வீட்டை விட்டு வெளியே வந்தவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.
அவனுடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும் வலி வலி வலி..
வலி மாத்திரமே..!
எங்கே செல்ல வேண்டும்..
எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்..
யாரிடம் சென்று நியாயம் கேட்க வேண்டும்..?
அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதுவுமே அவனுக்குப் புரியவில்லை.
நான்தான் தவறு செய்து விட்டேனோ..?
வேலை பணம் எதிர்காலம் என பணத்தின் பின்னேயே ஓடி குடும்பத்தை தொலைத்து விட்டேனோ..?
எனக்காக மட்டும் நான் பணத்தை சம்பாதிக்க நினைக்கவே இல்லையே.
என் குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தானே நினைத்தேன்.
என் மனைவியை ராணி போல வாழ வைக்கத்தானே ஆசைப்பட்டேன்.
என் குழந்தையை இளவரசியாக வளர்க்கப் பணம் தேவைப்பட்டதே.
அதற்காகதானே என்னுடைய விருப்பு வெறுப்புகளை எல்லாம் மறந்துவிட்டு நடுக்கடலில் எந்த சொந்தமும் இன்றி இரவு பகலாக மாடாய் உழைத்தேன்.
எனக்காக ஒன்றும் நான் பணத்தின் பின்னே ஓடவில்லையே.
ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை அந்த வேலையை விட்டுவிட்டு என்னிடம் வந்துவிடு என அவள் கூறி இருந்தால் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வந்திருப்பேனே.
அவளை விடவா எனக்கு இந்த வேலை முக்கியம்..?
அவளை விடவா என் எதிர்காலம் எனக்கு முக்கியம்..?
கூலித்தொழில் செய்து பிழைக்கும் வல்லமை என் உடலில் இருக்கின்றதே.
என்னை ஏன் அவள் அழைக்கவே இல்லை..?
உடல் தேவைதான் முக்கியம் என்றால் என்னிடம் கூறி இருக்கலாமே.
நானாக கேட்டபோது கூட என்னிடம் அவள் எதுவுமே சொல்லவில்லையே.
ஏன் இப்படி ஒரு துரோகத்தை எனக்குச் செய்தாள்..?
ஒருவேளை நான்தான் அவளுக்கான காதலை ஒழுங்காக வழங்கவில்லையோ..?
தொலைவில் இருந்தாலும் என் காதலையோ அவள் மீது இருந்த அக்கறையோ நான் காட்டத் தவறியதே இல்லையே.
எங்கனம் என்னுடைய குடும்ப உறவு பிழைத்துப் போனது..?
எங்கே செல்கிறோம் என்றே தெரியாது இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு வீதியில் நடந்து சென்றவன் திடீரென அவன் முன்பு மோத வந்து பிரேக் அடித்து நின்ற பைக்கை பார்த்து உறைந்து நிற்க,
“யோவ் சாவு கிராக்கி… நடுரோட்ல இப்படி நடந்து வர்ற..? இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா..? வீட்டுல சொல்லிட்டு வந்தியா இல்லையா..? நான் மட்டும் பிரேக் போடலைன்னா மகனே நீ காலி ஆகிருப்ப..” என கோபத்தில் திட்டிவிட்டு அவன் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் பண்ணி சென்றுவிட,
மார்பில் கரத்தை பதித்தவாறு சில நொடிகள் அதிர்ந்து நின்றவனுக்கு உடல் முழுவதும் வியர்த்து விட்டது.
அடுத்த கணமே இனி உயிருடன் இருந்து என்ன பயன்..?
இறந்தால் கூட இந்த மனதை அழுத்தும் வலி தெரியாதே.
என்னை அந்த மோட்டார் பைக் மோதியே இருக்கலாம் என எண்ணியவனுக்கு சட்டென உடல் உதறியது.
‘ஐயோ என் பாப்பா இருக்கிறாளே.. நான் இல்லாவிட்டால் அவளை வேறு யாரால் பார்த்துக் கொள்ள முடியும்..?’
என்னுடைய மனம் ரணமாகிப் போனால் என்ன..? உடைந்து நொறுங்கினால்தான் என்ன..?
என் குழந்தை எந்தவித கஷ்டமும் இன்றி இந்த உலகத்தில் வாழ வேண்டுமே.
பெண்பிள்ளை அல்லவா..?
அவளை இன்னொரு குடும்பத்தில் நல்ல பெயருடன் ஒப்படைக்க வேண்டுமே.
இவ்வளவு கடமைகளை அப்படியே அம்போவென விட்டுவிட்டு என் சுயநலத்திற்காக இறப்பதா..?
வேகமாக வீதி ஓரம் வந்து நின்று கொண்டான் அவன்.
‘நான் சாகக்கூடாது. என் குழந்தைக்காக வாழ வேண்டும்..’
இனி நித்தம் கொல்லப் போகும் இந்த வலியை அவனால் எதிர் கொள்ள முடியுமா?
இனி எப்படி அவளுடைய முகத்தை அவனால் பார்க்க முடியும்..?
அவன் இதுவரை காலமும் உயிராக நேசித்த அவளுடைய முகம் இனி தினம் தினம் உயிரோடு அவனை வதைக்குமே.
மீண்டும் அவனுடைய கால்கள் தன்னுடைய நடையைத் தொடர்ந்தன.
கால்கள் வலிக்கும் மட்டும் எங்கே செல்கிறோம் என்றே தெரியாது தனக்குள்ளேயே சிந்தித்த வண்ணம் சென்றவன் ஒரு கட்டத்தில் நின்றான்.
நான் வருவேன் என்ற நம்பிக்கையில் குழந்தையை வைத்திருப்பாளே..
மீண்டும் அங்கே செல்ல வேண்டுமா எனக் கசந்து வழிந்தது அவனுடைய இதயம்.
ஏன் இந்தக் கப்பல் பழுதாக வேண்டும்..?
கப்பல் மட்டும் எந்தப் பிரச்சனையும் இன்றி ஓடி இருந்தால் இவை யாவும் எனக்கு தெரியவே வந்திருக்காதே.
நிம்மதியாக இருந்திருப்பேனே.
“ஐயோஓஓஓஓஓ…” என வீதியில் நின்றவாறே அவன் வலி தாங்காமல் அலறி விட அவனை கடந்து செல்பவர்கள் எல்லாம் ஒரு கணம் நின்று பைத்தியமா இவன் என்பதைப் போல பார்த்துவிட்டுச் சென்றனர்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன் நிதானத்திற்கு வர பெரும்பாடு பட்டான்.
கால்கள் மரத்துப் போனதைப் போல இருந்தன.
வெகு தூரம் நடந்து விட்டிருந்தால் இனி நடக்க முடியும் என்றே தோன்றவில்லை.
உடலின் வலியை விட மனதின் வலி அவனை மிகவும் சோர்ந்து போக வைத்திருந்தது.
தொண்டை வறண்டு அந்த விதியின் ஓரமாக இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டவன் விண் விண் என்று வலித்த தன் தலையை அழுத்திக் கொண்டான்.
அவன் மனதிற்குள்ளோ சிந்திக்க வேண்டும்.. ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.
அவனுடைய காயம் பட்ட மனம் அவனுடைய சிந்திக்கும் திறனை மழுங்கடித்துக் கொண்டிருந்தது.
ஆண்களுக்கு பெண்களைப் போல அழும் சுதந்திரம் கூட இல்லை அல்லவா.
பெண்கள் அழுதால் அது இயல்பு.
அவர்களுடைய வலியை கண்ணீர் மூலம் வெளிக்காட்டுகின்றனர் என்று முடிந்துவிடும்.
இதுவே ஒரு ஆண் வாய் விட்டுக் கதறி அழுதால் அவனை இந்த சமூகம் வித்தியாசமாக அல்லவா பார்க்கும்.
பெண் போல அழுகின்றான்.
சூழ்நிலையை சமாளிக்கத் தெரியாத கோழை.
வெட்கம் இல்லையா போன்ற வார்த்தைகள் அல்லவா அவனை நோக்கி கற்களாக மாறி வரும்.
கண்ணீர் மட்டும் வலிந்து கொண்டே இருந்தது.
தன்னை யார் பார்த்தாலும் அவனுக்கு கவலை இல்லை.
வாய்விட்டுக் கதற முடியாத தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் கண்ணீரின் மூலம் தன் துயரை நீக்க நினைத்தான் போலும்.
எவ்வளவு நேரம்தான் அப்படியே இருந்தானோ அவனுடைய அதீத சோகத்தைத் தாங்க முடியாது மேகங்கள் துயர் கொண்டு மழைக் கண்ணீரைப் பொழிய தொப்பலாக நனையத் தொடங்கியது அவனுடைய உடல்.
“ஐயோ முடியலையே.. என்னால இதுல இரு வெளியே வர முடியும்னே தோணலையே.. ஏன்டி இப்படி பண்ண..? ஏன்ம்மா இப்படி பண்ண..? எதுக்கு இப்படி பண்ண..? இதுக்கு நீ என்ன கொன்னுருக்கலாமே..?” என வேதனையோடு முனகினான் அவன்.
*****
குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு வாயிலுக்கு வந்து தன்னுடைய மாமா வருகின்றாரா என எட்டிப் பார்த்தாள் சாஹித்யா.
அவர் சென்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
எங்கே இருக்கிறார் என்ன செய்கின்றார் என எதுவுமே தெரியாது அவளுடைய மனம் பதறிக் கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் அதுவரைக்கும் குழந்தையை பார்த்துக்கோ எனக் கூறிவிட்டு சென்றவர் ஏன் இவ்வளவு மணி நேரங்கள் ஆகியும் வரவே இல்லை..?
தன்னுடைய அக்காவை நினைத்து எரிச்சலாக வந்தது அவளுக்கு.
அப்போது கதவைப் பூட்டியவள் இப்போது வரை கதவைத் திறக்கவே இல்லை.
குழந்தையைப் பற்றிக் கூட சிந்திக்கத் தோன்றவில்லையா..?
ஒழுக்கம் தவறி இன்னொரு ஆணுடன் ஒன்றாக இருந்தது எவ்வளவு பெரிய தவறு..?
அந்தத் தவறை திருத்திக் கொள்ளும் முயற்சி கூட இல்லாமல் அறைக்குள்ளேயே இருந்தால் என்ன அர்த்தம்..?
இவளுடைய வாழ்க்கை தானே பாழாகிப் போகும்.
அன்னையிடம் கூறி அவரை இங்கே அழைத்து விடுவோமா என சிந்தித்தவள் ஐயோ வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அன்னைக்கு மட்டும் இது தெரிந்தால் நிச்சயம் அக்காவை அடித்து நொறுக்கி விடுவார்.
அனைவருக்கும் பிரச்சனை தெரிந்து இன்னும் அசிங்கமாகி விடுமே.
ஆனால் மாமா பாவமே.
அவர் என்ன பாவம் செய்தார்..? அவரைப்போல ஒரு கணவன் கிடைத்தும் ஏன் இந்த அக்கா இப்படி ஒரு காரியத்தை செய்தாள்.
நிதானமாக அவளுடன் பேசிப் புரிய வைக்க வேண்டும் அவளுடைய தவறை அவள் உணர வேண்டும் அதன் பின்னர் மாமா எடுக்கும் முடிவுதான் எல்லாம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அவர் பக்கம்தான் நிற்பேன்.. என எண்ணிக் கொண்டவள் அக்காவின் படுக்கையறைக் கதவைச் சென்று தட்டினாள்.
எவ்வளவோ தட்டியும் எந்த சத்தமும் இன்றிப் போக இவளுக்கோ நொடியில் அச்சம் அப்பிக் கொண்டது.
‘ஐயோ அக்கா தவறான முடிவு ஏதும் எடுத்து விட்டாளோ..? அதனால்தான் இவ்வளவு நேரமும் குழந்தையைப் பற்றி அவள் கேட்கவே இல்லையா..?’
சற்று நேரத்தில் அவளுக்கு உடல் முழுவதும் நடுங்கி விட்டது.
படபடவென இன்னும் வேகமாக கதவைத் தட்டிப் பார்த்தவள் எந்த சத்தமும் இல்லை என்றதும் விக்கித்துப் போனாள்.
அடுத்த நொடி ஓடிச்சென்று அந்த அறையின் ஜன்னலைத் தன் கைகளால் தள்ளித் திறக்க முயன்றவள் ஜன்னல் உள்பக்கமாக பூட்டியிருப்பதை உணர்ந்து நொந்து கொண்டாள்
ஐயோ உள்ளே எப்படிப் பார்ப்பது..?
சட்டென சாவித் துவாரத்தின் மூலம் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்ததும் பதறிய இதயத்தை அடக்க வழி இன்றி வேகமாக கதவின் முன்னே வந்து குனிந்து சாவித்துவாரத்தின் வழியாக தன்னுடைய ஒற்றைக் கண்ணைப் பொருத்திப் பார்த்தவள் அங்கு படுக்கையில் படுத்திருந்த தன் சகோதரியைக் கண்டதும்தான் நிம்மதி கொண்டாள்.
நல்ல வேளை அவள் நினைத்தது போல எந்தத் தவறான முடிவையும் அவளுடைய சகோதரி எடுக்கவில்லை.
அடுத்த நொடியே அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய அதீத கோபத்தோடு படபடவென அந்தக் கதவை அவள் தட்ட அதன் பின்னரே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் வான்மதி.
“உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா இல்லையா அக்கா..? இங்க எவ்வளவு பிரச்சனை நடக்குது.. நீ எப்படி நிம்மதியா தூங்குற..? உனக்கு மனசு உறுத்ததே இல்லையா..? அப்போ போன மாமா இப்போ வரைக்கும் வீட்டுக்கு வரவே இல்லை.. குழந்தையைக் கூடப் பாக்காம எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது..?”
“என்னோட வாழ்க்கையே தொலைஞ்சு போச்சு.. இனி எதைப் பத்தி நினைச்சு என்ன கவலைப்பட சொல்ற..?” என விரக்தியாகக் கேட்டாள் வான்மதி.
“வாழ்க்கை தானா தொலையலையே.. அத நீதானே தொலைச்ச.. நல்ல வாழ்க்கை கிடைச்சும் வாழத் தெரியாம நீ தான கோட்டை விட்ட..”
“உனக்கு சொன்னா புரியாதுடி.. என்னோட வலி என்னன்னு உனக்கு சொன்னாப் புரியாது.. என் நிலைமைல இருந்து பார்த்தாதான் உனக்குப் புரியும்.. நானும் மனுஷி தானே எனக்கு ஆசைகள் இருக்கக் கூடாதா..?”
“வாய மூடு அக்கா.. அப்படி என்ன ஆசை..? அப்படி என்ன உடம்பு சுகம் முக்கியமா போயிருச்சா..? உன்ன மாதிரி தானே மாமாவும் அங்க தனியா தானே இருந்தாரு.. அவர் கட்டுப்பாட்டோட வாழலையா..?”
“யா.. யாருக்குத் தெரியும்..? அங்க எவ கூடவாவது அவரும் இருந்திருக்கலாமே..?” என வான்மதி கூறிவிட கொதித்துப் போனாள் சாஹித்யா.
“ச்சீ அசிங்கமா பேசாத.. மாமா உன்ன மாதிரி கிடையாது..” எனக் கூறியவள் வான்மதியின் அதிர்ந்த விழிகளைக் கண்டு பின்னே திரும்பிப் பார்த்தாள்.
அங்கே கிட்டத்தட்ட நனைந்த தோற்றத்தில் பிச்சைக்காரனைப் போல வந்து நின்ற தன் மாமாவைக் கண்டதும் அவளுக்கு இதயம் நொறுங்கிப் போனது.
Yuva pls aladhada