான்தான் சொன்னேன்லே இவதான் எனக்கு மெசேஜ் பண்ணி கூப்பிட்டா.. இதோ பாருங்க மெசேஜ்..” என அர்ச்சனா அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் யாழவனிடம் அவன் காட்ட இவளுக்கோ மயக்கம் வந்துவிடும் போல இருந்தது.

“ச.. சத்தியமா நான் அப்படிப்பட்டவ இல்லை.. டாக்டர் பொய் சொல்றாரு.. இவனும் பொய் சொல்றான்.. நான்… நா.. நான் தப்பானவ கிடையாது. என் மேலே தப்பு கிடையாது.. இவன்தான் என்ன…” என திக்கித் திணறி அவள் அழுது கரைய அவளை தலை முதல் கால் வரை வேகமாக தன் பார்வையால் ஆராய்ந்தவன் சரியான நேரத்துக்கு தான் வந்து விட்டோம் என்பது புரிந்து நிம்மதி அடைந்தான்.

இன்னும் சற்று தாமதித்து இருந்தால் கூட இந்தப் பெண்ணை என்னவெல்லாம் செய்திருப்பார்களோ..?

அவனுக்கோ ஆத்திரமாக வந்தது.

அர்ச்சனாவோ யாழவன் தன்னை நம்பவில்லை எனப் பதறி “சத்தியமா நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை சார்.. வேணும்னா வார்டுக்கு வாங்க.. மூச்சுத் திணறல் வந்த பேஷண்ட உங்களுக்கு காட்டுறேன்..” என அவள் அழுகையோடு கூற,

“இப்போ நாம போய் அந்த பேஷன்ட்கிட்ட கேட்டாலும் எனக்கு மூச்சு திணறல் வரவே இல்லைன்னுதான் சொல்லுவான். எல்லாமே இவங்களோட பிளான்னு தோணுது.. இந்த ரூமோட சிசிடிவி கேமரா மட்டும் வொர்க் பண்ணலைன்னதுமே எனக்கு சந்தேகம் வந்துருச்சு.. அதனாலதான் நேரா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்..” என யாழவன் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை உதிர்க்க,

அவற்றைக் கேட்ட அமருக்கோ முகம் இரத்தப் பசையற்று வெளுத்துப் போனது.

“சார் ஏதோ நாங்க வேணும்னே ஒரு பேஷண்ட்டை செட் பண்ணி பொய் சொல்ல சொல்லி அர்ச்சனாவ இங்க அனுப்பி வைச்ச மாதிரி பேசுறீங்க..” என நடுக்கத்தோடு அமர் கேட்க,

அடுத்த நொடியே அவனுடைய மார்பில் எட்டி உதைத்தான் யாழவன்.

தன் கரத்தில் இருந்த வாட்சை கழற்றி தன் ஜீன் பாக்கெட்டில் போட்டவன் அதிர்ந்து விழி விரித்து நின்ற அர்ச்சனாவைப் பார்த்து

“நீ வெளியே போய் மேலே இருக்க என்னோட கேபின்ல வெயிட் பண்ணு..” எனக் கூற,

“என்னாலே இப்படியே வெளிய போக முடியாது சார்..” என கண்ணீரோடு தயங்கினாள் அவள்.

“சரி அப்போ அந்தப் பக்கம் திரும்பி நில்லு..” என அவன் அழுத்தமாக் கூற ஏன் எதற்கு என்று கேட்காமல் சிலிண்டர்களைப் பார்த்தவாறு திரும்பி நின்று கொண்டாள் அர்ச்சனா.

அதன் பின்னர் அவளுக்கு கேட்டதெல்லாம் அமரின் கதறலும் அவனுடைய உடல் பாகங்கள் உடையும் சத்தமும் தான்.

அவளுக்கோ அச்சத்தில் உடல் தூக்கிப் போடத் தொடங்கியது.

இருந்தாலும் தன்னை அடித்து ஆடையை கிழித்துத் தவறாக நடக்க முற்பட்டவனுக்கு இது தேவைதான் என்ற திருப்தி அவளுடைய மனதில் எழுவதை அவளால் அந்த நொடி தடுக்க இயலவில்லை.

ஒரு கட்டத்தில் அமரோ மயங்கியே போக,

“வா போகலாம்..” என்ற அவனுடைய குரல் கேட்டு அவன் புறம் திரும்பினாள் அர்ச்சனா.

அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த அமரைக் கண்டதும் அவளுக்கோ கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

மெல்லத் தள்ளாடியவாறு சரிய முற்பட்டவளை நெருங்கி சட்டென தாங்கிப் பிடித்துக் கொண்டவன், “ஆர் யு ஓகே..” எனக் கேட்க இல்லை என மறுத்துத் தலை அசைத்தவளுக்கு நிதானத்திற்கு வர முடியவில்லை.

“தல சுத்துது என்னால நடக்க முடியல..” என்றவள் அப்படியே தொய்ந்து அவனுடைய கரங்களில் மயங்கி விழ அதிர்ந்தவனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

அப்படியே அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் சிலிண்டர் அறையிலிருந்து தன்னுடைய கேபினுக்கு அவளைக் கொண்டு வந்து அங்கே இருந்த சோபாவில் அவளைப் படுக்க வைத்தான்.

அவளுடைய தடித்த சிவந்த உதடுகளின் ஓரத்தில் இரத்தம் கசிந்திருப்பதும் அவளுடைய கன்னத்தில் கைவிரல் அடையாளம் இருப்பதையும் கண்டவனுக்கு அமரின் கரத்தை உடைத்ததில் தவறேதும் இல்லை என்றே தோன்றியது.

அவனுடைய ஷர்ட் விலகி அவளுடைய ஆடைகள் கிழிந்திருப்பதும் அவளுடைய வெண்ணிற இடை அப்பட்டமாக வெளியே தெரிவதையும் பார்த்தவனுக்கு எந்தவிதமான சலனமும் தோன்றவே இல்லை.

அவன் பார்க்காத பெண்களா என்ன…?

அவன் வளர்ந்த இடத்தில் பெண்களின் உடலில் ஆடைகள் கஞ்சத்தனமாகத்தானே இருக்கும்.

ஆதலால் அவன் அர்ச்சனாவின் ஆடை விலகிய உடலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

பெருமூச்சோடு அவளைப் பார்த்துவிட்டு போலீஸுக்கு அழைத்தவன் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறிவிட்டு அவனுடைய அறைக் கதவை வெளிப்பக்கமாக பூட்டித் திறப்பை எடுத்துக் கொண்டவன் அதிவேகமாக எமர்ஜென்சி வார்டுக்கு பொறுப்பான மருத்துவரைத் தேடிச் சென்றான்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 63

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “06. காதலோ துளி விஷம்”

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். எபி மழை உண்டா?👌👌👌👌👌👏👏👏😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩❤️❤️❤️❤️❤️

Leave a Reply to Kotteeswari K Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!